ரிதுபர்னோ கோஷ் - மாற்றம் தந்த இயக்குனர்.
|
இந்திய சினிமாவை உலக அரங்கில் தலைநிமிர செய்ததில் வங்காள மொழிப் படங்களுக்கு மிக பெரிய பங்கிருக்கிறது. சத்யஜித் ரே, மிருனாள் சென், ரித்விக் கட்டக் உள்ளிட்ட இயக்குனர்களின் வரிசையில் இன்னுமொரு முக்கியமான இயக்குனர் ரிதுபர்னோகோஷ். இவரை விட பெண்களின் மனநிலையை வேறு யாரும் மிக சரியாக புரிந்துக் கொள்ள முடியாது என்று நடிகர் அனுபம் கேர் அடிக்கடி சொல்வார். இவரது திரைப்படங்களில் பெரும்பாலானவை எப்போதும் பெண்களையும், அவர்களது அக உலகத்தையும், அவர்களின் மன ஓட்டத்தையும் பதிவு செய்தவை.
ஒரு சமூகம், போலியாக கட்டமைத்துக் கொண்டுள்ள, கலாச்சார கூறுகளையும் தாண்டி, இப்படியான ஒரு நிலைப்பாடு தன்னுடைய வாழ்வின் பெரும்பகுதியை கேள்விக்குள்ளாக்கும் என்கிற அச்சத்தையும் தாண்டி "நான் ஒரு ஓரினச்சேர்க்கை ஆதரவாளன்" என்று தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர் கோஷ். ஓரினச்சேர்க்கையின்போதுதான், மனம் முழு திருப்தியடைவதாகவும், அதில்தான், உணர்ச்சிகள் சரியாக பிரதிபலிக்கிறது என்றும் தைரியமாக ஒரு நேர்காணலில் தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியவர். மட்டுமில்லாமல், தனது மானசீக குருவான சத்யஜித் ரே வை பின்தொடர்ந்து இவரும் நாவல்களையே திரைப்படமாக்கும் முயற்சியை முன்னெடுத்தார். வங்கத்தில் புகழ்பெற்ற எழுத்தாளரான Shirshendu Mukhopadhyay வின் நாவலை தழுவி இவர் எடுத்த முதல் திரைப்படம், ஹிரார் ஆங்டி (Hirer Angti). இந்த திரைப்படம் மிக பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. தவிர, ரபீந்தரநாத் தாகூரின் படைப்புகளையும், திரைப்படமாக எடுத்துள்ளார். அதில் முக்கியமான படம், Chitrangada.
ஒரு தாய்க்கும், மகளுக்குமான உறவுகளை மிக நுட்பமாக படம்பிடித்த இவரது இரண்டாவது படமான Unishe April வணிக ரீதியாக வெற்றியடைந்தது மட்டுமல்லாமல், விமர்சன ரீதியாகவும் இவருக்கும் நல்ல பெயரை ஈட்டித் தந்தது. மட்டுமில்லாமல், 1995 ஆண்டு இரண்டு தேசிய விருதுகளையும் இந்த திரைப்படம் பெற்றது. இந்த திரைப்படத்தில், தாய்க்கும் மகளுக்கும் கிட்டத்தட்ட முப்பது நிமிடங்களுக்கும் மேலாக ஒரு உரையாடல் நடைபெறும். ஒரு தாயாக, நீ என்னிடம் நடந்துக் கொள்ளவில்லை என்கிற மகளின் ஆதங்கத்தை அடிப்படையாக வைத்து தொடங்கும், தாய்க்கும் மகளுக்குமான ஒரு நெகிழ்ச்சியான ஒரு உறவை பார்வையாளனுக்கு விளக்கி செல்லும். இதுவரை இந்திய சினிமாவில் இப்படி ஒரு காட்சி வெளிவந்ததே இல்லை என்பேன். இவர்களை எல்லாம் வைத்து உருப்படியான சினிமா எடுக்க முடியாது என்று கோஷ் ஒருபோதும் யாரையும் நினைத்தது இல்லை. வெகுஜன சினிமாவில் கோலோச்சிய பலரையும் தன்னுடைய திரைப்படங்களில் மிக நேர்த்தியாக பயன்படுத்தி இருப்பார் கோஷ்.
|
ஆவணப்பட இயக்குனர் & ஓவியர் என்கிற பன்முகத் திறன் கொண்ட சுனில் கோஷ்தான் இவரது தந்தை. தந்தையைப் போன்றே இவரும், நிறைய ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். தாகூரை பற்றிய இவரது ஆவணப்படம் மிக முக்கியமான ஒன்று. ஆரம்பத்தில் விளம்பரப் படங்களுக்கு வசனங்கள் எழுதி தருபவராக இருந்து, பின்னர் விளம்பரப் பட இயக்குனராக இருந்து, இறுதியில் திரைப்பட இயக்கத்தில் நுழைந்தவர். இவர் இயக்கிய விளம்பரப் படங்களில் முக்கியமானது, "வந்தே மாதாரம். ரிதுபர்னோகோஷ் இதுவரை 12 தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார். இவரைப் போல, வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிபெறும் ஒரு படைப்பாளியை இனி அத்தனை சீக்கிரத்தில் இந்திய சினிமா பெற்றுவிடாது. காலம் எப்போதும், சாதனையாளர்களை நீண்ட நாட்கள் வாழவிடாது. வெறும் 49 வயதில் மரணம் அவரை தழுவிக் கொண்டது.
ரிதுபர்னோகோஷ் போன்ற படைப்பாளிகளுக்கு ஒரு நாளும் மரணமில்லை, அவர்கள் படைப்புகள் தொடர்ந்து அவர்களின் இருத்தலை நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும்.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |