ொடர் பற்றி
---------------------
வாழ்வில் நாம் நினைக்கும் பல இலக்குகளை நம்மால் அடைய முடிவதில்லை. சரி நம்மால் முடியாது இந்த முயற்சியை கைவிட்டு விடுவோம் என நினைக்கும் தருவாயில் புதிய நம்பிக்கைகள் தோண்றி நம்மால் சாதிக்க முடியும் என்ற சிந்தனைக்கு நம்மை கொண்டு செல்கிறது. உண்மையில் நம்முடைய இலக்குகளை அடைய இந்த புதிய நம்பிக்கைகள் எந்தவகையிலும் உதவுவதில்லை. மாறாக நம்மை ஒரு உறுதியான முடிவெடுக்க விடாமல் ஒரு நிலையற்ற வாழ்கை வாழ இந்த நம்பிக்கைகள் பயன்படுகின்றது. நம்மை நாம் தோற்றுவிட்டோம் என்று எண்ணிக்கொள்ள இயலாது. அதே சமயத்தில் நம்மை வெற்றியாளர் என்று சொல்லிக்கொள்ளவும் முடியாது. இதற்கு இடைப்பட்ட நிலையில் நாம் காலம் தள்ளிக்கொண்டிருக்க இந்த நம்பிக்கைகள் பயன்படுகின்றது. இப்படிப்பட்ட ஒரு துன்பமிக்க உணர்வை நாம் கற்பனை செய்து பார்க்கின்றோம். ஆனால் பலர் இதை தினமும் அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் மிக முக்கியமானவர்கள் பங்குச்சந்தையில் ஈடுபடும் நபர்கள்.
நாம் லாபம் சம்பாதித்துவிட்டோம் என்று சந்தோஷம் கொள்வதும், மறுநாளே நஷ்டம் அடைந்து துவண்டுவிடுவதும், அதற்கு அடுத்த நாள் மீண்டும் லாபம் சம்பாதித்து... இப்படியே லாபம், நஷ்டம் என்று மாறி மாறி நிகழும் நிகழ்வில் நிலையான சந்தோஷமும் இல்லாமல், நிலையான துக்கமும் இல்லாமல் இடைப்பட்ட நிலையில் துவண்டுபோவார்கள். பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களிடம் பல திட்டங்கள் இருக்கும். ஆனால் எந்த செயல்பாடுகளும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்காது. ஆற்றில் விழுந்த இலைபோல, சந்தை செல்லும் போக்கில் அடித்துச் செல்லப்படுவார்கள். அப்போது ஏற்படும் இடர்பாடுகளை அவர்கள் சந்தித்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள்.
பங்குச்சந்தையில் மூன்றுவிதமான மனிதர்கள் இருக்கின்றாகள்.
முதலாமவர்: அவருக்கு பங்குச்சந்தை பற்றி எந்த விபரமும் தெரியாது. முதலீடு செய்யலாமா வேண்டாமா என்ற சிந்தனையிலேயே இருப்பார்கள்.
இரண்டாம் நபர்: தெரியாமல் முதலீடு செய்து ஒரு குறிப்பிட்ட தொகையை இழந்தவர்கள். அந்த தொகையை எப்படியாவது பங்குச்சந்தையில் இருந்தே மீட்க வேண்டும் என்று போராடுபவர்கள்.
மூன்றாம் நபர்: பங்குச்சந்தை பற்றி அனைத்து விசயங்களும் இவர்களுக்குத் தெரியும். இவர்கள் பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்க பலவிதமான வித்தைகளை கற்று வைத்திருப்பார்கள். ஆனாலும் வெற்றிகரமாக பணம் சம்பாதிக்க இயலாமல் இருப்பவர்கள்.
மேற்கண்ட இந்த மூன்று நபர்களுக்குமே பிரச்சனை ஒன்றுதான் சந்தை அவர்களின் பிடியில் இருக்காது. சந்தை ஏற்படுத்தும் விளைவுகளுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள். இந்த சூழ்நிலையை நானும் உணர்ந்திருக்கின்றேன். இந்த சுழற்சி முறையில் இருந்து தப்பிக்க பல காரணங்களை, பல காரியங்களை தேடியிருக்கின்றேன். அகப்பட்ட விசயங்களை பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
.
தோற்றவர்களின் சிந்தனை ஒன்றிணையும் போது, அந்த சிந்தனை அவர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்லும் என்பது எனது நம்பிக்கை. எனவே உங்களின் சிந்தனைகளையும் என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
|