இதழ்: 7, நாள்: 15 - ஆனி -2013 (June)
   
 
  உள்ளடக்கம்
 
உயிர் கொடுக்கும் கலை 4 - ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
தென்மேற்கு பருவக் காற்று – புதிய முயற்சிகளில் ஒன்று - வெங்கட் சாமிநாதன்
--------------------------------
திரைமொழி 5 - ராஜேஷ்
--------------------------------
கடவுளரின் தலையீடு : கனவும் யதார்த்தமும் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
நண்பரும் தோழருமான மணிவண்ணன் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
நாவலும் திரைப்படமும் - எழுத்து திரைப்படமாகும் போது - எஸ். ஆனந்த்
--------------------------------
அன்பைத் தேடி ஒரு தப்பித்தல் - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
குறும்பட இயக்குனர் பாலாஜி சுப்பிரமணியன் உடன் ஒரு நேர்காணல் - சுரேஷ் சுந்தர்
--------------------------------
இலங்கை திரைப்பட இயக்குநர் - பிரசன்ன விதானகே - விஸ்வாமித்ரன்
--------------------------------
தமிழ் ஸ்டூடியோவின் 54ஆவது குறும்பட வட்டம் - தினேஷ்
--------------------------------
ரிதுபர்னோ கோஷ் - மாற்றம் தந்த இயக்குனர் - அருண் மோ.
 
 
   
   


திரைமொழி - 4

முதல் பாகம் – Visualization – The Process

அத்தியாயம் 3 – Storyboards

film directing
shot by shot
visualizing from concept to screen

Steven D. Katz         தமிழில்: ராஜேஷ்

மாரீஸ் ஸுபரானோ (Maurice Zuberano) என்ற புகழ்பெற்ற ஆர்ட் டைரக்டர் மற்றும் ப்ரொடக்ஷன் இல்லஸ்ட்ரேட்டர், ஸ்டோரிபோர்டுகளை ’திரைப்படங்களின் டயரி’ என்று குறிப்பிட்டிருப்பதிலிருந்து இந்த அத்தியாயம் துவங்குகிறது. அவர் இப்படிக் குறிப்பிட்டதன் காரணம், முதல் அத்தியாயத்தில் நாம் பார்த்த ’விஷுவலைஸ்’ செய்யும் முறையோடு மிக நெருக்கமாக ஸ்டோரிபோர்டுகள் தொடர்புகொண்டிருப்பதால்தான். திரைப்படத்தின் கதையை மனதில் எண்ணிப் பார்க்கும் திறமை ஒரு சில இயக்குநர்களுக்கே உண்டு. அந்தத் திறமை இல்லாத இயக்குநர்களுக்கு, ஸ்டோரிபோர்டுகளே ஷாட்கள் வைப்பதற்கு உயிர்நாடியாக விளங்குகின்றன. இத்தகைய சூழ்நிலைகளில், திரைப்படத்தின் காட்சிகளை இறுதிசெய்வது ஸ்டோரிபோர்ட் ஆர்டிஸ்ட்களின் வேலை. அவர்கள் வரைவதை வைத்தே காட்சிகள் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில் பல திரைப்படங்கள், இயக்குநர்களின் மூளையில் இல்லாமல், இத்தகைய ஸ்டோரிபோர்ட் ஆர்டிஸ்ட்களின் மூளையிலேயே உருவாகின்றன எனலாம்.
ஆனால், இத்தகைய இயக்குநர்களுக்கு இடையே ஹிட்ச்காக் ஒரு விதிவிலக்காக விளங்கியிருக்கிறார். அவரது திரைப்படங்கள், படமாக்கப்படுமுன்பே உருவாகிவிட்டவை என்று அடிக்கடி பெருமையுடன் அவர் கூறுவது வழக்கம். காட்சிகள் அமைக்கும்போது வ்யூஃபைண்டரின் வழியாக அவர் பார்ப்பது மிகக்குறைவு. காரணம், ஒவ்வொரு காட்சிக்கும் துல்லியமான ஸ்டோரிபோட்டுகளை அவர் உருவாக்கிவிட்டிருந்ததே. தனது வாழ்க்கையை ஒரு ஆர்ட் டைரக்டராக தொடங்கிய ஹிட்ச்காக் இப்படி செய்ததில் ஆச்சரியம் இல்லையல்லவா? அவரது பல திரைப்படங்களில், படத்தின் டிஸைன் என்ற டைட்டிலில் இவரது பெயரேதான் வரும்.

அறுபதுகளில் ஹிட்ச்காக்கின் ஸ்டோரிபோர்டுகளின் தாக்கம் பல இயக்குநர்களை பாதித்திருந்தது. எப்படி அறுபதுகளில் ஜாஸும் ப்ளூஸ் இசையும் அமெரிக்காவின் பாரம்பரியமிக்க இசைவடிவங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தனவோ, அப்படியே பல இயக்குநர்கள் இந்த ஸ்டோரிபோர்டுகளை ஏற்றுக்கொண்டு செயல்படுத்த ஆரம்பித்திருந்தனர். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் – ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். ஜார்ஜ் லூகாஸுடன் ஸ்பீல்பெர்க் பணியாற்றிய பல திரைப்படங்களின் ப்ரொடக்ஷன் ஆர்ட்களை (ஸ்டோரிபோர்டுகள் மற்றும் ப்ரொடக்ஷன் இல்லஸ்ட்ரேஷன் – பார்க்க- முந்தைய அத்தியாயங்கள்) அவர் வெளியிட்டிருக்கிறார். ஸ்பீல்பெர்க்கின் படங்களில் பொதுவாக பல்வேறு ஸிஜி காட்சிகளும் வண்ணமயமான செட்களும் இடம்பெறுவது வழக்கம். ஸ்டோரிபோர்டுகள் இல்லாமல் அவரால் அத்தகைய காட்சிகளை நினைத்தபடி படமாக்குவது கடினமான காரியமாக இருந்திருக்கும்.
தற்காலத்தில் ஸ்டோரிபோர்டுகளின் மீதான ஆர்வத்தை – ’தற்கால இயக்குநர்களில் பலர் காமிக்ஸ்களைத் தாண்டி வேறு எதையும் படிப்பதில்லை; ஆகவே, அவர்கள் மனதில் எண்ணிய காட்சிகளை வடிவமைக்க ஸ்டோரிபோர்டுகள் அவர்களுக்கு அவசியம் தேவைப்படுகின்றன’ - என்று சொல்லி நிராகரித்துவிடமுடியும். ஆனால் உண்மை அதுவல்ல. பெரும் பட்ஜெட் தேவைப்படாத எளிய திரைப்படங்கள் கூட ஸ்டோரிபோர்டுகளை உபயோகிக்கின்றன. புகழ்பெற்ற ஃப்ரெஞ்ச் இயக்குநர் கொதார் (Jean-Luc Godard) பலமுறை ஹாலிவுட் திரைப்படங்களையும், ஹாலிவுட் திரைப்படங்களின் கண்டின்யுட்டிக்காக உபயோகப்படுத்தப்படும் பல வழிமுறைகளையும் கிண்டலடித்திருக்கிறார். இருந்தாலும் அவரே ஸ்டோரிபோர்ட்களை சில சமயங்களில் ஷாட்களின் இடையே இருக்கும் தொடர்பை விளக்க உபயோகப்படுத்தியிருக்கிறார். இதுபோன்ற உதாரணங்களை வைத்து, ஸ்டோரிபோர்டுகள் என்பன ஒரு உபகரணம் மட்டுமே என்பதை மறக்கக்கூடாது. ஸ்டோரிபோர்டுகளில் எந்தவித தனிப்பட்ட பாணியும் விளக்கப்படவில்லை; மாறாக, இயக்குநர் நினைக்கும் காட்சிகளை வெளிப்படுத்தவே அவைகள் தேவைப்படுகின்றன என்பதால்.

ஸ்டோரிபோர்டுகள் மூலம் இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன. ஒன்று – திரைப்பட இயக்குநரின் மனதில் இருக்கும் காட்சிகள் இவற்றின் மூலம் விளக்கப்பட்டு, அவைகள் மேலும் தெளிவடைய வழிவகுக்கின்றன. மனதில் இருப்பதை ஸ்டோரிபோர்டாக வடிவமைத்துவிட்டால், அந்தக் காட்சிகளை மேலும் செம்மைப்படுத்த இயக்குநரால் முடிகிறது. இரண்டு – ஐடியாக்களை ஒட்டுமொத்த ப்ரொடக்ஷன் டீமுக்கும் தெரியப்படுத்த ஸ்டோரிபோர்டுகள் உபயோகப்படுகின்றன. மிகப்பெரிய ஆக்ஷன் காட்சிகள் மற்றும் பெரிய பட்ஜெட் தயாரிப்புகளுக்கு மட்டுமே இந்த ஸ்டோரிபோர்டுகள் உபயோகப்படுகின்றன என்றில்லாமல், மிகச்சிறிய காட்சிகளுக்கு இடையே இருக்கும் தொடர்பை விளக்கி, அவற்றின் மூலம் வசனங்களையும் காட்சியின் உணர்வையும் மேலும் செம்மைப்படுத்த இயக்குநருக்கு இவை தேவைப்படுகின்றன.

ஸ்டோரிபோர்டிங்கில் இயக்குநரின் வேலை

ஒவ்வொரு திரைப்படமும் பல்வேறு திறமைகள் மற்றும் ஆளுமைகளின் சங்கமம். ஒரு திரைப்படம் ஒட்டுமொத்தமாக எப்படிப்பட்ட தாக்கத்தை வெளிப்படுத்துகிறது என்பதில் ப்ரொடக்ஷன் டிஸைனர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டருக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. தற்காலத்தில் இயக்குநர் என்பவர் ஒரு ஆர்டிஸ்டை வைத்துக்கொண்டு ஸ்டோரிபோர்டுகளை தயாரித்துவிட முடியும். இதனால் ப்ரொடக்ஷன் டிஸைனரின் வேலை சிறிது குறையும். அதேசமயம், ஹாலிவுட்டில் பழங்காலத்தில் இருந்துவந்த ஸ்டுடியோ விதிகள் தற்போது இல்லை. அதாவது, ஒவ்வொரு ஸ்டுடியோவும் ஒவ்வொரு பாணியிலான படங்களை மட்டுமே எடுத்துவந்த காலம் மலையேறிவிட்டது. ஆகவே, தற்காலத்தில் ஒரு திரைப்படத்தை என்னதான் தயாரிப்பு பிரச்னைகள் இருந்தாலும் தான் நினைத்தபடி எடுத்து முடிக்கவல்ல திறமைசாலி இயக்குநர்கள் இருக்கிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

க்ராஃபிக்ஸ் மற்றும் ஓவியங்களில் சிறிதி பயிற்சியுள்ள இயக்குநர்கள், தாங்களே தோராயமான ஸ்டோரிபோர்டுகளை வரைந்து, ஸ்டோரிபோர்ட் ஆர்டிஸ்டுகளுக்கு வழங்குவதுண்டு. இவற்றை வைத்துக்கொண்டு தெளிவான ஸ்டோரிபோர்டுகளை அவர்கள் வரைவார்கள். உடனடியாக நமது நினைவுக்கு வரும் இரண்டு இயக்குநர்கள் – ஹிட்ச்காக் மற்றும் ரிட்லி ஸ்காட். ப்ளேட் ரன்னர் (Blade Runner) திரைப்படத்துக்கு ரிட்லி ஸ்காட் வரைந்த பல காட்சிகளுக்கான தோராய ஸ்டோரிபோர்டுகளை அப்படத்தின் புகழ்பெற்ற ப்ரொடக்ஷன் இல்லஸ்ட்ரேட்டரான ஷெர்மன் லாபி (Sherman Labby) நினைவு வைத்திருக்கிறார். ஐஸன்ஸ்டைன், ஃபெலினி மற்றும் குரஸவா போன்ற புகழ்பெற்ற இயக்குநர்களும் அவ்வப்போது தாங்களே ஸ்டோரிபோர்டுகளை வரைவதுண்டு. இவர்கள் போன்ற ஓவியத்திறமை இல்லாத இயக்குநர்கள் கூட (ஸ்பீல்பெர்க் மற்றும் ஜார்ஜ் மில்லர்), குச்சி குச்சியாக உருவங்களை வரைந்தே நினைத்த காட்சியமைப்புகளை தெரியப்படுத்தியதும் உண்டு. இயக்குநரது மனதில் தெளிவான காட்சியமைப்பு இருந்தால், ஸ்டோரிபோர்ட் தயாரிக்கும் ஓவியர்களை அந்தக் காட்சியைப் பற்றிய ஐடியாக்களை வழங்சச் சொல்லி உற்சாகப்படுத்துவதும் உண்டு.

பால் பவர் (Paul Power) என்ற ப்ரொடக்ஷன் இல்லஸ்ட்ரேட்டருக்கு காமிக்ஸ்களில் சிறிது அனுபவம் உண்டு. தான் பங்குபெறும் திரைப்படங்களில், இயக்குநருடன் சேர்ந்து நீண்ட விவாதங்களில் ஈடுபட்டு ஸ்டோரிபோர்ட் தயாரிப்பது இவரது பாணி. இதுபோன்ற விவாதங்களின்போது, திரைக்கதையில் இருக்கும் காட்சிகளை நடித்தும் காட்டுவது உண்டு. எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போது இயக்குநர் இவரை நிறுத்தச்சொல்லி, இருவரும் சேர்ந்து ஸ்டோரிபோர்டுகளில் ஈடுபடுவார்கள். தனது இந்த பாணிக்கு, ‘பென்ஸில் நடிப்பு’ என்று அவர் பெயர் சூட்டியிருக்கிறார். இவரைப்பொறுத்தவரை, ப்ரொடக்ஷன் இல்லஸ்ட்ரேட்டரின் பொறுப்பு என்பது ஒரு இயக்குநரின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்த உதவுவது. சொல்லப்போனால், இந்தப் புத்தகத்தை எழுதிய ஸ்டீவன் காட்ஸ் பேசிய பல ப்ரொடக்ஷன் இல்லஸ்ட்ரேட்டர்களும் இதையே சொல்லியிருக்கிறார்கள். ஸ்டோரிபோர்டுகளைத் தயாரித்தல் என்பதே ஒரு ஓவியரை தனது வேலையில் விரைப்பாக இல்லாமல் நெகிழ்ந்துகொடுக்க ஏதுவாக மாற்றிவிடுகிறது. ஒரு இயக்குநரின் பார்வையை மிகச்சரியாக புரிந்துகொண்டு அதனை ஸ்டோரிபோர்டுகளின் வாயிலாக வெளிக்கொணர்வது இவர்களின் தலையாய பிரச்னை. ஒவ்வொரு காட்சியையும் பலமுறை மாற்றி மாற்றி, இயக்குநரின் தேவைக்கேற்ப வரைவதால், எந்த ஒரு பிரச்னைக்கும் பல்வேறு வழிகள் இருக்கமுடியும் என்பது அவர்களுக்கு நன்றாகப் புரிந்ததாக இருக்கிறது.

ப்ரொடக்ஷன் இல்லஸ்ட்ரேட்டர்களின் வேலை நேரம்

பொதுவாக, ஒரு திரைப்படத்தின் சிக்கலான தயாரிப்பு மற்றும் இயக்குநரின் தேவை ஆகிய விஷயங்களால், ஒரு ப்ரொடக்ஷன் இல்லஸ்ட்ரேட்டர் என்பவரின் வேலை இரண்டு வாரங்களிலும் முடியலாம் அல்லது இரண்டு வருடங்களும் ஆகலாம். இந்த கால அவகாசத்தை விளக்குவது கடினம். இருந்தாலும், கிட்டத்தட்ட சொல்லப்போனால், ஒரு முழுத்திரைப்படத்தின் ஸ்டோரிபோர்டிங் என்பது 3-4 மாதங்கள் பிடிக்கும். சிலமுறை, மிகப்பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும் பல ஸ்பெஷல் எஃபக்ட்கள் தேவைப்படும் படங்கள் ஆகியவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட ப்ரொடக்ஷன் இல்லஸ்ட்ரேட்டர்கள் வேலை செய்வதுண்டு. அத்தகைய நேரங்களில், காட்சிகளுக்கு இடையேயுள்ள கண்டின்யுட்டி ஸ்கெட்ச்களையும் ப்ரொடக்ஷன் இல்லஸ்ட்ரேட்டர்கள் வரைவதுண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட ஆர்டிஸ்ட்கள் இருந்தாலுமே, ஒரு சிக்கலான திரைப்படத்தின் ஸ்டோரிபோர்டுக்கு ஒரு வருடம் கூட ஆவதுண்டு. தயாரிப்பின் ஒவ்வொரு விஷயமும் தயாராவதற்காக (செட்களின் வரைபடங்கள், லொகேஷன்கள் முடிவு செய்யப்படுதல் போன்றவை) காத்திருக்கும் கால அவகாசமே இந்த ஒரு வருட காலத்தின் பல நாட்களை எடுத்துக்கொண்டுவிடுகிறது.

ஸ்டோரிபோர்ட் ஆர்டிஸ்ட்களுக்குத் தேவைப்படும் திறமைகள்

ஒரு ப்ரொடக்ஷன் இல்லஸ்ட்ரேட்டருக்கு, செட்கள், எடிட்டிங், காட்சியமைப்புகள், ஒளிப்பதிவாளர் உபயோகப்படுத்தும் லென்ஸ்கள் போன்றவைகளில் பயிற்சி இருக்க வேண்டும். மனித உடலமைப்பை பல்வேறு கோணங்களில் முன்மாதிரிகளைப் பார்த்து வரையாமல் உடனடியாக, தெளிவாக வரையத் தெரிந்திருக்கவேண்டும். வேலை அழுத்தத்தை தாங்கிக்கொண்டு குறிப்பிட்ட தேதிக்குள் வேலையை முடித்துக்கொடுக்கும் வேகம் இருக்க வேண்டும். பல்வேறு சரித்திர காலகட்டங்களைப் பற்றியும், அழகான லொகேஷன்களைப் பற்றியும் தெரிந்திருக்கவேண்டும். திரைப்படங்களில் உபயோகப்படுத்தப்படும் சரித்திர காலங்களைப் பற்றிய ஆய்வுகள் அந்தப் படங்களின் தயாரிப்பில் மேற்கொள்ளப்படும் என்றாலும், இதுபோன்ற விஷயங்களை டக்கென்று புரிந்துகொள்ளும் நினைவாற்றல் ஒரு ஸ்டோரிபோர்ட் ஆர்டிஸ்டுக்கு அவசியம். காரணம், அவனுக்கு அளிக்கப்படும் நேரம் குறைவு. ஆகவே, கிடைக்கும் குறைவான நேரத்தில் தனது நினைவாற்றலை உபயோகப்படுத்தி வேலையை முடிக்கத் தெரிந்திருக்கவேண்டும்.

அடுத்த கட்டுரையில் ஸ்டோரிபோர்டுகளின் உதாரணங்களை விரிவாக அலசலாம்.

தொடரலாம்.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </