இதழ்: 29    மாசி (February 01 - 15), 2015
   
 
  உள்ளடக்கம்
 
கோஸ்டா காவ்ரஸ் : பொது அனுபவங்களிலிருந்து ஆழ்ந்த அரசியல் பிரக்ஞை நோக்கி - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
கலை ரூபத்திற்காக அரூபமாய் - ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
இயக்குனர் & நடிகர் நாசருடன் ஒரு நேர்காணல் - தினேஷ்
--------------------------------
திரைமொழி - 15 - Steven D. Katz தமிழில்: ராஜேஷ்
--------------------------------
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
நாடு கடந்த கலை: குறும்படங்களின் பெரும்தடம் - சொர்ணவேல்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை ‘வெண் சங்கு’ - தம்பிஐயா தேவதாஸ்
--------------------------------
வெள்ளித்திரை வித்தகர்கள் - ஷியாம் பெனகல் - அறந்தை மணியன்
--------------------------------
கலையை நேசித்த தலைசிறந்த இயக்குநர்கள் - பரசுராம்
--------------------------------
 
   


   

 

 

தமிழ்சினிமாவில் நடந்திருப்பது மாற்றங்கள் தான், வளர்ச்சி கிடையாது

இயக்குனர் & நடிகர் நாசருடன் ஒரு நேர்காணல்

-தினேஷ்


சினிமா ரசனை வகுப்புகளின் இன்றைய தேவை என்ன? யாருக்காக நடத்தப்பட வேண்டுமென நினைக்கிறீர்கள்?

சினிமா ரசனை வகுப்புகள் மிகமிக அவசியம். முதலில் இது படம் எடுப்பவர்களுக்கு மிக முக்கியம். இரண்டாவதுதான் படைப்பை நுகர்பவர்களுக்கு. ஆனால், இங்கு சினிமாவை உருவாக்குபவர்களுக்கு சினிமா ரசனையை யார்கற்றுக்கொடுப்பது.? என்ற கேள்வியும் இருக்கிறது.

மேலை நாடுகளில் சினிமா ரசனை வகுப்புகளை பள்ளிகளிலேயே ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆகையால் அங்கு படம் பார்ப்பவர்களுக்கு சினிமா ரசனை பற்றி போதிய புரிதல் இருக்கிறது. அங்கு வாழ்கிற படைப்பாளிகளுக்கு சினிமா ரசனை வகுப்பு கட்டாயமாக்கப்படுகிறது. ஆனால், நமக்கு பாலியல் பற்றிய கல்வி அவசியமா? இல்லையா? என்பது போலவேதான், ரசனை பற்றிய கல்வியும் அவசியமா? இல்லையா? என்று அணுகி வருகிறோம்.

ஒரு நவீன கலை மக்களிடம் பெரிய தாக்கத்தை உண்டாக்க கூடிய வலிமை பெற்றிருக்குமாயின்., அக்கலையைப் பற்றிய ரசனை வகுப்புகள் இந்நேரம் கல்லூரிகளிலாவது வந்திருக்க வேண்டும். ஆனால், வரவில்லை. இந்த மாதிரியான கேள்வி பதில்களிலேயேதான் நின்றுகொண்டிருக்கிறது.

அரசாங்க திரைப்படக் கல்லூரியில் படித்த அனுபவம், இப்போது அது எப்படி செயல்படுவதாக நினைக்கிறீர்கள்?

குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய வீச்சை ஏற்படுத்தியிருக்கிற சினிமா தனக்கென ஒரு கல்வி முறையை வகுத்துக்கொள்ளாதது மிகப்பெரிய சோகம். எல்லா தொழிலுக்கும் ஒரு வரையறுக்கப்பட்ட கல்விமுறை இருக்கிறது. நூறு வருடங்கள் கழிந்தும் தமிழ்சினிமா தனக்கென ஒரு கல்வித்திட்டத்தை வரையறுத்துக்கொள்ளாதது, அதனை ஒரு கல்வியாக நம்பவில்லையென்றுதான் தெரிகிறது. இங்கு கடைநிலை ஊழியர் என்று சொல்லப்படுகின்ற,விருந்தோம்பல் துறையில் இருக்கின்றவர்களே ஒரு கேட்டரிங்க் படித்தவன் இங்கு வேலைபார்த்தால் நன்றாகயிருக்கும் என்று நினைப்பதில்லை. அதேபோல உச்சகட்டமாக இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஆனால்,அவர்களும் சினிமாவிற்கான கல்வியை நம்புவது கிடையாது. அதேவேளையில் இவர்கள் அனைவருமே ஒரே குடையின் கீழ் பணிபுரிகிறார்கள். இங்கு வெற்றிபெற்றவர்கள், சாதித்தவர்கள், எல்லோரும் தாங்கள் ஒருமுறையான கல்வியை கடந்து வந்தவர்கள் என்று சொல்லமுடியாத நிலை இருக்கிறது. அதனால், இது அப்படியே நடைமுறையில் போய்க்கொண்டிருக்கிறது. இன்றைக்கும் சினிமாவிற்கு வருவதற்கு ஒரு படிப்பு அவசியமா? என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உள்ளார்ந்து தகிக்கின்ற விஷயத்திற்கு படிப்பு அவசியமில்லை என்கிறார்கள்.

என்னுடைய நிலை வேறு. நான் நடிகனாக வரவேண்டுமென்று நினைக்கவில்லை, இந்த துறையை நான் தேர்ந்தெடுக்கவில்லை. நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன் தான் நானும், எனக்கு மாதாந்திர சம்பளம் எங்கு கிடைக்கிறதோ அதுவே போதும் என்றுதான் நினைத்தேன். ஆனால், என் அப்பாவின் விநோதமான ஆசை, நான் சினிமாவில் நடிக்கவேண்டுமென்பதால், என்னை வற்புறுத்தி, அடித்து இந்த துறைக்கு அனுப்பினார். அவர்தான் என்னை நான் முதலில் படித்த நடிப்புப் பள்ளியிலும் சேர்த்துவிட்டார். ஆகையால் எனக்கு ஜெயிக்கணும், சாதிக்கணும், ஃபேஷன் , வெறி என்றெல்லாம் எதுவுமே கிடையாது. நான் தள்ளிவிடப்பட்டேன். பின்னர் இது எனக்கு ஒரு வேலை. இந்த சினிமாவிற்கு நான் போனால் என்னுடைய பொருளாதார பிரச்சனைகள் தீரும் என்று நினைத்துதான் நான் வந்தேன். அதற்குப் பின்பாக நான் திரைப்படக் கல்லூரியில் படிக்கின்ற பொழுது சினிமாவை மறைமுகமாக கற்றுக்கொண்டேன். சினிமாவினைப் பற்றி ஆழமாகத் தெரிந்துகொண்டேன், அதனை புரிந்துகொண்டு லயித்தேன் என்பெதல்லாம் வேறு. ஆனால், நான் சினிமாத்துறையை தேர்ந்தெடுத்தது ஒரு நிர்பந்தத்தின் காரணமாகவே.

என்னுடைய அடிப்படை குணாதிசயம் , ஒரு வேளை நான் ஒரு சமையல் காரனாக போயிருந்தால், இருப்பதிலேயே மிகச்சிறந்த சமையல்காரனாக நான் எப்படி மாறுவது என்பது பற்றித்தான் யோசித்திருப்பேன். இதற்கு தேர்ந்தெடுத்த ஒரு தொழிலை ஏனைய எல்லோரையும் விட சிறப்பாக செய்வது என்று பொருள். என் அப்பா ஒருவேளை என்னை இட்லிக்கடை வைக்கச்சொல்லியிருந்தால், இருப்பதிலேயே சிறந்த இட்லிக்கடையை நான் வைத்திருப்பேன். இந்நடிப்பிற்குஒரு பயிற்சி அவசியம் என்றே நம்புகிறேன், பயிற்சியில் சில கோட்பாடுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஸ்டானிஸ்லாவ்ஸ்கி என்றும், மெத்தட் ஆக்டிங்க் என்றும் சொல்கிறார்கள். நடிப்பைப்பற்றி ஒரு அறிஞர் எழுதியிருக்கிறாரே என்று தோன்றுகிறது. பின்னர் ஏன் நம் ஊரில் இதுபோல எழுதவில்லை என்று தேடிப்பார்த்தால், சங்கரதாஸ் சுவாமிகள்., பம்மல் சம்பந்த முதலியார் போன்றோர் நாடகத்தைப்பற்றியும் நடிப்பைப்பற்றியும்எழுதியிருப்பது தெரிகிறது. ஆனால், ஸ்டானிஸ்லாவ்ஸ்கி எழுதிய அளவிற்கு தீவிரம் கிடையாது. ஆக, சினிமாவைக் கற்க ஆழமான கற்றல் அவசியம் என்பதை தீவிரமாக நான் நம்புகின்றேன். இதுதான் என்னை ஒரு நடிகனாக கட்டமைத்தது. ஆனால் இது எதுவுமே எனக்கு கல்லூரியில் கிடைக்கவேயில்லை. இருவேறு திரைப்படக் கல்லூரியில் படித்தேன். முதன்முதலில் சினிமாக்காரர்களே நடத்திய செளத் இண்டியன் பிலிம் சேம்பர் ஆஃப் காமர்ஸ்,என்ற அமைப்பு அவர்களுக்கான ஒரு நடிப்புப்பள்ளியை அமைத்துக்கொண்டது. இதிலிருந்துதான் சிரஞ்சீவி அவர்களும், ரஜினிகாந்த் அவர்களும் வந்தார்கள். நானும் வந்தேன். அங்கிருந்த பலபேர் நடிகர்களாகியிருக்கிறார்கள்.

அந்தக்கல்லூரியின் சிறப்பம்சம் என்னவென்றால், சினிமாவைக் கையாள்பவர்களே நடிப்புக் கல்லூரியை நடத்துவதால், அவர்களுக்கு என்னவகையான நடிகர்கள் தேவைப்படுகிறார்களோ, அதற்கான ஒரு நடிகர்களை உருவாக்குகிற, ஒரு மையமாக இருந்தது. அதனால்தான் அங்கு நடித்த எல்லோருமே ஏதாவது ஒரு படத்தில் நடித்து முடித்திருப்பார்கள். அவர்கள் ஒரு நடிகரை தேர்ந்தெடுப்பதிலேயே என் படத்திற்கு இவன் சிறப்பாக வருவான், நன்றாக நடிக்கிறான் என்றுதான் தேர்ந்தெடுத்தார்கள். ஆகையால், அவர்கள் என்னமாதிரியான சினிமாவை நம்புகிறார்களோ அதற்கேற்ற ஒரு சினிமா நடிகரை தயார்பண்ணுகிறார்கள். அவர்களுக்கும், அவர்கள் எடுக்கின்ற சினிமாவிற்கும் தேவையான விஷயங்களை ஒரு எளிமையான கோட்பாட்டில் வைத்தார்கள்.

அந்தப் பள்ளியில் படித்தும் என் தாழ்வு மனப்பான்மை குறையவில்லை., வயிற்றுப் பிழைப்பிற்காக பல வேலைகளைச் செய்து வந்தேன். பிறகு, மூன்று வருடங்கள் கழிந்து மீண்டும் அடையாறில் இருக்கிற அரசு திரைப்படக்கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு சேர்ந்த முதலே இங்கு வந்தது தவறு என்ற எண்ணமேற்பட்டது. எல்லா அரசுக்கல்லூரிகளில் இருக்கின்ற கட்டமைப்பும், வகுப்பும் தான் அங்கும் இருந்தது. எங்கள் வகுப்பில் மிகச்சிறந்த ஆசிரியர்கள் இருந்தது கிடையாது. இருந்தாலும் நான் அந்த அடையாறு திரைப்படக்கல்லூரியில் சேர்ந்த காலகட்டத்தில்தான், திரு.ராஜிவ் மேனன் அவர்கள், யூகி சேது அவர்கள், சிவா, பகுதி நேர விரிவுரையாளராக வெங்கடேஷ் சக்ரவர்த்தி, பாண்டியன் போன்றோர்களெல்லாம் இருந்தார்கள். அவர்கள் எப்போதுமே சினிமாவை விவாதித்துக்கொண்டும், ஆங்கிலப்படங்களைப்பற்றி பேசிக்கொண்டும், எப்போதுமே சினிமாவைப்பற்றி விமர்சித்துக்கொண்டும் இருந்தனர். அவர்களுடனேயே சுற்றிக்கொண்டிருந்துதான் மறைமுகமாக எனக்கு சினிமா போதிக்கப்பட்டது. அந்தக்காலத்தில்தான் சினிமா., இலக்கியம் என எல்லாமே அறிமுகமானது. அந்த மாணவர்களோடு பழகியதுதான் எனக்கு சினிமா பற்றிய விழிப்புணர்வினை அதிகமாக்கியதே தவிர, அங்கு கல்லூரியில் கற்றுக்கொடுக்கப்பட்ட விஷயம் கிடையாது.

நடிப்பு பற்றி நான் ஏற்கனவே பயிற்சிபெற்றிருந்தேன். ஆனால், இங்கு அடையாறு திரைப்படக்கல்லூரியில் எடுக்கின்ற நடிப்பு வகுப்புகளை பார்க்கின்றபொழுது முந்தைய வகுப்பில் சொல்லப்பட்ட கருத்துக்களோடு கூடபொருத்திப்பார்க்க மாறானதாக இருந்தது. இன்றைக்கு இருப்பதுபோல இணைய வசதிகள் எல்லாம் அப்போது இல்லை. உட்கார்ந்த இடத்திலேயே மடியில் உலகம் வந்து உட்கார்வதும் கிடையாது. நான், மீனாட்சி சுந்தரம் போன்ற நண்பர்களோடு, சினிமாவைப் பற்றி கற்றுக்கொள்ள தேடித்தேடி போகவேண்டியதாக இருந்தது. அமெரிக்கன் லைப்ரரி, பிரிட்டிஷ் கவுன்சில், மேக்ஸ்முல்லர் பவன் போன்ற இடங்களில் ஏதாவது ஒரு நிகழ்விற்கு சென்று கொண்டேயிருந்தோம். இல்லையேல் புத்தகம் படித்துக்கொண்டிருப்போம். எங்களுக்கு நாங்களே பாடங்கள் நடத்திக்கொண்டோம். இன்று 2014ல் அந்த அரசு திரைப்படக் கல்லூரி மிக மிக மோசமான நிலையில் இருக்கிறது. சமீபத்தில் கூட அந்த திரைப்படக் கல்லூரிக்கு போய்வந்தேன். அங்கு ஏறக்குறைய 60% பணியிடங்கள் காலியாகவே உள்ளது. சரியான ஆசிரியர்கள் கிடையாது. மாணவர்கள் என்ன படிக்கிறார்கள் என்று தெரியவில்லை, யார் இதை வழிநடத்திச்செல்வார்கள் என்றும் தெரியவில்லை.

ஆக, இன்றைக்குப் பார்த்தீர்களேயானால் வருடத்திற்கு 120 படங்கள் எடுக்கிறார்கள், அவ்வளவு தேவைகள் இருக்கின்ற பொழுது, இட வசதி இருக்கின்ற பொழுது, நிதி வசதி இருக்கின்ற பொழுது ஏன் இந்த அரசு திரைப்படக்கல்லூரி மோசமான நிலையில் உள்ளது, என்பது சிந்திக்க வேண்டியது அவசியம். அரசு உத்யோகங்களை நிரப்ப வழக்கமாக இருக்கும் சட்டங்களை மாற்றியமைத்து கற்றுக்கொடுக்கும் திறன்வாய்ந்த படைப்பாளிகளை உள்ளே கொண்டுவரவேண்டும். . நாடகங்கள் நடத்தப்படவேண்டும், கவிதைகள் வாசிக்கப்படவேண்டும். இசை காற்றை நிரப்ப வேண்டும், இது ஒரு கலா மையமாக மாற வேண்டும். ஒரு இளைஞனை ஒரு கருவியை எப்படி இயக்கவேண்டும் என்பதை விட , அவன் மனோநிலையை கலாபூர்வமாக உயர்த்திச்செல்லும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். அங்கிருக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் எளிய குடும்பப் பின்னணியிலிருந்து வந்திருப்பதைப் பார்க்கிறேன். அவர்களை தன்னம்பிக்கையுற்ற இளைஞர்களாக உருமாற்றுவதுதான் அக்கல்லூரியின் கடைமையாக இருக்கவேண்டும்.

ஆனால் அங்கிருந்து ஒளிப்பதிவாளர்கள் இன்றும் கூட வந்துகொண்டிருக்கிறார்களே?

ஒளிப்பதிவாளர்களைப் பொறுத்தவரை அங்கு சொல்லித்தரவேண்டிய, கற்றுக்கொள்ளக்கூடிய கட்டாயம் இருக்கிறது. அது, தொழில்நுட்பத்தைச் சார்ந்து இருக்கிறது. கணக்குப்போட வேண்டியது அவசியம். ஒளி அளவினைஎப்படி கட்டுப்படுத்துவது, எது சரியான கோணம், என்றெல்லாம் பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால், டைரக்க்ஷனுக்கோ, நடிப்புப் பயிற்சிக்கோ அது கிடையாது. இன்றைக்கும் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஒரு இயக்குனரிடம் உதவியாளராகச் சேர்ந்துகொண்டால் நமக்கும் டைரக்ஷன் தெரிந்துவிடும் என்று நினைக்கிறோம், நினைக்கிறார்கள். இது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை. அவர்களாவது இயக்குநர்களிடம் போய் உதவியாளர்களாக சேர்கிறார்கள். ஆனால் நடிகர்கள் எங்கு போவார்கள்.?

அப்படியெனில் அவர்கள் இன்ஸ்டிட்யூட்டை முழுவதுமாக மூடிவிட்டு, ஒளிப்பதிவாளர்களுக்கு மட்டுமேயான கல்லூரியாக அதை வைத்துக்கொள்ள வேண்டும். முதன்முதலில் ஃப்லிம் இன்ஸ்டிட்யூட் தொழில்நுட்பம் சார்ந்துதான் ஆரம்பிக்கப்பட்டது. சி.பி.டியில் ஒளிப்பதிவு தொழில்நுட்பத்திற்காக ஆரம்பித்து மற்ற துறைகளெல்லாம் பின்னாளில் சேர்ந்துகொண்டது, பாலிடெக்னிக் போல.

இந்த சினிமாத்துறையிலேயே இருப்பவர்களும் கூட இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் எதற்கு படிப்பு அவசியம் என்று கேட்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கும் படிப்பின் அவசியம் புரிந்துவிட்டால், எனக்கு இந்தந்த மாதிரியான தரமான ஆட்கள் வேண்டுமென அவர்கள் நிர்பந்திப்பார்கள். இப்படி இந்த சினிமாத்துறை ஒரு சட்டதிட்டம் வைத்திருந்தால், திரைப்படக்கல்லூரியும் அதன் பொறுப்பு உணர்ந்து கொண்டு அதற்காக மாணவர்களை தயார்படுத்தி அனுப்பிவைப்பார்கள். இரண்டுமே கிடையாது. இந்த சினிமாத்துறையும் அதைப்பற்றி கவலைப்படுவது கிடையாது. அரசு கல்லூரி என்பதால் அங்கு இருப்பவர்களும் 50,000 ரூபாய்க்கும் மேலாகத்தான் சம்பளம் வாங்குவார்கள். அவர்கள் வாங்குகின்ற 50,000 சம்பளத்திற்கு அவர்கள் என்ன கற்றுத்தருகிறார்கள் என்பது முக்கியம். மாணவர்களும் அவர்களை நம்பி அவர்களுடைய உன்னதமான மூன்றுவருடங்களை தங்கள் வாழ்க்கையிலிருந்து தாரைவார்த்து கொடுக்கிறார்கள்.இந்த ஆசிரியர்கள் என்ன கைம்மாறு அவர்களுக்கு செய்யப்போகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.

வெறும் சந்தர்ப்பங்களால் மட்டுமே ஓடக்கூடிய இந்த துறைக்கு எப்படிப்பட்ட மனத்திண்மையோடு கூடிய மாணவர்களை அக்கல்லூரி உருவாக்கி அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அப்படி செய்வதில்லை. இன்று தமிழகத்தில் இருக்கும் எல்லா கல்லூரிகளிலுமிருந்தும் ஆயிரக்கணக்கான விஸ்காம் பட்டதாரிகள் வருகிறார்கள். அவர்கள் நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுகிறார்கள். அவர்களோடு போட்டியிடும் மனத்திண்மையை இவர்களுக்கு யார் கொடுப்பார்கள்?.

நடிக்கும்பொழுது, நீங்கள் இயக்குகிற படங்களிலும் நடிக்கிறீர்கள். அதே சமயம், பிற இயக்குனர்களிடமும் நடிக்கிறீர்கள். இவையிரண்டிற்குமேயான வித்தியாசமாக நீங்கள் கருதுவது?

மற்றவர் இயக்கத்தில் என்னை நடிகனாக மட்டுமே முன்வைக்கிறேன். பின்னர், நான் படத்தின் இயக்குனர் என்பதால் மற்ற நடிகர்களுக்கான சுதந்திரத்தையும் கொடுப்பேன். மற்ற இயக்குனர்களிடம் நடிக்கின்ற பொழுது இந்தகாட்சியை இப்படி மாற்றிக்கொள்ளலாம் என்றெல்லாம் சொல்ல முடியாது. அந்தப்படத்தில் ஒரு நடிகனாக என்ன சிறப்பான பங்களிப்பை அவர்களுக்கு செய்யமுடியுமோ அதைத்தான் செய்கிறேன். இயக்குனராக அவர்கள் படத்தில் குறுக்கிடுவது கிடையாது. அது தொழில் நேர்மையும் இல்லை.

நானே இயக்குனராகவும் இருக்கின்ற சூழலில், நான் முறையான பயிற்சி பெற்ற நடிகன் என்பதால், என்னுடைய கதாபாத்திரத்தை வெளிப்படுத்துவதில் என்னென்ன அணுகுமுறை இருக்கிறது என்பது தெரியும். நான் அந்தசுதந்திரத்தை என் நடிகர்களுக்கு கொடுக்கிறேன். அதே நேரத்தில் அவர்களுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருக்க மாட்டேன். கமலஹாசன் படத்தில் எப்படி எல்லோருமே நன்றாக நடிக்கிறார்கள் என்று கேட்கிறார்கள். அவருக்குத் தெரியும், ஒரு நடிகனுக்கான தேவை என்னென்ன.? என்று. அவர் அதை செய்துகொடுக்கிறார். அதையேத்தான் நானும் என் படத்தில் கொடுக்கிறேன். அது நடிகர்களை கையாளுவதற்கு இன்னும் எளிமையாக இருக்கிறது.

ஒவ்வொரு இயக்குனர்களுக்கும் ஒவ்வொரு அணுகுமுறை உண்டு. அவர்கள் எல்லோரிடமும் சென்று நாம் முரண்பட முடியாது.

நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்த பாலாசிங், பசுபதி, சண்முகராஜா போன்றோர்களை திரைப்படங்களிலும் நடிக்க வைத்திருக்கிறீர்கள். அவர்களை திரைக்குப் பயன்படுத்துகின்ற பொழுது நீங்கள் சந்திக்கின்ற சூழல்?

எனக்கு நாடகமும் தெரியும், சினிமாவும் தெரியும். எப்படி ஒருவரை நாடகத்திலிருந்து, சினிமாவிற்கு தாவ வைப்பது என்ற நுணுக்கம் எனக்குத்தெரியும். நாடகத்தில் நான் நடித்திருப்பதால் நாடகத்தில் எப்படி நடிப்புகையாளப்படுகிறது என்பது தெரியும். சினிமாவில் எப்படி நடிப்பு கையாளப்படுகிறது என்பதும் தெரியும். ஆகையால் சுலபமாக அவர்களுக்கு புரிவது போல அவர்களின் மொழியில் பேசி, நடிப்பை வாங்கிக்கொள்வேன்.
என் படத்தில் நடித்த அதே நடிகர்கள் பிற படங்களில் நன்றாக நடிக்கவில்லையே என்றும் சிலர் சொல்வார்கள். என் படத்தில் நடிக்கின்ற பொழுது முழு திரைக்கதையையும் அவர்களுக்கு கொடுத்தேன், அவர்கள் வழியிலேயே நானும் சென்றேன். ஒன்றாக சேர்ந்து கலந்து ஆலோசிப்போம். ஒத்திகை பார்ப்போம். விவாதங்களும் நடக்கும் . எப்படி ஒரு நாடகம் நடிக்கின்ற பொழுது நூற்றுக்கணக்கான ஒத்திகைகள் பார்த்து, தெளிவாக அவர்கள் சென்று மேடையேறுகிறார்களோ, அதே விஷயத்தைத்தான் சினிமாவிலும் நான் கொடுத்தேன். இதில் பிரம்ம சூத்திரம் என்பதெல்லாம் கிடையாது.

நாடகத்திற்கும் சினிமாவிற்குமான இடைவெளி?

சினிமா ஆரம்பித்து நூறுவருடங்கள் கழிந்தும் இன்றளவும் சினிமா நாடகத்தின் நீட்சி என்று சொல்கின்றபொழுதே இன்னமும் நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. வெறும் பிம்பங்களை மட்டுமே பதிவுசெய்யக்கூடிய விஷயம் எப்படி தனியான ஒரு கலையாக உருவெடுத்ததோ, அன்றைக்கே இது வேறு, இதற்கும் நாடகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று வெள்ளைக்காரன் பிரித்துக்கொண்டுவிட்டான். நாடகத்தின்நீட்சியாக சினிமாவை ஒரு அறிவுப்பூர்வமாக கையாண்டால் அதனை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இன்றைக்கு அதுவே ஒரு மரபாக ஆகிவிட்டதுதான் சிக்கல்.

கூத்தில் பார்த்தீர்களேயானால், உணர்ச்சிகரமான கட்டத்தின்பொழுது தூக்கம் வந்துவிடும் என்றோ, மக்கள் எழுந்துபோய் விடுவார்கள் என்பதற்காகவோ நடுவில் பப்பூனை இறக்கிவிடுவார்கள். அதேதான் சினிமாவில் நடக்கிறது. அதற்காக சினிமா நாடகத்தின் நீட்சி என்று பெருமைபடக்கூடிய விஷயம் கிடையாது. நாடகத்தின் நீட்சியாக தமிழ்சினிமா இருப்பது பெருங்குறை. கூத்தில் ராஜா வேஷம் வருவதற்கு முன், கட்டியங்காரன் கூறுவதுபோலத்தான் இன்றைக்கும் ரஜினி காந்த், படத்திற்கோ, விஜய் படத்திற்கோ, அஜித் படத்திற்கோ இருந்துவருகிறது. ”இப்ப யார் வருகிறார் தெரியுமா?”, என்பது போல பாடலும் வருகிறது. இதில் சந்தோசப்படுவதற்கு என்னஇருக்கிறது?. நாட்டுப்புறக்கலையின் வடிவமாகத்தான் வெகுஜன தமிழ்சினிமா இருக்கிறது. என்னைப்பொறுத்தவரை நாடகமும் சினிமாவும் வேறு வேறு. எண்ணெயும் , தண்ணியும் போல இரண்டுமே வேறு. கதை சொல்லப்படுகிறது என்பதால் இரண்டு ஊடகமும் ஒன்றாகிடாது. அது வேறு ஊடகம். இது வேறு ஊடகம்.

சினிமா தமிழுக்கு வந்த புதிதில் நாடகத்தை இயக்கியவர்களே சினிமாவையும் இயக்கினார்கள், அங்கு நடித்தவர்களே இங்கும் நடித்தார்கள், திரையரங்குகளும், உடைகளும், அலங்காரங்களும் நாடகத்திலிருந்துபெற்றுக்கொண்டதால், நாடகத்தின் நீட்சியாக சினிமா இன்றுவரை இருந்துவருகிறது.

இன்றைக்கு வரைக்கும் தமிழ்சினிமாவில் யதார்த்த உடைகள் வரவேயில்லையே. இப்பொழுதுதான் இளைஞர்கள் எடுத்துக்கொண்டிருக்கிற படங்களில் யதார்த்தம் வருவதைப்பார்க்கிறோம். அன்றைக்கு பதினாறு வயதினிலே வருவதற்கு முன்பு, யதார்த்தமான ஒரு உடை வருகிறதென்றால் அபூர்வமான விஷயம். மேலைநாடுகளில் சினிமா ஆரம்பிக்கின்ற பொழுதே யதார்த்த தன்மையுடன் தான் உள்ளே நுழைந்தது. ஆக, நாடகத்திற்கும் சினிமாவிற்கும் இடைவெளி என்பது கிடையாது. இரண்டுமே வேறு, வேறு.

முழு நேரமாக நாடகத்தில் நடிக்காமல், சினிமாவிற்கான பயிற்சியாக மட்டுமே நாடகத்தில் நடித்துவிட்டு சினிமாவில் நடிக்க வந்துவிடுகிறார்கள். அதைப்பற்றி?

இது தவறு என்று யார் சொல்ல வேண்டும்?. இது தவறு என்று அந்நடிகர்களை கையாள்பவர்கள் சொல்லிக்கொடுக்க வேண்டும். இந்த துறை ஒரு கடுமையான நிபந்தனைகள் வைத்துக்கொண்டால், இத்தனைஆண்டுகாலம் இன்னின்ன பயிற்சிகள் இருந்தால்தான் இந்தச்சினிமாவினை கையாள முடியும் என்று விதிகள் இருந்தால், இந்தந்த துறைக்கு வருகிறவர்களுக்கு இன்னன்ன தகுதிகள் வேண்டும் என்று இவர்கள் நிர்ணயித்திருந்தால், அவர்கள் ஏன் இரண்டு நாடகங்களில் பெற்ற பயிற்சியை வைத்துக்கொண்டு சினிமாவிற்கு வரப்போகிறார்கள். இது அந்த இளைஞர்களிடமிருக்கின்ற தவறு கிடையாது.

இன்றைக்கு மருத்துவத்துறைக்கோ, ஒரு பொறியியல் துறைக்கோ இதுமாதிரியாக சொல்லிவிட்டு போகமுடியுமா?. நான் ஒரு கட்டிடத்தில் இரண்டு வருடமாக சித்தாள் வேலை செய்துவந்தேன், எனக்கு இன்ஜினியர் வேலைகொடுங்கள் என்று யாரிடமாவது கேட்க முடியுமா. இல்லை, தேனியில் ஒரு மருத்துவரிடம் கம்போண்டராக வேலை பார்த்திருக்கிறேன், டாக்டராக வேண்டும் என்று அப்போல்லோ மருத்துவமனையில் சென்று வேலைகேட்கமுடியுமா?

இந்த துறையினது குறைபாடுதான், இதெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது. ஏனெனில் அந்நடிகர்களைக் கையாள்பவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். இந்தமாதிரியான நடிகர்கள் உருவாகுவதற்கு, கையாள்பவர்களுக்கும் இவர்களே போதும் என்ற நினைப்பினால்தானே.

”என்னய்யா இரண்டு டிராமா நடிச்சா நீ என்ன பெரிய நடிகனா, போ, ஒரு ஆறுமாசமாவது முறையா கத்துக்கிட்டு அப்புறம் வா” என்று கையாள்பவர்கள் சொன்னால்தான் நடிகர்களும் குறைந்தது ஆறுமாவது பயிற்சி எடுத்துக்கொள்வார்கள்.

ஒரு பையனை வளையல் கடையில் பார்த்தேன், இவன் நல்ல நடிகனாக வருவான் என்று ஒருவரை அழைத்து வருகிறார். அதற்காக அந்த இளைஞர்கள் மேல் குற்றம் சாட்டவில்லை. அவர்கள் மேல் தப்பு கிடையாது.

சத்யராஜ் நடிகராக வருவதற்கு முன்பு சிவகுமாரிடம் சென்று கேட்கிறார், ”சார் நான் வந்து சினிமாவில் நடிக்க வேண்டும்” என்றவுடன் சிவகுமார் சொல்கிறார், “நேரடியா சினிமாவிற்கெல்லாம் போனால் சான்ஸ் தரமாட்டாங்க,நீ போய் மெட்ராஸ்ல நல்ல நாடகக்குழு ஏதாவது ஒன்றில் சேர்ந்து, சின்ன சின்ன வேஷத்தில் நடித்துக்கொண்டிரு. சாயந்தர நேரம் சினிமா காரர்களெல்லாம் நாடகம் பார்க்க வருவார்கள், உன் நடிப்பு பிடித்திருந்தால் அவர்கள் கூட்டிச்செல்வார்கள், என்ற நியதி, இருந்தது. இன்றைக்கு என்ன நியதி இருக்கிறது ஒரு நடிகனாக ஆவதற்கு?.

நடிப்பு என்பது மிக மிக நுட்பமான, மிக மிக மன அழுத்தம் தரக்கூடிய, மிக பொறுப்புள்ள ஒரு கலை

பின்னர் இன்னுமொரு முக்கியமான விஷயம் . ... மற்ற ஊடக நடிகர்களும் சினிமாவிற்குள் வருவதை நான் வரவேற்கவே செய்கிறேன். ஆனால் அவர்களுக்கு அந்த ஊடகத்திலிருந்து இந்த ஊடகத்திற்கு மாறிக்கொள்வதற்கான சிறு பட்டறை அவசியம் . இப்போது நான் பிரபல சினிமா நடிகன். திடீரென்று குண்டயாந்தண்டலும் தட்சிணா மூர்த்தியிடம் சென்று “ஐயா, நான் இரண்யம் வேஷம் கட்ட வேண்டும் என்று ஆசை“ என்று சொன்னால் உடனே அவர் வேஷம் போட்டு மேடையேற்றி விடமாட்டார். முதலில் பயிற்சிக்குத்தான் அனுப்புவார்.

நடிகர்களுக்கு என்னமாதிரியான உளவியல் பயிற்சி அவசியம்? ஏனெனில் ஒருவர் ஏற்று நடிக்கின்ற கதாபாத்திரத்தோடு ஒன்றிவிட்டு அதிலிருந்து வெளியேற முடியாமல் சிரமப்படுகின்ற போக்கும் நிலவுகிறதே?

ஒரு கதாபாத்திரத்திலிருந்து, சகஜ நிலைக்கு வருவதற்கு சிறிது காலம் ஆகும். ஒரு காலகட்டத்தில் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியை விமர்சித்தும் கூட ’மெத்தட் ஆஃப் மேட்னஸ்’, என்ற புத்தகமெல்லாம் எழுதியிருக்கிறார்கள். ஏனெனில் அவரது மெத்தட் ஆக்டிங்கை நீங்கள் பின்பற்றினால் மனப்பிறழ்வு ஏற்படவும் வாய்ப்புண்டு என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

சிவாஜி எட்டு வயதில் நாடகத்தில் தள்ளப்படுகிறார். எட்டு வயதிலிருந்து ஒரு நடிகனுக்கான அத்தனை உளவியல் பயிற்சிகளையும் மேற்கொள்கிறார். ஒரு கதாபாத்திரத்தோடு எப்படி ஒன்ற வேண்டும் என்பது நாடகத்தில் மிகமிக முக்கியம் சிவாஜி ஐயா., அந்த சூழலில் இருந்து வருகிறார். அவர் அப்படித்தான் இருப்பார்.

சில சமயத்தில் சிவாஜி கணேசன் நடிக்கின்ற பொழுது நாடகத்தன்மையோடு நடித்தார் என்றெல்லாம் சொல்வார்கள். பல வாக்குவாதங்களும் நடைபெற்றன. இதில் நடிகர்களின் குறைபாடு என்ன இருக்கிறது?. சிவாஜிநாடகத்தன்மையோடு நடித்தால் அவர் அப்படி நடிப்பதற்கான காரணம் என்ன? அந்தக்காட்சியை ஓ.கே என்று ஒப்புதல் கொடுத்தது யார்? அவர் நடிப்பு நாடகத்தனமாக இருக்கிறது என்று அவர்கள் ஏன் கேட்கவில்லை. அல்லது சிவாஜி சார் நடித்திருக்கிற எத்தனை படங்களில் அவருக்கு எதார்த்தமான வசனங்கள் கொடுக்கப்பட்டது. அல்லது, சிவாஜி சார் நடித்திருப்பைவகளில் எத்தனை அரங்குகள் யதார்த்தமாய் போடப்பட்டன. அவருக்குஎத்தனை முறை யதார்த்தமான உடையலங்காரங்கள் கொடுக்கப்பட்டன. சிவாஜி சார் நடித்ததில் எத்தனை கதைகள் யதார்த்தத்தை ஒட்டியிருந்தன. படம் எடுப்பவர்களே நாடகத்தன்மையோடு எடுக்கின்ற பொழுது அதில் மேற்கொண்டு என்ன செய்யமுடியுமோ, அதைத்தானே ஒரு நடிகர் செய்ய முடியும்.

தேவர் மகனில் சிவாஜி சாரிடம் எப்படி இயக்குனர் பரதன் ஒரு நடிப்பைக் கேட்டு வாங்குகிறார். டிராமா என்றால் கூட கதாபாத்திரங்கள் மேடையேறினால் அவனை யாரும் தடுக்க முடியாது. ஆனால் சினிமாவில் அப்படியில்லை,எந்நேரத்தில் வேண்டுமானாலும் ’கட்’ சொல்லலாம். 50 டேக், 60 டேக் இன்றைக்கு எடுக்கிறார்கள். பின்னர் ஏன் குறைகளை சிவாஜி என்ற ஒருவர் மேல் மட்டுமே தள்ளுகிறீர்கள். நீங்கள் எடுப்பதே ஒரு நாடகத்தன்மையான படம், அதில் எப்படி நடித்துக்கொடுக்க முடியுமோ அதனையே சிவாஜி சாரும் செய்கிறார். அவர் நாடகத்தன்மையோடுதான் சிறப்பாக செய்வார்.

நீங்கள் அடிக்கடி குறிப்பிடும் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் கோட்பாடுகள் உங்கள் நடிப்பில் எவ்விதமாக உதவியாக இருக்கிறது?

எவ்விதமாகவும் உதவி செய்யவில்லை. அதிலிருந்து சில கூறுகளைத்தான் எடுத்து கையாள்கிறேன். ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் மெத்தட்களை நீங்கள் தமிழ்சினிமாவில் பயிற்சி செய்து பார்க்க முடியாது. 5 % சதவீதம் கூடபயன்படுத்த முடியாது.

தமிழ்சினிமா அதற்கான இடத்தையோ காலத்தையோ தராது. அப்படிப்பார்க்கையில் அதை எடுத்து தனியாக வைத்துவிட்டு , அதிலிருந்து சில கூறுகளை மட்டுமே கையாள்கிறேன். அப்படி ஏன் அவரது மெத்தட்களை கையாள முடியவில்லை என்பது சினிமாத்துறையின் மீது நான் வைக்கிற குற்றச்சாட்டாகத்தான் படுகிறது.
அவருடைய மெத்தடை சினிமாவில் பயன்படுத்த ஒன்றே ஒன்றுதான் தேவை. சினிமாவின் முழு திரைக்கதை புத்தகம் நடிகனிடத்தில் இருக்க வேண்டும். எத்தனை பேரிடமிருந்து அது எனக்கு கிடைக்கும்?. நான் செய்திருக்கின்ற 450 படங்களில் 25 லிருந்து 30 படங்கள் வரைதான் திரைக்கதை வசன புத்தகம் என்னிடம் வந்திருக்கிறது. பின்பு எப்படி அவரது மெத்தட்களை என்னால் பரிசோதித்துப் பார்க்க முடியும்.

நீங்கள் ஒரு பி.காம் ஸ்டூடண்ட் என்றால், அதில் வருகின்ற காமர்ஸைக் கூட நடிப்பில் கையாள முடியும். நீங்கள் ஒரு கிரிக்கெட் வீரராக இருந்துகொண்டு நடிக்கச் சென்றால் அதிலிருக்கின்ற அத்தனை கூறுகளையும் நடிப்பில் கையாளலாம். நிரூபிக்கப்பட்ட எல்லா கோட்பாடுகளுமே ஒன்றுக்கொன்று இயைந்து போகும். லாரி பெக்கரையும், மசானா புகோகாவையும் கூட நடிப்பில் பரிசோதித்துப் பார்க்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.அதற்கான முடிவு இன்னும் எட்டவில்லை. நடிப்புத்துறை இன்று அலுவலகத்திற்கு சென்று வருகிற ஒன்று போல சாதாரணமாக ஆகிவிட்டது. அதற்காக, அதன் மேல் எனக்கு சலிப்புத்தன்மை வராமலிருப்பதற்காக எனக்குத் தெரிந்த கோட்பாடுகளை அதன்மேல் பயன்படுத்த முடியுமா, இல்லையா என்பதை பரிட்சார்த்த ரீதியாகவே முயற்சித்துப்பார்க்கிறேன். எல்லா நிரூபிக்கப்பட்ட கோட்பாடுகளும், இன்னொரு நிரூபிக்கப்பட்ட கோட்பாடுகளின் மேல் அழகாக உட்காரும் என்பது என் அனுபவ நம்பிக்கை.

ஒரு அழகான கட்டிடம் கட்டப்படுகிறது, ஒரு சினிமா எடுக்கப்படுகிறது. இரண்டிற்கும் பெரிய வித்தியாசமே கிடையாது. இங்கு நான் குறிப்பிடுவது நேர்த்தியான கட்டிடம். இதில் இரண்டு விஷயங்கள் இருக்கிறது, பத்து லாரி மணல், செங்கல் அனுப்புங்க, ரூம் கட்டும்பொழுது கட்டிப்பார்த்து நல்லா வரலைன்ன இடிச்சுட்டு மீண்டும் கட்டலாம் என்பது ஒன்று. இல்லை சார், பத்து அடிக்கு பத்து அடி ரூம்னா இவ்வளவு செங்கல் வேண்டும், மணல்வேண்டும் என்று வரையறுத்துக்கொண்டு நேர்த்தியாக செய்வது என்றும் உள்ளது. இதை சினிமாவுடன் பொருத்திப் பாருங்கள் அப்படியேத்தான் இருக்கிறது.

கலையாக ஒரு கட்டிடம் கட்டுவதன் நோக்கமென்ன, பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும், அதற்குள் மனிதர்கள் வசிக்க வேண்டும். இதேதான் சினிமாவிலும் வரும். இந்தக் கட்டிடத்தை உருவாக்க என்னென்ன மூலக்கூறுகள் வேண்டும், இந்தச்சினிமாவை உருவாக்க என்னென்ன மூலக்கூறுகள் வேண்டும், இரண்டும் ஒன்றுதான்.

என்னைப்பார்த்து நிறைய பேர் கேட்பார்கள். என்ன சார் புலம்பிக்கிட்டே இருக்கீங்களே. நிறைய இளைஞர்கள் நிறைய படித்துத்தானே வருகிறார்கள் என்று. ஆனால் அவர்கள் என்ன துறையில் படித்துவிட்டு இங்கு வருகிறார்கள் என்பதும் முக்கியம். சிலர் கம்ப்யூட்டர் என்ஜினியரிங்க் முடித்து வருகிறார்கள், உங்களுக்கு தலை வலி வருகிறது, பக்கத்தில் நல்ல வக்கீல் இருக்கிறார் என்று அவரிடம் சென்று மருத்துவம் பார்ப்பீர்களா.? சினிமாவில் படித்தவர்கள் என்றால், அந்தந்த துறையில் படித்தவர்கள்தான் வரவேண்டும்.

ஸ்டானிஸ்லாவ்ஸ்கி என்று சொன்னீர்கள், அதேபோல அதற்குப் பின்பாகவும் நிறைய தியரிகள் வந்திருக்கும், அதையும் புதுப்பித்துக்கொண்டேயிருக்கிறீர்களா?

ஆமாம், கண்டிப்பாக புதுப்பித்துக்கொண்டுதான் ஆக வேண்டும். எம்.பி.பி.எஸ் படித்து முடித்தவுடன் நீங்கள் மருத்துவராகிவிட முடியாது. படித்து முடித்தவுடன் கூட ஆறு மாத காலத்திற்கு என்ன மாதிரியான மருந்து புதிதாக வருகிறது, என்பதை புதுப்பித்துக்கொண்டுதானே ஆக வேண்டும்.
ஹாலிவுட்டில் மெத்தட்டை சரியாக பயன்படுத்திவருகின்றனர். அடிப்படையில் நீங்கள் என்னமாதிரியாக படம் எடுத்தாலும்,’லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ்’ மாதிரியாக ஃபேண்டஸி எடுத்தாலும், ’ப்ரேவ் ஹார்ட்’ மாதிரியாக சரித்திரப் படம் எடுத்தாலும்,’ கிரேவிட்டி ’மாதிரி படம் எடுத்தாலும் நடிப்பு என்பது யதார்த்தத்தை ஒட்டி பிரதிபலிக்கும் ஒன்றாகத்தான் இருந்து வருகிறது. அது வேறு படம் என்கிற பொழுதுதான் அதற்கான நடிப்பும் மாறுபடுகின்றது.

தமிழ்சினிமாவை எடுத்துக்கொண்டால் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் நான் கையாண்ட உடல்மொழியை தேவர் மகன் படத்தில் கொடுக்க முடியாது. அதே இம்சை அரசன் படத்தை யதார்த்த தோரணையில் எடுத்திருந்தால் வேறுவிதமான உடல்மொழியை பின்பற்றியிருப்பேன். இப்படி என்னை புதுப்பித்துக்கொள்வது எனக்கு மனத்திண்மையை அதிகரிக்கிறது, புத்துணர்ச்சியைகொடுக்கிறது.

நடிகர்களுக்கு விஞ்ஞானிகளைவிட, பேராசிரியர்களை விட அதிகமான சம்பளம் கிடைக்கிறது, அப்பொழுது ஏன் நீங்கள் உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ளக் கூடாது?. இவ்வளவு லட்ச ரூபாய் சம்பளம் வாங்குகின்ற பொழுது அதற்காக இரண்டு பக்கங்களாவது படிக்க வேண்டுமல்லவா, மனது உறுத்துமே. ஆனால், தமிழ்சினிமாவிற்கு இது அவசியம் கிடையாது என்ற எண்ணத்தை ஆரம்பத்திலேயே வித்திட்டு விடுகிறார்கள்.

நிகழ்காலத்தில் தமிழ்சினிமா எப்படி இருப்பதாக நினைக்கிறீர்கள்?


தமிழ்சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக்கொண்டுதான் வருகின்றது. மாற்றங்கள் வருகின்றது. இது வளர்ச்சியா என்பது தெரியாது. நான் இந்த சினிமாத்துறைக்கு வந்து 30 வருடங்கள் ஆகிவிட்டது. நான் இந்தச்சினிமாவைப் பார்க்கின்ற பார்வைக்கும், நீங்கள் இந்தச்சினிமாவைப் பார்க்கின்ற பார்வைக்கும் வித்தியாசம் இருக்கிறது. நீங்கள் இங்கிருந்து வருகின்ற நிறைவான படைப்புகளை மட்டும் வைத்தே சினிமா உலகத்தை மதிப்பிடுகிறீர்கள். நான்உள்ளிருந்து இந்தச் சினிமாவைப் பார்க்கிறேன். அதாவது படம் உருவாகிற விதம். இந்த முப்பது வருடமாக இந்தச் சினிமாவை தயாரிக்கின்ற முறை எப்படியெல்லாம் மாறிக்கொண்டு வருகின்றது என்பதை பார்த்துக்கொண்டுவருகிறேன். ஆகையால் என்னுடைய பார்வை வேறு, உங்களுடைய பார்வை வேறு. என்னுடைய பார்வையில் இங்கு வளர்ச்சி கிடையாது. ஆனால், மாற்றங்கள் நிறைய நடந்தவண்ணம் இருக்கிறது.

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். நீங்கள் முப்பது வருடத்திற்கு முன்னால் சென்னைக்கு வந்திருந்தால், சாலைகளில் இவ்வளவு நெருக்கடிகள் இருக்காது. காவலர்கள் தான் சிக்னலில் நிற்பார்கள். மக்கள் விதிமுறைகளை ஒழுங்காக பின்பற்றினார்கள். இன்றைக்கு பெரிய மாற்றங்கள் வந்திருக்கின்றது. பென்ஸ்,பி.எம்.டபிள்யூ இங்கு தயாரிக்கப்படுகிறது. பல பகட்டான கார்கள் இந்தச் சாலைகளில் ஓடுகிறது. ஆனால், சிக்னலில் என்ன நடக்கிறது?. இதில் எது வளர்ச்சி?. சாலைகளில் பி.எம்.டபிள்யூவும், பென்ஸ் கார்களும் ஓடுவது வளர்ச்சியா?. அல்லது, யாரும் சாலைவிதிகளைப் பின்பற்றுவதில்லை என்பது வளர்ச்சியா? இதேதான் சினிமாவும்.

நான் 1984, 85 காலகட்டங்களில் நடிக்க வருகிறேன். சைலன்ஸ் என்று சொன்னால் படப்பிடிப்புத்தளத்தில் அனைவரும் அமைதியாகத்தான் இருப்பார்கள். இன்றைக்கு அது கிடையாது. இது மாற்றமா? வளர்ச்சியா? என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

அப்போது ஒரு நடிகர் நடித்துக்கொண்டிருக்கும்பொழுது, குறிப்புகளை தொடர் வர்ணனைகள் போல தருவதை இயக்குனரும் அனுமதிக்க மாட்டார், நடிகரும் அனுமதிக்க மாட்டார், ஆனால் இன்று நடிகர்கள் நடித்துக்கொண்டிருக்கும்பொழுது இடது பக்கம் பார், வலது பக்கம் பார், அப்படியே படியில் ஏறி நின்று திரும்பிப்பாருங்கள் என்று கிரிக்கெட் கமெண்டரிகள் போல கொடுக்கிறார்கள். இது மாற்றமா ? வளர்ச்சியா?

அன்றைக்கு ரஜினி காந்த் படமேயானாலும் நாற்பது பேர் தான் படப்பிடிப்புக் குழுவில் இருப்பார்கள். மூன்றே மூன்று வண்டிகள்தான் செட்டில் ஓடும். இன்றைக்கு சின்ன படமாக எடுத்தாலும், 120 பேர் இருக்கிறார்கள்., பத்துபதினைந்து வண்டி ஓடுகின்றது. இது மாற்றமா, வளர்ச்சியா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும். படைப்பைப் பார்ப்பது உங்கள் பார்வை, அதே பார்வையை எப்படி நான் பார்க்க முடியும்.

இந்த தலைமுறையில் இருப்பவர்கள் பழையது எல்லாமே, தேவையற்றது என்றுதான் நினைக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்விதமான வழிமுறைகள் பின்பற்றப்பட்டன., எந்தெந்த விஷயங்களை இந்ததலைமுறையிலும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்கிற உணர்வில்லை. 50களில் பயன்படுத்திய கேமராக்களைப் பார்த்தால் இன்று இருப்பது போல அல்லாமல், என்ன பதிவு செய்யப்படுகிறது என்பதை பார்க்க முடியாது. ஒரு படப்பிடிப்பை., காட்சியை பதிவுசெய்து முடித்தவுடன் பத்து நாட்கள் கழித்துதான் லேப்பிலிருந்து பிரிண்ட் போடப்பட்டு வரும். அந்த பத்து நாட்களும் ஒளிப்பதிவாளர் தூங்க மாட்டார். ஒரு வேளை படத்தில் நடித்துக்கொண்டிருந்த சிவாஜி சாருக்கு பாதி உருவம் தான் பதிந்திருக்கிறது , அல்லது மைக் கேமராவின் சட்டகத்தினுள் வந்துவிட்டது என்றெல்லாம் ஏவிஎம் செட்டியாரிடம் போய் சொன்னால், கொன்னுடுவார். சிவாஜி சாரின் பாதி உருவம் தான் வந்திருக்கிறது என்று இயக்குனரிடம் சென்று சிவாஜி சாருக்கான கால்ஷீட் கேட்டு வாங்க ஒளிப்பதிவாளரால் முடியுமா.? எந்த ஷாட் எடுத்தாலும், அதில் முழுக்கவனமும் இருந்தது, ஒரு காட்சியை நன்கு தீர்மானிக்கப்பட்ட விஷயமாகவே அவர்கள் முடிவுசெய்து படப்பிடிப்பு நடத்துவார்கள். டிஜிட்டல் போன்ற புரட்சிகள் எல்லாம் வந்துவிட்ட மாற்றத்தினால், ஒரு நாளைக்கு நூறு ஷாட்கள் எடுத்துக்கொண்டேயிருக்கலாமா?

ஒரு படத்தின் வெற்றியை படத்தின் வசனங்கள்தான் தீர்மானிக்கிறது என்கிற காலகட்டம் இருக்கின்ற பொழுது, அந்த வசனத்தை தெளிவாக பேசக்கூடிய, உணர்ச்சிப்பூர்வமாக பேசக்கூடிய நடிகர்கள் முக்கியமாக இருக்கின்ற காரணத்தினால், நடிகர்களை தங்கத்தாம்பாளத்தில் வைத்து கவனித்துக் கொண்டார்கள். அதுவே நடிகர்கள் முரணான வாழ்க்கையமைப்பை அமைத்துக்கொள்வதற்கும் காரணமாக அமைந்துவிட்டது. ஆனால், இன்றைக்கு டிஜிட்டல் என்ற விஷயம் வந்தபிறகு, ஒரு நடிகனுடைய ப்ராஸஸ் என்னவென்று யாராவது புரிந்து கொண்டிருக்கிறார்களா? முதலில் இங்கு தொழில்முறை நடிகர்களே மிகக்குறைவு. இங்கு தொழில் முறை நடிகர்கள் மேலேயே நம்பிக்கை கிடையாது. ஒரு கதாபாத்திரத்தை சிறப்பாக கொண்டுவர அவன் எந்தமாதிரியான பயிற்சிகளை மேற்கொள்கிறான், அதை சரியாக நடித்துக்கொடுத்த பின்பு அவன் அனுபவிக்கிற உளவியல் பற்றி தெரிந்துகொள்ள அக்கறையிருக்கிறதா? என்று தெரியவில்லை.

யார் தொழில்முறை நடிகன்? வெகுகாலமாய் நடித்துக்கொண்டிருப்பவரா? வெற்றிபெற்றவரா? அல்லது முறையாய் பயிற்சி செய்பவரா?

நான் எண்பதுகளில் இந்த துறைக்கு வருகின்ற பொழுது, ஒவ்வொரு அடி படச்சுருளுக்கும் கணக்கு வைத்திருப்பார்கள். எந்த படமானாலும் 1:3 தான் Ratio. இரண்டு மணி நேர படத்திற்கு ஆறு மணி நேர படச்சுருள் தான்கொடுக்கப்படும். அது பெரிய நடிகர் படமானாலும், சின்ன பட்ஜெட் படமானாலும் அதுதான் வழக்கம். அப்பொழுது ஒத்திகை பார்த்து நடிகர்கள் எல்லாம் காட்சிக்கு தயாரான பின்புதான் அந்த காட்சி படமாக்கப்படும். ஒரு கோணத்தில் ஒருமுறைதான் பதிவாக்கப்படும். அப்பொழுது ஒரு நடிகனுக்கு தெரியும், இந்த காட்சி கண்டிப்பாக திரையில் வரப்போகிறது., அதனால முழுகவனத்துடன் இதில் நடித்தாக வேண்டும். அப்பொழுது எங்களுக்குஒன்றாவது, இரண்டாவது டேக் வாங்கும்வரைதான் அனுமதி, மூன்றாவது டேக்கிற்கு கேமரா மேன் எட்டிப்பார்த்துச்சொல்வார், ”நாசர்., ஒரு அடி பதிமூன்று ரூபாய் ஐம்பது பைசா., ஞாபகம், ஓ.கே., ஒன்மோர்” என்பார். அப்ப எங்களுக்கு பயம் வரும். இன்றைக்கு டிஜிட்டலில் ஒரே காட்சியை திருப்பி திருப்பி திருப்பி பல கோணங்களில் எடுக்கின்ற பொழுது எப்படி ஒரு நடிகனால் அதே மனநிலையை வைத்திருக்க முடியும். ஆனால்,நாங்கள் வைத்துக்கொள்கிறோம். எப்படியென்றால், சாஃப்ட்வேர் போல, புரோக்ராம்களாக, மாறுகின்றோம். அந்தக்காலத்தில் ஒரே கோணத்தில் படமாக்குகின்ற பொழுது இந்த மாதிரித்தான் காட்சி வரப்போகின்றது என்பதுதெரிந்து ஒரே மனநிலையுடன் நடித்து முடித்துவிடுகின்றோம்.

இன்றைக்கு பல கோணங்களில் படமாக்குகின்ற பொழுது எந்த காட்சி எந்தக் கோணத்தில் வெட்டப்படும் என்பதே தெரியாமல் போகிறது, ஆனால் கண்டினூட்டியும் முக்கியம். குழப்பமாக இருக்கிறது. அதனால்,உயிரோட்டமில்லாத வெறுமனே ப்ரோக்ராம் பண்ணப்பட்ட பொருளாகத்தான் எங்கள் மனநிலையை வைத்துக்கொள்கிறோம். இன்றைக்கு படப்பிடிப்பு நடக்கையில், ஒரு ஷாட் முடிந்தவுடன், நான் நடித்து முடித்திருக்கின்றகாட்சி சரியாக வந்திருக்கிறதா? இல்லையா? என்று அறிந்து என் மனநிலையிலிருந்து வெளியேறவும், அல்லது ஷாட் ஓ.கே வா, இல்லையா, ஒன் மோர் போவாங்களா என்பதையெல்லாம் சமயங்களில் தெரிவிப்பதேயில்லை. அவர்கள் உபகரணங்களை மாற்றுகின்ற பொழுது, இயக்குனர்கள் மானிட்டரிலிருந்து எழுந்திருக்கின்ற பொழுதுதான் ஓஹோ, ஷாட் ஓ.கே போலயிருக்கு என்று தெரிந்துகொள்கிறோம்.

அந்தக்காலத்தில் காட்சி நடிக்கப்பட்டவுடன், ”கட்”, என்று சொல்வார்கள். எங்கள் முகம் தன்னிச்சையாக கேமரா பக்கமாகத்திரும்பும். கேமராவுக்குப் பக்கத்திலேயே இயக்குனரின் முகமும் இருக்கும். அந்த முகத்தைப் பார்த்தாலே எங்களுக்கு ஷாட் ஓ.கே வா? இல்லையான்னு தெரியும், இயக்குனரின் முகம் சரியில்லை என்றால், நாங்களே ஒன் மோர் கேட்டு நடிப்போம். இன்றைக்கு இயக்குனர்களின் கண் எங்கு இருக்கிறது?. தெரியவில்லை. இது மாதிரியான விஷயங்களை ஏன் பழையதிலிருந்து கற்றுக்கொள்ள மாட்டேனென்கிறோம் என்பதுதான் வருத்தம். காட்சி பதிவாக்கப்படும் பொழுது காமிராவுக்குப் பக்கத்திலேயே கால்மேல் கால் போட்டுக்கொண்டு லைவ் ஷோ பாருங்களேன். அப்புறம் நடந்துபோய் மானிட்டரில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்கலாமே. சில நேரம் கண்வழி பார்ப்பது நிறைவு தருமே.,

நீங்கள் ஒரு இசைக்கலைஞர் வீட்டிற்கு செல்லுங்கள், ஓவியர் வீட்டிற்கு சென்று பாருங்கள், அல்லது கலை சம்பந்தப்பட்ட எவர் வீட்டிற்கும், அல்லது அவர்கள் பணிசெய்யக்கூடிய இடத்திற்கும் சென்று பாருங்கள், எந்தச் சூழலில் கலை உருவாகிறது? ஆனால், எந்தச்சூழலில் சினிமா என்ற கலை உருவாகிறது என்பதை படப்பிடிப்புத்தளத்தில் வந்து பாருங்கள். ஒரே, கூச்சலும், குப்பையும், சம்பந்தப்படாத ஆட்களும், கேலியும் இருக்கிற இடத்தில் எப்படி கலை உருவாகும்? நான் வேண்டிக்கொள்வதெல்லாம்., ஒரு கலை உருவாவதற்கான சூழலை படப்பிடிப்புத் தளத்தில் உருவாக்க வேண்டும்.

இயக்குனர்களே கதை எழுதுபவர்களாகவும் இருப்பதன் பின்னணி?

சினிமாவிற்காக பிரத்யேகமாக எழுதுகிற எழுத்தாளர்களே, இங்கு கிடையாது. எம்.டி. வாசுதேவன் நாயரை விட்டுவிடலாம், மலையாளத்தில் இன்றும், இயக்குனர்களுக்கு , எழுத்தாளர்கள் தனியாகத்தான் இருப்பார்கள். அது பரதனாக இருந்தாலும், ஃபாசிலாக இருந்தாலும், இப்பொழுது இருக்கிற தலைமுறை வரைக்கும், பின்பற்றி வருகிறார்கள். ஆனால், எழுத்தாளர்களே இங்கு கிடையாது. எந்தக்காலத்திலிருந்து கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று ஒருவரேபெயர் போட்டுக்கொள்கிற வழக்கம் வந்தது?. அதற்கு முன்பெல்லாம் ’பராசக்தி’யை யார் எழுதினார்கள், ’பாவ மன்னிப்பு’ யார் எழுதினார், ஏன் எழுத்தாளர்கள் தனியாக இருந்தார்கள், இவ்வளவு நல்லா கதை எழுதுகிறவர்கள் ஏன் இயக்குனராக முயற்சி செய்யவில்லை.

பீம்சிங்கிற்கு சொந்த கதை எழுத தெரியாதா?அல்லது ஆரூர்தாஸிக்கு டைரக்ட் செய்யத் தெரியாதா? ஏன் தமிழ்சினிமா எழுத்தாளர்கள் என்கிற வர்க்கத்தை ஒழித்தது. நல்ல கதை எழுதுகிறவர்கள் தான் இயக்குனராக முடியும் என்றால் சுஜாதாவை வைத்து டைரக்ட் பண்ணச்சொல்லலாம். எதற்காக இயக்குனரைத் தனியாக தேடுகிறீர்கள். புதுமைப்பித்தன் சினிமாவிற்கு எழுதினார், அலைய விட்டார்களே. பட்டினியோடு தானே செத்தார். ஒருவர் எழுத்தாக்கியதை , இன்னொருவர் காட்சியாக்குவதில்தான் சினிமாவின் மாயலோகம் விரிகிறது. இன்றைக்கு இருக்கிற இளம் இயக்குநர்கள் அவர்களாகவே கதையெழுதுவதை நான் வரவேற்கிறேன்.. அவர்கள் அதை வெகு புத்திசாலித்தனமாக கையாளுகிறார்கள்.. ஆனாலும் எழுத்தாள வர்க்கம் மறைந்துபோனதில் எனக்கொரு வருத்தம்தான்.

நூறு வருட தமிழ்சினிமாவிற்கென்று ஆவணக்காப்பகம் இல்லாத்து குறித்து?

வெட்கப்படத்தான் முடியும். ஆவணத்தைக் காப்பது என்பது நம்முடைய மரபில் கிடையாது. அது வெள்ளைக்காரர்களின் மரபு. நாம் இன்றைக்கும் தஞ்சை பெரிய கோவில் சாமி கும்பிடுகிற இடம் தான், அதை ஒரு வரலாற்றுப்பதிவாகவோ, கற்சுவர் எழுத்துக்களைப் படிப்பதோ, அதனை ஒரு கலைப்பொருளாகவோ பார்க்க முடியாது. எத்தனையோ பழைய கட்டிடங்கள் அரசாங்க அலுவலகங்களாக இன்று மாறிப்போயிருக்கின்றன. அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இங்கு எதற்குமே ஆவணங்கள் கிடையாது. அரசாங்கம் பத்துகோடி கொடுத்து, 40கோடி ரூபாய் செலவில் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா நடத்தினோம்.. அதில் ஒரு பகுதியை அவ்விழா நினைவாக ஒரு ஆவணக்காப்பகம் அமைக்க செலவு செய்திருக்கலாம்.
முதல் இந்திய சினிமா எடுக்கப்பட்டதிலிருந்து நூறு வருடங்கள் கழிந்து 2014ல் நூறாவது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டிருக்கிறது என்று வருகின்ற தலைமுறையினர்க்கு காண்பிப்பார்கள். இதைவிட என்ன பெரிய ஆவணம் தேவைப்படும்?.

ஆவணக்காப்பகம் உருவாக என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எல்லாமே எளிமையாகிவிட்டது. ஒரு சிறு இடம் போதும், அனைத்தையும் சேகரிக்க வேண்டும். மிகவும் எளிதுதான். ஆனால் ஆவணங்காத்தல் என்கிற மரபு நமக்கு கிடையாது. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன்ஒரே ஆளாக அவ்வளவு பொக்கிஷங்களை வைத்திருந்தார். ஒரு நாள் அரசாங்கம் அவரிடமிருந்து வாங்கியது, இன்றைக்கு அது யாரிடம் இருக்கிறது. அவருடைய விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் எங்கு இருக்கிறது?. அவர்சேகரித்து வைத்திருப்பது நல்லசினிமாவா, கெட்டசினிமாவா என்பதெல்லாம் விட்டுவிடுவோம். அது ஒரு பதிவு. அது எங்கு இருக்கிறது என்று யார் ஆராய்ந்தார்கள். அரசாங்கம் வாங்கினாலே அந்த பொருளை யார்வேண்டுமானாலும் உபயோகிக்கலாம் என்பதற்காகத்தானே, அந்த ஆவணங்களையாவது பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை.

திரைப்படங்கள் தொடர்பாக இன்று வெளியாகும் விமர்சனங்கள் குறித்து?

நல்லப் படங்களை அடையாளம் காணவும், மக்கள் மத்தியில் அதை கவுரவப்படுத்தவும் ஒரு அமைப்பில்லை. முதலில் அதனை அரசாங்கம்தான் செய்திருக்க வேண்டும். வணிக ரீதியான படங்களை தவிர்த்து தீவிரமாக எடுக்கப்படும் படங்களை அவர்கள் தேர்ந்தெடுத்து விருதுகள் கொடுக்க வேண்டும். ஆனால் நம்முடைய அரசுகள் (தமிழக அரசு) மிக கவனமாக வெகுஜனப் படங்களையே மக்களுக்கு மறு அறிமுகம் செய்கிறார்கள். என்னுடையப் படம் என்பதற்காக சொல்லவில்லை, ”தேவதை” படத்தில் சிறந்த கலை இயக்குனர் விருது ட்ராட்ஸ்கி மருதுவிற்கு கிடைக்கும் என்று பெரும் நம்பிக்கையோடு இருந்தேன். ஆனால் ரஜினிகாந்த்தின் படத்தில் ஜி.கேவிற்கு கிடைத்தது. நான் ஜி.கேவினை குறை கூற விரும்பவில்லை. ஆனால் நிச்சயமாக கலை இயக்கம் அந்தத் திரைப்படத்தை விட, தேவதையில் சிறந்திருந்தது என்று நான் இன்னமும் நம்புகிறேன்.

பிறகு, வாழ்க்கைக்கு உதவும் கருத்துகளை சொல்வதே நல்ல படம் என்று ஒரு கோட்பாடு உலவிக் கொண்டிருக்கிறது. அதையும் நான் மறுக்கிறேன். அப்படி பார்த்தால், தமிழில் வெளிவரும் எல்லாப் படங்களும் ஏதோ ஒரு கருத்தை வலியுறுத்துகிறது. கருத்து சொல்வது மட்டுமே அல்ல ஒரு கலைப் படைப்பின் கடமை. முதலில் ஒரு கலை அக்கலை சார்ந்த அழகியல் கூறுகளை தன்னகத்தே செழுமையாக கருத்தரித்திருக்க வேண்டும். ஆனால் அடிப்படை அழகியல் கூறுகள் சிதைக்கப்பட்டு, கருத்துகளை மட்டுமே பிரச்சாரம் செய்கின்ற திரைப்படங்கள் எப்படி சிறந்த படங்களாக இருக்க முடியும். உதாரணத்திற்கு ஒரு காலக்கட்டத்தில் த.மு.எ.ச.வில் பாலு மகேந்திராவையும் வீ.சேகரையும் ஒரே மேடையில் வைத்து கவுரவிப்பார்கள். பாலு மகேந்திரா தன் படங்களில் கருத்துகளை சொன்னதில்லை, சினிமாவின் அழகியல் கூறுகளையும் எளிமையையும் அழகாய் பொதித்திருப்பார். ஆனால் என் நண்பர் வீ. சேகரின் படங்களில் சினிமாவின் அழகியல் கூறுகள் வெகு ஜனங்களுக்காக சிதைத்திருப்பார், ஆனால் கருத்துக்கள் நிறைந்திருக்கும். இதை நான் விமர்சனமாக வைக்கவில்லை. ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன். இந்த இரு படைப்பாளிகளும் ஒரு சேர ஒரே மேடையில் கவுரவிக்கப்படும்போது எது நல்லப் படம் என்கிற கேள்விக்கு பார்வையாளன் என்ன பதில் காண்பான்?

சுயாதீன (Independant Film) திரைப்படங்கள் பற்றி?

ஹாலிவுட்டிலேயே கலைப்படங்களுக்கும், வெகுஜனப்படங்களுக்குள்ளான கோடு மறைந்துவிட்டது. ‘ஸ்பைடர் மேன்’ படம் கூட ஆர்டிஸ்டிக் லெவலில் இருக்கிறது. இங்கு ஆரம்பம் முதலே ஒரு குழப்பம் நிலவி வருகிறது. வணிகரீதியாக வெற்றி தருவது நல்ல படமா? கருத்து ரீதியாக முன்னணியில் இருப்பது நல்ல படமா? என்று. ஆனால், நமக்கு மட்டும்தான் கலை சினிமா மற்றும் வணிக சினிமா என்ற பாகுபாடு நிலவிவருகிறது.

தனக்கான கருத்தை, வணிக எதிர்பார்ப்பின்றி சுதந்திரமாக சொல்கிறவர்கள் தான் சுயாதீன திரைப்படக் கலைஞர்கள். இன்றைக்கு புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்கிறோம், நூறு வருட தமிழ்சினிமா என்று, இங்கு நூறு வருடதமிழ்சினிமா சுயாதீனத் திரைப்படங்களை வெளியிட தனியாக ஒரு வெளி அமைத்துத்தரவில்லை. ஹாலிவுட், ஐரோப்பாவில் எத்தனையோ சுயாதீன திரைப்பட படைப்பாளிகள் இருக்கிறார்கள். பசியும் பட்டினியுமாக காய்கின்ற ஈராக்கிற்கு செல்லுங்கள் அங்கு எத்தனையோ சுயாதீன திரைப்பட படைப்பாளிகள் இருக்கிறார்கள். இங்கு எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதையும் யோசிக்க வேண்டும். ரஜினி காந்த், ஏ.ஆர். ரஹ்மான்உருவாக்கப்படுகிறார்கள், ஏன் சுயாதீன திரைக்கலைஞர்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்படவில்லை?.

இங்கு முன்பே சொன்னது போல மாறுதல் அடைந்திருக்கிறது, வளர்ச்சி கிடையாது.

இங்கு எல்லா படத்திற்கும் சென்சார் வாங்கவேண்டும், எல்லா படத்திற்கும் தியேட்டர் கிடைக்க வேண்டும், வணிக ரீதியான படங்கள் மட்டுமே வியாபித்திருக்கும் நிலையில் இங்கு எப்படி திரைத்துறை வள்ர்ச்சியடைந்ததாகசொல்லமுடியும். ”தங்கமீன்கள்” எடுத்தாலும் ரஜினிகாந்த் படம் ஓடுகிற தியேட்டரையே கெஞ்சி கெஞ்சி வாங்கவேண்டும். ”மைனா” மாதிரியாக படம் எடுத்தாலும்,, ஒரு பெரிய படம் எப்ப வெளியாகுமோ, அது வெளியானபின்பு நம் படம் வெளியாகட்டும் என்று காத்திருக்க வேண்டும். என் படம் மைனாவும் இல்லை, தங்கமீன்களும் இல்லை என்று சுதந்திரமான சிந்தனையில் ஒரு புதுமுயற்சியாக படம் எடுத்தால் அதை வெளியிட இங்கு ஏதும் உருவாக்கி வைக்கப்படவில்லை. டிஜிட்டல் வந்தபின்னால் வேண்டுமானாலும் இணையத்தில் பதிவேற்றிவிடலாம். ஆனால், சினிமாவாக எப்போது ஒரு அரங்கில் வெளியிடப்படும்?.

நீங்கள் சொல்கிற பெரும்பாலான சுயாதீன திரைப்பட கலைஞர்கள், குறும்பட இயக்குனர்கள் எல்லோருமே திரும்பியும் வெகுஜன சினிமாவிற்குள் நுழைவதற்கான விசிட்டிங்கார்டாகத்தான் தன் படைப்பை வைத்துக்கொள்கிறார்கள். சுயாதீனகலைஞர்கள் என்பது தனி மனோநிலை, தனியான வாழ்வியல் , என்று அவர்கள் பார்ப்பது கிடையாது.

பொருளாதார பிரச்சனை ஒரு காரணமா?

ஒரு பிரச்சனை பற்றி யோசிக்கின்ற பொழுது, பொருளாதார பின்னணி பற்றியும் யோசிக்க வேண்டும். ஒரு கைபேசியில் எடுக்கின்ற படங்கள் கூட உலக அளவில் போட்டி போடுகின்றனவே, பின் எப்படி நீங்கள் பொருளாதாரபிரச்சனைகளை காரணம் காட்டுகிறீர்கள். பொருளாதாரம் சார்ந்து சிந்தித்தால் உங்களுக்கு வேறொரு மனநிலைதான் வருகின்றது என்று அர்த்தம். பின்பு நீங்கள் சுயாதீன திரைக்கலைஞர்கள் என்று மார்தட்டிக்கொள்ளமுடியாது. அப்பாஸ் கிரியோஸ்தமியோ, மஜித் மஜிதியோ பல கோடிபேர் அவர்களின் படத்தைப்பார்த்தாலும் அவர்களுக்கான வாழ்வியல் முறைகளை அவர்கள் மாற்றிக்கொண்டது கிடையாது. இன்றைக்கு மஜித்மஜிதி ”சில்ட்ரன் ஆஃப் ஹெவன்”, படத்தை ஒரு விசிட்டிங்க் கார்டாக வைத்துக்கொண்டு ஹாலிவுட்டில் படம் எடுக்க முடியும். ஆனால், அவன் போகமாட்டான். ஆனால், நமக்கு இது ஒரு விசிட்டிங்க் கார்டு மாதிரிதான். அவர்கள் இப்படி வெகுஜன மீடியாவிற்குள் வருவதை தவறு என்று குற்றம் சுமத்தவில்லை, ஆனால், அவர்கள் சுயாதீனத்திரைக்கலைஞர்களா? என்றுதான் கேள்வியை முன்வைக்கிறேன்.

மைக்கேல் மூர் என்பவரை எத்தனையோ முறை திரைப்படம் எடுக்க கூப்பிட்டுப்பார்க்கிறார்கள். “that’s not my job” என்று சொல்கிறான். எனக்கு மெய்ன் ஸ்ட்ரீம் சினிமா எடுக்கத் தெரியாது என்று சொல்கிறான் மைக்கெல் மூர்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுருண்கோல சினிமாவையொட்டி திரை மையங்கள் அமைக்கப்பட்டிருக்கலாம். அங்கு சுயாதீன நாடகங்களும், திரைப்படங்களும் திரையிடப்பட்டிருக்கலாம். அவர்களுக்கான, அவர்களது படைப்புகளை வெளியிடக்கூடிய இடமாக அது இருந்திருக்கலாம்

அந்த மையத்தை யார் ஆரம்பிப்பார்கள்?


அதை அரசாங்கம் தான் ஆரம்பிக்க வேண்டும். பெருமையாக சொல்லிக்கொள்கிறோமே ஐந்து முதலமைச்சர்கள் சினிமாவிலிருந்து வந்திருக்கிறார்கள், என்று அவர்கள் தான் இதனை ஆரம்பிக்க வேண்டும்.

சென்சார் விதிமுறைகள் படைப்பாளிகளின் சுதந்திரத்தில் தலையிடுவதாக நினைக்கிறீர்களா?

உதாரணத்திற்கு சொல்கிறேன். அனுராக் காஷ்யப் என்று ஒருத்தர் இருக்கிறார். அவர் ”Black Friday”, என்று படம் எடுக்கிறார். அவர் எடுக்கின்ற படம் தடைசெய்யப்படுகின்றது. அதனால் அதனை குறுந்தகடுகளாக ஆயிரம் பிரதி எடுக்கிறான். பேருந்து நிலையத்தில் நிற்கின்றான். இரயில் நிலையத்தில், எங்கெங்கெல்லாம் மக்கள் கூட்டமாக நிற்கிறார்களோ அங்கெல்லாம் சென்று “நான் ஒரு படம் எடுத்தேன், வெளியிட முடியவில்லை, ஆனாலும், என் படத்தை மக்கள் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன், அதனால் இந்த குறுந்தகடுகளை இலவசமாக தருகிறேன்” என்று கொடுக்கிறான். இப்பொழுது சொல்லுங்கள் என்ன பிரச்சனை.

நீங்கள் சொல்கிற கருத்துகளால் உங்கள் குரல்வளை நசுக்கப்படும் என்று தெரிந்தால், முதலில் ஆராய வேண்டும், காட்சி வழி ஊடகமாக இருப்பவைகளில் என்னென்ன வழிகளில் என் படத்தை வெளியிடலாம். என்னுடைய பொருளாதாரம் இதற்கு சரி வருமா?. பின்பு., என்னால் இதை தாங்க முடியும் என்று சொன்னால், பின்பு எதற்காக நீங்கள் சென்சாருக்கு பயப்பட வேண்டும். சிறந்த கவிஞர் ஆக வேண்டுமென்றால் சினிமாவில் பாடலாசிரியராக ஆகவேண்டும், சிறந்த எழுத்தாளராக வேண்டுமென்றால் சினிமாவில் எழுத்தாளராக இருக்க வேண்டும்., சிறந்த நடிகனாக இருக்க வேண்டுமென்றால் அதுவும் சினிமாவில் என்று நினைத்தால் இப்படித்தான் நடக்கும்.

மேலை நாட்டுப்படங்களில் பாடல்களே கிடையாது. அங்கு இசை ஒரு பக்கம் தனியாக வளர்கிறது. அங்கு இசை சினிமாவை நம்பி மட்டுமே இல்லை. இங்கு எல்லாமே வெகுஜன மீடியாவிற்கு வரவேண்டும்.

படத்தை வெளியிடலாம் என்று அரசாங்கம் அனுமதி அளித்த பிறகும் கூட, ஒரு சிலர் சேர்ந்துகொண்டு படத்தை வெளியிடக்கூடாது என்று அவர்கள் ஒரு சென்சார் விதிமுறைகள் கொண்டுவருகிறார்கள். அவர்களையும் நீங்கள் எப்படி தடுப்பீர்கள்?. இங்கு தணிக்கைக்குழுவை வைத்துக்கொண்டே இவ்வளவு வக்கிரமும் வன்முறையுமான படங்கள் வருகிறது. சமீபமாக வருகிற எல்லா சினிமாக்களும் ஒன்றெயொன்றைத்தான் போதிக்கிறது. காதல்பிரச்சனையானாலும், வாய்க்கால் வரப்பு தகராறானாலும் பேச்சு வார்த்தைகளால் எந்த பிரச்சனைகளும் தீராது, பத்து பேரையாவது வெட்டித்தள்ளினால்தான் சரியாகும் என்ற ஆழமான விஷத்தை தமிழ்சினிமா விதைத்துவருகிறது. தணிக்கைகுழு இதற்கும் அனுமதி அளித்துக்கொண்டுதானே இருக்கிறது.

மென்மையாக போய்க்கொண்டிருந்த ‘மைனா’ படத்தில் கதை முடிந்த பிறகும் பத்து பேரை வெட்டித்தள்ளுகிறார்களே அது எந்த விதத்தில் அவசியம்.

மக்கள் சினிமாவில் நல்லது செய்பவர்கள், நிஜத்திலும் நல்லது செய்வார்கள் என்று நம்புவதை நடிகர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்களா?


இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்., நடிகர்களும் அரசியலுக்கு வருவதற்கு உரிமை இருக்கிறது. அவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று தடுப்பதற்கு யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. ரஜினிகாந்தும் வரலாம், விஜய் அவர்களும் வரலாம் எந்த நடிகர் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், நாம் கணக்கில் கொள்ள வேண்டியதும், விவாதிக்க வேண்டியதும் அவர்களிடம் தலைமைக் குணங்கள் இருக்கிறதா? இல்லையா ? என்பது மட்டுமே. கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்களும், ஊழல் குற்றம் சுமத்தப்பட்டவர்களும் பதவியில் உட்கார்ந்துகொண்டிருக்கும் பொழுது, நடிகர்கள் ஏன் வரக்கூடாது?.

அதே சமயம், மக்களை ஆள்கிற திறன் அவர்களிடம் இருக்கிறதா? என்றுதான் பார்க்க வேண்டும். நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் என்ன தப்பு இருக்கிறது?. அவர்கள் சார்ந்த துறையில் அவர்கள் எந்தந்த பிரச்சனைகளைச் சந்தித்து என்ன மாதிரியான முடிவுகள் எடுத்திருக்கிறார்கள், அந்த குணம் இந்த பொது வாழ்க்கைக்கு பயன்படுமா? என்று பார்க்க வேண்டும்.

திராவிட அரசியல் காலத்தில் இருந்தே இது இருக்கிறது. அவர்களே இதற்கான கட்டமைப்பை இங்கு கொண்டு வந்தார்கள். எம்.ஜி.ஆரிலிருந்து இது ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சிறந்த ஆசிரியருக்கான விருது கொடுக்கிறது, அவரைக்கொண்டு போய் நாம் கல்வி அமைச்சர் ஆக்கிவிடுகின்றோமா?. ஒவ்வொரு வருடமும் அர்ஜீனா விருது விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்களை நாம் விளையாட்டுத்துறை அமைச்சராக்கிவிடுகின்றோமா?.

பழங்காவியங்களிலிருந்து, நவீன இலக்கியங்கள் வரை எப்பொழுதுமே ஒரு நம்பிக்கை தரக்கூடிய மையக்கதாபாத்திரம் தேவைப்படுகிறது. ஒரு சாராருக்கு ராமரும், மறு சாராருக்கு ராவணனும், பிற சாராருக்கு கர்ணனும், தேவைப்படுகிறார்கள். நம்முடைய பலவீனங்களை மறைப்பதற்கும், என்னால் முடியாததை இன்னொருவன் செய்ய வேண்டும். அதில் சாமான்ய மனிதனுக்கு ஒரு திருப்தி. அதைத்தான் ’ஸ்பைடர் மேன்’ செய்கிறான். ஆனால், வெள்ளைக்காரன் அழகாக தரம் பிரித்து வைத்திருக்கிறான். ஃபேண்டஸி வேறு, ரியலிஸ்டிக் வேறு இந்தக் கட்டுக்கோப்புக்குள் இதுதான் வரவேண்டும் என்று. ஆனால் நம்மூரில் எல்லோரும் ’சூப்பர் மேன், ஸ்பைடர் மேன்’. ரொனால்ட் ரீகன் அரசியலுக்கு வந்தார் அவரும் நடிகர் தானே. அர்னால்ட் ஸ்வாஸ்னேகர் கவர்னராக இருந்தாரே அவரும் நடிகர்தானே என்பார்கள். அவர்கள் எந்தவொரு காலகட்டத்திலேயும் அவர்கள் நடித்த படத்தில், அவர்கள் சார்ந்த அரசைப்பற்றியோ, அவர்கள் சார்ந்த அரசியல் சித்தாந்தத்தைப்பற்றியோ எனக்குப் பின்னால் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற தொனியில் ஒரு வரி கூட அவர்கள் சொன்னது கிடையாது. ரீகன் ஒரு படத்திலாவது நான் ரிபப்ளிக்கா, டெமாக்ரட்டிக்கா என்று சொல்லியிருப்பாரா? சொல்லியிருந்தால் தியேட்டரின் திரைச்சீலையை கிழித்திருப்பார்கள். அவருக்கே தெரியாமல் பின்புலத்தில் அவர் கொடி வந்திருந்தால் திரையரங்கை நாசமாக்கியிருப்பார்கள். ஓட்டுப்போடும் ஒவ்வொரு குடிமகனும் தன்னுடைய வாழ்வை நிர்ணயிப்பதற்கான உரிமையை ஐந்து வருடத்திற்கு ஒருவரிடம் ஒப்படைக்க போகிறோம். அவன் தன்னுடைய ஐந்தாண்டு கால கல்வி பொருளாதாரம் இத்தியாதி இத்யாதியை தீர்மானிக்க போகிறான். அவனுக்கு அந்த தகுதி இருக்கிறதா? என்பதை பல்லாயிரம் முறை சிந்தித்தே ஓட்டுப்போட வேண்டும்.

வெறும் கவர்ச்சிக்காக மட்டுமே மதி மயங்க கூடாது.

உங்கள் வீட்டு சமையல்காரர் மிகப் பிரமாதமாய் சமைப்பார் என்பதற்காக, நீங்கள் கஷ்டப்பட்டு வாங்கிய பென்ஸ்காரின் சாவியை அவரிடம் கொடுத்து ஓட்டச் சொல்வீர்களா என்ன? அவருக்கு ஓட்டத்தெரிந்தாலொழிய.

நான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று எதன் அடிப்படையில் ஒரு படத்தை தேர்ந்தெடுக்கிறீர்கள்?

அவர்கள் கொடுக்கின்ற பணமும், கால அவகாசமும், தான். கதைகளையெல்லாம் ஆழமாய் பார்ப்பதில்லை. திருப்பித்திருப்பி ஒரே கதை தான் வருகின்றது. இடையில் சின்ன படங்கள் என்று வந்தால் அதற்கு கொஞ்சம் முன்னுரிமை உண்டு. தொழில்ரீதியாக இதுதான் உண்மையான விஷயம்.

நீங்கள் குறிப்பிடுகின்ற பொழுது பெரும்பாலும், காட்சிகள் மூலமாகத்தான் கதை நகரவேண்டும் என்பதை வலியுறுத்துகிறீர்கள். ஆனால் நீங்கள் இயக்கிய படங்களே கூட வசனத்தால் கதை சொல்லப்படுகிறது. ஏன்?

நான் முழு நேர இயக்குனர் கிடையாது. நான் அடிப்படையில் நடிகன். நான் இன்னமும் முழுமையடையாத இயக்குனர். எந்தப்படமும் என் படம் நன்றாக ஓடியது கிடையாது. நான் எந்த விருதும் வாங்கியது கிடையாது. இன்னமும் முழு நேர இயக்குனராக முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </