காளையை கட்டிப்போடும் சக்தி - 3
எவ்வளவு சிறப்பான ஆயுதமாக இருந்தாலும் அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்ற விதத்தில்தான் அதன் பயன்பாடு அமைந்திருக்கும். அதைப்போல எவ்வளவு சிறப்பானதொரு வித்தையை நீங்கள் அறிந்து வைத்திருந்த போதிலும் அதை எப்படி நீங்கள் பயன்படுத்துகின்றீர்கள் என்பதை பொருத்தே அதன் பயன்பாடு அமைந்திருக்கும்.
நம்முடைய வாங்கும் சக்தியை அதிகரிக்க நம்முடைய முதலீட்டை மூன்றாக நாம் பிரித்து வைத்திருந்தால் மட்டும் போதாது, முதலீடு செய்வதற்கு முன் சில முக்கிய விசயங்களை நாம் கவணிக்க வேண்டும். அந்த முக்கிய விசயம் வெறொன்றும் இல்லை நாம் ”தேர்வு செய்யும்” விதம்தான் அது. கண்முன் இருக்கும் பல வகையான பங்குகளில் எதை தேர்வு செய்கிறோம் என்பதை பொருத்தே நாம் அடையப்போகும் பயன் அமைந்திருக்கிறது.
புத்தரின் வாழ்வில் நிகழ்ந்ததாக சொல்லப்படும் ஒரு நிகழ்வு, வழக்கம் போல பிச்சையெடுக்க ஊரினுள் சென்ற போது அங்கிருக்கும் சிலரால் புத்தர் கேளிசெய்யப்படுகிறார். அதென்ன நீங்கள் மட்டும் ஞானமடைவது, அப்படி ஒன்று இருந்தால் அது எல்லோருக்கும் நிகழவேண்டியதுதானே! புத்தர் அமைதியாக கேளி செய்தவர்களை நோக்கி அங்குள்ள மக்களிடம் சென்று அவர்களுடைய விருப்பங்களை அறிந்துவரச்சொல்கிறார். மக்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய விருப்பங்களை வெளிப்படுத்துகிறார்கள் அதில் ஒருவரின் விருப்பம் கூட நான் ஞானமடைய வேண்டும் என்ற வகையில் இல்லை. எனவே புத்தர் தன்னுடைய பதிலை இப்படி வெளிப்படுத்துகிறார் “யாருமே ஞானமடைய விரும்பவில்லை அதனால் யாரும் ஞானமடையவில்லை” எதை தேர்வு செய்கின்றீர்களோ அதை நோக்கியே உங்களின் பயணம் அமைந்திருக்கும். இது வாழ்க்கைக்கு மட்டுமல்ல வாழ்வில் வளர்ச்சியை உண்டாக்கும் பங்குச்சந்தைக்கும் பொருந்தும்.
பங்குகளை தேர்வு செய்வதற்கு நமக்கு பெரிதும் உதவுபவை சந்தை தொடர்பான செய்திகள். சந்தை பற்றிய செய்திகள். செய்திகளை சேகரிக்க நீங்கள் சிரமப்பட வேண்டியதில்லை ஏற்கனவே பங்குச்சந்தையில் இருப்பவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். அந்த நண்பர்களை தினமும் சந்தித்து தொடர்ந்து விவாதியுங்கள் “அப்புறம் சந்தையை பற்றி என்ன சொல்கிறார்கள்”, “சந்தை இனி எப்படி இருக்கும்” என்ற கேள்விகளுடன் அவர்களை அனுகினாலே போது மடை திறந்த வெள்ளம்போல கொட்டத்தொடங்குவார்கள். அவர்கள் சொல்லும் அனைத்து விசயங்களையும், அந்த விசயங்கள் மூலம் நிகழப்போகும் விளைவுகளையும் மனதினுள் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அவர்களுடன் உரையாடும்போது அவர்களுக்கு என்ன தெரிந்துவிடப்போகிறது என்று மட்டும் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். நவீன தொழில் நுட்பம் மற்றும் பங்குச்சந்தையில் ஈடுபடுவர்களின் தகவல் தொடர்பு போன்றவற்றின் மூலம் அனைவரும் பங்குச்சந்தையின் செய்திகளை அறிந்து வைத்திருக்கின்றார்கள்.
ஒவ்வொரு செய்தியும் சந்தையில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்களிடமே கேளுங்கள். அவை ஆக்கபூர்வமானதா அல்லது அழிவை உண்டாக்கக்கூடியதா என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். செய்திகளை சேகரித்து அதையே முதலீட்டிற்கான சாதனமாக பயன்படுத்தும் நண்பர் ஒருவர் இருக்கின்றார். எந்த பங்குகள் எப்போது Dividend கொடுப்பார்கள், எப்போது Stock split ஆகும் எந்தெந்த தேதிகளில், மாதங்களில் நிறுவணங்களின் ஆண்டறிக்கைகள் வெளிவரும். சந்தை தொடர்பான அரசின் செய்திகள் என்னென்ன அந்த செய்தி எந்த துறைகளை விளைவுகளை உண்டாக்கும். உலகச் சந்தையின் செய்திகள் என்னென்ன என்கின்ற விசயங்களை மிகத்தெளிவாக அறிந்து வைத்திருப்பார். அவர் சேகரித்த செய்திகளை அடிப்படையாகக்கொண்டே அவரின் முதலீட்டு செயல்பாடுகள் அமைந்திருக்கும். சில நேரங்களில் சந்தை அற்புதமாக மேல் நோக்கி சென்று கொண்டிருக்கும் அனைவரும் பங்குகளை ஆவலோடு வாங்கிக் கொண்டிருக்கையில் மிக அமைதியாக இருப்பார், ஏன் எதுவும் வாங்கவில்லையா என்று கேட்டோமானால் “இல்லை, இப்படி ஒரு செய்தி இருக்கிறது, இப்போது விலை அதிகரித்தாலும் இரண்டொரு நாளில் சந்தை மீண்டும் இறங்கிவிடும்”. என்பார் பெரும்பாலும் அவர் சொன்னபடிதான் நடந்திருக்கிறது. எனவே செய்திகள் சந்தையின் இரத்த ஓட்டம் போன்றது அதை அறிந்து வைத்திருங்கள் அல்லது அதை அறிந்தவர்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருங்கள்.
நீங்கள் வாங்க விரும்பும் பங்கின் நிறுவனம் தொடர்பாக ஏதேனும் செய்திகள் வர இருக்கிறதா! அந்த துறை சார்ந்த அரசின் செய்திகள் ஏதேனும் வர இருக்கிறதா, அந்த நிறுவனத்தை பாதிக்கும் உலகக்காரணிகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை முதலீடு செய்வதற்கு முன் ஒரு நிமிடம் செலவளித்து தெரிந்துகொள்ளுங்கள்! ஒரு நிமிடத்தில் தெரிந்துகொள்ள முடியுமா என ஆச்சரியம் கொள்ள வேண்டாம், சந்தைக்கு செய்தி எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் அறிந்துவிட்டதனால் இது மிகவும் சாதாரணமான விசயமாகிவிட்டது. சந்தையில் உள்ள நண்பரிடம் கேட்டாலே சொல்லிவிடுவார். அதுவும் சிரமம் என்றால் www.buzzingstocks.com என்றொரு தளம் இருக்கிறது அங்கு சென்று நீங்கள் வாங்க விரும்பும் பங்கின் பெயரை type செய்தீர்களானால் அந்த நிறுவனத்தைப் பற்றிய செய்திகள் அனைத்தையும் அந்த தளமே உங்கள் முன் கொண்டுவந்து கொடுக்கும் அவற்றை படித்துப்பார்த்த பின்னர், ஏதேனும் எதிர்மறையான செய்திகள் இருக்கிறதா இல்லையா என அறிந்துகொண்ட பின்னர் அந்த பங்குகளை வாங்குவதா வேண்டாமா என்பதை தீர்மானிக்க வேண்டும்.
பங்குகளை வாங்கும்போதும் மட்டுமல்ல வாங்கி வைத்திருக்கும் பங்குகளை விற்கும்போதும் செய்திகளை கவணிக்க வேண்டும். வைத்திருக்கும் பங்குகளை விற்ற பிறகு ஒரு நல்ல செய்தியின் மூலமாக அந்த பங்கின் விலை அதிவேகமாக மேல் நோக்கி சென்றதனால் வருத்தமடைந்த பலர் உண்டு. பங்குச்சந்தையில் ஈடுபடுவதற்கு முன் வேண்டுமானால் நீங்கள் தனித்த நபராக உங்களை எண்ணிக்கொள்ளலாம் ஆனால் எப்போது பங்குச்சந்தைக்குள் வந்துவிட்டீர்களோ அப்போதே உங்களின் தனித்த தன்மைகள் அனைத்தும் அழிந்துவிட்டதாக கருதிக்கொள்ள வேண்டும். உங்கள் பிரச்சனை, உங்களின் குடும்பப்பிரச்சனைகளை மட்டுமே கவணித்துக்கொண்டிருந்த நீங்கள் அந்த தனித்த நிலையில் இருந்து வெளியே கட்டாயம் வந்தேதீர வேண்டும். இனி உலகில் எங்கு என்ன பிரச்சனை நிகழ்ந்தாலும் அது உங்கள் பிரச்சனையே என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். அந்த உணர்வே முதலீடு செய்வதற்கான முதல்படி. இதோ இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் லிபியா நாட்டுபிரச்சனை அந்நாட்டு மக்கள் பிரச்சனை மட்டுமல்ல உங்கள் பிரச்சனையும்தான். ஜப்பானை தாக்கிய சுனாமி அந்நாட்டு மக்களை மட்டுமல்ல, தாக்குதல்களுக்கு உள்ளானது நீங்களும்தான் என்பதை உணருங்கள். ஜப்பானை சுனாமி தாக்கியதும் IT, STEEL, PHAMA போன்ற துறைகளில் மாற்றம் நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாயின. இப்படிப்பட்டதொரு உலகலாவிய சிந்தனையும், அதை அடிப்படையாகக்கொண்டு முதலீட்டு முனைவுமே முக்கியம்.
தொடரும்...
|