வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
   
 
  உள்ளடக்கம்
 
அம்மா, உழைப்பதை நிறுத்திக்கொண்டார் - அழகிய பெரியவன்
--------------------------------
கருப்பு பாலைவனம் 7 - எங்க ஊர் வெம்பூர் - கவிஞர் சமயவேல்
--------------------------------
அஞ்சலி: ஜெயகாந்தன் - எம்.டி.முத்துக்குமாரசாமி
--------------------------------
நிமித்தம் - எஸ்.ராமகிருஷ்ணன் - தமிழ்மகன்
--------------------------------
பப்பாசி (BAPASI)அமைப்பின் செயலாளர் திரு. புகழேந்தி அவர்களுடன் ஒரு நேர்காணல் - விக்னேஷ் சேரல்
--------------------------------
பூத்துக் குலுங்கும் பூஜ்ஜியங்கள் - கவிஞர் பச்சோந்தி
--------------------------------
சென்னைப் புத்தகக் கண்காட்சி அரங்கம் வடிவமைப்பு செய்த கே.மாமுண்டி நேர்க்காணல் - விக்னேஷ் சேரல்
--------------------------------
சென்னை புத்தகக்கண்காட்சி - காளிமுத்து
--------------------------------
சென்னை புத்தகக்காட்சி - வாசகர்களின் அனுபவங்கள் - விக்னேஷ் சேரல்
--------------------------------
 
   
 
1
 
 
 
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     





அம்மா, உழைப்பதை நிறுத்திக்கொண்டார்

- அழகிய பெரியவன்


அம்மா திடகாத்திரமாகத்தான் இருந்தார். தொண்ணூற்றாறு வயது , என்னைக்கேட்டால் இந்த வயது கூட அவரைப் பொருத்தமட்டில் சாகிற வயது இல்லை! இரண்டே இரண்டு நாட்கள் முடியவில்லை என்று படுத்தார். திடீரென்று தீவிரமான காய்ச்சலும், சளியால் மூச்சடைப்பும் வந்துவிட்டன. எப்படி வந்தனவென்று தெரியவில்லை.

அம்மா, ஒரு இடத்தில் என்று இருப்பதில்லை. பொருட்களை ஒதுங்கவைப்பது, கட்டைத் துடைப்பத்தை எடுத்துக்கொண்டுப் பெருக்குவது என்று எப்போதும் ஏதாவது வேலையாகவே இருப்பார். இறுதி நாட்களில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது மருத்துவர், தூசு வழியாக வந்த நோய்த்தொற்றாக இருக்கலாம் என்றே சொன்னார். அம்மாவின் வயதையும் உடல் ஆரோக்கியத்தையும் பார்த்த அந்த மருத்துவருக்கு ஆச்சர்யம் தாளவில்லை.

“என் அம்மா இங்கெல்லாம் வரவேண்டிய ஆளே இல்லை. இது நாள் வரை அவர் மருத்துவமனைக்கே போனதில்லை. இப்போது கூட அவர் விருப்பத்துக்கு மாறாகத்தான் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறோம்”

என் வார்த்தைகளை மருத்துவரால் நம்பவே முடியவில்லை. அவருக்கு மட்டும் என்றில்லை. இன்றைய போலி நவீன மனங்களுக்கும் கூட, நான் மருத்துவரிடம் சொன்னதையும், இனிமேல் உங்களிடம் சொல்லப் போவதையும் நம்ப முடியாது.

என் அம்மாவின் இறப்பை இன்னும் என்னால் ஏற்க முடியவில்லை. நேற்று இரவு அவரை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குக் கூட்டி வந்துவிட்டோம். அதிகாலையில் என் அம்மாவின் உயிர் பிரிந்துப் போய்விட்டது.

எங்கு போனாலும் சொல்லிவிட்டுத்தான் போவார். இந்த முறை சொல்லவேயில்லை. உயிர் பிரிவதற்கு முன்னால் என் கைகளை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டிருந்தார். நான், அவரின் கையைப் பிடித்து நடக்கத் தொடங்கிய வயதிலிருந்து என் கையை பத்திரமாகவும், இறுக்கமாகவும் பிடித்துக்கொண்டு, ஆறுதலையும் அன்பையும், நம்பிக்கையையும் , உத்வேகத்தையும், துணிச்சலையும் தந்துக்கொண்டிருந்த என் அம்மாவின் பிடிவானம் அது. இன்று, நான் எதிர்பார்க்காத கணத்தில் ஒரு மெல்லிய கதகதப்பையும், நான் மட்டுமே புரிந்துக்கொள்ளும் படியான ஒரு சொல்லையும் கையளித்து விட்டுப் போய்விட்டது. அந்தத் தருணத்திலிருந்து என் மனம் ஏதோ ஒன்றால் அடைத்துக்கொண்டது. என்னால் அழ முடியவில்லை.

சற்றுத்தொலைவில் கண்ணாடிப்பேழைக்குள், படுத்துக்கொண்டிருக்கும் என் அம்மாவையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன். என் நெஞ்சம் வெடிக்க வேண்டும். என் அம்மாவின் மீது நான் விழுந்து என் சிறுவயது மழலைப் பிதற்றலோடு ஏங்கியேங்கி அழ வேண்டும்.

“ஒரு கெடி நேரமும் என்னைவிட்டுப் பிரியாமலிருந்த அம்மாவே... எங்கே போய்விட்டாய்? சீக்கிரம் வந்துவிடு... உடனே வா...”

அம்மா கடைசி வரையிலும் என்னோடு தான் இருந்தார். அம்மக்களுக்கு மூத்தப் பிள்ளைகளின் மீதும், அப்பாக்களுக்கு கடைக்குட்டிகளின் மீதும் அதிக பாசமிருக்குமென்பார்கள். அதெல்லாம் பொய். இரண்டு மூன்று நாட்களுக்கு அவரைப்பார்க்க முடியாமல் போனால் எனக்குத் தாங்காது. என் அண்ணன் வீட்டிற்கோ, அக்காக்களின் வீட்டிற்கோ போய் இரண்டு நாட்களுக்கு மேல் தங்கிவிட்டும், சந்தர்ப்பங்களில், அம்மாவை அனுப்பி வைக்கச்சொல்லி சண்டை போட்டிருக்கிறேன்.

இப்போது அவரை அனுப்பி வைக்கச் சொல்லி நான் யாரிடம் சண்டை போடுவேன்?

உங்களோடு பேசினால் என் மனம் உடையும் என்று நினைக்கிறேன். அது மட்டுமல்ல தோழர்களே! என் அம்மாவின் வாழ்க்கையை; எங்களின் வாழ்க்கையை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதென் விருப்பம். என் அம்மா இந்த உலகத்துக்கு சொல்லிச்சென்ற சேதி. அதில் ஏதேனும் இருக்கக்கூடும்.

ஒரு நிமிடம் இருங்கள். நகரத்திலிருக்கும் என் பத்திரிகையாள நண்பர்கள் மாலையோடு வந்திருக்கிறார்கள். அவர்களோடு சிறிது நேரம் நின்றுவிட்டு வருகிறேன். செய்தியறிந்து காலையிலிருந்தே நண்பர்களும் உறவினர்களும் வந்துக்கொண்டிருக்கிறார்கள்.

சிறிது நேரத்துக்கு முன்பு தான் மேளக்காரர்கள் வந்து அடிக்கத்தொடங்கினார்கள். என்னமாய் அடிக்கிறார்கள்? இதே வேறு சமயம் என்றால் இந்தத் துள்ளிசையை நான் ரசிப்பேன். இப்போதோ அவ்வொலிகள் முகத்தில் வந்து மோதும் ஒலிச்சருகுகளாக இருக்கின்றன. மனதுக்கு சுரணையில்லாமலாகிவிட்டது. எனக்கு இசை ரசனை அதிகம் என்பது அம்மாவுக்குத் தெரியும் . எழுத்தறிவு பரப்பும் இயக்கமொன்றில் பாடகனாக பல காலம் சுற்றித்திரிந்திருக்கிறேன். நான் ஏதாவது பாடினாலோ, பாடலை ரசித்தாலோ அம்மா சொல்வார்.

“வெத ஒன்னப் போட்டா, சொர ஒன்னா மொளைக்கும்? அவங்கப்பனே அவங்கப்பன்”

அப்பனோடு என்னைச் சம்பந்தப்படுத்தினாலே எனக்கு ஆகாது. நான் சத்தம் போடுவேன். அம்மா அப்போது மவுனமாக இருப்பார். அது எங்களனைவரையும் கொல்லும் கொடூர மவுனம். அந்த மவுனத்துக்குள் தான் எங்கள் கதறலும் என் அம்மாவின் புலம்பலும் உறைந்திருந்தன.

அம்மாவின் பெயர் வைரம். ஊரார் எல்லாம் வைரம்மாள் என்று கூப்பிடுவார்கள். அவருக்கு அப்பெயரை வைத்த தாத்தாவின் தீர்க்கதரிசனத்தை எண்ணி இப்போதும் நான் வியக்கிறேன். திட்டமான உயரம் நல்ல களையான முகம்.

அம்மாவின் தாய்வீடு. அப்படியொன்றும் ஏப்பச்சோப்பையான வீடல்ல. அம்மாவுடன் பிறந்தவர்களின் நான்கு அண்ணன் மார், ஒரு அக்காள். அம்மாவின் ஊர். எங்கள் ஊரிலிருந்து இரண்டு மூன்று மலைகளைத்தாண்டி இருந்தது. மஞ்சுப்புற்களைப் போர்த்தியபடியிருக்கும் சில குன்றுகளையும், காட்டையும் ஒட்டியிருந்த ஊரது. அக்காட்டையும் குன்றுகளையும் தாண்டிப்போனால் ஆந்திர மாநிலம் வந்துவிடும்.

அக்கிராமத்தின் முன்னால் அழகானதோர் ஆறு ஓடியது. கவுண்டன்ய மகாநதி! பாட்டி வீட்டிற்குப் போகும்போதெல்லாம் என் பொழுதுகள் ஆற்றிலேயே தான் கழிந்திருக்கின்றன. காட்டாறு என்றாலும், மழைக்காலங்களுக்குப் பிறகு குறைந்தது ஆறு மாதத்திற்காவது அதில் நீர் ஓடும் நானும் நண்பர்களும் மீன் பிடிப்போம். நீரில்லா காலங்களில் வெண்ணிற மணலில் விளையாடுவோம்.

அம்மாவை சின்ன வயதிலேயே கட்டிக்கொடுத்திருக்கிறார்கள். அப்பனிடம் அப்படி என்ன கண்டார்களோ தெரியவில்லை. அதைப்பற்றிக் கேட்டால், எல்லாம் தாத்தா பாட்டியின் முடிவு என்பார் அம்மா. உலகமறியாத பதினாறு பதினேழு வயதில் திருமணமாகி வந்தது. இருபத்தைந்து, முப்பது வயதுக்குள், வருடத்துக்கு ஒன்று என்று வரிசையாக அம்மா எட்டுப்பிள்ளைகளைப் பெற்றார். நான்கு பிள்ளைகளை நோய்க் கொண்டுப்போனது. கடைசியாக இரண்டு ஆண், இரண்டு பெண்ணென நான்கு பேர் நின்றோம். நான் தான் கடைக்குட்டி.

ஊரில் எங்களுக்கு இரண்டு ஏக்கர் வானம் பார்த்த பூமியிருந்தது. ஊர் நாயுடுக்களின் நிலங்களுக்கு நடுவிலிருந்து பஞ்சமி நிலம் அது. அப்பன் அதில் கடலைக்காயையோ, துவரையையோ, மஞ்சள் சோளத்தையோ பயிரிட்டுக் கொண்டு மேல்வேலைகளைப் பார்த்து வந்தான். அவனுக்கு மேல் வேலையென்றால் கூத்தாடுதல்.

எங்கள் சுற்று வட்டாரத்திலேயே என் அப்பனைப்போல கூத்தாடுவதற்கு ஆள் கிடையாது என்பார்கள். உண்மைதான்! எனக்கு நான்கைந்து வயதிருக்கும்போது என் அப்பன் ஆடிய கூத்தை தூக்கக் கலக்கத்தோடு பார்த்தது மங்கலாக நினைவிலாடுகிறது. அதன் பிறகு அவன் வேசம் கட்டாமல் ஆடிய கூத்தைத்தான் பார்த்தேன்.

எப்போதோ ஒருமுறை நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தபோது, கலைகளைப் பற்றிய பேச்சு வந்தது. ஒருவர் என்னைச் சுட்டிக்காட்டி

“ உங்களின் அப்பாவும் கூட கூத்துக்கலைஞர் தானே?” என்றார்.

“கூத்துக்கலைஞனில்லை கூத்தாடி” என்றேன்.

“சக மனிதன் மீது அன்பில்லாத எவனும் கலைஞனில்லை. அவன் படைப்புகள் எவையும் கலைப்படைப்பாக முடியாது. வன்மமும் , குரூரமும், வேற்றுமை மனமும் கொண்ட ஒருவனிடம் இருக்கும் கலை. அவன் உடலில் வளரும் மயிரைப் போன்றது. எவ்வளவு செழிப்புடன் அது இருந்தாலும் ஒருநாள் உதிர்ந்துவிடும்”

அப்போது நான் சத்தமிட்டதைப் பார்த்து நண்பர்கள் பயந்துப்போனார்கள்.

நகரக்கமிட்டித் தோழர்கள் வந்திருக்கிறார்கள். என்னை தேநீர் குடிக்கும் படி வற்புறுத்துகிறார்கள். நீங்களும் கூட என்னோடு சேர்ந்துக்கொண்டு கொஞ்சம் தேநீர்ப்பருகலாம். தேநீர் பரவாயில்லை! காலையிலேயே ஊரிலிருக்கின்ற என் பாலிய சினேகிதர்கள் என்னை குடிக்க வைக்கப் பார்த்தார்கள். ஊரிலிருந்து ஒரு மைல் தூரத்திலேயே டாஸ்மாக் கடையொன்று இருப்பதால் சீமைச்சாரயம் கிடைப்பது அப்படியொன்றும் கடினமல்ல. ஊர் இளைஞர்களுக்கு குடிக்க வாங்கித்தர வேண்டும் என்று என்னிடம் பணம் எதிர்பார்த்து ஒருவர் என்னிடம் வந்து நின்றிருந்தார். இப்போதெல்லாம் சாவுச்செலவில் சீமைச்சாராயமும் ஒன்றாக இடம் பெற்றுவிட்டது. என் அண்ணன் வந்தால் அதை கேட்டுக்கொள்ளும்படி சொல்லிவிட்டேன். அவனுக்குத்தான் அதில் பழக்கமுண்டு.

பக்கத்தூரில் இருக்கும் அக்கா இரண்டு நாளாய் அம்மாவுடனேயே தான் இருக்கிறார். வெளியூரில் வாழ்ந்துவரும் என் பெரியக்கா., முந்தானையை வாயில் அடைத்து, பீறிட்டு வரும் அழுகையை அடக்கிக்கொண்டு வருகிறார் பாருங்கள். இங்கேயே இருங்கள். நான் அவரோடு போய் நிற்கவேண்டும். அப்போதாவது என் மனம் உடையட்டும்.

எங்கள் வாழ்க்கை, அத்தை எங்களோடு நிரந்தரமாக வந்து தங்கும் வரை, அதன் பாட்டுக்குப் போய்க்கொண்டிருந்தது. எங்கள் அத்தையை பத்து ஊர்த்தாண்டி கட்டிக்கொடுத்திருந்தார்கள். அவளின் நடத்தையில் சந்தேகம் இருந்தாலும் அவளுக்கு குழந்தை இல்லாததாலும் அந்த மாமன் அவளை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பிவிட்டான். பஞ்சாயத்தைக் கூட்டி கணக்குக் கழித்துவிட்டார்கள்.

அப்பன் குடிப்பான், குடியென்றால் சாதாரணக்குடியல்ல. மொடாக்குடி! அவன் கூத்தாடப் போகுமிடங்களில் அவனுக்குப் பல கூத்தியாள்கள். அம்மா அதைச்சொல்லி அவனிடம் கோபமாகப் பேசுவார்.

“வீடுன்னு கவனிக்கறதில்லை. சம்பாதிக்கிற காசெல்லாம் எவளெவளுக்கோ போனா நானும் பிள்ளைகளும் போகும் வழி எப்பிடி? வயித்தில ஈரத்துணியா கட்டிக்கிட்டிருக்கமுடியும்? நான் பரவாயில்ல. உன்னக் கட்டிக்கிட்ட பாவத்துக்கு எப்படியோ போறேன். பாவம் இந்த சின்னஞ்சிறுசுகள் என்ன செஞ்சுது?”

“ எல்லாருமே கூண்டோட சாவுங்கடி, உங்கள தல முளுகுறேன்”

எங்கள் முன்னாலேயே அப்பன் அம்மாவை அடிப்பான். அப்போதெல்லாம் செய்வதறியாது நாங்கள் அழுவோம்.

அத்தை வந்த பிறகு அப்பன் குடிப்பதும், அம்மாவை அடிப்பதும் மேலும் கட்டுக்கடங்காமல் போய்விட்டது. அப்பனுக்கு தன் தங்கை மீது அளவுகடந்த பாசம் இருந்தது. அவள் சொல்வதற்கு மறு பேச்சு கிடையாது. அப்பன் வெளியே போய்விட்டு வருவதற்குள் அத்தை அவனுக்கு மொந்தை நிறைய சாராயத்தை வாங்கிக்கொண்டுவந்து வைத்துவிட்டு, மாட்டுக்கறி பிரட்டி வைத்திருப்பாள்.

அப்பனுக்கு போதை ஏறியதும் அம்மாவோடு சண்டை தொடங்கிவிடும், வெறிகொண்டு அடிப்பான். அம்மா அடி பொறுக்காமல் எங்கள் வீட்டைச்சுற்றிச்சுற்றி வருவார். நாங்கள் மரண ஓலமிடுவோம். குடித்துவிட்டால் அப்பன் பெரும் மூர்க்கன் என்பதால் யாருமே எங்கள் அம்மாவை காப்பாற்ற வரமாட்டார்கள். எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலேயே தானென் சித்தப்பனின் வீடும் இருந்தது. அவன் என் அம்மாவைக் காப்பாற்ற ஒரு நாளும் வந்ததேயிலை. தன் அண்ணனையும் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்டதில்லை.

அம்மா நியாயக்காரர். வாழாமல் இங்கே வந்த பிறகும் அத்தை அதே நடத்தையோடு இருந்தது அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. அப்பன் காலையில் வீட்டைவிட்டு வெளியே போனதும் அத்தை காணமல் போய்விடுவாள். சாயங்காலம் அப்பன் வருவதற்கு கொஞ்சம் முன்பாகத்தான் வருவாள்.

எங்கே இவ்வளவு நேரம் என்று ஒரு நாள் அம்மா கேட்டதற்கு அம்மாவிடம் சண்டைப் பிடித்தாள் அத்தை. அது நல்ல பகல் நேரம். அத்தைக்கு ஆதரவாக இரண்டு தெரு தள்ளியிருந்த ஒருவனும் அம்மாவிடம் சண்டைக்கு வந்தான். அது ஏன் என்று சில காலம் கழித்துதான் எனக்குப் புரிந்தது.

ஒரு இரவை மட்டும் என் ஆயுள் முழுக்க மறக்க முடியாது. அந்த மாலை மிகவும் வெளுத்திருந்தது. சூரியன் அடங்கியும் இருள் வராமல் பொழுது குழம்பியது. வெயில்போதைத் தலைக்கேறி சிவந்த விழிகளோடு முறைத்துப் பார்த்தது வானம். நான் வயதொத்த சினேகிதக்காரர்களோடு வீட்டெதிரிலிருக்கும் ஊர் மந்தையில் விளையாடிக்கொண்டிருந்தேன்.

மந்தையில் உயருயரமாக இரண்டு புளிய மரங்களுண்டு. சில இடங்களில் தரையோடு தரையாக பாறைகளிருக்கும். அப்பாறைகள் ஊரார் நடந்து நடந்து மொழு மொழுவென இருந்தன. அங்கு விளையாடும் போது கவனமாக இருக்கச்சொல்லி அம்மா சொன்னது நினைவில் வந்தபடியிருந்தது.

விளையாட்டின் நடுவில் ஒருவன், “டேய் கர்ணா, உங்கப்பா போறார்டா” என்றான். நான் பயந்து ஒடுங்கிக்கொண்டேன். விளையாட்டிலிருந்து கவனம் சிதறிவிட்டது. திடீரென்று எங்களின் மேல் இருள் கவிந்தது. ஊரிலுள்ள வீடுகளில் விளக்கேற்றிவிட்டார்கள். அந்த மண்ணெண்ணெய் குடுக்கு விளக்குகள் இருட்டில் ஒளிரும் விலங்கின் கண்களாய் எங்களைப்பார்த்தன. சினேகிதக்காரர்கள் கலைந்து அவரவர் வீடுகளுக்குச் சென்றோம்.

நான் மெல்லிய பயத்தோடு வீட்டை நோக்கிப் போனேன். என் கண்கள் அம்மாவைத் தேடின. கசாய்க் கடையில் கழுத்தறுபட்டுச் செத்து விழுந்த மாடு மரண வலியில் கேவுவதைப் போல வீட்டுக்குள்ளிருந்து கேட்டது. நடுக்கத்தோடு வீட்டுக்குள் நுழைந்தேன். அத்தை கதவுக்குக் குறுக்காக நின்றுக்கொண்டிருந்தாள். நான் அவளை உரசாமல், சுவரோடு ஒட்டிக்கொண்டு குறிப்பாய் உள்ளே பார்த்தேன்.

அப்பன், அம்மாவின் தலையைப் பிடித்து நடுவீட்டில் புதைந்திருக்கும் உரலில் மூர்க்கமாய் இடித்துக்கொண்டிருந்தான். கத்தமுடியாதபடி வாய்க்கட்டப்பட்டிருந்த அம்மாவின் மரணக்கேவல் உலுக்கியது. அப்பனின் இரும்புப் பிடியில் சிக்கிக்கொண்டிருக்கும் அம்மாவின் தலை மோதி எழும் இடைவெளியில் உரல் ரத்தத்தால் நிறைந்திருப்பதைப் பார்த்தேன். வீட்டுக்குள் எரிந்துக்கொண்டிருந்த சிறிய புட்டிவிளக்கின் வெளிர் மஞ்சள் வெளிச்சம். உரல் முழுக்க ரத்தம், தலைவிரிகோலத்தோடு, வாய்க்கட்டப்பட்டு, கண்கள் பிதுங்கிட கேவும் அம்மா. அவர் முகத்தில் வழிந்து ஒழுகும் ரத்தம், பீதியில் சிறுநீர் கழித்தபடி ஓலமிட்டுக்கொண்டு மந்தைக்காய் ஓடினேன். என் ஓலத்தில் ஊர் அதிர்ந்தது.

எனக்கு நடுக்கமாய் இருக்கிறது. கொஞ்சநேரம் நான் மெளனமாய் இருக்கவேண்டும். இப்போது நான் சொன்ன அக்காட்சி என்னை துரத்திக்கொண்டேயிருக்கும் காட்சி. அச்சம்பவத்துக்குப் பிறகு நான் தூக்கத்தில் அலறினேன். படுக்கையில் சிறுநீர்கழித்தேன். காரணமின்றி நடுங்கினேன். பல வருடங்களுக்கு இச்சிக்கல் நீடித்தது.

அதோ வருகிறான் பாருங்கள் என் அண்ணன். வெளியூரிலிருந்து செய்தியறிந்து இப்போதுதான் வருகிறான். அவனை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள். அவனைப்பற்றி பகிர சில விசயங்கள் இருக்கின்றன.

அம்மா என்னை சாமி என்றுதான் கொஞ்சுவார். அவரைப் பொறுத்தமட்டில் அவரின் உயிரைக்காத்த சாமி நான் தான் என்று நம்பிக்கை . நான் ஓலமிட்டுக்கொண்டு ஓடியதைப் பார்த்த ஊர் மக்கள் சிலர் வீட்டுக்கு ஓடிப்போய் அம்மாவைக் காப்பாற்றிவிட்டனர். தலையில் கட்டுடன் கொஞ்சக் காலத்துக்கு அம்மா இருந்தார்.

ஊரே அப்பனைத்திட்டியது. அதற்குப் பிறகும் அப்பனின் போக்கில் மாற்றமில்லை. அத்தை அவனை எப்போதும் குடியிலேயே வைத்திருந்தாள். அவள் சில திட்டங்களை வைத்திருந்திருக்கிறாள். அம்மாவை அவற்றுக்கு இடையூறாக நினைத்திருக்கிறாள். அப்பன் அவளுக்கு ஓர் அருமையான கருவியாகிவிட்டான்.

அத்தை தன் அண்ணன் தம்பிகளை எப்போதும் தன் சொல்படியே வைத்திருந்தாள். அவள் அவர்களைக்கொண்டு தன் ஆட்டத்தை திட்டமிட்டாள். அவள் அடங்கிப்போகவில்லை. தன்னுடைய திட்டத்தின் உச்சத்துக்குப் போனாள். அத்திட்டம் என்னவென்பது சில நாட்களிலேயே எங்களுக்கு தெரிந்துவிட்டது. அது எங்கள் அம்மாவைக் கொல்வது.

ஒரு நாள் அதிகாலையிலேயே அம்மாவை தனபால் மாமா வந்துக் கூப்பிட்டார். அவர் என் அம்மாவின் ஊர்க்காரர். அம்மாவுக்கு அண்ணன் உறவு. தன் ஊரை விட்டு மனையின் ஊருக்கே வாழ வந்துவிட்டவர். அம்மா கலக்கத்தோடு எழுந்து வெளியே வந்தார். நான் அவரின் புடவையைப்பிடித்துக்கொண்டே வந்தேன். தன் தாய் ஊரில் ஏதாவது சாவு செய்தியோ என அம்மா நினைத்திருக்கக் கூடும். ஆனால் அவர் நடுங்கும்படியான செய்தியிருந்தது. தனபால் மாமா பதற்றத்தோடு சொன்னார்.

“எம்மா தாயி. உன் நாத்தனாக்காரி உன்ன பொளைக்க உடமாட்டான்னுதான் நெனைச்சேன். அவங்க பேசிக்கிறதப்பாத்தா உன்ன உசுரோடவே உடமாட்டாங்கப் போலருக்குது. ராத்திரி ஒன்னுக்குக்கு ஊட்டு சந்துப்பக்கமா வந்தப்போ அவங்க பேசிக்கிறதெக் கேட்டேன். இன்னிக்கிக் காத்தால உன்ன சண்டை வாங்கி. தல மேலயே அம்மிக்கல்லைப் போட்டுடலாம்னு பேசிக்கினாங்கம்மா. உன் நாத்தனாக்காரி ஒரு ராக்காசி. உங்குடிகாரப் புருசன ஏவிவிட்டு அப்பிடி செஞ்சாலும் செஞ்சிடுவா. நீ உம் புள்ளைங்களெக் கூப்டுக்குனு நம்மூருக்கு போயிடு. இப்பவே பெறப்புடு தாயீ. நாஞ்சொல்றதக் கேளு”

அம்மா மிரட்சியோடு என்னைப்பார்த்து, இறுக்கமாக கட்டிக்கொண்டார். அவரின் வெம்மையான கண்ணீர் என் முகத்தைச் சுட்டது. ஒரு கணம் தான். கண்ணீரைத் துடைத்துக்கொண்டு விடுவிடுவென வீட்டுக்குள் போனார். தூங்கிக்கொண்டிருந்த என் அண்ணனையும் இரு அக்காக்களையும் எழுப்பினார்.

”பாட்டி ஊருக்குப்போலாம். கிளம்புங்க”

என் அண்ணன் எங்களோடு வருவதற்கு மறுத்துவிட்டான். அம்மா எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவேயில்லை

“நான் இங்கியே அத்திக்கூடவே இருக்கிறேன்”

எங்கள் மூன்று பேரை மட்டும் கூட்டிக்கொண்டு கிளம்பினார் அம்மா. கையில் எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. உயிர் பிழைத்தால் போதும். எங்கள் தெருவின் மேற்கே வரும் நிலத்தில் இறங்கிநடந்தோம். அது குளிருக்குப் பிந்தைய காலம். அதிகாலை இலேசாகக் குளிரைத்தந்தது. நன்றாக விடிந்து எதிரிலிருப்பவரின்முகம் தெரியும் படியாக வெளுத்திருந்தது. நான் அம்மாவின் கையை இறுக்கமாகப் பற்றியிருந்தேன். மடமடவென நடந்தார் அம்மா.

என் பாட்டி ஊருக்கு பத்து மைல்களுக்கும் மேல் நடக்கவேண்டும். வழி நெடுகிலும் செம்மண் பொட்டல். ஆவாரைச் செடிகளும் பனை மரங்களும் நிறைந்த மலைப்பாதை. ஆனால் இப்போது பாதை ஒரு பொருட்டில்லை.

கால் பாகம் தொலைவு போயிருப்போம். அப்பனின் கூச்சல் கேட்டது.

“எங்கடி திருட்டுத்தனமா ஓட்ற? இத்தினிக்காத்தால எவன் உன்ன வரச்சொன்னான்?”

எங்களை மடக்கினான் அப்பன்.

“இப்பிடியே ஊட்டுக்கு நடபேசிக்கலாம்”

“இனிமே உங்கூட வாள மாட்டேன். நானும் எம்புள்ளைங்களும் எங்கம்மா ஊருக்குப் போயி பொளச்சிக்கிறோம்.”

“உன்ன அவ்ளோ சுலபமா போக உடமாட்டண்டி இப்பிடியே ஊட்டுக்குத் திரும்பி நட”

அம்மாவும் அப்பனும் பேசிக்கொண்டிருக்கும் போதே தனபால் மாமா அங்கே வந்து சேர்ந்துவிட்டார்.

“ஆறுமுகம், எந்தங்கச்சிக்கூட வாளக்கூடாதுன்னு முடிவு பண்ணீட்ட பொறவு அதெ உயிர் வாங்காம உட்டுடு. அது தம்புள்ளைங்களோட எங்கியோ போயி பொளச்சிக்கிட்டும். நீயும் உந்தங்கச்சியும், தம்பியும் ரவு பேசிட்டிருந்ததெ நான் கேட்டேன்”.

அப்பன் அந்த மாமாவை அசிங்கமாகத் திட்டிக்கொண்டே அடிக்கப்போனான். தனபால் மாமா அப்பனை இறுக்கமாக பிடித்துக்கொண்டு எங்களைப் பார்த்துக் கத்தினார்.

“ ஓடிடுங்க... பின்னாடி இவந்தங்கச்சிக்காரி வந்துனுக்கீறா”

அம்மா, என்னை ஒரு கையில் தூக்கிக்கொண்டும், இன்னொரு கையில் அக்காக்களைப் பிடித்துக்கொண்டும் புழுதிக்காட்டில் ஓடத்தொடங்கினார். இளங்காலை வெயில் அச்சொன்றில் காட்டு வழியில் விழுந்து கண்களைக் கூசச்செய்தது.

பாடை கட்டுவது பற்றியும், புதைக்குழி எந்த இடத்தில் அமையவேண்டும் என்பதைப்பற்றியும் என்னிடம் பேச வந்திருக்கிறார்கள். அதையெல்லாம் என் அண்ணன் பார்த்துக்கொள்வான் என்றாலும் அம்மாவைப் புதைக்க வேண்டிய இடத்தை நான் தான் சொல்லவேண்டும். இருங்கள் என் அண்ணனோடு பேசிவிட்டு வந்துவிடுகிறேன்.

பாட்டி ஊர் வரும் வரை நாங்கள் திரும்பிப் பார்க்கவோ. ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவோ இல்லை. அம்மா மட்டும் எங்களை தைரியப்படுத்தும் விதமாக, “இதோ ஊர் வந்துடுச்சி.. இன்னும் கொஞ்ச தொலைவு தான்” என்று பலவாறாகச் சொல்லிக்கொண்டே வந்தார். அம்மாவின் உருக்கமான அந்தச் சொற்களைக் கேட்டு நிலம் சுருங்கியதோ என்னவோ, பாட்டி ஊர் வந்தேவிட்டது.
நாங்கள் நால்வரும் கவுண்டன்ய மகாநதியின் முன்பு நின்றோம். எதிர் கரையில் எங்களின் அடைக்கலமும் கோட்டையுமான ஊர் வாழ்ந்துவிட வேண்டும் என்ற ஆசையும் நைந்துப்போன உயிரையும் மட்டுமே கொண்ட நாங்கள் இடையில் ஓடும் ஆறு.

கானலையும், பொசுக்கும் வெக்கையையும், சுழன்றடிக்கும் புழுதிக்காற்றையுமே பார்த்துவிட்டு வந்த அம்மாவை இந்த நீர்மை என்ன செய்துவிடும்? அவர் புனலாடிய நீர்மை. அழுகையும் பற்கடிப்பும் நிறைந்த ஓர் ஊருக்கு. வலுக்கட்டாயமாய் அவர் அனுப்பப்படும் வரை குளுமையாய் அவரைத்தழுவியிருந்த மண்கரம்.

எதையும் யோசிக்கவில்லை அம்மா. அவர் முகம் தெளிந்திருந்தது. என்னைத்தூக்கி தோள்மேல் வைத்துக்கொண்டார். இரண்டு அக்காக்களையும் இடுப்பில் ஆளுக்கொரு பக்கமாக வைத்துக்கொண்டார். முட்டியளவு நீர் ஓடிக்கொண்டிருந்த ஆற்றில் இறங்கி நடந்தார்.

பெரும் நம்பிக்கையோடு நாங்கள் எங்கள் மாமன்களின் முன்பாக நின்றோம். நாற்றிசையிலிருந்தும் வரும் துன்பங்களை நான்கு அண்ணன்களும் ஒரு கணத்தில் துவம்சம் செய்துவிடுவார்கள் என்று அம்மா ஒருவேளை அப்போது நம்பியிருக்கலாம். பாவம் அம்மா!

“ஆயிரம் தான் இருந்தாலும் நீ ஊட்ட உட்டு வந்தது தப்பு எம்மா”

“செரி ரெண்டுநாள் ஊட்டுல இரு. மாப்பிள்ளெய வரச்சொல்லி பேசி அனுப்புறோம்”

“இப்பிடியே புள்ளைங்களெ தூக்கிக்கினு நட. போலீசுல சொல்லலாம். அவங்க கேட்டாத்தான் அந்த ஆளு செரிப்படுவாப்பில”

ஆளுக்கொருவராகப் பேசிக்கொண்டிருக்கும் அண்ணன்மார்களை மெளனமாகப் பார்த்துக்கொண்டிருந்த அம்மா. கடைசி அண்ணன் சொன்ன சொல் கேட்டு உறைந்தே போனார்.

“நீ மட்டும் வந்திருந்தா., ஏதோ கூளோ தண்ணியோ ஊத்தி பாத்திருப்போம். நீ புள்ளக்குட்டியோடில்ல வந்துக்கீற? வளியில எத்தினி கெணங்கீது? அவம் பெத்ததுங்கள அந்தக்கெணத்துல தள்ளிட்டு வர்றதில்ல? எங்களுக்கும் புள்ளக்குட்டிங்கக்கீது, பொளப்பிருப்புக்கீதில்ல?”

“இதுக்கு, என்னைய கொல்ல வந்தாம்பாரு அவனே மேலு. என்ன போலீசுக்கும் கூட்டிப்போகவேணா, ஒருவாய் கஞ்சும் ஊத்தவேணா, நானும் எங்கப்பனுக்குத்தானே பொறந்தேன்? அவன் எடத்துல நா வாழ ஒரு எடங்குடுங்க. நானும் எம் புள்ளைங்களும் பொளச்சிக்கிறோம். அப்புறம் நானும் என் புள்ளைங்களும் உங்க ஊட்டு வாசப்படிக்கு வந்தா யாவந்தேன்னு கேட்டு செருப்பாலடிங்க”

மாமன்கள் நாங்கள் வாழ்வதற்கு ஒரு குட்டிச்சுவரைக் காட்டினார்கள். அதற்குக் கூரை கூட இல்லை. அம்மா ஏதும் பேசவில்லை. எங்களை வைத்துக்கொண்டு அவ்வீட்டிற்கு முன்னால் இடிந்துப்போய் உட்கார்ந்திருந்தார். நீண்ட தூரம் நடந்த களைப்பில் நாய்க்குட்டிகளைப்போல நாங்கள் சொடங்கியிருந்தோம்.

சிறிது நேரத்துக்குப்பிறகு, அக்காக்களை அங்கேயே இருக்கச்சொல்லிவிட்டு, என்னை மட்டும் இடுப்பில் தூக்கிக்கொண்டு தன் சினேகிதியைப் பார்க்கப்போனார் அம்மா. அம்மாவின் சினேகிதி தாமரை, சாராயம் விற்பவர் என்பதையும், அவரின் உறவுக்காரர்களில் சிலர் நகராட்சியில் துப்புரவுப் பணியை செய்து வந்தனர் என்பதையும் பிறகு நான் அறிந்துக்கொண்டேன். அவரின் வீடு ஒரு தெரு தள்ளியிருந்தது.

தாமரையம்மா எங்களைப் பார்த்ததும் மாய்ந்துப்போனார். அம்மா அவரைப் பிடித்துக்கொண்டு கதறுவதை மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

“எதுக்கு அழற வைரம்? என்ன உங்கூடப் பொறந்தவளா நெனச்சிக்க. யாரும் யார நம்பியும் பொறக்கல. உனுக்கு என்னா கொற? சவரமாட்டம் புள்ளைங்க. அதுங்கள வளத்துட்டியானாவே போதும். நீ ராசாத்தி. மொதல்லப்போயி புள்ளைங்களுக்கு வயித்துக்கு எதானா ஆக்கிப்போடு”

தாமரையம்மா என் அம்மாவின் மடி நிறைய அரிசியையும், ஒரு குத்துப்புளியையும் , ஒரு குத்து மிளகாயையும் கொண்டுவந்துப் போட்டார். ஒரு அடுப்பையும், விறகுகளையும், பாத்திரங்கள் சிலவற்றையும் எடுத்துக்கொண்டு எங்களோடு வந்தார். கொஞ்ச நேரத்திலேயே சுடச்சுட புளியூறுகாயுடன் புது நெல் சோற்று உருண்டைகளை நாங்கள் வயிறாரத்தின்றோம்.

அன்றையப் பொழுது அமர்வதற்கு முன்பாகவே எங்கள் வீட்டுக்கூரைக்கு ஓலை வேய்ந்துத் தந்துவிட்டார் தாமரையம்மா. எங்கள் வாழ்க்கை அங்கே நிலை கொண்டுவிட்டது.

வன்மம் நிறைந்த மனிதர்களையே பார்த்திருந்த நான். அங்கே சில ஈரமான மனிதர்களையும் பார்த்தேன். அம்மா எப்படியோ என்னை நான் படித்துக்கொண்டிருந்த மூன்றாம் வகுப்பிலேயே அந்த ஊர்ப்பள்ளியில் சேர்த்துவிட்டார். என் அக்காக்களும் அவ்வாறே சேர்ந்தனர். எனக்கு புது நண்பர்கள் கிடைத்தனர். என் அண்ணன் எங்களோடு வந்து பிற்பாடு தங்கினாலும் இந்த ஊருக்கும் அந்த ஊருக்குமாகப் போய்வந்தபடி இருந்தான். அப்பன் ஒரு நாளும் எங்களை வந்து பார்க்கவேயில்லை. எனக்கு அவன் முகமே மறந்துப்போனது. எக்காரணத்தைக்கொண்டும் மாமன் வீடுகளுக்குப் போகக்கூடாது என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டார் அம்மா. எங்கள் ஊர் இருந்த திசையைக்கூட நாங்கள் அதன் பிறகு திரும்பிப்பார்க்கவில்லை.

அந்த நாட்களில் அம்மா எங்களை வளர்த்த விதத்தை நினைக்கிற போது
.........................................................……….கலங்குகிறது.
என்ன, ரொம்பவும் அழுதுவிட்டேனா? அது போதாது. என் உயிர் சுண்டிப்போகிற மட்டும் நான் என் அம்மாவுக்காக அழவேண்டும்.

அம்மாவின் இடுப்பில் எப்போதும் கரிக்கரிவாள் இருந்துக்கொண்டேயிருக்கும். எங்கே அறுப்பறுக்கிறார்கள். நடவு எங்கே நடக்கிறது. எங்கே போர் உதிர்க்கப் போக வேண்டுமென்று அலைவார். நீங்கள் என் வீட்டுக்கு வருவீர்களேயானால் இரண்டு மொந்தைகளை என்னால் உங்களுக்கு காட்ட முடியும். அவை எங்களம்மா எங்களின் மீது பொழிந்த அன்பின் வடிவங்கள். அவர் உழைத்த உழைப்பை சொல்லிக்கொண்டிருக்கும் நினைவுச்சின்னங்கள்.

கூலி நாழிக்குப் போகும் போதெல்லாம் இரண்டு மொந்தைகளைத் தன்னோடு கொண்டுப்போவார் அம்மா. அவருக்கு ஊற்றும் கூழையோ களியையோ அவற்றில் வாங்கிக்கொண்டு, நிலத்துக்காரரிடம் கொஞ்சம் அவகாசம் கேட்டு விட்டு, எங்களைப் பார்க்க ஓடிவருவார். எங்களைப் பசியாற்றி பள்ளிக்கு போகவைத்துவிட்டு திரும்பவும் வேலைக்கு ஓடுவார். எந்தச் சூழ்நிலையிலும் அம்மா எங்களைப் பள்ளியை விட்டு நிறுத்தியதேயில்லை.

இதை அறிந்துக்கொண்ட நிலத்துக்காரர்கள் அம்மாவுக்கு மட்டும் இரண்டு மூன்று களியுருண்டைகளைத் தருவார்களாம். எங்கள் பக்கங்களில் அதிகமாக நிலம் வைத்திருப்பவர்களென்றால் நாயுடுக்களும், ரெட்டிக்களும் தான். அவர்கள் நிலங்களுக்கு அறுப்பறுக்கப்போனால் அம்மாவுக்கு மட்டும் நான்கைந்துப் படிகள் அதிகமாக கூலி நெல்லைப்போடுவார்களாம். அம்மா என்னிடம் சொல்வதுண்டு. பெரும்பாலும் எங்களுக்கு அம்மா வேலை வைத்ததேயில்லை. அரிதாக சில நேரங்களில் அம்மாவுடன் அறுப்பறுத்த வயல்களில் நெல் சாற போயிருக்கிறேன். அந்த நிலத்துக்காரர்கள் அம்மாவைப் பார்த்தால் ஒன்றும் சொல்லமாட்டார்கள்.

கொஞ்சம் காத்திருங்கள், என் அம்மாவுக்கு அஞ்சலி செலுத்த நகரத்திலிருந்து மாவட்டக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் வந்திருக்கிறார். அவரால் எனக்கு ஒரு காரியமாகவேண்டியுள்ளது. இங்கிருக்கிற சிலரோடு அவரைப்பேச வைக்கவேண்டும்.

மழைக்காலத்துக்குப் பின் ஆர்ப்பாட்டமின்றி தன் போக்கில் ஓடும் கவுண்டன்ய மகாநதியின் ஓட்டத்தைப் போல போய்க்கொண்டிருந்த எங்கள் வாழ்க்கையின் ஓட்டம் ஒருநாள் திடீரென்று தடைப்பட்டு நின்றது.

என் அப்பனின் உயிர் இழுத்துக் கொண்டிருப்பதாக சேதி வந்தது. அவன் எங்கள் முகத்தைப் பார்க்க விரும்புவதாக சேதி சொல்ல வந்தவன் சொன்னான். அம்மாவுக்குப் போக மனமில்லை. எங்களுக்கும்தான். தாமரையம்மா தான் அம்மாவிடம் என்னென்னவோ சொல்லி ஏற்றுக்கொள்ளச்செய்து அனுப்பினார்.

அழுகையோடு அவ்வூரையும்,தாமரையம்மாவையும், என் சினேகிதர்களையும் பிரிந்தேன். அவ்வூரிலிருந்த என் வாழ்க்கையை உங்களுக்கு நான் இன்னொரு தருணத்தில் தான் சொல்லவேண்டும். சொல்வதற்கு அவ்வளவு இருக்கின்றன.

இங்கு ஊரே கொஞ்சம் மாறிவிட்டிருந்தது. இங்கிருந்த என் சினேகிதர்களைப் பார்த்தபோது தான் நான் வளர்ந்துவிட்டிருக்கிறேன் என்பது புரிந்தது. ஆமாம், நாங்கள் எங்கள் பாட்டி ஊரில் எட்டாண்டுகளைக் கழித்துவிட்டிருந்தோம்.

நல்ல வேளையாக நாங்கள் வருவதற்குள் அப்பன் உயிரை விட்டிருந்தான். அம்மா அழுதார். ஆனால் நிச்சயமாக தன் கணவனுக்காக அவர் அழுதிருக்க மாட்டார். என்றே நான் நம்புகிறேன். ஒருவேளை, தன்வாழ்க்கையை எண்ணி அழுதிருக்கக்கூடும். நான் துளியும் அழவில்லை. நாங்கள் அவனின் பிணத்தை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தோம்.

அப்பன் செத்தும் கொடுமை விடவில்லை. அவனுக்காக சடங்குகளைச் செய்வதற்கு அம்மாவை அத்தை விடவில்லை.

“நீ இவ்ளோ நாளா எவங்கூடப் போய் வாழ்ந்துட்டு வந்தெ?”

அவள் சிக்கலை பெரிதாக்க எண்ணினாள். அவளுக்கு ஆதரவாக இரண்டு தெரு தள்ளியிருக்கும் அந்த ஆளின் குடும்பத்தார் வந்தனர். அம்மாவுக்கு ஊர்க்காரர்கள் சிலர் உதவ வந்தனர். ஒரு வழியாய் சாவுச்சிக்கல் முடிவுக்கு வந்தது.

ஆனால், எங்கள் வாழ்க்கை தான் ஆடிப்போய்விட்டது. நான் பாட்டி ஊரிலிருந்த வாழ்க்கையை பிடுங்கிக்கொண்டு வந்து அப்படியே இங்கு நடவேண்டும். நாங்கள் மீண்டும் பள்ளிக்குப் போகவேண்டும். எங்களுக்கு ஒரு வீடு வேண்டும். அம்மாவுக்கு மீண்டும் வேலை வேண்டும். எப்படியோ எல்லாம் நடந்தேறின. நாங்கள் இந்த ஊர் பள்ளியில் மீண்டும் சேர்ந்தோம். எங்கள் அப்பன் பாகத்தில் நல்ல நிலையில் இருந்த இரண்டு ஓலைவீடுகளை என் சித்தப்பனும் , அத்தையும் எடுத்துக்கொண்டு, மாட்டுக்கொட்டகைப் போலிருந்த ஒரு குடிசையை எங்களுக்குத் தந்தனர்.

மூன்று மாதம் வரைக்கும் அம்மா வெளியே உலவக்கூடாது என்பதால் வீட்டிலேயே முடங்கியிருந்தார். அவரின் முகம் முழுவதும் மஞ்சள் பூசி, தலை நிறைய பூ வைத்து விட்டிருப்பார்கள். இந்தச் சடங்குகளை நினைக்க நினைக்க எனக்கு ஆத்திரமாக வரும்.

”ஆண்களுக்கு அவன் மனைவி செத்துவிட்டால் இப்படியான சடங்குகள் ஏதேனும் உண்டா? எழுந்து வெளியே வா அம்மா”

அம்மா வெளியே வரவில்லை. கூட்டுப்புழுவைப்போல குடிசைக்குள் இருந்தார். அவருக்குள் அப்போது இன்னொரு புது வாழ்க்கையை எதிர்க்கொள்வதற்கான உருமாற்றம் நடந்துக் கொண்டிருந்ததோ என்னவோ? எல்லாவற்றையும் உதறிப்போட்டுவிட்டு வெளியே வருவதன் மூலம் எழும் இன்னொரு சிக்கலை தவிர்க்கலாம் என்றும் அவர் நினைத்திருக்கலாம்.

எங்களுக்கு சோறு தருவதற்கு ஆளில்லை. நான், பள்ளியில் போடும் மத்தியானச் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வருவேன். என் நிலையைப் புரிந்துக் கொண்ட பொறுப்பு வாத்தியார். எல்லா பிள்ளைகளுக்கும் சாப்பாடு போட்டான பிறகு என்னை அழைத்துத் தட்டு நிறைய போட்டுத்தருவார். வீட்டுக்குக் கொண்டு வந்து நானும் அம்மாவும் அதைச்சாப்பிடுவோம். இப்படியே பசியும் பட்டினியுமாக மூன்று மாதங்கள் கடந்து போயின.

அம்மா எழுந்துக்கொண்டார். மீண்டும் அதே உழைப்பு. அண்ணனும் அக்காக்களும் படித்துக்கொண்டே போனார்கள். நானோ பன்னிரெண்டாவதோடு நின்றுவிட்டேன். எல்லாம் அம்மா எனக்குக் கொடுத்த செல்லம். நான் படிக்காமல் விட்டது அவருக்கு பெரும் கவலை. நானும் என்னை நிலை நிறுத்துக்கொள்ள எதையெதையோ செய்தேன். கடைசியில் ஒரு தினசரி பத்திரிகைக்கு உள்ளூர்ச்செய்தியாளராக ஆனேன்.

நான் இப்போது செய்வது எளிய வேலைதான். ஆனால் அதிகாரம் மிக்கது. அதிகாரிகளின் தொடர்பை பயன்படுத்தி, நொடிந்துப் போயிருந்த தாமரையம்மாவுக்கு முதியோர் ஓய்வூதியம் வாங்கித்தந்தேன். எங்களுக்கென்றிருந்த நிலத்தை அத்தை எங்களுக்குத் தரவில்லை. அவளின் அண்ணன் அதை அவள் பேருக்கு எழுதித் தந்துவிட்டதாகச் சொல்லித்திரிந்தான். நான் அரசு ஆவணங்களைத் தேடிய போது என் அத்தை சொல்வது பொய் எனத்தெரியவந்தது. அவளின் ஆவணங்கள் பொய்யானவை என்பதை சட்டப்படி நிரூபித்து நிலத்தை மீட்டேன். எங்கள் வீட்டை ஆக்கிரமித்திருந்த சித்தப்பனையும், அத்தையையும் அடித்துத்துரத்தினேன்.

நான் எதற்கும் பயப்படுவதில்லை. இதுவரையும் என்னைக் காத்து வருவது என் அம்மாவின் சொற்கள்தான். நான் வெளியே போகும்போதெல்லாம் அம்மா சொல்லியனுப்புவார்.

“உன் அப்பனைப்போல இருந்துவிடாதே, பெண்களின் கண்ணீரைச் சிந்தச்செய்கிறவன் மனிதனேயில்லை”

ஒரு நாள் நான் காதலித்த பெண்ணை அழைத்துக்கொண்டுபோய் அவர் முன்னால் நின்றேன். அம்மா மனதார ஏற்றுக்கொண்டார். நான் வெளியே போகும்போது அம்மாவிடம் மட்டுமே சொல்லிவிட்டுப் போவேன். அதை மாற்றினார். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் என் மனைவியை நான் அடிக்கப்போனதைப் பார்த்துவிட்ட அம்மா, என்னுடன் சில நாட்களுக்கு பேசாமலேயே இருந்தார்.

அவர் அப்படியிருந்ததை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இனி அவ்வாறு செய்யமாட்டேன் என உறுதி தந்த பிறகு தான் பேசினார். வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நேர்மையாய் இருக்கும் படியும், கடுமையாய் உழைக்கும் படியும் சொல்லிக்கொண்டேயிருப்பார். கிராமத்தில் குடும்பங்களில் சண்டை வந்தால் அவர்களுக்கு அம்மா புத்தி சொல்வார். அவர் பேரப்பிள்ளைகளோடு மகிழ்ச்சியாய் இருக்கும் தருணங்களில் கேட்டிருக்கிறேன்.

“எப்படி அம்மா இவ்வளவு கொடுமைகளையும் சகித்தாய்?”

“எல்லாம் உங்களுக்காக”

பாடைக்கட்டி முடிந்துவிட்டதாம். தாய் வீட்டுக்கோடி எடுத்துவந்துவிட்டால் எல்லாம் முடிந்தது என்கிறார்கள். என் மாமன் வீட்டார் தான் கோடித்துணி எடுத்து வருவார்கள். என் மாமன்மார்கள் எல்லாருமே எப்போதோ போய்ச்சேர்ந்துவிட்டார்கள். நான் அவர்களில் ஒருவர் மரணத்துக்கும் போகவில்லை. அம்மா மட்டும் “பொறந்த ரொணம்” என்று சொல்லி போய்வந்தார்.

எனக்கு அவர்கள் கோடியெடுத்து வருவதைப் பார்க்கப்பிடிக்கவில்லை. வாழும்போது உதவாமல் செத்தபிறகு சடங்கெதற்கு? வாருங்கள். அந்தப்பக்கமாகப் போகலாம். இதை விட முக்கியமானதொரு வேலை இருக்கிறது. எங்கள் ஊர் நாட்டாண்மையிடமும், என் அண்ணனிடமும் நான் பேசவேண்டும்.

நான் சொல்லியனுப்பியதைக் கேட்டு இதோ அவர்களே வருகிறார்கள்.

“எடுக்கிற நேரத்துல உந்து என்னாடா விசயம்? சொல்லு”

என் அண்ணன் எகிறுவதைப் பாருங்கள். அவன் எப்போதுமே இப்படித்தான்

“எங்கம்மாவை மேலதெரு வழியாகத்தான் கொண்டுப்போயி பொதைக்கிணும்”

பாருங்கள் தோழர்களே, எல்லோரும் எப்படி நடுங்குகிறார்கள். நாட்டாண்மை பதறுவதைப் பாருங்களேன்.

”என்னாப்பா சொல்ற கர்ணா? நம்மப் பாட்டன். முப்பாட்டன் காலத்துலேர்ந்து வர்றப்பழக்கம் ஊரச்சுத்தினுப் போயி பொதைக்கிறது தான். இப்ப வழக்கத்தை மாத்தி மேல தெரு வழியா தாழ்த்தப்பட்டவங்க பொணத்த தூக்கிட்டுப்போனா உடுவாங்களா?”

”எல்லாம் உடுவாங்க. டி.எஸ்.பி.யே அவங்கூரு பெருதனக்காரர்கிட்ட சொல்லிட்டுப் போயிட்டாரு. அந்தப் பெருதனக்காரரைக் கூப்பிட்டுக் கேட்டுப்பாருங்க”

நான் சொல்வதை யாராவது ஒருவர் நம்புகிறாரா என்று பாருங்களேன்? ஒருவரை அங்கே அனுப்பி கேட்டு வரச்சொல்லித்தான் நம்புகிறார்கள். இனிமேல் சிக்கலில்லை. என் அம்மாவை மிகுந்த மரியாதையோடும், மதிப்போடும் கொண்டுச் சென்று அடக்கம் செய்யவேண்டும்.

தோழர் மார்க்சின் சவக்குழி முன்பு நின்றுக்கொண்டு, தோழர் எங்கெல்ஸ் “மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார்” என்று சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது. அதைப்போலத்தான் என் அம்மா, எங்களுக்காக உழைப்பதை நிறுத்திக்கொண்டார்.

போராட்டம் மிகுந்த வாழ்க்கையை வாழும்போதும் மனம் தளராமல் வைரம் போல் உறுதியோடு இருந்த என் அம்மா, சாவிலும் சரித்திரம் படைத்துவிட்டார். எங்கள் சிற்றூரின் வரலாற்றிலேயே முதன் முதலாக மேலத்தெருவின் வழியாக அவரின் இறுதி ஊர்வலம் செல்லப்போகிறது.

பட்டாசு சரங்கள் வெடிக்கின்றன. ஆதி மேளம் முழங்குகிறது. இதோ பாடையைத்தூக்கி விட்டார்கள். என் அம்மாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கொண்டு, ஒரு கை மண்ணை அள்ளி அவர் குழியில் போட்டு அஞ்சலி செலுத்திவிட்டுப் போவீர்கள் வாருங்கள்.

***
கூடு இணைய இதழுக்காக அழகிய பெரியவன் எழுதிய கதை.

மேலே செல்க...(go to top)


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </