காளை என்பது கானல்நீரே
இந்த கட்டுரை உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துபார்க்கத் தூண்டகூடியது. சுயபரிசோதனை பொதுவாக நமக்கு பிடிக்காத ஒன்று ஏனெனில் சுயபரிசோதனை செய்தால் நம்முடைய ஏமாற்றங்களையும், எதிர்மறையான சிந்தனைகளையும் அது வெளிக்கொண்டுவந்துவிடும். அவற்றை நம்மால் தாங்கிக்கொள்ள இயலாது. எனவே இதை படிக்கும்போது கோபம் கொள்ளாதீர்கள்.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தன் வாழ்வில் ஒருமுறையாவது பிறர் மூலமாகவோ அல்லது தன்னைத்தானாகவோ கேட்டுக்கொள்ளும் கேள்வி ஒன்று உள்ளது அது, “உனக்கெங்கே போயிற்று அறிவு/நமெக்கெங்கே போயிற்று அறிவு” ஏன் இதை இங்கே ஞாபகப்படுத்துகிறேன் என்றால்! இதுவரை நீங்கள் கற்றுக்கொண்ட விசயங்களை நடைமுறைப்படுத்தினால் நிச்சயம் இந்த கேள்வி பிறரிடமிருந்தோ அல்லது உங்களிடமிருந்தோ உங்களை வந்தடையும். அவன்தான் கூறுகெட்டுப்போய் கூடுதளத்தில் அப்படி எழுதினான் என்றால் உனக்கெங்கே போயிற்று அறிவு என்று நிச்சயம் உங்களை பார்த்து கேட்பார்கள் அல்லது உங்களிடம் நீங்களே கேட்டுக்கொள்வீர்கள்.
கேள்விகளில் இரண்டு வகை உண்டு. நாம் எதையாவது படிக்கும்போது படிக்கின்ற விசயம் தொடர்பாக அவ்வப்போது சில கேள்விகள் தோன்றும் இது ஒருவகை. நாம் படிக்கின்ற விசயத்தின் அடிப்படையையே ஆட்டிப்பார்க்கும் விதமாக சில கேள்விகள் தோன்றும் இது இரண்டாவது வகை. உதாரணமாக நாம் சார்ந்துள்ள கட்சியின் கொள்கையில் உண்டாகும் கேள்விகள் இது முதல் வகை இதை கேட்டுத்தெரிந்து தெளிந்துவிடலாம். ஆனால் நாம் நம்பியுள்ள தலைவனின் தன்மையில் நமக்கு எழும் கேள்விகள்... இந்த மாதிரியான கேள்விகள் நாம் மேற்கொண்டுள்ள பயணத்தின் பயனைப்பற்றி மறுபரிசீலனை செய்யவைக்கும் இது இரண்டாவது வகையான கேள்வி. இந்த இரண்டாவது வகையான கேள்விகளைத்தான் நான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன். சரி விசயத்திற்கு வருவோம். இப்போது ஒரு உதாரணத்திற்காக, நான் இதுவரை சொன்ன விசயங்களை நீங்கள் நடைமுறைப்படுத்திவிட்டதாக வைத்துக்கொள்வோம். அப்படியொரு சிந்தனையோடு கீழே நான் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.
|
மேலே உள்ள படம் நாம் Uptrend-ல் பார்த்தது. இதில் எண் 4 உள்ள இடத்தில் பங்குகளை வாங்குங்கள் அங்கிருந்து விலை மேல் நோக்கிச் செல்லும் என நான் கூறியிருந்தேன் அல்லவா! அந்த இடத்தில் நீங்கள் பங்குகளை வாங்கிவிட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். ஒருவேலை நான் சொன்னபடி காளை மேல் நோக்கி செல்லாமல் நீங்கள் வரைந்த உடைத்துக்கொண்டு கீழ்நோக்கி பாய்ந்துவிட்டால்! அதாவது விலை வீழ்ச்சியடைந்துவிட்டால்! என்ன செய்வீர்கள்? நீங்கள் முதலீடு செய்த பணம் தன் மூச்சை நிறுத்திக்கொள்ளுமல்லாவா! நான்தான் சொன்னேன் என்றால் உங்களுக்கு எங்கே போய்யிற்று அறிவு!.
|
மேலே உள்ள படம் Uptrend-ல் நாம் வாங்கிய பங்குகளை எங்கு விற்பனை செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்வதற்காக பயன்படுத்தியது. எண் 3 இருக்கும் இடத்தில் நீங்கள் வரைந்த Parallel Line-ஐ தொட்டதும் வாங்கிய பங்குகளை விற்றுவிடுமாறு கூறியிருந்தேன். நீங்களும் நான் சொன்னபடி பங்குகளை விற்றுவிட்டீர்கள் என வைத்துக்கொள்வோம், ஒருவேலை பங்கின் விலை Parallel line-ஐ தொட்டதும் கீழே இறங்காமல் Parallel line-ஐ உடைத்துக்கொண்டு தொடர்ந்து மேல் நோக்கியே சென்று கொண்டிருந்தால்...! நீங்கள் குறைந்த விலையில் பங்குகளை விற்றுவிட்டீர்களே! பேசாமல் அப்படியே வைத்திருந்தால் நல்ல இலாபம் கிடைத்திருக்குமே! ஏன் விற்றீர்கள்? நான்தான் சொன்னேன் என்றால் உங்களுக்கு எங்கே போய்யிற்று அறிவு!.
|
மேலே உள்ள படம் நாம் Down trend-ஐ பற்றி அறிந்துகொள்ள பயன்படுத்தியது. எண் 4 உள்ள இடங்களில் பங்குகளை வாங்கி எண் 5 உள்ள இடத்தில் விற்கச்சொன்னேன். ஒரு வேலை எண் 4 உள்ள இடத்தில் காளை தன் காலை பதிக்காமல் மேலும் கீழ் நோக்கி இறங்கிவிட்டால் என்ன செய்வீர்கள். ஏற்கனவே இது ஒரு Down trend ஆயிற்றே! விலை இறங்கிக்கொண்டேதான் செல்லுமே! மறுபடியும் விலை அதிகரிக்க வெகுகாலம் ஆகுமே! நான்தான் சொன்னேன் என்றால் உங்களுக்கு எங்கே போய்யிற்று அறிவு!.
எண் 4 உள்ள இடத்தில் பங்குகளை வாங்கிய பிறகு விலை மேல் நோக்கி செல்கிறது என்றே வைத்துக்கொள்வோம். அப்படி விலை அதிகரித்தால் எண் 5 உள்ள இடத்தை (Parallel line) அடைந்ததும் விற்றுவிடுங்கள் என கூறியிருந்தேன் ஒரு வேலை அங்கு நீங்கள் பங்குகளை விற்ற பிறகும் தொடர்ந்து விலை அதிகரித்துக்கொண்டே சென்றால்...! நல்ல இலாபம் நமக்கில்லாமல் போய்விடுமே! நான்தான் சொன்னேன் என்றால் உங்களுக்கு எங்கே போய்யிற்று அறிவு!.
|
மேலே உள்ள படம் நாம் Uptrend-ல் உருவாகும் Sideways trend பற்றி அறிந்துகொள்ள பயன்படுத்தியது. காளை தான் மேல் நோக்கித்தான் செல்கிறேன் என்பதை நிரூபிக்க தன்னுடைய முந்தைய விலையின் உச்ச நிலைகளை உடைத்துக்கொண்டு முன்னேற வேண்டும் என கூறியிருந்தேன். அதை நம்பி எண் 3 உள்ள இடத்திற்கு நேராக விலை சென்றதும் (வட்டமிட்டுள்ள இடம்) சில நாட்கள் மேல் நோக்கி செல்லாமல் அங்கேயே இருப்பதை அறிந்ததும் சரி இது Sideways trend- தான் எனவே நாம் வாங்கிய பங்குகளை விற்றுவிடுவோம் என எண்ணி விற்றுவிடுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் பங்குகளை விற்ற பிறகு எண் 3 உள்ள இடத்தை அதாவது தன்னுடைய முந்தைய உச்ச நிலையை உடைத்துக்கொண்டு காளை மேல் நோக்கி சென்றால்...! நான்தான் சொன்னேன் என்றால் உங்களுக்கு எங்கே போய்யிற்று அறிவு!.
|
மேலே உள்ள படம் Down trend-ல் Sideways trend உருவாகும் விதம் பற்றி அறிந்துகொள்ள நாம் பயன்படுத்தியது. இதில் எண் 3 உள்ள இடத்தில் காளை தன்னுடைய முந்தைய விலை குறைவான (எண் 1) நிலையை உடைகாமல் திரும்பிவிட்டது எனவே இங்கு Sideways trend உருவாகிறது என்று கூறியிருந்தேன். ஒரு வேலை சில நாட்கள் கழித்து காளை தன்னுடைய சாதனையை தானே முறியடித்து எண் 1-ஐயும் தாண்டி கீழ் நோக்கி செல்லத்தொடங்கினால்...! நான்தான் சொன்னேன் என்றால் உங்களுக்கு எங்கே போய்யிற்று அறிவு!.
காளையா கன்றுக்குட்டியா!
|
மேலே உள்ள படத்தை கவணமாக பாருங்கள். நம்மைப் பொருத்தவரையில் இது ஒரு Uptrend-க்கான வரைபடம். ஆனால் எதைவைத்து இதை ஒரு Uptrend-டிற்கான படம் என்று கூறுகிறோம்? ஏதாவது ஒரு காரணம் சொல்லுங்கள்! எந்த காரணமும் சொல்ல முடியாது. ஏனெனில் அங்கே இப்படித்தான் இருக்க வேண்டும் என எந்த சட்டமும் கிடையாது. Uptrend-ஆக இருக்கும் என நாம் நம்புகிறோம் அவ்வளவுதான். விலை மேல் நோக்கி சென்றால் மட்டுமே நம்முடைய நம்பிக்கை உறுதியாகும். ஆனால் விலை கீழ் நோக்கி திரும்பி Down trend-ஆக மாறலாம். அல்லது இருக்கும் இடத்திலேயே சுற்றிக்கொண்டு ஒரு Sideways trend-ஆகவும் மாறலாம். எதுவும் நம் கையில் இல்லை. எந்த திசையை நோக்கி வேண்டுமானாலும் காளையின் கவணம் திரும்பலாம். இங்கே ஒரு நிலையற்ற தன்மை நிலவுகிறது. இந்த விசயம் மற்ற Trend-களுக்கும் பொருந்தும். Down trend-டிற்கான கோடுகளை நாம் வரைந்துவிட்டால் அது Down trend-ஆகிவிடாது. அது ஒரு Sideways trend-ஆக மாறலாம். ஏன் Uptrend-ஆகக்கூட மாறலாம். சிவப்பு நிறம் காட்டினால் நிற்பதற்கும், பச்சை நிறம் காட்டினால் புறப்படுவதற்கும் இதென்ன சாலைகளில் உள்ள போக்குவரத்திற்கான சமிக்கையா!. எந்த நம்பிக்கையில் முதலீடு செய்வது! யாரை நம்பி முதலீடு செய்வது! நான்தான் சொன்னேன் என்றால் உங்களுக்கு எங்கே போய்யிற்று அறிவு!.
இப்போது சொல்லுங்கள் நண்பர்களே காளை என்பது உண்மையில் கானல்நீர்தானே!
சாலையில் செல்லும்போது கவணித்தீர்களானால் சாலையில் சில இடங்களில் வண்ணத்தால் வட்டமிட்டிருப்பார்கள். குறிப்பிட்ட அந்த இடத்தில் ஏற்கனவே ஒரு விபத்து நடந்துள்ளது என்பதை தெரிந்துகொள்வதற்கான, மற்றவர்களும் புரிந்துகொள்வதற்காக அப்படி செய்திருப்பார்கள். காளையை நான் தேடிப்போன பயணத்தில் எனக்கு விபத்து நடந்த இடம் என வட்டமிட நினைத்தால் அந்த வட்டத்தை இந்த கட்டுரையில்தான் போட வேண்டும். ஆம் என்னுடைய நம்பிக்கைகளும், நான் கற்ற விசயங்களும் வெறும் கானல்நீரே என்பதை நான் உணர்ந்த இடம் இதுதான்.
நீங்கள் இதுவரை கற்றுக்கொண்ட விசயங்களை ஏற்கனவே பங்குச்சந்தையில் பயணம் செய்பவர்களில் கூறிப்பாருங்கள். சரி அதற்கென்ன இப்போது என மிக சாதாரணமான உணர்ச்சியை மட்டுமே வெளிப்படுத்துவார்கள். விசயம் அறிந்தவர்களை பழம் தின்று கொட்டை போட்டவன் என கூறுவார்கள் ஆனால் அந்த கொட்டையை புதைத்துவைத்து மீண்டும் மரமாக்கி பழம் பறித்து தின்றவர்களும் பங்குச்சந்தையில் உண்டு. ஆனால் அவர்களால்கூட காளையின் கால்தடங்களை பின்பற்ற முடியாது. இதுவரை நீங்கள் கற்றுக்கொண்டது ஒன்றுமே இல்லை. அவை மிக மிக சாதாரனமான விசயங்கள். அவற்றை வைத்துக்கொண்டு ஒரு ரூபாய் கூட சம்பாதிக்க முடியாது.
என்ன இதுவரை கற்றுக்கொண்டது பயனற்றவையா! ஒன்றுக்கும் உதவாதா! பயனுள்ளவைதான், உதவும்தான், ஆனால் எப்படி? இதோ வழிமுறைகள் என அடுத்த பகுதியை ஆரம்பித்துவிடலாம். ஆனால் நோயில்லாதவனுக்கு மருந்துகொடுத்தால் புதுவித நோய் உருவாகிவிடும் என்பார்கள். எனவே என்னுடைய அடுத்த பணி உங்களுக்கு நோய் உண்டாகுவதுதான். அதற்குபிறகு மருந்துகொடுத்தால்தான் அதன் அவசியம் புரியும் உங்களுக்கு.
சரி அடுத்த கட்டத்திற்கு செல்ல தேவையானவை என்ன? அதென்ன நோய்? அதை எப்படி உணர்வது? விவாதம். ஆம் விவாதம் அது ஒன்றுதான் வழி. இதுவரை கற்றுக்கொண்டதையும் இந்த கட்டுரையில் உள்ள கேள்விகளையும் தொடர்புபடுத்தி விவாதம் செய்யுங்கள். என்னோடு, உங்களோடு, உங்கள் நண்பர்களோடு, இந்த கூடு தளத்தோடு விவாதம் செய்யுங்கள். இதோ இவைதான் தீர்வுகள் என உங்களுக்கு தீர்மானமாக தெரிந்தால் கூறுங்கள். தீர்வுகள் தெரியாவிட்டால் தேடுங்கள். நண்பர்களிடம் கேளுங்கள். அவற்றை வெளிப்படுத்துங்கள் அதன் மூலமாக நானும் பல விசயங்களை தெரிந்துகொள்வேன். ஒருவேலை அவை என்னுடைய அனுபவங்களின் அஸ்திவாரத்தையே ஆட்டிப்பார்களாம். உங்களிடமிருந்து நிறைய விவாதங்களை எதிர்பார்க்கிறேன். நிறைய என்றால் எவ்வளவு! உங்களின் விவாததையே அடுத்த வார கட்டுரையாக வெளியிடும் அளவிற்கு... நன்றி விவாதிப்போம்.
குறிப்பு: இங்கே நீங்கள் கேட்ட கேள்விகள் எனக்கு முன்பே தோன்றியது. ஆனால் இறுதியில் கேட்டுக்கொள்ளலாம் இருந்துவிட்டேன் என உங்களில் யாராவது நினைத்திருந்தால், இப்படிப்பட்ட கேள்விகள் உங்களுக்கும் தோன்றியிருந்தால், நிச்சயம் நீங்கள் பாராட்டப்பட வேண்டியவரே.
இப்படி நான் யோசிக்கவே இல்லையே என அதிர்ச்சியடைந்த நண்பர்களுக்கு: உங்களின் அதிர்ச்சியை மூடி மறைக்க வேண்டியதில்லை அதை வெளிப்படுத்துங்கள் அப்போதுதான் வெளிச்சம் தென்படும்.
தொடரும்...
|