உயிர் கொடுக்கும் கலை 4 - டிராட்ஸ்கி மருது
- ஒலிப்பதிவும் எழுத்தும் : யுகேந்தர் |
Ray Harryhausen (Ray Harry - ரே ஹேரி)
மூன்றாவது அல்லது நான்காவது படித்துக்கொண்டிருந்த காலம் என்று நினைக்கிறேன். சிறு வயதில் அப்பாவுடன் மதுரை ரீகல் தியேட்டரில் பார்த்த திரைப்படங்களில் ஒரு சில பிம்பங்கள் (Images) என்னை பாதித்தது, மிக அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. மனிதர்களை விரட்டும் பெரிய ஒற்றை கண் பூதம், மலைகளுக்கு நடுவில் தண்ணீரில் பெரிய கப்பல் ஒன்று வந்துக்கொண்டிருக்கும், ஆனால் அந்த பூதத்திற்கு தண்ணீர் இடுப்பளவு தான் இருக்கும், மிக பெரிய அந்த கப்பலை அந்த பூதம் பிடிக்க வருவது போன்ற காட்சிகள் அப்படத்தில் இடம்பெற்றது. சிறு வயதில் அப்பாவுடன் திரையரங்கத்தில் படம் பார்க்கும் போது, முன்பு அமர்ந்து இருப்பவர்கள் மறைப்பார்கள், சிறுவனாக இருப்பதால் எனக்கு திரை சரியாக தெரியாது. அதனால் முன்னிறுக்கையில் அமர்ந்து இருக்கும் இருவரின் தலைக்கு இடையில் திரையை பார்ப்பேன். அப்படி அந்த பூதத்தை பார்த்தது எனக்கு மிக பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. Dino De Laurentiis தயாரிப்பில் Kirk Douglas நடித்த Ulysses படம் அது என்று பிற்காலத்தில் தெரிந்துக் கொண்டேன். திரைப்படம் வெளிநாடுகளில் வெளியான காலக்கட்டத்திலேயே, மதுரை தியேட்டரில் அப்பாவுடன் இந்த படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பூதமும் மனிதர்களும் சண்டையிடும் காட்சி அப்போது பெரிய வியப்பை தந்தது. Cyclops ஆட்டை மேய்த்துக்கொண்டு வந்த பின் குகையில் படுத்திருக்கும். Ulysses மற்றும் அவர்களுடைய சகாக்கள் சேர்ந்து, wine'ஐ நிறைய தயார் செய்து அதை குடிக்க வைத்து, அது தள்ளாடி வந்து படுத்திருக்கும் போது ஒரு பெரிய மரத்தை சீவி அது தூங்கும் போது அதனின் ஒற்றை கண்னை குத்திடுவார்கள். இந்த காட்சி ஏற்படுத்திய தாக்கம் பெரியது தான்.
|
வால்ட் டிஸ்னி படங்கள் தொடர்ந்து பார்க்க வாய்ப்பு கிடைத்தது. வால்ட் டிஸ்னி, பாரதி புத்தக நிலையத்தின் காமிக் புத்தகங்கள், அதன் பக்கத்தில் இருந்த ரீகல் டாக்கீஸ் மற்றும் சினிமா சார்ந்த குடும்ப தொடர்பு தான் என்னை ஓவியராக வேண்டும், திரைப்படத்தில் இயங்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தியது. அதன் பிறகு ஆறாம் அல்லது ஏழாம் வகுப்பு படிக்கும் போது பார்த்தது ரே ஹேரியின் `Jason and the Argonauts` திரைப்படம். இத்திரைப்படம் என் வாழ்வை மாற்றியதாகவே நான் கருதுகிறேன். டிஸ்னி படங்களை தாண்டி பெரியளவில் என்னை ஈர்த்த திரைப்படம் Jason and Argunants. (https://www.youtube.com/watch?feature=player_embedded&v=pF_Fi7x93PY)கதாநாயகனுடன் எலும்பு கூடுகள் எழுந்து வந்து சண்டை போடுவது போன்ற ஒரு காட்சி. தங்கத்தாலான ஆட்டுத் தோலை தேடிப் போகும் பயணம், கிரேக்க பழங்கதை .கிட்டத்தட்ட Ulysses'இன் பயணம் போலவே தான் இதுவும் இருக்கும். மனிதர்களுடன் எலும்புகூடுகள் சண்டையிட்ட காட்சிகள் என்னை வாழ்வெல்லாம் துரத்திய படிமங்கள். எப்படி எடுத்திருப்பார்கள் என்ற ஒரு ஆற்றாமையோடு பல விஷயங்களை என்னை தேட வைத்தது அந்த படம். பள்ளி இறுதி நாட்களுக்குள்ளாகவே, இந்த மாதிரியான படங்கள் சார்ந்த புத்தகங்களை தேடிப் படிக்க ஆரம்பித்தேன். பொம்மைகளோடு அவர் உட்கார்ந்திரப்பதை புத்தகத்தில் பார்த்திருக்கிறேன், அது குறித்து முழுமையாக தெரிவதற்கான வாய்ப்பு இல்லை, யாரும் சொல்லி கொடுக்காத நிலையில் நானே தேடி தெரிந்துக்கொள்ள முயற்சி செய்தேன். கிட்டத்தட்ட ரே ஹேரிக்கான tribute தான் தமிழில் நான் கலை இயக்குநராக பணிபுரிந்த `தேவதை` திரைப்படம். தேவதையில் வரும் சில பகுதிகளை நான் வாழ்க்கையில் செய்து பார்க்க வேண்டும் என்று நினைத்த காட்சிகள். அனுக்கமான நண்பராக நாசர் இருந்ததால் இது போன்ற சில காட்சிகளையும் சேர்த்து செய்ய வாய்ப்பு கிடைத்தது.
|
Sindbad and the eye of the tiger, மற்றும் சிந்துபாத் கதைகள் சார்ந்த படங்கள் சிலவற்றையும் ரே ஹேரி எடுத்திருக்கிறார். (https://www.youtube.com/watch?feature=player_embedded&v=MhNmVMjxe4Y)பெரும்பாலான அவரின் படங்கள் கிட்டத்தட்ட நம் விட்டாலாச்சாரியா படம் போலவே என்று கூட சொல்லலாம். ஹாலிவுட்டில் குறைந்த செலவில் படங்கள் உருவாக்கும் தயாரிப்பாளார்கள் சிலர் இருந்தார்கள். ஒரு பெரிய கதாநாயகனை அல்லது கதாநாயகியை வைத்து, 15-20 நாட்களில் தங்கள் கதைக்கு தேவையான காட்சிகளை எடுத்துவிடுவார்கள். பதிவு செய்யப்பட்ட காட்சிகளை திரையில் திரையிட்டு, அதற்கு முன்பு பொம்மையை (puppet) வைத்து அதற்கு முன்பு கேமராவை வைத்து, மூன்றும் ஒரே கோட்டில் இணைவது போல வைத்து காட்சிகளை பதிவு செய்வார்கள். தனியாக கதாநாயகன் கத்தி சண்டை போடுவது போல் நடித்த காட்சியை முதலிலே பதிவு செய்துவிடுவார்கள். மேசையில் இருக்கும் எலும்புக்கூட்டின் கத்தியும் கதாநாயகனின் கத்தியும் ஒன்றாக இணைவது போன்றான ஒரு கோணத்தில் கேமரா இருக்கும். ஒவ்வொரு ஃப்ரேமாகத்தான் எடுப்பார்கள். ஏற்கனவே எடுத்த காட்சி பதிவை இரண்டு ஃப்ரேம் நகர்த்துவார்கள். முதலில் ஒன்றாவது ஃப்ரேம், அடுத்து மூன்றாவது ஃப்ரேம் என காட்சி பதிவு செய்வார்கள். நகர்த்திய பின், திரையில் கதாநாயகனின் கத்தியிருக்கும் இடம் மாறும் போது, முன்பு இருக்கும் எலும்புகூடின் கத்தியும் கொஞ்சம் நகர்த்துவார்கள். அப்படி ஒவ்வொரு ஃப்ரேமாக நகர்த்தி எடுக்கப்பட்டது தான் கதாநாயகனுடன் எலும்பு கூடுகள் எழுந்து வந்து சண்டை போடும் அந்த காட்சிகள்.
கடந்த நூற்றாண்டு சினிமா வரலாற்றில் மிக முக்கியமானவர்கள் என்று கூறினால் வால்ட் டிஸ்னி, சார்லி சாப்ளின் மற்றும் ரே ஹேரி என்பதே என் எண்ணம். சினிமாவை உயரத்திற்கு கொண்டு சென்றவர்களில் முக்கியமானவர் ரே ஹேரி. 90 வயது வரை தொடர்ந்து சினிமாவில் இயங்கிய கலைஞர். சினிமாவிற்கு இவரது பங்கு மிக நீண்டது, டிஸ்னி மற்றும் சாப்ளினை தெரிந்ததை போல் இவரை பலருக்கு தெரிந்திருக்காது. இனி வரும் சினிமா வரலாற்றில் அவர் விட்டு சென்றுள்ள footages தொடர்ந்து பெரும் தாக்கத்தை உருவாக்கும். வரும் காலங்களில் வர இருக்கும் computer graphics செயல்பாடுகள் மற்றும் சினிமாவிற்கான புதிய டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் சார்ந்த செயல்பாடுகளில் இவரது வழியே தொடரும். சம கால கலைஞர்களுக்கு மத்தியில் என்னை மிக அதிகளவில் இவரது படைப்புகள் ஊக்குவித்திருக்கிறது. இவரை எல்லோருக்கும் தெரிந்திருக்காது. இந்த கலையை முழுமையாக தேடி அல்லது இந்த கலையை உள்வாங்கிக் கொண்டு, அது சார்ந்து பணிபுரிவர்களே இவரை அறிந்திருப்பார்கள். கடந்த 40-50 ஆண்டு கால ஹாலிவுட் சினிமாவை தொடர்ந்து பார்பவர்களுக்கும், இவர் யாரென்று தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பிருக்கு. ஆனால் இவரது பிம்பங்கள் (images) நிச்சயம் தெரிந்திருக்கும். ரே ஹேரி குறித்து எனது முதல் புத்தகத்திலும் எழுதியிருக்கிறேன். கடந்த 45 ஆண்டு காலமாக, என் நினைவில் பெரும்பாலும் இருப்பவர்.
|
அனிமேஷன் வரலாற்றுக்கும் டைனோஸர்ஸுக்கும் பெரிய தொடர்பு உண்டு. அனிமேஷனில் முதலில் தோன்றியது Mccayயின் டைனோஸர்ஸ் தான். ஒரு நாற்பது ஐம்பது வருடத்தக்குள் இந்த துறையில் செய்யப்பட்ட பல மாற்றத்திற்கும் படைப்புகளுக்கும் முக்கியம் காரணமானவர் ரே ஹேரி.இந்த மாதிரி படங்களை முதலில் எடுத்தவர் Willis O Brien. இது போன்ற படங்களுக்கு மிக பெரிய காரணகர்த்தாவாகவும், ஒரு ஆதர்ஷ நாயகனாகவும் இருந்தவர். சினிமா சரித்தரித்தில் மிக முக்கியமான திரைப்படமாகிய King Kong'ஐ எடுத்தவர். ரே ஹேரி லாஸ் ஏன்ஜெல்ஸ்ஸிலே பிறந்து வளர்ந்தவர். 12 வயதாக இருக்கும் போது, தானாக சில முயற்சிகளை எடுத்து படப்பிடிப்பு செய்து அதை Willis O Brien அவர்களிடம் காண்பித்தார். ரே ஹேரியின் திறமையையும் ஆசையையும் ஆர்வத்தையும் பார்த்து Willis O Brien தன்னுடன் அவரை சேர்த்துக்கொண்டார். அவரின் படங்களில் அஸிஸ்டண்டாக பல படங்கள் ரே ஹேரி பணி புரிந்தார். அதன் பின் பள்ளிகளுக்கு கதைகள் மூலம் கல்வி சார்ந்த பல படங்களுக்கு அனிமேஷன் செய்வதில் பணிபுரிந்தார். சினிமாவின் ஸெபஷல் எஃபக்ட்ஸ் பகுதிக்குள் மெல்ல நுழைந்தார். ஆரம்பத்தில் சிறு பகுதிகளை மட்டுமே செய்தவர், பிறகு தானே முன்னின்று முழுத் திரைப்படம் செய்ய ஆரம்பித்தார். கிரேக்க பழங்கதைகள் சார்ந்த படங்களை எடுத்து வந்தவர் எழுபதுகளின் இறுதியில் `Clash of titans` திரைப்படத்தை எடுத்தார். அவருடைய காலகட்டம் ஸ்டாப் மோஷனக்கு பொற்காலம். நமது ஆரம்ப கால கருப்பு-வெள்ளை படங்களில், கரடி பெண்ணாவதும், பெண் பாம்பாவதும், `கல்யாணம் சமயல் சாதம்` பாடலில் ரங்கா ராவ் சாப்பிடும் போது அவரின் வாய்க்குள் அனைத்தும் செல்லுவது போன்ற காட்சித் தொகுப்பு ஆகியவை ஸ்டாப் மோஷன் காட்சிகளாகும்.
|
அந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியெடுக்க வேண்டும் என்றால் கிட்டத்தட்ட 15 முதல் 20 நாட்களாகும். ஐந்து ஆறு பேர் சேர்ந்து தொடர்ந்து வேலை செய்ய வேண்டும், ஒவ்வொரு அசைவையும் மாற்றி அமைப்பது, ஒளி அளவு சரியான நிலையில் இருக்கிறதா என சரி பார்ப்பது, கேமராவை இயக்குவது என பல வேலைகள் இருந்தது. எந்த ஒன்றிலும் தவறு நடக்காமல் இருக்க வேண்டும். ஒரு ஓவியராக இருக்கும் பட்சத்தில் முதலில் கருவை (concept) ஓவியமாக வரைந்து விட்டு, அதன் பின் அசைவுகளை வைத்து ஸ்டோரி போர்ட் தயார் செய்வார்கள். அதன் பிறகு ஸ்டுடியோவில், miniature set (சிறிய அளவில்) காடு அல்லது வீடு அல்லது மரங்கள் கொண்ட காட்டில் டைனோ இருப்பது என தேவையானவையை செய்து வைத்து படப்பிடிப்பு செய்வார்கள். மனிதர்களும் இந்த காட்சியில் இடம்பெறுகிறார்கள் என்றால், முதலில் அவர்களின் காட்சிகளை எடுத்து அதை screen செய்ய வேண்டும், அதற்கு முன்பு miniature வைத்து இரண்டையும் இணைத்து படப்பிடிப்பு எடுக்கப்படும். 15-20 நாட்கள் செய்யும் வேலைகளில் ஏதேனும் தவறு நடந்தால் அதை உடனடியாக கண்டறிய அந்த காலக்கட்டத்தில் எந்த வழியுமில்லை, படப்பிடிப்பு முடிந்து டெவலப் செய்து திரையிடப்படும் போது தான் நாம் செய்த தவறு தெரியும். ஒரு தாய் பிரசவத்திற்கு காத்திருப்பது போல, அந்த 20 நாட்கள் காத்திருக்க வேண்டும்.
எழுபதுகளுக்கு பிறகு வந்த ஹாலிவுட்டின் இளம் கலைஞர்கள் ரே ஹேரியின் படங்களை பார்த்த பிறகு தான் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தனர். Stephen Spielberg, George Lucas மற்றும் பலர் இதில் அடங்குவார்கள். டிஜிட்டல் புரட்சிக்கு பின் அவர் கையாண்டு வந்த அனைத்து உத்திகளும் சற்று எளிமையானது. கேமரா பதிவு செய்ததை video tap மூலமாக monitor'க்கு வந்துவிடும். அங்கு அதை tape'இல் பதிந்து கொள்ளப்படும். 45 frame`கள் படப்பிடிப்பு செய்திருக்கிறோம் என்றால், அதை அப்போதே போட்டு பார்த்துவிடலாம். காட்சி எப்படி வந்திருக்கிறது என தெரிந்துக் கொள்ளலாம். இப்படியாக சிறு மாற்றங்கள் வந்தது. புதிய மென்பொருள்கள் வர ஆரம்பித்தது. Video Assist வந்த பின் ரே ஹேரி மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். எங்கள் காலத்தில் இப்படியில்லையே என்றார். தனது 85 வயதுவரை ஆர்வத்துடன் தொடர்ந்து இயங்கினார். விரிவுரைகள், இளம் கலைஞர்களை சந்திப்பது, புதிய தொழில்நுட்ப மாற்றங்களை பார்ப்பது அது குறித்து பேசுவது என தொடர்ந்து இயங்கினார். அவருடைய படங்களில் இருந்து பெரும் பகுதியை பயின்ற Denis Muren, Phil Tippett போன்ற இன்னும் பலரும் தான் ஆரம்ப கால Star Wars திரைப்படத்தில் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் பகுதியை செய்தவர்கள். இவர்கள் அனைவரும் ரே ஹேரியின் தாக்கத்தில், பிறகு பெரிய மாற்றங்களை செய்தார்கள். இன்னும் பணியை சுலபமாக்க பல மென்பொருள்கள் வந்தபின் ஸ்டாப் மோஷன் துறையில் பெரிய மாற்றங்கள் வந்துவிட்டது. பல படங்கள் ஸ்டாப் மோஷன் சார்ந்து வெளி வர ஆரம்பித்தது. ரே ஹேரி போலவே Jiří Trnka என்ற செக்கஸ்லோவேக்கிய அனிமேட்டர் ஐரோப்பாவில் சிறந்த பணியாற்றியுள்ளார். ஐரோப்பாவிலும் ஸ்டாப் மோஷன் சார்ந்து பல படங்களும் வெளிவந்திருக்கிறது.
|
கடந்த 50 ஆண்டுகளில் வெளியான அனிமேஷன் படங்களில் ரே ஹேரி அவர்களின் தாக்கம் இல்லாத படம் இல்லை என்றே நான் சொல்லுவேன். Building a mythical shot அல்லது இதுவரை நிதர்சனமான கண்களுக்கு பார்க்க முடியாத காட்சியை அசையும் படிமங்களாய் மாற்றும் தளத்தில் தொடர்ந்து பணி புரிந்தவர். கடந்த 30 ஆண்டுகளில் கேமரா மற்றும் ஹார்ட்வேர் சார்ந்து பல மாற்றங்கள் வந்தன, அதே போல் மென்பொருள் சார்ந்தும் பல மாற்றங்கள் வந்ததன, இவையாவும் ரே ஹேரி செய்த வேலைகளை இனி வரும் கலைஞர்கள் சுலபமாக செய்ய எளிமை படுத்துவதாகவே இருந்தது. இவரை தொடர்ந்து Denis Muren, Phil Tippett, Nick Park, Tim Burton, Jan Švankmajer இவர்கள் அனைவரும் ஒரே தளத்தில் வேலை பார்த்தவர்கள், இவர்கள் அனைவருக்கும் தலையாய ஒரு முக்கியமான மனிதராக ரே ஹேரி இருந்திருக்கிறார். ஹாலிவுட்டின் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் மற்றும் அனிமேஷன் கலைஞர்களுக்காக 80'களில் ஒரு சொஸைட்டி ஆரம்பித்தார்கள், அதற்கு இவரைத்தான் கெளரவ தலைவராக நியமித்தார்கள்.
குழந்தையை போல 85 வயதிலும் துறை சார்ந்த புதிய தொழில்நுட்பங்களை கற்பதிலும் அதில் இயங்குவதிலும் தன்னை ஆர்வமாக ஈடுபடுத்திக்கொண்டார். அவருடைய படங்களில் வந்த பூதங்களும், தலை மையிரெல்லாம் பாம்பாக காட்சியளித்த மிடா, பறந்து வரும் சாத்தான்கள் இவற்றை போல, வில்லன் கையில் மண்டையோடு வைத்திருப்பான்; அதிலிருந்து முத்துகள் போல மனித பற்கள் எடுத்து வீசுவான், அது சென்று விழுகிற இடத்திலெல்லாம் தீய கதாபாத்திரங்கள் வாளுடன் வந்து கதாநாயகனுடன் சண்டையிட வரும், இப்படியான காட்சிகளை மறக்கவே முடியாது. ஒரு படத்தில் இந்தியாவுக்குள் வருவது போன்ற ஒரு காட்சி வரும், அதில் கிட்டத்தட்ட நடராஜா உருவத்தை ஒரு மேற்கத்திய வடிவுடன் நான்கு கைகளுடன் வாளுடன் இறங்கி ஒரு இராடச்சன் போல கதாநாயகனை எதிர்த்து சண்டை போடுவது போன்ற காட்சி ஒன்றை அனிமேட் செய்திருப்பார். அவருடைய படங்கள் inanimateable object'ஐ animate செய்வதாக மட்டும் இருக்காது. அதற்குள் ஒரு உயிர்ப்பு இருக்கும். அது பப்பட்டோ ஆப்ஜக்டோ கிடையாது, அதற்குள் ஒரு human soul இருப்பது போன்ற ஒரு உயிர்ப்பை அவர் கொடுத்திருப்பதை நாம் உணரலாம்.
அவருடைய பெரும்பாலான படங்கள் இப்போது youtube'இல் இருக்கிறது, வளரும் கலைஞர்களுக்கு அவர் கொடுத்துவிட்டு சென்ற கொடை, அடுத்து வரும் நூற்றாண்டை தொடர்ந்து இருக்கும், அடுத்த பெரிய மாற்றங்கள், கதை சொல்லுகிற முறை, காட்சிப்படுத்துகிற முறை என எல்லாவற்றுக்கும் முன்மாதிரியாக இருக்கும். இப்போது, அவர் கையாண்ட உத்தியை பயன்படுத்தும் வசதியை IPhoneம் Ipadம் தருகிறது. நானும் எனது Ipadஇல் அந்த மென்பொருள்களை பயன்படுத்துகிறேன். சமீபத்தில் மிகவும் அரிதான் மென்பொருளான Dragon Frame`ஐ பயன்படுத்தினேன். அவர் செய்தது போல திரைப்பட முயற்சிகளை செய்வதற்கான எல்லா வாய்ப்புகளை அளிக்கிறது இம்மென்பொருள். எளிமையாக பயன்படுத்தும் விதத்திலும் உடனே டவுன்லோட் செய்து பயன்படுத்துவது போலவும் time lapse photography செய்யும் அல்லது ஸ்டாப் மோஷன் செய்கிற என பல வசதிகளை கொண்ட மென்பொருள்கள் பல வந்துவிட்டது, தற்போது, பள்ளி மாணவர்கள் பழகுவதற்கான முறையில் Iphone, Galaxy, Ipad மற்றும் இது போன்ற கருவிகளுக்கே மென்போருள்கள் இருக்கிறது.
மே 7ஆம் தேதி ரே ஹேரி மறைந்தார். 7,8,9 ஆம் தேதிகள் இணையத்தில் தொடர்ந்து அவர் குறித்த கருத்துகள், பதிவுகள் வந்துக்கொண்டே இருந்தது. உலகெங்குளிலும் மாபெரும் கலைஞர்கள், முன்னனி கலைஞர்கள், பள்ளி மாணவர்கள், தொடர்ந்து திரைப்படங்களை பார்த்திருந்த அல்லது இள வயதில் பார்த்திருந்த நினைவில் தங்களை பாதித்த முக்கியமான கலைஞர் என்ற முறையில் ரே ஹேரிக்கு tribute'ம் அவரை பற்றி சொல்வதும் அவரை நினைப்பதும் என இணையம் முழுவதும் மூன்று நாட்களாக இருந்தது. பலருக்கு அவரை பற்றி தெரியாது. தமிழ் சூழலில் அவரை பற்றி தெரிவதற்கான வாய்ப்பு மிக குறைவு. ஆனாலும் தமிழ் நாட்டில் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தவர்கள், இப்போது இருப்பவர்களில், குறிப்பாக இந்த துறை சார்ந்து இயங்குகிற கலைஞர்கள் அல்லது ஓவியர்கள் திரைப்பட தொழில்நுட்ப உத்திகளை ஊன்றி கவனிக்கும் ஒளிப்பதிவாளர்கள், சில இயக்குனர்களுக்கு மட்டுமே அவருடைய படங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அவர் படத்தை அல்லது அவருடைய படிமங்களை தெரிந்திருக்கும் அவருடைய பெயரை கேட்டிருக்க மாட்டார்கள், அவருடைய செயல் அவருடைய பங்களிப்பு பற்றி அவர்களுக்கு தெரிந்திருக்காது. ஆனால் அவரை தெரிந்திருக்காதவர்களையும் அடைந்த படங்கள் இவருடைய படங்கள். திரைப்பட வரலாற்றில், சினிமாவின் தூண் என கூறுவதென்றால் ஐவரை குறிப்பிடலாம். Georges Méliès, Eisenstein, Chaplin, Disney & Ray Harry. எல்லாவற்றையும் கூட்டி கழித்த பிறகு நிற்பவர்கள் இவர்கள் தான்.அதில் ரே ஹேரி மிக முக்கியமானவர்.
|
கடந்த 30 ஆண்டுகளாக, கணினி வந்த பிறகு அனிமேஷன் என்ற வார்த்தை மிகவும் பரிச்சயமான வார்த்தையாகி எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகி விட்டது. கணினியினால் சாதாரனமான எல்லோருக்கும் `அனிமேஷன்` சென்று சேர்ந்துவிட்டது. அதற்கு முன்பு அனிமேஷன் குறித்து பேசுபவர்களும் யோசிப்பவர்களும் மிக குறைவு. பார்ப்பார்கள் இரசிப்பார்கள் ஆனால் அதற்குள் இருக்கும் வலியும் அதற்குள் இருக்கும் பங்களிப்பும் அதிலிருக்கும் கலை திறமை பற்றி பொருட்படுத்த யாரும் இல்லை.உலக முழுவதிலும் அனிமேஷன் சார்ந்த குழுமம் ஒரு சின்ன கூட்டம் மட்டுமே ஆகும்.
உலகம் முழுவதிலும் என்னை போல என் வயதை ஒத்த கலைஞர்களில் நாங்கள் இயங்குகிற இந்த துறைக்குள்ளே நீக்கமற பரவியிருப்பது இந்த மாபெரும் கலைஞர்களுடைய படிமங்கள் தான். அது தான் ஒரு பெரிய இயக்கு சக்தியாக இருக்கிறது. கடந்த 45 வருடங்களில், எப்போதும் என் நினைவில் இரண்டு-மூன்று நாளுக்குள் ஒரு முறை நினைவில் வந்து போகிற மாபெரும் கலைஞர்களில் ரே ஹேரியும் ஒருவர்.
மொழியற்ற மொழி சினிமா என்றால், அதில் அனிமேஷன் தான் முன்னனி, பிறகு தான் மற்றவையெல்லாமாகும். தனித்த ஒரு கலைஞனின் முழு ஆளுமையுடன் நிறைவாக வருவதற்கான அனைத்து சாத்தியங்களும் இக்கலைவடிவிலேயே முழுமையாக இருக்கிறது. அதனால் அனிமேஷன் மிகவும் முக்கியமானது.
கார்ட்டூன் ஒரு வடிவம். ஸ்டாப் மோஷன் ஒரு வடிவம். முன்னது cartoon`களை அனிமேட் செய்வதாகும், பின்னது object'ஐ அனிமேட் செய்வதாகும். களி மண்ணில் பொம்மை (puppet) போல செய்து, ஒவ்வொரு அசைவையும் மாற்றி வைத்து ஒவ்வொரு ஃப்ரேமாக படப்பிடிப்பு செய்வதே ஸ்டாப் மோஷன் சினிமாவாகும். puppet (பொம்மை) அல்லது டைனோவோ அல்லது மனித உருவமோ அல்லது மிடா போன்ற பூதமோ கதைகளில் வரும் கதாபாத்திரங்களை எப்படி செய்வார்கள் என்றால், சிற்பத்திற்க்குள் skeleton (அமைப்பு) இருக்கும், அதன் தோல் பட்டையோ கையையோ தலையையோ திருப்பலாம். அது போல அடிப்படையிலே எலும்புகூடு போல ஒரு இரும்பு கம்பியாலே செய்யப்பட்ட ஒரு பகுதி அந்த பொம்மைக்கு உள்ளே இருக்கும். மேலே ரப்பரில் செய்த உருவம், இந்த armature’ஐ வைத்துக்கொண்டு அதற்கு மேலே களி மண்ணிலே ஒரு உருவத்தை செய்வார்கள். களி மண்ணில் செய்ததை மோல்ட் எடுத்து கொள்வார்கள், மோல்டு எடுத்ததில் ரப்பரை காய்ச்சி ஊற்றி, ரப்பர் உருவமாக்கி, அந்த உருவத்துக்குள் இந்த எலும்புகூடை அசைவதற்கான வசதி இருப்பது போல செய்வார்கள். இப்போது ரப்பருக்குள் இருக்கிற கம்பி கையை எப்படி திருப்பினாலும் திரும்பி நிற்கும், தலையை திருப்பினாலும் நிற்கும், காலை திருப்பினாலும் நிற்கும். ஒவ்வொரு ஃப்ரேமுக்கும் காலை நகர்த்தி வைக்க வேண்டும், கையை நகர்த்தி வைக்க வெண்டும், தலையை திருப்பி வைக்க வேண்டும், வாயை திறக்க வேண்டும், வாயை மூட வேண்டும். அதனுடைய இறக்கை இருந்தால் இறக்கையை ஒவ்வொரு ஷாட்டுக்கும் தனி தனியாஅ திருப்பி திருப்பி வைக்க வேண்டும். அதை ஒரு அனிமேட்டர் மாற்றி அமைப்பார். ஒரு தடவை அதை படமாக எடுப்பார்கள், பிறகு அதனுடைய positionஐ மாற்றுவார்கள், மறுபடியும் கேமராவில் ஓரிரு ப்ரேம்கள் எடுப்பார்கள். இப்படி தான் இந்த ஸ்டாப் மோஷன் படம் எடுக்கப்படுகிறது.
ரே ஹேரியை போன்ற அடுத்த கட்டக் கலைஞர்களாக Jan Švankmajer, அமேரிக்காவின் Quay Brothers என சிலரை சொல்லலாம். ரே ஹேரியின் pupetting மற்றும் படைப்புகளின் தொடர்ச்சியாய், time lapse photography மற்றும் ஸ்டாப் மோஷன் எல்லாம் கலந்த மாதிரியான ஒரு இடத்துக்கு பிறகு வரும் போது, 70களுக்கு பிறகு Jim Hensen என்ற ஒரு இயக்குனர் Muppeting என்று ஒன்றை செய்தார். அதாவது pupetting மற்றும் ஸ்டாம் மோஷன் எல்லாம் கலந்த மாதிரியான திரைப்பட வடிவங்கள் பல வந்தன. ஆனால் ஆரம்ப காலத்தில் கிங் காங் எடுத்த Willis O Brien'ம் அவருடைய சீடரான ரே ஹேரியின் படங்கள் தான் திரைப்பட சரித்தரத்தில் பெரியளவில் வியாபித்து அடுத்த கலைஞர்களை வழி நடத்துகிறது என்பதே நிதர்சனம்.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |