வெள்ளித்திரை வித்தகர்கள் - 3
ஷியாம் பெனகல்
எழுபதுகளின் தொடக்கத்தில் அன்றைய சென்னையில், அருமையான ‘சினிமா பார்க்கும் அனுபவத்தைக்’ கொடுத்துக் கொண்டிருந்த ‘சஃபையர்’ திரையரங்கில், ஞாயிற்றுக்கிழமை காலைக் காட்சிகளாக – சத்யஜித் ராய். மிருணாள் சென் ஆகியோர் இயக்கிய வங்க மொழிப் படங்களைத் திரையிடத் தொடங்கினார்கள். அப்போதுதான் ‘பாதேர் பாஞ்சாலி’யும், ‘இண்டர்வியூ’வும், “கல்கத்தா71”ம் காணக்கிடைத்தன. ராயும், சென்னும் புதிய அவதாரங்களாக எனக்கு அறிமுகமானார்கள். இதற்கிடையே 1975ல் மற்றொரு மின்னல் கீற்றும் ஒளிர்ந்தது. சென்னை அண்ணாசாலையில் இருந்த “அண்ணா” என்ற சிறிய திரையரங்கு ஒன்றில் அந்த ஆண்டு “ஆங்குர்” என்ற இந்தியப்படம் வர்த்தக ரீதியாக வெளியிடப்பட்டது.
|
அதற்கு முன் அப்படத்தைக் குறித்த எந்தவொரு செய்தியையும் நான் படித்திருக்கவில்லை. இயக்குனர் , கதாநாயகர், கதாநாயகி அத்தனை பேருமே புதுமுகங்கள் என்பதாலும் பாடல்கள் எதுவும் முன்னதாகப் பிரபலமாகவில்லை என்பதாலும், படத்திற்குச் சென்னையில் அதிக வரவேற்பில்லை. ஆனால் எனக்குள்ளே ஏதோ ஓர் உந்துதல்... படத்தில் என்னவோ இருக்கிறது என்று தோன்றியது. படத்தைப் பார்த்தேன். அசந்து போய் விட்டேன்... இப்படியெல்லாம் கூடப் படம் உருவாக்க முடியுமா என்று எண்ணி வியந்து நின்றேன். ஷியாம் பெனகல் என்ற அந்த இயக்குனரின் பெயர் பசுமரத்தாணி போல என்னுள்ளே பதிந்து போனது.
1974ல் வெளியான “அங்குர்” படத்தைத் தொடர்ந்து வந்த “சரண்தாஸ் சோர்” கறுப்பு வெள்ளைப் படமாக இருந்ததாலோ, குழந்தைகளுக்கான படம் என்பதாலோ, சென்னையில் வர்த்தக ரீதியாக வெளியாகவில்லை. (பின்னர் வேறொரு சந்தர்ப்பத்தில் தான் அப்படத்தைப் பார்க்க முடிந்தது.)
“நிஷாந்த்”, “மந்தன்”, “பூமிகா” ஆகிய படங்கள் சென்னையில் வெளியிடப்பட்டதால் அவற்றைப் பார்த்து ரசிக்க முடிந்தது. ஷியாம் பெனகல் என்ற இயக்குனருக்கும் அவரது படங்களுக்கும் நான் ரசிகனானேன்.
|
அமெரிக்கப் படங்கள் போலவோ, பெரும்பாலான இந்திப் படங்கள் போலவோ ஆடம்பர ஆர்ப்பாட்டமோ, பொழுதுபோக்கு மசாலாவோ இல்லாமல், அதே வேளையில், “கலைப் படங்கள்” என்ற முத்திரையுடன் வந்த படங்களாகவும் இல்லாமல், ஓர் இடைப்பட்ட நிலையை எடுத்துக் கொண்டு சிந்திக்க வைக்கும் கதையம்சமும், நேர்த்தியான உருவாக்கமும் கொண்ட ‘மாற்று சினிமா’வாக அமைந்தன ஷியாம் பெனகலின் படங்கள்.
தொடர்ந்து வெளிவந்த அவரது படங்களில், “அனுக்ரஹம்” (கோண்டுரா), “ஆரோஹன்”, “த்ரிகால்”, “சுஸ்மன்”, “அந்தர்நட்” , “சூரஜ்காசத்வான் கோடா”, “மம்மொ” , “தி மேக்கிங் ஆஃப் த மகாத்மா”, “சமர்”, “சர்தாரி பேகம்”, “ஹரிபாரி” , “சுபைதா”, “நேதாஜி”ஆகிய படங்கள் சென்னையில் வர்த்தக ரீதியில் வெளியானதாகத் தெரியவில்லை. ஆகவே அப்படங்களையெல்லாம், தொலைக்காட்சியிலோ திரைப்படச் சங்கங்களின் திரையிடல்களிலோ உலகப் பட விழாக்களிலோ தான் தேடித் தேடி கண்டு களிக்க வேண்டியிருந்தது.!
“ஜீனூன்”, “கல்யுக்”, “மண்டி” ஆகிய மூன்று படங்களும் சென்னையில் வெளியிடப்பட்டதால் இங்கேயே பார்க்க முடிந்தது. அவரது ஐந்து ஆவணப்படங்களில், “நேரு”, “சத்யஜித் ராய்” ஆகிய இரண்டை மட்டுமே உலகப் பட விழாக்களில் காண முடிந்தது.
நேருவின் “டிஸ்கவரி ஆஃப் இந்தியா”வை அடிப்படையாகக் கொண்டு ஷியாம் பெனகல் உருவாக்கிய “பாரத் ஏக் கோஜ்” என்ற தொலைக்காட்சித் தொடர், ‘தூர்தர்ஷனில்’ ஒளிபரப்பப்பட்டதால் அதை முழுமையாகக் கண்டு ரசிக்க முடிந்தது. 1989ல் தொடங்கிய அதன் படப்பிடிப்பு 1994ல் தான் முடிவடைந்தது. 52 வாரங்கள் தொடர்ந்து ஒளிபரப்பான ‘பாரத் ஏக் கோஜ்’ தான் நமது நாட்டின் ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாற்றை மிகத் தெளிவாகவும் நேர்மையாகவும் படம் பிடித்துக் காட்டிய ஒரே தொலைக்காட்சித் தொடர் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.
2005ல் வெளியான அவரது ‘சுபாஷ் சந்திரபோஸ் (நேதாஜி)” என்ற படத்தை இன்னும் பார்க்காத நிலையிலேயே அவரது வரலாற்றையும், அவரது படங்களைக் குறித்த ஒரு ‘பருந்துப் பார்வை’யையும் எழுத்தில் வடிக்கத் துணிந்து விட்டேன். (ஜீன், 2008).
|
ஏறத்தாழ ஆயிரம் விளம்பரப் படங்கள், 21 முழு நீளக் கதைப் படங்கள், ஐந்து ஆவணப்படங்கள் மற்றும் ஒரு நீண்ட தொலைக்காட்சித் தொடர் ஆகியவற்றை உருவாக்கி இந்தியத் திரையுலகில் தமக்கென ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்து வைத்திருப்பவர் ஷியாம் பெனகல்.
இந்தியப் ‘புதிய அலை’த் திரைப்படங்களின் தந்தை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பவர் ஷியாம் பெனகல், உண்மையில், அரசியல் உணர்வுடன், யதார்த்த நிலயைப் பிரதிபலிக்கும் திரைப்படங்களின் வரலாறும், ஷியாம் பெனகலின் முப்பதாண்டுப் படைப்புகளின் வரலாறும் கிட்டத்தட்ட இணை கோடுகளாகவே அமைந்துள்ளன. இந்தத் திரைப்பட இயக்கத்தின் மையப் புள்ளியாக விளங்கும் வகையில், ஷியாம் பெனகல் கலையம்சத்தையும் மாற்று சினிமாவையும் பிணைத்திருக்கிறார் என்றால் அது மிகையில்லை! அவரது படங்கள், சமூகத்தின் மீது அவருக்குள்ள அக்கறையையும், ஆழமான மனிதாபிமானத்தையும் கொண்டு உருவாக்கப்பட்டது.
பெனகலின் திரைப்படங்கள், இந்தியாவின் ‘மாற்று சினிமா’வின் வரலாற்றையும், விளிம்பு நிலையில் வாழும் மக்களைக் குறித்த திரைப்படங்களுக்கான எடுத்துக்காட்டையும் பிரதிபலிக்கின்றன. இத்தகைய திரைப்படங்களின் வரலாறு, நமது நாட்டின் வளர்ச்சியைக் குறித்த பாசாங்குகளுக்குச் சரியான அறைகூவலாகத் திகழுகிறது.
பெனகலின் முழு நீளக் கதைப் படங்கள், நமது நாட்டு வரலாறு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் திரைப்படங்களுக்கு இருக்கக்கூடிய முக்கியத்துவத்தை, விவாதங்களுக்கு வாய்ப்பே இல்லாத வகையில், வலியுறுத்துகின்றன! தொடர்ந்து மாறுதல்களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் நமது நாட்டு வரலாற்றை ‘செலுலாய்டில்’ பதிவு செய்துள்ளவை ஷியாமின் படங்கள் என்று கருதலாம்.
நாடு விடுதலை பெற்று அறுபதாண்டுகள் நிறைந்திருக்கும் கால கட்டத்தில், இன்றைய இளைஞர் சமுதாயம், “நுகர்சோர் கலாச்சாரத்தில்” திளைத்துக் கொண்டிருக்கிறது. நமது நாட்டில் இன்னும் பிடிவாதமாக வலியுறுத்தப்படும் ஜாதி வேறுபாடு, பாலின வேறுபாடு ஆகியன குறித்த தெளிவான கண்ணோட்டம் இன்றைய இளைஞர்களுக்கு இருக்க வாய்ப்பில்லை. உலகச் சந்தைக்காக உருவாக்கப்படும் இந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் மிகைப்படுத்திக் காட்டப்படும் ‘வளர்ச்சி’ அவர்களின் பார்வையை மறைப்பதால், அடிப்படையான, தவிர்க்க முடியாத அந்த யதார்த்த நிலையை அவர்கள் அலட்சியமாகப் புறம் தள்ளி விடுகிறார்கள்.
1974ல் வெளிவந்த “அங்குர்” என்ற தமது முதல் படத்திலிருந்தே, ஷியாம் பெனகல் அந்த யதார்த்த நிலைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி வந்திருக்கிறார். “அங்குர்” படத்திற்குப் பின்புலமாக இருந்தது. தெலுங்கானாப் பகுதியில் நிலச்சுவான்தார்களுக்கெதிராக, விவசாயிகள் மேற்கொண்ட போராட்டம் என்றால், 2005ல் வெளிவந்த அவரது ‘சுபாஷ் சந்திர போஸ்’படம், நாட்டு விடுதலைப் போராட்டத்தையும், காங்கிரஸ் கட்சியில் நிலவிய தலைமைக்கான போட்டி அரசியலையும் பின்புலமாகக் கொண்டிருக்கிறது.
|
விளிம்பு நிலையில் வாழும் மக்களின் குரலை எதிரொலிப்பதைத் தொடர்ந்து பின்பற்றி வந்துள்ள பெனகல், தேசிய அடையாளம் பாலின, ஜாதி மற்றும் வர்க்க வேறுபாடுகள்’ ஆகியன குறித்த தமது அக்கறையையும் கவலையையும் வெளிப்படுத்திக் கொண்டே வந்திருக்கிறார். தெலுங்கானா உழவர் போராட்டத்தில் தொடங்கி, பால் கறந்து விற்கும் உழைப்பாளிகளுக்கு உதவக் கூடிய கூட்டுறவு இயக்கம், எண்ணிலா இடையூறுகளிடையே வாழும் நெசவாளிகளின் சொல்லப்படாத கதை, பல்வேறு ஆண்களின் ஆதிக்கத்துக்கு ஆட்பட நேர்ந்த ஒரு நடிகையின் உண்மை வரலாறு வரை, அவரது படங்கள் அழுத்தப்பட்ட மக்களின் வாழ்வையே விவரிக்கின்றன.
அவரது படங்கள் பாலின, ஜாதி மற்றும் வர்க்க வேறுபாடுகளினால் ஏற்பட்டுள்ள இன்னல்களையே பெரும்பாலும் எடுத்துக் கூறுகின்றன என்றாலும் அக்கதைக் களங்களையும் தாண்டி அவரது ஆழமான மனிதாபிமானக் கண்ணோட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.
வலுவான தனிமனிதக் கதாபாத்திரங்களை அடையாளம் காணக்கூடிய சமுதாயங்களில் பொருத்தி, யதார்த்தம் கெடாமல் காட்டியிருக்கிறார் பெனகல். சுற்றுப்புறங்களுடன் அந்தப் பாத்திரங்களுக்கு உள்ள நெருக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டியிருப்பதுதான் அவரது திரைக் கதைகளில் உள்ள நம்பகத் தன்மையை அதிகப்படுத்துகிறது. மாற்றங்களின் விரைவுப் பாய்ச்சலில் சிக்கிக் கொண்டிருக்கும் பாத்திரங்களை இனம் காட்டுவதில், சமூகப் பொருளாதார சக்திகள் எவ்வாறு அடித்தளமாக இருக்கின்றன என்பதை அவர் அறிவுக் கூர்மையுடன் அலசிக் காண்பித்திருக்கிறார். அவரது கதை மாந்தர்கள் ஒருவித தடுமாற்றத்தில் இருப்பதை நம்மால் உணர முடியும். அந்தப் பாத்திரங்களை வலுவான நடிப்பால் உயிரூட்டக் கூடிய தேர்ந்த நடிக நடிகையர்களைப் பயன்படுத்தியதன் மூலம், அப்பாத்திரங்களை யதார்த்தமானவர்களாக அவரால் சித்தரிக்க முடிந்தது.
ஷபானா ஆஸ்மி, ஸ்மிதா பாட்டீல், நசிருத்தீன் ஷா, ஓம்பூரி மற்றும் ஏராளமான திறமைசாலிகளை அடையாளம் கண்டு, அறிமுகப்படுத்தினார். ‘மாற்று சினிமா’ என்றாலே அவர்கள்தான் நடிப்பார்கள் என்றளவிற்கு அவர்கள் நம் நாட்டிலும் வெளி நாடுகளிலும் பிரபலமானார்கள். ஒரு நாடகக் குழுவினர் போல, அவர்கள் ஷியாம் பெனகலின் படங்கள் மட்டுமல்லாது அவரைப் பின்பற்றி அவரது பாணியில் படமியக்கிய பிற இயக்குனர்களின் பல படங்களிலும் மாறி மாறி நடித்தனர். அவர்களது நடிப்புத் திறமைகள் தனித்தன்மை வாய்ந்ததாகவும், நடிக்கும் படத்திற்கு வலுவூட்டுவதாகவும் அமைந்தன என்றால் மிகையில்லை. ஒரு ‘சிம்ஃபொனி’ இசைக் குழுவின் ‘நடத்துனர்’ போல, அவர் தமது நடிக நடிகையரை, கண்ணுக்குப் புலப்படாத ஒரு குச்சியைக் கையில் வைத்துக் கொண்டு நடிக்கப் பணித்தார் என்று ஒப்புநோக்கிக் கூறப்படுவதுண்டு. அதே வேளையில் அவர் தமது படப்பிடிப்புக் குழுவினரிடமும் சரி, நடிக, நடிகையரிடமும் சரி ஒரு ஜனநாயகச் சுதந்திரமான நடைமுறையைத்தான் பின்பற்றி வந்திருக்கிறார்.
அவரது படப்பிடிப்பு அட்டவணை அனேகமாக நான்கிலிருந்து ஆறு வாரங்கள் தொடர்ச்சியானதாக அமைந்திருக்கும்படி முடிவு செய்யப்படும். அதற்கு வசதியாக, ஷியாம் தமது படப்பிடிப்புக் குழுவையும், நடிக, நடிகையர் அத்தனை பேரையும் மொத்தமாக படப்பிடிப்பு நடைபெற இருக்கும் ஊருக்கு அழைத்துச் சென்று விடுவார். அந்த ஊர் மக்களுடன் அவரும் மற்றவர்களும் நெருங்கிப் பழகி, அவர்களது கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், வட்டார மொழி ஆகியவற்றை அவர் உள்பட அனைவரும் கூர்ந்து கவனிப்பார்கள். அந்த அனுபவங்களையும், பேச்சு வழக்குகளையும் தேவைப்பட்டால் தமது திரைக்கதையில் ஆங்காங்கே இணைத்துக் கொள்வார். இதனால் யதார்த்தம் இன்னும் அதிகமாகும்.
|
(அந்த வகையில் தான் ஆந்திர மாநிலத்தில் உள்ள ‘பொச்சம் பள்ளி’ என்ற ஊரில் ”சுஸ்மன்” படப்பிடிப்பு நடந்த போது அந்த ஊரில் பெரும்பான்மையாக இருக்கும் நெசவாளர்களுடன் நடிகர் ஓம்பூரி நெருங்கிப் பழகி, துணி நெய்வது எப்படியென்று கற்றுக்கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து, குழுவினர் அந்த ஊரை விட்டுக் கிளம்புவதற்குள் ஓம்பூரி தாமே நெய்த சால்வைகளை இயக்குனருக்கும், அவரது மனைவி நீராவுக்கும் ஷபானா ஆஸ்மிக்கும் ஒளிப்பதிவாளரான கோவிந்த் நிஹ்லானிக்க்கும் பரிசளித்திருக்கிறார். அந்தச் சால்வைகளின் மொத்த நீளம் நாற்பது மீட்டராம்!)
நவநாகரீகத்தின் மீதும், சமுதாய மாற்றங்கள் குறித்தும் விமர்சிக்கும் அதே நேரத்தில், பெனகலின் படங்கள், அவரது தொடக்க காலத்திலிருந்தே, தனிமனிதக் கண்ணோட்டத்தையும் கொண்டதாகவே இருந்தன.
சமூக மாற்றங்களின் மூலக் கூறுகளையும், எதிர்மறைப் போக்குகளையும், மனித உறவுகள் மீது அவை ஏற்படுத்தும் தாக்கங்களையும் உள்வாங்கிக் கொண்டுதான் ஷியாம் அவற்றைத் தமது படங்களில் வெளிப்படுத்துவார். இந்தக் காரணத்தினால்தான் 1963ல் முதன் முதல் அவர் பம்பாய் போய் இறங்கியவுடனேயே தமது உறவினரான நடிகர் இயக்குனர் ‘குருதத்’துக்கு உதவியாளராகப் பணியாற்றும் வாய்ப்பை உதறித் தள்ளினார்.
குருதத்தின் படங்களைப் போல, தமது படங்கள் அமையக் கூடாது என்று கருதினார். அவரவரது உள்ளுணர்வு, சமூகப் பார்வை ஆகியவற்றிற்கேற்றபடிதான் படங்களை உருவாக்க வேண்டுமென்பதில் ஷியாம் உறுதியாக இருந்தார். அன்றையக் கால கட்டத்தில் உருவாக்கப்பட்ட படங்களின் பாணி தமக்குச் சரிவராது என்பதில் ஷியாம் தெளிவாக இருந்தார். முன்னதாகவே திட்டமிடப்பட்டு உருவாக்கப்படும் ஒரே மாதிரி மரபு கொண்ட படங்களில் அவருக்கு ஈடுபாடு இருந்ததில்லை.
(தொடரும்)
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |