நன்மை தரும் நண்பன் - Trend is our friend
உங்களுக்கு நீச்சல் தெரியாத நிலையில், ஆற்றில் நீங்கள் அடித்துச் செல்லப்பட்டால் எப்படிப்பட்ட உணர்வில் இருப்பீர்கள்! மரண பயம் உங்களை ஆட்கொள்ளும் அல்லவா! அதே சமயம் உங்களுக்கு நன்றாக நீச்சல் தெரிந்தால், ஆற்றில் நீங்கள் அடித்துச் செல்லப்படும் போது எப்படி உணர்வீர்கள்? எந்தவித பதட்டமும் இல்லாமல் அதை அனுபவிப்பீர்கள், ஆற்று நீர் உங்களை அரவணைப்பதாகவே உணர்வீர்கள்.
Trend பற்றிய விபரங்களை தெரியாமல் பங்குச்சந்தையில் பயணம் செய்வது, நீச்சல் தெரியாமல் ஆற்று நீரில் அடித்துச் செல்வதற்கு சமமானது. பொதுவாக காளைகளை மேய்ப்பதற்காக நாம்தான் குறிப்பிட்ட இடத்திற்கு அதை அழைத்துச் செல்வோம். ஆனால் பங்குச்சந்தையை பொருத்தவரை காளை எங்கு செல்கிறதோ அங்குதான் நாம் செல்ல வேண்டும். காளையின் போக்கிலேயே நாமும் பயணம் செய்ய வேண்டும். அப்படி இல்லாமல் காளை செல்லும் திசைக்கு எதிராக நீங்கள் செல்ல நினைத்தால் உங்களை முட்டித்தள்ளிவிட்டு அதன் போக்கில் முன்னேறிச்சென்று கொண்டே இருக்கும்.
சிலர் Trend பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ளாமல், பங்குச்சந்தையின் ஓட்டத்தில் பங்குகொண்டு, ஏதாவது பங்குகளை வாங்கிய பின்னர், தான் இருக்கும் திசை நோக்கி காளை திரும்பி வரும் என காத்திருந்து காத்திருந்து கடுப்பாகி கடைசியில் இந்த தொழிலே வேண்டாம் என விலகிவிடுவார்கள். நாமும் அப்படிப்பட்ட பிரச்சனையில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகத்தான் முதலில் மூன்று விதமான Trend-களை பற்றியும் அறிந்துகொண்டோம். இனி காளை எந்த திசையில் பயணம் செல்கிறது என்பதை அறிந்துகொண்டு அதன் போக்கிலேயே நாமும் செல்வோம். நீச்சல் தெரிதவனை ஆற்றி நீர் அடித்துச்செல்வதைப்போல, நிதானத்துடன, நிம்மதியுடன் காளையின் கால்தடங்களை பின்பற்றி நாமும் பயணம் செய்வோம்.
மூன்று விதமான Trend பற்றிய விபரங்கள் முக்கியமானதுதான். ஆனால் மேலும் சில விசயங்கள் உள்ளன. அவற்றையும் நாம் அறிந்துகொண்டால்தான் நம் பயணம் முழுமையடையும்.
காளை வலியதும் மெலியதும் - Strong trend and Weak trend
பக்கத்தில் உள்ள கடைக்கு காய்கறி வாங்க செல்ல வேண்டும் என்றால் கூட சைக்கிளில் போதுமான அளவு காற்று இருக்கிறதா என சோதிக்கும் நாம். காளையை நம்பி காசை போடும்போது அந்த காளையின் உடல் நலன் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டுமல்லவா! சில காளைகள் பார்ப்பதற்கு சீறிக்கொண்டு முன்றேறிச்செல்வதுபோல் தோண்றும் ஆனால் சீக்கு வந்ததுபோல் கீழ்நோக்கி விழுந்துவிடும். சில காளைகள் பார்ப்பதற்கு சீக்கு வந்ததுபோல் இருக்கும் ஆனால் சீறிக்கொண்டு மேல் நோக்கி செல்லும். விலை அதிகரிக்கும் என நினைத்திருப்போம் ஆனால் விலை இறங்கிவிடும், விலை இறங்கும் என நினைத்திருப்போம் ஆனால் விலை அதிகரித்தும் நமக்கு அதிர்ச்சியளிக்கும். சரி காளையின் உடல் நலன் பற்றிய உண்மையை எப்படி அறிந்துகொள்வது! மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிப்போம். இதோ நாம் Up trend-ல் பயன்படுத்திய படம் கீழே உள்ளது அதில் இருந்து ஆரம்பிப்போம்;
|
(Up trend-ஐ ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்) மேற்கண்ட படத்தில் Up trend-ற்கு தேவையான கோடுகளை வரைந்த பின்னர் எண் 4 உள்ள இடத்தில் பங்குகளை வாங்கி விலை அதிகரிக்கும் என காத்திருக்கிறோம் அல்லவா. உண்மையில் இது ஒரு பலவீனமான காளை எப்போது வேண்டுமானாலும் நம் நம்பிக்கையை சிதைக்கக்கூடியது. ஏன்? நீங்கள் எண் 4 உள்ள இடத்தில் மூன்றாவதாக ஒரு கோடு, அதாவது காளை பயணம் செய்வதற்காக கோடு வரைந்துள்ளீர்கள் அல்லவா அந்த கோட்டில் காளை தன் கால்களை எத்தனை முறை பதிக்கிறது என்பதை பொறுத்தே பலவீனமானதா அல்லது பலமானதா என்று சொல்ல முடியும். பலமான காளையாக இருந்தால் குறைந்த பட்சம் இரண்டு முறையாவது தன் கால்களை இந்த கோட்டில் பதிக்க வேண்டும். இப்போதுள்ள நிலையில் காளை ஒரு முறைதான் (எண் 4 உள்ள இடம்) தன் கால்களை பதித்துள்ளது.
|
எண் 5 உள்ள இடத்தை கவணியுங்கள். காளையானது நீங்கள் வரைந்த கோட்டில் மீண்டும் ஒரு முறை தன் காலை பதித்துவிட்டு (எண் 5 உள்ள இடம்) மேல் நோக்கி செல்கிறது இப்போது காளை தான் ஒரு பலமான காளைதான் என்பதை நிரூபித்துள்ளது. அதாவது இது ஒரு Strong trend-தான் என்பது உறுதியாகிவிட்டது. இந்த காளையை நம்பி நீங்கள் பணம் போட்டதில் தவறில்லை.
மேலே உள்ள படம் நாம் Down trend-ற்காக பயன்படுத்தியது. இதில் எண் மூன்று உள்ள இடத்தில் காளை தன் காலை பதித்ததும் நீங்கள் கோடுகளை வரைந்து தயாராகிவிட்டீர்கள். நீங்கள் வரைந்த கோட்டை பின்பற்றி எண் 5 உள்ள இடத்தில் மீண்டும் ஒரு முறை காளை தன் காலை பதித்து மீண்டும் கீழ் நோக்கி திரும்பியிருப்பதன் மூலம் தான் ஒரு பலமான காளைதான் என்பதை நிரூபித்துள்ளது.
சரி ஒரு வேலை நாம் வரைந்த கோட்டை தொட்டதும் காளை கீழ் நோக்கியோ அல்லது மேல் நோக்கியோ செல்லாமல் அந்த கோட்டை உடைத்துக்கொண்டு எதிர் திசையில் சென்றுவிட்டால்! அதுதான் பலவீனமான காளை அப்படி காளை நாம் வரைந்த கோட்டை உடைத்துக்கொண்டு செல்வதை Trend reversal என்பார்கள்.
பாதை மாறும் காளை – Trend reversal
நான் பங்குச்சந்தையில் ஈடுபட்ட ஆரம்ப காலங்களில் என்னை ஆச்சரியப்படுத்தும் விசயமாக ஒரு செய்தி இருந்துகொண்டே இருந்தது. அதை நான் புரிந்துகொள்ள வெகுநாட்கள் ஆகியது. சிலர் குறிப்பிட்ட பங்குகளை வாங்குங்கள் என பரிந்துரைக்கும்போது அவர்களின் பரிந்துரை கீழ்கண்டமாதிரி அமைந்திருக்கும்
பங்கின் பெயர் .......
தற்போதைய விலை 30
இலக்கு 50
வர்த்தகத்தின் முடிவில் இந்த பங்கின் விலை ரூபாய் 35-திற்கு மேல் முடிவடைந்தால் இந்த பங்கை வாங்குங்கள்.
என்னுடைய சந்தேகம் என்னவென்றால், இந்த பங்கு சிறந்த பங்கு என சொல்கிறார்கள், விலை அதிகரிக்கும் என்றும் சொல்கிறார்கள். ஆனால் ஏன் விலை 35-திற்கு மேலே சென்றால் மட்டும் வாங்க சொல்கிறார்கள். நல்ல பங்குதானே! இப்போதுள்ள விலை 30, எனவே இப்போதே இந்த பங்கை வாங்கினால் விலை அதிகரிக்கும் போது நல்ல இலாபம் கிடைக்குமே!
இங்குதான் Trend reversal-ன் மகத்துவத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதை Down trend-டிற்கு நாம் பயன்படுத்திய படத்தின் மூலம் விளக்குகிறேன்.
|
இந்த படத்தில் காளை பயணம் செய்வதற்காக நீங்கள் வரைந்த மஞ்சல் நிரக் கோட்டிற்கு கீழே நான் குறிப்பிட்டுள்ள விலை 30, கோட்டிற்கு மேலே நான் குறிப்பிட்டுள்ள விலை 35. இந்த பங்கின் விலை ரூபாய் 30-ல் இருக்கும் போது, ஏன் விலை 35-வரை அதிகரித்தால் மட்டும் வாங்கச்சொல்கிறார்கள் என்றால், நீங்கள் வரைந்துள்ள படம் Down trend-ற்கு உரியது. அதாவது விலை கீழ் நோக்கி செல்லக்கூடிய ஒரு சூழ்நிலை நிலவுகிறது. ரூபாய் 30 நீங்கள் பங்குகளை வாங்கினாலும் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது. இங்கு காளை தான் மேல் நோக்கி செல்லப்போகிறேன் என்பதை நிரூபிக்க நீங்கள் வரைந்த கோட்டை உடைக்க வேண்டும். அதாவது விலை 35 வரை உயர வேண்டும் (TREND REVERSAL) அப்படி விலை உயர்ந்துவிட்டால் காளை மேல் நோக்கி செல்லப்போகிறது என்று அர்த்தம். அதனால்தான் தற்போது விலை குறைவாக இருந்தாலும், அதன் விலை அதிகரித்த பின்னர் வாங்க சொல்கிறார்கள். இப்படி நீங்கள் வரைந்த கோட்டை உடைத்துக்கொண்டு செல்வதற்குத்தான் Trend reversal என்று பெயர். இந்த விசயம் நாம் பார்த்த மூன்று விதமான Trend-களுக்கும் பொருந்தும்.
THREE TREND IN ONE CHART
Terminator two, the judgment day என்றொரு ஆங்கிலப்படம் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன் அதில் வரும் எதிர்மறை கதாபாத்திரத்திற்கென்று தனிப்பட்ட உருவம் எதுவும் கிடையாது. நினைத்த நேரத்தில் நினைத்தபடி மாற்றம் கொள்ளக்கூடியது. இதனால் அதனை அழிக்க கதாநாயகனுக்கும் மிகவும் சிரமமாக இருக்கும். பங்குச்சந்தையில் உள்ள இந்த காளையும் கிட்டத்தட்ட அந்த ஆங்கிலப்படத்தில் வரும் எதிர்மறை கதாபாத்திரத்தைப்போன்றது. ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் எப்போது எந்த மாதிரியான Trend-க்கு மாற்றம் கொள்ளும் என நம்மால் யூகிக்கக்கூட முடியாது. நினைத்த நேரத்தில் நினைத்த Trend-க்கு மாறக்கூடியது எனவே நாம் மிகவும் கவணமாக இருக்க வேண்டும். நீங்கள் இதுவரை ஒரே மாதிரியான Trend-ல் உள்ள வரை படங்களையே பார்த்தீர்கள் ஆனால் உண்மையில் ஒரு வரை படத்திலேயே மூன்று Trend-களும் மாறி மாறி வரும்.
|
மேலே உள்ள படத்தை பாருங்கள் ஒரே படத்தில் மூன்று வகையான Trend-களும் உள்ளன. வாகணத்தை ஓட்டிச்செல்லும் போது கவணமாக இருப்பதைப்போல, காளை பயணமாகும் இடங்களை கூர்ந்து கவணித்து அதற்கு ஏற்ப நம்முடைய நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். அப்படி மாற்றிக்கொள்ளாமல் காளைக்கு எதிராக நடந்துகொள்ள முடிவெடுத்து அதற்கு எதிரே நின்றால் என்னவாகும்! கட்டுரையின் துவக்கத்தில் உள்ள படத்தில் உள்ளதுபோல்தான் நடக்கும். இத்தோடு Trend பற்றிய விசயங்கள் முடிந்தது. வேறு ஏதாவது நான் சொல்ல மறந்திருந்தால் அவற்றை வரும் வாரங்களில் சொல்கிறேன்.
Trend பற்றி நாம் பேச ஆரம்பித்ததும், உண்மையில் உங்களிடமிருந்து நான் சில கேள்விகளை எதிர்பார்த்தேன். அந்த கேள்வி எப்படிப்பட்டதென்றால், இந்த தொடர் அவசியம்தானா! அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததுதானா என சந்தேகம் எழுப்பும் வகையில் அமைந்திருக்கும். ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் அந்த கேள்விகள் மிகவும் அவசியாமானவை, இந்த தொடருக்கு அடிப்படையானவை. ஒரு வேலை உங்கள் மனம் அந்த கேள்விகளை பிறகு கேட்டுக்கொள்ளலாம் என பின்நோக்கி சென்றிருக்கலாம். எனவே அடுத்த வாரம் அந்த கேள்விகளை நானே கேட்கிறேன். பதிலை நீங்கள் யோசியுங்கள். நன்றி அடுத்த வாரம் சந்திப்போம்.
தொடரும்...
|