வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
   
 
  உள்ளடக்கம்
 
அம்மா, உழைப்பதை நிறுத்திக்கொண்டார் - அழகிய பெரியவன்
--------------------------------
கருப்பு பாலைவனம் 7 - எங்க ஊர் வெம்பூர் - கவிஞர் சமயவேல்
--------------------------------
அஞ்சலி: ஜெயகாந்தன் - எம்.டி.முத்துக்குமாரசாமி
--------------------------------
நிமித்தம் - எஸ்.ராமகிருஷ்ணன் - தமிழ்மகன்
--------------------------------
பப்பாசி (BAPASI)அமைப்பின் செயலாளர் திரு. புகழேந்தி அவர்களுடன் ஒரு நேர்காணல் - விக்னேஷ் சேரல்
--------------------------------
பூத்துக் குலுங்கும் பூஜ்ஜியங்கள் - கவிஞர் பச்சோந்தி
--------------------------------
சென்னைப் புத்தகக் கண்காட்சி அரங்கம் வடிவமைப்பு செய்த கே.மாமுண்டி நேர்க்காணல் - விக்னேஷ் சேரல்
--------------------------------
சென்னை புத்தகக்கண்காட்சி - காளிமுத்து
--------------------------------
சென்னை புத்தகக்காட்சி - வாசகர்களின் அனுபவங்கள் - விக்னேஷ் சேரல்
--------------------------------
 
   
 
1

 
 
 
 
   
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     




பப்பாசி (BAPASI)அமைப்பின் செயலாளர் திரு. புகழேந்தி அவர்களுடன் ஒரு நேர்காணல்

- விக்னேஷ் சேரல்


இந்தியாவிலேயே மிகப் பெரிய புத்தகத் திருவிழாவாக மாறிக்கொண்டிருக்கும், சென்னை புத்தகக் காட்சியை மிகுந்த கவனத்தோடும், அக்கறையோடும் ஒவ்வொரு ஆண்டும் பப்பாசி (BAPASI) அமைப்பினர் நடத்தி வருகின்றனர். பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், இத்தனை சிறப்பாக புத்தகக் காட்சியை வேறு யாராலும் நடத்த முடியாது என்பதும் உண்மைதான். குறைகளே இல்லையென்றால் அதில் சிறப்புகளும் இல்லாமல்தான் இருக்கும் என்கிற உண்மை பலருக்கும் புரிவதில்லை. எத்தனையோ போராட்டங்களுக்கும், அரசியல் பின்புலங்களுக்கு மத்தியிலும் ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தகக் காட்சியை சிறப்பாக நடத்தி வரும் பப்பாசி அமைப்பின் செயலாளர் திரு. புகழேந்தி அவர்களை மிகுந்த பரபரப்பான ஒரு மாலை நேரத்தில் புத்தகக் காட்சியில் சந்தித்து உரையாடினோம். கூடு இணைய இதழின் புத்தகக் காட்சி சிறப்பிதழுக்காக அவருடன் உரையாடியதிலிருந்து:

உங்களைப் பற்றி?

சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிக்கேஷனின் உரிமையாளர். பப்பாசியின் செயலாளர். என் தந்தையாரும் ஒரு பதிப்பாளர். பூங்கொடி பதிப்பகத்தை 1968ல் ஆரம்பித்தார். அவரிடம் 13 வயதிலிருந்தே நான் பயிற்சிப் பெற்றேன். பின்னர் 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிக்கேஷன்ஸைத் தொடங்கினேன். தற்போது என் மகன் இந்த பதிப்பகத்தை நடத்த எனக்கு உதவியாக இருந்து மேலும் மேம்படுத்தியும், நவீனப்படுத்தியும் வருகிறார். பொறியியல் பட்டம் பெற்ற இவர் இன்போஸிஸ் நிறுவனத்தில் பணியிலிருந்தார். அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தனக்குப் பிடித்த இந்தத் துறையில் கால் பதித்துள்ளார். இவர் ஆங்கிலம் மற்றும் தமிழில் கதைகளையும் கட்டுரைகளையும் நிறைய எழுதி வருகிறார். மூன்று தலைமுறைகளாய் பதிப்பகத் துறையில் ஈடுபட்டுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற அனுபவத்தில் சொல்கிறேன், ‘‘இது ஒரு மதிப்புள்ள, அதே சமயம் நல்ல வருமானமும் தரக்கூடிய ஒரு தொழில். இதை சரியான முறையில் இன்றைய சூழலுக்குத் தகுந்தாற்போல் செய்து வந்தால் உயரிய நிலைக்கு வரலாம்''.

38வது சென்னை புத்தகக் கண்காட்சி பற்றி?

புத்தகக் காட்சியைத் தொடங்கி மிகுந்த சிரமங்களுக்கிடையில் இந்த நிலைக்கு வளர்த்தெடுத்ததில் பல பேர்களுடைய உழைப்பும் அவர்கள் சிந்திய வியர்வையும் கலந்திருக்கிறது. நான் முதலாவது புத்தகக் கண்காட்சியில் இருந்தே பங்கேற்று வந்திருக்கிறேன். ஆக இதனுடைய ஒவ்வொரு அங்குல வளர்ச்சிப் பற்றியும் எனக்கு நன்றாகவேத் தெரியும். ஆங்கில பதிப்பாளரான BI பப்ளிகேஷன்ஸைச் சேர்ந்த திரு. மேத்யூ என்பவர் முயற்சி எடுத்து புத்தகக் காட்சியை ஆரம்பித்தார். தொடக்க காலங்களில் இது வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்ற ஒரு சம்பிரதாயமான நிகழ்வாகத்தான் இருந்தது. விற்பனையிலோ, மக்கள் வருகையிலோ, அமைப்பு ரீதியிலோ எந்த ஒரு பெரிய மாற்றமும் இல்லாமல் பல வருடங்களாக இது தொடர்ந்தது. முதல் புத்தகக் காட்சி மிகச் சிறிய அளவில் வெறும் 22 பதிப்பாள மற்றும் விற்பனையாள நண்பர்களின் கூட்டு முயற்சியால் சென்னை அண்ணா சாலையிலுள்ள மதுரா - ஷா ஆலம் பள்ளி வகுப்பறைகளில்தான் நடைபெற்றது. இரண்டாவது புத்கக் காட்சி அதற்கு அடுத்துள்ள காயிதே மில்லத் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. அது படிப்படியாய் வளர்ந்து அதிகப் பங்கேற்பாளர்களுடனும் ஓரளவு அதிகக் கூட்டத்துடனும் நடக்க ஆரம்பித்த கால கட்டத்தை அடைவதற்குள் 25 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அந்தக் காலகட்டத்தில் அல்லயன்ஸ் ஸ்ரீநிவாசன் சென்னை புத்தகக் கண்காட்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றார். புத்தகக் கண்காட்சியை பெரிதாக நடத்திய இவர் புத்தக வணிகத்தை - காட்சியை நவீனக் காலச் சூழலுக்கு ஏற்ப பல மாற்றங்களைப் புகுத்தி விளம்பரங்கள் நன்றாகச் செய்து நடத்தினால் விற்பனையை வெற்றிகரமாக அதிகரிக்க முடியுமென்ற உண்மையைத் தன் பல புதிய முயற்சிகளின் மூலம் நிரூபித்துக் காட்டினார்.

அவருக்குப் பிறகு மணிவாசகர் பதிப்பகத்தைச் சேர்ந்த மீனாட்சிசோமசுந்தரம், தற்போது தலைவராய் இருப்பவர்--இவர் அப்பொழுது செயலாளராக இருந்தார். பெங்களூரில் நடந்த புத்தகக் காட்சியைப் பார்த்துவிட்டுவந்து அங்கே இருக்கும் அரங்க அமைப்பு நன்றாக இருப்பதாகக் கூறியவர், அதே போன்ற எல்லா ஏற்பாடுகளையும் இங்கே செயல்படுத்த ஏற்பாடுகள் செய்தார். முன்பெல்லாம் சுற்றிலும் தகரத்தையடித்து அதில் துணி சுற்றி மறைத்து இருப்பார்கள். அது முற்றிலுமாக மாற்றப்பட்டது. அரங்க அமைப்பை எங்கிருந்து பார்த்துக்கொண்டுவந்து இங்கே அதை நடைமுறைப்படுத்தினோமோ அந்த பெங்களூர் புத்தகக் காட்சியை இன்று நடத்த முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் சென்னை புத்தகக் காட்சி, இந்தியாவிலே அதிக வாடிக்கையாளர்கள் வருகிற கண்காட்சியாகவும், பரப்பளவில் பெரிய கண்காட்சியாகவும் உயர்ந்து நிற்கிறது. டெல்லியில் ‘‘பிரகதி'' மைதானத்தில் உலகப் புத்தகக் காட்சி நடைபெறுகிறது. பரப்பளவில் அது பெரியதாய் இருந்தாலும், அங்கு வாடிக்கையாளர்களின் வருகை என்பது குறைவு தான். அங்கு வர்த்தகம் என்பது பெரும்பாலும் ஒரு வணிகரிடம் இருந்து இன்னொரு வணிகருக்கு பதிப்பு உரிமைகள் விற்பது போன்ற பரிமாற்றங்கள் அதிகம் நடக்கும் இடமாகத்தான் இருக்கிறது. சில்லறை விற்பனை (Retail Sales) கொல்கத்தாவில் முன்பு அதிக அளவில் இருந்தது. அங்கும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாய் விற்பனை சுருங்கிப் போயுள்ளது.

கண்ணதாசன் பதிப்பக உரிமையாளர் காந்தி கண்ணதாசன், நான்காண்டுகள் தலைவர் பொறுப்பில் இருந்தபோது அவருக்குள்ள அனைத்துத் தொடர்புகளையும் பயன்படுத்தி மேலும் இதைப் பரவலாக்கிப் பிரபலப்படுத்தி பல படிகள் மேலே எடுத்துச் சென்றார்.

இந்த நிலையில் வருகை தருபவர்களின் வாசகர்களுக்குத் தேவையான அளவிற்கு காயிதே மில்லத் கலைக் கல்லூரியில் கார் பார்க்கிங் வசதி இல்லாத காரணத்தாலும், பங்கேற்க விரும்பிய சங்க உறுப்பினர் மற்றும் உறுப்பினரல்லாதோர் நிறைய பேருக்கு அரங்குகள் தர இயலாது என்ற நிலை வந்ததாலும்,சென்னை புத்தகக் காட்சி செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளிக்கு மாற்றப்பட்டது. பிறகு சில வருடங்களாக வருடா, வருடம் நடக்கின்ற ஒரு நிகழ்வு என்ற அளவிலேயே பபாசி புத்தகக் காட்சிகள் நடந்துவந்தன. கடந்த இரண்டு வருடங்களாய் பொறுப்பை நாங்கள் ஏற்று நடத்தி வருகிறோம். புத்தகக் காட்சியின் வீச்சு என்பது மிக அதிகம். அதன் தகுதிக்கு ஏற்ற அளவுக்கு நாம் அதை வளர்த்தெடுத்துக் கொண்டு போகவில்லையே என்ற குறை எங்கள் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. அதற்கான முதல் முயற்சியாய் புத்தக கண்காட்சிக்கென தனி லோகோ ஒன்றை வடிவமைக்க வேண்டும் என்ற தேவையை உணர்ந்தோம். இதை ஒரு அமைப்பு ரீதியில் இதற்கான அடையாளத்தை எல்லோரிடமும் கொண்டு சேர்க்க இதற்கான பணிகளில் தொழில்முறையில் இயங்கும் நிபுணர்களிடம் ஒப்படைத்தோம். அத்துடன் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, எந்த அளவிற்குப் புத்தகக் காட்சியை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லப் பயன்படுத்த முடியுமோ அவை எல்லாவற்றையும் இப்போது பயன்படுத்த ஆரம்பித்துள்ளோம்.

முன்பெல்லாம் அரங்குகளை ஒதுக்குவதற்கான கூட்டத்தை நடத்தினால் 700 ஸ்டால்களை நாங்கள் ஒதுக்குவதற்குள் ஒரு நாள் பொழுது வீணாகிவிடும். அதிலே ஏற்கனவே வந்த எண் திரும்பவும் வந்தால் மீண்டும் குலுக்க வேண்டும். ஆனால் தொழிநுட்ப முன்னேற்றத்தால் அது இப்போது ஐந்து நிமிடங்களில் முடிந்து விடுகிறது. 4 ஸ்டால், இரண்டு ஸ்டால் ஒரு ஸ்டால் என்ற மூன்று பிரிவுகள் மட்டும் தான் முன்பு இருந்தது. தற்போது 1 ஸ்டால், ஒன்றரை ஸ்டால், 2 ஸ்டால், 3 ஸ்டால், 4 ஸ்டால், 9 ஸ்டால் என்று ஆறு வகையான ஸ்டால் பிரிக்கும் வேலைகள் இருந்தும் இவை எல்லாமே ஐந்து நிமிடங்களில் முடிந்து விடுகிறது. விளம்பரங்களை எப்படிப் புதுப்புது விதமாகத் தயாரிக்கலாம், யாரைக் கொண்டு அதை நேர்த்தியாகத் தயாரிக்கலாம் போன்ற விஷயங்களை எல்லாம் தீவிரமாகப் பரிசீலித்து யோசித்து அதற்கான தகுதிவாய்ந்த திறமையான தொழில்முறை விற்பன்னர்களிடம் (professionals) ஒப்படைத்தோம். இந்த வருடம் மீடியா சென்டர் என்ற ஒன்றை உருவாக்கினோம். எங்களைத் தேடி மீடியாக்காரர்கள் அலைய வேண்டிய சிரமத்தை அவர்களுக்குத் தராமல், இங்கு செயல்பட்ட மீடியா சென்டரைச் சேர்ந்த தோழர்கள் நேரடியாக அவர்களை வரவழைத்து உபசரித்து இன்று என்ன நிகழ்ச்சி நடந்தது, என்ன நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது, இன்றைய புத்தக விற்பனை எவ்வளவு? யாராவது பிரபலங்கள் வருகை தந்தார்களா? போன்ற தகவல்கள், தேவையான விபரங்களை ஊடகங்களுக்குக் கொடுத்தார்கள்.

பத்திரிகையாளர்கள் தங்களது அலுவலகத்தில் இருந்து கொண்டே இந்த விவரங்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் மின்னஞ்சல், FAX , போன்றவற்றையும் பயன்படுத்த அவர்களுக்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தோம். தகவல்களைத் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் கொடுத்தோம். முக்கியமான நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை அவர்கள் கேட்டாலும் கேட்கவில்லை என்றாலும் காலை 11மணி, மதியம் 1மணி மற்றும் மாலை 7 மணிக்கு நாங்களே அனுப்பிவிடுவோம். டெல்லி போன்ற புத்தகக் கண்காட்சிகளில் தான் (VIP Lawn) வி.ஐ.பி லான் என்ற ஒன்று இருக்கும். அங்கு பிரபலங்களைக் கூட்டிவந்து பத்திரிக்கையாளர்களுடன் உரையாட வைப்பது போன்ற நிகழ்வுகள் நடக்கும். அது போல இந்த முறை இங்கும் 4000 சதுர அடி பரப்பளவில் குளிர் சாதன வசதியுடன் கூடிய இடம் ஏற்பாடு செய்திருந்தோம்.

தினசரி நிகழ்வுகள் நடைபெறும் மேடையும் இந்த முறை சாதாரணமாக இல்லாமல் டிஜிட்டல் திரை வசதியுடன் கூடியதாக அமைக்கப்பட்டிருந்தது. கண்காணிப்புக் கேமராக்கள் ஆங்காங்கே நாற்பது இடங்களில் பொருத்தப்பட்டு பாதுகாப்பு கண்காணிக்கப்பட்டது. இரண்டு வருடத்திற்கு முன்பெல்லாம் பார்க்கிங் ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தது. அந்தக் காரணத்தினாலேயே வந்த மக்களில் ஒரு பகுதியினர் புத்தகக் காட்சிக்குள் வர முடியாமல் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் இந்த முறை பார்க்கிங்கிற்கு என்றே நந்தனம் ஆர்ட்ஸ் கல்லூரி, YMCA மைதானம் இங்கு எந்தெந்த இடங்களில் எல்லாம் முடியுமோ அங்கெல்லாம் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடுகள் செய்திருந்தோம். ஒரு இடத்தில் ஒரே ஒரு இருசக்கரம் மட்டும் தான் நிறுத்துவதற்கு இடமிருக்கிறது என்றாலும், அந்த இடம்கூட வீணாகாதபடி பார்த்துக் கொண்டோம். அந்த ஒரே ஒரு வாகனம் நிறுத்துவதற்கான இடத்தை மட்டும் பராமரிக்க ரூ1000 செலவு வருமென்றாலும் வந்தவர்களில் ஒருவர்கூட வாகனம் நிறுத்துவதற்கு இடமில்லை என்று திரும்பிச் செல்லக் கூடாதென்பதற்காக இதைச் செய்தோம்.

இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருக்கிற மைதானத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதிப் பெற்றோம். வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் காட்சிக்கு வருவதற்கு வசதியாக 10 வேன்களை ஏற்பாடு செய்திருந்தோம். அவர்கள் புத்தகங்களை வாங்கும் பொருட்டும் காட்சியைச் சுற்றிப் பார்க்கவும் வசதியாக 5 நகரும் சக்கர நாற்காலிகளை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தோம். சிலர் பேட்டரி கார் இருந்தால் வசதியாய் இருக்குமென்று கேட்டுக் கொண்டார்கள். இது அடுத்த ஆண்டில் செய்து தரப்படும். மருத்துவ முகாம் ரத்த தான முகாம் போன்ற பொதுநோக்கு பார்வையும் இந்த புத்தக் காட்சியில் இருந்தன. காட்சிக்கு வந்த குழந்தைகளுக்கு அங்கேயே போலியோ சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பிரைலி முறைப்படி உருவான புத்தகங்களைக் காட்சிக்கு வைக்கவும் மாற்றுத் திறனாளிகள் அதைப் படிக்கவும் வசதியாகக் கட்டணமில்லாத ஒரு தனி ஸ்டால் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு வந்து பார்வையில்லாதவர்கள் படித்து விட்டு செல்ல வழி செய்திருந்தோம். எங்களுடைய பதிப்பகத்தார்களுடன் பேசிக் கிட்டதிட்ட இருநூறு புத்தகங்களை ப்ரைலி முறையில் மாற்றிக்கொள்ளும் உரிமையை இலவசமாக வாங்கிக்கொடுத்தோம். உயிர்காக்கும் மருந்துகளுடன்கூடிய இலவச சிகிச்சையளிக்கும் மினி மருத்துவமனை ஒன்றும் இங்கே இயங்கியது. தாய்மார்கள் தங்களது பச்சிளம்பிள்ளைகளுக்கு பால்கொடுக்க ஒரு தனி இடமும், சுற்றிப் பார்க்க வருபவர்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு தங்களை புதுப்பித்துக் கொண்டு திரும்பவும் சுற்றிப் பார்க்கவும் தனி இட வசதியும் ஏற்படுத்திக் கொடுத்து இருந்தோம். வருங்காலத்திலும் இதுப் போன்று நிறைய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம். ஆனால் எங்களுக்குப் புத்தகக்காட்சி நடத்துவதற்கான இடம் கிடைப்பது தான் பெரிய பிரச்சனையாக உள்ளது. கல்லூரி நிர்வாகத்தினர் இடம் கொடுக்க யோசிக்கிறார்கள். இழுத்தடிக்கிறார்கள். பெரும் முயற்சிகளுக்குப் பிறகு இடம் கிடைத்தாலும் சாத்தியமே இல்லாத கால வரையறைக்குள் அரங்குகளை நிர்மாணித்து கண்காட்சியையும் முடித்து அரங்குகளைப் பிரித்துக் கொடுக்கவேண்டும் என்று நிபந்தனைகளை விதிக்கிறார்கள். நாங்கள் இவை அனைத்தையும் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு இந்த ஆண்டு புத்தகக்காட்சி சிறப்பாக நடப்பதைச் சாத்தியமாக்கி யிருக்கிறோம்.

சென்ற வருடம் 60 நாட்களில் செய்த வேலைகளை இம்முறை 30 நாட்களிலேயே செய்து முடித்தோம். குறுகிய கால அவகாசம்தான் இருந்தாலும் இம்முறை நிறையப் புதுமைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். குறிப்பாக சீசன் டிக்கெட்டை அறிமுகப்படுத்தியுள்ளோம். 50 ரூபாய் கொடுத்து இதை வாங்கினால் புத்தகக் காட்சி நடக்கக் கூடிய எந்த நாளில் வேண்டுமானாலும் வந்து செல்லலாம். தினமும் வந்து பத்து ரூபாய் கொடுத்து நுழைவுச்சீட்டு வாங்கத் தேவையில்லை. நிறையப் பேர் அதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாதவர்களின் கட்டணம் பற்றி சொல்லுங்கள். எதன் அடிப்படையில் புத்தகக் காட்சியில் பங்கேற்க பதிப்பகங்களுக்கு அனுமதி வழங்குகிறீர்கள்?

கடந்த ஐந்து வருடங்களாக உறுப்பினர் என்று யாரையும் சேர்க்கவில்லை. அப்படி சேர்த்திருந்தால் அவர்களுக்கு ஸ்டால் கொடுக்க வேண்டியது எங்களது கடமை. ஏற்கனவே உறுப்பினராய் இருப்பவர்களிலேயே பெரும்பாலோர் இயங்குவதில்லை. அது மட்டுமல்லாது, அவர்களது பெயரை உபயோகித்து மற்றவர்கள் கடையை எடுத்து விடுகிறார்கள். உறுப்பினர்கள் கடையை எடுத்தால் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடப்பார்கள். ஆனால் உறுப்பினர்களின் பெயரை உபயோகித்து உள்ளே வருபவர்கள் தான் விதிமுறைகளை மீறுபவர்களாய் இருக்கிறார்கள். அதனால் தொடர்ந்து எங்களுடன் சேர்ந்து ஒத்துழைக்காதவர்கள், இயங்காது உறுப்பினராக நீடிப்பவர்கள், சந்தாக் கட்டாதவர்கள், கொடுத்துள்ள முகவரிக்கு அனுப்பப்படும் தபால்கள் ஆளே இல்லாது திரும்பி வருபவர்கள், தங்கள் மீதான நடவடிக்கைகளுக்குப் பதில் அளிக்காதவர்கள் என ஒரு 30 நபர்களை சென்ற கமிட்டி நீக்கியுள்ளது.

நாங்கள் தற்போது அதில் இன்னும் தீவிரமாய் செயல்பட்டு, இயங்காதவர்களை, கடையை எடுத்துவிட்டு அதை இன்னொருவருக்கு தந்து, உரிமையைத் தவறாகப் பயன்படுத்துபவர்களை எல்லாம் நீக்கிவிட உள்ளோம். புது விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவுள்ளோம். ஆண்டு பொதுக்குழுவில் விதிகளை மாற்றுவதற்கான அனுமதி வாங்கியிருக்கிறோம். வரும் ஏப்ரலில் இருந்து புதிய உறுப்பினர்களை சேர்க்க உள்ளோம்.

புதிய உறுப்பினர்களை சேர்க்க என்ன வழிமுறை வகுத்திருக்கிறீர்கள்?

நாங்கள் அதற்கு ஒரு கமிட்டியை உருவாக்கியுள்ளோம். வழிமுறை என்று பெரிதாக ஒன்றுமில்லை. தகுதியானவர்களா என்று முதலில் பரிசோதிப்போம். எத்தனை வருடங்களாக இத்துறையில் இருக்கிறார்கள், எவ்வளவு புத்தகங்கள் பதிப்பித்து இருக்கிறார்கள், அவர்களிடம் பான் கார்டு (Pan Card) இருக்கிறதா? முறையான வங்கிக்கணக்கு வைத்திருக்கிறார்களா? இதற்கு முன்னேரே உறுப்பினராய் இருந்து விதிமுறைகளை மீறியதற்காக நீக்கப்பட்டவர்கள் வேறு பெயரில் மீண்டும் சேர முயல்கிறார்களா? சட்டத்துக்கு புறம்பான, பிரச்சனைக்குரிய புத்தகங்களை போடுகின்றவர்களா? தமிழ்நாட்டில் மற்றும் பாண்டிச்சேரியில் குடியுரிமை உள்ளவர்களை மட்டுமே இப்போது சேர்க்க உள்ளோம். பிற நாடுகளில் உள்ளவர்கள் சேர்க்கப்படுவதால் சில பிரச்சனைகள் உருவாகிறது.

இந்த உறுப்பினர்களுக்கு முதல் ஐந்து வருடங்களுக்கு எந்த வித சலுகைகளோ, ஓட்டுரிமைகளோ கிடையாது. வாய்ப்பிருந்தால் நீக்கப்பட்டவர்கள் இடத்தில் சிலரை SENIORITY யை பொருத்தும், இயங்குதலை பொருத்தும் ஒருவர் வெளியேறும் போது ஒருவரை சேர்த்துக் கொள்வோம். உறுப்பினர் அல்லாதோருக்கு கட்டணம் அதிகமாய் வசூலிப்பது என்று எதுவும் இல்லை. உறுப்பினரல்லாதவர்கள் நன்கொடையாளர்களாகத்தான் பங்குபெறுகிறார்கள். விரும்பிதான் அரங்கு அமைக்கிறார்கள்.

அதுகூட நன்கொடை கொடுக்கிறார்கள் என்பதற்காக அனைவரையும் உள்ளே நுழைப்பதில்லை. தேர்வு செய்து தான் உள்ளே அனுமதிக்கிறோம். 120 கடைகளுக்கு இந்த ஆண்டு அனுமதி மறுக்கப்பட்டது. அப்படி மறுக்கப்பட்டவர்கள் அனைவருமே உறுப்பினர் அல்லாதோர்தான். மொத்தமாக இந்த வருடம் 80 பேருக்குதான் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறோம். ஆனால் இந்தத் தொகையெல்லாம் சேர்த்தால் கூட எங்கள் செலவில் மூன்றில் ஒரு பங்குதான் வருகிறது. உண்மையை சொல்லப்போனால். ‘‘ஐயா, இது ஒரு நல்ல விஷயத்திற்கு நீங்கள் செய்யும் ஒரு உதவியாக இருக்கட்டும். கொஞ்சம் நன்கொடை தாங்க'' என்று நாங்கள் எல்லோரிடமும் சென்று வேண்டிக் கேட்கிறோம். நிறையப் பேர் எங்களுக்கு என ஒரு BANNERம், தனி நுழைவாயிலும் இருந்தால் தருகிறேன் என்கிறார்கள். சில பேர் லாபம் வருகிறதோ இல்லையோ இது ஒரு நல்ல காரியம். சமூகநலன் சார்ந்தது என்பதால் உடனே தந்துவிடுகின்றனர். உதாரணத்துக்கு நல்லி சில்க்ஸைச் சொல்லலாம். அவர் எங்களது புத்தகக் காட்சி நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருந்த நேரத்திலிருந்தே உதவி செய்து வந்திருக்கிறார். ஆக அரங்க வாடகையால் மட்டும் எங்களுக்குப் பெரிய வருமானம் வருவதில்லை. நல்ல மனம் படைத்த கொடையாளர்களால்தான் புத்தகக் காட்சி சிறப்பாக நடக்கிறது.

புதிய உறுப்பினர்களாக வருபவர்கள் எத்தனை வருடங்கள் பதிப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும்?

குறைந்த பட்சம் ஐந்து வருடங்களாவது பதிப்புப் தொழிலில் இருக்க வேண்டும், ஐம்பது புத்தகங்களாவது வெளியிட்டிருக்க வேண்டும். அந்தப் பதிப்பகம் பெயரில் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். Pan no.வேண்டும் இது எதற்காக என்றால், ஒருவரே இரண்டு மூன்று உறுப்பினராய்ச் சேர வாய்ப்பிருக்கிறது. அரசாங்கத்திடம் பப்பாசிக்கென்று தனி இடம் வேண்டும் என்று முன்னர் கேட்டு இருந்தோம். இந்த சூழ்நிலையில் ஒருவருக்கு 200 sq.ft நிலம் ஒதுக்கப்படுகிறதென்றால், இந்த மாதிரி ஒரே நபர் இரண்டு, மூன்று கணக்கில் விண்ணப்பித்திருந்தால் அவருக்கே 600 sq.ft போய் விடுகிறது. இதனால் தகுதி உடையவர்களுக்கு இடம் சிறியதாகவோ அல்லது கிடைக்காமலோ போகக்கூடிய வாய்ப்பிருக்கிறது. இதைத் தடுப்பதற்காகவே இத்தனை கடுமையாக இருக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக உறுப்பினர்களுக்கு எந்தவொரு நல்வாய்ப்பும் சமமாக நியாயமாகக் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

சென்னை புத்தகக் காட்சி நடத்துவதற்கான முக்கிய நோக்கமென்ன?

டிஜிட்டல் புத்தகம், மின்புத்தகம் என்று புதிய புதியத் தொழில்நுட்பங்கள் அச்சிலுள்ள புத்தகங்களுக்குப் போட்டியாக வந்துவிட்ட இந்தக் காலத்தில் இனி அச்சு வடிவிலுள்ள புத்தகங்கள் (PHYSICAL BOOKS) விற்பனையாகாது. இன்னும் இரண்டு மூன்று வருடத்தில் இது அழிந்து போய் விடுமென்று பலரும் பயத்துடன் சொல்கின்றனர். ஆனால் அவர்கள் சொல்வது போன்று இது இரண்டு வருடத்திற்குள் எல்லாம் அழிந்து விடாது. இந்த மாதிரியான புத்தகக் காட்சிகள் நடக்கவில்லை என்றால் அந்த நிலை கொஞ்சம் சீக்கிரம் அதாவது 10 அல்லது இருபது ஆண்டுகளுக்குள் வர வாய்ப்பிருக்கிறது. எனவே இந்தப் புத்தகக் காட்சிகள் அச்சு வடிவிலுள்ள புத்தகங்களை அழிவிலிருந்து காப்பாற்றும். டிஜிட்டல் புத்தகங்களில் படிப்பது என்பது அத்தனை சுலபமல்ல. நானும் சில நேரங்களில் டிஜிட்டல் புத்தகங்களை படிக்கின்றேன், ஆனால் என்னால் நீண்ட நேரம் அதில் படிக்க முடிவதில்லை.

அச்சு புத்தகங்களைப் படிப்பதில் எவ்வளவு நேரம் செலவழித்தாலும் அதற்கு உடல் ஒத்துழைக்கிறது. முன்பு புத்தகக் காட்சிகள் ஓரளவுக்கு நடந்தாலும் மக்களிடம் புத்தகங்கள் வாங்குமளவுக்கு வசதி இருந்தது கிடையாது. இப்போது ஓரளவுக்குப் பணப்புழக்கம் உள்ளது. வாசகர்களுக்கு உள்ள குறை என்னவென்றால் இதற்கென்று நேரம் ஒதுக்கி அதிக தூரம் பயணம் செய்து நேரில் பார்த்து வாங்க முடிவதில்லை. அதனால் தான் நிறைய நபர்கள் e-commerce siteல் வாங்குகிறார்கள். வீட்டிற்கே வந்து கொடுக்கின்ற வசதி இருப்பதால் நிறையப் பேர் அதைத் தேர்வு செய்கின்றனர். அதனால் எங்களுடைய நோக்கம் இந்தக் குறையை நீக்கும் வகையில் வாசகர்கள் இருக்கிற இடத்திற்கே சென்று புத்தகங்களை விற்கவேண்டும் என்பதுதான்.

இப்போது சென்னையில் நடத்துவதால், ஒரு 50 கி.மீ. சுற்றளவில் இருப்பவர்கள் வந்து வாங்கிச் செல்கிறார்கள். இது போல ஒவ்வொரு மாவட்ட சென்டரிலும் நடத்த வேண்டும் என்பது எங்கள் எண்ணம். நாங்கள் நடத்துவது சென்னையிலும் மதுரையிலும்தான். சென்னையில் வெற்றிகரமாக நடக்கிறது. மதுரையில் பபாசிக்கு நஷ்டம் ஆகிறது, வாசகர்களும் அந்த அளவுக்கு வருவதில்லை என்ற நிலை இருந்தது. ஆனாலும் விடாமல் நாங்கள் நடத்திவந்ததனால் சென்ற வருடம் அங்கே நடத்தியதில் பப்பாசிக்கு 12 லட்சம் நஷ்டம். இந்த வருடம் அதை 9 லட்சத்திற்குக் குறைத்திருக்கிறோம். எங்களுக்கு லாபமில்லை என்றாலும் பல பதிப்பாளர்கள் தங்களுக்கு நன்கு விற்பனை என்கிறார்கள். இந்த நிலை இன்னும் இரண்டு வருடங்களில் மாறிவிடும். எங்களால் அப்போது நட்டமில்லாமல் நடத்த முடியும். சென்னையில் வெற்றிகரமாக நடக்கக் காரணம் இது பிரபலமாக இருப்பதால் sponserகளை எங்களால் எளிதாக ஈர்த்து உள்ளே கொண்டுவந்து விட முடிகிறது. முன்னர் கோயம்புத்தூரில் நடத்திக் கொண்டிருந்தார்கள், ஆனால் நட்டம் வருகிறதென்று நடத்தாமல் விட்டுவிட்டார்கள். அதை திரும்பவும் நடத்தியே ஆக வேண்டும்.

ஆனால் யார் யாருக்கு புத்தகக் காட்சிகள் நடத்த விருப்பமோ, யாரால் நடத்த முடியுமோ, அவர்களுக்கு பபாசி என்னென்ன வசதிகளை செய்து கொடுக்க முடியுமோ, அதை செய்கிறது. எங்கள் உதவியுடன் கிட்டத்தட்ட வருடத்திற்கு தமிழகத்திலும் புதுச்சேரியிலும் சேர்த்து 30 புத்தகக் காட்சிகள் நடக்கின்றன.

எங்களுடைய அதிர்ஷ்டம் என்னவென்றால், நிறைய மாவட்ட ஆட்சியர்கள் புத்தகம் அதிகம் படிப்பவர்களாக இருப்பதால் அவர்கள் அந்தந்த மாவட்டத்தில் பெரும் முயற்சிகள் எடுத்து நடத்துகிறார்கள். ஒரு மாவட்ட ஆட்சியர் புத்தகக் காட்சியை நடத்தும்போது, பள்ளிகூடத்திற்கோ, அரசாங்க அலுவலகத்திற்கோ, கல்லூரிக்கோ, பஞ்சாயத்திற்கோ புத்தகம் வாங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தை வேறு எதற்கும் செலவு செய்யாமல் புத்தகம் வாங்க சொல்லி ஆணை பிறப்பிக்க முடிகிறது. அதனால் நன்றாக விற்பனையாகிறது. அத்துடன் சிலரை அழைத்து நீங்கள் இந்தச் செலவை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் அந்த செலவை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லும்போது அவர்கள் சமூக நலனைக் கருத்தில் கொண்டு தங்கள் நிறுவனத்திற்கான ஒரு விளம்பரச் செலவாக நினைத்து அதைத் தட்டாமல் செய்கிறார்கள். அதனால் அங்கு அவர்களால் வெற்றிகரமாக நடத்த முடிகிறது. அவர்களுக்கு நாங்களும் உதவி செய்கிறோம். இப்போது கூட பெரம்பலூரில் புத்தகக் காட்சி சிறப்பாக நடந்து வருகிறது. எல்லா ஊர்களிலும் நடத்தவேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு ஊரிலும் நஷ்டம் ஏற்பட்டது என்றால் அதைச் சரிக்கட்டுவதற்கு பபாசியிடம் பணம் இருப்பில் இல்லை. அதன் பிறகு எங்களுக்கு சென்னை புத்தகக் காட்சியை நடத்துவதற்கே சிரமமாய்ப் போய்விடும்.

சென்னை புத்தகக் கண்காட்சிக்காக பப்பாசியின் குழு எத்தனை மாதத்திற்கு முன்பிருந்து வேலையைத் தொடங்குகிறது, அந்த செயல்பாடுகள் பற்றி?

கிட்டத்தட்ட நான்கு மாதத்திற்கு முன்பிருந்தே புத்தக கண்காட்சிக்கான வேலைகள் நடக்கத் தொடங்கிவிடும். ஆனால் எங்களுக்கு இடப் பிரச்சனை தான் மிகுந்த போராட்டமாக இருக்கிறது. ஒரு SPONSERஐ பிடிக்க வேண்டுமென்றாலும், ஒரு பேச்சாளரை அழைத்து வருவதென்றாலும், இந்த இடத்தில் இந்த நாட்களில் இந்த நேரத்தில் புத்தகக் காட்சி நடக்குமென்று உறுதியாக சொன்னால்தான் அவர்கள் அதற்கென்று தேதி ஒதுக்கி வர சம்மதிப்பார்கள். ஆனால் அது தான் இங்கே போராட்டமாய் இருக்கிறது. இடம் கிடைக்கும்வரை அந்த இடைக்காலத்தில் அது சம்மந்தப்பட்ட வழக்கமாய் செய்து வரும் சின்ன சின்ன வேலைகளை செய்துகொண்டு வருவோம். இடம் கிடைத்து ஆறு மாதத்திற்கு முன்பிலிருந்து நாங்கள் வேலையை ஆரம்பித்தால் இதைவிட பத்து மடங்கு பிரம்மாண்டமாய், நன்றாக.. நிறைய வசதியுடன் கூடியதாய் செய்ய முடியும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலையைப் பிரித்துக் கொடுத்து விடுவோம். CONSTRUCTION ஒருவர், PRINTING ஒருவர், பேச்சாளர்கள் அழைத்து வருவது ஒருவர், டிக்கெட் பார்ப்பது ஒருவர், ஸ்பான்சர்களை பார்ப்பது ஒருவர் எனப் பிரித்து கொடுத்து விடுவோம்.

ஆனால் எந்த இடத்தில் நடத்துகிறோம் என்பது தெரிந்த பிறகு தான் இவர்களின் வேலையை வேகப்படுத்த முடியும். நந்தனம் அண்ணாசாலையில் நடக்கிறது என்றால் போக்குவரத்து அனுமதி வாங்குவது என்பது ரொம்பக் கஷ்டம். இந்த வருடம் நடத்தின இடத்திலேயே அடுத்த வருடமும் நடத்த இப்போதே முன்பணம் கேட்டால் கூட நாங்கள் தரத் தயாராகத்தான் இருக்கிறோம். ஆனால் அவர்கள் அப்படி அனுமதிப்பதில்லை. FINANCIAL YEAR முடிந்த பிறகு பேசிக்கொள்ளலாம் என்பார்கள். அது முடிந்து போனால் நம்மிடம் அப்படிச் சொன்னவர் மாறிப் போய் இருப்பார். சிலர் ‘‘ரொம்பக் கூட்டம் வரும் சார், அவங்க வந்து எங்க இடத்தையே நாசம் பண்ணிடுவாங்க சார், அவங்களுக்கு விடாதீங்க சார்'' என்று அங்கிருக்கும் சிலர் சொல்வார்கள். இதையெல்லாம் அவர்களுக்குப் புரிய வைத்து PRESSURE கொடுத்து செய்ய வேண்டும்.

பப்பாசி குழுவில் எத்தனை உறுப்பினர்கள் செயல்படுகிறார்கள்?

தலைவர் ஒருவர். தமிழ், ஆங்கிலம் என இரு பிரிவுகளுக்கும் துணைத் தலைவர்கள் இருவர் என இருக்கிறார்கள். SECRETARY, JOINT SECRETARY, TREASURER, 2 ASSOCIATE JOINT SECRETARY, தமிழுக்கு 6 COMMITTEE MEMBER, ஆங்கிலத்துக்கு 6 COMMITTEE MEMBER என்று 20 பேர் கொண்ட குழு இருக்கும். இதைத் தவிர எங்கள் நிர்வாகத்தில் நிரந்தர புத்தகக்காட்சி என்று ஒன்று உள்ளது. அதில் உறுப்பினர் 4 பேர் (ஆங்கிலம் 2, தமிழ் 2) இருக்கிறார்கள். இதைத் தவிர முன்னாள் தலைவர் ஒருவர் இருக்கிறார். ஒரு செயற்குழு உறுப்பினருக்கு COMMITTEE மெம்பெர் இருக்கிறார்.

நுழைவுக் கட்டணம், பார்க்கிங் கட்டணம் கொஞ்சம் கூடுதலாக வசூலிக்கபடுகிறது, ஏன் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்?

இதைப் பற்றி ஏற்கனவே பத்திரிகைகளில் நான் சொல்லியிருக்கிறேன். அதாவது அரசாங்கத்தில் எங்களுக்கு என்று ஒரு தனி இடம் கொடுத்து விட்டார்கள் என்றால், நாங்கள் இவ்வளவு கட்டணம் வசூலிக்கப்போவது இல்லை. நந்தம்பாக்கம் TRADE CENTREல் நுழைவுக் கட்டணம் உண்டு, பார்கிங்கிற்கு கட்டணம் கிடையாது. ஆனால் இங்கு பார்க்கிங்குக்கான இடத்திற்காக நாங்கள் கட்டும் கட்டணம் மிகவும் அதிகம். நந்தனம் கல்லூரியில் விளையாட்டுத்திடலை பார்க்கிங்கிற்கு எடுக்கிறோம். மிலிட்டரி மைதானத்தைப் பயன்படுத்துவதற்கு ஒரு தொகையை வாடகையாகக் கொடுக்கிறோம். இப்படிப் பல இடங்களில் பார்க்கிங்கிற்கான இடம் பிரிந்து கிடப்பதால் கூட்டத்தையும், வண்டிகளையும் கட்டுப்படுத்த நிறைய ஆட்களை போட வேண்டிய நிலை இருக்கிறது. நாங்கள் கட்டணம் விதிக்காமல் இருந்தால் நூறு கார்கள் நிற்க வேண்டிய இடத்தில் பத்துக் கார்கள் தான் நிறுத்துவார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில் இருக்கும். அதை ஒழுங்காக நிறுத்த வேண்டுமென்று அவர்கள் நினைப்பதில்லை. எங்களுக்கு இதற்கென்று ஏழு லட்சம் செலவாகிறது. கட்டண வருவாய் வெறும் இரண்டு லட்சத்துக்குள்தான் இருக்கும். இது ஏதோ ஒரு சில செலவுகளுக்குதான் உபயோகப்படுகிறது. வாகனம் திருடுப் போகவும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கும் நாங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

நுழைவுக் கட்டண விஷயத்தில் 2002 லிருந்து ஐந்து ரூபாய்தான் கட்டணமாக இருந்து வந்தது. அந்த 5 ரூபாயை 12 வருடம் கழித்து நாங்கள் ஏற்றி இருப்பது பெரிய விஷயம். நுழைவுச்சீட்டுக் கட்டணம் வாங்குவதற்கு இரண்டு காரணம் இருக்கிறது. எத்தனை பேர் வந்தார்கள் என்ற கணக்கு இதன் மூலம்தான் தெரிகிறது. இன்னொன்று கட்டணமே இல்லையென்றால் தேவையே இல்லாத நபர்கள் அதிகம் வருவார்கள். பொழுதுபோக்குக்காக ஒருசிலர் வருவார்கள். Trade centreல் எல்லாம் 30, 40 ரூபாய்க்கு டிக்கெட் வைக்கிறார்கள். பத்து ரூபாய் டிக்கெட் என்றால் அதில் அந்த டிக்கெட் அச்சடிப்புச் செலவுக்கே மூன்று ரூபாய் போய்விடுகிறது. பல லட்சம் பேர் வருகிறார்கள், பத்து ரூபாய் கட்டணம் வைத்திருப்பதைப் பற்றி யாரும் குற்றம் குறை சொல்லவில்லை. பெரும்பான்மையானவர்கள் இதைக் கூடுதல் சுமை என்று சொன்னால் இப்போது கூட கட்டணத்தை நாங்கள் குறைக்க தயாராக உள்ளோம். இதற்காக தான் நாங்கள் இந்த முறை சீசன் டிக்கெட் கொண்டுவந்தோம். நாங்கள் நடத்திய சர்வேயில் 40 சதவீத வாசகர்கள் திரும்பத் திரும்ப வருகிறார்கள் என்று தெரிந்தது. உள்ளே எப்படியும் 2 கி.மீ. தூரம் நடக்க வேண்டியுள்ளது, மொத்த அரங்குகளையும் அதிலுள்ள புத்தகங்களையும் பார்க்க எப்படியும் இவர்களுக்கு ஒரு வாரமாவது பிடிக்கும். இவர்கள் எல்லா அரங்குகளையும் சுற்றிப் பார்க்க வேண்டுமென்றால் தினமும் வந்து நுழைவுக் கட்டணம் தினமும் செலுத்த வேண்டியிருக்கும் என்பதைவிட அதை வாங்குவதற்கு வரிசையில் நிற்பது இன்னும் அதிகக் கஷ்டமாய் உள்ளது என்று கூறுகிறார்கள். அதனால் தான் 13 நாளுக்கு வெறும் 50 ரூபாய்க்கு சீசன் டிக்கெட் தருகிறோம்.

நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று சொல்கிறீர்கள். ஆனால் வழக்கம் போல சில பெரிய பதிப்பகங்கள் எட்டுக் கடைகளை இணைத்துப் பெரிய அரங்கு அமைத்திருந்தனர்?

வியாபாரத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதில் ஒவ்வொருவருடைய பார்வையிலும் வித்தியாசம் உள்ளது. அதை விரிந்தப் பரந்த மனப்பான்மையுடனும் பார்வையுடனும் பார்க்க நாம் முன்வர வேண்டும். நிறையப் பேர் என்ன செய்கிறார்கள் என்றால் உதாரணத்திற்கு ஒருவர் ஐந்து புத்தகங்களை வெளியிட்டு இருப்பார். அவர் ஸ்டாலுக்கு அனுமதி கேட்டு வந்திருப்பார். இப்போது நாங்கள் அவருக்கு அனுமதி வழங்குவதா இல்லை 5000 புத்தகங்களைப் போட்டிருக்கும் ஒருவர் தனக்கு அதிக அளவு ஸ்டால் தேவைப்படுகிறது என்று சொல்லும்போது அவருக்குத் தருவதா? ஐந்து புத்தகம் போட்டிருப்பவர்கள் ஒரு அரங்குக்கான கட்டணம் கட்டிவிட்டு கடைசியில் இந்தப் புத்தகக் காட்சியில் விற்பனையே சரியில்லை என்று பொத்தாம் பொதுவாகக் குறை கூறிவிட்டுப் போய்விடுகிறார்கள். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரங்கை ஒரு மீட்டிங் ஸ்பாட் போன்று ஆக்கிவிடுகிறார்கள். தவிர, அருகில் இருக்கும் கடைகளுக்கும் தொந்தரவு கொடுக்கிறார்கள். புத்தக வெளியீடு, எழுத்தாளர் சந்திப்பு இவற்றிற்காகவே ஒதுக்கப்பட்ட இடங்களை இவர்கள் பயன்படுத்துவதில்லை. இவர்களில் எல்லோருமே அப்படிப்பட்டவர்கள் என்று சொல்லவில்லை. பெரும்பாலானவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள் என்பது வருந்தத்தக்க உண்மை.

இவர்களிலும் பலர் நாளைக்குப் பெரிய பதிப்பாளர்களாக வரப்போகிற அருமையான நூல்களை வெளியிட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் பகுதி நேரப் பதிப்பாளராக இருப்பவர்களுக்கும் இதுதான் எங்களுடைய வாழ்வாதாரம் என்ற நிலையிலும் வேட்கையுடனும் ஈடுபாட்டுடனும் இயங்குகிறவர்களுக்கும் வேறுபாடு இருக்கிறதல்லவா... அவர்களை இனம் கண்டறிந்த பிறகு நியாயமாகத் தர வேண்டியவர்களுக்கு அரங்கு தரத்தான் செய்கிறோம். ஐந்து புத்தகங்கள் மட்டுமே போட்டவர்களுக்கு ஒரு டேபிள் இடம் தந்துவிடுகிறோம் என்றால் ஒத்துக்கொள்வதில்லை. எங்கள் நிர்வாகத்தின்கீழ் இயங்கும் புத்தகக் காட்சியில் இடம் பெற்றிருக்கும் நிரந்தரப் புத்தகக் காட்சி அரங்கின் மூலம் விற்றுத் தருகிறோம் என்றாலும் சம்மதிப்பதில்லை. அதற்கு நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம். இப்போது ஐந்து புத்தகங்கள் போட்டவர்கள் ஒரு தனி ஸ்டால் வேண்டுமென்று கேட்கும் போது இன்னொருவர் 9 ஸ்டால் எடுத்திருக்கிறார் என்றால் அவர் 5000 புத்தகங்கள் பதிப்பித்தவர். கிட்டத்தட்ட 500 எழுத்தாளர்களின் புத்தகங்கள் அவர் அரங்கிலிருக்கும். அந்த 500 பேருடைய படைப்புகளையும் அவர்தான் வாசகர்களின் முன் நிறுத்துகிறார். அவர்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். ஒரு பதிப்பகத்தை 40, 50 வருடங்களாக நடத்தி வருபவர் அதிக அரங்குகளை கேட்கும்போது சமீபத்தில் ஆரம்பித்த பதிப்பகத்திற்கு... குறைந்த புத்தகங்களே வெளியிட்ட உறுப்பினர் அல்லாதவருக்கு அரங்கு எப்படித் தர முடியும். ஒரு ஸ்டாலுக்கு உறுப்பினராக உள்ள பதிப்பகங்களிடம் 10000 ரூபாய் வாங்குகிறோம் என்றால் பெரிய பதிப்பகங்களிடம் (9 அரங்கு எடுத்தவர்களிடம் 300000 ரூபாய் நன்கொடையாக வாங்குகிறோம். PREMIUM த்திற்கு தான் அவர்களுக்கு கொடுக்கிறோம். அது கூட அவர்களுக்கு PRIMEஆன இடமாக இருக்காது. ஒரு ஓரமான இடம் தான் தருகிறோம். அவர்களும் வளர்ச்சியைப் பொறுத்துதான் தேவையைப் பொறுத்துதான் அவ்வளவு அரங்குகள் எடுக்கிறார்கள். வளர்ச்சி என்பது ஒரு ஆரோக்கியமான சூழல்தானே. விஷயம்தானே.

120 பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டதென்றால், அதில் அந்த 120 பேரும் விற்பனையாளர்கள்தான். அவர்களுக்கு ஏன் தர யோசிக்கிறோம் என்றால் அவர்களிடம் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான புத்தகங்கள் தான் இருக்கிறது. பதிப்பகமாய் இருந்தால் உதாரணமாய் எங்கள் கடையில் சிக்ஸ்த்சென்ஸ் வெளியீடுகளைத் தவிர வேறு எந்தப் பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்களும் இருக்காது. விற்பனையாளர்கள் விஷயம் அப்படி அல்ல. ஈரோடு புத்தக கண்காட்சியில் ஒரு கடையில் இருக்கும் புத்தகங்கள் இன்னொரு கடையில் இருந்தால் அவர்களுக்கு அடுத்த வருடம் அங்கு ஸ்டால் கொடுக்கமாட்டார்கள். ஆனால் அது இங்கு சாத்தியப்படாது. அங்கு தனி நபர் முடிவெடுக்கக்கூடிய அதிகாரம் பெற்றவராய் இருப்பதால் அது அங்கு சாத்தியமாய் இருக்கிறது. இது ஒரு சங்கம், உறுப்பினர்களுக்குக் கொடுத்து தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அவர்களுக்குக் கொடுத்த பிறகுதான் மற்றவர்களைப் பற்றியே கவனம் செலுத்த முடியும். இதையெல்லாம் தாண்டித்தான் நாங்கள் 80 உறுப்பினர் அல்லாதோரை தேர்வு செய்திருக்கிறோம். இவர்கள் ஏதேனும் தனித்தன்மை வாய்ந்த புத்தகங்கள் போட்டு இருக்கிறார்களா என்பதையெல்லாம் பார்த்து தான் தேர்வு செய்கிறோம். நீங்களே நான்கு அரங்குகளில் ஒரே மாதிரியான புத்தகத்தைப் பார்த்தால், இந்த புத்தகம் தான் எல்லா இடத்திலும் இருக்கும்போல என்று நினைக்க ஆரம்பித்து விடுவீர்கள். இந்த நிலையைத் தவிர்க்க தான் sellersக்கு நாங்கள் ஸ்டால் வழங்கத் தயங்குகிறோம். இன்னொன்று எல்லோருமே யார் ஒருவர் தன், brand ஐ building செய்து இருக்கிறார்களோ, உதாரணமாய் வானதி, கண்ணதாசன் பதிப்பகம், நர்மதா, கிழக்கு, காலச்சுவடு, உயிர்மை, சிக்ஸ்த்சென்ஸ் போன்ற எத்தனையோ கடைகளுக்கு வெறெங்கும் செல்லாமல் நேராக அவர்களிடம் மட்டும் சென்று வேண்டிய புத்தகங்களை வாங்கிக் கொண்டு சென்று விடுகிறார்கள்.

எழுத்தாளர்கள் மத்தியில் சென்னை புத்தக கண்காட்சி பற்றிய பார்வை எப்படி இருக்கிறது?

எழுத்தாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுப் பற்றி முழுமையாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் எங்களது எழுத்தாளர்கள் எல்லாருமே மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் எல்லோருமே புத்தகக் கண்காட்சிக்கு தனது புத்தகம் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். வருஷம் முழுவதுமே அவர்கள் புத்தகங்கள் வெளி வந்துக் கொண்டிருந்தாலும், புத்தக கண்காட்சியின்போது வெளி வருவதைப் பெரிதும் விரும்புகிறார்கள். சென்னை புத்தகக் கண்காட்சிக்கென்றே 30,000 தலைப்புகளில் புத்தகங்கள் புதியதாய் வந்திருக்கிறது. மேடைப் பேச்சாளர்களும்கூட எங்கேபோய் பேசியிருந்தாலும், ஏன் வெளி நாடுகளுக்குச் சென்று பேசியிருந்தாலும்கூட சென்னை புத்தகக் காட்சியில் பேசுவதில் பெருமிதம் அடைகிறார்கள்.

சென்னை புத்தகக் கண்காட்சியை, சென்னையின் மையமாக கருதப்படும் தென்சென்னையில் மட்டும் நடத்துவதும், வடசென்னை போன்றப் பகுதிகளை புறக்கணிப்பதும் ஏன்?

நீங்களே சொல்லிவிட்டீர்கள். சென்னையின் மையப் பகுதியில் நடத்துகிறீர்கள் என்று. எல்லாருக்கும் மையமாக இருக்கும் பகுதியில்தானே நடத்த வேண்டும். மத்திய சென்னையிலும் (ஜெயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய பள்ளி, அமைந்தகரை) நடத்திவிட்டோம். வடசென்னையில் இவ்வளவு பெரிய இடம் இல்லை. இருந்தால் நடத்துவதற்கு ஆட்சேபனை இல்லை. சின்னதாய் (200 அரங்குகள்) செய்தால் அதில் எங்களுக்கு நஷ்டம் தான் வருகிறது. மதுரையில் எங்களுக்கு நஷ்டம் வர இது தான் காரணம். சென்னைப் புத்தகக் கண்காட்சியே பிரம்மாண்டமாய் செய்வதால் தான் எங்களுக்கு sponser கிடைக்கிறார்கள். இதில் செலவு போக வரும் மீதி பணத்தை வைத்து சின்னதாய் ஒரு இடத்தில்தான் நடத்த முடியும். அதைத் தான் மதுரையில் செய்கிறோம். இன்னொரு இடத்திலும் நடத்தினால் பபாசி அடையும் நஷ்டத்திற்கு பொறுப்பேற்பதற்கு யாரும் இல்லை. அதனால் தான் வேறு மாவட்டங்களில் மற்றவர்கள் எடுத்து நடத்தினால் அதற்கு நாங்கள் முழு ஆதரவு கொடுக்கின்றோம். சென்னையிலே பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் சென்னை புத்தக சங்கமம் என்று நடத்துகிறார்கள். அதற்கு நாங்கள் ஆதரவு தருகிறோம். யார் நடத்தினாலும் அதற்கு எங்களால் ஆதரவுதான் தர முடியும், நாங்களே எடுத்து நடத்தினால் அதில் அடையும் நஷ்டத்திற்கு எங்கள் உறுப்பினர்களிடம் பதில் சொல்ல வேண்டும். மதுரையில் பபாசிக்கு நஷ்டம் வருகிறது என்னும்போது சில உறுப்பினர்கள் அப்படியென்றால் அங்கே ஏன் நடத்துகிறீர்கள் என்கிறார்கள். நான் முன்னே சொன்னதுபோல சென்னை புத்தகக் காட்சியிலிருந்து வரும் உபரி வருமானத்தில்தான் மதுரை புத்தகக் காட்சி நடத்தப்படுகிறது. பபாசிக்குதான் அங்கு நஷ்டமே தவிர அங்கே அரங்கு அமைத்த பங்கேற்பாளர்களுக்கல்ல. அத்துடன் பபாசி லாப நோக்கற்ற வாசிப்புத் தளத்தை விரிவாக்கும் உயரிய நோக்குடன் செயல்படும் ஒரு அமைப்பு என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

வடசென்னையில் நடத்த முயற்சி எடுத்திருக்கிறீர்களா?

அந்த எண்ணம் எங்களுக்குள் இருந்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால் இது வரை நடத்த சரியான சந்தர்ப்பம் அமையவில்லை என்பது தான் உண்மை. வசதி வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். அமையும்போது கட்டாயம் நடத்துவோம். அங்கு நடத்தாததற்கு முக்கியமான காரணம், முன்னரே சொன்ன மாதிரி இவ்வளவு அரங்குகள் அமைக்கிற அளவிற்கு அங்கே பெரிய இடம் எதுவும் இல்லை. இதுவரை சென்னை புத்தகக் காட்சி அதிகமாய் மூன்று இடங்களில்தான் நடந்திருக்கிறது. ஒன்று காயிதே மில்லத்தில், இடையில் ஒரு சில இடங்களில் மாறி நடந்திருக்கிறது. அடுத்து நான்கு வருடங்களுக்கு மத்திய சென்னையில் உள்ள st.georgeல் தான் நடந்தது. அதன் பிறகு தான் இங்கே வந்தது. ஒவ்வொரு இடத்திற்கும் தகுந்தபடி வாங்கும் சக்தி, படிக்கிற மக்களின் அளவு எல்லாம் பெருமளவுக்கு மாறுகிறது. கூட்டம் அதிகமாய் வருவதும் படிக்கிற அளவும், வாங்கும் திறனும் தென்சென்னையில் அதிகம் என்பது உண்மை. பதிப்பாளர்கள் பெரும்பாலோர் திருவல்லிக்கேணி, திநகர், மேற்கு மாம்பலம், நந்தனம், மயிலை என்று இந்த இடங்களைச் சுற்றியே தான் இருக்கிறார்கள். இது தான் இவர்கள் புத்தகக் காட்சிக்குப் தேவையான புத்தகங்களை உடனுக்குடன் எடுத்து வரவும் வசதியாக இருக்கிறது. போய் வர வசதியாய் இருக்கிறது.

இந்த வருடம் நிகழ்ச்சி சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. வெளியில் பெரிய அரங்கம், சிற்றரங்கம் மற்றும் தினசரி குறும்படத் திரையிடல் போன்ற சிறப்பான ஏற்பாடுகள் பற்றி?

நன்றி. இங்கே ஒரு விஷயத்தைக் குறிப்பாகச் சொல்ல விரும்புகிறேன். மேடை நிகழ்ச்சிகள், சிற்றரங்கம், குறும்படம் இவை தேவையா என்று சிலர் கேள்வி கேட்கிறார்கள். ஈரோட்டில் புத்தகக் காட்சிக்கு ஒரு பிரபலம் வருகிறார் என்றால் அவருக்காகவே அங்கு ஒரு லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள். அவரே இங்கே வந்தால் அவருக்காகவே வருகிறவர்களின் எண்ணிக்கை குறைவு. ஆயிரக்கணக்கில்தான் இங்கே கூட்டம் சேரும். இங்கு பிரபலங்களுக்கு அந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து யாரும் புத்தகக்காட்சிக்கு வருவதில்லை. அதனால் நிறையப் பேர் என்ன சொல்கிறார்கள்…. இதற்கு ஏன் பணத்தை செலவு செய்கிறீர்கள். ஒரு காலத்தில் கூட்டத்தைக் கூட்டுவதற்கு இவர்களைக் கூப்பிடும் தேவையிருந்தது. இப்போது அதற்கு அவசியமில்லை என்ற நிலை இருக்கும்போது ஏன் அவர்களை அழைக்கிறீர்கள். இந்த இடத்தில் புத்தகக் காட்சி புத்தகங்களை விற்பதற்காக மட்டும்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கே ஏன் பிரபலங்களைக் கூட்டிவந்து வாசகர்கள் கவனத்தைக் கலைக்கிறீர்கள் என்கிறார்கள். வருபவர்கள் அவர்கள் பேச்சை மட்டும் கேட்டுவிட்டு புத்தகக் காட்சி அரங்குக்குள்ளேயே வராமல் போகும் வாய்ப்பிருக்கிறது என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. இதனால் நமக்குத்தானே நஷ்டம் என்று வாதிடுபவர்களும் இருக்கிறார்கள்.

நாங்கள் அதை எப்படிப் பார்க்கிறோம் என்றால் சாலமன் பாப்பையா பேசுகிறார், கமலஹாசன் வந்தார் என்றால் பத்திரிக்கையில் நிச்சயம் செய்தி போடுவார்கள். அதைப் பார்த்துவிட்டு இன்று அங்கே யார் வருகிறார்கள் என்று பார்க்கலாம் என்று சிலராவது வருவார்கள். நிச்சயமாக அவர்கள் புதிய வாசகர்களாகத்தான் இருப்பார்கள். நமது முக்கிய நோக்கம் வாசிப்புத்தளத்தை அதிகரிக்க வேண்டும். எல்லோரிடமும் படிக்கும் பழக்கத்தைப் பரவலாகக்கொண்டு செல்ல வேண்டும் என்பதுதானே? அப்படி வரும் கூட்டத்தில் பாதிப் பேராவது புத்தகம் வாங்கிச் செல்ல வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்து தான் இதைச் செய்கிறோம். ஒருவர் சொன்னார், ‘‘என்னங்க புத்தகம் படி, புத்தகம் படி என்பதைத்தானே ஒவ்வொரு பேச்சாளரும் ஒவ்வொரு விதமாய் சொல்லப் போகிறார்கள்'' என்று. ஆனால் நாங்கள் இதை ஒரு கலாச்சாரத் திருவிழாவாக நடத்தத்தான் விரும்புகிறோம். அதை மனதில் கொண்டுதான் செயல்படுகிறோம், பயணிக்கிறோம். புத்தகம் மட்டுமில்லாமல், புத்தகம் சார்ந்து இருக்கும் மற்றவற்றையும் கொண்டு வந்து இங்கே சேர்ப்பதன் மூலமும் மேடை நிகழ்ச்சிகளாலும் பல தரப்பட்ட இரசனை உடையவர்களின் கூட்டம் புத்தகக் காட்சியின் பக்கம் ஈர்க்கப்படுகிறது. இவர்களை நிரந்தர வாசிப்பாளர்களாக மாற்றத்தான் பல வகைகளிலும் முயற்சி செய்கிறோம். மற்றொருவிதமாகப் பார்த்தால் புத்தகக் காட்சிக்கு வருபவர்கள் நம் கலாச்சாரத்தைப் பற்றித் தெரிந்துக்கொள்ளவும் நம் வேர்களைத் தேடிப் பயணிக்கவும் இது உதவும். எல்லா வருஷமும் வழக்கமாய் பேச்சு, பட்டிமன்றம், கவிதை படிப்பது போன்று தான் நிகழ்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும்.

இந்த முறை தான் சற்று வித்தியாசமாய் மு.கலைவாணனின் பொம்மலாட்டம் நிகழ்ச்சியை நடத்தினோம், அதற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. (MIMING)என்று கோபியின் நிகழ்ச்சி ஒன்றை அரங்கேற்றினோம். அதற்கும் நல்ல வரவேற்ப்பு இருந்தது. ஊடகத்திலிருந்து தந்தி தொலைக்காட்சியின் ரங்கராஜ் பாண்டே, புதிய தலைமுறையில் இருந்து குணசேகரன், செவன்த் சேனலில் இருந்து விஜயன், விஜய் தொலைக்காட்சியிலிருந்து நீயா? நானா? நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஆன்டனி என்று இவர்களைக் கூப்பிட்டது வாசகர்களுக்குப் புது வித அனுபவமாய் இருந்தது. குறும்படங்கள் திரையிட்டதற்கான காரணம் மக்களின் வாசிப்புப் பழக்கத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த... அதை மனதில் கொண்டே குறும்படத்தின் கரு அமையுமாறு பார்த்துக்கொள்ளப்பட்டது. புத்தக வாசிப்பின் அவசியத்தை மக்களுக்கு அறிவுறுத்த உதவியாக அது இருக்கும் என்று நினைத்தோம். அதில் வெற்றியும் பெற்றோம். இன்னொன்று, ரொம்ப நாளாய் எழுத்தாளர்களும், வாசகர்களும் சந்தித்துக் கொள்ள ... தங்கள் கருத்துகளை நேருக்கு நேராகப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலை இருந்து வந்தது. பல வருடங்களுக்கு முன் இது மாதிரியான நிகழ்வுகள் நடக்கும், ஆனால் சமீபகாலமாக இம்மாதிரியான நிகழ்வுகளுக்கு வாய்ப்புகளை எற்படுத்தித்தர முயலாமல் விட்டுவிட்டார்கள். இடையில் ஒரு முறை புத்தகக் காட்சிக்கு உள்ளேயே இதற்கென ஒரு அரங்கை ஒதுக்கினார்கள். அடுத்த ஆண்டு அது கைவிடப்பட்டது. நாங்கள் இவையெல்லாம் கட்டாயம் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். இந்த முறை மனுஷ்யபுத்திரனிடம் இந்தப் பொறுப்பைக் கொடுத்திருந்தோம். இந்த வருடம் அந்த அரங்கில் நிறையக் கூட்டமிருந்தது. அடுத்த வருடம் இதைத்தாண்டியும் கூட்டம் வரும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

அடுத்த வருடம் இதில் என்ன மாறுதல், என்ன புதுவரவுகள் இருக்கும்?

இந்திய அளவில் உள்ள பெரிய பதிப்பாளர்கள் இதில் கலந்துக் கொள்வது இல்லை. அவர்களது டீலேர்ஸ்களில் ஒரு சிலர்தான் இதில் பங்கேற்கிறார்கள். அடுத்த முறை முக்கிய பதிப்பாளர்களையே இங்கே நேரடியாகக் கலந்துக் கொள்ள ஏற்பாடு செய்ய இருக்கிறோம். இந்த வருடம் ஊடக மையம் (MEDIA CENTRE) என்று உருவாக்கியதை போல, வெளியிடு உரிமை (PUBLICATION RIGHTS) வாங்குவதற்கென்று தனியாக அரங்குகள் சிலவற்றை அடுத்த வருடம் கொண்டு வர இருக்கிறோம். அங்கு (SALES) வியாபாரம் அதிகமாய் இருக்காது. (RIGHTS) உரிமைகள் விற்பது, வாங்குவது என சர்வதேச அளவில் வர்த்தகம் நடைபெறும். அதை இங்கு கொண்டு வரப் போகிறோம். பெரிய பதிப்பகங்களில் PROOF READER, COPYWRITER, EDITOR என்று இருப்பார்கள். அது போன்ற வேலைகளுக்கான பயிற்சியை அளிப்பதற்கான சில கருத்தரங்கங்களைப், பயிற்சிப் பட்டறைகளைக் கொண்டு வரலாமென்று இருக்கிறோம்.

மாநில மற்றும் மத்திய அரசாங்கத்திடமிருந்து சென்னை புத்தகக் கண்காட்சிக்கு எந்த மாதிரியான உதவிகள் கிடைக்கின்றன?

மதுரையில் நடத்தும் போதெல்லாம் அரசின் உதவி, பெரும் அளவில் எங்களுக்கு உள்ளது. அரசு ஆணை ஒன்று இருக்கிறது. அதன்படி ஒரு நாளைக்கு 1000 ரூபாய் தான் வாடகை வாங்கவேண்டும். அப்போது 30 நாளென்றால் 30000 தான் மொத்த வாடகை. ஆனால் அந்த இடம் நகராட்சிக்கு சொந்தமான இடமாய் இருந்தாகவேண்டும். மதுரையில் அரசின் இந்தச் சலுகையைப் பயன்படுத்த முடிவது எங்களது செலவைப் பெருமளவிற்குக் குறைக்கிறது. அதனால் தான் எங்களுக்கு இது ரொம்ப வசதியாய் இருக்கிறது. மற்றபடி அரங்க அமைப்பிற்கும் விளம்பரத்திற்கும் தான் எங்கள் தரப்பில் மதுரையில் அதிகம் செலவு ஆகும். இந்த வசதி சென்னையில் எங்களுக்கு இல்லை.
.
சென்னை புத்தகக் காட்சியைப் பொருத்தவரை இந்த இடத்தை வாங்கிக் கொடுத்ததே அரசுதான். அரசு என்றால் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் உதவியால்தான் இந்த இடத்தில் புத்தகக் காட்சி நடப்பதே சாத்தியமானது. அமைச்சர்களும், இந்திய ஆட்சிப்பணியில் இருக்கும் அனைத்து அதிகாரிகளும் புத்தக விரும்பிகளாக இருப்பதால்தான் இது சாத்தியமானது. இந்த இடமே கிடைக்காது போய்விடக்கூடிய ஒரு சூழ்நிலையில் அவர்கள் தான் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி நிலைமையைப் புரியவைத்து இடத்தை வாங்கிக் கொடுத்தார்கள். மெட்ரோ தண்ணீரோ, தீயணைப்புப் படை உதவியோ, போக்குவரத்து அனுமதியோ அரசாங்கச் சம்மந்தப்பட்ட எல்லா அனுமதிகளும் உதவிகளும் எங்களுக்கு முறைப்படி இவர்கள்தான் முயற்சியெடுத்துப் பெற்றுக்கொடுத்துள்ளனர்.

நிதி உதவி ஏதாவது?

நிதி உதவி என்று எதுவும் செய்யவில்லை. அப்படிச் செய்வதற்கு அரசாங்கத்திற்கு உள்ள நடைமுறைச் சிக்கல்கள் எங்களுக்கு நன்றாகவே தெரியும். எதிர்காலத்தில் நிறைய உதவிகள் கிடைக்கும் என்று நம்புகிறோம். நாங்கள் எங்களுக்கென ஒரு இடம் தனியாய்க் கொடுத்துதவச் சொல்லிக் கேட்கிறோம். அப்படி அரசாங்கம் தந்துவிட்டால் அங்கு நாங்கள் நிரந்தரமான ஒரு அரங்கை நிர்மாணித்துக்கொள்வோம். இல்லையென்றால் அவர்களையே கட்டிக்கொடுக்கச் சொல்லி வருஷா வருஷம் இதை நடத்தும்போது அதற்கான வாடகையை நாங்கள் கொடுத்துவிடுகிறோம். புத்தகக் காட்சி இல்லாத நாட்களில் வேறு நிகழ்ச்சிகளுக்கு இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அது சாத்தியம் இல்லை என்றால் TRADE CENTRE ல் நடத்த எங்களுக்கு மானியமாக ஒரு தொகையை அரசாங்கம் கெடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஏன் என்றால் TRADE CENTREல் நடத்த வேண்டும் என்றால் இதைவிட எங்களுக்கு 2 1/2 மடங்கு அதிகமாய் செலவாகும். இதை சரிக்கட்ட நாங்கள் ஸ்டாலுக்கான வாடகையைத் தான் உயர்த்த வேண்டி வரும். அது பதிப்பாளர்களுக்கு நட்டத்தையும் சுமையையுமே உண்டுபண்ணும். பத்தாயிரம் கொடுத்து ஸ்டால் எடுப்பவர்களே சில லட்சங்களுக்கு விற்றால்தான் லாபம் பார்க்க முடியும் என்ற நிலையில் வாடகையைப் பல மடங்கு உயர்த்துவது அவர்களை விற்பனையைப் பல மடங்கு பெருக்கவேண்டிய… நடைமுறை சாத்தியமில்லாத மன அழுத்தத்திற்கு ஆளாக்கக்கூடிய நிலையில்தான் கொண்டுப்போய் விடும். விற்பனையைப் பொருத்துதான் அவர்களால் வாடகை கொடுக்க முடியும். எங்களால் அவர்களிடம் வாடகையை அதிகமாய் கேட்க முடியாது. பதிப்பாளரின் கஷ்டம் எங்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் அவர்கள் சுமையைக் குறைக்க வேண்டித்தான் நாங்கள் வெளியே போய் நன்கொடை வாங்குகிறோம், மற்ற கட்டணங்களையும் நுழைவுக் கட்டணங்களையும் வாங்குகிறோம். அப்போதுதான் அவர்களுக்கு subsidy ஆக குறைந்த கட்டணத்தில் நாங்கள் அரங்கு தர முடியும். ஆனால் TRADE CENTRE சென்றால் இதை உயர்த்த வேண்டி வரும். அதை அவர்களால் தாங்க முடியாது. நஷ்டம் தான் வரும்.

95 சதவீத பதிப்பாளர்கள் என்னுடைய சந்தையை விரிவுபடுத்த ஒரு விளம்பரத்திற்காக மட்டுமே இங்கு ஸ்டால் போடுகிறேன் என்று சொல்லுகிற நிலைமை இங்கே இல்லை. எல்லோரும் இதை நம்பி இதிலிருந்து வரும் வருமானத்தை நம்பித்தான் இருக்கிறார்கள். அதனால் ஒரு மானியம் போல் 50 சதவீத செலவுகளை மாநில அரசு அல்லது மத்திய அரசு தந்தால் இங்கே நடத்தலாம். எங்களுக்கு இடம் கிடைக்குமா கிடைக்காதா என்ற பிரச்சனையும் இருக்காது. ஒவ்வொரு வருடமும் கட்டுமானம் சரியாய் இருக்கிறதா, மின் இணைப்புகள் நன்றாக பாதுகாப்பானதாக உள்ளதா? ஒளிவிளக்குகள் ஒழுங்காக எரிகிறதா மழையால் பாதிப்பு ஏற்படுமா என்றெல்லாம் கவலைப்பட வேண்டிய தேவை TRADE CENTREக்கு சென்றால் இருக்காது. அது AC ஹால் வேறு. பொதுவாகவே இரண்டு மணி நேரம் புத்தகக் காட்சியில் செலவிடலாம் என்று வருபவர்கள்கூட AC ஹால் என்றால் ஐந்து மணி நேரம் செலவு செய்து புத்தகங்களைப் பொறுமையாகப் பார்ப்பார்கள். இதனால் நிறயை வாங்க வாய்ப்புண்டு. இவை தான் அரசிடம் நாங்கள் முன் வைக்கும் கோரிக்கை.

தி.மு.க கட்சித் தலைவர் மு.கருணாநிதி சென்னை புத்தக கண்காட்சிக்கு செய்துள்ள உதவிகள் பற்றி?

தனிப்பட்ட முறையில் புத்தகக் காட்சிக்கு உதவி எதுவும் செய்யவில்லை. நீங்கள் அவர் ஒரு கோடி ரூபாய் கொடுத்ததை மனதில் வைத்து இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். அவர் பபாசிக்கு இந்தப் பணத்தைக் கொடுத்தார் என்று பலரும் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டார்கள். அதிலிருந்து ஒரு பைசாகூட சென்னைப் புத்தகக் காட்சி செலவுக்கென்று எடுக்க சட்டப்படி அனுமதி இல்லை. அவர் தன் சொந்தப் பணத்திலிருந்து கொடுத்த ரூபாய் ஒரு கோடியிலிருந்து வரும் வங்கி வட்டியில் இருந்து வருடாவருடம் 6 எழுத்தாளர்களை தேர்ந்தெடுத்து பபாசி மேற்பார்வையில் இந்த விருதைக் கொடுக்கிறோம். மற்றபடி அதிலிருந்து ஒரு பைசா கூட எங்களால் செலவு செய்ய முடியாது. அது ஒரு தனி டிரஸ்ட்(TRUST). பபாசியின் பொறுப்புகளுக்கு வருபவர்கள் அதில் தானாகவே டிரஸ்ட்டியாகி விடுவார்கள். பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு லட்ச ரூபாய் பரிசும் அவர்கள் வந்து போகிற செலவுக்கான கட்டணங்கள், தங்கும் செலவு எல்லாம் அந்தப் பணத்திலிருந்து செலவு செய்யத்தான் சரியாய் இருக்கும். நிறைய பேர் இந்த 1 கோடி ரூபாய் பணத்தை பபாசிக்கு கொடுத்தார் என்று நினைத்து விடுகிறார்கள். பபாசி புத்தகக் காட்சி நடுத்துவதற்கு ஆகும் மொத்த செலவு பல கோடிகள். முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருது என்ற பெயரில் தமிழ் எழுத்துப் பணியில் அவர்களின் பங்களிப்பிற்காக 5 தமிழ் எழுத்தாளர்களுக்கும் தமிழ் அல்லாத பிறமொழி எழுத்தாளர் ஒருவருக்கும், ஆங்கில எழுத்தாளர் ஒருவருக்கும் ஆண்டுதோறும் தரச்சொல்லி கொடுத்திருக்கிறார். போன வருடம் கொடுத்தோம். இந்த வருடம் வருகிற ஏப்ரல் மாதம் உலக புத்தக தினத்தன்று (23-04-2015) கொடுக்க இருக்கிறோம். விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்க குழுவொன்று அமைக்கிறோம். அதில் பபாசியோ கலைஞரோ தலையிடுவதில்லை. அந்தக் குழுவின் முடிவே இறுதியானது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இந்த புத்தக கண்காட்சியில் என்ன மாதிரியான சலுகைகள் நீங்கள் கொடுக்கிறீர்கள்?

12 வயதுக்குள் உள்ளவர்களுக்கு நாங்கள் நுழைவுக் கட்டணம் வாங்குவதில்லை. ஆனால் நாங்கள் அவர்கள் 12 வயதுக்குள் உள்ளவர்களாக இருக்கிறார்களா என்று மிகவும் கவனமெடுத்துப் பார்ப்பதில்லை. அவர்கள் அடையாள அட்டையைக் காண்பித்தாலே எந்த வயதினராய் இருந்தாலும் உள்ளே விட்டுவிடுகின்றோம். இதில் சிக்கல் என்னவென்றால் நாங்கள் இதை நடத்தும்போதெல்லாம் அவர்களுக்கு அரையாண்டு விடுமுறையாய் இருக்கிறது. அதனால் அதிகமாகப் பெரும்பாலான மாணவர்கள் ஊருக்கோ சுற்றுலாவிற்கு என்று வெளியில் சென்று விடுவதால் இந்த வாய்ப்பை அதிகமாகப் பயன்படுத்திக்கொள்ள அவர்களால் முடியாமல் போகிறது.

பெருமாள் முருகனின் மாதொரு பாகன் பிரச்சனை மூலமாக எழுந்துள்ள கருத்துரிமை பாதுகாப்பு பற்றியான பபாசியின் நிலைப்பாடு என்ன? மற்றும் அரங்க வெளியில் அதற்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடந்தது. அதைப் பற்றிய உங்கள் கருத்து?

பபாசியில் 475 உறுப்பினர்களுக்குமேல் இருக்கிறார்கள். அவர்களது கருத்துக்களை கேட்டுத்தான் நாங்கள் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியும். அதற்கு எங்கள் பொதுக்குழுவை 21 நாட்களுக்கு முன் அறிவிப்பு கொடுத்துக் கூட்ட வேண்டும். அது உடனடி சாத்தியமில்லை. அதனால் தனிப்பட்ட கருத்து எதையும் இங்கு சொல்ல முடியாது. எங்கள் உறுப்பினர்களில் சிலரை நாங்கள் கேட்டதில், சிலர் பெருமாள் முருகனுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதனால் எங்களது உறுப்பினர்களை மீறி நாங்கள் எதுவும் கருத்து சொல்லவோ, போராட்டத்தில் ஈடுபடவோ முடியாது. இன்னொன்று, எழுத்தாளர் பெருமாள் முருகனே என் புத்தகத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன், யாரும் விற்க வேண்டாம் என்று அறிக்கை விட்டிருக்கிறார். அவருடைய நிலைப்பாடு என்னவென்று எங்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. அதன் பதிப்பாளரும் எங்களிடம் இந்த மாதிரி ஒரு பிரச்சனை இருக்கிறது, இதற்கு என்ன செய்யலாம் பபாசி இப்படி செய்தால் எனக்கு உதவியாக இருக்கும் என்று எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை. பபாசியின் வேலை என்னவென்றால் புத்தகக் காட்சி நடத்துவது, பதிப்பாளர்களுக்கு முறையான தொழில்நுட்ப பயிற்சிகளைக் கொடுப்பது. அதனால் இந்த மாதிரியான விஷயங்களைத்தான் நாங்கள் செய்கிறோம். மற்றபடி எதுவுமே செய்யமுடியாத ஒரு நடுநிலைமைத் தன்மையுடன் தான் நாங்கள் இருக்க வேண்டியுள்ளது. அது போல எந்த ஆட்சி பதவிக்கு வந்தாலும் எங்களுக்கு அது வேண்டிய ஆட்சி தான். தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புக்கு இங்கே இடம் இல்லை. அதனால் அதைப்பற்றி கருத்து சொல்ல நாங்கள் விரும்பவில்லை. இதை முன்பே நாங்கள் பத்திரிகை செய்தி மூலம் தெரிவித்திருந்தோம். அரசும் காவல்துறையும் கல்லூரி நிர்வாகமும் எங்களுக்கு அங்கே அனுமதி கொடுத்திருப்பதே புத்தகக் காட்சி நடத்த மட்டும் தான். ஏதாவது பிரச்சனை அங்கு ஏற்பட்டது என்றால் அரசும் காவல் துறையும் அந்த அனுமதியை ரத்து செய்துவிடும். கல்லூரி நிர்வாகமும் அவர்கள் இடத்தில் அசம்பாவிதம் ஏதாவது நடந்தால் புத்தகக் காட்சியை பாதியில் நிறுத்தச் சொல்லிவிடும். போராட்டக்குழுவினர் எங்களிடம் வந்து கேட்கும் போதும் ‘‘இல்லை ஐயா நாங்கள் இதில் எதுவும் செய்ய முடியாது''. இங்கு தங்களுடைய எந்தவிதமான நடவடிக்கையையும் அனுமதிக்க முடியாது என்று தான் சொன்னோம்.

ஆர்ப்பாட்டம் நடந்ததை பற்றி?

அங்கு ஆர்ப்பாட்டம் செய்வதற்கு யாருக்குமே உரிமையே இல்லை. அந்த இடத்திற்கு நாங்கள் அனுமதி பெற்றிருப்பது புத்தகக் காட்சி நடத்த மட்டுமே தான். அங்கு வந்து பெருமாள் முருகனுக்கு எதிர்ப்பாகவோ இல்லை ஆதரவாகவோ செயல்படுவதற்கு யாருக்குமே உரிமை இல்லை. அதற்கு அனுமதியும் எங்களால் தரமுடியாது என்பதுதான் யதார்த்தம். எங்களுடைய நிலைப்பாடு இதில் நாங்கள் கருத்து எதுவும் சொல்வதற்கில்லை என்பதுதான்.

அரசாங்கத்தால் தடை செய்யப்படாத ஒரு புத்தகத்தை காவல்துறையினர் விற்கக் கூடாது என்று சொல்வது பற்றி பபாசியின் பார்வை என்ன?

எங்களிடம் காவல் துறையினர் அப்படி அந்தப் புத்தகத்தை விற்க வேண்டாம் என்று எதுவும் சொல்லவில்லை. நேரடியாக ஏதாவது அரங்குக்கு சென்று அவ்வாறு சொன்னார்களா என்பதும் எங்களுக்கு தெரியாது. யாரும் அப்படி காவல்துறை சொன்னதாக எங்களிடம் புகார் செய்யவில்லை. மேலும் அந்த புத்தகம் விற்கப்பட்டுக் கொண்டு தான் இருந்தது. வாசகர்கள் பல பேர் கைகளில் அதை நாங்களே பார்த்தோம். நாங்களும் யாரிடமும் சென்று அதை விற்காதீர்கள் என்று சொல்லவும் இல்லை. ஆனால் அரசு இதை தடை செய்யப்பட்ட புத்தகம் என்று சொல்லி இருந்தால் குறிப்பிட்ட அந்த பதிப்பாளரிடமோ விற்பனையாளரிடமோ நிச்சயம் நாங்கள் சென்று விற்கக்கூடாது என்று சொல்லியிருப்போம். ஏனென்றால் எங்கள் விதிமுறை இதை வலியுறுத்துகிறது. அதை ஒப்புக் கொண்டுதான் பங்கேற்பாளர்கள் அரங்கு அமைக்கிறார்கள். ஆனால் அரசு இந்தப் புத்தகத்தை விற்கக்கூடாது என்று எதுவும் சொல்லவில்லை.

இந்த முறை புத்தகக் காட்சியில் சுகாதார அம்சத்தில் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என்றும், மோசமான கழிப்பறைகள் அமைக்கப்பட்டிருந்தன என்பதும் மக்களிடம் பெரும் குற்றச்சாட்டாய் இருந்ததே?

இதில் குறைகள் இருந்தது உண்மை தான். ஒப்புக்கொள்கிறோம். இங்கே ஒன்றைத்தான் திரும்ப திரும்பச்சொல்ல வேண்டி இருக்கிறது. இடம் கிடைக்குமா? கிடைக்காதா என்று போராடிக் கொண்டிருக்கிற பிரச்சனை இருக்கும்பட்சத்தில், ஏற்பாடுகளை விரிவாகவும் குற்றம் குறை இல்லாத வகையிலும் செய்வதற்கான நேரம் எங்களுக்குக் குறுகிப் போய் விடுகிறது. அந்த குறுகிய நேரத்தில் புதியதாய் கால்வாய் ஒன்றைத் தோண்டுவதோ, கழிவுநீர் செல்ல குழாய் அமைப்பதோ சாத்தியமில்லாத சூழல். அங்கே இருக்கிற வசதிகளைப் பிரயத்தனப்பட்டு எவ்வளவு திறமையாகத் திட்டமிட்டு முழுமையாய் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அவ்வளவு பயன்படுத்திக் கொள்ள அனைத்து முயற்சிகளையும் செய்கிறோம். ஏற்கனவே 3000 மாணவர்கள் தங்கியிருக்கிற... அவர்கள் தினமும் பயன்படுத்துகிற கழிவறை வசதிகளைத்தான் முடிந்த அளவுக்கு செப்பனிட்டு நாங்களும் பயன்படுத்துகிறோம். 3000 மாணவர்களுக்கென்று ஏற்பாடு செய்யப்பட்ட வசதியை லட்சக்கணக்கான மக்கள் வந்து உபயோகிக்கிறபோது பிரச்சனை வரத்தான் செய்யும். நாங்களும் முடிந்த அளவுக்கு முயற்சித்து இதை ஒழுங்குபடுத்தத்தான் பார்க்கிறோம். இன்னும் 15 அல்லது 20 நாட்களுக்கு முன்னரே அந்த இடம் கிடைத்தாலோ, இல்லை இந்த இடத்தில்தான் நிரந்தரமாக புத்தகக் காட்சியை நடத்தப் போகிறோம் என்ற நிலை இருந்தாலோ நாங்கள் மூன்று அல்லது நான்கு லட்சம் செலவு செய்துக்கூட அந்த வசதியை நிரந்தரமாய் ஏற்படுத்தித் தரத் தயாராய் இருக்கிறோம். அடுத்த முறை இதில் மிகவும் கூடுதல் கவனம் செலுத்துவோம் என்று உறுதி கூறுகிறோம்.

புத்தகக் கண்காட்சி அரங்கிற்கு வெளியில் விற்கப்படும் உணவு பலகாரங்கள் சாதாரண விலையை விடக் கூடுதலாக விற்கப்படுவது ஏன்?

நாங்கள் சரவண பவன் விலைக்கும் இல்லாமல் அதே சமயம் டீக்கடை விலைக்கும் இல்லாமல் இரண்டுக்கு இடையில் இருக்கும் ஒரு விலைக்கு தான் விற்க சொல்லி வலியுறுத்துகிறோம். விலையை நிர்ணயம் செய்வதற்கு முன் நாலைந்து உணவகங்களுக்கு சென்று விசாரித்து அவர்களுடைய விலைப்பட்டியலைப் பெற்று ஒப்பிட்டுப் பார்த்து தான் நியாயமான விலையை நிர்ணயம் செய்கின்றோம். விற்பனையாளர்களும் இந்த இடத்தில் நன்கொடை செலுத்திதான் வியாபாரம் செய்கிறார்கள். நிரந்தரமாக அவர்களுக்கு சொந்தமானதாக... எல்லா வசதிகளும் இருக்கிற ஒரு இடத்தில் இருந்து விற்பதற்கும் இங்கே ஆட்களை சமையல் சாமான்களைக் பாத்திரங்களைக் கொண்டு வந்து சமைத்து விற்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? இது அவர்களுக்குக் கூடுதல் சுமைதானே? செலவுதானே... அத்தனை பேரையும், பொருளையும் இங்கே கொண்டு வந்து வேலை செய்வதில் அவர்களுக்கு கொஞ்சம் செலவு அதிகம் ஆகத்தான் செய்யும். உண்மை என்னவென்றால் எங்களுக்கு இங்கே உணவகம் நடத்தினால் கட்டுப்படியாகவில்லை என்று எல்லாரும் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். அப்படி இருந்தும் அவர்கள் முன் வந்ததுடன் வெளியில் நடுத்தரமான உணவகங்களில் என்ன விலைக்குக் கொடுக்கிறார்களோ அந்த விலைக்கு தான் விற்கிறார்கள். அதை நாங்கள் குழு அமைத்து கண்காணிக்கிறோம். புத்தகக் காட்சி நிர்வாகத்தினர் அனைவரும் இரவு சாப்பாடு அங்குதான் சாப்பிடுகிறோம். நல்ல சுகாதாரமாகத்தான் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் செய்யாததாகவும் இருக்கிறது. பத்து தினங்களுக்கு மற்ற உணவங்களில் சாப்பிட்டு பார்த்தால்தான் இந்த உண்மை தெரியும். அதன் தரத்திற்கு ஏற்ற விலையை அவர்கள் வைக்கிறார்கள் என்றுகூட அதைச் சொல்லமுடியாது. அவர்கள் கொடுக்கும் தரத்திற்கும் குறைவான விலையைத்தான் அவர்கள் வைத்திருந்தார்கள். காரணம் இதன் மூலம் அவர்கள் தங்களது நிறுவனத்தை மக்களிடம் பிரபலமாக்கவும், பல லட்சம் பேரிடம் தங்கள் பிராண்ட் பெயரை கொண்டு சேர்க்கவும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளத்தான் விரும்புகிறார்கள். அதனால் விலை அதிகம் என்பதை ஒத்துக்கொள்ளவே முடியாது. விடுமுறை நாட்களில் பங்கேற்பாளர்களின் மதிய உணவு அவர்களிடமிருந்து மிகக்குறைந்த விலைக்குதான் வாங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 1700 பேருக்கு என்று இந்த ஆண்டு 7 நாட்களில் சுமார் 12000 பேர் அவர்கள் சமைத்த உணவைத்தான் சாப்பிட்டிருக்கிறார்கள்.

இந்த முறை அதிகமான விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு உள்ளதே? இது மக்களின் கவனத்தை திசைத் திருப்பக்கூடியச் செயலாக அமையதா?

ப்ளெக்ஸ்(FLEX), பேனர் விளம்பரங்கள் எல்லாம் ஸ்பான்சர்களுடையது. ஏற்கனவே சொன்னது போல அவர்கள் கொடுக்கிற நன்கொடையால் தான் இந்த நிகழ்வையே நடத்த முடிகிறது. அவர்கள் தயவு இல்லாமல் புத்தகக் கண்காட்சியே நடத்த முடியாது. அப்படி நடத்த வேண்டுமென்றால் வாடகையை மூன்று மடங்கு உயர்த்தினால்தான் சாத்தியம். அதனால் இதை நாம் தவிர்க்கவே முடியாது. நுழைவுக் கட்டணமும் நாங்கள் குறைவாய் பத்து ரூபாய்க்கு தான் வைக்கிறோம். அந்த இடத்திற்கு மட்டுமே கிட்டதட்ட நாற்பது லட்சம் பராமரிப்பு செலவிற்கான கட்டணமாக மட்டும் செலவாகிறது. எல்லா செலவுகளையும் சேர்த்து பல கோடி ரூபாய் செலவு ஆகிறது. இதையெல்லாம் நாங்கள் ஈடுகட்ட நிச்சயம் ஸ்பான்சர்சின் உதவி தேவையாய் இருக்கிறது. ஆனால் சட்ட விரோதமானதோ அரசியல், ஆபாசம், சம்பந்தப்பட்ட விளம்பரங்களோ மது, புகை போன்ற சமூகத்திற்கும் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருள்களோ எவ்வளவு கோடி கொடுத்தாலும் அங்கே விளம்பரப்படுத்த அனுமதி அளிப்பதில்லை.

காயிதேமில்லத் கல்லூரியில் நடந்த புத்தகக் கண்காட்சியில் இருந்த உணர்வு, இப்பொழுது நடத்தப்படும் YMCA மைதானத்தில் கிடைக்கவில்லையே அதை பற்றி?

நான் முதல் புத்தகக் காட்சியில் இருந்து பார்த்துக்கொண்டு வருகிறேன், இப்போது 38வது புத்தகக் காட்சியையும் நடத்தி முடித்தாகிவிட்டது. இப்போது இங்கு வரும் கூட்டத்தினரில் பெரும்பாலானோர் புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள். 38 வருடமாக வருபவர்கள் எத்தனை பேர் இப்போது வரும் நிலையில் இருப்பார்கள் என்று தெரியவில்லை. இப்போது கூட வயதான சிலரிடம் சென்று சென்னை புத்தகக் காட்சி என்று பேச்சை எடுத்தாலே காயிதே மில்லத்தில் நடக்குமே அது தானே என்று கேட்பார்கள். இதை வைத்துப் பார்க்கும்போது அங்கு அப்போது வந்தவர்கள் இங்கு இப்போது வரும் நிலையில் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். இந்த மாதிரியான உணர்வு ஒரு சிலருக்கு ஏற்படக் காரணம் அவர்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகக்காட்சிக்கு வந்தவர்களாக இருக்கக்கூடும். காட்சி நடத்தும் இடத்தில் புதிய இளைய தலைமுறையினர் பொறுப்புகளுக்கு வந்துள்ளதால் தொழில் நுட்ப வசதியில் புத்தகக் காட்சி நடத்தப்படும் இடத்தில் ... அதன் அமைப்பில் நிறைய மாற்றங்கள் நடந்திருக்கிறது. இதை மனதில் வைத்துக்கொண்டு தவறாகப் புரிந்துகொண்டு இந்த இடம் வணிகமயமாகிப் போய்விட்டது என்பதாக தங்கள் உணர்வுகளை எப்படி விவரிப்பது என்று தெரியாமல் இப்படிப்பட்ட வார்த்தைகளால் தவறாக வெளிப்படுத்துகிறார்களோ என்னமோ? புத்தகக் காட்சி நவீனமாய் இப்போது மாறியிருக்கிறது, முன் நடத்திய மாதிரியே ஓலைக் கொட்டகை போட்டு நடத்தினால் அப்போது இருந்ததுபோலவே இருக்கிறது என்று சொல்வார்களோ? இது வழக்கமாக வேட்டி கட்டிக்கொண்டிருப்பவர், பாவாடை தாவணி அணிபவர் தேவை கருதி தட்ப வெப்பம் போன்ற சூழல் கருதி கோட் (PANT) பேன்ட், ஷர்ட் போட்டார் என்றால் அவர் நமது பாரம்பர்யத்தைத் தொலைத்துவிட்டார் என்றோ வணிகமயமாக மாறிவிட்டார் என்றோ வாதிடுவதுபோல்தான் உள்ளது. முன்னை விட இப்போது புத்தகங்களைத் தயாரிப்பதிலும் தொழில்நுட்பத்தில் நாம் பல மடங்கு வளர்ச்சி அடைந்திருக்கிறோம். இது எம்.எஸ்.விஸ்வநாதன் போல் இசையமைக்க முடியாது, கண்ணதாசன் போல் பாட்டெழுத முடியாது என்று சொல்வது போல மேம்போக்காக சொல்வதுபோல் இருக்கிறது. கண்ணதாசனையோ எம்.எஸ்.விஸ்வநாதனையோ குறைத்து மதிப்பிட்டு நாங்கள் இதை இங்கே சொல்ல வரவில்லை. இவர்கள் மாமேதைகள். ஆனால் இன்று இரசனை பெரிதும் மாறியிருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத் தயங்கக்கூடாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இன்னும் சொல்லப்போனால் முன்பை விட அரங்க வாடகை இப்போது செய்துகொடுக்கும் வசதிகளோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. பபாசி வணிக நோக்கமற்றது என்பதை இங்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். பபாசி நிர்வாகக் குழுவினர் எல்லாரும் தங்களது வேலையையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு சேவை மனப்பான்மையோடுதான் பணிபுரிகிறார்கள்.

இந்த வருடம் அதிகமாக விற்பனையான புத்தகங்கள் எவை? எந்தத்துறை சார்ந்து புத்தகங்கள் அதிகமாய் விற்பனையானது?

அதிகமாய் விற்பனையாகும் புத்தகங்களின் தன்மை என்பது வருஷத்திற்கு வருஷம் மாறிக்கொண்டே இருக்கும். இன்னொன்று இடத்திற்கு இடமும் இது மாறும். சினிமாவுக்கு எப்படி A,B,C CENTER என்று சொல்கிறார்களோ, அது போல இதற்கும் வித்தியாசங்கள் உண்டு. சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு இங்கெல்லாம் விற்கும் புத்தகங்கள் வேறு மாதிரி இருக்கும், மதுரை, திண்டுக்கல், காரைக்குடி, சிதம்பரம் என்று போகும் போது அங்கு நடக்கும் விற்பனை வேறு மாதிரி இருக்கும்.

சென்னையில் என்றால், ஒரு காலத்தில் நாவல்கள் தான் அதிகமாய் விற்கப்பட்டு வந்தது. அதன் பிறகு சமையல், ஜோசியம் இது போன்ற புத்தகங்கள் விற்கப்பட்டு வந்தது. அதன் பிறகு சுய முன்னேற்றம், பணம் சம்பாதிக்க என்ன வழி போன்ற புத்தகங்கள் அதிகம் விற்கத் தொடங்கியது. ஆனால் இப்போது மக்களுக்குப் பணம் ஒரு பெரிய விஷயமாக இல்லை. பணத்திற்கு மேலும் நிறைவான வாழ்க்கைக்குத் தேவையான ஏதோ ஒன்று இருக்கிறது என்று இப்போது பெரும்பாலான மக்கள் புரிந்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இப்போது நம் முன்னோர்கள் பற்றியும், அவர்கள் படைத்த இலக்கியங்கள் பற்றியும் தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. 25 வருடங்களுக்கு முன்பெல்லாம் தமிழ் புத்தக அரங்கு என்றால் அந்தப் பக்கமே வர மாட்டார்கள். தப்பித் தவறி வந்துவிட்டால் தீயை மிதித்து விட்டதுபோல் அரண்டு விலகி ஓடிப்போவார்கள். இப்போது அந்த மாதிரியான நிலைமை இல்லை. தமிழில் இப்போது தயாரிப்பிலும் சரி, உள்ளடக்கத்திலும் சரி, கட்டுமானத்திலும் சரி, மொழி வளத்துடன் சொற் செறிவுடைய நடையாலும் உலக தரத்துக்கு நிகராய் நாம் இருக்கிறோம். புத்தகக் காட்சியின் மொத்த விற்பனையில் 75 சதவீதம் தமிழ் புத்தகங்கள்தான் விற்கிறது. அந்த மாற்றம் இப்போதுதான் நிகழ்ந்திருக்கிறது. நமது இலக்கியங்களில் என்ன இருக்கிறது என்று அறிந்துகொள்ளும் ஆர்வம் நிறைந்த மக்கள் கூட்டம் உருவாகி வருகிறது. முன்பெல்லாம் அந்த ஆண்டு சாகித்திய அகாடெமி பரிசு வாங்கிய புத்தகம் என்றால் அது புத்தகக் காட்சியில் மிஞ்சிப்போனால் நூறு பிரதிகள்தான் விற்கும். போன வருடம், அதற்கு முந்தின வருடம் எல்லாம் சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற புத்தகங்கள் அதன் விலை அதிகமாக இருந்தபோதிலும் பல ஆயிரம் பிரதிகள் விற்றன. இந்த வருடம் மாதொருபாகன் பிரச்சனை எழுந்து மக்களின் கவனம் திசைதிரும்பிப் போனதால் சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற பூமணியின் அஞ்ஞாடி அதிக அளவிற்கு விற்க முடியாமல் போனது. இவருக்குச் சென்ற ஆண்டுதான் கலைஞர் பொற்கிழி விருது கொடுக்கப்பட்டது. பதிப்பாளர்கள் மகிழும் அளவிற்கு இப்போது நன்கு புத்தகங்கள் விற்கப்படுவது படிக்கும் ஆர்வம் அதிகரித்திருப்பதையே காட்டுகிறது. எழுத்தை முழு நேரத் தொழிலாகக்கொள்வதற்கான காலம் கனிந்து வந்திருக்கிறது. முன்பு போல கோவில், புராண கதைகளில் இப்போது அவ்வளவாக மக்களுக்கு ஆர்வம் இல்லை. தத்துவங்கள், ஜென், சூபி, ஜெ.கே, ஓஷோ என்று அதற்கு மேலே ஒரு தேடுதலில் இறங்கும் சூழ்நிலை இங்கு அதிகரித்திருக்கிறது. நவீன இலக்கியங்கள் நன்றாக விற்கிறது. சிறப்பாக மொழிமாற்றம் செய்யப்பட்ட நூல்கள்..அரசியல்...வரலாறு சார்ந்த நூல்கள் விரும்பிப் படிக்கப்படுகின்றன. தொலைக்காட்சித் தொடர்களிலே ஒரு காலத்தில் தங்கள் பொழுதைத் தொலைத்துக்கொண்டு இருந்த மக்கள், இப்போது அது சலித்துப்போனதால் மீண்டும் நாவல் படிக்க தொடங்கி இருக்கிறார்கள். புத்தகம் படிக்கும் பழக்கம்தான் கற்பனையை வளர்க்கும். அதற்குத் தீனி போடும். மக்களின் படிக்கும் (PATTERN)மாதிரி மக்களின் வாசிப்புத்தன்மை மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த வருடம் அரசியலைப் பற்றி அதிகம் தெரிந்துக்கொள்ள மக்கள் விரும்புவதை அந்த வகையான புத்தகங்கள் அதிகமாக விற்றதிலிருந்து தெரிந்துகொள்ள முடிந்தது. அரசியல், தலைவர்கள் வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்ட புத்தகங்கள் அதிகமாய் விற்கத் துவங்கியுள்ளது.

இந்த வருடம் அரங்கம் உள்ளே அமைக்கப்பட்ட தரைத் தளம் மிக மோசமாக அமைக்கபட்டிருந்தது அதைப் பற்றி ?

மீண்டும் அதே காரணத்தைதான் சொல்ல வேண்டும். போன முறை 30 நாட்களில் அரங்கம் நிர்மாணம் செய்ததை இம்முறை 12 நாட்களில் செய்து முடித்தோம். அதற்கிடையில் மழை வேறு பெய்து இரண்டு நாட்களைத் தின்றுவிட்டது. பழைய தொழில் ஒப்பந்ததாரர் (CONTRACTOR) இவ்வளவு குறைவான நாட்களில் வேலையை முடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். அதனால் புது ஆட்களை வைத்துதான் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டி இருந்தது. நியாயமாகப் பார்த்தால் சென்ற முறையை விட இம்முறை உள்அமைப்பு சிறப்பாக அமைந்திருந்ததாக மக்கள் கூறினார்கள். போன முறை எல்லாம் பலகைதான் கீழே போட்டு இருந்தோம். இந்த முறைதான் நடைபாதையை இரும்பில் வலிமையுடன் அமைத்திருந்தோம். பலகை என்றால் நான்கு ஆணி போட்டு அடித்து இணைத்துவிட்டால் வேலை முடிந்துவிடும். ஆனால் இரும்பிற்கு தகடுகளை ஒன்றோடு ஒன்று சேர்த்து வெல்டிங் செய்ய வேண்டியிருந்தது. பலகை அமைப்பிற்கு எடுத்துக்கொண்ட நேரத்தை விட மூன்று மடங்கு நேரம் இதற்கு தேவைப்பட்டது. நேரமின்மை காரணமாக அவசர அவசரமாய் வேலை செய்ததால் சில இடங்களில் வெல்டிங் விட்டுப் போனது. ஒரு சில இடங்களில் அப்படியானதால் மக்கள் ஒட்டுமொத்தமாக இதை ஒரு குறையாகச் சொல்கிறார்கள் என நினைக்கிறோம். ஆனால் இந்தக் குறைகளும் அன்றைக்கன்று இரவே சரி செய்யப்பட்டுவிட்டன. அடுத்த முறை இன்னும் சிறப்பாக இந்த அமைப்பு இருக்கும்.

தன்னார்வலர்களாக (VOLUNTEER) வேலை செய்தவர்கள் எவ்வளவு நேரம் வேலை செய்தார்கள், அதற்கு கொடுத்த சன்மானம் பற்றி?

கல்லூரி மாணவர்களைதான் இந்தப்பணிக்குப் பயன்படுத்துகிறோம். அவர்கள் எங்களிடம் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். வருடா வருடம் அவர்களே இந்தப் பணிக்கு உற்சாகமாக வருகிறார்கள். அவர்களுடைய அடையாள அட்டைகள் எங்களிடம் இருக்கும். சில சமயங்களில் பெரும் அளவில் பணத்தை இவர்கள் கையாள வேண்டியிருக்கும். லட்சக்கணக்கான பணம் புழங்கும் இடம் இது. சிறப்பு விருந்தினராக வருபவர்களை வரவேற்பதில் எந்ததவறும் நிகழ்ந்துவிட கூடாது. இத்தகைய மிகவும் கவனமாகக் கையாள வேண்டிய பொறுப்புகள் இருப்பதால் அவர்கள் படிக்கும் கல்லூரிகளே அவர்களை சிபாரிசு செய்வார்கள். கிட்டத்தட்ட 150 மாணவர்கள் இந்தப் பணிகளில் இருப்பார்கள். அவர்களை இரண்டு SHIFTஆக உபயோகித்து கொள்கிறோம். ஒரு SHIFTக்கு அவர்களுக்கு 550 ரூபாய் தருகிறோம். இதில் ஆச்சர்யம் தருவது என்னவென்றால், இந்த மாணவர்கள் வேறு எங்காவது பணிக்குச் சென்றால் இதைவிட அதிகமாய் சம்பாதிக்கலாம். ஆனால் இந்தப் பணியை அவர்கள் ஆர்வமாய் வருடாவருடம் வந்து செய்கிறார்கள். பத்து நாட்கள் வேலை செய்து 5500 ரூபாய் சம்பளமாக வாங்குகிற இவர்களில் பெரும்பாலானோர் புத்தகக் காட்சி நிறைவுற்று திரும்பும்போது அத்தனை ரூபாய்களுக்கும் தேடிப்பிடித்து புத்தகங்களாகத்தான் வாங்கிப் போகிறார்கள்.

அரங்கம் வடிவமைத்த விதம் குறித்து?

முன்பு நுழைவுவாயிலை வெறும் (FLEX) ப்ளெக்ஸ் பேனரால் மட்டும் தான் உபயோகித்து அமைத்து வந்தோம். இந்த முறை பரிட்சார்த்த முறையில் ஒரு புத்தகம் போல நுழைவாயில்களை அமைக்க முயன்றோம். ஆனால் பக்க வாயில்களில் அப்படி செய்தால் உள்ளே நுழைகிற பாதை குறுகலாக ஒரு நான்கு அடி அளவிற்குத்தான் இருக்கும் என்ற நிலைமை வரவே எல்லா நுழைவாயில்களிலும் அப்படிச் செய்வதை கைவிட வேண்டி வந்தது. ஆனால் நடுவில் பெரியதாக உள்ள பிரதான நல்லி நுழைவாயிலில் மட்டும் ஒரு புத்தகம் திறந்தபடி இருக்குமாறும் அதில் திருக்குறள் அச்சிட்டு இருக்கிற மாதிரியும் வடிவமைத்தோம். சென்ற முறையை விட இந்த அமைப்புகளுக்கு அதிக செலவு செய்திருக்கிறோம். தொடர்ந்து இடைவெளி இல்லாது நிறைய கலை நிகழ்ச்சிகள், புத்தக வெளியீடு எல்லாம் தினசரி இருக்கவே வெளியே மேடை நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்தில் டிஜிட்டல் திரை அமைத்திருந்தோம். இதை அனைவரும் பாராட்டினர்.

வாசிப்பு பழக்கம் இந்த சமுகத்தில் எந்த விதமான மாற்றத்தை உருவாக்கும் என்று நினைக்கிறீர்கள்?

மறைந்த அறிஞர் தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்களிடம் ஒரு முறை பேசிக்கொண்டிருந்தேன். ‘‘சார் நீங்க நிறைய புத்தகம் எழுதலாமே சார்?'' என்றேன். ‘‘எனக்குத் தேவைகள் ரொம்பவும் குறைவு. பென்ஷன் வருகிறது. தொலைக்காட்சியில் பேசுவதிலிருந்து மாதத்திற்கு 10000 வருகிறது. பெண்ணுக்கு கல்யாணமும் முடித்து வைத்துவிட்டேன். அதனால் எனக்கு இனி எந்தப் பணத்தேவையும் இல்லையே? பிறகு எதற்குப் புத்தகம் எழுதிக்கிட்டு?'' என்றார். பணத்தேவை இல்லையென்றாலும் உங்கள் புத்தகத்தை படித்து பலர் வாழ்க்கையில் முன்னேற, திருந்த வாய்ப்பிருக்கிறது இல்லையா? இதைப் படித்து எத்தனை பேர் முன்னேறுவார்கள். தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளுவார்கள். அதற்காகவாவது தொடர்ந்து எழுதுங்கள் என்றேன். ‘‘நான் அப்படியெல்லாம் நினைக்கவில்லை. புத்தகம் படித்தெல்லாம் ஒருவன் திருந்தவே முடியாது.'' என்றார். ‘‘இல்லை சார். உங்கக் கட்டுரை ஒன்றை நான் படித்திருக்கிறேன். அதன் சுருக்கம் இதுதான். ஏதோ ஒரு விளையாட்டு என்று வைத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு நல்ல திறமையான விளையாட்டு வீரன் தான் பெற்ற பரிசுடன் வெளியே வருகிறான். அந்நேரத்திற்கு ஒரு பெண் அவனிடம் வந்து தன் மகளுக்கு உடல் நிலை சரியில்லை எனவும் அதற்கான மருத்துவ செலவுக்கு பணம் வேண்டுமென்றும் அவனிடம் தர்மம் கேட்கிறாள். அவனோ தனக்கு அன்று பரிசாகக் கிடைத்த மொத்தப் பணத்தையும் எடுத்து அவளிடம் கொடுத்துவிடுகிறான். அருகில் இருந்த நண்பன் அவள் சொல்வது உண்மையா என்று கூடத் தெரியாமல் எதற்கு பரிசுப்பணம் மொத்தத்தையும் எடுத்து அவளிடம் கொடுத்தாய் என்று திட்டிவிட்டு செல்கிறான். அடுத்த நாள் அதே நண்பன் அந்தப் பெண்மணியும் அவள் குழந்தையும் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அந்தச் செய்தியைக் கோபத்துடன் வந்து அவனிடம் சொல்கிறான். இவன் ரொம்பவும் சந்தோஷப்படுகிறான். அவன் நண்பன் கேட்கிறான் அட மடையா உனக்கு நான் சொன்னதைக் கேட்டு கோபமே வரவில்லையா?'' என்று. அதற்கு அவன் ‘‘ஒரு குழந்தை துன்பத்தில் வாடவில்லை உடல்நலத்துடன்தான் இருக்கிறது, சந்தோஷமாய் விளையாடிக் கொண்டிருக்கிறது என்பதைக் கேட்கும் போது எனக்கு எப்படிக் கோபம் வரும்? எனக்கு அதைக் கேட்டு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது'' என்று சொல்கிறான். இதைப் படித்த போது எனக்கு அந்த அளவுக்குப் பரந்த மனம் வருமா என்ற சந்தேகம் எனக்கு வந்தது. என்றாலும் நாம் குறைந்தபட்சம் இனிமேல் நம் சக மனிதர்களிடத்தில் இன்னும் அதிக மனிதாபிமானத்துடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. புத்தகம் வாசிப்பது உடனடியான பலனைத் தரவில்லை என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக உங்களில் நிச்சயமாக ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என்பதில் சந்தேகமேயில்லை.

இந்த புத்தகக் கண்காட்சியில் நீங்கள் என்னென்ன புத்தகங்கள் வாங்கினீர்கள்? எந்த மாதிரியான புத்தகங்கள் வாங்கினீர்கள்?

புத்தகக் காட்சியின் வேலைச் சுமை காரணமாக என்னால் எப்போதும் வாங்கும் அளவிற்கு இந்த முறை அதிகமாகப் புத்தகங்கள் வாங்க முடியவில்லை. எனக்கு வாழ்க்கை வரலாறு, நிர்வாகம், தத்துவங்கள் சம்பந்தமான புத்தகங்களில் தான் ஆர்வம் அதிகம். அது சம்பந்தப்பட்ட சில நூல்களை வாங்கினேன். குறிப்பாக SteveJobsன் ஆங்கில மொழியில் வெளிவந்த வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்திருந்தார்கள். அதைத்தான் வாங்கியிருக்கிறேன். ஏன் என்றால் அவர் பணத்தை மட்டும் பெரிதென்று பார்க்கின்ற ஆள் இல்லை. படைப்பாற்றலை எதிர்ப்பார்கிற, மதிக்கிற ஒருவர்.
என்ன தான் ஆங்கிலப் புத்தகங்களைப் படித்தாலும் தமிழில் நம் தாய்மொழியில் படிப்பது போன்று இருக்காது என்று நம்புகிறவன் நான். சில மொழிபெயர்ப்பு புத்தகங்கள் வாசிப்பதற்கு எரிச்சலைத் தரும். அதையே ஆங்கிலத்தில் படித்தால் நன்றாக இருப்பதாகத்தோன்றும். மேலும் அந்தப் புத்தகத்தை என் நண்பர் வெளியிட்டிருந்தார். அதை நான் பதிப்பிக்க நினைத்து முடியாமல் போனதால் அந்தப் பதிப்பகம் எப்படிக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று பார்க்கவும் வாங்கினேன். என் மகன் தான் நிறைய புத்தகங்களைத் தேடித் தேடி வாங்கினார்.

மேலே செல்க...(go to top)
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </