நான் கட்டிப்போட்டது காளையா! கனவா!
நிறுவனத்தின் மேலாளர் குறுஞ்செய்தியின் பயனைப்பற்றி கிண்டலாக பேசி சிரித்தது சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. பாராட்டை எதிர்பார்த்திருந்த எங்களை அவரின் சிரிப்பு பாதிக்கத்தான் செய்தது. ஏன் அப்படி நடந்துகொண்டார் என்று அப்போது எனக்கு புரியவில்லை. மாறாக குறுஞ்செய்திகளின் அருமை அவருக்கு தெரியவில்லையோ என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது. அப்படி ஐயம் ஏற்படுவதற்கு காரணம், நான் கணித்துச்சொல்லும் பங்குகளின் விலை அதிகரிக்கிறதல்லவா! அந்த ஆணவம் காரணமாக இருக்கலாம்.
மெல்ல மெல்ல என் செயல்பாடுகளின் மீது எனக்கு நம்பிக்கை வந்ததும், நாம் சொல்லி மற்றவர்கள் பணம் சம்பாதிக்கும் போது அதை நாமே ஏன் செய்யக்கூடாது என்ற சிந்தனை தோனறிக்கொண்டே இருந்தது. என்னது! நீ பங்குவர்த்தகத்தில் ஈடுபடுவதில்லையா, இந்த கதையெல்லாம் வேறு யாரிடமாவது சொல் என நண்பர்களும் கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள். எனக்கும் அப்படி ஒரு ஆசை இருந்ததால் சில நண்பர்களுடன் இணைந்து பங்கு வர்த்தகத்தில் ஈடுபட ஆரம்பித்தேன்.
பங்கு வர்த்தகத்தில் ஈடுபடாமல் மற்றவர்களுக்கு அறிவுரை மட்டும் கூறிக்கொண்டிருந்தபோது பதட்டப்படாமல்தான் பணியாற்றிக்கொண்டிருந்தேன். விலையின் ஏற்றம், இறக்கம் என எதுவும் என் மனதை பாதிக்கவில்லை. ஒருவேளை அது அடுத்தவர்களின் பிரச்சனை என்ற அலட்சியம் காரணமாக இருக்கலாம். ஆனால் என் பணம், எனக்கு வர வேண்டிய இலாபம் என்று யோசிக்க ஆரம்பித்ததும் பதட்டப்பட ஆரம்பித்துவிட்டேன். நான் கணித்த முடிவுகள் தவறாகி நஷ்டம் ஏற்பட்டால், இழப்பது என் பணம் என்பதால் பெரிய அளவில் மனம் பாதிக்கப்பட்டது. ஆனால், மற்றவர்களுக்கு அறிவுரை மட்டும் கூறிக்கொண்டிருந்த போது தவறு நேர்ந்தால், அது அடுத்தவர்களுக்கு உண்டாகும் பாதிப்பு என்பதாலோ என்னவோ அப்போது நான் பதட்டப்பட்டதில்லை. சரி நாளைக்கு சரியாக செய்வோம் என்ற சிந்தனையோடு அந்த பிரச்சனையை முடித்துக்கொள்வேன். ஆனால் இப்போது இழப்பது என் பணம், அதனால் சரி போனால் போகட்டும் என்று விட முடியாது. எனவே பங்குச்சந்தையில் உள்ள மிகச்சிறந்த இரண்டு கோட்பாடுகளையும் (Theory) கற்றுக்கொண்டு ஒரு நேர்த்தியான முறையில் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட முயன்றேன். அந்த முயற்சியின் போது என் நண்பர் ஒருவரிடமிருந்து வரப்பிரசாதமாக வந்தது சேர்ந்தது ஒரு இணைய தளத்தின் முகவரி. அந்த இணையத்தளம் நான் சொன்ன இரண்டு கோட்பாடுகளில் ஒன்றின் அதிகார பூர்வமான தளமாக செயல்பட்டுகொண்டிருந்தது. அந்த தளத்தில் அவர்களின் கோட்பாடுகளின்படி இந்திய சந்தை எப்படி செயல்படும் என்பதை கணித்து தினமும் எழுதி வருவார்கள். சந்தை காளையின் ஆதிக்கத்தில் இருப்பதாகவும், அது அடையவேண்டிய இலக்கு இன்னும் அதிகம் இருப்பதாகவும் எழுதியிருந்தார்கள். பங்குச்சந்தை உலகின் சிறந்த கோட்பாட்டின் அதிகார பூர்வமான தளத்திலேயே சந்தை சிறப்பாக இருக்கும் என்று சொன்ன பிறகு எதற்கு பயப்பட வேண்டும். தினமும் அந்த கோட்பாடுகளை படிப்பதும், குறிப்பிட்ட அந்த தளத்திற்கு சென்று நான் கற்றுக்கொண்டு கோட்பாட்டை பரிசோதனை செய்துகொள்வதுமாக இருந்தேன்.
என்னதான் நான் சிறப்பாக செயல்பட்டாலும், என் பணத்தை போட்டு நான் முதலீடு செய்ய ஆரம்பித்ததும் என் திறமை மீது எனக்கு சந்தேகங்கள் தோண்றிக்கொண்டே இருந்தது. நான் சரியாகத்தான் செய்கிறேனா! உண்மையிலேயே எனக்கு விசயம் தெரிகிறதா... மனம் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தது. ஆனால் இப்போது எனக்கு கவலை இல்லை, காரணம் இதோ உலகப்பிரசித்திப்பெற்ற கோட்பாடுகளின் தளத்திலேயே நான் கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டேன். இனி மனம் கேள்விகளை எழுப்பாது என்ற உறுதியான நம்பிக்கையில் வர்த்தகத்தை மேலும் வளர்க்க ஆரம்பித்தேன். வர்த்தகத்தில் எனக்கு லாபம் நஷ்டம் என்று மாறி மாறி வந்தாலும் பெரும்பாலும் இலாபம் என்ற நிலையையே அதிகம் அடைந்தேன். எல்லாம் நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது. அந்த குறிப்பிட்ட நாள் வரும் வரை.
அன்று, 2008 சனவரி மாதம் 21ம் தேதி. காலையில் வழக்கம்போல அலுவகத்தினுள் நுழைகிறேன். அலுவலகத்தின் முக்கியமான பதவியில் இருப்பவர்கள் அனைவரும் நேரத்தில் வந்து எதோ பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தார்கள். வழக்கமாக இவர்கள் இந்த நேரத்திற்கு வரமாட்டார்களே! என்ன விசயமாக இருக்கும்! எதேனும் பிரச்சனையா! என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது ஒருவர் வங்கிக்கு வேக வேகமாக ஓடுகிறார், மற்றொருவர் கிளை அலுவலகங்களுக்கு தொலைபேசி மூலம் ஏதோ செய்திகளை சொல்லிக்கொண்டிருக்கிறார். மற்றவர்கள் அனைவரும் ஒரு இடத்தில் திரண்டு நின்று சந்தை ஆரம்பிக்கும் திரையையே வெறித்து பார்த்தபடி நிற்கின்றார்கள். நிமிடங்கள் மெல்ல கரைகின்றன...
இதோ சந்தை ஆரம்பிக்க சில நிமிடங்கள்... இதோ ஆரம்பித்துவிட்டது மைனஸ் ஐநூறு புள்ளிகளுக்கு மேல் ஆரம்பம் ஆகிறது. சட்டென சந்தை அத்தோடு நிறுத்தி வைக்கப்படுகிறது. உடனே அலுவலகத்தில் உள்ள அத்தனை தொலைபேசிகளும் அலறுகின்றன. முடியாது, கிடையாது, கூடாது என்ற வார்த்தைகள் வரிசையாக கேட்கிறது. என்ன நடக்கிறது என்று நான் புரிந்துகொள்ளவே கொஞ்ச நேரம் ஆயிற்று. இவ்வளவு புள்ளிகள் இறங்கினால் குறிப்பிட்ட நேரத்திற்கு சந்தையை நிறுத்தி வைப்பார்கள் என்ற விசயம் விசாரித்ததில் தெரிந்தது. தொடர்ந்து அனைத்து அலைப்பேசிகளும் அலறிக்கொண்டே இருந்தது. எதிர் முனையில் வாடிக்கையாளர்கள் – இதோ காசோலையை பேஃக்ஸ் அனுப்புகிறேன். என்னுடைய பங்குகளை அப்படியே வையுங்க – ஒரு நாள் அவகாசம் கொடுங்கள் பணம் கொடுத்துவிடுகிறேன், தயவு செய்து இந்த நிலையில் விற்றுவிட வேண்டாம்... கெஞ்சல்கள், அதிகார குரல்கள், அதிர்ச்சிக்குரல்கள் என மாறி மாறி அழைத்துக்கொண்டே இருந்தது.
காட்டாறு போல வந்த கலவரத்தில் வழக்கமாக நான் செய்யும் எதையும் கவனிக்க முடியவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமானால் அன்று என்ன நடந்தது என்று எனக்கு புரியவேயில்லை. ஏதோ அமெரிக்கா என்கிறார்கள், ஐரோப்பா என்கிறார்கள், உலகச்சந்தை என்று எதேதோ பேசிக்கொண்டார்கள். வந்த வேலைகளை செய்ததிலேயே அன்றைய நாள் கரைந்துபோனது. என்னுடைய பங்குகளின் நிலை என்னவானது என்று கூட பார்க்க முடியவில்லை. சந்தை முடிந்ததும் நான் வாங்கி வைத்திருந்த பங்குகளின் விலை எவ்வளவு இறங்கி இருக்கிறது என்று பதட்டத்தோடு பார்க்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு விலையை பார்க்கும் போதும்... மனம் இறுகிய நிலைக்கு சென்றுவிட்டது. விழுங்க முடியாத ஒன்றை தொண்டைக்குள் வைத்திருப்பதுபோன்ற ஒரு உணர்வு.
வழக்கமாக இதயத்துடிப்பு போல துடித்துக்கொண்டே இருக்கும் எனது அழைப்பேசி அன்று ஏனோ மிக அமைதியாக இருந்தது. நண்பர்கள் யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. மாலையில் வீட்டை அடைந்து அமைதியாக அமர்ந்திருந்தேன். வேறொரு நிறுவனத்தில் பணிபுரியும் கவிதா என்ற தோழி என்னை தொடர்புகொண்டார். ஒருவர் இறந்ததும் ஏன்! நேற்று கூட நல்லாத்தானே இருந்தார் என்பார்களே அப்படித்தான் நானும் விசாரித்தேன். என்ன நடந்தது? ஏன் இவ்வளவு புள்ளிகள் இறங்கியது? என்னுடைய ஆய்வுப்படி இப்படி நடக்க வாய்ப்பில்லையே! என்னது இன்று சந்தையின் புள்ளிகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்தாயா! அடப்பாவி நீ எந்த நினைப்பில் இருக்கிறாய், உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் இறங்கி இருக்கும்போது உள்ளூர் சந்தை மட்டும் எப்படி புள்ளிகள் அதிகரிக்கும். அதாவது, ஏன் இவ்வளவு புள்ளிகள் இறங்கியது தெரியுமா! அமெரிக்கா, ஐரோப்பா என அவர் அடுக்கிக்கொண்டே போக அதிர்ச்சியில் அப்படியே அடங்கிப்போனேன். அடக்கடவுளே காளை என்று நினைத்து சிறு கயிற்றால் கடல்லையல்லவா கட்டிப்போட முயற்சி செய்திருக்கிறேன். பங்குச்சந்தை என் முன்னால் விஷ்வரூபமாக எழுந்து நிற்பதைப்போல் உணர்ந்தேன். கண்மூடித்தனாமக காளையை தேடிப்போய் கரடியிடம் அடிவாங்கி வீழ்ந்தவனாக உணர்ந்தேன்.
அடுத்த நாள் செய்தித்தாள்கள் அனைத்திலும் பங்குச்சந்தை பாதிக்கப்பட்டது பற்றிய செய்திதான் நிரம்பியிருந்தது. உலகப்பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிட்டதாகவும், அதன் தொடர்ச்சி இந்திய சந்தையும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இன்னும் சில செய்திகளில், பங்குச்சந்தை என்பது ஒரு சூதாட்டம் என்பதாகவும் அதை பலமுறை சொல்லியும் கேட்காமல் மக்கள் தங்கள் வாழ்வை பாழ்படுத்திக்கொண்டதாகவும் வெளியாகியிருந்தன. மெல்ல மெல்ல காரணங்கள் பற்றிய செய்திகள் குறைந்து காரணங்களால் விளைந்த காரியங்கள் பற்றிய செய்திகள் ஆக்கிரமிக்கத்தொடங்கின. அதாவது பங்குச்சந்தையில் பணத்தை இழந்ததால் குடும்பத்தோடு இந்த ஊரில் இவர் இறந்தார். அந்த ஊரில் அவர் இறந்தார் என்ற வெளிவரத்தொடங்கின. இறப்புச் செய்திகள் இயல்பான விசயமாக மாறிவிட்டது. எங்கும் சோக மயமாக காட்சியளித்தது. வாடிக்கையாளர்களின் வாடிப்போன முகமும், வருத்தம் நிரைந்த கெஞ்சல்களும் கேட்பதும், பார்ப்பதுமே வாடிக்கையான விசயமாகிவிட்டது.
சில நாட்கள் இப்படியே கழிந்து, இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு மெல்ல யோசித்தேன் என்ன நேர்ந்தது! ஏன் என் ஆய்வுகள் தோற்று, என்னை அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்றன. என் ஆய்வின் மூலமாக இந்த வீழ்ச்சியை ஏன் என்னால் முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியாமல் போயிற்று. சரி நான் ஒரு முட்டாள், அறிவாளிபோல அரிதாரம் பூசிக்கொண்டேன் என்றே வைத்துக்கொள்வோம். என்னைச் சுற்றி இருந்தவர்களுமா முட்டாள்கள்! உலகத்தரமான கோட்பாடுகளைக்கொண்ட கொள்கையாளர்களின் முடிவுகளும் முட்டாள்தனமாக முடிந்துவிட்டதே. எங்கே சென்றார்கள் அவர்கள்? இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? மழைக்காலத்தில் மின்சார விளக்கை சுற்றித்திறியும் ஈசல் கூட்டம்போல் இருந்தவர்கள் எங்கே சென்றார்கள்? ம்ஹும் ஒருவரும் தென்படவில்லை. இணையத்தளங்களுக்கு சென்று பார்த்தேன் புதுப்பிக்காமல் பழைய செய்திகளையே காட்டிக்கொண்டிருந்தது. சில நண்பர்களை தொடர்புகொண்டேன், ஏன் தாமதம் என்று கேட்கும் போது, தாமதமாயிடிச்சி என்று பதில் சொல்லும் மாணவன் போல, ஏன் இந்த வீழ்ச்சி என்று கேட்டால் வீழ்ச்சியடைந்துவிட்டது என்றார்கள். அடுத்தடுத்த நாட்களில் வழக்கமாக நிகழும் குறுஞ்செய்தி அனுப்புதல் போன்ற எந்த நிகழ்ச்சியும் நிகழவில்லை. பங்குச்சந்தை தொடர்பான தனிப்பட்ட என்னுடைய ஆர்வம் மெல்ல மெல்ல அழிந்துகொண்டிருந்தது. மனம் வெறுத்துவிட்டது. வீட்டில் பங்குச்சந்தையை பயில்வதற்கு நான் பயன்படுத்திய புத்தகங்கள் என்னைப்பார்த்து “உன்ன மாதிரி எத்தனை பேர்களை பார்த்திருப்பேன்” என்று சிரிப்பதுபோல் இருந்தது. இதன் மூலமாக நான் கற்றுக்கொண்டது ஒரே ஒரு விசயம் மட்டும்தான் அது “நான் கற்றதெல்லாம் வீண்” என்பதுதான்.
சில மாதங்கள் சென்றதும் பங்குச்சந்தை பற்றிய சோகமான செய்திகள் மறைந்தது. இந்த நிலைகளுக்கு மேல் சென்று இவ்வளவு புள்ளிகளில் முடிவடைந்தால் சந்தையில் காளையின் ஆதிக்கம் நீடிக்கும் என்று மீண்டும் கூடாரம் அமைத்து கூத்து நடத்த ஆரம்பித்தார்கள். போதும்டா சாமி இதுக்குமேல் நம்மால் முடியாது. என்று ஒதுங்கிச்செல்ல ஆரம்பித்தேன். மக்களுக்கும் பங்குச்சந்தையில் நம்பிக்கையின்மை ஏற்பட்டுவிட்டதனால் தொழிலில் ஒரு சுனக்கம் ஏற்பட்டு விட்டது. அலுவலகத்திலும் முன்பு போல பரபரப்பான பணிகள் ஏதும் இல்லாமல் போயிற்று. சில நண்பர்கள் மீண்டும் பங்கு வர்த்தகம் பற்றிய ஆய்வுகளில் ஆர்வம் காட்டச்சொன்னார்கள். ஆனால் மனம் ஏனோ ஒத்துழைக்கவில்லை. நான் ஒரு அனலிஸ்ட் என்றால் வீழ்ச்சி பற்றிய விழிப்புணர்வு எனக்கு இருந்திருக்க வேண்டும். அதை நான் முன்பே அறிந்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் நடந்து முடிந்த பிறகு ஏன் நடந்தது என்று ஆராய்வதில் என்ன பயன்!. முடியாது என முடிவான பிறகு மீண்டும் முயற்சிக்க வேண்டும் என தோன்றவில்லை. ஆனால் இணையத்தளங்களில் மீண்டும் பங்குகளை பரிந்துரைக ஆரம்பித்தார்கள். அதிக பணியும் இல்லாததால் இணையத்தளங்களில் பரிந்துரை செய்பவர்களை ஒரு பார்வையாளனாக இருந்து கவனிக்க ஆரம்பித்தேன். ஆனந்தம், ஆணவம், வீழ்ச்சி, எழுச்சி என எதுவுமில்லாமல் ஒரு பார்வையாளனாக பார்க்க ஆரம்பித்தேன். உண்மையில் இப்போதுதான் Technical analysis என்றால் என்னவென்று உணர ஆரம்பித்தேன்.
ஒரு இணையத்தளத்தில் இந்த இந்த பங்குகளை வாங்குங்கள் என குறிப்பிட்டு இருந்தார்கள் அவர்கள் குறிப்பிட்ட அனைத்து பங்குகளையும் குறித்து வைத்துக்கொண்டேன். அடுத்த நாள் இதோ நேற்று நாங்கள் சொன்னோம் அதே போல் நடந்தது என சில பங்குகளின் பெயர்களை போட்டிருந்தார்கள். உண்மைதான் அவர்கள் சொன்னதுபோல்தான் நடந்திருந்தது. ஆனால் நேற்று அவர்கள் சொன்ன அனைத்து பங்குகளின் நிலமையை அவர்கள் வெளியிட வில்லையே ஏன்? அவர்கள் பரிந்துரைத்த மற்ற பங்குகளின் நிலை என்னவாயிற்று? பங்குகளின் பெயர்களை குறித்துவைத்த தாளை எடுத்து கவனித்து பார்த்ததில் சில பங்குகள் அவர்கள் சொன்னதற்கு மாறாக எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி இருந்தது. சரி ஒரு வேலை நாளைக்கு இந்த பங்குகள் நல்லபடியாக இருக்குமோ என்னவோ அப்போது இந்த பங்குகளை பற்றி இணையதளத்தில் பெருமிதமாக சொல்வார்கள் என நினைத்து தினமும் அந்த இணையத்தளத்திற்கு சென்று பார்த்தேன். அதிர்ச்சியாக இருந்தது அவர்கள் குறிப்பிட்ட அந்த பங்குகளின் விலை அதிகரிக்கவும் இல்லை அதை பற்றி அவர்கள் பேசவுமில்லை. தொடர்ந்து புதிது புதிதாக பங்குகளை பரிந்துரை செய்து அதில் சாதித்த பங்குகளின் பெயர்களை வெளியிடுகிறார்களே தவிர, எதிர்மறையான விளைவுகளை கொடுத்த பங்குகளை பற்றி அவர்கள் பேசுவதில்லை. அடப்பாவிகளா! உங்களை நம்பி அந்த பங்குகளை வாங்கியவர்களின் நிலை என்னவாவது! அது சரி இவர்கள் ஏன் இப்படி இலவசமாக சேவை செய்கிறார்கள்? நாடும், நாட்டு மக்களும் நல்லாயிருக்க வேண்டும் என விரும்புகிறார்களா! விசயம் தெரிந்த ஒருவரிடம் விசாரித்ததில், அதில் உள்ள வீயுகத்தையும் அவர்களின் விவேகத்தையும் உணர முடிந்தது. குறிப்பிட்ட ஒரு பங்குகளை வாங்கிவைத்துக்கொண்டு, அந்த பங்குகள் இவ்வளவு தூரம் விலை அதிகரிக்கும் என மற்றவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டியது, அதை நம்பி மக்கள் வாங்கும் போது தானாகவே விலை அதிகரித்து மேலே செல்லும் அப்போது அவர்கள் வாங்கி வைத்துள்ளதை விற்றுவிட்டு வெளியேறிவிடுவார்கள். எனவே இலவசம் என்ற பெயரில் பங்குகளின் விலையில் ஒரு இயக்கத்தை உண்டுபண்ணி அதை அவர்கள் ஆக்கபூர்வமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஒரு வேலை விலை குறிப்பிட்ட அளவு அதிகரிக்காவிட்டால்! அதைப்பற்றி அவர்களுக்கென்ன கவலை. சும்மா வரும் எல்லாமே கழுத்தில் சுருக்கு மாட்டத்தான் வருகிறது.
ஒரு தவறு கண்ணில் பட்டதும் நான் கற்றுக்கொண்ட அனைத்திலும் சந்தேகம் கொள்ள ஆரம்பித்தேன். நான் முன்பு என்னென்ன செய்தேனோ அவற்றை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தலானேன். சந்தை பற்றிய கோட்பாட்டைக்கொண்ட அதிகார பூர்வமான இணையத்தளம் பற்றி சொன்னேனே ஞாபகம் இருக்கிறதா! அடுத்ததாக அவர்களை கவனிக்க ஆரம்பித்தேன். நம்முடைய கோட்பாட்டின் படி இந்தியச் சந்தை இனி இவ்வளவு புள்ளிகள் அதிகரிக்கும். என அறிவித்திருந்தார்கள். அப்படித்தான் நடக்கிறதா என ஆவலோடு பார்த்தேன் ஆனால் அதிகரிக்கவில்லை. அடுத்த நாள் Now we have alternative count என அறிவித்து புதிதாக ஒரு ஆய்வை வெளியிட்டு அதில் இவ்வளவு புள்ளிகள் இறங்கும் என அறிவித்திருந்தார்கள். ஆனால் இறங்கவில்லை இப்படி மாறி மாறி சொல்லி இறுதியாக ஒரு செய்தியை அவர்கள் தளத்தில் நிரந்தரமாக சேர்த்துக்கொண்டார்கள் “Its for only educational purpose, not for investment” ஒரு விசயம் மாறியதும் now we have alternative count என நீங்கள் உங்களின் கொள்கையை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் உங்களை நம்பி விலை அதிகரிக்கும் என பங்குகளை வாங்கியவர்களின் நிலை!.
இப்படிப்பட்ட அதிபுத்திசாலித்தனமானவர்களின் அறிவுரைகளே தவறாக இருக்கும்போது, பங்குகளின் விலை ஏற்றத்தைப் பற்றி நான் ஆய்வு செய்த சமயங்களில் என்னால் மட்டும் எப்படி சரியாக கணிக்க முடிந்தது! உண்மையில் நான் எதையும் கணிக்க வில்லை. அனைத்து பங்குகளின் விலையும் அந்த சமயத்தில் ஏறிக்கொண்டுதான் இருந்திருக்கின்றன. நல்ல நிறுவனம், மோசமான நிறுவனம் என எதில் பணம் போட்டாலும் உங்களுக்கு இலாபம் நிச்சயம் என்பது போன்றதொரு சூழ்நிலை அப்போது நிலவியிருக்கிறது. அது புரியாமல் நான் ஆய்வு செய்கிறேன் என்ற சிந்தனையில் சற்று ஆடியிருக்கிறேன்/ஆடியிருக்கிறோம். ஏறுகிற சந்தையில் குதிரையா கழுதையா என்று பார்க்கத்தேவையில்லை எதன் மீது நீங்கள் பணம் கட்டினாலும் இலாபம் சம்பாதிக்க முடியும். குறுஞ்செய்தி பற்றி பேச ஆரம்பித்ததும் என் மேலாளர் ஏன் சிரித்தார் என்று எனக்கு மெல்ல புரிய ஆரம்பித்தது.
***
ஒரு விசயத்தை கற்றுக்கொடுக்கொடுக்கும் போது எடுத்தவுடனே அ ஆ என்று ஆரம்பிக்காமல் எதற்கு இந்த அலுப்பை உண்டாக்கும் அனுபவங்கள்! இதெல்லாம் தேவையா! நிச்சயம் தேவைதான். ஒரு விசயத்தை கற்றுக்கொள்ளும் போது அந்த விசயம் தொடர்பான பல வித்தைகள் கண்ணில்படும். இது சரியாக இருக்குமோ, அது சரியாக இருக்குமோ என்ற அர்த்தமற்ற குழப்பங்கள் மனதில் ஏற்படுவது இயல்பு. எனவே ஏற்கனவே அந்த பாதைகளில் பயணித்தவனின் அனுபவத்தை அறிந்துகொள்வதன் மூலம் நாம் செல்ல வேண்டிய பாதையை குழப்பமில்லாமல் சரியாக தீர்மாணித்துக்கொள்ள முடியும்.
என்னுடைய இந்த அனுபவங்களின் மூலமாக நீங்கள் தெரிந்திருப்பீர்கள்/தெரிந்திருக்க வேண்டும் என நாம் நம்பும் விசயங்கள் இவை:
· உங்களின் பங்குவர்த்தகத்திற்கு மற்றவர்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளை பயன்படுத்துதல் கூடாது.
· உங்களுக்கென்று தனிப்பட்ட சிந்தனையில்லாமல் மற்றவர்களின் வழிகாட்டுதல்களின் வழியில் செல்லக்கூடாது.
· சந்தையை ஆய்வு செய்து சரியாக அறுதியிட்டு கூற யாராலும் இயலாது.
· சந்தையை அடக்கியாள ஆசைப்பட்டு தீவிரமாக ஆய்வுகளில் ஈடுபடுவது தேவையில்லாதது.
· பங்கு வர்த்தகத்தின் கோட்பாடுகளெல்லாம் பயனற்றவையாகத்தான் உள்ளன.
சரி வேறு என்னதான் செய்வது? என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அதை நீங்கள் உங்களின் சொந்த தீர்மானத்தினால் எடுத்த நடவடிக்கையாக மட்டுமே இருக்க வேண்டும். சரி செய்யலாம் ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும்? எந்த மாதிரியான விசயங்களை அறிந்திருக்க வேண்டும்? விவசாயம் தெரிந்திருக்க வேண்டும். விவசாயமா! ஆம். விவசாயம் தான். ஆனால் விதைக்கப்போவது பயிர்களை அல்ல பணத்தை. ஒரு பழைய கதை சொல்கிறேன். அதை மனதில் வைத்துக்கொண்டு என்னோடு ஏர் பிடிக்க வாருங்கள்.
ஒரு மா மரத்தில் மாம்பழம் பழுத்து தொங்கிக்கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த அதிபுத்திசாலி எப்படி இந்த பழம் உருவானது, எப்படி பழுத்தது என ஆய்வு செய்துகொண்டிருந்தான். அப்போது அந்தவழியாக வந்த ஒரு சாதாரணமான பாமரன் அந்த மாம்பழத்தை பறித்து, ருசித்து சாப்பிட்டுவிட்டு கொட்டையை எறிந்துவிட்டு சென்றானாம். அந்த பாமரன் போல ஆய்வுகள் அற்றவர்களாக வாருங்கள். பழம் பறிப்போம்.
இதுவரை சொன்னது அனுபங்கள், என் அனுபவங்கள் இதற்குமேல் சொல்வதற்கு அனுபவங்கள் என எதுவுமில்லை நீங்களாக அனுபவித்து உணரப்போவதைத் தவிர. இனி அப்படியா என கேட்காதீர்கள். அப்படித்தான் அல்லது அப்படியல்ல என்பதை நீங்களே அறிந்து கூறுங்கள்.
தொடரும்... |