எஸ். ராமகிருஷ்ணன்
அன்று கதை தெரியாத சிறுவர்களே இல்லை. அது போலவே சிறுவர்களுக்கு விருப்பமாக கதை சொல்லும் பெரியவர்களும் இருந்தார்கள். ஊர் கிணற்றடியின் ஒரு பக்கம் தான் கதை சொல்லும் களம். இரவிலும் யாராவது ஒரு பெண் தண்ணீர் இறைக்க வந்து கொண்டேயிருப்பாள். கிணற்றில் வாளி விழும் சப்தம் கேட்பது ஆனந்தமாகயிருக்கும். கிணற்றை சுற்றிலும் சிமெண்டால் கட்டியிருப்பார்கள். அத்துடன் கிணற்றடியில் எப்போதும் குளிர்ச்சியிருக்கும்.
அங்கே நாலைந்து பேராக துவங்கும் கதை சொல்லும் நிகழ்ச்சியின் முடிவில் பத்துபேருக்கு மேலாக ஆகிவிடும். நாவிதர், மாட்டு தரகர் , சமையற்காரர், சலவை தொழிலாளி இவர்களே ஊரில் அதிகம் கதை அறிந்தவர்கள். பள்ளி ஆசிரியர்கள் எவருக்கும் தெரியாத கதைகள் இவர்களிடமிருந்தன. பெண்கள் இரவில் கதை சொல்வதில்லை. பலரும் பகலில் வேலை செய்தபடியே கதை சொல்லக்கூடியவர்கள். அதிலும் திருகை திரித்தபடியோ, நெல்அவித்தபடியோ, தென்னை ஒலையை பின்னியபடியே கதையை வளர்த்து சொல்வார்கள்.
அப்படி எண்ணிக்கையற்ற கதைகளை கேட்டிருக்கிறேன். கதை கேட்கும் ஒவ்வொரு சிறுவனும் தானே ஒரு கதையை சொல்ல துவங்கிவிடுவான். இதில் சுப்பையா என்ற சிறுவன் தினமும் கதை சொல்வான். அவன் எந்தக் கதையை துவக்கினாலும் நடுராத்திரி பனிரெண்டுயிருக்கும். ஒரு ஊர்ல ஒரு ராஜா என்று தான் ஆரம்பிப்பான். அவனுக்கு நடுராத்திரி பனிரெண்டு மணி என்பது அச்சமூட்டும் ஒரு நேரம். அதை விலக்கி அவனால் ஒரு போதும் கதை சொல்ல முடியாது. |