நாவலும் திரைப்படமும் -
எழுத்து திரைப்படமாகும் போது
ஒரு திரைப்படத்தைக் கொண்டு அதை உருவாக்கப் பயன்படுத்தப்படிருக்கும் நாவலை எடை போடதீர்கள் எனும் வாசகத்தை நீங்கள் படித்திருக்கக் கூடும். பிற கலைகள் போல அன்றி திரைப்படக் கலை தொழில் நுட்பம் சார்ந்தது. காமெராவால் பதிவு செய்யப்படுவது. இந்த ஒன்றிற்காகவே ஆரம்ப காலத்தில் திரைப்படக் கலையை இரண்டாம் தரக் கலையாக ஒரு சில கோட்பாட்டாளர்கள் நிறுவினர். திரைப்படக் கலையை இலக்கியத்துடன் ஒப்பிட்டுத் தரம் குறைந்த கலையாக, காமெரா கொண்டு வெறும் பிரதியெடுக்கும் கலையாக முன்வைத்தனர். அதற்கு எதிர் வாதங்களும் கோட்பாடுகளும் முன்வைக்கப்பட்டு திரைப்படக்கலைக்கு உண்டான சரியான மதிப்பு பெற்றுத்தரப்பட்டது. உலகெங்கும் இலக்கியம், கவிதை, தத்துவம், ஓவியம் எனப் பல்வேறு துறைகள் சார்ந்த அறிஞர்கள் திரைப்படக் கலையின் சாத்தியங்களை உணர்ந்து அதை ஒரு தனிக் கலையாக ஏற்றுக்கொண்டுள்ளனர். சினிமா அதற்கான தனித் தன்மைகள் கொண்ட கலை என்பது என்றோ நிறுவப்பட்டுவிட்டது. இந்த நூறு வருடங்களில் பல நூறு ஆண்டுகளாக இயங்கிவரும் இலக்கியம், ஓவியம் இசை போன்ற கலைகளின் வளர்ச்சியை எட்டிப்பிடித்துவிடும் வேகத்தில் திரைப்படக்கலை வளர்ந்து வந்திருக்கிறது.
ஆரம்ப காலம் முதலாகவே நாவல்களும் சிறுகதைகளும் திரைக்கதைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. புகழ் பெற்ற இலக்கிய மேதைகளின் படைப்புகள் முதல் சாதாரண பத்திரிகை சிறுகதைகள் வரை திரைப்படங்களாகப் பரிணமித்துள்ளன. நோபல் பரிசு பெற்ற ஜாண் ஸ்டீய்ன்பெக் போன்று இலக்கிய உலகைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர்கள் திரைப்படங்களின் கதை உருவாக்கங்களில் பங்காற்றியிருக்கின்றனர். 2012 இல் தீபா மேத்தா இயக்கத்தில் வெளிவந்த Midnight's Children திரைப்படத்தில் அந்த நாவலுக்காக புக்கர் பரிசு பெற்ற சல்மான் ருஷ்டி திரைப்படத்திற்குக் கதை வசனம் எழுதியிருப்பதுடன் அதன் கதைசொல்லியாக (narrator) பின்னணியில் பேசியிருக்கிறார். இவை உதாரணங்கள் தான். உலகெங்கும் இன்றுவரை திரைப்படமாக்கப்பட்டுள்ள நாவல்களும், சிறுகதைகளும் கணக்கிலடங்காது.
நாவல்கள் திரைப்படமாக்கப்படுவது அதிகமாக வழக்கிலிருப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. முக்கியமாக இரண்டைச் சொல்லலாம். மக்கள் தாங்கள் ஏற்கெனவே படித்திருக்கும் நாவலின் திரை வடிவத்தைக் காண ஆவலுடன் இருப்பது இயற்கையானது. படம் எடுப்பவரைப் பொறுத்தவரை நாவலின் கதை ஏற்கெனவே ஏழுதப்பட்டு முழுமையான வடிவத்திலிருப்பதும் ஒரு காரணம். . நாவலை திரைப்படமாக உருமாற்றுவதற்கு இயக்குநரின் திறமை பயன்படுகிறது. ஒரு நல்ல நாவல் மோசமான திரைப்படமாக அமையலாம். சாதாரண நாவல் மிகச் சிறந்த திரைப்படமாக உருவாகலாம். ஒன்றையொன்று மிஞ்சும் அளவு இரண்டும் செழுமையான அனுபவங்களை அளிப்பவைகளாகவும் அமையலாம்.
எழுத்துக்களாக வாசிக்கப்படுபவை மனதளவில் படிமங்களாகி காட்சிகளாக உணரப்படுபவை என்பதை நமது அனுபவத்தில் உணர்ந்திருப்போம். வார்த்தைகளின் வலிமை கொண்டு வாசகரைப் பார்க்கவும், கேட்கவும் அதையும் மீறிக் காணவும் செய்வது தனது எழுத்தின் கடமை என்கிறார் எழுத்தாளர் ஜோசப் கான்ராட். திரைப்படங்களைப் பொறுத்தவரை அவை பிம்பங்களைக் கொண்டு சொல்லப்படுபவை; நேரடியான பார்வை அனுபவத்தைத் தருபவை. இந்த இரு வகைப் பார்வைகள் குறித்த விவாதங்களும், உரையடல்களும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. நாவலைத் தழுவி திரைப்படம் உருவாக்கப்டுவதின் அனைத்து அம்சங்களையும் பற்றிய கருத்தரங்கங்கள் நடைபெற்றிருக்கின்றன, ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன; புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன.
ஒரு நாவலின் வாசிப்பு அனுபவத்தை திரைப்படத்தில் தேடினால் கிடைக்காது. எழுத்தும் திரைப்படமும் முற்றிலும் வெவ்வேறு தளங்களைச் சார்ந்தவை. அவை அளிக்கும் அனுபவங்களும் அவ்வாறானவையே. திரைப்படங்களாக நாவல்கள் உருமாற்றம் பெறும் போது அதற்கான மாற்றங்களைக் கதையில் கட்டாயம் செய்தே ஆகவேண்டும். எழுத்தில் சொல்லியிருக்கும் அனைத்தையும் படிமங்களில் கொண்டுவர இயலாது. படிமங்களைக் கொண்டு எழுத்தில் சொல்ல முடியாத ஒன்றை உணரவைக்க முடியும். இந்த வரம்புகளை மனதில் கொண்டு நாவலின் கதையிலிருந்து திரைப்படத்தை சிறப்பாக உருவமைப்பது இயக்குநரின் பொறுப்பாகிறது. எழுத்தில் சொல்லப்பட்டிருப்பவற்றில் முடியாதவற்றைக் குறைத்துவிடுவதும், அதிகப்படியாக சிலவற்றைச் சேர்த்துக்கொள்வதும் வழக்கமாக நிகழுபவை.
நாவலாசிரியரே திரைக்கதாசிரியராக இருக்கும் பட்சத்தில் கதையில் மாற்றங்களுக்கான முடிவுகளை எடுப்பதில் அதிகப் பிரச்சினைகள் எழுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அப்படி இல்லாத பட்சத்தில் நாவலைப் படமாக்க ஒப்பந்தம் செய்யும் பொழுதும், அதன் பிறகும் இயக்குநரும் எழுத்தாளரும் தேவைப்படும் மாற்றங்கள் பற்றிப் பேசி முடிவு செய்து கொள்ளலாம். அது முக்கியம். அப்படி இல்லையென்றால் அது பெரும்பாலும் எழுத்தாளருக்கும் இயக்குநருக்கும் இடையே கருத்து வேற்றுமையில் கொண்டு விட்டுவிடும். ஒருவர்மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டிருப்பதைத் தவிர்க்க முடியாது.
இயக்குநருக்குத் தனது படைப்பை உருவாக்குவதில் முழு சுதந்திரம் உண்டு என்பது அடிக்கடி வலியுறுத்திக் கூறப்படும் ஒன்று. இயக்குநர் தமது கற்பனை வளத்திற்கேற்ப தேவையான மாற்றங்களைக் கதையில் செய்வதை தவிர்க்க முடியதது. இயக்குநருக்குப் பொதுவாக சில தார்மீகப் பொறுப்புகள் உண்டு. சரித்திர நிகழ்வுகளையும், நடந்த உண்மைச் சம்பவங்களையும் கொண்டு புனைவாக எழுதப்பட்டுள்ள நாவலைப் பயன் படுத்துகையில் கதை நிகழ்வுகளின் அடிப்படை சிதையாது பாத்திரப்படைப்புகளின் தன்மை குறையது இயக்குநர் பார்த்துக் கொள்வது முக்கியம். பயன் படுத்தப்படும் கதை அல்லது நாவலின் ஆசிரியர் பெயரை படத்தில் வெளிப்படுத்தி மரியாதை அளிப்பது உலகெங்கிலும் நடைமுறையில் உள்ள வழக்கம். சில இயக்குநர்கள் இந்த அடிப்படை நாகரீகம் கூட அற்றவர்களாக இருப்பதைக் காண்கிறோம். படமெடுக்கப்பட்ட நாவலின் ஆசிரியர் அதற்கான ஆட்சேபணையை எழுப்பாதவரை இயக்குநருக்குப் பிரச்சினை இல்லை,
நாவல் அல்லது சிறுகதை எழுதியவர் அல்லது அதற்கான காப்புரிமை வைத்திருப்பவரின் ஒப்புதல் இன்றி திரைப்படங்கள் உருவாக்கப்படுவதும் அவ்வப்போது நிகழுவது. பெயரை மாற்றி, கதையில் மாற்றங்கள் செய்து திரைப்படமாக உருவாக்கிவிடுவார்கள். இது எப்படியும் வெளியில் தெரிந்துவிடும். தொடர்வது வழக்கு, பஞ்சாயத்து எனப் பல பிரச்சினைகள். சில நேரங்களில் இது படத்திற்குத் தடை விதிக்கப்படும் அளவு போய்விடும். நாவலாசிரியர்கள் தங்களின் படைப்புகளைத் திரைப்படமாக்க அனுமதி மறுப்பது உண்டு. அசோகமித்திரன் எழுதியிருக்கும் ‘தண்ணீர்’ நாவலைப் படமாக்க கேட்டபோது அவர் மறுத்து விட்டதை சமீபத்தில் ஒரு நேர்காணலில் சொல்லியிருகிறார்.
திரைப்படக்கலை வளர்ச்சிக்குப் பங்களித்த ஆளுமைகளான மூன்று மேதைகளின் அனுபவங்களை இங்கு பார்க்கலாம். ழான் பியரே மெல்வில் (Jean-Pierre Melville) பிரெஞ்சு திரையுலகின் முக்கியமான முன்னோடி. பிரெஞ்சு புதிய அலை இயக்குநர்களின் ஆசானாகத் திகழ்ந்தவர். ழான் லுக்-கொதாரின் முதல் திரைப்படம் Breathless (1960) இல் நாவலசிரியராகத் தோன்றும் இவரை நீங்கள் பார்த்திருக்கலாம். 1945 இல் தனது முதல் திரைப்படத்தை இயக்க முடிவு செய்த மெல்வில் ஜெர்மனியின் ஆக்கிரமிப்புக் காலத்தில் இயங்கிய பிரெஞ்சு விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த வோர்காஸின் Le Silence de la Mer நாவலைத் திரைப்படமாகக விரும்பினார். மெல்விலும் அந்த இயக்கத்தின் முன்னணி உறுப்பினராக இருந்தவர். முதலில் அனுமதி கிடைக்கவில்லை. கதையின் கருத்தையும் அழகையும் திரைப்படம் சிதைத்து விடும் எனக் கருதிய அந்த நாவலாசிரியர் ஒத்துக்கொள்ளவில்லை.
|
மெல்விலால் திரைப்படமாக்க முடியாது என ஆசிரியர் கருதியதற்கு காரணமுண்டு. Le Silence de la Mer படிப்பதற்கு அற்புதமான, ஆனால் திரைப்படமாக்குவதற்கான அடிப்படைகள் அற்ற நாவல். நாவலின் கதை நாற்பதுகளில் நாஜி ஜெர்மனி, பிரான்ஸை ஆக்கிரமித்திருந்த நேரம் நடைபெறும் நிகழ்ச்சிகளைக் கொண்டு புனையப்பட்டிருப்பது. பிரெஞ்சு முதியவர் ஒருவர் மகளுடன் வாழும் வீட்டின் ஒரு பகுதி ஜெர்மனிய ராணுவ அதிகாரி வெர்னர் தங்குவதற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. மூன்று பாத்திரங்களைக் கொண்ட இந்தக்கதையில் வெர்னர் மட்டும் முதியவரையும் மகளையும் சந்திக்கும் போதெல்லாம் பேசிக்கொண்டிருப்பார். பெரியவரும் மகளும் ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை. இறுதியில் வெர்னர் அங்கிருந்து விடைபெறும் தருணம் சென்றுவருங்கள் என அந்தப் பெண் ஒரு வார்த்தை பேசுகிறாள்.
|
திரைப்படத்திற்கு அவசியம் எனக் கருதப்படும் விறுவிறுப்பான திருப்பங்களோ, நிகழ்வுகளோ இல்லாத கதை. சிறு தவறும் இப்படத்தை நாஜிகளுக்கு சாதகமானதாகவோ அல்லது விடுதலைப் போரைக் கொச்சைப்படுத்துவதாகவோ ஆக்கிவிடும். மெல்வில் தொடர்ந்து பேசி ஆசிரியரின் சம்மதத்தைப் பெற்றார். ஆனால் அதற்காக அந்த ஆசிரியர் விதித்த கண்டிப்பான நிபந்தனைகளை ஏறுக்கொள்ள வேண்டியதிருந்தது. திரைப்படம் எடுத்து முடித்தபின் முதல் பிரதியை வோர்காஸுடன் முன்னாள் பிரெஞ்சு விடுதலை இயக்கத் தலைவர்கள் அடங்கிய குழு திரையிட்டுப் பார்த்து என்ன முடிவை எடுக்கிறார்களோ அதை அவர் நிறைவேற்றியாக வேண்டும். சரி என்றால் திரையிடலாம். இல்லை என்றால் நெகட்டிவையும் அந்தப் பிரதியையும் அழித்துவிட வேண்டும்.
மிகுந்த சிரமங்களுக்கிடையே படமெடுக்க வேண்டியதிருந்தது. பிலிம் வாங்குவதற்குக் கூட பணமில்லை; யூனியன் அங்கத்தினராக முடியவில்லை. சேர்த்துக்கொள்ள மறுத்த யூனியனைப் புறக்கணித்துவிட்டுத் தானே திரைப்படத்தை உருவாக்கத் துவங்கினார். இறுதிவரை மெல்வில் தனியாகவே திரைப்படங்களை இயக்கி தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எப்போது கையில் பணமிருக்கிறதோ அப்போதெல்லாம் படப்பிடிப்பு நடக்கும். ஒரு சவாலாகவே இப்படத்தை எடுத்து அதில் வெற்றியும் பெற்றார். சிறப்பாக முற்றுப்பெற்ற திரைப்படத்திற்கு ஆசிரியர் வோர்காஸும் அவர் குழுவும் அனுமதி அளித்தனர். Le Silence de la Mer இன்றும் பேசப்படும் ஒரு அற்புதமான திரைப்படம். மெல்விலின் பெயர் ஐரோப்பிய திரையுலகில் மரியதையுடன் எதிர் கொள்ளப்பட இப்படம் காரனமாயிற்று. கார்ள் தியொடோர் ட்ரையர், ராபர்ட் ப்ரெஸ்ஸோன் போன்ற ஆளுமைகள் இவரை வெகுவாகப் பாராட்டினர்.
அனுமதியுடன் எடுக்கப்படும் போதே இத்தகைய நிபந்தனைகளை படைப்பாளி எதிர்கொள்ள வேண்டிய நிலை எனும்போது அனுமதி இல்லாமல் ஒரு நாவலைத் திரைப்படமாக எடுத்தால் என்ன ஆகும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. திரைப்படக் கலையை முன் கொண்டு சென்ற முன்னோடிகளில் முக்கியமானவர் ஜெர்மனிய இயக்குநர் F.W மொர்னவ். காமெராவை அதன் கட்டுகளிலிருந்து ‘விடுதலை’ (unchain) செய்தவர் எனப் புகழப்படுபவர். இன்று வரை பல முக்கிய படைப்பாளிகளின் ஆதர்ஷ இயக்குநராகத் திகழுபவர். 1922 இல் உலகின் முதல் டிரகுலா திரைப்படமான ‘நோஸ்பராத்து, திகிலின் உன்னத இசை’ (Nosferatu, a Symphony of Horror ) திரைப்படத்தை இயக்கி அளித்தவர்.
|
புகழ் பெற்ற டிரகுலா நாவலை திரைப்படமாக்க மொர்னவ் முடிவு செய்த நேரத்தில் அதன் ஆசிரியர் ப்ராம் ஸ்டோக்கர் உயிருடன் இல்லை. காப்புரிமையை வைத்திருந்த அவர் மனைவி நாவலைப் படமாக்க அனுமதி மறுத்துவிட்டார். பலவாறு முயன்று பர்த்த மொர்னவ், இறுதியில் வேறு பெயரில் அக்கதையைப் படமாக்க முடிவு செய்தார். டிரகுலா கதை சில மாற்றங்களுடன் Nosferatu, a Symphony of Horror என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து முடிக்கப்பட்டது. மொர்னவின் மேதமையை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக உருவான திரைப்படம்.
|
டிரகுலா நாவலின் பெயர் மட்டுமன்றி வேறு மாற்றங்களும் செய்யப்பட்டன. ’நொஸ்பராத்து’ கதையின் பின் பகுதி முழுவதும் ‘டிரகுலா’ நாவலிலிருந்து வேறுபடுகிறது. இதயம் ஆழமாகக் குத்தப்படுவதால் டிரகுலா அழிக்கப்படுவதாக நாவலில், எழுதப்பட்டுள்ளது. இப்படத்தில் அதிகாலை விடியும் நேரம் சூரிய ஒளி பட்டு நோஸ்பராத்து அழிவதாகக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் ப்ராம் ஸ்டோக்கரின் மனைவி அதை விட்டுவிடவில்லை. வழக்குத் தொடர்ந்தார். வழக்கின் தீர்ப்பின்படி அனைத்து ‘நொஸ்பெராத்து’ திரைப்படப் பிரதிகளும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. நல்ல வேளையாகச் சில பிரதிகள் அழியாமல் தப்பித்தன. அவற்றைக் கொண்டு மறு பதிவு செய்யப்பட்டு ‘Nosferatu,” திரைக் காவியம் இன்று நமக்கு பார்க்கக் கிடைக்கிறது. திரைப்பட ஆர்வலர்கள் கட்டாயம் காண வேண்டிய ஒரு திரைப்படம். ஜெர்மனிய திரைப்பட மேதை வெர்னர் ஹெர்ஸாக் 1979இல் இயக்கிய Nosferatu the Vampyre திரைப்படத்தை அவரது ஆத்மார்த்த இயக்குநர் மொர்னவுக்கு அஞ்சலியாக சமர்ப்பித்திருக்கிறார்.
ரஷ்ய திரைப்பட மேதை ஆந்த்ரேய் தார்க்கோவ்ஸ்கி இயக்கியிருக்கும் திரைப்படங்கள் ஏழு. ஏழும் இந்த மாபெரும் கலைஞனின் தனித்துவமான கலை ஞானத்தை வெளிப்படுத்தும் அற்புதமான படைப்புகள். அவரின் முதல் முழு நீளத் திரைப்படம் ‘Ivan's Childhood’ ஜெர்மனிக்கும் ரஷ்யாவுக்கும் நிகழும் போரில் அனாதையாக்கப்பட்ட சிறுவன் இவான் பற்றிய கதை.
விளாடிமிர் பொகொமொலோவ் எழுதிய ‘இவான்’ நாவலின் திரைப்பட வடிவம். தார்க்கோவ்ஸ்கியின் பர்வையில் இந்தக்கதை அதை எழுதிய ஆசிரியர் பர்வையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது. மனிதம், அன்பு, கருணை என தார்க்கோவ்ஸ்கி இயங்கும் தளம் வேறு. நடந்து கொண்டிருக்கும் போரைக் காட்டாது சிறுவன் இவானின் மனநிலையைக் கவிதையாக வெளிப்பத்டுதுகிறார். நான்கு கனவுக் காட்சிகள் படத்தின் மைய ஓட்டத்துடன் இணைகின்றன. மூலக்கதையில் இல்லாத இக்கனவுப்பகுதிகள் திரைப்படக் கல்லூரி நண்பரும் இயக்குநருமான கான்ச்சலோவ்ஸ்கியுடன் இணந்து அவர் எழுதியவை.
|
ரஷ்யாவில் அப்போது ஸ்க்ரிப்டை முதலிலேயே சமர்ப்பித்து அனுமதி பெறவேண்டும், பிறகு ஸ்க்ரிப்டில் செய்யப்படும் ஒவ்வொறு மாற்றத்திற்கும் அனுமதி பெறவேண்டும். படம் முடிந்தபின் உயர் அதிகாரிகளால் பார்க்கப்பட்டு அனுமதி பெற்ற பின்னரே திரையிட முடியும். மூலக்கதைப்படி போரைப் படத்தில் காட்டாததற்கும், கனவுக்காட்சிகளுடன் மேலும் சில கட்சிகள் இணைகப்படிருந்ததற்கும் படத்தின் ஆசிரியரும் அனுமதி குழுவைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் பலத்த ஆட்சேபங்களை எழுப்பினர். இப்படத்திற்கு அனுமதி அளிப்பதற்காக பதிமூன்று ஆலோசனைக் கூட்டங்கள் நடந்ததாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது . ஒருவழியாக இறுதியில் திரையிட அனுமதி பெற்று வெனிஸ் திரைப்பட விழாவில் தங்கச் சிங்கம் பரிசு பெற்றது. சோவியத் சினிமாவில் நிகழ்ந்த முக்கிய திருப்பமாகக் கருதப்படுவது.
|
நாவலாசிரியருடன் மீண்டும் கடுமையான கருத்து வேறுபாடுகளுக்கு தார்க்கோவ்ஸ்கியை இட்டுச்சென்ற திரைப்படம் சோலாரிஸ் ( 1972). போலந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டானிஸ்லா லெம் எழுதிய அறிவியல் புனைகதை நாவல் சோலாரிஸ். திரைக்கதை உருவாகத்திற்காக லெம் ஆறு மதங்கள் மாஸ்கோவில் தங்கியிருந்தார். தார்க்கோவ்ஸ்கி விரும்பிய படி மாற்றங்கள் செய்ய மறுத்தார். இருவருக்கும் விவாதங்கள், சண்டைகள் என அது ஒரு கசப்பான அனுபவமாக முடிந்தது. விண்ணை நோக்கிய லெம்மின் அறிவியல் அடிப்படை பார்வைக்கு நேர் எதிரன பார்வை தார்க்கோவ்ஸ்கியுடையது. அவருடையது மண்ணை நோக்கிய மனிதத்தின் பார்வை. தார்க்கோவ்ஸ்கி தனது கலையுணர்வை வெளிப்படுத்துவதில் எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடாத ஒரு உண்மையான கலைஞன். லெம்மின் எதிர்ப்பையும் விமரிசனங்களையும் மீறி அவர் விரும்பிய மாற்றங்களுடன் சோலரிஸை உருவாக்கினார். ரஷ்யாவில் அவர் இறுதியாக இயக்கிய ஸ்டாக்கர் (Stalker) மற்றொரு அறிவியல் புனைவு திரைப்படம். ஸ்ட்ருகாஸ்கி (Strugatskiy) சகோதரர்கள் எழுதியிருக்கும் Roadside Picnic என்ற நாவலைக் கொண்டு ஸ்டாக்கர் உருவானது. தார்க்கோவ்ஸ்கியின் திறமையைப்பற்றி அறிந்திருந்த இந்த நாவலாசியர்கள் தார்க்கோவ்ஸ்கியிற்கு எவ்வித பிரச்சினையையும் உருவாக்கவில்லை.
|
தார்க்கோவ்ஸ்கி ’Sculpting in Time ‘ நூலில் இலக்கியத்தையும் திரைப்படக் கலையையும் பற்றிய தனது தெளிவான கருத்துக்களை முன்வைக்கிறார் திரைப்படத்தில் படைப்புத்திறனை வெளிப்படுவதற்கான பொறுப்பை இறுதியில் ஏந்தி நிற்பது இயக்குநர் என்ற ஒரே ஒருவர் தான். இயக்குநரும், ஸ்கிரிப்ட் எழுதுபவரும் வேவ்வேறு நபர்களாக இருக்கும் பட்சத்தில் இவர்களிடையெ தீர்க்கமுடியாத பிரச்சினைகள் உருவாகுவது தவிர்க்க முடியாதது என்று சொல்கிறார். இலக்கியம் திரைப்படத்தை விட்டு முற்றிலுமாக விலகி நிற்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார்.
திரைப்படங்கள் உள்ளவரை நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படமாகிக்கொண்டுதான் இருக்கும். எழுத்தாளர், இயக்குநர் என்ற இரு படைப்பாளிகளுக்குள்ளும் இதற்கான கருத்து வேற்றுமைகளும் அவ்வப்போது உருவாகிக்கொண்டுதான் இருக்கும். ஏனெனில் ஒரு நாவலுக்கான அதே கூறுகளைக் கொண்டு ஒரு இயக்குநர் திரைப்படத்தை உருவாக்க மாட்டார், அவருக்கான வேறு பார்வையை அவர் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியது, இருந்தும் எழுத்தாளர் கட்டாயம் இயக்குநருடன் கருத்து வேறுபட்டுத்தான் ஆகவேண்டும் எனபதில்லை. ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கியின் The Lower Depths பிரான்ஸின் புகழ் பெற்ற இயக்குநர் ழான் ரென்வாரால் திரைப்படமாக உருவாக்கப்பட்ட போது அவர் அதன் கதையில் மாறுதல்கள் செய்தது மட்டுமல்லமல் அந்த ஸ்க்ரிப்டையும் மாக்ஸிம் கார்க்கிக்கு அனுப்பிவைத்தார். மாக்ஸிம் கார்க்கி அதைப் பாராட்டியதுடன் அந்தத் திரைப்படத்தை அனைவரும் காணுமாறு பரிந்துரைத்தார். இவ்வாறான சுமுகமான சூழ்நிலைகளில் இரு துறைகளைச் சேர்ந்த படைப்பாளிகள் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் இயங்குவது சிறப்பானது.
http://konangalfilmsociety.blogspot.in/
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |