வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
   
 
  உள்ளடக்கம்
 
அம்மா, உழைப்பதை நிறுத்திக்கொண்டார் - அழகிய பெரியவன்
--------------------------------
கருப்பு பாலைவனம் 7 - எங்க ஊர் வெம்பூர் - கவிஞர் சமயவேல்
--------------------------------
அஞ்சலி: ஜெயகாந்தன் - எம்.டி.முத்துக்குமாரசாமி
--------------------------------
நிமித்தம் - எஸ்.ராமகிருஷ்ணன் - தமிழ்மகன்
--------------------------------
பப்பாசி (BAPASI)அமைப்பின் செயலாளர் திரு. புகழேந்தி அவர்களுடன் ஒரு நேர்காணல் - விக்னேஷ் சேரல்
--------------------------------
பூத்துக் குலுங்கும் பூஜ்ஜியங்கள் - கவிஞர் பச்சோந்தி
--------------------------------
சென்னைப் புத்தகக் கண்காட்சி அரங்கம் வடிவமைப்பு செய்த கே.மாமுண்டி நேர்க்காணல் - விக்னேஷ் சேரல்
--------------------------------
சென்னை புத்தகக்கண்காட்சி - காளிமுத்து
--------------------------------
சென்னை புத்தகக்காட்சி - வாசகர்களின் அனுபவங்கள் - விக்னேஷ் சேரல்
--------------------------------
 
   
 
1


 
 
 
 
   
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     



சென்னை புத்தகக்காட்சி - வாசகர்களின் அனுபவங்கள்

- விக்னேஷ் சேரல்


சென்னை புத்தகக் கண்காட்சி சென்னை மக்களின் ஆதர்ஷமான கலாச்சார திருவிழாவாக மாறிவருகிற சூழலில் வாசகர்களின் மனநிலையை நம் அறிந்தகொள்ள இதுவே நல்ல சந்தர்பம்.

சென்னை புத்தகக் கண்காட்சி பற்றி தன் அனுபவங்களை “கூடு” இணைய இதழுக்கு பகிர்ந்து கொண்ட வாசகர்களின் பதிவுகள்.


கிருஷ்ண பிரபு (புத்தக ஆர்வலர்)

ஒவ்வொரு முறையும் சென்னை புத்தகக் கண்காட்சியின் பிரம்மாண்டம் கூடிக்கொண்டே வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணத்தால் சமூக இணைய தளங்களில் படைப்பாளிகள் – வாசகர்கள் தொடர்பில் இருக்க முடிந்தாலும், இருவரும் நேரில் சந்தித்துப் பேசி மகிழும் ஒரு களத்தை புத்தகக் கண்காட்சி தான் நமக்கு வழங்குகிறது. ‘இலக்கியம், சினிமா, அரசியல்’ என பல்வேறு துறைகளில் பருந்துப் பார்வையிலும், மண்புழுப் பார்வையிலும் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கும் வசதியை இதுபோன்ற புத்தகக் கண்காட்சிகள் தான் நமக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றன. புத்தகங்களுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தித் தருகின்றன.

‘38-வது புத்தகக் கண்காட்சி’யை ஒட்டி ஏராளமான புதிய வெளியீடுகளும், மறுபதிப்புகளும் சந்தைக்கு வந்திருந்தன. சமீப ஆண்டுகளில் பதிப்புத் துறையில் இளைஞர்கள் கால்தடம் பதிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்களும் பதிப்பகங்கள் துவங்கி புதிய புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. போலவே, வாசகர்களுடனான படைப்பாளிகளின் நேரடி உரையாடல் சந்திப்பையும், குறும்படத் திரையிடலையும் இந்தப் புத்தகக் கண்காட்சியின் சிறப்புகளில் ஒன்றாகக் கூறலாம். அடுத்தடுத்த புத்தகக் கண்காட்சிகளில் இதுபோன்ற முயற்சிகள் கூடுதல் சிறப்புடன் ஆக்கப் பூர்வமாகத் தொடரவேண்டும்.

புத்தகங்கள்:

கடந்த ஆண்டுகளில் ‘சம்பத் சிறுகதைகள்- (கயல்கவின் பதிப்பகம்)’ நீண்டகாலம் கழித்து பதிப்பில் வந்த சிறுகதைத் தொகுப்புகளில் ஒன்று. சென்ற வருடம் முன் வெளியீட்டுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட “கரமசோவ் சகோதரர்கள்” ரஷிய மொழியிலிருந்து நேரடியாக அரும்பு சுப்ரமணியனால் மொழிபெயர்க்கப்பட்டு, இந்த புத்தகக் கண்காட்சிக்கு சந்தைக்கு வந்துள்ளது. தி. ஜானகிராமனின் முழுத் தொகுப்பு சுகுமாரனால் தொகுக்கப்பட்டு சந்தைக்கு வந்துள்ளது. இதுவரையிலும் வெளிவராத தி.ஜா-வின் கதைகள் இத்தொகுப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற முயற்சிகள் ஒருபுறம் இருக்க, சமூக ஊடகங்களில் எழுதக் கூடியவர்கள் தமது எழுத்துக்களைத் தொகுத்து புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

வா. மணிகண்டன் (யாவரும். காம்), அதிஷா (உயிர்மை), எஸ்.கே.பி கருணா (வம்சி பதிப்பகம்) போன்றவர்கள் கொண்டு வந்திருக்கும் புத்தகங்கள் அதற்கு உதாரணம். இலக்கிய படைப்புகள் மட்டுமல்லாது சினிமா, வரலாறு சார்ந்தும் எழுதக்கூடியவர்களின் புத்தகமும் வெளியீடு கண்டுள்ளது. பூ. கோ. சரவணன் (விகடன்), தமிழ் ஸ்டூடியோ அருண் (மெய்ப்பொருள் பதிப்பகம்) போன்றவர்களை இதற்கு உதாரணம் சொல்லலாம். சமூகநீதி சார்ந்தும், சூழலியல் சார்ந்தும் ‘தடாகம், பூவுலகின் நண்பர்கள்’ போன்றோர் ஆர்வத்துடன் புத்தகங்களைக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கு. சிவராமன் போன்றோரது பாரம்பரிய உணவு சார்ந்த புத்தகங்களும் சந்தைக்கு வரும் வாசகர்களின் கவனத்தைப் பெறுவது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு வருடமும் புத்தகக் கண்காட்சிக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை கூடுகிறது. வாசிப்பதற்காக முதன் முறையாகப் புத்தகங்களைத் தேடி வரும் இளம் வாசகர்களின் எண்ணிக்கையும் ஒரு புறம் கூடிக் கொண்டிருக்கிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கவனத்திற்கு புத்தகக் கண்காட்சியைப் பற்றிய கவனத்தைக் கொண்டு செல்ல வேண்டியது அவசியமான ஒன்று.

புத்தகக் கண்காட்சியின் அத்தியாவசியக் கட்டமைப்பு சார்ந்தும் சில போதாமைகள் இருக்கிறது.

பத்துலட்சம் நபர்கள் வந்துசெல்லும் ஒரு நிகழ்விற்கு நல்ல முறையிலான கழிப்பிட வசதி முக்கியமான ஒன்று. பபாசி இதனை மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டும். போலவே, கண்காட்சியில் இடம்பெறும் உணவகங்கள் அடிக்கும் கொள்ளைக்கு அளவே இல்லை. இதனையும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் கருத்தில் கொண்டால் நன்றாக இருக்கும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அடுத்த புத்தகக் கண்காட்சியை எதிர்கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

பாரதி செல்வா (மேடை பேச்சாளர்)

கடந்த 10 வருடங்களாக சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வந்து கொண்டு இருக்கிறேன். நாளுக்கு நாள் வருவோரின் எண்ணிக்கை கூடிகொண்டுதான் இருக்கிறது. புதிய புதிய படைப்புகள் வந்தபடி உள்ளது. இருப்பினும் இவைகள் யாருக்கு சென்றடைய வேண்டுமோ அங்கு செல்கிறதா? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க. இங்கு புத்தகங்கள் மட்டும் வாங்க வருவதில்லை தனக்கு பிடித்த எழுத்தாளர்களை பார்ப்பதும் விவாதிப்பதும் பல ஊர்களில் இருந்து வரும் இலக்கிய நண்பர்களை காண்பதற்கான ஒரு பொதுவான தளமாக இத்திருவிழா அமைகிறது.

சென்ற ஆண்டு வாங்கிய புத்தகங்கள் பல வாசிக்க வேண்டியிருப்பதால் இந்த வருடம் ஒரு புத்தக்கம் தான் வாங்கினேன் ரோஸா லக்ஸ்ம்பர் வரலாறும் கட்டுரைகளும் என்ற நூல். சில வருடங்களாக வந்திருந்தாலும் சமீபகாலமாக தான் வாசிப்பு என்னை தனக்குள் இழுக்க துவங்கியது. கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என சிலவற்றை வாசிக்கலானேன்.

இதில் என்னை கவனிக்க வைத்த நாவல் உம்மத். நாவலின் மைய கரு, ஈழ போரின் அவலங்களை காட்சி படுத்துகிறது. மூன்று பெண்களின் ஊடே கதை களம் உயிர் பெறுகிறது. இஸ்லாமிய அடிப்படைவாதம் பெண்ணை எப்படி அடக்கி ஒடுக்குகிறது. மக்கள் அகதிகளாக அலைக்கழிக்கப்படுவதும், போரினால் மாற்று திறனாளியாக மாறுவதும், உடமைகளை இழப்பதையும், பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கபடுவதும், என பல அடிப்படை பிரச்சனைகளை பேசுகிற படைப்பு உம்மத். படைப்பாளர் “ஷர்மிளா செய்யத்”.
மனிதன் உயிர் வாழ சுவாசிப்பு எத்தனை அவசியமோ அது போன்று வாசிப்பு அவசியமானது .இதில் பெண்களுக்கான வாசிப்பு சூழல் என்பது மிககுறைவானது. இந்த சமூக கட்டமைப்பு பெண்களுக்கான அறிவார்ந்த தேடலை ஊக்குவிப்பதாக இல்லை. புத்தக கண்காட்சிகள் பெண் படைப்பாளிகளை வாசிப்பாளர்களை பெருக்கும் வகையில் புதிய நிகழ்வுகளை உருவாக்க வேண்டும்.

புத்தக கண்காட்சியில் பேரறங்கு நிகழ்சிகள் இன்னும் செரிவாக ஏற்பாடு செய்வது மிக அவசியமானதாகும். பல துறை சார்ந்த இலக்கிய படைப்பாளர்களை பயன்படுத்த வேண்டும். வியாபார நோக்கை மீறி அறிவை எளிய மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் புத்தக கண்காட்சியை ஏற்பாடு செய்ய வேண்டும். குறிப்பாக குழந்தைகள் பெண்களுக்கு கழிவறை வசதிகளை சுகாதரமான முறையில் அமைத்து தரவேண்டும்.

முகியமான அம்சம்

இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலை ஆதரித்தும் எழுத்தளர்களின் உரிமையை பாதுகாக்க கோரியும் அணைத்து முற்போக்கு அமைப்புகளும் ஒன்றிணைந்து மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினர்.

இந்த ஆண்டு சிங்கபூர் எழுத்தாளர் நூர்ஜக்ஹன் சுலைமான் எழுதிய தையல் மிசின் சிறுகதை தொகுப்பை நான் அறிமுகம் செய்துவைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்வு புத்தக கண்காட்சி பேரறங்கில் நடந்தது மேலும் மேலும் மகிழ்வான அம்சம்.

தி.பிரவின் ஆங்கில ஆராய்ச்சி மாணவர் ( MCC கல்லூரி)

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு நான் புதியவன். ஆங்கில இலக்கியத்தில் ஆராய்ச்சி மாணவனாக இருப்பினும் தமிழ் புத்தகங்களை வாசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தமிழில் புத்தகங்களை படிப்பது என்னுள் ஒரு அலாதியான உணர்வை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் 38வது CBF என் புத்தக வாசிப்பை ஒரு படி உயர்த்தி உள்ளதாக உணர்கிறேன். கண்காட்சியில் உள்ள அரங்குகளை அலசி ஆராய்ந்து 50கும் மேற்பட்ட புத்தகங்களை வாங்கினேன். அவற்றில் மிக முக்கியமானவை தொ.பரமசிவன் எழுதிய பண்பாடு அசைவுகள், பெருமாள் முருகனின் சாதியம் நானும், சாரு நிவேதிதாவின் புதிய Exile, பொட்டாசுகொ குரோயநாகியின் டோட்டோ- சான்,சன்னலில் ஒரு சிறுமி, ஹினெர் சலீமின் அப்பாவின் துப்பாக்கி,எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நீரிலும் நடக்கலாம்.

சாதியம் நானும் நூல், சாதிக்கும் தனக்குமன உறவு பற்றி 32 பேர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. பண்பாடு அசைவுகள், தமிழர்களின் பண்பாடு சார்ந்த வழிமுறைகளை விளக்கும் ஒரு கள ஆராய்ச்சி. புதிய Exile ஒரு Autofiction வகையை சார்ந்த Baroque முறையில் எழுதப்பெற்ற புதினம் ஆகும். டோட்டோ- சான்,சன்னலில் ஒரு சிறுமி ஜப்பானிய கல்வி முறையான 'டோடோமோ'யின் முறையினை டோட்டோ- சான் எனும் அக்கல்வி முறையில் பயின்ற மாணவியின் வாயிலாக விலகும் புத்தகம். அப்பாவின் துப்பாக்கி, ஹினெர் சலீம் என்னும் திரைப்பட இயக்குனரின் பதின் பருவ வாழ்க்கையின் முலமாக குர்திஸ்தான் நாட்டின் விடுதலை போராட்டத்தினை விளக்கும் ஒரு சுயசரிதை.நிரிலும் நடக்கலாம் ஒரு சிறுகதை தொகுப்பு,இதில் ஆன்டன் செகோவ் முக்கிய கதாபத்திரத்தில் வருகிறார்.

ஒரு குறிப்பிட்ட நாட்களில் மட்டும் இந்த கண்காட்சி செயல்படாமல் நிரந்தரமாக செயல்படுமாயின் அது என்னை போன்ற ஆராய்ச்சி மாணவர்களுக்கு உறுதுணையாக அமையும்.

தா.ஜீவலட்சமி (வழக்கறிஞர்)

நான் 2010ஆம் ஆண்டிலுருந்து சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வந்துக்கொண்டு இருக்கிறேன் . நான் முதன் முறையாக வரும்போது கோயம்புத்தூர் சட்ட கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தேன். அன்று முதல் தொடர்ந்து புத்தகக் கண்காட்சிக்கு வந்துக்கொண்டு இருக்கிறேன்.

கடந்த மூன்று வருடமாக சென்னையில் இருப்பதால். புது வருடம் வருகிறது என்றாலே புத்தகக் கண்காட்சி வரும் என்ற ஆவல் ஏற்படுவது உண்டு. பொங்கல் பண்டிகை போல புத்தகக் திருவிழாவையும் எதர்ப்பார்த்து காத்துக்கொண்டு இருப்பதும் உண்டு. வெறுமனே கொண்டாட்ட மனநிலையில் இல்லாமல் ஆத்மார்த்தமான நிம்மதியான இடத்துக்கு சுற்றிலும் மனிதர்கள் நிறைந்த இருப்பதை பார்ப்பதும், அங்கு இருக்கக் கூடிய நிறைய புத்தங்களை பார்க்கும் போதும் நாம் எவ்ளோ குறைவாக படித்துருக்கிறோம் என்றும், இன்னும் எவ்ளோ தேடல் தேவை என்பதை உணரும் இடமாக இருப்பதால் புத்தகக் கண்காட்சி என்றுமே மனதுக்கு நிம்மிதிக் கொடுக்கும் தருணம் தான்.

இந்த வருடம் அதிகமான புத்தங்கள் வாங்கவில்லை, கவிஞர் அ.வெண்ணிலாவின் “எரியத் துவங்கும் கடல்” (கவிதை தொகுப்பு) ஈழவாணியின் “விலக்கப்பட்ட தாழ்கள்” (கவிதை) யாழ் தர்மினியின் “விபச்சாரி 80 ருபாய்” (சிறுகதை) விஜயலட்சுமியின் “லண்டாய்” (கவிதை), எஸ்.ராமகிருஷ்ணனின் “சஞ்சாரம்” வாங்கினேன். பிரமிளின் கவிதை தொகுப்பு கிடைக்கவில்லை.

இந்த புத்தகக் கண்காட்சியில் கண்டிப்பாக வாங்கி படிக்க வேண்டும் என்ற நினைத்த புத்தகம் “லண்டாய்”. படித்து முடித்ததும், என்னை மிகவும் பாதித்தது. இன்றைய அரசியல் சூழலில், பெண்களுக்கு எதிராக நடந்துக்கொண்டுருக்கிற வன்முறைகள் எல்லாவற்றிக்கு மத்தியில் கவிதை எழுதுவதற்காக பெண்கள் கொள்ளப்படுகிற இடமாக ஆட்கொண்டுருக்கும் வேளையில், இங்க கருத்து சுதந்திரம் பற்றி பேசிகொண்டு இருக்கிறோம். அங்கு பெண்கள் எப்படி தன் வாழ்கையில் அரசியல் கவிதைக்காகவும், கவிதையே வாழ்க்கையாகவும் தங்கள் கஷ்டங்கள் எல்லாத்தையும் கவிதைகளின் ஊடக எப்படி கடந்து போகிறார்கள் என்பது தான். இந்த வலிகளை தாண்டி இந்த புக்கத்தில் என்னை ஈர்த்த விஷயும் ரொம்ப இலக்கிய செறிவான வார்த்தைகள் இல்லை, அதையும் தாண்டி அந்த கவிதைகளில் இருக்கக்கூடிய அரசியல், பெண்கள் வீட்டுவிட்டே வரமுடியாத சூழலில் இருக்கிறார்கள். ஆனால், அதுல பேசுற அரசியல் என்பது உலக அரசியல். என்னோடைய நாட்டில் பெண்ணடிமை தனமா வச்சிருப்பேன் அப்படியென்றால் அதற்கு பின்னாடி என்ன அரசியல் இருக்கு என்பதை இங்கு இருக்குகூடிய, பொதுவெளிக்கு வந்த எல்லா பெண்களும் உணர்ந்தார்களா என்பதும், வேலைக்கு செல்லக்கூடிய பெண்களும் கூட தனக்கு ஒரு கொடுமை நடக்குதுன்னு வருத்தப்பட்டாலும் ஏன் நடக்குதுன்னு யோசிக்கிறது இல்லை. வீட்டு விட்டு வெளிய வரமுடியாமே கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லாம, காதலிக்க அனுமதி இல்லாம தன்னோடைய வாழ்கையை தேர்ந்தெடுக்க முடியாத எந்தவிதமான சுதந்திரம் இல்லாத பெண்கள், அவ்ளோ தெளிவான அரசியலோட இருக்காங்க.

அவங்களுக்கு தெரியுது, ஆப்கான் எதனால இந்த மாதிரி அறிவு தளமான இடத்தில இருந்து தாலிபான்கள் யாரால் வளர்த்து விடபடுகிறார்கள். அமெரிக்கவின் வேலை என்ன, ஒரு பொண்ணு அழகா ஒரு கவிதையில் சொல்லியிருக்க, அமெரிக்க வந்து தாலிபான்களுக்கு இந்த மலைக்கு அந்த பக்கம் பயிற்சி கொடுத்திட்டு மலைக்கு இந்த பக்கம் தலிபான்களால் பாதிக்கப்படுகிற பெண்களுக்கு பாதுகாப்பு தருவதாக சொல்கிறார்கள் என்று அந்த கவிதை முடியும். இந்த புத்தகம் வெளியிட்டு அன்றே அவர்கள் பேசியதைல்லாம் கேட்டுவிட்டு வாங்கவேண்டும் என்று விருப்பத்தோடு இருந்தேன்.

ரொம்ப அற்புதமான புத்தகம் எனவே அதை வாங்கினேன். வெண்ணிலாவோட மொழி அவங்க பேசின விஷயங்கள் எல்லாம் ஒரு சாதாரணமான மனுஷி தன் வாழ்கையை கவிதையல கடந்து போறது. நான் அவங்கள என்னோடு பொருத்தி பார்க்கற ஒரு மனுஷி தான் வெண்ணிலா. வெண்ணிலவின் ஆனைத்து தொகுப்பும் எப்பவுமே என்கிட்ட இருக்கும். அதன் அடிப்டையில் இந்த “எரியத் துவங்கும் கடல்” வாங்கினேன். அதேப் போல ஈழத்து பெண்கள் சிறுகதை வாங்குவதற்கு காரணம் இன்னிக்கு ஈழப் போர் பின்பு அங்கு பெண்களின் நிலை என்னவா இருக்கு என்று சொல்லுவதாக இருக்கிறது என்பதாலும், அவர்களின் வாழ்கை ஊடான கதைகள் என்பதாலும் அதை வாங்கினேன்.

இந்த புத்தகக் கண்காட்சியில் நான் குறை என்று நினைப்பது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பற்றி தான். காலதாமதம் ஆகாமல் ஆரமிப்பது மற்றும் கூப்பிட கூடிய ஆட்கள், சிறப்பாக பேசக்கூடிய ஆட்கள் இருக்கும் போது அதை சரியாக பயன்படுத்த வேண்டும். உண்மையில் புத்தகக் கண்காட்சி மேடை என்பது தமிழ் நாட்டின் முக்கியமான இலக்கிய மேடையாகும் எனவே இன்னும் ஆக்கபூர்வமாக இலக்கிய கூட்டத்துக்கு பயன்படுத்தற வகையில் அளிக்கலாம் என்பது தான். அப்படி பயன்படவில்லை என்பது என்னோட பார்வை.

முரளி ஜம்புலிங்கம்

ஏன் புத்தகங்கள் படிக்கவேண்டும்?

இது தொடர்ந்து என் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் நான் எதிர்கொள்ளும் கேள்வி. இதற்கான பதில் மிக எளிமையனாது. உடை எதற்கு? நம் உடலை மறைப்பதற்கு. அதில் ஒரே விதமான ஒரே நிறத்தை கொண்ட உடையை நாம் உடுத்தலாமே ஏன் இத்தனை வகைகள். உணவும் அது போன்றுதான். பசிக்காக உண்ணும்போது காலம் முழுதும் ஒரே உணவை உண்ணலாமே. எதற்கு இத்தனை வகைகள். அனைவரிடமும் இதற்கான பதில் ஒன்று போல்தான் இருக்கும். உடை என் ரசனை சார்ந்தது. உணவு என் ருசி சார்ந்தது. உடை உணவு இரண்டும் புறம் சார்ந்தது. ஆனால் அகம் சார்ந்த எதிர்பார்ப்புகளுக்கு நம்மில் பெரும்பாலானோர் செவி சாய்ப்பதில்லை அல்லது மெனக்கெடுவதில்லை. அகம் சார்ந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக்கூடியதுதான் கலை. அது ஓவியமாகவோ, சிற்பமாகவோ, இசையாகவோ, திரைப்படமாகவோ, புத்தகமாகவோ இருக்கலாம்.

ஒவ்வொரு கலை வடிவமும் அதற்கான தனி சிறப்பை கொண்டிருக்கிறது. இதில் புத்தகங்களின் சிறப்பாக நான் கருதுவது புத்தகங்களால் மட்டுமே நம்மை மண், நாகரிகம், மனம், காலம் அனைத்தையும் கடந்து அழைத்து செல்லும் ஆற்றல் கொண்டது. எழுத்தாளன் உருவாக்கிய பாத்திரங்களுக்கு ஒரு வாசகனால் மட்டுமே உருவம் கொடுக்க முடியும். நம்மில் பலருக்கு பக்கத்துக்கு வீட்டில் நடக்கும் விஷயங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வம் எப்போதும் உள்ளது. அதற்கு வடிகாலாக அமைவதுதான் தொலைகாட்சியில் வரும் நாடகங்களும், சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சிகளும். இது அனைத்துமே நம் அண்டை மனிதர்களுக்கு தெரியாமல் அவர்கள் வீட்டில் எட்டிப்பார்பது அல்லது அவர்கள் வீட்டு கதவில் ஒட்டு கேட்பதும் போன்று தான். ஆனால் அந்த மனிதர்களில் ஒருவராக அவர்களின் மண்ணிற்கே அழைத்து சென்று அவர்களின் சுக துக்கங்களில் பங்கு பெற செய்ய புத்தகங்களால் மட்டுமே முடியும்.

2015 புத்தக சந்தை ?

புத்தகங்களை தொடர்ந்து வாசிக்கும் ஒரு வாசகன் தான் விரும்பும் புத்தகங்களை எப்படியும் தேடி வாங்கிவிடுவான். பிரபல்யமடையாத ஆனால் நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகங்களை வாங்குவதற்கும், பெரிய பதிப்பகங்களில் மட்டுமே கிடைக்கும் என்று நாம் நினைத்த சில புத்தகங்கள் வேறு பதிப்பகங்களில் குறைந்த விலையில் வாங்குவதற்கும் இப்புத்தக சந்தை மிகவும் பயன்படும். ஆனால் இது வரை வாசிப்பு அனுபவம் இல்லாதவர்களுக்கும், புதிதாக படிக்க ஆரம்பித்திருக்கும் ஒரு வாசகனுக்கு இப்புத்தக சந்தைகள் சிறு சலனத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை. ஆனால் எனக்கு இப்புத்தக சந்தையை விட அதற்கு ஒரு மாதம் முன்பாக புத்தக வெளியிட்டு விழாக்களில் எழுத்தாளர்களின் பேச்சை கேட்பதுதான் மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கின்றன. நண்பர் ஒருவர் புத்தகம் வாங்குவதற்கு வந்தவர்களை விட அப்பளம் பஜ்ஜி சாப்பிட வந்தவர்கள்தான் அதிகம் போல் இருக்கிறது என்று கூறினார். அதில் ஒரு அளவுக்கு உண்மை இருந்தாலும் அதில் ஒன்றும் தவறில்லை. சாப்பிட வந்தவர்கள் உள்ளே வந்து ஒரு புத்தகத்தை வாங்கி படித்தால் கூட அது போதுமானதுதான். ஏனென்றால் ஒரு வாசகன் தனக்கான புத்தகத்தை தவறவிடுவான். ஆனால் ஒரு புத்தகம் தனக்கான வாசகனை எப்போதும் தவறவிடுவதில்லை.

நான் வாங்கிய புத்தகங்கள்

இந்த வருடம் த்ரில்லர் Fantasy வகை புத்தகங்களை படிக்க வேண்டும் என்று நினைத்துகொண்டிருந்தேன். அதற்காக சுதாகரின் 7.8 ஹெர்ட்ஸ், ட்டி. டி. ராமகிருஷ்ணனின் பிரான்ஸிஸ் இட்டிக்கோரா, நாகிப் மாபஸ்'ன் அரேபிய இரவுகளும் பகல்களும்....

தஞ்சை பிரகாஷின் சிறுகதைகளை படித்திருக்கிறேன் அவருடைய நாவல் படித்ததில்லை என்பதால் கள்ளம் வாங்கினேன்.

மகாபாரதம் படிக்க கடந்த சில வருடங்களாகவே ஆவல் இருந்து வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு உபபாண்டவமும் நித்யகன்னியும் வாங்கி படிக்க முயற்சி செய்தேன். ஆனால் இப்புத்தகங்கள் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. ஆதலால் மகாபாரதத்தின் கதை மாந்தர்களை பற்றி ஓரளவுக்கு அறிமுகம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் பிரபஞ்சனின் மகாபாரதம் வாங்கினேன்.

காலச்சுவடின் வெளியீடுகளான ஆதவனின் காகித மலர்கள், அசோகமித்திரனின் மானசரோவர், எஸ். பொன்னுதுரையின் தீ மற்றும் பெருமாள் முருகனின் மாதொருபாகன், ஆலவாயன், அர்த்தநாரி

உயிர்மை பதிப்பகத்தின் எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம், சுப்ரபாரதி மணியனின் நீர்த்துளி, லக்ஷ்மி சரவனகுமாரின் நீலநதி, செல்லமுத்து குப்புசாமியின் இரவல் காதலி

விஜயா பதிப்பகத்தின் எட்டுத்திக்கும் மதயானை, சதுரங்க வேட்டை மற்றும் மிதவை (மூன்று புத்தகங்களின் மொத்த விலையே 300 ரூபாய்தான்)

ஏற்கனவே படிக்க வேண்டும் என்று குறித்து வைத்திருந்த காசியப்பனின் அசடு, கரன் கார்க்கியின் கறுப்பர் நகரம் மற்றும் எஸ்.அர்ஷியாவின் எழரைப் பங்காளி வகையறா

மொழிபெயர்ப்பில் ஆல்பெர் காம்யுவின் அந்நியன், பிரேம்சந்தின் ஒரு நாயின் கதை, செகாவின் ஆறாவது வார்டு , கிராம்ஷியின் சிந்தனை புரட்சி, டோட்டோ -சான் ஜன்னலில் ஒரு சிறுமி மற்றும் யு.ஆர்.ஆனந்தமூர்த்தியின் பிறப்பு.

மேலே செல்க...(go to top)

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </