இதழ்: 29    மாசி (February 01 - 15), 2015
   
 
  உள்ளடக்கம்
 
கோஸ்டா காவ்ரஸ் : பொது அனுபவங்களிலிருந்து ஆழ்ந்த அரசியல் பிரக்ஞை நோக்கி - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
கலை ரூபத்திற்காக அரூபமாய் - ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
இயக்குனர் & நடிகர் நாசருடன் ஒரு நேர்காணல் - தினேஷ்
--------------------------------
திரைமொழி - 15 - Steven D. Katz தமிழில்: ராஜேஷ்
--------------------------------
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
நாடு கடந்த கலை: குறும்படங்களின் பெரும்தடம் - சொர்ணவேல்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை ‘வெண் சங்கு’ - தம்பிஐயா தேவதாஸ்
--------------------------------
வெள்ளித்திரை வித்தகர்கள் - ஷியாம் பெனகல் - அறந்தை மணியன்
--------------------------------
கலையை நேசித்த தலைசிறந்த இயக்குநர்கள் - பரசுராம்
--------------------------------
 
   
   

 

 

திரைமொழி - 15

அத்தியாயம் 5 – Production Design


film directing
shot by shot
visualizing from concept to screen

Steven D. Katz         தமிழில்: ராஜேஷ்

சென்ற அத்தியாயத்தில் ஒரு குறிப்பிட்ட திரைக்கதையின் பகுதி (ஜெனரல் க்ராண்ட் சரணடைதல்) எப்படி ஷாட் பிரிக்கப்பட்டு எழுதிக்கொள்ளப்படுகிறது என்று பார்த்தோம். இந்தக் காட்சிக்கு எப்படி ஸ்டோரிபோர்ட் தயார் செய்வது?

Preparing a Storyboard


காட்சிகளுக்கு ஸ்டோரிபோர்ட் எழுதுவதில் ஒரு வகை என்னவென்றால், ஸ்டோரிபோர்ட் கட்டங்களில் சென்ற அத்தியாயத்தில் நாம் பார்த்த ஷாட் பட்டியலை எழுதிக்கொள்வது. இவற்றில் படங்கள் இருக்காது. படங்களுக்குப் பதிலாக இந்த ஷாட் பட்டியல் இருக்கும். இது, இயக்குநர் ஷாட்களை யோசிப்பதற்கு உதவுகிறது. ஷாட் பட்டியலை இப்படி ஸ்டோரிபோர்ட் கட்டங்களின் ஃப்ரேம்களுக்குள்ளாக எழுதிக்கொள்வது பொதுவாகத் திரையில் நாம் காணும் காட்சிகளைப் போலவே கிட்டத்தட்ட அமைகிறது. கீழுள்ள படத்தில் அவைகளைக் காணலாம்,

அடுத்ததாக, ஸ்கெட்ச்களையோ அல்லது புகைப்படங்களையோ இயக்குநர் உபயோகப்படுத்துகிறார். இயக்குநரிடம் அவரது நடிகர்களின் புகைப்படங்கள் க்ளோஸப், லாங் ஷாட், மீடியம் ஷாட் போன்ற பாணிகளில் அவசியம் இருக்கும். இந்தப் புகைப்படங்களை ஸ்டோரிபோர்ட்களைப் போல் அமைத்து அவர் இந்தக் காட்சியை உருவாக்க இயலும். இப்படிப்பட்ட ஸ்டோரிபோர்ட் பேனல்களை அவர் தனித்தனியான தாள்களில் ஒட்டிவைக்கிறார். அப்போதுதான் பின்னால் காட்சிகள் மாறும்போது இவைகளை எந்த வரிசையில் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் என்பதால்.

கீழுள்ள படத்தில், இந்தக் கட்டத்தில் ஒரு இயக்குநர் எப்படிப்பட்ட ஸ்டோரிபோர்ட்களை உருவாக்கலாம் என்பது விளக்கப்பட்டுள்ளது.

ஸ்டோரிபோர்ட்களை உருவாக்குகையில் ஒரு இயக்குநர் இசையைக் கேட்கலாம். இது பல்வேறுவிதமான எண்ணங்களை இயக்குநரின் மனதில் உருவாக்கலாம். இதனால் காட்சி இன்னும் சிறப்பாக வர வாய்ப்புண்டு. அதேபோல் உணர்ச்சிபூர்வமான ஒரு காட்சியின் ஸ்டோரிபோர்டில் வேலைசெய்யும்போது ஒத்திகை செய்யப்பட்ட வசனங்களை ஏற்கெனவே பதிவுசெய்துவைத்துக்கொண்டு அதைக் கேட்கவும் செய்யலாம்.

Models and Miniatures

பல திரைப்படங்களில் மாடல்களும் மினியேச்சர்கள் என்று அழைக்கப்படும் செட் ப்ராப்பர்ட்டிகளும் இன்றியமையாதவை. இப்போது ஸிஜி என்று அழைக்கப்படும் க்ராஃபிக்ஸ் வந்துவிட்டாலும், மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் அவசியம் இவை தேவை. உதாரணமாக நமது காட்சியில் ஜெனரல் லீ சரணடைய வருகையில் அங்கே இருக்கக்கூடிய நூற்றுக்கணக்கான படை வீரர்கள், அவர்களின் ஆயுதங்கள், குதிரைகள், பீரங்கிகள், வண்டிகள் போன்றவையெல்லாம் இந்தக் கணக்கில்தான் சேரும். இத்தகைய பிரம்மாண்டமான காட்சியை எடுக்கையில் நேரும் பிரச்னைகள் கணக்கிலடங்காதவை. போலவே கேமராவின் முன்னால் என்ன நடக்கிறது என்பதைப்போலவே கேமராவின் பின்னால் என்ன நடக்கிறது என்பதையும் யோசித்துவைத்துக்கொள்ளுதல் மிக முக்கியம். உதவி இயக்குநர்களும் ப்ரொடக்ஷன் மேனேஜர்களும், படப்பிடிப்புக்குத் தேவையான ஜெனரேட்டர்கள், க்ரேன், டாலி ட்ராக் மற்றும் பிற உபகரணங்களைத் தயார் செய்துவைத்துக்கொள்ளுதல் அவசியம் முக்கியம்.

காட்சிக்குத் தேவையான மினியேச்சர்களை வைத்துக்கொண்டு இயக்குநர் பல்வேறு கோணங்களில் அவற்றைப் புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்கிறார். சிலவற்றில் காட்சிக்குத் தேவையான அதே கோணங்கள் இருக்கும். இன்னும் சிலவற்றில் வித்தியாசமான கோணங்களும் இருக்கும். லொகேஷனைப் பற்றிய தகவல்கள் அவற்றில் இடம் பெறலாம். போலவே டாப் ஆங்கிளில் அந்த மினியேச்சர்களை Bird’s eye கோணத்திலும் இயக்குநர் படமெடுத்து வைத்துக்கொள்ளலாம். அதுதான் பின்னால் ப்ரொடக்ஷன் குழுவினருடன் விவாதிக்கையில் முக்கியப் பங்கு வகிக்கும்.

இப்படியாக இயக்குநர் எடுக்க விரும்பிய Wide Screen ஷாட்டுக்கான மாதிரிப் புகைப்படங்கள் அவருக்குக் கிடைத்ததும், அவற்றின்மேல் மார்க்கர்கள் அல்லது ஸ்கெட்ச் பேனாக்கள் உபயோகித்து அவருக்குத் தேவையான கேமரா மூவ்மெண்ட்களை அதில் அவர் வரையலாம். அல்லது Pan shot எப்படி இருக்கவேண்டும் என்றும் கேமராவின் நகர்தலை அவர் அங்கே வரைந்துவைத்துக்கொள்ளலாம். இந்தத் தொடரில் சில மாதங்கள் முன்னர் ஸ்டோரிபோர்ட்களை விரிவாக ஒரு அத்தியாயத்தில் பார்த்திருக்கிறோம். அந்த அத்தியாயத்தில் இடம்பெறும் அனைத்துத் தகவல்களையுமே இதைப் படிப்பவர்கள் நினைவுகூரலாம். உபயோகப்படுத்தியும் கொள்ளலாம்.
இவை வெளிப்புறப் படப்பிடிப்புகளுக்கு. ஒருவேளை உட்புறப் படப்பிடிப்பு என்றால் என்ன செய்யலாம்? உண்மையான லொகேஷனின் சுவர்கள், தரை போன்றவையெல்லாம் புகைப்படம் எடுக்கப்பட்டு, பெரிதாக்கப்பட்டு ஒட்டப்படலாம். மிகச்சிறிய பொம்மைகள், மாடல்கள் போன்றவையெல்லாம் அங்கே நிர்மாணிக்கப்பட்டு, க்ளோஸப்பாகவோ மீடியம் ஷாட்டாகவோ படமாக்கிக்கொள்ளலாம் (பீட்டர் ஜாக்ஸனின் லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களில் இப்படிப்பட்ட பல மினியேச்சர் ஷாட்கள் உண்டு). பெரிய காட்சியாகவோ சிறிய காட்சியாகவோ ஒரு காட்சி இருக்கக்கூடும். அவற்றில் இப்படிப்பட்ட மினியேச்சர்கள், செட் ப்ராப்பர்ட்டிகள், மாடல்கள் போன்றவை என்ன தாக்கத்தை உருவாக்கக்கூடும் என்பது முற்றிலுமாக இயக்குநரின் முடிவைப் பொறுத்ததே. அவரால் அந்தக் காட்சியை இவற்றைவைத்துக்கொண்டு எப்படி எடுக்க முடிந்தது? இவை இல்லாமலேயே அவரால் எடுக்க முடியுமா? இப்படிப் பல கேள்விகளைப் பொறுத்தே அமைகின்றன.

Phase Four: Cinematography

வேலையில் மிகவும் பிஸியாக உள்ள ஒரு ஒளிப்பதிவாளர், படப்பிடிப்பு ஆரம்பிக்கச் சில நாட்களே இருக்கையில் ஒரு படத்தில் இணைவது சாதாரணம்தான். இதனால் படத்தின் தயாரிப்பின் பல விஷயங்களை அவசரமாகவே அந்த ஒளிப்பதிவாளர் தெரிந்துகொள்ள நேரும். ப்ரீ-ப்ரொடக்ஷன் எத்தனை மாதங்கள் நடந்தது; அதன் பல்வேறு அம்சங்கள் என்னென்ன என்பதெல்லாம் அவருக்குக் கடைசி நேரத்தில் விளங்கும் வாய்ப்புகளே அதிகம். ஒரு படத்தில் சேர்ந்ததுமே உடனடியாக இயக்குநருடன் சேர்ந்து ஒளிப்பதிவாளர் படப்பிடிப்பு நடக்க்கப்போகும் லொகேஷன்களுக்குச் செல்கிறார். ஸ்டோரிபோர்ட்கள், செட்கள், ப்ராப்பர்டிகள், காஸ்ட்யூம்கள், மேக்கப் – முடிந்தவரை இவற்றின் மாதிரி ஷூட்டிங் போன்றவற்றில் அவரது உண்மையான கருத்துகளை இயக்குநரிடம் பகிர்ந்துகொள்கிறார்.

ஒரு ஒளிப்பதிவாளரின் முக்கியமான பணிகள் என்னென்ன? படத்துக்குப் படம் அது மாறக்கூடும். ஆனாலும் பொதுவாக சொல்லப்போனால் லைட்டிங் மற்றும் படம் எடுக்கையில் ஏற்கெனவே இயக்குநராலும் ஒளிப்பதிவாளராலும் ப்ரொடக்ஷன் மேனேஜராலும் முடிவுசெய்யப்பட்ட ஃப்ரேம்களையும் கேமரா மூவ்மெண்ட்களையும் கச்சிதமாக நிறைவேற்றல் ஆகியவையே அவரது பிரதான வேலைகள். ஒரு ஷாட்டின் படமாக்கம் நூற்றுக்கு நூறு ஒளிப்பதிவாளரின் பங்கு அல்ல. மாறாக, அது இயக்குநரின் முடிவே. இது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். இயக்குநரின் முடிவுதான் ஒரு ஷாட்டை எப்படிப் படமாக்குவது என்பதை முடிவுசெய்கிறது என்பதே உண்மை.

ஒளிப்பதிவாளருக்கும் இயக்குநருக்கும் இடையே இருக்கும் உறவு மிக முக்கியம். பல இயக்குநர்கள், தாங்கள் தயார் செய்த புகைப்படங்கள், ஸ்கெட்ச்கள், பிற படங்கள், அல்லது இவற்றைப்போன்ற மாதிரிகள் ஆகியவற்றை ஒளிப்பதிவாளரிடம் கொடுத்துத் தயார் செய்வது சகஜம்தான். தங்களின் மனதில் உள்ள படம் ஒளிப்பதிவாளரின் மனதிலும் இடம் பெயரவேண்டும் என்றால் இப்படித்தான் நடக்கும். பொதுவாகவே, காட்சிகளைப் பற்றிய தெளிவான, விளக்கமான விவரிப்புகளே ஒளிப்பதிவாளரின் மனதில் அக்காட்சியை உள்ளது உள்ளபடி உருவாக்கும். இதனால் விவாதங்கள் உருவாகும். அதனால் இறுதியில் இயக்குநர் நினைத்தபடி காட்சி படமாக்கப்படும்.

படப்பிடிப்புக்கு முன்னர் இயக்குநரின் மனதில் அவரது கதையின் செட்கள், லொகேஷன்கள், முக்கியமான ப்ராப்பர்ட்டிகள், காஸ்ட்யூம் மற்றும் மேக்கப் முதலியவை அடைங்கிய சூழல் பற்றிய தெளிவான புரிதல் இருக்கவேண்டும். லைட்டிங் மற்றும் ஒளிப்பதிவு பற்றிய முடிவுகள் எல்லாமே மாதிரிப் படப்பிடிப்பு ஒன்றை நடத்துவதன்மூலம் உறுதிசெய்யப்படலாம்.

வரும் அத்தியாயத்தில் இந்த அத்தியாயத்தின் இறுதி மற்றும் முக்கியமான பிரிவான ஒத்திகைகள் பற்றிப் பார்த்து முடிக்கலாம்.

தொடரலாம்.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </