காளை மேயுமிடம் – Support and Resistance
மூன்று விதமான Trend பற்றியும் இப்போது அறிந்துகொண்டு விட்டீர்கள். எதற்காக இந்த மூன்று வகையான Trend-களை அறிந்துகொண்டோம்! விதை விதைக்க அதாவது சரியான நேரத்தில் முதலீடு செய்து நல்ல இலாபம் அடைவதற்காகத்தான் மூன்று விதமான Trend-களையும் அறிந்துகொண்டோம். ஆனால் பாடுபட்டு பயிர் செய்து அதை சரியான நேரத்தில் அறுவடை செய்யாவிட்டால் என்னவாகும்! நாம் பாடுபட்ட அத்தனையும் வீனாய் போய்விடும்.
நான் சந்தித்த, அனுபவித்த, கேள்விப்பட்ட வரையில் பங்குச்சந்தையில் நஷ்டமடைந்தவரைவிட இலாபம் அடைந்தவரே அதிகம் பதட்டத்தோடு இருப்பார். நஷ்டமடைந்தவருக்கு ஒரு முடிவு தெரிந்துவிட்டது, வருத்தம்தான் ஆனால் அதற்குமேல் அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது என்பதால் அடுத்தகட்ட நிகழ்வுகளுக்காக அவர்கள் காத்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் நிகழ்வு நிகழும்வரை அவர்களுக்கு பதட்டமும் இல்லை சந்தோசமும் இல்லை. அதேசமயம் ஒருவர் வாங்கிய பங்குகளின் விலை அதிகரித்துக்கொண்டிருக்கும்போது அவரின் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள்! விலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது இப்போதே விற்றுவிடலாமா! அல்லது விலை இன்னும் அதிகரிக்கும் என்று காத்திருக்கலாமா! அப்படி காத்திருக்கும் சமயத்தில் சந்தை வீழ்ச்சியடைந்து விலை கீழே இறங்கிவிட்டால் என்ன செய்வது! எனவே நாளை சந்தை எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்! நாளை சந்தை எப்படி இருக்கும் என்பதை எப்படி தெரிந்துகொள்வது! இவ்வளவு யோசிப்பதற்கு பதிலாக இப்போதே விற்றுவிடலாமா! நாம் விற்ற பிறகு விலை அதிகரித்துக்கொண்டே போனால் நல்ல இலாபத்தை தவற விட்டுவிட்டோம் என்று மனது அடித்துக்கொள்ளுமே!.... இப்போது சொல்லுங்கள் சந்தையில் இலாபம் அடைபவருக்குத்தானே பதட்டம் அதிகம்!
இவ்வளவு பதட்டம் எதனால் ஏற்படுகிறது? மூன்று வகையான Trend-களை அறிந்து சரியான நேரத்தில் முதலீடு செய்வது எப்படி என்று அறிந்து கொண்டால் மட்டும் போதாது, முதலீடு செய்த பிறகு எப்போது அறுவடை செய்வது அதாவது வாங்கிய பங்குகளை எப்போது விற்பது என்ற விபரங்களையும் அறிந்துகொள்ள வேண்டும். சரி அதை அறிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்? இப்போது காளை எந்த திசையில் (Trend) இருக்கிறது என்று தெரியும் ஆனால் எங்கு மேய்ந்துகொண்டிருக்கிறது என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் சரியான நேரத்தில் உங்களால் பங்குகளை விற்பனை செய்து இலாபம் அடைய முடியும்.
எதாவது ஒரு பெண்ணின்! பெயரை கொண்ட புயலின் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று சொல்வார்கள். சொன்னபடி மழை வந்ததும் தமிழகத்தில் எங்கெல்லாம் மழை வந்தது என்று மேலோட்டமாக சொல்லிவிட்டு மழைக்கு காரணமான அந்த புயல் இப்போது எங்கு மையம் கொண்டிருக்கிறது அது எந்த திசை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்பதை பற்றி விபரமாக அலசுவார்கள். காரியத்தை வீட அந்த காரியத்திற்கான காரணம் என்ன என்பதுதான் மிகவும் முக்கியமான ஒன்று. நமக்கு Trend பற்றி தெரியும் ஆனால் அந்த Trend உருவாக காரணமான காளை இப்போது எந்த திசையில் மேய்ந்து கொண்டிருக்கிறது அது எந்த திசையில் தொடர்ந்து பயணிக்கும் என்பது பற்றி நமக்கு தெரியாது. அதை இப்போது நாம் அறிந்துகொள்வோம்.
ஒரு பங்கின் வரை படத்தை எடுத்து மேலோட்டமாக பார்த்தீர்களானால் ஒரு வரைமுறையில்லாமல் விலை மேலும் கீழுமாக ஏறி இறங்கியிருப்பதைப் போல இருக்கும். இதோ கீழே உள்ள படத்தை பாருங்கள்.
மழை, இடி மின்னலுடன் பெய்துகொண்டிருக்கும்போது அதில் நனைந்துகொண்டு பயணம் செய்பவருக்கு மழையின் ஒழுங்கமைப்பு புரியாது. அதே சமயம் இடி மின்னலுடன் மழை பெய்துகொண்டிருக்கும்போது அதில் நனையாமல், அதில் பங்குகொள்ளாமல் பாதுகாப்பான ஒரு இடத்தில் நின்று ஒரு பார்வையாளனாக பார்க்கும்போது மழையின் ஒழுங்மைப்பு நமக்கு தெளிவாக தெரியும். ஒரே சிராக கீழே விழுந்து சிதறும் அந்த அற்புதக்காட்சி தென்படும். அதைப்போல மேலே உள்ள படத்தை மீண்டும் ஒரு முறை விலகி நின்று ஒரு பார்வையாளனாக பாருங்கள், காளை தான் தறிகெட்டு அலையவில்லை ஒரு முறையான பயணம்தான் மேற்கொள்கிறேன் என்று உங்களுக்கு புரியவைக்கும். காளையின் ஒழுங்குமுறையான பயணத்தை கீழே உள்ள படத்தில் நான் கோடுபோட்டு காட்டியிருக்கிறேன் பாருங்கள்.
ஒவ்வொரு பகுதியிலும் ஒரு வரைமுறைக்கு உட்பட்டு ஒரு ஒழுங்கான ஒத்திசைவான பயணத்தை காளை மேற்கொண்டிருப்பதை கவணியுங்கள். என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள். எந்த ஒரு பங்கிங் வரை படத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் உங்களால் இது போன்றதொரு காளையின் அழகான பயணத்தை காண முடியும் இதோ மேலும் ஒரு படம் உங்களுக்காக:
ஒவ்வொரு வண்ணக்கோடுகள் உள்ள இடங்களிலும் காளை ஒரே சீரான பயணம் மேற்கொண்டிருப்பதை கவணியுங்கள். அந்த பாதையில் இருந்து காளை விலகிச் செல்கிறது என்றால் காளை தன் பயணத்திற்குறிய திசையை மாற்றிக்கொள்கிறது என்று அர்த்தம். இப்போது காளை எங்கே மேய்ந்து கொண்டிருக்கிறது என்பதை உங்களால் ஊகிக்க முடிகிறதா! சரியாக ஊகித்துவிட்டால் நீங்கள் உண்மையாலுமே தேறிவிட்டீர்கள் என்று அர்த்தம். ஊகிக்க முடியாவிட்டால் கீழே உள்ள படத்தை பாருங்கள்:
|
படத்தின் இறுதியில் உள்ள ஊதா நிற பாதை இருக்கிறதல்லவா! அங்குதான் தற்போது காளை மேய்ந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு பங்கின் படத்திலும் இறுதியாக பங்கின் விலை (Closing price) எங்கு உள்ளதோ அதுதான் காளை மேய்ந்துகொண்டிருக்கும் இடம். இந்த படத்தில் ஊதா நிறப்பாதையில் மஞ்சல் நிறத்தில் ஒரு நட்ச்சத்திரம் இருக்கிறதல்லவா அந்த இடம்தான் குறிப்பிட்ட பங்கின் இறுதியான (Closing price) விலை உள்ளது. மேற்கொண்டு வியாபாரம் நடந்தால் மட்டுமே அந்த விலையில் மாற்றம் ஏற்படும். சரி விசயத்திற்கு வருவோம். ஊதா நிறப்பாதையில் எண் 1 உள்ள இடத்தை தொட்டுவிட்டு காளையானது எண் 2 உள்ள இடம் நோக்கி திரும்பியுள்ளது. பங்கின் விலையானது எண் 2 உள்ள இடத்தை தொட்டதும் நீங்கள் பங்குகளை வாங்கி விட்டீர்கள் என வைத்துக்கொள்வோம் இப்போது ஊதா நிற பாதையின் ஒழுங்கமைப்பை கவணியுங்கள் எதுவரை பங்கின் விலை உயரம் என்று உங்களுக்கே புரிந்துவிடும். எண் 3 உள்ள இடம் வரை பங்கின் விலை உயரம் அதற்கு முன்பாக நீங்கள் அவசரப்பட்டு விற்க வேண்டியதில்லை. இப்போது அறுவடை செய்ய வேண்டிய நேரம் எதுவென்று உங்களுக்கு புரிகிறதல்லவா! இப்படி எந்த பங்குகளை வாங்கினாலும் அதில் காளை பயணம் செய்த/செய்யும் பாதைகளை கணித்துக்கொள்ளுங்கள் மேலும் இறுதியாக காளை எங்கு மேய்ந்து கொண்டிருக்கிறது அது மேய்ந்து கொண்டிருக்கும் பாதையின் ஒழுங்கு முறை என்ன அதாவது எந்த நிலைவரை விலை உயரம் எந்த நிலைவரை விலை குறையும் என்பதை தெளிவாக அறிந்துகொண்டால் விதைக்க வேண்டிய காலம் எது, அதை அறுக்க வேண்டிய காலம் எது என்பதில் உங்களுக்கு குழப்பம் ஏற்படாது. உங்களின் உழைப்பு வீணாய் போகாது.
இங்கே உங்களுக்கு ஒரு குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுவரை நாம் படித்த மூன்று வகையான Trend-களிலும் காளை பயணம் செய்ய ஒரு கோடுதானே வரைந்தோம் ஆனால் இப்போது காளை பயணமாகும் இடங்களில் மேலும் கீழுமாக இரண்டு கோடுகள் உள்ளனவே! அந்த இரண்டாவது கோடு என்ன? அதை எப்படி வரைவது?
அந்த இரண்டாவது கோட்டிற்கு Parallel Line என்று பெயர். இப்போது Parellel Line எப்படி வரைவது என்று பார்ப்போம்.
Parallel Line வரைவது மிகவும் சுலபமான ஒன்றுதான். நாம் ஏற்கனவே வரைந்த கோடுகளுடன் மேலும் ஒரு கோட்டை இணைத்துக்கொள்ளப்போகிறோம் அவ்வளவுதான்.
UP TREND:
Up Trend பற்றி நீங்கள் அறிந்து கொள்ள பயண்படுத்திய படம்தான் இது. பங்கின் விலை எண் இரண்டில் இருந்து புறப்பட்டு எண் 3 வரை சென்று பின்னர் எண் 4 வரை இறங்கியதும் காளை பயணம் செய்தவதற்கான கோட்டை வரைந்து Up Trend-ஐ கண்டுபிடித்தீர்கள் அல்லாவா! இப்போது காளை பயணம் செய்வதற்கு நீங்கள் வரைந்த கோட்டிற்கு இணையாக எண் மூன்று உள்ள இடத்தில் (அதாவது பங்கின் உச்ச நிலை) மேலும் ஒரு கோடு போடுங்கள் இதற்குத்தான் Parrelal Line என்று பெயர். பங்கின் விலை இந்த கோட்டை தொட்டதும் கீழே இறங்கி விடும் என்பதால் இந்த கோட்டிற்கு Resistance என்று பெயர். கீழே இறங்கிய விலை எண் 4 உள்ள இடத்தில் இருக்கும் கோட்டை தொட்டதும் மீண்டும் மேல் நோக்கி செல்லத்தொடங்கும் எனவே எண் 4-ல் உள்ள கோட்டிற்கு Support என்று பெயர்.
DOWN TREND:
மேலே உள்ள படம் நாம் Down trend பற்றி கற்றுக்கொள்ள பயன்படுத்திய படம். இந்த படத்தில் காளை பயணம் செய்வதற்காக வரைந்த கோட்டிற்கு இணையாக கீழே ஒரு கோடு வரைந்துள்ளே பாருங்கள். இப்படித்தான் Parallel Line வரைய வேண்டும்.
சரி அதென்ன Support மற்றும் Resistance?
எந்த கோட்டை தொட்டதும் பங்குகளின் விலை அதிகரிக்கிதோ அந்த கோடுகளுக்கு Support என்று பெயர். எந்த கோட்டை தொட்டதும் பங்குகளின் விலை குறைகிறது அதாவது கீழ் நோக்கி திரும்புகிறதோ அந்த கோட்டிற்கு Resistance என்று பெயர். இப்போது இதுவரை நீங்கள் படித்த மூன்று வகை Trend-களிலும் உள்ள Support and Resistance இடங்களை பற்றி பார்ப்போம்.
UP TREND:
DOWN TREND:
SIDEWAYS TREND:
இந்த Sideways trend-தான் உங்களுக்கு Support and Resistance பற்றி மிகத் தெளிவாக புரியவைக்கும். இந்த படத்தில் ஒரு கோட்டிற்கு கீழே Resistance என்று பெயரிட்டுள்ளேன் அதே கோட்டிற்கு மேலே Support என்று பெயரிட்டுள்ளேன் என்பதை கவணமாக பாருங்கள். Support-ஆக இருந்த கோடு Resistance-ஆகவும் மாறும், Resistance-ஆக இருந்த கோடு Support-ஆகவும் மாறும். ஒரு Resistance கோட்டை தொட்டதும் பங்கின் விலையானது முறைபடி கீழே இறங்காமல் முரட்டுத்தனமாக அந்த கோட்டை உடைத்துக்கொண்டு மேலே முன்னேறிவிட்டால், இதுவரை Resistance Line-ஆக இருந்தது இனி Support Line-ஆக மாறிவிடும். அதே போல ஒரு Support Line-ஐ தொட்டதும் பங்கின் விலை மேல் நோக்கி செல்லாமல் Support Line-ஐ உடைத்துக்கொண்டு கீழ் நோக்கி சென்று விட்டால் இதுவரை Support Line-ஆக இருந்தது இனி Resistance Line-ஆக மாறிவிடும். ஒரு கோடு வேறு ஒரு கோடாக பறிமாற்றம் அடையும் இடங்களை கீழே உள்ள படத்தில் வட்டமிட்டுள்ளேன்.
|
நான் வட்டமிட்டுள்ள இடங்களிலெல்லாம் பங்கின் விலையானது கோட்டை உடைத்துக்கொண்டு மேலே முன்னேறி இருக்கிறது அல்லது கீழே இறங்கியிருக்கிறது. இப்படி கோடு உடைபடும் இடங்களிலெல்லம் ஒரு Support Line Resistance Line-ஆகவும், ஒரு Resistance Line Support Line-ஆகவும் பறிமாற்றம் அடையும்.
சூத்திரம் இதுதான்: எந்த கோட்டை தொட்டதும் விலை இறங்குகிறதோ அந்த கோட்டிற்கு Resistance என்று பெயர். எந்த கோட்டை தொட்டதும் பங்கின் விலை அதிகரிக்கிறது அந்த கோட்டிற்கு Support என்று பெயர்.
நாம் கற்றுக்கொண்டதை ஒரு முறை வரைமுறை செய்துகொள்வோம்:
1. பங்குச்சந்தையில் மூன்று விதமன Trend உள்ளது
2. அவை: Uptrend, Down trend, Sideways trend
3. மூன்று விதமான Trend-களை எப்படி கண்டுகொள்வது என்று கற்றுக்கொண்டு எந்த விலையில் முதலீடு செய்ய வேண்டு என்று அறிந்துகொண்டோம்.
4. வாங்கிய பங்குகளை சரியான விலையில் விற்பனை செய்ய Parallel Line அவசியம் என்று அறிந்துகொண்டு Parallel Line எப்படி உருவாக்குவது என்று அறிந்து கொண்டோம். இந்த Parallel Line-க்கு Resistance line என்ற பெயரும் உண்டு
5. எந்த கோட்டை தொட்டதும் விலை இறங்குகிறதோ அந்த கோட்டிற்கு Resistance என்று பெயர். எந்த கோட்டை தொட்டதும் பங்கின் விலை அதிகரிக்கிறது அந்த கோட்டிற்கு Support என்று பெயர்.
இதுவரை நீங்கள் கற்றுக்கொண்டதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நீங்கள் கேட்கத்தொடங்கலாம். மிண்டும் அடுத்தவாரம் சந்திப்போம். நன்றி
தொடரும்...
|