வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
   
 
  உள்ளடக்கம்
 
அம்மா, உழைப்பதை நிறுத்திக்கொண்டார் - அழகிய பெரியவன்
--------------------------------
கருப்பு பாலைவனம் 7 - எங்க ஊர் வெம்பூர் - கவிஞர் சமயவேல்
--------------------------------
அஞ்சலி: ஜெயகாந்தன் - எம்.டி.முத்துக்குமாரசாமி
--------------------------------
நிமித்தம் - எஸ்.ராமகிருஷ்ணன் - தமிழ்மகன்
--------------------------------
பப்பாசி (BAPASI)அமைப்பின் செயலாளர் திரு. புகழேந்தி அவர்களுடன் ஒரு நேர்காணல் - விக்னேஷ் சேரல்
--------------------------------
பூத்துக் குலுங்கும் பூஜ்ஜியங்கள் - கவிஞர் பச்சோந்தி
--------------------------------
சென்னைப் புத்தகக் கண்காட்சி அரங்கம் வடிவமைப்பு செய்த கே.மாமுண்டி நேர்க்காணல் - விக்னேஷ் சேரல்
--------------------------------
சென்னை புத்தகக்கண்காட்சி - காளிமுத்து
--------------------------------
சென்னை புத்தகக்காட்சி - வாசகர்களின் அனுபவங்கள் - விக்னேஷ் சேரல்
--------------------------------
 
   
 
1

 
 
 
 
   
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     




நிமித்தம் - எஸ்.ராமகிருஷ்ணன்

- தமிழ்மகன்


நிமித்தம்
எஸ்.ராமகிருஷ்ணன்
உயிர்மை பதிப்பகம்,
11/29, சுப்ரமணியம் தெரு,
அபிராமபுரம்,
சென்னை&18.

‘பொய், விதை இல்லாத தாவரம்’ என்று ஒரு வரி நாவலில் வருகிறது. எந்தவித ஆதாரமும் இல்லாமல் முளைக்கக் கூடியது பொய். காது கேளாத ஒருவன் பொய்யைத் துணைக்கு அழைத்துக்கொள்ளும் துயரத்தை விவரிக்கும்போது இப்படிச் சொல்கிறார் ராமகிருஷ்ணன். ஒருவன் எதன் பொருட்டோ வாழ்வைத் தக்கவைத்துக்கொள்ள பொய்யைச் சொல்ல வேண்டியிருக்கிறது. நிரந்தரமின்மை தருகிற அச்சம்தான் பொய்யின் வேர். மனக்குறைபாடுகளும் உடற்குறைபாடுகளும் ஏற்படுத்துகிற அவநம்பிக்கை பலருக்கு இப்படியான அச்சத்தைத்தான் வளர்க்கிறது.

தேவராஜ் என்ற காதுகேளாத முதிர் இளைஞனின் திருமண நாளின் முன் இரவில் கதை தொடங்குகிறது. தன் திருமணத்துக்கு தன் நண்பர்களை எதிர்பார்க்கிறான். யாருமே இல்லை. மாப்பிள்ளையின் தோழர்களாக வந்து திருமண நாளைக் கொண்டாட வேண்டிய அவன் வயது ஒத்த சகாக்கள் எல்லாரும் அப்பாக்களாகவும் தாத்தாக்களாகவும் மாறிவிட்ட உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் அவன் தன் நண்பர்களுக்காகக் காத்திருக்கிறான். எல்லோரும் காலையில் வரக்கூடும் என பொய்யாகச் சமாதானம் சொல்லிக்கொள்கிறான்.

அவன் நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன. ஜூரம் வந்து காது கேட்காமல் போனது, பாடத்தைக் கேட்க முடியாமல் ஆசிரியரிடம் அடிவாங்கியது, டமாரம் என்று சுற்றியிருப்பவர்களால் அவமானப்படுவது, ஆறுதல் தேடி அலைவது என கதை நகர்கிறது. காதலும் காமமும் ஏமாற்றங்களின் தழும்புகளாக அவனை வதைக்கின்றன.

நாவல் நெடுக்க தத்துவார்த்தமான வார்த்தைச் சித்திரிப்புகள். தேவராஜுக்கு வரும் கனவு வினோதமானது. வாரத்தின் ஏழு நாட்களைக் கொண்ட சீட்டுக்கட்டு விளையாட்டு ஒன்றை விளையாடுகிறான். நமக்குத் தேவையற்றை கிழமைகளை எடுத்துப் போட்டு விளையாடும் விளையாட்டு அது. மனிதர்கள் கிழமைகளோடு தங்களைச் சம்பந்தப்படுத்தியபடிதான் வாழ்கிறோம். வார இறுதி, வார விடுமுறை, வாரத்தின் முதல் நாள் என தினமும் விடுமுறையைத் துரத்தியபடியே இருக்கும் வாழ்க்கை விளையாட்டு அது.

மனோதத்துவ டாக்டரிடம் சிகிச்சைக்குச் சேர்க்கப்படுகிறான் தேவராஜ். அவர் கேட்கும் கேள்விகளும் தேவராஜ் சொல்லும் பதில்களும் தத்துவச் சுவைக்குச் சான்று. டாக்டர் ஒரு வட்டம் வரையச் சொல்கிறார். தேவராஜ் வட்டம் வரையப் பிடிக்காது என்கிறான்.

ஏன் என்கிறார் டாக்டர். ‘அது எங்கு ஆரம்பிக்கிறதோ அங்கேயே முடிந்துவிடுகிறது. அதனால் அது பிடிப்பதில்லை’ என்கிறான்.

‘எனக்கு மேகம் பிடிக்கும். ஏனென்றால் அவை ஒன்றுபோல இன்னொன்று இருக்காது’ என்கிறான். ராமகிருஷ்ணனின் முந்தைய நாவல்களில் இருந்து வித்தியாசப்படும் எளிமையான மொழியில் சரசரவென ஓடும் நடை.

புலன் இழந்த சோகம் ஒருவனை எப்படி எல்லாம் அலைக்கழிக்கும் என்பது நாவல் முழுக்க காயம் சிந்தும் ரத்தமாக ஓடுகிறது. மதம் மாறினால் தீர்வு கிடைக்குமா என்று யோசிக்கிறான், கடவுளிடம் தஞ்சம் புகுந்தான் மகிழ்ச்சி கிடைக்குமா என தவிக்கிறான், கடவுள் இல்லை என்ற பகுத்தறிவு பலன் தருமா, காதல் தீர்த்து வைக்குமா, காமம் வடிகாலாகுமா என வாழ்வின் எல்லா சந்தர்ப்பங்களையும் பிரயோகித்துப் பார்க்கிறான். துயரங்கள் அவற்றுக்கே உரிய சுயபலத்தோடு எல்லாவற்றையும் வெல்கின்றன.

நிறைய சம்பவங்கள், நிறைய மனிதர்கள். நாவலின் மிகப்பெரிய பலம் அது. சரித்திர பூர்வமாக பல செய்திகளை நாவலின் வழியே சொல்லிச் செல்கிறார். காந்தி, நேரு, இந்திரா, எமெர்ஜென்ஸி, இலங்கை யுத்தம், அகதிகளாக வந்தவர்கள் என வரலாற்றின் இழை, நாவலைக் கால் ஊன்ற வைக்கிறது.
காந்தி பக்தர் ராஜாமணி கொல்லப்பட்ட கதை. பர்மாவில் இருந்து செட்டியாரால் அழைத்துவரப்பட்ட புவன்ஸ்ரீ&க்கு விக்கல் நின்ற கதை. வீமன் சொல்லும் ஆவிகள் கள்ளு குடிக்கும் கதை. சுதர்சனம் சார், அங்கையற்கண்ணி டீச்சர் காட்டும் அன்பின் கதை. கிரேசம்மா சொல்லும் அசையாத மரங்களின் கதை. வண்டிப் பேட்டை தம்பையா சொல்லும் ‘ஆண் கிணறு பெண் கிணறு’ கதை என எத்தனைக் கிளைக் கதைகள்?

ஜோஸ்லின் சிந்தியா, சவீதா காதல் பூக்க வைத்த பெண்கள், தேவராஜுக்குக் கை கூடாத சோகம் விரக்தியின் உச்சத்தில் அவனைத் தள்ளுகிறது. கணவனை இழந்த நர்ஸ் ஒருத்தி இறுதியாக வாழ்க்கைத் துணையாகத் தேர்வாகிறாள்.

திருமண மேடையில் வந்து அமர்கிறான் தேவராஜ். கடந்த காலத்தைவிட எதிர்காலம்தான் பயமுறுத்துவதாக இருக்கிறது. அந்தப் புள்ளியில் கதை முடிகிறது. உண்மையில் கதை தொடங்கும் புள்ளியோ என்ற அச்சம் நம்மையும் தாக்குகிறது.

எல்லாம் கடந்து போகும் வாழ்க்கையின் சுவாரஸ்யமும் குரூரமும் கலந்த வாழ்வின் நிமித்தம்.

மேலே செல்க...(go to top)
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </