காளையை அடக்க தேவையான காலநிலை
விவசாயம் செய்வோம் வாருங்கள் என அழைத்ததும் சேற்றில் கால்வைக்க ஏதுவாக காலில் செருப்பில்லாமல் நீங்கள் வந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் நாற்று நடும் நம்பிக்கையில் நீங்கள் வந்திருப்பதுபோல் தெரிகிறது. அப்படி ஒரு நம்பிக்கை உங்களுக்கிருந்தால் அந்த நம்பிக்கையை நீங்கள் சிறிது காலத்திற்கு தள்ளிப்போடுங்கள். நாம் இப்போது பார்க்கப்போவது நாற்று நடும் விசயமல்ல. விவசாயத்திற்கு ஏற்ற கால நிலைகளை பற்றி பார்க்கப்போகிறோம். பங்குச்சந்தையில் இந்த கால நிலையை Trend என்று சொல்வார்கள். பங்குச்சந்தையில் பயணிக்க விரும்பும் உங்களுக்கு இந்த Trend என்பது மிக மிக முக்கியமான ஒன்று. ஒருவேலை நீங்கள் Trend பற்றி அறிந்துகொள்ளாமல் பங்குச்சந்தையில் ஈடுபட்டால், கமல்ஹாசன் அவர்களைப்போல காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப்போனேன், கொட்டும் மழை பெய்யும் காலம் உப்பு விற்கப்போனேன்... தப்புக்கணக்கை போட்டுத்தவித்தேன்... என சோகமாக பாட வேண்டிய நிலை உருவாகிவிடும்.
சரி அதென்ன Trend? இதை விளக்க மனித வாழ்க்கையையே உதாரணமாக கூற முடியும். கீழே உள்ள படத்தை பாருங்கள் உங்களுக்கே புரியும்.
மனித வாழ்க்கையில் எவ்வளவோ விசயங்கள் நடக்கிறது. அது ஒவ்வொன்றும் நிகழும்போது அதற்கு ஏற்ப நாம் ஆடுகிறோம் அல்லது அழுகிறோம். ஆனால் இறுதியாக கடலில் கரையும் ஆற்றைப்போல, நம் வாழ்க்கை மரணத்தை நோக்கியே செல்கிறதல்லவா! அதுதான் Trend. நேற்று நடந்ததோ இன்று நடப்பதோ முக்கியமல்ல இறுதியாக எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் Trend.
மனித வாழ்வின் Trend பற்றி முழுமையாக அறிந்ததால்தான் ஞானிகள் ஆடாமல் அமைதியாக வாழ்ந்தார்கள். அதுபுரியாமல்தான் நாம் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறோம். மனித வாழ்க்கையில் மட்டுமல்ல பங்குச்சந்தை பயணத்திலும் இந்த Trend பற்றி நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதை புரிந்துகொள்ளாமல் பயணத்தை நீங்கள் ஆரம்பித்தால் பின்பு நீங்கள் அவதிப்படுவதை யாராலும் தடுக்க முடியாது.
பங்குச்சந்தையை பொருத்தவரையில் மூன்று வகையான Trend உள்ளது ஒன்று Uptrend இரண்டு Down trend மூன்றாவது Sideways trend. இனி ஒவ்வொரு Trend பற்றியும் தெரிந்துகொள்வோம்.
Uptrend
ஒரு பங்கின் விலையானது இன்று அதிகரிக்கலாம், நாளை குறைந்துவிடலாம் அது முக்கியமல்ல. இறுதியாக அந்த பங்கின் விலை எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை கவக்க வேண்டும். அந்த பங்கின்விலை இரண்டு மாதங்களுக்கு முன் எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்றுதான் கவனிக்க வேண்டுமே தவிர இரண்டு நாட்களை கணக்கில் கொண்டு யோசிக்க கூடாது. கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு பங்கின் வரைபடத்தை கவணமாக பாருங்கள்.
மார்ச் 2010-ல் ரூபாய் 160 என்ற ரீதியில் இருந்த இந்த பங்கின் விலையானது ஆகஸ்ட் 2010-ல் ரூபாய் 250-ஐ தொட்டிருப்பதை கவனியுங்கள். கிட்டத்தட்ட 90 ரூபாய் அதிகரித்திருக்கிறது. இப்போது ஆரம்ப விலையில் இருந்து இறுதி விலைக்கு கீழே உள்ள படத்தில் இருப்பதை போல ஒரு கோடு போட்டுப்பாருங்கள்.
|
இப்போது புரிந்திருக்குமே! இதற்கு பெயர்தான் Uptrend. ஒரு பங்கின் விலை குறிப்பிட்ட காலத்திற்கு அதிகரித்தவாரே இருக்க வேண்டும் அதற்குப் பெயர்தான் Uptrend. படத்தை கூர்ந்து கவனித்தீர்களானால் ஒரு விசயம் உங்களுக்கு புரியும். விலையானது தொடர்ந்து ஏறிக்கொண்டே செல்ல வில்லை. விலை அதிகரித்து இருப்பதைப்போல பல இடங்களில் விலையானது குறைந்தும் இருக்கிறது. குறிப்பாக விலையானது 190-ஐ தொட்டதும் கீழே இறங்கியிருப்பதை கவனியுங்கள். இப்படி விலை குறையும் தருவாயில் பங்குகளை வைத்திருப்பவர்கள் அடடே பங்கின் விலை குறைகிறதே என பதட்டப்பட்டு வாங்கிய விலையைவீட 20 அல்லது 30 ரூபாய் வித்தியாசத்தில் விற்றுவிடுவார்கள். ஆனால் பங்கின் விலையானது தொடர்ந்து அதிகரித்து 250ஐ தொட்டதும் ச்சே 190 ரூபாய்க்கு அநியாயமாக விற்று விட்டேனே! வாங்கிப்போட்டுவிட்டு பேசாமல் இருந்திருந்தால் இன்று எவ்வளவு இலாபம் பார்த்திருக்கலாம் என்று புலம்புவார்கள். இப்படி அவர்கள் புலம்புவதற்கு முக்கியமான காரணம் அந்த பங்கு எந்த Trend-ல் சென்று கொண்டிருக்கிறது என்பதை அறியாமல் அல்லது புரியாமல் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதுதான்.
Down trend
மேலே சொன்ன அத்தனை விசயங்களை கீழே உள்ள படத்திலும் பயன்படுத்தி பாருங்கள். விலையின் ஆரம்பத்திலிருந்து இறுதி விலைக்கு ஒரு கோடு போடுங்கள் விலை எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை கவனித்துப்பாருங்கள். குறிப்பிட்ட காலத்திற்கு இப்படி ஒரு பங்கின் விலை இறங்கிக் கொண்டே செல்வதற்குத்தான் Down trend என்று பெயர்.
Uptrend-ல் கூட வாடிக்கையாளர்கள் சிறிதளவுதான் இலாபம் கிடைத்ததே என்றுதான் புலம்புவார்கள். ஆனால் இந்த down trend-ல் சிக்கிக்கொண்டவர்களின் நிலை மிகவும் பரிதாபமானதாகவே இருக்கும்.
இந்த Down trend-லும் இடை இடையே விலை அதிகரித்து இருப்பதை கவனியுங்கள், இதுபோன்று Down trend-ல் விலை அதிகரிக்கும் போது, குறிப்பிட்ட இந்த பங்கு Down trend-ல் உள்ளது என்ற விசயம் புரியாமல் ஏதோ ஒரு நம்பிக்கையில் அல்லது ஆலோசனையில் பங்குகளை வாங்கிவிடுவார்கள். ஆனால் வாங்கிய பிறகு விலை ஏறுவதற்கு பதிலாக இறங்கத் தொடங்கியதும், சரி பொருத்திருந்துதான் பார்ப்போமே, சில காலம் இப்படியே வைத்திருப்போம் என்ற சிந்தனையில் இருப்பார்கள். ஆனால் இந்த Down trend-ஆனது அவர்களின் சிந்தனையை சிதைத்துவிடக்கூடியது. மேலே உள்ள படத்தில் ரூபாய் 92-ல் விலை ஆரம்பித்திருக்கிறது அந்த விலையில் நீங்கள் பங்கை வாங்கியிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம் இறுதி விலையை கவனியுங்கள் விலை 50-க்கும் கீழே அதாவது பாதி விலையில் உள்ளது. Down trend-ல் சிக்கிக்கொண்டவர்களின் நிலை இதுதான். பல நபர்கள் பங்குச்சந்தையை விட்டு வெளியேற காரணமானது இந்த down trend. இப்படி வாடிக்கையாளர்கள் சலித்துப்போய் சந்தையைவிட்டு வெளியேறுவதற்கு அந்த Trend காரணமல்ல. சந்தையில் தற்போது எந்தமாதிரியான Trend உள்ளது என்பதை அறியாமல் வாடிக்கையாளர்கள் வர்த்தகத்தில் ஈடுபடுவதுதான் காரணம்.
Sideways trend
மேற்கண்ட இரண்டுவகையான Trend-களையும் ஒருவகையில் பொருத்துக்கொள்ளலாம் இரண்டையும் மிஞ்சக்கூடிய வகையான ஒரு Trend உள்ளது என்றால் அது Sideways trend-தான். மனிதனின் கோபத்தின் எல்லையை கண்டுவிடக்கூடையது இந்த Sideways trend. ஏன் இப்படி சொல்கிறேன் என்பதை நீங்களே படத்தை பார்த்து புரிந்துகொள்ளுங்கள்.
|
உங்களுக்கு புரியவில்லையா! பங்கின் விலையை கவனியுங்கள் கிட்டத்தட்ட எட்டு மாத காலம் இந்த பங்கின் விலையானது ரூபாய் 160-க்கும், ரூபாய் 180-க்கும் இடைப்பட்ட காலத்திலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்படி ஏறவும் செய்யாமல், இறங்கவும் செய்யாமல் பக்கவாட்டில் பயணம் செய்வதற்குத்தான் Sideways trend என்று பெயர். ஒரு வேலை இந்த பங்கை நீங்கள் ரூபாய் 180-க்கு வாங்கியிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது உங்களின் நிலையை நினைத்துப்பாருங்கள்! எதற்க்கும் பயன்படாமல் உங்களின் பணம் முடக்கப்பட்டதுபோல் ஆகிவிடும். விலை ஏறவும் செய்யாமல், இறங்கவும் செய்யாமல் ஒரே திசையில் சென்று கொண்டிருந்தால் முதலீடு செய்தவர்கள் சலிப்படைந்து போவார்கள். என்னய்யா அது ஏறுமா, ஏறாதாய்யா என்று எரிச்சலுடன் கேட்பார்கள். இந்த விலையிலேயே விற்று விட்டு வெளியேறிவிடலாமா என்று கூட யோசிப்பார்கள். ஆனால் விற்ற பிறகு விலை அதிகரித்தால் மனது அடித்துக்கொள்ளுமே. அதனால் கோபத்தை அடக்கிக்கொண்டு அப்படியே வைத்திருப்பார்கள்.
காலநிலையில் கவணிக்க வேண்டியவை
எங்கள் ஊரில் திடிரென்று மழை பெய்ய ஆரம்பிக்கும். தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் நீடிக்கும். ஒரு சந்தேகத்தில் மழைக்காலம் ஆரம்பித்துவிட்டதா என்று கேட்பேன். அதற்கு என்னுடைய அம்மா ஏண்டா இது என்ன மாசம் மழைக்காலமா என்று கேட்கிறாய் அதற்கு இன்னும் எவ்வளவு நாட்கள் இருக்கிறது தெரியுமா! என்பார். அவர் சொன்னபடியே அடுத்த இரண்டு நாட்களில் மழை நின்று வெயில் வருத்தெடுக்க ஆரம்பிக்கும். தொலைக்காட்சியில் மழைக்கு காரணமாக ஏதாவது ஒரு பெண்ணின் பெயர்கொண்ட புயழை காரணமாக சொல்லிக்கொண்டிருப்பார்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு பங்கின் விலை தொடர்ந்து நான்கு நாட்கள் அதிகரித்தவுடன் அந்த பங்கு Uptrend-ல் செல்ல ஆரம்பித்துவிட்டது என்று தவறாக புரிந்துகொள்ளக்கூடாது. விலை அதிகரிக்க பல காரணங்கள் உண்டு. அந்த நிறுவனம் ஏதாவது ஒரு புதிய தொழிலை துவங்கப்போவதாகவோ, தன்னுடைய ஆண்டு அறிக்கையை வெளியிடப்போவதாகவோ, அல்லது அரசாங்கம் குறிப்பிட்ட அந்த துறைக்கு ஏதாவது சலுகைகள் வழங்கப்போவதாகவோ செய்திகள் வெளியானால் வாடிக்கையாளர்கள் அந்த பங்குகளை வாங்க ஆரம்பிப்பார்கள். அப்படி வாங்கும் போது சில நாட்களுக்கு விலை அதிகரிக்கத்தான் செய்யும் அதை நம்பி Trend மாறிவிட்டது என் நினைத்து வர்த்தகத்தை ஆரம்பிக்கக்கூடாது. அதே போல வைத்திருக்கும் பங்குகளின் விலை இரண்டு மூன்று நாட்கள் இறங்குமுகமாக இருக்கிறதே என்பதற்காகவும் விற்றுவிடக்கூடாது. பங்குகளின் விலை இறங்குவதற்கும் சில காரணங்கள் இருக்கும் அதற்காக Down trend ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தப்படுத்திக்கொள்ளக் கூடாது. சரி உண்மையாலுமே Trend மாறிவிட்டதா என எப்படி தெரிந்துகொள்வது? அதைப்பற்றி அடுத்த வாரம் பார்ப்போம். அதற்கு முன்பாக மேற்கண்ட மூன்று வகையான Trend-களையும் சரியாக புரிந்துகொண்ட பின் உங்களுக்கு நேரம் இருந்தால்! இல்லை இல்லை ஆர்வம் இருந்தால், உங்கள் கண்ணில்படும் அனைத்து பங்குகளின் வரைபடத்தையும் பார்த்து அது எந்த மாதிரியான Trend-ல் தற்போது உள்ளது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
(http://charting.bseindia.com/charting/index.asp?SYMBOL=500106 இந்த தளத்திற்கு சென்றால் அனைத்து பங்குகளின் வரைபடங்களையும் காண முடியும்)
தொடரும்... |