கண்டுகொண்ட காளையை கட்டிப்போட்டேன்:
ஒரு காரியத்தை செய்துமுடித்து நாம் முன்னேறிக் கொண்டிருக்கும்போது நம்மை சுற்றியுள்ள நண்பர்களிடமிருந்து வரும் வார்த்தைகள் நம்மை முன்னேறத் தூண்டுபவையா அல்லது நமக்கு முட்டுக்கட்டை போடுபவையா என கண்டுகொள்வது மிகவும் சிரமமாக இருக்கும். உதாரணமாக இந்த பங்கின் விலை இன்று இவ்வளவு அதிகரிக்கும் என்று நான் குறுஞ்செய்தி அனுப்பியதும், அதை பரிசோதித்துபார்க்கும் அவர்கள் முடிவு சரியாக இருக்கும் பட்சத்தில் பரவாயில்லையே சரியாக சொல்கிறார் என்று எளிமையாக முடித்துக்கொள்வார்கள். முடிவு சற்று மாறி பாதகமாகவோ அல்லது பாதி வெற்றியாகவோ அமைந்துவிட்டால் என்ன விலை ஏறும் என்று சொன்ன ஆனால் ஹ.. ஹா.. ஹா.. என்று சிரிக்கும் போது நம்மை கிண்டல் செய்கிறார்களா அல்லது சாதாரணமாக சிரிக்கிறார்களா என்று தெரியாது ஆனால் அந்த சிரிப்பு என்னை அவமானப்படுத்தியதாகவே உணர்வேன். நண்பர்களை குறை கூறவில்லை என் நிலை அப்படி. அது சாதாரணமாக சிரிப்பாக இருந்தாலும் கூட இன்று வெற்றியா அல்லது தோல்வியா என காத்திருக்கும் என்னை அந்த சிரிப்பு சிரமத்திற்கு உள்ளாக்கிவிடும்.
மிகுந்த அவமானமாக இருக்கும். இந்த சிறு விசயத்தை இவ்வளவு அவமாணமாக உணர, வெற்றிச் செய்திகிட்டும்போது எனக்கு ஏற்படும் மிகுந்த ஆணவம் காரணமாக இருக்குமோ என்று பல தடவை நான் சிந்ததுண்டு. அந்த சூழ்நிலையில் வராத சிரிப்பை வரவழைப்பது எவ்வளவு சிரமமானது என்று எனக்குத்தான் தெரியும். மனதினுள், ச்சே இப்படி மாறிவிட்டதே, மற்றவர்கள் சிரிக்கும்படி நிகழ்ந்துவிட்டதே, இனிமேல் இப்படி ஒரு தோல்வி ஏற்படவே கூடாது அதற்கு என்ன செய்ய வேண்டும்? ஏன் இன்று சரியாக கணிக்க முடியவில்லை? என்ற சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கும். மீண்டும் வெற்றிச் செய்தி கிட்டும்வரை மிகத்தீவிரமாக சிந்தனை செய்துகொண்டிருப்பேன். இந்த தீவிரமான சிந்தனையின் விளைவாக சில சமயங்களில் நான் சொல்லும் பங்குகளின் முடிவுகள் அபாரமான வரவேற்பை பெரும். ஒரு சமயத்தில் சந்தை மிக வேகமாக இறங்கிக்கொண்டிருந்தது ஆனால் நான் குறிப்பிட்ட இரண்டு பங்குகளின் விலைமட்டும் நான் சொன்ன இலக்கை அடைந்து அதற்கு பின்னர் மெல்ல இறங்கியது. அப்போது வந்த பாராட்டுக்களில் திக்குமுக்காடிப்போன நான், கிடைத்த இந்த நிலையை எப்படி நிலையான ஒன்றாக மாற்றிக்கொள்வது என்று சிந்திக்க ஆரம்பித்தேன்.
தோழி சுகன்யாவின் அறிவுரைப்படி, Technical analyst-ஆக யார்யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு அவர்களிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள ஆரம்பித்தேன். இந்த செய்கையின் மூலமாக என் செயலை மேலும் மேன்மையடையச் செய்ய முடியும் என்று நம்பினேன். ஒரே துறையில் இருப்பவர்களிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும் போது பல தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும் மேலும் அதிகமாக கற்றுக்கொள்ள முடியும். அதைவீட முக்கியமாக எனக்குக் கிடைத்துள்ள இந்த Technical analyst என்ற பெயரை தொடர்ந்து காப்பாற்றிக்கொள்ள முடியும். எனவே என்னுடைய தேடுதலின் அடுத்த கட்டம் Technical analyst-ஆக இருப்பவர்களை தேடிப்பிடிப்பதாக அமைந்திருந்தது.
தேடுதலின் விளைவு, கலயாண வீட்டுக்கு வந்தவர்கள் நான் எந்தவகையில் உறவினர் தெரியுமா! எந்த ஊர் தெரியுமா! என ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொள்வதைப்போல ஏகப்பட்ட Technical analyst-கள் கண்ணில்பட ஆரம்பித்தார்கள். யாரை பார்த்தாலும் நானும் ஒரு analyst-தான் என்று கூறிக்கொண்டு சந்தை பற்றிய தன்னுடைய கணிப்புகளை கூறத்தொடங்கிவிடுவாகள். இவ்வளவு நபர்கள் analyst-ஆக இருக்கிறார்களா என்று மலைப்பாக இருந்தது. ஒரு காலகட்டத்தில் கண்ணில்படும் நபர்கள் எல்லோரும் நான் B.Com படித்திருக்கிறேன் என்றார்கள். அதற்குப்பிறகு எல்லோரும் நான் MBA படித்திருக்கிறேன் என்றார்கள். ஆனால் யாரும் சொல்லிக்கொள்ளும்படியான வேலையில் இல்லை காரணம் படித்திருக்கிறார்களே தவிர அந்த படிப்பில் தனித்திறமை வாய்ந்தவர்களாக இல்லை. ஒருவேலை இவ்வளவு நபர்கள் analyst –ஆக தென்படுவதும் அப்படித்தான் இருக்குமோ! கண்ணில் படும் அனைவரிடமும் தனித்திறமை இருக்காதோ, அதில் நான் எந்தவகையில் இருக்கிறேன்? தனித்திறமை வாய்ந்தவனா அல்லது கூட்டத்தில் நானும் ஒருவனா என்று யோசிக்க வைத்தது என்னுடைய இரண்டாம் கட்ட தேடுதலின் முடிவுகள்.
யாரைப்பார்த்தாலும் நானும் ஒரு சந்தை ஆய்வாளன்தான் என்று சொல்லிக்கொள்ள காரணமும் இருந்தது. அந்த சூழ்ந்லையில் Technical analysis பற்றி சொல்லித்தர அதை ஒரு பாடமாக கற்றுத்தர பல நபர்கள் பயிற்சி வகுப்புகள் நடத்திக்கொண்டிருந்தார்கள். பத்திரிக்கைகள், செய்தித்தாள்களில் அதற்கான விளம்பரங்களும் வந்துகொண்டிருந்தது. இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் தனியாக அவர்களுக்கென்று மென்பொருட்களை உருவாக்கி, அந்த மென்பொருட்களை பயன்படுத்த மாதம் இவ்வளவு ரூபாய் கொடுங்கள் என்று சந்தா விபரங்களை வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த மென்பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் பங்குகளை எந்த நிலைகளில், எந்த விலைகளில் வாங்கலாம் மற்றும் விற்கலாம் என்ற சமிஞ்கைகள் உங்களுக்கு கிடைக்கும். அந்த சமிஞ்கைகளுக்கு எற்ப நீங்கள் நடந்துகொண்டால் இலாபம் சம்பாதிக்கலாம் என்ற ரீதியில் அவர்களின் அறிவிப்பு இருக்கும். மேலும் உங்களுக்கு விருப்பம் இருந்தால் மொத்தமாக விலைகொடுத்து அந்த மென்பொருளை வாங்கிக்கொள்ளலாம் அதற்கென்று தனியான விலையும் உண்டு. இப்படிப்பட்ட செயல்பாடுகள் மூலம் எண்ணிலடங்காத Technical analyst-கள் உருவாகிக் கொண்டிருந்தார்கள். எனவே நான் சந்திக்கும் ஒவ்வொருவரும் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும்போது நானும் Technical analyst-தான் என்று அறிமுகம் செய்துகொண்டிருந்தார்கள். எங்களுக்குள் யார் சரியாக கணித்துச் சொல்கிறார்கள் என்ற ரீதியில் போட்டி கூட ஏற்பட்டதுண்டு. இந்த பங்குகளின் விலை நாளை அதிகரிக்கும் என்று அவர்களிடம் நான் சொல்ல, நிச்சயம் அதிகரிக்காது விலை நான் குறிப்பிடும் அளவுக்கு இறங்கத்தான் செய்யும் என்று அவர்கள் சவால்விட ஆரம்பித்தார்கள். அங்கேயும் வெற்றி வருவதும் போவதுமாக இருந்தது. அதிகபட்சமாக எதிர்மறையான முடிவுகளே கிடைத்தது. அப்போதெல்லாம் நண்பர்களிடமிருந்து “அதான் நாங்க சொன்னோம்ல” என்ற நக்கலான மற்றும் நகைச்சுவையான வாக்கியங்கள் வரும். அந்த நண்பர்களிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகவும் என்னுடைய திறமையை மேலும் செம்மை படுத்திக்கொள்வதற்காக பலவிதமான நவீன முறைகளையும் அவ்வப்போது தேடிக்கொண்டே இருப்பேன். அப்படி தேடும் போது பங்குகளின் ஏற்ற இறக்கங்களை கணிக்க மற்றொரு முறை இருக்கிறது என்று தெரிந்துகொண்டேன். அதற்கு பெயர் Fundamental analysis.
Fundamental analyst-ஆக பணிபுரியும் நண்பர்களின் பேச்சுக்களோ என்னை அதிர்ச்சியடையச் செய்தது. இதுவரை ”நீ கற்றதெல்லாம் வீணே” என்ற ரீதியில் அவர்களின் பேச்சு அமைந்திருந்தது. Technical analysis என்பதெல்லாம் வீண் வேலை அதன் மூலமாக பங்குகளின் தரத்தையோ, விலையையோ தீர்மானிக்க இயலாது. ஒரு வரை படத்தை பார்த்து கண்மூடித்தனமாக பங்குகளை வாங்குவது முட்டாள்தனமானது. பங்குகளை வாங்குவதற்கு முன் அந்த நிறுவனத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். எந்த பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள். அந்த பொருளுக்கு மக்களிடையே தேவையின் அளவு எப்படி இருக்கிறது. அரசு அந்த தொழிலுக்கு ஏதாவது சிறப்பு சலுகைகள் கொடுத்துள்ளதா. எதிர்காலத்தில் அந்த தொழிலின் வளர்ச்சி எப்படி இருக்கும். அந்த நிறுவனத்தின் கடந்தகால இலாப நட்ட கணக்குகளின் விகிதம் எப்படி இருக்கிறது அதன் வளர்ச்சி என்ன. பங்குதார்களின் விபரம் என்ன போன்ற அனைத்து விசயங்களையும் அறிந்துகொண்ட பின்புதான் அந்த பங்குகளை வாங்க வேண்டும் என்பது Fundamental analyst-ஆக இருக்கும் நன்பர்கள் வாதமாக இருந்தது. சரி அதையும்தான் கற்றுக்கொள்வோமே என்ற சிந்தனையில் சில காலம் அதை படித்தேன். நான் Fundamental analysis பற்றி படித்துக்கொண்டிருப்பதை அறிந்த என் Technical analysis நண்பர்கள் ஹ.. ஹா.. ஹா.. என்று சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். சிரித்ததற்கான காரணம், ஒரு பங்கை வாங்க இவ்வளவு யோசனைகள் செய்துகொண்டு அந்த நிறுவனத்தின் அறிக்கைகளை படித்துக்கொண்டிருந்தால் அதற்குள் விலை ஏறிவிடும் தம்பி, இதெல்லாம் நடைமுறைக்குதவாது. அந்த பங்கின் கடந்தகால வரைபடத்தை பார்த்தாலே அனைத்து விசயங்களும் புரிந்துவிடும். காரணமில்லாமல் பங்கின் விலை அதிகரிக்குமா! அந்த நிறுவனம் நன்றாக இருப்பதால்தானே விலை அதிகரிக்கிறது! அதை நீ மீண்டும் ஆராய்சி செய்து என்ன செய்ய போகிறாய்? என்று விவாதித்ததால் சரி எதற்கு தேவையில்லாமல் எது சிறந்தது என்று குழப்பிக்கொண்டு காலத்தை வீணாக்க வேண்டும் ஒரு அளவிற்காவது நமக்கு தெரிந்தது Technical analysis மட்டுமே எனவே அதில் மட்டும் கவனம் செலுத்துவோம் என்றென்ணி Fundamental analysis பற்றிய பாடங்களை படிப்பதை நிறுத்திக்கொண்டேன்
ஆனால் Fundamental analysis பற்றி தெரிந்துகொள்ளம் அந்த முயற்சியில் சில நன்மைகளும் நடந்தேறியது. புதிய நண்பர்களால் பங்குச்சந்தை தொடர்பான பல இணையத்தளங்களின் முகவரி கிடைத்தது. இணையத்தளங்களில் இலவசமாக எந்தெந்த பங்குகளின் விலை ஏறும் இறங்கும் என்று தினமும் எழுதிக்கொண்டிருந்தார்கள். அதிலும் குறிப்பாக நேற்று நாங்கள் பரிந்துரைத்த பங்குகள் இவை, இந்த இந்த விலைகளுக்கு செல்லும் என்று குறிப்பிட்டு இருந்தோம் நாங்கள் சொல்லியபடிதான் நடந்தது என்று அவர்களின் சாதனை விபரங்களையும் தினமும் எழுதிக்கொண்டிருந்தார்கள். சில இணையத்தளங்களில் இந்த விபரங்களுடன், மேலும் விபரங்களை தெரிந்துகொள்ளவும், அதிகமான பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளவும் எங்களுக்கு இவ்வளவு ரூபாய் சந்தா செலுத்துங்கள் என்ற அறிவிப்புடனும் இருந்தது. அந்த இணையத்தளங்களை பயன்படுத்தி நான் பங்குகளை வாங்கவில்லை மாறாக அவர்கள் சொல்வதெல்லாம் சரியா தவறா என்ற ஆழ்ந்த சிந்தனையோடு அவர்கள் சொல்லும் பங்குகளின் வரை படத்தை எடுத்து ஏன் விலை ஏறும் என்று சொல்கிறார்கள் என்று கண்டுபிடித்து அதன் மூலமாக நான் ஏதாவது கற்றுக்கொள்ள முடியுமா என்ற ரீதியில்தான் இணையத்தளங்களை பயன்படுத்திக்கொண்டிருந்தேன். அந்த முயற்சி கூட புதுமையாக நன்றாகத்தான் இருந்தது.
அவ்வப்போது நான் பணியாற்றும் நிறுவனத்தின் உரிமையாளர் எங்களை அழைத்து பொதுவாக பங்குச்சந்தை துறை பற்றிய விசயங்களை விவாதிப்பது வழக்கம். நிறுவனத்தின் உரிமையாளர் மிகவும் அனுபமிக்கவர். சிறந்த படிப்பாளி. எந்த ஒரு விசயத்தையும் தெரிந்துவைத்துக்கொள்வதில் சரியான நேரத்தில் தெரிந்த விசயங்களை பயன்படுத்துவதில் அவருக்கு நிகர் எவருமில்லை என்று உறுதியாக கூறுவேன். எனவே அவரிடம் பேசுவன் மூலம் பல விசயங்களை தெரிந்துகொள்ள முடியும் என்ற ஆர்வத்தில் அவருடைய பேச்சை கூர்ந்து கவனித்துவருவோம். ஒரு சமயம் என்னுடைய நிறுவனத்தின் உரிமையாளரிடம் நிறுவனத்தின் வளர்ச்சி பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில், குறுச்செய்தி பற்றிய பேச்சு வந்தது. மிகுந்த பெருமிதத்துடன் நம் நிறுவனத்தில் இருந்து அனுப்பப்படும் குறுச்செய்திகள் மிகச்சரியாக வேலை செய்வதாகவும், அதன் மூலம் வாடிக்கையாளர்கள் பணம் சம்பாதிக்க முடிவதாக பாராட்டுகிறார்கள் என்று சொல்லி, நிறுவணத்தின் தலைவரின் பாராட்டுக்காக காத்திருந்தோம். ஆனால் அவரோ ஹ ஹா ஹா என்று பலமாக சிரிக்க ஆரம்பித்தார். அவரின் சிரிப்பு அடங்க சில நிமிடங்கள் ஆனது. அதிர்ச்சியில் அவரையே பார்த்துக்கொண்டிருந்தோம். சிரிப்பை அடக்க முடியாமல் தன் பேச்சை தொடர்ந்தார். அப்படி ஹ ஹா அப்படி... அப்படியானால் அந்த குறுச்செய்தியை உலகம் இருக்கும் மக்கள் அனைவருக்கும் அனுப்பினால் எல்லோரும் பணம் சம்பாதித்து சந்தோசமக இருக்கலாம் அல்லவா என்று கிண்டலாக பேசிவிட்டு தொடர்ந்து சிரித்தார். நான் கற்றுக்கொள்ள காரணமான புத்தகத்திலிருந்த பக்கங்கள் ஒவ்வொன்றாக கிழிந்து காற்றில் பறப்பதுபோல் உணர்ந்தேன். காரணம் மிக்சச்சிறந்த அனுபவசாலியிடமிருந்து வரும் வார்த்தைகள் பொய்த்ததில்லை.
தொடரும்...
|