நாடு கடந்த கலை: குறும்படங்களின் பெரும்தடம்
குறும்படம் சிறுகதைகளையும் குறுநாவல்களையும் போல உருவத்திலும் உள்ளடக்கத்திலும் சீர்மையையும் கச்சிதத்தையும் கோரி நிற்கும் ஒரு உன்னத கலை வடிவம். தமிழில் கடந்த சில வருடங்களாக குறும்படங்கள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த போக்கினைப் பற்றிய விமர்சனங்களில் ஒன்று இப்படங்கள் "நாளைய இயக்குனர்" போன்ற டிவி ஷோக்களுக்காக தயாரிக்கப் படுகின்றன, ஆகையினால் குறும்படங்களின் அழகியலில்லாமல் ஒரு முழு நீள திரைப்படத்தின் சுருக்கமான வடிவத்தையே அவை கொண்டுள்ளன என்று. என்னைப் பொறுத்த மட்டில் குறும்படம் ஒரு முழு நீள படத்திற்கு வழியமைத்துக் கொடுத்தால் அது வரவேற்கக் கூடியதே. ஏனென்றால் மக்களை சென்றடைந்து செய்த முதலீட்டைப் பெற்றுத்தரும் குறும்பட விநியோக நெட்வொர்க் என்று ஒன்றில்லை. திரைப்பட விழாக்களையும் தொலைக்காட்சி சேனல்களையும் நம்பியே குறும்படத்தை எடுக்க வேண்டியுள்ளது. டிவிடி மூலமாக சில குறும்படங்களை சேர்த்து வினியோகம் செய்யும் முயற்சியும் பெரிய அளவில் வெற்றியடைந்துள்ளதாகச் சொல்ல முடியாது. ஆஸ்கார் எவார்ட் வாங்கிய குறும்படங்களை டிவிடியாக விற்கும் முயற்சிகள் ஓரளவிற்கே வெற்றியடைந்துள்ளது என்று சொல்லலாம். இத்தகைய சூழலில் யூட்யூப் போன்ற வலைத்தளங்கள் குறும்பட விநியோகத்திற்கு ஒரு வரப் பிரசாதமாக அமைந்துளளன. ஆயினும் யூட்யூபில் உள்ள பிரச்சினை என்ன வென்றால் பணம் பகிர்தலில் இன்னும் நியாயமான போக்கில்லை. உதாரணத்திற்கு, என்னுடைய குறும்படத்தில் நான் ஒரு பிரபல இசைக்குழுவின் இசையையோ அல்லது பாடகரின் பாடலையோ பிரயோகப் படுத்தியிருந்தால் கூகிள், யூட்யூபின் தாய் நிறுவனம், அப்பிரபலமானவர்களுடன் என் படம் மூலம் வரும் விளம்பர வருவாயை பகிர்ந்து கொள்கிறதே அன்றி என்னுடன் அல்ல. என் படத்திற்கு ஒரு வினியோக வெளியை யூட்யூப் அளிக்கிறது எனபது உண்மை ஆனால் எனது உழைப்பிற்கான ஒரு ஊதியத்தை ஏற்படுத்திக் கொடுத்தால் நன்றாக இருக்கும். குறும்படம் எடுப்பவர்கள் எல்லோருமே மாணவரகள், அவரகளுக்கு பணத்தேவை இருக்காது என்ற ரீதியில் செயல் படுவது குறும்படத்திற்கான ஒரு உலகளாவிய சந்தையைப் பற்றிய பிரஞ்யையின்மையை சுட்டுகிறது. கூகிள் போன்ற பெருச்சாளிகள் இவ்வாறு செயல்படுவது ஆச்சரியமளிக்கிறது. குறும்படத்தின் தனித்துவத்திற்கும் அதன் பரப்பியத்திற்கும் அருணின் புத்தகமே சாட்சி.
|
அருண் இந்த புத்தகத்தில் தேர்ந்தெடுத்திருக்கும் படங்கள் யாவையுமே காத்திரமாக தேர்வு செய்யப்பட்டவையே. ஆயினும் இன்று யூட்யூபில் காணக்கிடைக்கும் நூற்றுக்கணக்கான குறும்படங்களிலிருந்து அத்தகைய தேர்வு என்பது மிகச் சிரமமான காரியம் என்பதை யாவரும் உணரலாம். அத்தகைய தேர்வு எல்லோருடைய ருசியையும் திருப்திப் படுத்துவதாக அமைவதும் கடினம். ஆனால் அததகைய ஒரு குறும்பட அட்டவணையை அருண் வெற்றிகரமாக இப்புத்தகத்தின் மூலம் தயார் செய்திருக்கிறார். அதற்கு ஒரு காரணம் அவர் இந்த குறும்பட வரிசையை தனக்கு தற்செயலாக ப்ரௌஸ் செய்து கொண்டிருக்கையில் கிடைத்து தான் பார்த்து ரசித்த படங்களிலிருந்து அல்லாமல் தான் பல வருடங்களாக பார்த்து ரசித்த படங்களிலிருந்து தொகுத்திருப்பதுதான். உதாரணமாக, பூநே பிலிம் ஆர்க்கைவிலும் பூநே பிலிம் இன்ஸ்டிடியூட்டிலும் பரவலாக பிலிம் அப்ரிஷியேசன் வகுப்புகளில் காட்டப்படும் "பிக் சிடி ப்ளூஸ்," "அன் அக்கரன்ஸ் அட் த ஔல் க்ரீக் ப்ரிட்ஜ்," "ஹேப்பி அன்னிவர்ஸரி" "நைட் மைல்," மற்றும் "க்ளாஸ்" பொன்ற படங்களைப் பற்றிய சிலாகிப்பு. இத்தகைய போக்கு சினிமாவின் தேர்ந்த மாணவராக, நல்ல சினிமாவின் தேடலில் உருவாகிய சினிமா விமர்சகராக அருணை முன்னிருத்துகிறது. பூனேவில் உள்ள சினிமா அழகியல் சார்ந்த காற்றழுத்த மண்டலம் அருணையும் பாதித்திருப்பதைக் காணலாம். சினிமா என்பது பிரதானமாக ஒரு கலை வடிவம் என்ற நோக்கில் தளராது எழுதுகிறார், தாளாது (சமயங்களில் தவிர்க்கக்கூடிய) சர்ச்சையில் ஈடுபடுகிறார். இளம் தலைமுறையை சேர்ந்த அருண் எனக்கு முந்தைய ஒரு ஜெனெரேஷனிலிருந்து திடீரென்று உதித்து இன்றைய காலங்களில் செயல் பட்டுக் கொண்டிருக்கிறாரோ என்று எனக்கு சமயங்களில் தோன்றுவதுண்டு. நல்ல சினிமாவிற்க்கான வெளிக்கான அவரது ஆர்வமும் ஈடுபாடும் உழைப்பும் ஒரு பழைய தலைமுறையைச் சார்ந்தது; அதற்கான செயல்பாடும் சமூக வலைத் தளங்களை உபயோகிக்கும் தந்திரோபாயங்களும் புதிய தலைமுறையைச் சார்ந்தது. அவருடைய அத்தகைய தனித்துவம் இந்த புத்தகத்திலும் வெளிப்படுகிறது. இப்புத்தகத்தில் பழைய செவ்வியல் மற்றும் பரவலாக புகழ்பெற்ற படங்களுடன் இன்றைய கால கட்டத்தின் முக்கிய படங்களும் இடம் பெற்றிருக்கிறது அதுவே இப்புத்தகத்தின் சிறப்பு. சினிமா ஆர்வலர்களுக்கும் மாணவர்களுக்கும் அதை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் இப்புத்தகம் மிகவும் உபயோகமான ஒன்று. முக்கிய காரணம் குறும்படங்கள் பற்றிய அருணின் விவரிப்பும் அலசலும் மற்றுமல்ல பிக் சிடி ப்ளூஸ் தவிர மற்ற எல்லாப் படங்களுக்கும் அவர் கொடுத்திருக்கும் ஆன்லைன் லின்க்குகளும் தான். இது நாள் வரை குறும்படங்களைப் பற்றிய காத்திரமான புத்தகம் வந்திருந்தால் கூட அப்படங்களைப் பற்றி படிக்கையில் பெருவாரியானவர்களுக்கு எல்லாப் படங்களையும் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் அமைவது அரிது. டிவிடி காலம் ஆரம்பமாகிய பின் கூட நல்ல குறும்படம் என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. அதை அடைவதை இன்றைய யூட்யூப் பொன்ற வலைத்தளங்களே சாத்தியப் படுத்தி இருக்கின்றன. ஆதலினால் அருணின் புத்தகம் இந்த தருணத்தில் வருவது வரவேற்க வேண்டிய ஒன்று. திரைப்படத்துறை ஆசிரியனாக எனது மனத்திற்கு நிறைவான குறும்படத்தைப் பற்றிய அலசலாக தமிழில் இப்புத்தகத்தைச் சொல்வேன்.
அருண் இப்புத்தக்த்தில் அலசும் படங்களை மூன்று வகையறாக்களாகப் பிரிக்கலாம். ஒன்று இனம், மதம் (சாதி), நாடு, போர் என்ற வேறுபாடுகளைச் சுட்டி நமது மானுடத்தை உசுப்பும் மனசாட்சியை கேள்வி கேக்கும் படங்கள்: த லன்ச் டேட், ப்ளாக் ரைடர், ஓம்னி பஸ், ஆப் சைட், இன்ஜா, எஸ் ஐ லே டையிங், லிட்டில் டெர்ரரிஸ்ட், டென் மிநிட்ஸ், ஆகிய படங்கள் இந்த வகைமைக்குள் அடங்கும். இரண்டாவது செவ்வியல் தன்மை கொண்ட இன்றைய டாகுமெண்டரி கேனனில் முதன்மை வகிக்கும் படங்கள்: அன் அக்கரன்ஸ் அட் த ஔல் க்ரீக் ப்ரிட்ஜ், க்ளாஸ், ஹாப்பி அன்னிவர்சரி, நைட் மெயில், பிக் சிடி ப்ளூஸ், போன்ற படங்கள் இந்தப் பிரிவுக்குள் அடங்கும். மீதமிருக்கும் இரண்டு படங்களான் டேங்கி அர்ஜெண்டினி மற்றும் மீல்ஸ் ரெடி காதல் மற்றும் விளிம்பில் உள்ளோரை மனிதத்துடன் அணுகும் சினிமாவின் ஆன்மாவிற்கு பலம் சேர்க்கும் கரிசனம் என்ற வகையினத்தில் வைத்து வாசிக்கலாம். அருண் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த பதினைந்து படங்கள் இன்று நாம் வாழும் சூழலையும் பிரதிபலிக்கின்றன. அவரது தொகுப்பிலுள்ள பதினைந்தில் எட்டு குறும்படங்கள் மனிதர்களுக்கூடான இடைவெளிகளையும் விரிசல்களையும் வெறுப்புகளையும் சினங்களையும் கோபதாபங்களையும் உள்ளடக்கங்களாக கொண்டுள்ளன. பெருமாள் முருகன் என்ற கலைஞனின் குரல்வலையின் மூலமாக கருத்து சுதந்திரத்தை நெறிக்கும் இந்துத்வா மற்றும் பிற அழிவு சக்திகள் இத்தகைய படங்களின் மூலம் கலையின் மையத்திலுள்ள மானுடத்திற்கான கூவலைக் கேட்டு மனம் இளகலாம்.
இரண்டாவது வகைமையிலுள்ள கல்ட் குறும்படங்களின் கடந்த பல வருடங்களாக நான் ரசிகனாகவும் தீராக்காதலானாகவும் உள்ளேன். எனது வகுப்புகளில் அவை திரையிடப்பட்டும் விவாதிக்கப்பட்டும் எனது இளம் மாணவர்கள் மூலமாக எனக்கு அவை வாழ்வைப் பற்றியும் கலையைப் பற்றியுமான ஞானத்தை அளித்திடும் போதி மரங்களாகவே வேரூன்றியுள்ளன. முக்கியமாக க்ளாஸ் மற்றும் பிக சிடி ப்ளூஸ் வடிவத்தைப் பற்றி பேசிப் பேசி ஓயாதவனாகவே இன்றளவிலும் இருக்கிறேன். எனது நெஞ்சில் என்றுமிருக்கும் ஆசான் பகதூர் அவர்களுடன் தொடர்பு கொள்ள அவை ஒரு இணைப்பாக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். மூன்றாவதாக உள்ள கரிசனம் என்ற கேட்டகரியில் அருண் தேர்ந்தெடுத்திருக்கும் இரு படங்கள் ஒரு சிறிய உதாரணம் தான். ஏனென்றால் அந்த வகையறா பல படங்களின் மூலம் விரிந்து கொண்டே போய் இன்றைய வெறுப்பிலும் பேரழிவிலும் அமிழ்ந்து திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் சமூகத்திற்கு ஆக்கமும் கரிசனமும் மானுடமும் வெவ்வேறானவை அல்ல என்று குறும்/ஆவணப் படங்களின் மூலம் அறிவித்து இன்றைய சூழலில் அரிதான ஆசுவாசத்தை அளித்து நம்மை காத்துக் கொண்டிருக்கின்றன.
அருண் இத்தகைய அரிய குறும்படங்களை மிகவும் அக்கறையுடன் சினிமாவின் கச்சாப் பொருட்களான பிம்பம்/படிமம் மற்றும் ஒலி, காலம் மற்றும் வெளியைக் கொண்டு சிரத்தையுடன் அலசியிருப்பது மெச்சத்தக்கது. வரவேற்க வேண்டியது. அவரது இந்த முதல் முயற்சிக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!
சொர்ணவேல்
மிச்சிகன் மாநில பல்கலைக்கழகம்
கிழக்கு லேன்சிங்
15/01/2015
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |