சீறும் காளைகள் – UPTREND
மழைக்காலம் உச்சத்தில் இருக்கும்போது விதை விதைப்பார்களா? விதைக்க மாட்டார்கள். மழைக்காலம் ஆரம்பமாவதை அறிந்துகொண்டு அதற்கு முன்பாகவே, நிலத்தை உழுவது போன்ற வேலைகளை செய்து முடித்து தயாராக இருப்பார்கள். அதற்குண்டான நேரம் வந்ததும் விதையை தூவி விவசாயத்தை ஆரம்பிக்கிறார்கள். அதைப்போல ஒரு பங்கு uptrend-ன் உச்சத்தில் இருக்கும்போது நாம் அதில் முதலீடு செய்வது அதிகமாக பிரயோஜனம் தராது. ஒருவேலை இலாபம் கிடைத்தாலும் குறைந்த அளவே கிடைக்கும். அல்லது Uptrend முடிவடைந்து விலை இறங்க ஆரம்பித்துவிடும். இப்போது நாம் முன்பு கேட்டுக்கொண்ட கேள்வியை திரும்பவும் கேட்டுக்கொள்வோம். “உண்மையிலேயே ஒரு Trend மாறிவிட்டதா என எப்படி அறிந்துகொள்வது?” இந்த கேள்வி மூன்று வகையான Trend-களுக்கும் பொருந்தும். முதலில் ஒரு பங்கு Uptrend-ல் செல்ல தொடங்குவதை எப்படி ஆரம்பத்திலேயே அறிந்துகொள்வது என்பதைப் பற்றி பார்ப்போம்.
இந்த சீற்றமிக்க காளையை கவணியுங்கள்:
இந்த காளையின் பின்னங்காலில் இருந்து முன்னங்காலுக்கு கீழ்கண்ட மாதிரி இரண்டு கோடுகளை போடுங்கள்.
இப்போது நாம் போட்டிருக்கின்றோமே இந்த கோடுகள்தான் Uptrend-டிற்கான அமைப்பு. எந்த ஒரு பங்கும் மேல் நோக்கி Uptrend-ல் செல்வதற்கு முன்பாக இந்த அமைப்பில்தான் உருவாகும்.
பொதுவாக பங்குகள் Uptrend ஆரம்பிப்பதற்கு முன்பாக அடிபட்ட பாம்பைப் போல ஒரே இடத்தில் கிடந்து நெளிந்துகொண்டிருக்கும் Side ways trend-ஐ போல. ஒரு Down side trend-ல் பங்கின் விலையானது போதுமானவரை இறங்கிய பிறகு சில நாட்கள் மேற்கொண்டு இறங்காமல் Sideways trend-ஐ போல ஒரே விலையில் சில நாட்கள் நீடித்திருக்கும். பின்னர் சட்டென தலையை தூக்கி நாம் முதலாவதாக வரைந்த கோட்டைப்போல மேல் நோக்கி பயணிக்க ஆரம்பிக்கும். விலை மேல் நோக்கி செல்ல ஆரம்பித்ததும் சிலர் தங்களிடமுள்ள அந்த பங்குகளை விற்க ஆரம்பிப்பார்கள் இதனால் நாம் வரைந்த இரண்டாவது கோட்டைப்போல விலை சற்று இறங்கிய நிலையில் இருக்கும். ஆனால் தொடர்ந்து இறங்காமல் மீண்டும் மேல் நோக்கி செல்ல ஏதுவாக அங்கேயே நின்றுகொண்டிருக்கும். இதுதான் நமக்கு தேவையான அமைப்பு. இப்போது முதலாவது கோட்டின் ஆரம்பத்தில் இருந்து இரண்டாவது கோட்டின் முடிவை நோக்கி கீழ்கண்டமாதிரி ஒரு கோடுபோடுங்கள்:
|
இதோ இந்த மூன்றாவது கோடுதான் இந்த காளை மேல் நோக்கி செல்வதற்கான பாதை. இந்த பாதையில்தான் இனி இந்த காளை பயணம் செய்யும். இப்படி ஒரு பாதையை நீங்கள் கண்டு கொண்டவுடன் உங்களின் விவசாயத்தை ஆரம்பிக்கலாம் அதாவது முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். இதே விசயத்தை நடைமுறை உதாரணத்துடன் பார்ப்போம்:
|
மேற்கண்ட படத்தில் எண் 1 உள்ள இடத்திலிருந்து பங்குகளின் விலை குறைந்துகொண்டே வருவதை கவணியுங்கள். ஆனால் எண் 2 உள்ள இடத்தில் இந்த பங்கின் விலையானது தொடர்ந்து இறங்காமல் இரண்டு மூன்று நாட்கள் ஒரே இடத்தில் நிலைத்திருப்பதை கவணியுங்கள். பின்னர் சட்டென மேல் நோக்கி அதாவது எண் 3 உள்ள இடம் வரை இந்த பங்கின் விலை உயர்ந்திருக்கிறது (இது நாம் வரைந்த முதலாவது கோடு). விலை உயர்ந்ததை தெரிந்துகொண்டது பங்குகளை வைத்திருப்பவர்கள் பங்குகளை விற்கத்தொடங்கியதால் விலையானது எண் 4 உள்ள இடம் வரை இறங்கியுள்ளது (இது நாம் வரைந்த இரண்டாவது கோடு). ஆனால் தொடர்ந்து இறங்காமல் அங்கேயே இரண்டு மூன்று நாட்கள் நிலைத்திருப்பதை கவணியுங்கள். இதே மாதிரி எண் 2-டிலும் தொடர்ந்து விலை இறங்காமல் இருந்ததை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். இதை Reversal என்று அழைப்பார்கள். அதாவது சில நாட்கள் ஒரே இடத்தில் நின்று யோசிக்கிறது என்றால் ஒரு மாற்றம் வரப்போகிறது என்று அர்த்தம். அதனால்தான் எண் 2 மற்றும் 4-ஐ வட்டமிட்டுள்ளேன். இப்போது எண் 2-லிருந்து எண் மூன்றுக்கு ஒரு கோடுபோடுங்கள், எண் மூன்றிலிருந்து எண் 4-கிற்கு ஒரு கோடு போடுங்கள். இப்போது நாம் காளை படத்தில் வரைந்தது போல மூன்றாவதாக ஒரு கோட்டை எண் இரண்டின் ஆரம்பத்திலிருந்து எண் 4-கின் முடிவிற்கு ஒரு கோடு போடுங்கள்.
|
இப்போது எண் 4-லிருந்து பங்கின் விலை மேல் நோக்கி சீறிக்கொண்டு செல்வதை கவணியுங்கள். இதுதான் Uptrend-டிற்கான ஆரம்பம். எண் 4 இருக்கும் இடத்தில் நீங்கள் முதலீடு செய்தால் அது மிகவும் சிறப்பான செயல்பாடாக அமையும். நீங்கள் மூன்றாவதாக போட்ட கோட்டில் ஒவ்வொரு முறை காளை தன் காலை வைக்கும்போது நீங்கள் முதலீடு செய்யலாம். கீழே உள்ள படத்தில் எண் 5 இருக்குமிடத்தில் மீண்டும் உங்கள் கோட்டில் காளை கால் வைப்பதை கவணியுங்கள்! அங்கேயும் நீங்கள் முதலீடு செய்யலாம்.
இது ஏற்கணவே நடந்துமுடிந்த ஒரு பங்கின் வரைபடம் இதை வைத்துக்கொண்டு எளிமையாக சொல்லிக்கொடுக்கலாம். ஆனால் இது நடைமுறைக்கு உதவுமா! இது அசாத்தியமான விசயமல்லவா! என நினைத்து அவநம்பிக்கை கொள்ள வேண்டாம். அசாத்தியத்தை சாத்தியமாக்கும் உங்களின் ஆர்வமும் முயற்சியும். பயிற்சி செய்து பாருங்கள் ஒரு முறை உங்களால் Uptrend-ஐ கண்டுபிடிக்க முடிந்துவிட்டால் உங்கள் மனம் ஒரு அதிரடியான கதாநாயகனைப்போல வேகமும் ஆர்வமும் கொள்ளும். அதற்குப்பிறகு நீங்கள் நினைத்தாலுகூட உங்களால் கற்றுக்கொள்வதை நிறுத்த முடியாது.
நான் இங்கு பயன்படுத்தும் வரை படங்கள் அனைத்தும் நிகழ் காலத்தை சேர்ந்தவைதான். எனவே நான் சென்ற வாரம் குறிப்பிட்ட இணைய தளத்திற்கு சென்று Uptrend பற்றிய ஆராய்ச்சியை துவங்குங்கள்.
(மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன் நாம் இன்னும் நாற்று நடும் அளவிற்கு முன்னேறவில்லை. விவசாயத்தின் காலநிலைகளைத்தான் கவணித்துக்கொண்டிருக்கிறோம். Up trend-ஐ ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது எப்படி என்பதை கண்டுகொண்டிருப்பீர்கள் என்று நம்பிக்கையில் விடை பெறுகிறேன். அடுத்தவாரம் சந்திப்போம்.)
தொடரும்... |