இதழ்: 29    மாசி (February 01 - 15), 2015
   
 
  உள்ளடக்கம்
 
கோஸ்டா காவ்ரஸ் : பொது அனுபவங்களிலிருந்து ஆழ்ந்த அரசியல் பிரக்ஞை நோக்கி - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
கலை ரூபத்திற்காக அரூபமாய் - ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
இயக்குனர் & நடிகர் நாசருடன் ஒரு நேர்காணல் - தினேஷ்
--------------------------------
திரைமொழி - 15 - Steven D. Katz தமிழில்: ராஜேஷ்
--------------------------------
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
நாடு கடந்த கலை: குறும்படங்களின் பெரும்தடம் - சொர்ணவேல்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை ‘வெண் சங்கு’ - தம்பிஐயா தேவதாஸ்
--------------------------------
வெள்ளித்திரை வித்தகர்கள் - ஷியாம் பெனகல் - அறந்தை மணியன்
--------------------------------
கலையை நேசித்த தலைசிறந்த இயக்குநர்கள் - பரசுராம்
--------------------------------
 
   

   

 

 

கோஸ்டா காவ்ரஸ்/Costa Gavras : பொது அனுபவங்களிலிருந்து ஆழ்ந்த அரசியல் பிரக்ஞை நோக்கி

- யமுனா ராஜேந்திரன்

1968 களில் பிரான்ஸில் மாணவர்-தொழிலாளர் எழுச்சி தோன்றியது. உலகெங்கும் அதிக அளவில் வியட்நாம் ஆதரவுக் கிளர்ச்சிகள் எழுந்தன. வெகுஜனங்கள் அதிக அளவில் திறந்த மனம் கொண்டதாகினார்கள். சினிமா இதைத் தொடர்ந்து செல்ல வேண்டுமென நான் நினைத்தேன். அதிக அளவில் நான் அரசியல் படங்களை உருவாக்க வேண்டும் என நினைத்தேன். இவ்வாறு செய்வதற்கான ஆர்வமும் விருப்பமும் கொண்டிருந்தேன் என நான் சந்தேகமறக் கருதுகிறேன். நிஜமான பிரச்சினைகளைத் தொடும் படங்களையே என்றும் நான் இயக்குவேன்

கோஸ்டா காவ்ரஸ்

*

கோஸ்டா காவ்ரஸ் துருக்கிய புரட்சிகர இயக்குனர் இல்மஸ் குணேவின் நண்பர். குணேவின் படங்கள் குறித்து மிக உயர்ந்த அபிப்ராயங்களை வெளியிட்டவர் காவ்ரஸ். காவ்ரஸ் கிரேக்க-பிரெஞ்சுத் திரைப்பட இயக்குனர். இவரது பாணி புகழ்பெறவும் பரவலாக மக்களிடத்தில் விவாதத்தைத் தூண்டவுமான காரணங்கள் இரண்டு. மிகவும் சாதாரணமாகக் காணக்கிடைக்கிற மனிதர்களை இவர் கதைமாந்தர்களாகத் தேர்ந்து கொள்கிறார். அரசியல் நெருக்கடிகளை இவர் படம் தனது களமாகத் தேர்ந்துகொள்கிறது. இதன் மூலம் உடனடியான தொடர்பை இவர் பார்வையாளர்களோடு ஏற்படுத்திக் கொள்கிறார். உலகில் நெருக்கடியின் இடையில் வாழும் மனிதர்களின் ஜீவனுள்ள உறவுகளின் வழி சமரசமற்று நிலவும் சமூக அமைப்புக்கு எதிரான தனது இடதுசாரி அரசியலை அவர் நிறுவுகிறார்.

இவரது காணாமல் போனவன்-மிஸ்சிங்/Missing(1982)- படத்தை போற்றாத தீவிர விமர்சகர்களோ உலக இயக்குனர்களோ இல்லை. இவரது பிறிதொரு முக்கியமான அரசியல் படம் பிட்ரேய்ட்/Betrayed(1988)- வஞ்சிக்கப் பட்டவன் அல்லது ஏமாற்றப் பட்டவன். மிஸ்சிங் படம் இலத்தீன் அமெரிக்க நாடான சிலியில் நிகழ்கிறது. ஸல்வடேர் அலண்டே பாப்லோ நெருதா போன்றவர்கள் தலைமையேற்று மக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசை அமெரிக்க ஏகாதிபத்ய ஆதரவுடன் சதிப்புரட்சியில் சிதறடிக்கிறான் ஜெனரல் பினோசெட். இடதுசாரிகள் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் தேடியழிக்கப்பட்டார்கள். கலைஞர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தக் காலச் சூழலில் பிரஞ்சுப் பத்திரிக்கையின் தகவல் சேகரிக்கும் செய்தியாளர்களாக சிலிக்குள் நுழைகிறார்கள் அமெரிக்கப் பத்திரிகையாளர் ஒருவரும் அவரது பெண் சிநேகிதியும். படம் தொடங்கும்போதே காணாமல்போன தன் சிநேகிதனைத் தேடிய பெண்ணின் அவஸ்தைகளுடனேயே தொடங்குகின்றது. இந்தப் பெண்ணும் அவளது சிநேகிதனான பத்திரிகையாளனும் இடதுசாரி அரசியலில் நம்பிக்கையுள்ளவர்கள். அமைப்பு எதிர்ப்பாளர்கள். அது அமெரிக்க அரசின் ஆதிக்கமாயினும் சிலி அரசாங்கத்தின் கொடுங்கோன்மை ஆயினும் அதை எதிர்ப்பவர்கள்.

காணாமல் தொலைந்து போன பத்திரிகையாளனைத் தேடித்திரியும் இரு மனிதர்களின் அனுபவ வழியேதான் கதை சொல்லப்படுகிறது. தேடித் திரிபவர்கள் ஒருவர் பெண் சிநேகிதி. மற்றவர் பத்திரிகையாளனின் தந்தை இப்படத்தின் பிரதான பாத்திரம் இவர்தான். இவர் கிறிஸ்தவ போதனைக் கல்லூரியில் போதகராக இருப்பவர். அமெரிக்க அரசாங்கத்தின் மீதும் அதனது ஜனநாயக அமைப்பென்று சொல்லப்படுபவற்றின் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர். இவர் தொலைந்து போன அவரது மகனைக் கண்டுபிடிப்பதற்காக சிலிக்கு வந்து சேர்கிறார்.

தனது மகனின் பெண்சினேகிதியை அங்கு அவர் சந்திக்கிறார். சதா அமைப்புகளைத் திட்டிக் கொண்டிருக்கும் இவர் மகனது அரசியலைச் சாடுகிறார். மகன் இப்படி போக அவன் சிநேகிதியும் காரணம் என திட்டித் தீர்க்கிறார். அமைப்பு எதிர்ப்பு என்பது இவர்களைப் பிடித்த வியாதி என்கிறார். தேடல் தொடங்கிவிட்டது. அவன் சேர்ந்து தங்கியிருந்த நண்பர்களின் வீடுகள் அவனது பத்திகையுலக நண்பர்கள் அவனது இடதுசாரி அரசியலாளர்கள் எல்லோரது இருப்பிடங்களிலும் தேடிப்பார்க்கிறார்கள். அவர்களின் சுவடுகளோ அடையாளங்களோ அகப்படுவேதேயில்லை. எல்லோருமே மொத்தமாகத் தொலைந்து போனார்கள்.

வீதியெங்கும் இராணுவக் கவச வாகனங்கள். சுவரெங்கும் கண்கட்டி நிறுத்தப்பட்டு கிளர்ச்சியாளர்கள் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். விளக்குக் கம்பங்கள் தோறும் பிணங்கள். குப்பைத் தொட்டிகளின் பக்கத்தில் இறைந்து கிடக்கும் உடல்கள். நாரசமாகத் தொடர்ந்து நியதிப்படி காதடைக்கும் பூட்ஸ் கால்களின் சப்தம். தந்தை அலைகிறார். சிலி இராணுவ தலைமையகத்திற்கும் அமெரிக்க தூதரராலயத்திற்கும் அலைகிறார். அமெரிக்க தூதரக அதிகாரிகள் அவரைப் பயப்படவேண்டாம் என்கிறார்கள். அமெரிக்கக் குடிமகனைக் காப்பது தங்கள் கடமை அதைச் செய்வோம் என்கிறார்கள். அவரது மகன் தலைமறைவாக இருப்பதாக தங்கள் விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் இரண்டொரு வாரங்களில் அவர் வெளியே வந்துவிடுவார் என்றும் தெரிவிக்கிறார்கள்.

பத்திரிகையாளனின் தந்தை அவரது மகனின் சினேகிதி அமெரிக்க தூதரக அதிகாரிகள் இவர்களுக்கிடையிலான சந்திப்பு நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே அடுத்த அறையில் சிலி இராணுவ ஆட்சியின் அதிகாரிகளோடு வேறொரு உரையாடலும் நடக்கிறது. அதன் சாராம்சம் இது: சிலி இராணுவ ஆட்சியாளர்களுடன் அமெரிக்க தூதுவராக அதிகாரிகள் சந்தித்து விருந்துண்ணப் போகிறார்கள். பத்திரிகையாளனின் சிநேகிதி ஆட்சிக் கவிழ்ப்பே அமெரிக்க ஏகாதிபத்தியச் சதி என்கிறாள். அமெரிக்க அதிகாரிகள் பொய்யர்கள் கொலைகாரர்கள் என்கிறாள். அவள் அறிந்த தனது சிநேகிதன் கொல்லப்பட்டு விட்டான். தனது இடதுசாரி சிநேகிதர்களோடு தங்கியிருந்த வேளை கைதுசெய்யப்பட்ட அவன் சிலியின் பயங்கரமான கொலைக்களமான சாந்தியாகோ புட்பால் ஸ்டேடியத்திற்கு கொண்டுசெல்லப் பட்டுவிட்டான். அது அமெரிக்க தேசபக்தர். அமெரிக்க நீதியமைப்பின் மீது நம்பிக்கையுள்ளவர். அவர் இன்னும் அமெரிக்க அதிகாரிகளை நம்புகிறார்.

அவர் நேருக்கு நேர் பார்த்தவை அவரது தேடுதல்கள் அவரது மகன் கைது செய்யப்பட்டான் என்பதை உறுதி செய்கிறது. அமெரிக்க நிர்வாகத்திற்கும் சிலி இராணுவ கொடுங்கோலர்க்கும் உறவு இருப்பது தெளிவாகப் புரிகிறது அவருக்கு தூதரக அதிகாரிகள் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்பது விளங்குகிறது. ஆயினும் அவரது கிறிஸ்தவ நம்பிக்கையும் அமெரிக்க தேசபக்த உறவும் அவரை அமெரிக்க சதி பற்றிய முழுமையான முடிவுக்கு வரமுடியாமல் தடுக்கிறது. தனக்குத் தெரிந்த தொடர்புகளிலிருந்து அவரது மகன் கைதுசெய்யப்பட்டு நேஷனல் ஸ்டேடியத்தில் வைத்துக் கொல்லப்பட்டதற்கான நேரடி சாட்சியம் இருக்கிறது. உங்கள் மகன் கொல்லப்பட்டு விட்டான் என்கிறார் போர்டு பவுண்டேஷன் நண்பர். இதை வெளிப்படையாகச் சொல்ல வற்புறுத்துகிறார் தந்தை. தனக்கும் தனது நண்பருக்கும் இதன் மூலம் உயிராபத்து வரும் எனச் சொல்லும் நண்பர் இதற்காகத் தன்னை மன்னிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறார். கோபத்துடன் அமெரிக்க தூதரகம் போகிறார் தந்தை.

அறைமுழுக்க அமெரிக்க அதிகாரிகள். சிலி இராணுவ ஆட்சியாளர்கள் பக்கத்து அறைகளில். அப்போதும் அவரது மகன் இரண்டொரு வாரங்களில் வந்து விடுவார் என்றும் பழைய பல்லவியையே அவர்கள் திரும்ப ஒப்புவிக்கிறார்கள். கோபமுற்ற தந்தை ‘சிலி இராணுவக் கவிழ்ப்பில் ஒத்துழைக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்குத் தன் மகன் கொல்லப்பட்டது தெரியும், இனியும் பொய் சொல்லாதீர்கள்’ என்கிறார். ‘தான் அமெரிக்கா சென்று தூதரக அதிகாரிகள் மீது வழக்குப் போடப் போகிறேன்’ என்கிறார். “இப்படிப்பட்ட கொலைகாரர்களைச் சிறையில் தள்ளும் ஒரு நாட்டில்-அமெரிக்கா- நான் இருக்கிறேன் நான் உங்கள் மீது வழக்குத் தொடரப் போகிறேன்” என்கிறார்.

அமெரிக்க அதிகாரிகள் நிதானமாகச் சொல்கிறார்கள். “பதட்டப்பட வேண்டாம். இங்கு சிலி இராணுவ ஆட்சியை ஆதரிப்பது அமெரிக்க தேசபக்தக் கடமை. சிலியில் 500 அமெரிக்க வியாபார நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் நலன்களைக் காப்பது அமெரிக்க அரசின் கடமை. ஆகவேதான் நாங்கள் சிலி இராணுவ ஆட்சியைக் காப்பாற்றுகிறோம். அவர்களோடு சேர்ந்து நிற்கிறோம். இது அமெரிக்க சர்வதேசக் கடமை”.

தந்தை அமெரிக்க திரும்புகிறார். தூதரக அதிகாரிகள் மீது வழக்குத் தொடுக்கிறார் தந்தை. அவன் மகன் கொல்லப்பட்ட தருணத்தை அமெரிக்க அரசு நெறிகளின்படி ‘அரசு ரகசியம்’ என்ற சரத்தின் கீழ் தள்ளுபடி செய்யப்படுகிறது நீதமன்றம். தந்தை நாடு திரும்புவதற்கு புறப்படும் காட்சியுடன் நிறைவுபெறும் படத்தின் செய்திகளாக வழக்குத் தள்ளுபடியான விவரம் இறுதியாகத் தரப்படுகிறது.

‘பிட்ரெய்டு/Betrayed’ படம் அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிராக நிலவிய கு கிளக்ஸ் கிளான்/Ku Klux Klan வெள்ளை நிறவெறியின் அரசியலை ஆய்வு செய்கிறது. கடந்த காலங்களிவ் அமெரிக்காவில் தீவைத்துக் கொழுத்தப்பட்ட கறுப்பினத் தேவாலயங்கள் எண்ணிலடங்கா. ரோட்னிகிங்கை பொலிசார் கண்மண் தெரியாமல் அடித்து அமெரிக் நகரங்கள் எரிந்ததும் வரலாறு. இந்த வரலாற்றின் முந்னைய அத்தியாயம்தான் கு கிளக்ஸ் க்ளான் என்ற அரசியல் இயக்கத்தின் செயற்பாடு. ‘வெள்ளை இனம் அழிந்து கொண்டிருக்கும் ஒரு ஜீவ இனம்’ என்ற கோஷத்துடன் அமெரிக்காவில் புறப்பட்ட ஒரு கறுப்பின எதிர்ப்பு இயக்கம்- வெள்ளை நிறவெறி இயக்கமே கு கிளக்ஸ் கிளான்.

இப்படத்தை விளங்கிக் கொள்ள பின்னணிச் செய்திகளாக சில விபரங்களைச் சொல்ல வேண்டும். இங்கிலாந்தில் வெள்ளை நிறவெறி அரசியல் மிக வேகமாக பற்றிப் பரவும் இடங்கள் தொழிலாளி வர்க்கம் மற்றும் உதிரிப் பாட்டாளிகள் போன்றவர்கள் குடியிருக்கும் பிரதேசங்கள்தன். வறுமை வேலையின்மை போன்றவற்றுக்கான காரணங்களாக ஆளும் நிறவெறித் துவேசிகள் கறுப்பு மக்கள், ஆசியர்கள் போன்றவர்களைச் சுட்டுகிறார்கள். அதிலிருந்து நிறவெற சமூகத் தளத்தையும் அரசியல் அடிப்படையையும் பெறுகிறது. விவசாயிகள் வர்க்கமும் அவர்களது அறியாமையும் இந்த அரசியலினால் உடனடியாக உள்வாங்கப்படுகின்றது.

இவ்வாறான அமெரிக்க கிராமப்புறத்தில் நிகழும் கொலைகள் பற்றியும் நிறவெறி அரசியலுக்கான சமூகத் தளம் பற்றியும் அரசுசார் அரசியல் வாதிகளுக்கும் நிறவெறி அமைப்புகளுக்கும் உள்ள நெருக்கமான உறவுகள் பற்றியும் ஆய்வு செய்கிறது படம். படம் ஒரு கொலையுடன்தான் துவங்குகிறது. ரேடியோவில் உரை நிகழ்த்திக் கொண்டிருப்பவர் முடித்தவுடன் வாகனத் தரிப்பிடத்தில் கொலை செய்யப்படுகிறார். முகமூடியணிந்த கொலையாளிகள் அவரைச் சுட்டுக் கொல்கிறார்கள். காட்சி மாறுகிறது. முன்னைய நகர்ப்புற கொலைக்கு முற்றிலும் சம்பந்தமில்லைத கிராமப்புறத்தில் கோதுமை வயலில் அறுவடை இயந்திரம் ஓட்டியபடி ஒரு பெண் கிராமப்புற மதுச்சாலை. விவசாயிகளின் குடியும் கும்மாளமுமான சூழலில் தனிமையிலிருக்கும் அந்தப் பெண் உள்ளூர் இளம் வயது ஆணொருவனது நட்பு கிடைக்கப் பெறுகிறான். அவனுக்கு மனைவி இல்லை. இறந்து விட்டாள். இரு குழந்தைகள். ஒரு சிறுமி ஒரு சிறுவன். அந்தப் பெண்ணுக்கும் இவர்களுக்கும் இடையில் உறவு வளர்கிறது.

ஒரு காட்சியில் நோயுற்ற கால்நடையை கைத்துப்பாக்கி ஒன்றினால் சுட்டுக் கொல்கிறான் விவசாயியாக நடிக்கும் ஆண். அவனே படத்தின் நாயகன். படத்தின் நாயகி கிராமத்துக்கு வரும் தனித்த பெண். கிராமத்துக்குப் புதிதாக வரும் அந்தப் பெண் பெடரல் பீரோ ஆப் இன்வெஷ்டிகேஷன் அதிகாரி. அவளது நோக்கம் படத்தின் ஆரம்பத்தில் நடந்து முடிந்த கொலைகளுக்கும் அரசியல்வாதிகள் கொல்லப்படுவதற்கும் கறுப்பு மக்கள் கொல்லப்படுவதற்கும் கிராமத்தின் விவசாயிகளுக்கு இருக்கும் தொடர்பு பற்றி கண்டுபிடிப்பது. பெண்ணுக்குத் தனது போலிஸ் துறையிலேயே ஒரு சிநேகிதனும் உண்டு. அவர்கள் நேசம் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான அண்மைக் காட்சிகளும் படத்தில் இருக்கிறது. படத்தில் ‘கண்டுபிடிக்கும் செயல்’ ஒரு பயணம் போல் நிகழ்கிறது.

கொஞ்சநாட்கள் அப்பெண் கிராமத்தில் குழந்தைகளோடும் விவசாய இளைஞனோடும் தங்கியிருக்கிறாள். அவ்வீட்டில் இளைஞனின் தாயும் உண்டு. அப்பெண்ணுக்கும் குழந்தைகளுக்கும் மட்டுமல்ல இளைஞனுக்கும் அவளுக்கும் கூட உறவு இயல்பாகவே இடம் பெறுகிறது. ஒவ்வொரு முறையும் கிராமத்தில் அவர்கள் சம்பந்தமாக சில அனுபவங்கள் நேர்கிறபோது அவற்றை அப்பெண் உடனுக்குடன் போலிஸ் அலுவலகம் சென்று விஷயங்களைத் தெரிவித்து அவர்களோடு கலந்துரையாடி விட்டு மறுபடி அவர்கள் ஆலோசனையின் கீழ் கிராமம் திரும்ப வேண்டும்.

குடும்பத்தில் குழந்தைகளுக்கும் அவளுக்கும் இடையிலான உறவில் அன்பு கிளைவிட விவசாய இளைஞனும் பெண்ணும் காதலில் ஈடுபடுகிறார்கள். இளைஞன் பெண்ணைத் தனது அரசியல் நடவடிக்கைக்கும் இயக்கங்களுக்கும் கூட்டிச் செல்கிறான். இயல்பில் குழந்தைகளிடம் அன்பும் இளகிய மனமும் உள்ள அவன் அக்கிராமத்தில் நிலவும் சூழ்நிலையால் இனவெறி அரசியலில் ஈடுபடுகிறான்.

பெண்ணின் நிலை இருதலைக்கொள்ளி எறும்பு போன்றது. ஒருபுறம் உண்மையான நேசம் அவளது வாழ்வில் இயல்பாகவே நுழைகிறது. மறுபுறம் ஒற்றறிதல் நடந்து கொண்டே இருக்கிறது. இளைஞனிடம் தான் பெறும்-கண்டுபிடிக்கும் தகவல்களை அவன் அறியாமலே உளவு அமைப்புக்கு அவள் அனுப்பிக் கொண்டிருக்கிறாள்.

மூன்று சம்பவங்கள் : ஒரு நாள் நள்ளிரவு இளைஞனும் பெண்ணும் கிராமத்துக்கு வெளியில் இருக்கும் மரங்களடர்ந்த காட்டுக்கு வருகிறார்கள். அங்கே இராணுவ ஒழுங்குடன் வெள்ளை இனவெறி அமைப்பு பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. கண்ணைக் கட்டிய நிலையில் இரத்தம் ஒழுகியபடி ஒரு ஆப்ரிக்க ஆண் கொண்டு வரப்படுகிறான். கண்கட்டை அவிழ்த்துவிட்டு அவனிடம் ஒரு துப்பாக்கியைத் திணித்துத் தற்காத்துக் கொண்டு தப்பித்து ஓடச் சொல்கிறார்கள். அவனைத் துரத்தியபடி கையில் டார்ச் லைட்டுகளுடன் வெள்ளையர்கள். துரத்தித் துரத்திச் சுடுகிறார்கள். இரத்தக் காயங்களுடன் ஓட முடியாது ஒரு மரத்தின் மடியில் மூச்சிறைக்க அமர்கிறான் அப்பிரிக்க இளைஞன். இப்போது பெண்ணின் கையில் துப்பாக்கி கொடுத்து அவனைச் சுடுமாறு சொல்லி வற்புறுத்துகிறார்கள் வெள்ளை ஆண்கள். பெண் மறுத்து நடுநடுங்க விவசாய இளைஞன் அவளைச் சுடுவதினின்று விலக்கி கூட்டிச் செல்கிறான். தூரத்தில் சல்லடைக் கண்களாகத் துளைக்கப்படுகின்றது கறுப்பு இளைஞனின் உடல்.

குடும்பத்தோடு குழந்தைகள் அத்தாய் இளைஞன் பெண் உட்பட முழுக் கிராமமும் காட்டுக்குள் இரவு கேளிக்கைக்குக் கூடுகிறது. நள்ளிரவில் அங்கு இராணுவ கவச வாகனமொன்றில் வரும் ஆட்களோடு இனவெறி அமைப்பைச் சார்ந்தவர்கள் பேசுவதைப் பார்க்கிறாள் பெண். பிறிதொரு காட்சியில் கிராமத்துக்கு வந்து கிராம மக்களை பெண்கள் குழந்தைகள் உட்பட திரட்டி இனவெறி அரசியல் பேசுகிறார்கள் கு கிளக்ஸ் கிளான் அரசியல்வாதிகள்.

இங்கு கதையில் சொல்லப்படும் இளைஞன் இரட்டை மனநிலை கொண்டவனாகச் சித்தரிக்கப்படுகிறான். போலிஸ் அதிகாரிகளையும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களையும் கொல்வதைத் தன் நோக்கமாக அறிவுபூர்வமாகக் கருதும் அவன் கறுப்பு இளைஞனைக் கொல்வதிலிருந்து விலகுகிறான். அரசியல்வாதிகள் பிரச்சாரத்தை விமர்சிக்கிறான். இச்சூழலில் விவசாயி இளைஞனிடமிருக்கும் பட்டியல் ஒன்றை அவன் காணாது போலீஸ் உளவுப் பிரிவினரிடம் சேர்ப்பிக்கிறாள் பெண். அன்றிரவு இளைஞனுக்கு பிறிதொரிடத்தில் ஒருவரைச் சந்திக்குமாறு அழைப்பு வருகிறது. அங்கு செல்லும் இளைஞனிடம் இராணுவ ஹெலிகாப்டரொன்றில் வரும் ஒருவர் ஒரு கோப்பு தருகிறார். அதில் பெண் காவல்துறை ஒற்றர் பிரிவைச் சேர்ந்தவள் என்ற உண்மை தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. மிகுந்த மனத் துக்கத்துடன் வரும் இளைஞன் அப்பெண்ணிடம் ஏதும் கேட்பதில்லை. இரவுநேர படுக்கையில் இருவரும் படுத்திருந்தும் கூட அவன் அவளிடம் ஏதும் கேட்பதில்லை.

மறுநாள் பெண்ணை ஏற்றிக்கொண்டு தொலைநோக்கித் துப்பாக்கியுடன் அதிகாரியொருவனைச் சுட வரும் இளைஞன் அவள் யாரெனத் தான் கண்டு பிடித்ததை மிகுந்த துக்கத்தோடு விவரிக்கிறான். அவள் மீது அவனுக்கு கோபமோ வெறுப்போ இல்லை. அதேவேளை தான் செய்கிற கொலைகள் தொடர்பாக விடுபடுவதும் அவனால் முடியவில்லை. அரசு அதிகாரியைச் சுடக் குறி பார்க்கிறான். பெண் வேண்டாம் என்கிறாள். குறி பார்த்தால் தான் அவனைச் சுட்டுவிடுவேன் என்கிறாள். அவன் தொடர்ந்து குறிபார்க்கிறான். அவள் அவனைச் சுட்டுக் கொள்கிறாள். அவன் உடல் சரிகிறது.

மிகுந்த மனச்சோர்வுடன் முழு உருவமும் அலைக்கழிந்து போனபடி தெருவில் நடக்கிறாள் அவள். தன்னால் தொடர்ந்து காவல்துறையில் வேலை செய்ய முடியாது என்று தெரிவித்துவிட்டு வெளியேறுகிறாள். உண்மையில் அவள் அவ்விளைஞனையும் அக்குடும்பம் குழந்தைகளையும் நேசித்திருக்கிறாள். அவள் ஒருவகையில் அவனை வஞ்சிக்கிறாள். நம்பிக்கைத் துரோகம் செய்கிறாள். குழந்தைகளை வஞ்சிக்கிறாள். இன்னொரு வகையில் அவளும் அவளது மனோவுலகமும் காவல்துறை ஒற்றர்களால் அவர்களோடு உறவுள்ள அரசியல்வாதிகளால் இனவெறியர்களால் அவள் வஞ்சிக்கப்படுகிறாள். கால்போனபடி அலைந்து கிராமத்து வீட்டுக்கு வரும் அவள் குழந்தைகளை அழைக்கிறாள். குழந்தைகள் அங்கில்லை. பக்கத்துச் சர்ச்சுக்குப் போகிறாள். பெண் குழந்தை ஓடிவந்து இவளைக் கட்டிக் கொள்கிறாள். பிரிவு வருடுகிறது. அந்த முழுக் கிராமமும் காட்டுக்கோ ஒரு கூட்டத்துக்கோ துப்பாக்கிப் பயிற்சி பெறுவதற்கோ திரும்பப் போகிறது. குழந்தை திரும்பத் திரும்பப் பார்த்தபடி ஏக்கத்துடன் கையசைத்து முகம் திருப்பி நிற்கத் திரை நிற்கிறது.

காவ்ரஸின் மிஸ்சிங் படம் பத்திரிகையாளன் என்ற சிறப்புத்துறை சார்ந்தவன் பற்றியதல்ல. புரட்சியைப் பற்றிய எதிர்மறைக் கண்ணோட்டம் கொண்ட படமும் அல்ல. மாறாக இப்படம் சிலியின் இராணுவ ஆட்சிக்கு ஆதரவான அமெரிக்காவின் தலையீட்டையும் அதனது பொய்யான கருத்துக்களையும் நேரடியாக விமர்சிக்கிறது. புரட்சிக்குச் சார்பாக பத்திரிகையாளன் அவனது தோழி போன்றோர் பற்றிய பரிவுணர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. இப்படத்தின் மிக மிக முக்கியமான அம்சம் நமது நாட்டுச் சூழல்களில் படமெடுப்பவர்கள் அதிகம் அவதானிக்கத்தக்கது. இப்படம் வெளிப்படையாக நிலவும் வெகு சாதாரணப் பிரச்சினைகளை அனுபவம் கொள்ளும் சாராரண மனிதர்களது கண்ணோட்டத்திலிருந்து அரசியலைப் பார்க்கிறது.

மிஸ்சிங் படத்தில் வரும் தந்தையின் பாத்திரம் வெகு சாராரணமான அமெரிக்கப் பிரஜையின் மனோவியலைப் பிரதிந்தித்துவப்படுத்துபவை. அமெரிக்க தேசபத்தி அமைப்பு மீதான நம்பிக்கை போன்றவை அவர் எதிர்கொள்ளும் அனுபவங்கள் மூலமே தகர்ந்து போகின்றது. பிரச்சனையின் ஊடே அவரது பயணத்தின் உடன்பயணிகளாகவே பார்வையாளர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அமெரிக்க அரசு பற்றிய கோபமான விமர்சனம் போராளிகள் பற்றிய பரிவான உணர்ச்சி போன்றவற்றிலிருந்து இப்படத்தின் பார்வையாளன் தப்ப முடியாது.

மிஸிஸிப்பி மாநிலத்தின் பல்வேறு கொலைகளுக்கும் மனித உரிமைக் கொலைகளுக்கும் காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள். கலவரங்களைத் தூண்டியவர்கள் கு கிளக்ஸ் கிளானைச் சார்ந்தவர்கள். மார்ட்டின் லூதர் கிங் போன்றோரின் கொலைகளுக்குப் பின்னால் இருந்தவர்களும் அவர்களே. வெள்ளை இனவெறி அரசியல்வாதிகள் அதிகாரவர்க்கம் புலனாய்வுத்துறை கு கிளக்ஸ் கிளான் என இவர்களுக்கிடையிலான உறவே கொலைகளுக்கான காரணம் என்பது வரலாறு.

வெள்ளை நிறவெறி உருவாகுவதற்கான கிராமப் பொருளியல் சமூக அடிமைத்தனம் பற்றிய ஆய்வு. அரசியல்வாதிகள் அதிகாரவர்க்கம் அரசாங்கம் போன்றோர்களுக்கிடையில் நிலவும் தீவிரமான இனவெறி உறவு போன்றவற்றை காவ்ரசின் பிட்ரேய்ட் படம் ஆழ்தளத்தில் சென்று ஆய்வு செய்கிறது. இப்படத்தில் கறுப்புப் பாத்திரம் ஒன்றே ஒன்றுதான். ஆப்ரிக்க மக்கள் மீதான வன்முறையைப் படம ஆதாரப்பிரச்சினையாக எடுத்துக் கொண்டாலும் கூட அம்மக்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான வன்முறையை ரசனை அடிப்படையில் காட்சிகளாகக் கொண்டிருக்க வில்லை. மேலும் சாதாரண விவசாயிக் குடிமகனின் மனநிலை வாழ்நிலை அனுபவத்திலிருந்து இனவெறி அரசியலின் முகத்தைக் காட்டுகிறது படம். பிரச்சினையில் ஈடுபட்ட பெண்ணின் ‘உண்மை காண் பயணமாகவே’ படம் நிகழ்கிறது. அவள் பெறும் இனவெறி அரசியல் பற்றிய அனுபவத்திலிருந்தும் விமர்சனத்திலிருந்தும் கோபம் துக்கம் போன்றவற்றிற்கும் உடன்பயணியான பார்வையாளன் தப்பமுடியாது. இதுவே இப் படத்தின் முக்கியத்துவத்திற்குக் காரணமாகிறது.

கோஸ்டா காவ்ரஸின் கதைசொல்லும் பாணி இந்திய-ஈழச் சினிமா சார்ந்தவர்க்கு இரண்டு முக்கியமான தேர்வுகளைக் கொண்டிருக்கிறது. ‘மிகச் சாராரண மனித அனுபவங்களிலிருந்து மிக ஆழ்ந்த மிகத்தீவிரமான அரசியல் பிரக்ஞை’ நோக்கியதாக இவர் படங்கள் அமைகிறது. மிகப் பொதுவான மனிதர்களின் ஜீவனுள்ள வாழ்க்கை உறவுகளின் வழி பார்வையாளன் பாத்திரங்களின் உடன்பயணி ஆகிறான். அரசியல் கொந்தளிப்புகள் சிதறுண்ட மனித உறவுகள் பரந்துபட்ட கல்வியறிவின்மை போன்றவை சூழ்ந்த நமது நாடுகளில் கோஸ்ட்டா காவ்ரஸின் கதை சொல்லும் பாணியில் இருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய உண்டு.. கோஸ்ட்டா காவ்ரஸ் துருக்கிய கம்யூனிஸ்ட் புரட்சியாளன் இல்மஸ் குணேவின் சினிமாவின் மீது ஆழ்ந்த நேசம் கொண்டவர் மட்டுமல்ல, அவரது நெருங்கிய தோழர் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் மறுபடியும் ஞாபகம் கொள்ள விரும்புகிறேன்.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: htt://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </