கலை
ரூபத்திற்காக அரூபமாய்
60களின் ஆரம்பத்தில் என் பள்ளி நாட்களில் ஓவியத்தின் மீது இருந்த ஈடுபாடு காரணமாகவும் , கண்களை இமைக்க முடியாதபடி அதிசயங்களை எனக்குக் காண்பித்த வெளிநாட்டு Fantasy திரைப்படங்களும், Hammer Horror திரைப்படங்களும், சரித்திர மற்றும் பைபிள் கதைகளை அடிப்படையாக்க் கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படங்களும் எனக்கு அப்போது பழக்கப்பட்ட, வளரும் ஓவியனான நான் கையாண்டு வரும் Brush Stroke கள் திரையின் பரப்பில் ஏதாவது ஒரு பகுதியில் பிரமாண்டமான காட்சியின் ஒரு பகுதியில், திரைப்பட்த்தின் உள்ளே போடப்பட்டிருக்கிற செட்டில் இருக்கும் பாகங்களின் மேல் உள்ள கலை இயக்குநரின் ஆளுமையையும் தாண்டி, திரையின் மேற்பரப்பில், ஒரு ஓவியக்கித்தானின் மேற்பரப்பில் இருக்கும் அந்த Brush Strokeகளைக் கண்டுபிடித்து விடும் கூர்மையும் எனக்கப்போதே இருந்த்து. ஆனால் அதை முழுமையாக உணரும் முன்பே, தெரிந்துகொள்ளும் முன்பே அந்த Shot மறைந்து அடுத்த Shot வந்துவிடும். இதனால் அவற்றைக் கண நேரத்தில் கண்டுவிடும் அறிவுடன், ‘எப்படி காமிராவால் பதிவு செய்யப்பட்ட திரைப் பட்த்தில் ஓவியர் தீட்டிய ஒரு பகுதியாக இருக்க முடியும்?’ என்றே கேள்வியும், தூக்கமின்மையும்தான் பள்ளி இறுதி ஆண்டு முடிக்கும் முன்பே திரைக்கலையில் “Matte Painting” என்ற ஒரு உத்தி இருப்பதை அறிந்தபின் திரைக்கலையின் காட்சிப் படுத்துகிற முறை எனக்கு உள்ளே விரிந்த்து. ஓவியரின் காட்சிப்படுத்தும் முறை அவருடைய கையை விட்டு புகைப்படக் கலையால் சென்றுவிடவில்லை என்பதையும் அறிய முடிந்த்து.
இன்று பல நுட்பமான கலைஞர்களின் ஆளுமையுடன் இக்கலை விரிந்து, விரிந்து தற்போது Digital யுகத்தில் காட்சிப்படுத்துகிற தன்மையில் தவிர்க்க முடியாத முறையாக இருப்பதுடன், கதை சொல்ல திரைக்கலையில் பயன்படுத்த வேண்டிய இடங்களில் பயன்படுத்தவில்லை என்றால் பார்வையாளனின் மனதில் விரிக்க வேண்டியதை விரிக்க முடியாது என்பதும் நிச்சயமாகிறது.
|
Matte Painting என்ற இக்கலை வடிவம் திரைக்கலையின் ஆதி முதல்வரான ஷார்ஷே மெலீயிடமே துவங்கிவிட்டது. திரைப்பட வரலாற்றோடு கூடிய, 100 ஆண்டு Matte Painting வரலாற்றை எழுதிய காரிஜ் பரன், 1940களில் வந்த “Thief of Bagdad” திரைப்படத்திற்கு தந்திரக் காட்சிகளைச் செய்த, தற்போது வயது முதிர்ந்த லாரன்ஸ் பட்லரை சந்திக்கச் சென்ற அனுபவத்தை அவர் வார்த்தைகளிலேயே கேட்கலாம்.
’கலிபோர்னியா மாநிலத்தின் பால் பூருக்கில் ஒரு 100 ஏக்கர் எஸ்டேட்டின் வாசலைக் கண்டுபிடிக்க கிட்டத்தட்ட பல மணி நேரமாக நான் அலைந்து திரிய வேண்டியிருந்தது. தந்திரக் காட்சிகளைச் செய்த முதிய ஓவியர் லாரன்ஸ் பட்லர் அங்குதான் தன் ஓய்வு நாட்களைக் கழித்து வருகிறார் என்பதுடன் தற்போது அவரைச் சந்தித்துவிடும் நிகழ்வும் நடக்கப்போகிறது என்று நினைத்து மகிழ்ந்தேன். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து விடாமல் அவரைச் சந்தித்துப் பேட்டி காண நான் எடுத்த முயற்சியின் செயல்பாடாக ஆயிரம் மைல்களைக் கடந்து இப்போது அந்த எஸ்டேட்டின் வாசலைத் தேடிக்கொண்டிருக்கிறேன். கடைசியாக எனக்குப் பேட்டி அளிப்பதற்கு லாரன்ஸ் பட்லர் ஒப்புக்கொண்டதை இப்போதும் என்னால் நம்ப முடியவில்லை. சர். அலெக்ஸாண்டர் கொர்டாவின் பிரியமான இந்த Special effect கலைஞர்தான் 1936ல் வெளி வந்த “Things to come” என்ற படத்தில் வருகிற அதிசயங்களைச் செய்தவர், நான் அவரிடம் எப்படி 1939ல் வெளிவந்த “The Man who could work Miracles” என்ற படத்தில் வருகிற அதிசயங்களைச் செய்தவர். நான் அவரிடம் எப்படி 1939ல் வெளீவந்த “The Thief of Bagdad” படத்திற்கான Original blue Screen process ஐ குறைந்த வசதிகளில் இருந்து கண்டுபிடித்தார் என்றும் 1948ல் டைரக்டர் ஆர்சன் வெல்ஸின் “The Lady From Shanghai” படத்திற்கு செய்த Matte ஓவியங்களைப் பற்றியும் மணிக்கணக்கில் பேச வேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்தேன்.
பல்வேறு Matte ஓவியக் கலைஞர்கள் பட்லரின் சிறப்பையும், உடல் வேலை செய்தபோது பெற்ற அனுபவங்களைப் பற்றியும், அவர் திரைப்படங்களுக்காக உருவாக்கிய ஆயிரக்கணக்கான படிமங்களைப் பற்றியும், தாங்கள் அவரிடம் கற்றவற்றைப் பற்றியும் சிலாகித்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் எனக்கு மட்டும் இல்லை என்றே பலகாலமாக இப்போது வரை சொல்லி வந்தார். இந்த முறை எப்போதும்போல் நான் கேட்ட வேண்டுதலுக்கு செவி சாய்த்து பேட்டி அளிப்பதாக ஒத்துக்கொண்டிருக்கிறார். கடைசியாக பதில் அளிக்கும்போது, ‘சரி! காரிஜ், வா! ஆனால் உன்னுடைய கேள்விகள் எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், உனக்கு ஏதாவது பயன்படும் சிலவற்றையாவது சொல்ல முயற்சிக்கிறேன்.’ என்றார்.
அந்த ‘ஏதாவது பயன்படும்’ என்ற வார்த்தைக்காக பல மைல்கள், பல காடுகள், வாழ்வில் பார்த்தே அறியாத பல சாலை வழிகாட்டிகள் என்று கடந்த ஒரு இரும்பு கேட் அருகில் வந்து சேர்ந்தபோது அதில் தொங்கிய வாசம் “keep out, who the helt wants to see you any way” என்பதாக இருந்தது.
இதுதான் நான் தேடிய இடம் என்றறிந்தவுடன் தூசி மிகுந்த உள்சாலை வழியே சென்றபோது கெளபாய் தொப்பியுடன் டிராக்டர் ஓட்டிக்கொண்டிருந்தவரைப் பார்த்தபோது, ‘இவர் சார். அலெக்ஸாண்டர் கோர்டாவின் நண்பர் லாரன்ஸ் பட்லராக இருக்க முடியாது. என்றுதான் பட்டது. ஆனால் அந்த விவசாயிதான் லாரி பட்லர்.
’கடைசியாக, என்னைப் பிடித்துவிட்டாய்!’ என்ற கிண்டலுடன் கூறியவரின் முகத்திலிருந்து என்னை நேரில் பார்த்தவுடன் மகிழ்ந்தாரா அல்லது ஏமாற்றமடைந்தாரா என அனுமானிக்க முடியாவிட்டாலும் அன்புடன் வீட்டிற்குள் என்னை அழைத்துச் சென்றார்.
நாங்கள் பின்பக்க கதவு வழியாகச் சென்ற போது ஒரு சிற்பம் கதவு ஆடாமல் இருக்க தடுப்பு பயன்படுத்தப்பட்டிருந்தது. ‘ஆமாம் இது Thief of Bagdad படத்திற்காக எனக்கு கிடைத்த ஆஸ்கார்’ என்று சொல்லிக்கொண்டே காமிராவின் பாகங்களும், டிராக்டரின் பாகங்களும் கலந்து நிரம்பி இருந்த பட்டறைக்குள் நுழைந்தார். கடைசியாக ஒரு சோபாவில் நாங்கள் உட்கார்ந்தவுடன் பேட்டியை ஆரம்பிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அமர்ந்தவுடன் அவர் ‘நான் பேட்டி காணப்படுவதை விரும்புவதில்லை’ என்றதுடன்., ‘என் வாழ்நாளெல்லாம் காட்சிப் படிமங்களைப் படைப்பதிலேயே கழித்துவிட்டேன். அவற்றை எல்லாம் நான் எதற்குச் சொல்ல வேண்டும் வெறும் வார்த்தைகளால்? மந்திரவாதி எப்படி மந்திர, தந்திரத்தைச் சொல்வான்? எல்லா மந்திரவாதிகளுக்கும் மேலான மந்திரக்காரன் கலைஞன் ஷார்ஷே மெலீ எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். நீ அவரைப் பற்றி அறிந்திருக்கிறாயா?” என்று கேட்டார்.
|
’ஷார்ஷே மெலி’யின் வாழ்வைப் பற்றியும், அவருடைய படைப்புகளைப் பற்றியும் நன் நீளப் பேச ஆரம்பித்தவுடன் அமைதியானவரிடம் நன் எழுதும் இப்புத்தகம் எவ்வளவு முக்கியமானது என்றும், இதே போல பல கலைஞர்களிடம் பேசியதையும், இந்த Matte கலை வடிவத்தின் வரலாற்றைப் படித்து அறிய என் புத்தகம் உதவும் என்றும், மூத்தக் கலைஞர்கள் செய்த வழிமுறைகளின் வழியே அடுத்த தலைமுறை செயல்பட உதவும் என்பதுடன், நாங்கள் பயன்படுத்தும் உத்தி எவ்வாறு தோன்றியது என்றும், நீங்கள் பேச முன்வரவில்லை என்றால், திரைப்பட வரலாற்றில் உங்களைப் போன்ற கலைஞர்களின் பங்களிப்பு அறியப்படாமலேயே போய்விடும் என்றவுடன் சிறிது யோசித்துப் பின்., ‘சரி! உன்னுடைய வாதத்திறமையால் ஏற்றுக்கொள்கிறேன். தோட்டத்தில் உதிர்ந்த பழங்களைப் பொறுக்கிக்கொண்டே பேசலாம் வ’ என்றார்.
அவர் அளித்த செய்திகள், உத்திகள் நான் எழுதிய புத்தகத்தில் நிரம்பியிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால் பேச்செல்லாம் முடிந்து கிளம்பும்போது ஒரு கதையைக் கேட்காமல் விட்டது ஞாபகம் வந்தது. அவர் Special effectன் தந்தையாகிய ‘ஷார்ஷே மெலீ’யைச் சந்தித்ததைக் குறிப்பிட்டார். அது எப்படி நடந்தது? எப்படி அந்த அரிய காலத்தை அவருடன் பட்லர் செலவு செய்தார்?
திரைபப்டத்துறை, மாமனிதர்களை, பெரிய கலைஞர்களை எப்படி மதிக்க மறந்தது என்பது பற்றியும், மெலீயை மறந்ததையும் குறிப்பிட்டார்.
1930களில் பாரீஸ் நகரின் சப்வேயில் அலெக்ஸாண்டர் கோர்டாதான் குழந்தைகளுக்குச் சிறு விளையாட்டுப் பொருட்களை விற்றுக்கொண்டிருந்த ஏழை ஷார்ஷே மெலீயை, சுமார் இருபது இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் சினிமா வரலாற்றின் சகாப்தத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஷார்ஷே மெலீயைத் திரும்பக் கண்டுபிடித்தார். கொரடா, மெலீயை லண்டனுக்கு அழைத்து வந்து ஒரு டிரஸ்ட் மூலம் உதவ எண்ணினார்.
கோர்டாவால் லண்டன் முழுவதும் மெலீயைச் சுற்றி அழைத்துத் திரிய பட்லர் பணிக்கப்பட்டதுடன், தான் வேலை செய்யும் கோர்டாவின் தந்திரக் காட்சிகளைச் செய்யும் ஸ்டுடியோவிற்கும் மெலியை அழைத்துச் சென்று காண்பித்தார் பட்லர். பல்வேறு உத்திகளைப் பரிமாறிக்கொண்டார்கள். திரைப்படத்துறை அவரை மறந்தாலும் அந்த நிமிடம் வரை தந்திரக் காட்சி ரூபங்களைக் கனவு கண்டு கொண்டே இருப்பவராக மெலீ இருக்கிறார் என்று அவரின் பேச்சு இருநத்துடன், தான் அதுவரையில் படைத்த திரைப்படிமங்களின் மீது பெருமையும் கொண்டிருந்தார்.
மெலீ, லாரி பட்லரிடம் விபத்தாக தான் “Stop Motion” உத்தியை, ஒரு தெருக் காட்சியை ஒளிப்பதிவு செய்யும்போது காமிரா ஓடாமல் நின்றதால் சரிசெய்து ஒளிப்பதிவு செய்தபோது, திரையில் உதிரை வண்டிக்காரராக மாறியதும் கண்டு அதிசயத்து இவ்வுத்தியை உலகிற்கு அளித்திருகிறார். இன்று Jump Cut என்றும் Trick Photography என்றும் அறியப்படுகிற இவை அன்றைய காலத்து மந்திரவாதி ராபர்ட் கூடினியின் வித்தைகளைவிட நவீனமயமானதாகக் கருதப்பட்டது.
இப்போது இவ்விருவரின் சந்திப்பு நடந்து எழுபது ஆண்டுகள் கடந்தும் மெலீயின் முதல் தந்திரக் காட்சி திரையில் தோன்றி நூறு ஆண்டுகள் கழித்தும் நம்மை இன்றும் இவ்வுத்தி அதிசயங்களை நம் கண்களின் முன் நிகழ்த்தி நம்மை மகிழ்விக்கிறது. இப்போதும் கூட கம்யூட்டர்கள் நம் பழைய உத்திகளை மேன்மைப் படுத்தியிருந்தாலும், கதையைத் திரை வடிவத்தில் பிம்பங்கள் வழியாகச் சொல்ல அவசியமான சக்தி- மெலீயைப் போல பார்க்கிற சக்தியே முக்கியமானது. இன்றைய கலைஞர்கள் பயன்படுத்துகிற உபகரணங்கள், கம்ப்யூட்டர்கள், அன்று மெலீ பயன்படுத்திய கைகளால் மட்டுமே வரைந்த பின்புலங்களானாலும் அவை நம்மை அதிசயத்தலில் ஆட்படும்போதே வெற்றிபெறுகிறது.
லாரியும் மெலீயும் நாளெல்லாம் படிமங்களை சமைப்பதில் உள்ள மகிழ்ச்சியையும், உத்திகளையும் பற்றிப் பேசித் தீர்த்தார்கள். விடைபெறும்போது மெலீ அவருடைய பிரெஞ்சு நாட்டு முறைப்படி லாரியின் கன்னத்தில் முத்தமிடாமல் லாரியின் கைகளைப் பற்றி குலுக்கிவிட்டுச் சென்றார். எனவே அதுபோலவே நான் லாரி பட்லரின் கைகளைப் பிடித்து குலுக்கியதன்படி ஷார்ஷே மெலீ – உடன் கைகுலுக்கிய மனிதருடன் கைகுலுக்கினேன்’ என்று முடிக்கிறார் காரிஜ் பரன்.
இவற்றிற்கு ஊடே நம் பாபுபாய் மிஸ்திரி, ரவிகாந்த் நிகாய்ச், வேணு, W.R.சுப்பாராவ், பிரசாத் மற்றும் முகம் தெரியாத கலை இயக்குநர்களும் கலைஞர்களும் அவர்களின் பங்களிப்பும் சரியாகப் பதிவாகாமல் போனதும் என் நினைவில் வந்து போகிறது.
நன்றி: திரை மாத இதழ் – டிசம்பர் 2005
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |