வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
   
 
  உள்ளடக்கம்
 
அம்மா, உழைப்பதை நிறுத்திக்கொண்டார் - அழகிய பெரியவன்
--------------------------------
கருப்பு பாலைவனம் 7 - எங்க ஊர் வெம்பூர் - கவிஞர் சமயவேல்
--------------------------------
அஞ்சலி: ஜெயகாந்தன் - எம்.டி.முத்துக்குமாரசாமி
--------------------------------
நிமித்தம் - எஸ்.ராமகிருஷ்ணன் - தமிழ்மகன்
--------------------------------
பப்பாசி (BAPASI)அமைப்பின் செயலாளர் திரு. புகழேந்தி அவர்களுடன் ஒரு நேர்காணல் - விக்னேஷ் சேரல்
--------------------------------
பூத்துக் குலுங்கும் பூஜ்ஜியங்கள் - கவிஞர் பச்சோந்தி
--------------------------------
சென்னைப் புத்தகக் கண்காட்சி அரங்கம் வடிவமைப்பு செய்த கே.மாமுண்டி நேர்க்காணல் - விக்னேஷ் சேரல்
--------------------------------
சென்னை புத்தகக்கண்காட்சி - காளிமுத்து
--------------------------------
சென்னை புத்தகக்காட்சி - வாசகர்களின் அனுபவங்கள் - விக்னேஷ் சேரல்
--------------------------------
 
   
 
1

 
 
 
 
   
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     




பூத்துக் குலுங்கும் பூஜ்ஜியங்கள்

- கவிஞர் பச்சோந்தி

 

மழையில் நனைந்த குருட்டுப் பூனை
மூடிய வாசல் எதிரே நின்று கத்துகிறது
அதன் கூப்பாட்டில் இரண்டொரு தமிழ்ச் சொற்கள்
இன்னும் விடியாத இரவை அசைக்கின்றன
(நீ என்னும் எழுத்து)


ஏன் அந்த குருட்டுப் பூனை மூடிய வாசல் முன் கத்துகிறது. என்னை விட்டுவிட்டு ஏன் கதவை மூடிக்கொண்டீங்கன்னு கேற்கிறதா? இல்லை பசியில் கத்துகிறதா? எதிர் வீட்டுப் பூனையா? இல்லை எதிர் வீட்டுக்கு பால் குடிக்கச் சென்ற பூனையா? இல்லை வெகுநாட்களாய் வெப்பத்தில் கிடந்து, மழையில் நனைந்து துள்ளிக் குதிக்கும் குழந்தையின் பேரானந்தமா? என்னோடு நனைய நீங்களும் வாங்க என்று கூப்பிடிகிறதா? வெறுமனே கதவை சாத்திவிட்டு அக்கம் பக்கம் வீட்டுக்காரங்க போனபோது திருடன் ஏதும் வந்துவிட்டானா? இல்லை வெளிச்சத்திலே வளர்ந்த பூனை முதன்முதலாய் ஒரு இருட்டைப் பார்த்து பயப்படுகிறதா? இல்லை முதன் முதலாய் பூனையைக் கண்ட இருட்டு அலறியதா?. பூனையின் கூப்பாட்டில் ஏன் அந்த இரவு அசைந்தது. பூனை பேசியது தமிழ் மொழி என்பதாலா? இல்லை இதுவரை அந்த இரவு எந்த மொழியையும் கேட்டிராத இரவா? மனிதர்கள் தாய்மொழியை மறந்து ஆங்கிலத்தில் உரையாடும் வருத்தத்தில் கல்லாகிப்போன தமிழ் இரவா? யார் யாரோ அசைக்க முற்பட்டு முடியாமல் போன முரட்டு இரவா?

இப்படி எண்ணற்ற கேள்விக் கிளைகள் விரிகின்றன.
இரவில் அசையும் மரத்தைப்பார்த்து
அப்பா இருட்டு அசையுது பார் என்கிறாள் பொம்மு
-கார்த்திக் நேத்தா (தவளைக்கல் சிறுமி)

இவர் இரவில் அசையும் மரத்தைப் பார்த்து இருட்டு அசைவதாக சொல்கிறார். ஆனால் ரமேஷ் பிரேதனோ பூனையின் தமிழ் சொற்களால் இருட்டையே அசைக்கிறார்.

ஒரு முட்டுச் சந்தில் என் நிழலை உன் நிழல்
மடக்கிக் கொன்ற அன்று அறிந்தேன்
நிழல்களுக்கும் மரணமுண்டு என்பதை
(வேற்றுக் கிரகவாசி)

பாவம் அந்த நிழல் என்ன தவறு செய்ததோ! இல்லை ஏதோஓர் நியாயத்தை நிரூபிக்க கோர்ட் கூண்டிலுக்கு போனதோ, இல்லை சாதி விட்டு சாதி காதலித்ததோ, காதலித்த நிழலை கைப்பிடித்து ஊரைவிட்டு போனதோ, இல்லை மாற்றான் மனைவியின் நிழலை புணர்ந்ததோ,இல்லை பூப்படையாத சிறு நிழலை பாலியல் வன்கொடுமை செய்ததோ, பிரிக்க முடிந்த பங்காளிகளின் சொத்துத் தகராறா? பிரிக்க முடியாத நாய்களின் எலும்புத்துண்டு தகராறா? முன்பகையால் விளைந்த பின்கொடுமையா?

தொடர்ந்துவந்த நிழலும் இங்கே
தீயில் வெந்து போகும்
- நா.முத்துக்குமார்

எதிர்வீட்டில் குடிவந்த நிழல், குழந்தை வைத்திருக்கையில் குழந்தையைத் தொடுவதுபோல நிழலையும் வருடுவது, கல்லூரி வாசலில் நிழலின் வருகைக்காக காத்துக்கிடப்பது. மொட்டைமாடி
கொடிக்கயிற்றில் காய்ந்த துப்பட்டாவை எடுத்துவந்து கட்டில் படுக்கையோடு அணைத்துக்கிடப்பது. சாலையோரம் அமர்ந்து ஜன்னல்வழியாக எட்டிப்பார்க்குமா நிழல் என்று ஏங்கிக்கிடப்பது, ஏதோஓர் கல்யாணத்திற்கு போவதுபோல் பயணித்து காமத்தின் உச்சியில் தேநீர் குடித்து, ஒரு சிறு பிரிவோடு சாலை கடக்கையில் வாகனத்தால் தூக்கி வீசியும், பின் நசுங்கியபோதும், நெருப்பில் கரைந்தபோதும் அந்த நிழல் உறங்கிய பாயையும் தலையணையும் நெஞ்சோடு கட்டிக்கொண்டும் தொடர்கிறது. காதலிலும், காமத்திலும் இன்னபிற சமூக பிரச்சனையிலும் நாம் ஒருவரின் நிழலை மட்டுமே மடக்கியும், எரித்தும் கொலைசெய்ய முடியும். அதன் நினைவுகளை எரித்தோ புதைத்தோ மரணிக்க முடியாது.

கம்பன் ஒரு பூனை வளர்த்தான்
சோழர் காலத்திய பூனை
பெண் பூனை –அதன் உயிர்த்தொடர்ச்சி
இன்னும் காணக்கிடைக்கிறதாம்
(பூனைக்காளி)

கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும் கவிபாடும். யாமறிந்த புலவர்களில் சிறந்த மூவரில் கம்பனைச் சொல்கிறான் பாரதி. கம்பன் வீட்டு நாயைப்போல கவிதையாய் அது குரைக்கும் என்கிறார் நா.முத்துக்குமார். கம்பன் ஏன் பூனை வளர்த்தான். ஆண்டாளும், ஔவையாரும் ஆண் பூனை வளர்த்தார்களோ. அவர்கள் பெண் பூனைக்கு கள்ளிப்பால் ஊற்றிக்கொன்றார்களோ? இல்லை பொழைக்க வந்த ஊரிலே இருபது முப்பது வருடமாக உழைத்து சிறுகச் சிறுக பணம் சேர்த்து, வாங்கிய நிலத்தில் கட்டிய வீட்டையும் சேர்த்து தன் பெண்பிள்ளையின் திருமண வரதட்சணைக்காக அத்தனையும் விற்றுவிட்டு வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தார்களோ நம் ஆண்டாளும் ஔவையாரும். எப்படியிருந்தாலும் கம்பன் ஒரு பெண்பூனை வளர்த்திருக்கிறார் என்பதே மகிழ்ச்சிதான். இன்னும் அதன் தொடர்ச்சி இருப்பது மகா மகிழ்ச்சிதான்.

சுடப்பட்ட சொற்கள் ஈரமற்றவை
வறுக்கப்பட்ட விதை முளைக்காது
(எங்கள் நாட்டு அதிபருக்கு சிபிலிஸ்)

சொல் என்பது வெறும் சொல்லல்ல. அந்தச் சொல் ஒருவரை வீட்டைவிட்டே ஓடச்செய்யும். அந்தச் சொல் தண்டவாளத்தில் தலைவைக்கச்சொல்லும், ஒருமுழக்கயிற்றிலோ துணியிலோ தூக்கில் தொங்கவிடும். ஐந்தாறு வருடமோ பத்திருபது வருடமோ ஒரு உரையாடலை அறுத்துவிட்டு மௌனங்களை சுமந்து திரியச்செய்யும். ஒரு வெறித்தனமான காதலைத் தோண்டி புதைத்துவிடும். ஒரு அலாதி அன்பரை அடித்து துவைத்து காயப்போட்டுவிடும்.

அந்த சொற்கள் நீ எந்தச் சாதிக்காரன் என்று காட்டிக்கொடுத்துவிடும்.

அந்தச்சொற்கள் நீ ஆன்மீகவாதியா? அரசியல்வாதியா? தீவிரவாதியா? என்று பிடித்துக்கொடுத்துவிடும். அந்தச் சொற்கள் பிறரை அடிமைப்படுத்திவிடும். பிறருக்கு உன்னையும் அடிமைப்படுத்திவிடும்.
அந்தச் சொற்கள் இடிந்து விழுந்தவரை எழுந்து ஓடச்சொல்லும் உடைந்து நொறுங்கியவரை பிசைந்து உருவாக்கச் செய்யும்.

தூவிவிட்ட விதை, தூக்கியெறிபட்ட விதை, தோண்டிப்புதைத்த விதை, பறவைகளிட்ட எச்சம், காய்ந்து முதிர்ந்து வெடித்துச் சிதறிய விதைகள் இப்படி எல்லா விதைகளும் முளைக்கும். ஆனால் வறுக்கப்பட்ட விதைமுளைக்காததுதான். வறுக்கப்பட்ட விதைகள் கொல்லப்பட்டமனிதர்கள்போல்தான்.

இங்கு குடிகாரர்களைவிட கவிஞர்களின் எண்ணிக்கை
அதிகம்தான் எனினும் தந்தையைக் கொன்ற கவிகள்
என்னைப்போல வேறு இலர்.
(சாரயத்தின்மீது சத்தியமாக)

போதையின் உச்சத்தில் தான் செய்வதறியாது செய்தாரா? குடிக்கப் பணம்தராத வறட்சியின் எச்சத்தில் கொலைசெய்திருப்பாரா? குடித்தவர்கள் தந்தையை மட்டுமா கொலைசெய்கிறார்கள். வயது முத்ர்ந்த தாய் கழுத்தறுத்து, கற்பமான மனைவி, பூப்படைந்த மகள் என்று ஒருத்தரையும் விட்டுவைப்பதில்லை. இந்த சமூகத்தின் அமைதியை கொன்றுகுவித்து பின் சமூகத்தையே கொன்றுவிடுகிறார்கள்.

புதிய உடம்பு புதிய எண்ணம் புதிய வாழ்க்கை
சுழியத்திலிருந்து புதிதாய் பிறக்கப் போகிறேன்
எனக்கான விடுதலை
என் சொந்த உடம்பிலிருந்து முளைக்க வேண்டும்
முட்டையிலிருந்து வெளிவந்த குழந்தைகள்
தோள்களில் முளைக்கும் சிறகுகளைப்போல
(பூமியைவிட்டு வெளியே)

இங்கு சுழியத்திலிருந்து புதிதாய் பிறக்கப் போகிறேன் என்ற வரியில் ஒருவ்ன் நிற்கதியான நிலையை குறிக்கிறது. ஏதுமற்று இருப்பவனின் நிலையைக் குறிக்கிறது. பூஜ்ஜிய வாழ்க்கையை ஆச்சரியமாக்கும் வெவ்வேறு படைப்பாளிகளின் வரிகள் வந்து வந்து போகின்றன.

உதாரணமாக
பூஜ்ஜியத்திலே ஒரு இராஜ்ஜியத்தை வைத்தான்
-கண்ணதாசன்
முட்டைக்குமேல முட்டையவச்சா
எட்டு ஆயிடும்
-நா.முத்துக்குமார்
முட்டையென்பது வெற்றானது அல்ல. அந்த முட்டைக்குள் ஒரு உயிர் இருக்கிறது. அந்த முட்டையின் உள்ளிருக்கும் குஞ்சை அடைகாக்க
தாய் இருக்கிறது. ஆனால் இங்கே முட்டை என்கிற குஞ்சை அடைகாக்கும் இன்னொரு முட்டைதான் அடைகாக்கும் தாய்.
பூஜ்ஜியம் ஒன்றோடு
பூவாசம் இன்றோடு
-மதன் கார்க்கி
ஜீரோவும் இப்ப நூறானதே
-தனுஷ்

சுழியத்திலிருந்து புதிதாய் பிறக்க போகிறேன் என்று சொல்ல பெரிய நம்பிக்கை வேண்டும். நம் எல்லோரிலும் எத்தனை பூஜ்ஜியங்கள் உள்ளோமோ அவரவர்களுக்கே தெரியும். ஆனால் எல்லோரும் புதிதாய் பூப்போம், பூவாசமடிப்போம்.

அயோனிகன் (பால்வீதியில் திரிந்த கவிஞன்)
ஆசிரியர் : ரமேஷ் பிரேதன்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
ரமேஷ் பிரேதன்(1964) புதுச்சேரியில் பிறந்தவர். கவிதை, கதை, நாடகம், நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என இருபத்து ஒன்பது நூல்கள் எழுதியுள்ளார்.
தொடர்புக்கு : 8903682251
மின்னஞ்சல் : rameshpredan@mail.com

மேலே செல்க...(go to top)
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </