இதழ்: 29    மாசி (February 01 - 15), 2015
   
 
  உள்ளடக்கம்
 
கோஸ்டா காவ்ரஸ் : பொது அனுபவங்களிலிருந்து ஆழ்ந்த அரசியல் பிரக்ஞை நோக்கி - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
கலை ரூபத்திற்காக அரூபமாய் - ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
இயக்குனர் & நடிகர் நாசருடன் ஒரு நேர்காணல் - தினேஷ்
--------------------------------
திரைமொழி - 15 - Steven D. Katz தமிழில்: ராஜேஷ்
--------------------------------
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
நாடு கடந்த கலை: குறும்படங்களின் பெரும்தடம் - சொர்ணவேல்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை ‘வெண் சங்கு’ - தம்பிஐயா தேவதாஸ்
--------------------------------
வெள்ளித்திரை வித்தகர்கள் - ஷியாம் பெனகல் - அறந்தை மணியன்
--------------------------------
கலையை நேசித்த தலைசிறந்த இயக்குநர்கள் - பரசுராம்
--------------------------------
 
   
   

 

 

கலையை நேசித்த தலைசிறந்த இயக்குநர்கள்

- பரசுராம்

ஐந்தாவது தலைமுறை சீன இயக்குநர்களில் மிகச்சிறந்தவர் என்றும், அவர்களில் முதன்மையானவர் என்றும் இவர் வருணிக்கப்படுகிறார். உலக அளவில் கவனமும், மக்கள் கூட்டமும் ஒரே சமயத்தில் இவரது படங்களுக்கு கிடைக்கிறது. அடிப்படையில் ஒளிப்பதிவாளர் வாய்ப்புக்காக நம்முடைய தமிழ்சினிமா உதவி இயக்குனர்களைப் போலவே வருடக்கணக்கில் காத்திருந்தவர். வறுமையிலும், அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் வளர்ந்தவர். சினிமாவைப் பற்றிப் பேசும்போது வெற்றி, தோல்வி என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்கிறார்.

The Road Home படத்தைப் பற்றி இயக்குனர் ஷாங் இமு; “சீனப் படங்களின் தற்சமயப் போக்குக்கு எதிரான செயல்பாடு”பாவோ ஷி எழுதிய “Rememberence” என்கிற நாவலை இயக்குனர் ஷாங் இமு The Road Home என்று திரைப்படமாக மாற்றியிருக்கிறார்.

மிக எளிமையான கதை. நகரத்திற்கு வந்து நிரந்தரமாகக் குடியேறிவிட்ட ஒரு இளைஞன் கிராமத்தில் பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வாழ்ந்து மறைந்த தன் தந்தையின் மரணச் செய்தி கேட்டு இறுதிச் சடங்கிற்குச் செல்கிறான். அங்கே அவனுடைய வயதான அம்மா, வேறொரு ஊரில் வைத்து இறந்துபோன தந்தையின் உடலை ட்ரக் அல்லது கார் போன்ற வாகனத்தில் எடுத்துவரக் கூடாது என்று தடுக்கிறாள். சீனாவின் பழைய நம்பிக்கைகளின் படி இறந்தவர் உடலை, மனிதர்கள் அவர் நடந்த சாலைகளின் வழியே சுமந்தபடி, ‘பயப்படாதீர்கள்... இது நீங்கள் நடந்த சாலைதான்.. உங்கள் வீடு போகும் சாலைதான் என்று சொல்லிக்கொண்டே வருவார்கள். அவனது தந்தையின் உடலிலும் அப்படிக்கொண்டுவரப்பட வேண்டும் என்று அவனுடைய தாய் விருப்பம் தெரிவிக்கிறார். கிராமத்தில் இளைஞர்கள் நிறைய பேர் இல்லை. நிறைய பணம் சம்பாதிப்பதற்காக நகரத்திற்குச் சென்றுவிட்டார்கள். முதலில் தயங்குகிற மகன், அம்மாவின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவு செய்து , கிராமத்து மேயரின் உதவியுடன், வாடகைக்கு ஆட்களை அமர்த்தி, அப்பாவின் உடலைச் சுமந்து வருகிறான். கடுமையான பனிப்பொழிவில் சுமந்து வருகிறவர்கள் அதற்கான பணத்தை வாங்க மறுத்து அவனது தந்தையின் பெருமையை உயர்த்துகிறார்கள். அம்மா சடலத்தின் மீது போர்த்துவதற்காக தளர்ந்த நிலையிலும் தானே துணி நெய்கிறாள். அம்மாவின் விருப்பப்படி அப்பாவிற்கு இறுதிச் சடங்குகள் செய்யப்படுகின்றன. அம்மாவின் ஆசைக்காக அப்பாவின் பள்ளியில் மகன் ஒரு நாள் வகுப்பெடுக்கிறான். தனது கணவனின் ஆசிரியக் குரலில் ஈர்க்கப்பட்டு அங்கே தொடர்ந்து வருகிறவள் அன்று மகனின் குரல் கேட்டு வந்து நிற்கிறாள். கண்கள் பனிக்க மகனும், தாயும் பார்த்துக்கொள்கிறார்கள். படம் முடிவடைகிறது.

படத்தின் இந்தப் பகுதிகள் கறுப்பு வெள்ளையில் காட்டப்படுகின்றன. கிராமத்துக்கு வருகிற மகன் தன் அப்பாவின் அம்மாவின் நினைவுகளில் அமிழ்ந்து எழுகிறான். அந்த நினைவுகள் மனதை மயக்கும் மலரில் காட்டப்படுகின்றன. அந்த வண்ண மயமான காதல் தான் படத்தின் உயிர்.

படம் ஒன்றரை மணி நேரம். நகரத்தின் , கிராமத்தின் , பழையவற்றின் மற்றும் புதியவற்றின் உறவுகளை அடிப்படையாக வைத்து மிக அமைதியாக, மிக மெதுவாகத் தொடங்குகிறது படம்.

நகரத்துக்குப் போய்விட்ட மகனாக லு ஷெங் அப்பாவின் இறுதிச் சடங்குக்கு வரும்போது தனது பெற்றோரின் எளிமையான, உண்மையான, இயல்பான, ஆன்மாவைத் தொடுகிற காதலைப் பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொள்கிறான்.

பதினெட்டு வயதுக் கதாநாயகியாக வருகிற ஷாங் ஸியி தனது அற்புதமான நடிப்பால் உலகத்தையே கவனிக்க வைத்திருக்கிறார். அருமையான ஒரு கிராமத்துக் காதலை, அதன் மிகத் தூய்மையான வடிவத்தை, அப்பழுக்கற்ற மாசுகள் இல்லாத ஒரு அன்பை துல்லியமாக தன் நெஞ்சில் ஏந்தி, முகத்தில் வெளிப்படுத்தி பரவசப்படுத்துகிறார். ஊருக்குள் முதன்முதலாக வருகிற பள்ளி ஆசிரியரின் மேல் அந்த பெண்ணுக்கு காதல் வருகிறது. அவருக்கும் அந்த முதல் பார்வைக் காதல் தான். நகரக் காதலின் எந்தச் சாயலும் அவர்கள் செய்கையில் இல்லை. நாடகத்தனங்கள் இல்லை. காதலுக்கான உணவு தயாரிப்புக் காட்சி மிகச் சிரத்தையாக காட்டப்படுகிறது. மஷ்ரூம் டம்ப்ளிங் ஒரு சிம்பலாகப் பயன்படுத்தப்படுகிறது. அவனுடைய பள்ளியை அழகுபடுத்துகிறாள். அதன் கூரையில் அதிர்ஷ்டத்திற்காக ஒரு சிவப்பு நிற பேனரைக் கட்டிவைக்கிறாள். அவன் காதலைத் தன் நெஞ்சில் ஒற்றை பூப்போல ஏந்தி மகிழ்கிறாள். திடீரென்று அவன் நகரத்திற்குப் போக வேண்டிய கட்டாயம். குறிப்பிட்ட தேதியில் திரும்பி வருவதாகச் சொல்லிவிட்டுப் போகிறவன் வரவில்லை. கடும் பனிப்புயலில் அவனைக் காண நகரத்தை நோக்கி நடக்கிறாள். மயங்கி அந்த சாலையில் விழுகிறவளை யாரோ காப்பாற்றி வீடு சேர்க்கிறார்கள். தகவல் தெரிந்த காதலன் தனது கட்டுப்பாட்டை மீறி கிராமத்திற்கு வருகிறான். அதனால் மறுபடியும் அவனுக்கு இரண்டு ஆண்டுகள் தடை. சாலையில் அவனுக்காக தினந்தோறும் காத்திருக்கிறாள். பிறகு மீண்டும் வந்து சேருகிறான். அற்புதமான வாழ்வை வாழ்ந்து அதன்பின் நிறைவு செய்கிறார்கள். அந்தக் கிராமத்துக் கல்வியின் தலைவன் போல கருதப்பட்டவரின் மரணம் கூடவே வாழ்ந்த மனைவியின் அன்பினாலும், மகனின் நினைவுகளாலும், நிறைவேற்றப்படும் கடமைகளாலும் ஊர் மக்களின் மரியாதையினாலும் பெருமைப் படுத்தப்படுகிறது.

இவ்வளவு அழகாக காதலைச் சொல்ல முடியுமா? காதல் என்பதையே தன் வாழ்நாளில் உணராத ஒருவருக்குக்கூட காதல் என்பதை உணர்த்தக்கூடிய சக்தி இந்தப் படத்திற்கு இருக்கிறது.

படம் முழுக்க சாலை காதலின் ஒரு பகுதியாக அவர்களைச் சேர்ப்பதும், பிரிப்பதுமாக தனது கதாபாத்திரத்தைச் செய்கிறது. மகள் காதலில் துயரப்படுவதைக் கண்டு தளும்பும் முதியவள் இயல்பாக தன்னைக் கதையில் இணைத்துக்கொள்கிறாள். காதலன் சாப்பிட்ட பீங்கான் பாத்திரம் அவனுடைய ஒரு பிரிவில் உடைந்து சிதறுகிறது. அந்த முதியவள் அந்த பாத்திரத்தைப் பழுது பார்க்கும் பெரியவர், பழுது பார்க்க ஆகும் செலவு, ஒரு புதிய பாத்திரத்தை வாங்குவதைவிட அதிகம் என்று சொல்வதை முதியவள் அலட்சியமாக நிராகரிக்கிறாள். படம் முழுக்கத் தூய்மையான உறவு ஒவ்வொரு காட்சியிலும் மேன்மைப்படுத்தப்படுகிறது. கதாநாயகியாக, காதலியாக வருகிற ஷாக் ஸியு துண்டு உரையாடல்கள், ஒரு விநோதமான உடல்மொழி, கூச்சநாச்சமான முகபாவம் என்று பிரமாதப்படுத்துகிறார். Remarkable and Gifted Actress.

படத்தின் கேமிரா, யாங் ஹீ. காட்சிகள் உலகத் தரத்துக்கு உயர்ந்திருக்கின்றன. அகலமான பிரம்மாண்டமான வண்ண மயமான ப்ரேம். அதன் 20 சிறிய பாத்திரங்கள். கதை நபர்கள். அதுவே படத்தின் அடிநாதத்தை வைத்து நகர்கிறது. ஜீபிங் கேயோ படத்தின் கலை. ஸியுவின் கழுத்தை இறுக்கும் அவுட்ஃபிட்டும் அதன் அடர் பிங்க் மற்றும் தெறிக்கும் சிவப்பு நிறமும் ஒரு சித்திரம் போல் நம் நெஞ்சில் பதிகிறது. இசை படத்தின் இடைவெளிகளை ப்ரேவ் ஹார்ட் போல நிரப்புகிறது. படத்திற்கு பிசிறடிக்கிற வெஸ்ட்டர்ன் ஸ்கோர். ஆனால் சீனத் துயரத்தைக் கொட்டுகிற அந்த ஒற்றை ப்ளூட்டும், தனிமைப்படுத்தப்பட்ட வயலின் குரலும் சேர்ந்து படத்தில் பேசாத மொழிகளையெல்லாம் நிறைவு செய்கிறது. “கமான் ம்ம்... கெட் ஓவர் இட்”என்ற மகனின் வார்த்தையில் தொடங்குவது இன்றைய சீன இளைஞர்களின் நவீனப்போக்கை வெளிப்படுத்துகிறது. படத்தில் வருகிற பள்ளியில் இருக்கும் சேர்மன் படம் முடியும்போது சீனக்கொடியாக மாறிப்பறக்கிறது. அந்த வீட்டின் சுவரில் டைட்டானிக் பட போஸ்டர் வைக்கப்பட்டிருக்கிறது.

சீனா மாறிக்கொண்டிருக்கிறது. ஷாங் இமு அதைத் தன் பழைய மரபுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் மாறிக்கொண்டிருக்கும் சீனாவின் உள் ஒடுங்கிய கிராமங்களின் மாறாத முரண்பாட்டையும் பதிவு செய்கிறார். படத்தில் குழந்தைகளுக்காகச் சொல்லப்படும் வரிகள்கூட ஒரு அர்த்தத்தையும் அந்தச் சூழலையும் மறைமுகமாக வெளிப்படுத்துகின்றன.

“Learn Mathematics
Learn the Present
Learn the Past
Keep a journal…………..”

ஒவ்வொருவருக்கும் கல்வி செல்லப்பட வேண்டும் என்கிற சீன கம்யூனிஸ்டுகளின், குரலும், அதற்கான அவர்களின் அர்ப்பணிப்பும் , அரசு கொடுத்த சிக்கலும், இப்படிப்பட்ட வாழ்விற்கிடையே பூக்கிற காதலும் தான் படம். அரசியல் பின்னிறுத்தப்பட்டிருக்கிறது காதல் முன்நிறுத்தப்படுகிறது.

நன்றி: திரை – ஏப்ரல் 2006

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </