இதழ்: 7, நாள்: 15 - ஆனி -2013 (June)
   
 
  உள்ளடக்கம்
 
உயிர் கொடுக்கும் கலை 4 - ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
தென்மேற்கு பருவக் காற்று – புதிய முயற்சிகளில் ஒன்று - வெங்கட் சாமிநாதன்
--------------------------------
திரைமொழி 5 - ராஜேஷ்
--------------------------------
கடவுளரின் தலையீடு : கனவும் யதார்த்தமும் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
நண்பரும் தோழருமான மணிவண்ணன் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
நாவலும் திரைப்படமும் - எழுத்து திரைப்படமாகும் போது - எஸ். ஆனந்த்
--------------------------------
அன்பைத் தேடி ஒரு தப்பித்தல் - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
குறும்பட இயக்குனர் பாலாஜி சுப்பிரமணியன் உடன் ஒரு நேர்காணல் - சுரேஷ் சுந்தர்
--------------------------------
இலங்கை திரைப்பட இயக்குநர் - பிரசன்ன விதானகே - விஸ்வாமித்ரன்
--------------------------------
தமிழ் ஸ்டூடியோவின் 54ஆவது குறும்பட வட்டம் - தினேஷ்
--------------------------------
ரிதுபர்னோ கோஷ் - மாற்றம் தந்த இயக்குனர் - அருண் மோ.
 
 
   
   


தமிழ் ஸ்டூடியோவின் 54ஆவது குறும்பட வட்டம்

- தினேஷ்



தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவைக் கொண்டுவரும் முயற்சிகளின் தொடர்ச்சியாக தமிழ் ஸ்டூடியோவின் 54 ஆவது குறும்பட வட்டம் சனிக்கிழமை (08.06.2013) மாலை 6 மணியளவில் ஜீவன ஜோதி அரங்கில் நடந்தேறியது. இந்நிகழ்வில் ரசிகர்களின் ரசனைக்குத் தீனி போடும் வகையிலும், மாற்று சினிமாவிற்கான மிகச்சரியான உதாரணமாக கடந்தகாலமும், எதிர்காலமும் சுட்டிக்காட்ட தகுதியான படமான ஆப்பிரிக்க கண்டத்தின், “yesterday”, திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டது. நிகழ்ச்சியை இத்தோடு முடித்துக்கொள்ளாமல் பாலாஜி சுப்ரமணியத்தின் படைப்பான “14/6” குறும்படமும் திரையிடப்பட்டு விவாதிக்கப்பட்டன. இதனை சிறப்பிக்கவே படத்தொகுப்பாளர் பீ.லெனின் அன்போடு அழைத்த, அழைப்பிற்கேற்ப நிகழ்விற்கு வந்து, தற்கால தமிழ்சினிமாவிற்கெதிரான காரசாரமான பேச்சினையும், இருபடங்களுக்குமான தனது கருத்தினையும் பார்வையாளர்கள் முன்னிலையில் பதிவுசெய்தார்.

இவ்விரு திரைப்படங்களைப்பற்றியும், இதற்கு பார்வையாளர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பும், கருத்துக்களும், விவாதங்களையும் காண்போம்.

தமிழ்ஸ்டூடியோ அருண் அவர்களின் வரவேற்புரை:

நீங்கள் வீட்டிலிருந்தபடியே குறும்படங்களையோ, அல்லது “yesterday”, மாதிரியான படங்களையோ யூ ட்யூப் உதவியுடன் பார்த்துக்கொள்ளலாம். ஆனால், இந்த மாதிரியான ஒருமித்த சினிமா ஆர்வலர்களுக்கு மத்தியில் ஒரு படத்தினை திரையிட்டு பேசுவதில் இருக்கும் அனுபவம் சாலச்சிறந்தது,. இக்காலகட்டத்தில் 2 மணிநேர படத்தினை உட்கார்ந்து பார்க்கக்கூட பொறுமையில்லையில்லாமல் படித்து தெரிந்துகொள்கின்றனர். படித்தால் அது 15 நிமிடங்களுக்குள் முடிந்துவிடுமென்பது சிலரது திண்மையான எண்ணம். படத்தைப்பற்றி படிக்காதீர்கள், பாருங்கள். காட்சி ஊடகமான சினிமாவை எப்படி படித்து தெரிந்துக்கொள்ள இயலுமென்று தெரியவில்லை. எனவே பொறுமையாக முதலில் இந்தபடத்தை பாருங்கள். ஏனெனில் இது மிக முக்கியமான படம்.

இச்சிற்றுரைக்குப்பின், முதலாவதாக ஆப்ரிக்கத்திரைப்படம் “yesterday” திரையிடப்பட்டது.

(மேலே குறிப்பிட்ட வார்த்தைகளின் வீரியத்தை ஆமோதிப்பதுபோல இப்படத்தைப் பற்றிய கதை இங்கு குறிப்பிடப்படவில்லை, இக்கட்டுரையை வாசிக்குமுன் படத்தை ஒருமுறையேனும் பார்த்துவிட்டால், பார்வையாளர்கள் சொன்ன கருத்துக்களோடு உங்கள் கருத்துக்களையும் சற்றுப் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.) குறும்பட வட்டத்தில் எப்பொழுதுமே ஒரு படத்தினை திரையிட்டு, அந்தப்படம் முடிந்தவுடனேயே அதனைப்பற்றிய கருத்துக்கள் உடனக்குடன் பரிமாறப்படும். ஆனால் நம் ரசிகப்பெருமக்கள் படம் முடிவுற்ற அடுத்தகணமே அரங்கத்தை விட்டு கலைய ஆரம்பித்துவிட்டனர் எனினும் நம் நோக்கம் அதுவல்லவே. எனவே தமிழ் ஸ்டூடியோ அருண் குறுக்கிட்டு, ” இந்த படம் முடிந்தவுடன், இப்படத்தின் உருவாக்கம்(making) இணைக்கப்பட்டிருக்கின்றது, அதனை ஒளிபரப்பும் முன் பின்னால் 3பேர் கலைந்து சென்றுவிட்டனர். அந்த மேக்கிங்க் வீடியோ போடலாமா, வேண்டாமா” என்றதற்கு பார்வையாளர்கள் அனைவரும் படம் ஏற்படுத்திய தாக்கத்தில் அது எவ்வாறு எடுக்கப்பட்டிருக்கின்றது என்பதனை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் “அவசியம், கண்டிப்பாக ஒளிபரப்பலாம்”, என கூறியவுடன் வெளியே சென்ற நண்பர்கள் மீண்டும் அரங்கத்தில் அமர்ந்துகொண்டனர். பின்னரே yesterday மேக்கிங் வீடியோ திரையிடப்பட்டது. ஆனால் எப்பொழுதும்போல இன்று படம் பற்றியதான கருத்துக்கள் உடனடியாக கேட்கப்படவில்லை.

ஏனெனில் நிகழ்வு தொடங்க காலதாமதம் ஆன காரணத்தினால் கருத்துகளுக்கான நேரம் ஒத்திவைக்கப்பட்டு, “14/6”குறும்படம் திரையிடப்பட்டது.

கிறிஸ்துவ தேவாலயத்தின் வாசலில் அனாதையாக விடப்பட்டிருக்கும் குழந்தையை பாதிரியார் எடுத்து வளர்த்து “சிலுவை”, எனப்பெயரிடுகின்றார். பிறந்தது முதலே தேவாலயத்துக்குள்ளேயே வாழ்ந்த ஒருவன், அதனிலிருந்து வெளியேறியவுடன் உலகமானது சூன்யமாக தெரிய வாழ்க்கையின் கோரப்பிடியில் சிக்கி சேரிப்பகுதியில் வாழ்க்கை நடத்தி கொலை கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபடுகின்றான். அதே சமயம் சிலுவைக்கு எதிரிகளால் ஆபத்து ஏற்படுகின்றது. அவனைக் கொல்ல எதிரிகள் துரத்துகின்றனர். ஆனால் சிலுவை அவர்களிடமிருந்து தப்பித்து இரத்த தான முகாம் நடக்குமிடத்திற்குள் நுழைந்துவிடுகின்றான். உடனே வெளியே சென்றால் எங்கே தனக்கு ஆபத்து நேரிடுமோ என்றஞ்சி, நடந்துகொண்டிருக்கும் முகாமில் பங்கெடுத்துக்கொண்டு ரத்தம்கொடுக்கின்றான். அது ab-ve இரத்த வகை.

பின்னர் எதிரிகளால் சிலுவை கடுமையாக தாக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அரிதான (ab -ve) வகை ரத்தம் கிடைக்க சிரமம் என மருத்துவர் சொல்கின்றார். பின்னரே மருத்துவர் சிலுவையின் முகத்தினைப் பார்க்கின்றார், அவன் காலையில் கொடுத்த ரத்தமேயிருக்கின்றது, அதனைவைத்து இவனைக் காப்பற்றிவிடலாம் என அந்த ரத்தமே இவனுக்கு கொடுக்கப்பட்டு சிலுவை காப்பாற்றப்படுகின்றான், இதனால் அவன் மனம்திருந்தி வாழ்வில் நல்ல மனிதனாக வாழ்கின்றான்.

வெகுஜன மக்கள் எவ்வாறு படம் பற்றிய புரிதலை அகத்துள்ளே கொண்டுள்ளனர் என்பதனை அறிந்துகொள்வதற்காக, அவர்களின் கருத்துக்களுக்கு பின்பே லெனின் பேச ஆசைப்பட்டார். எனவே இவ்விரு படங்களைப் பற்றியும் பேச, பார்வையாளர்கள் ஒவ்வொருவராக வரும்படி தமிழ்ஸ்டூடியோ அருண் அவர்களால் அழைக்கப்பட்டனர்.

முதலில் “yesterday” திரைப்படம்.

தமிழ் பிரபா:
இந்த படத்தைப்பத்தி என்னோட கருத்து, ஆப்பிரிக்க நாட்டில் எய்ட்ஸின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். ஆனால், அங்கேயும் மக்கள் இந்நோயினைப் பற்றிய புரிதல் இல்லாமல், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைத்திருப்பார்கள் என்பதனை நம்புவது சிரமமான விஷயம். ஏனெனில் எப்படியும் அங்கு வாழ்பவர்களுக்கு அந்நோய் பற்றிய விழிப்புணர்வு கண்டிப்பாக இருக்க சாத்தியமுண்டு. அவர்களும் இப்படி நடந்துகொள்வதென்பது நம்ப தகுதியாகயில்லை. இம்மாதிரியான சில விஷயங்களே செயற்கைத்தனமாக காணப்படுகின்றது.

பத்மநாபன்:
இங்கு நாம் பார்த்த ”yesterday” படம் போலவே, தமிழிலும் “மிருகம்” என்றொரு படம் வந்திருக்கின்றது. ஆனால் அப்படம் தமிழ்சினிமாவிற்கேற்றவாறு அனைத்து மசாலாக்களையும் தாங்கி வந்திருக்கும். ஆனால் இந்தப்படத்தில் மசாலா சமாச்சாரங்களற்ற நேர்த்தி காணப்படுவதால் முழுமையான உணர்ச்சியினை நமக்கு கடத்துகின்றது.

மேலும், இந்த படத்தில் வரும் நான்கு ஷாட்ஸ் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
1.) அந்தப் பெண் முதன்முதலாக கணவனைப் பார்ப்பதற்காக நகரத்திற்கு வருவாள். அங்கு வந்து பரவலான, பலதரப்பட்ட மக்கள் காணப்படுவார்கள் என்பதனைக்குறிக்க முதலில் சனக்கூட்டத்தின் நிழலை காட்சிப்படுத்திய பின்பு, மக்களின் அசைவுகள் காண்பிக்கப்படும்.
2.) பின்பு அந்தப்பெண் தன் மகளுடன் சாலையில் வந்துகொண்டிருக்கும்பொழுது, சாலையின் கீழிலிருந்து வேன் ஒன்று வேகமாக புழுதி பறக்க வந்து இவர்களை கடந்து செல்லும்பொழுது ஏற்படும் புழுதியினால் திரை முழுவதும் மறைக்கப்பட்டு அடுத்த காட்சி ஆரம்பமாகும்.
3.) வீட்டைக்கட்டி முடித்தவுடன் கணவனை வீட்டிற்கு கைத்தாங்கலாக அழைத்து வருகின்றாள். ஆனால் அந்த வீட்டினுள் அந்த கதவு மட்டுமே வெண்மையாகயிருக்கும். மற்ற அனைத்துமே கரும்படலம்தான். இதனை காமிராவில் பதிவு செய்து புதுவித அனுபவத்தை நமக்கு காட்சிப்படுத்துகின்றனர்.
4.) கடைசி ஷாட்டில் அந்தப் பெண் தனியாக திரும்பி செல்லும்பொழுது கேமிரா கொஞ்சம் கொஞ்சமாக மேலெழும்பி இன்னும் எவ்வளவு தொலைவு இவளது பயணம் இருக்கும் என்பதனை காண்பித்ததோடு படம் முடிவது சிறப்பு.

இன்னொரு விஷயம் சொல்லவேண்டுமானால், இந்த ஊரில் ஆண்கள் யாருமேயில்லை. அதாவது இங்கு வசிக்கும் ஆண்கள் அனைவருமே வெளியூர்களில் வேலைக்கு செல்பவர்கள் என்பதனை கதையின் போக்கில் சொல்லியிருக்கின்றனர்.

வேல்கண்ணன்
முதல்ல பேசுன நண்பர் சொன்னார், ஆப்பிரிக்கால எய்ட்ஸ் பத்தின விழிப்புணர்வு இல்லையானு. ஆனா தமிழ்நாட்டுல என்னோட நண்பர் ஒருத்தர் இறந்துபோனார், இதே எய்ட்ஸ் நோயால தான். எனது அப்பாவே என்னை மருத்துவமனைக்கு கூப்பிடவேயில்லை. ”என்னப்பா ஆச்சு ஃபிரண்டுக்கு”, அப்படீன்னு கேட்டா, “அது ஒண்ணுமில்லடா டி.பி”, அப்படீன்னு சொல்லி சமாளிச்சுடுவாங்க.
அப்புறம் நானா உண்மையை தெரிஞ்சுகிட்டு அவன பார்க்க போகும்போது, எங்கப்பா என்னையவே “வேணாம்டா, அவன பாக்க வேணாம், அது தொத்து வியாதி”, அப்படீன்னு தடுத்தாரு.
நண்பன் செத்த பிறகு அவன அடக்கம்செய்ய மூன்றே பேருதான் இருந்தோம். வழக்கமாக நாலு பேருனுதான் சொல்வாங்க, ஆனா இங்க அது கூட இல்லை. எய்ட்ஸ் நோயாளிகள வச்சிருக்கிற இடமே ரெம்ப கொடுமையாக இருக்கும். அந்த வார்டுக்கு போகும் பயணமே துர்பாக்கியமானது. நண்பனை எரிக்கும்போது வேன் டிரைவர்கூட உதவி செய்யல. நாங்களேதான் இறக்கினோம். ஏன் வெட்டியானே கிட்டவரல. அவரே ஒண்ணுமே புரியாம பயப்படறாரு. மருத்துவமனையிலிருந்து பிணத்த வாங்கிறதே பெரிய போராட்டமா இருந்துச்சு.

இந்தப் படத்தை பார்க்கும்பொழுது என் நண்பனோட ஞாபகம்தான் வந்துச்சு.

பின்னர், ”பெண்களுக்கான வலி” அதாவது, அந்தப்பெண் கணவனிடம் எய்ட்ஸ் பற்றிய உண்மையை சொல்லும்பொழுது, கணவன் நம்பாமல் அந்தப்பெண்ணை போட்டு அடிக்கின்றான். ரூமிற்குள் இருப்பவரும்(ஆண்) அதனை திரும்பி பார்த்து சகஜ நிலைக்கு வந்துவிடுகின்றார். உலகம் முழுவதும் ஆண்களின் மனநிலை இந்த விஷயத்தில் இதே மாதிரிதான் இருக்கின்றது. என்பதனை இப்படம் காண்பிக்கின்றது.

பெரும்பாலான இடங்களை இப்படம் மிக நுட்பமாக பதிவு செய்திருக்கின்றார்கள். உதாரணமாக அந்தப்பெண் வீடு கட்டுவதைக் கூட சாதாரணமாக காட்டாமல் அழகாக பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜேந்திரன்:
படம் பார்த்த நிறைய நண்பர்கள் குறிப்பிட்டார்கள், கிராமத்தில் எய்ட்ஸ் பற்றிய புரிந்துணர்வு இல்லாமலிருக்க சாத்தியமிருக்கின்றதா? என்று ஆனால் இதனையே இப்படி மாற்றி எடுத்துக்கொள்ளலாம். இப்படம் எய்ட்ஸ் நோயின் ஆரம்ப காலகட்டத்தில் எடுக்கப்பட்ட படமாகக்கூட இருக்கலாம்.

இந்த படத்தில் ஒவ்வொரு விஷயமும் மிகவும் அற்புதமாக சொல்லப்பட்டிருக்கின்றது. அந்தப்பெண் கணவனிடத்திலும், மகளிடத்திலும் காட்டும் அன்பும், ஆசிரியரும், மருத்துவரும் இவளிடம் காட்டும் பரிவும் எல்லாமே மிகைப்படுத்த படாமல் இயல்பாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
கணவன் ஆரம்ப காலத்தில் மனைவியின் மீது செலுத்திய அன்பை மீண்டும் மனைவியானவள், கணவனின் நோய்க்கால சூழலில் கைவிடாமல் மீண்டும் அன்பை பரிமாறிக்கொள்கின்றாள்.
கடைசிக்காட்சியில் குழந்தையை தாயானவள் பார்க்கும்பார்வை அர்த்தம் பொதிந்த ஒன்று. படத்தை பார்த்து முடிந்தவுடன் சொல்வதற்கு வார்த்தையில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

ராஜசிம்மன்:
இந்தப் படத்தை பார்க்கும்பொழுது எனக்கு வேறெதுவும் ஞாபகம் வரவில்லை, அந்தப் பெண்ணின் மன உறுதிதான் இங்கு பிரதானப்படுத்தப்பட்டுள்ளது.

பாலாஜி:
எனக்கு படம் எதனை பதிவு செய்கிறதெனில், அந்தப்பெண் எந்த தவறுமே செய்யவில்லை. ஆனால், எல்லாவற்றையும் அவளே அனுபவிக்கின்றாள். அந்தப்பெண்ணும், அவளின் குழந்தையும் எனக்கு பரிதாபமான உயிர்களாக தெரிகின்றனர்.

மணி:
இது படமல்ல எனக்கு ஒரு பாடமாக தெரிகின்றது. டாக்டர் மாதிரி, பக்கத்து வீட்டில் இருக்கின்ற டீச்சர் மாதிரி, கடைசியா வீடு கட்ட உதவி செய்யற வழிப்போக்கர்கள் மாதிரி நமக்கு கஷ்டமான சூழலில் உதவி செய்ய நிறைய நண்பர்கள் வருவார்கள்.

பின்னர், எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட கணவன் இறந்தபிறகு, பெண் ஆவேசமாக அந்த வீட்டை இடிக்கின்றாள். ஆனால் பிற்காலத்தில் அந்தபெண்ணிற்கு அதே வீடுதான் அடைக்கலம் என்பதனை அவள் அறியவில்லை.

மதிவாணன்:
எந்த நாடாயிருந்தாலும், எந்த சமூகமாயிருந்தாலும் எய்ட்ஸ் யை எப்படி ஒரு தீண்டத்தகாத நோயா பார்த்து பாதிக்கப்பட்ட மனிதரை எப்படி ஒதுக்குறாங்கனு அழகாக காட்சிப்படுத்தியிருக்காங்க.

கிருபா:
படம் முழுக்க நிறைய பெண்கள்தான் வர்றாங்க. அவளும் எத்தனை கொடுமைகள் வந்தாலும் அதனையெல்லாம் தாங்கிக்கொண்டு, வாழ்வின் கடைசி காலமான மரணப்படுக்கையிலும் கூட சந்தோஷத்தின் பொருட்டு மேற்கொள்ளும் முயற்சிகள் அபாரமானவை.

குழந்தை அம்மாவிடம் ஆரம்பத்தில் கேட்கும் கேள்விகள், வித்தியாசமானவைகளாக உள்ளன. (நமக்கு ஏன் பறவைகளைப் போன்ற இறகுகள் இல்லை?, இருந்தால் நடக்க வேண்டிய தேவையில்லையே, இந்நேரம் வீட்டிற்கு போயிருக்கலாமே.)

”yesterday” என்பதன் தலைப்பு அந்த பெண்ணின் பெயராக இருக்கும் என கடைசி வரை எதிர்பார்க்கவில்லை.

நாளைய விட நேற்று தான் சந்தோஷம், என்பதனை எனக்குணர்த்தியது.

விஜய் அருண்:
நான் புரிந்துகொண்டது இதுதான் எய்ட்ஸ் என்பது சென்ஸிட்டாவான விஷயம்.

செளந்தரபாண்டியன் திண்டுக்கல்:
இப்படம் ஆப்பிரிக்க மக்களின் வாழ்நிலையை அப்படியே பதிவுசெய்திருக்கின்றது. ஊருக்குள் வருபவர்களுடன் எப்படி அன்பாக வரவேற்று உபசரிக்கின்றனர். என்ற அந்நாட்டைய கலாச்சாரங்களை நாம் திரைப்படங்கள் வாயிலாக அறிந்துகொள்கின்றோம்.

ஆனால் நாம் நமது பகுதியை மையமாக வைத்து படமாக்கும்பொழுது அடி, வெட்டு, கத்தி, குத்து என்று படமெடுக்கின்றனர். முக்கியமாக மதுரை. மேலும் இதில் மிக முக்கியமான விஷயம் அந்நாட்டு மக்கள் மதுரை பற்றி நினைத்தால் வெட்டுக்குத்து பூமியாகத்தான் தெரியும். இந்த மாதிரியான வண்ணம் பூசுவதை மாத்தணும்.’

நம்மில் பலரும் கொங்கு மக்கள் தான் மரியாதையானவர்கள் என நினைத்துக்கொள்கின்றனர். அவங்களுக்கு தெரிஞ்சவங்கன்னா ஒரு மரியாதையும், இல்லையெனில் சுத்தமாக மரியாதையேயிருக்காது.

இம்மாதிரியான தவறான கற்பிதங்களை புகட்டும் தமிழ் சினிமா மாறவேண்டுமென சின்ன கோரிக்கையை இங்கு வைக்கின்றேன்.

சுந்தர்:
எய்ட்ஸ்க்கான மருந்து உடம்பிலைல்லை, மனசில தான் இருக்குனு இந்தபடம் எளிதாக நமக்கு கடத்துக்கின்றது.

சண்முகம்:
சமீபத்தில ஜெயமோகன் நமீபியா பயணத்தைப் பத்தி தன்னுடைய இணைய பக்கத்தில் விலாவாரியாக எழுதியிருந்தார். அதனைப்படிக்கும்பொழுது இருந்த ஆனந்தம், குதூகலம், ஆப்ரிக்க மக்களின் வாழ்முறையை அந்த எழுத்தில் பார்த்தது போல இந்த படத்தில் பார்க்க முடிந்தது.

ஆரம்பத்தில் மந்திரவாதிக்கிட்ட அந்த பொண்ணு போகும்பொழுது “உனது கோபத்தை கைவிடவேண்டுமென “ அந்த மந்திரவாதி கூறுகின்றாள், அதற்கு இவளோ ”தனக்கு கோபமில்லை” என்பதை போல மறுமொழியுரைப்பாள்.

அவளே கணவனின் இறப்பிற்கு பின்னர் பெரிய சுத்தியலை வைத்து அவ்வீட்டை உடைக்கின்றாள் என்பது அர்த்தம் செறிந்த காட்சி.

ஜெயக்குமார்:
என்னுடைய வருங்காலத்தில் மறக்கமுடியாத நேற்று (”yesterday”).

இவர்களின் கருத்துகளுக்குப்பிறகு தமிழ்ஸ்டூடியோ அருண் மீண்டும் பேசத்தொடங்கினார். அடுத்து குறும்படத்தை பற்றின கருத்துக்களையும் கேட்க வேண்டுமென்பதால் இவ்விரு படத்தினைப்பற்றியும் பேச படத்தொகுப்பாளர் லெனின் அழைக்கப்படுகின்றார்.

லெனின்:
நான் இந்நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் ஆங்கிலோ இண்டியன் கச்சேரியை மிக ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தேன். அந்நிகழ்ச்சியில் வயதானவர் ஒருவர் தன் நண்பனின் மரணத்தைப்பற்றி பாடிக்கொண்டிருந்தார்.

எனக்கெல்லாம் ஆங்கிலம் அதிகமாக தெரியாது. ஆனாலும் நான் புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவன் என்பதனாலும், ஆங்கிலோ இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் காரணமாகயிருப்பதாலும் அவர்கள் பேசுவதுகொஞ்சம் எளிதாக புரியும், அந்த வயதானவர் பாடும்பாட்டு, முற்றிலுமாக பலவாறு வெளிப்பட்டது. “ why you left me”, ‘ஏன் என்ன விட்டுட்டு போன” என்ற வார்த்தைகளை கெஞ்சுதல், கூப்பிடுதல், கோபம் இப்படியாக வெளிப்படுத்துவது போல நல்ல ஏற்ற இறக்கமாக பாடினார்.

அதற்குப்பின் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். படம் முடியும்போதுதான் வந்தேனென்றாலும் இப்படத்தை முன்னமே பார்த்திருக்கின்றேன். நான் இந்த நிகழ்ச்சிக்கு முக்கியமாக வந்ததன் சாரமே பார்வையாளர்களின் கருத்துக்களை கேட்கவேண்டுமென்பதற்காகத்தான். ஆனால் அருண் வற்புறுத்தி சொன்ன பின்புதான் ஒரு சிலர் பேச முன்வருகின்றனர். ஆனால் இதே கேரளா போன்ற மாநிலங்களில் படங்களை திரையிட்டால் பேசுவதற்கென்றே வந்த கூட்டம் போல அனைவரும் தன் கருத்தினை பதிவு செய்ய ஆவலாக இருப்பார்கள். அந்த மாதிரியான சூழல் தமிழகத்திலும் ஏற்படவேண்டுமென்பதே ஆசை.
”Yesterday”, மாதிரியான படங்களை திரையிடுவதன் மூலமாகத்தான் இளைஞர்களை இன்றைய டைரக்டர்களாக மாற்ற முடியும்,. இயக்குனர் என்பவன் இன்றைக்கானவனாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, ஏன் நாளைக்கு இயக்குனர்?, நாம் அனைவருமே இன்றைய இயக்குனர்கள்தான். சினிமாவில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் இன்றைய டைரக்டர்களாகத்தான் வாழவேண்டும்.
இந்த ”yesterday” படத்தைப் பார்க்கும்பொழுது பின்னணி இசை எப்படி திறம்பட பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்பது புரியும், ஆனால் இரண்டாவது குறும்படமான 14/6 யை கவனித்தால் ஒலி எப்படி தவறாகப்பயன்படுத்தப்பட்டிருகின்றது என்பது புலனாகின்றது. நம்மிடையே ஒலி பற்றியதான புரிதல் முற்றிலுமாக இல்லை. அத்தகைய சிறந்த ஒலி நிபுணர்களும் நம் சினிமாவில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

மேலும் இக்குறும்படத்தில் அரிதான ரத்த வகையாக ab-v e யை குறிப்பிடுகின்றார்., இதிலும் எத்தனை சதவீதம் உண்மையென தெரியவில்லை. ஆனால் இப்படியான தகவலையும், குறும்படத்தில் இணைத்துள்ளனர். இவையெல்லாம் குறும்படங்கள் தொடர்ந்து எடுத்துப் பழக பழக சரியாக அமைந்துவிடும்.

பார்வையாளர்களில் ஒருவர் படம் பற்றியதான கருத்து சொல்லும்பொழுது என்னைப்பற்றி ஜாம்பவான் என்று குறிப்பிட்டார். இந்த வார்த்தை எடிட்டிங்கில் வந்தாலே கத்தரித்துவிடுவேன். ஜாம்பவான் என்றெல்லாம் ஒருவருமில்லை. யாரு ஜாம்பவான்கள். ஜாம்பவான்களெல்லாம் என்ன ஆயிட்டுயிருக்காங்கனு அப்பட்டமாக தெரிகின்ற காலமிது. இளைஞர்களிடம் போட்டி போட முடியாமல் திணறிவருகின்றவர்களா ஜாம்பவான்கள். இவர்களின் பெயர்களையும் அப்பட்டமாக என்னால் சொல்ல முடியும், இப்ப வர்ற படங்களையெல்லாம் பார்த்துட்டு இதனால்தான் இளைஞர்களெல்லாம் கெட்டு போறாங்கனு அந்த ஜாம்பவான்களெல்லாம் பேசிக்கிட்டுயிருக்காங்க. அப்படீன்னா நீ படம் பண்ணும்பொழுது, உன்னுடைய படத்தைப் பார்த்து கெட்டு போகலையா இந்த மக்கள்.

இதிலேயும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் முதல் படம் எடுக்கும் எல்லா இயக்குனரையும் இளைஞர்கள் என்பது, அவனுக்கு முப்பது வயதானாலே அவன் அரைக்கிழவன் ஆகிவிடுகின்றான். யாரு இளைஞர்கள்.?

புதிதாக படம் எடுக்க வருகின்றவர்கள் சினிமாவொரு சக்திவாய்ந்த விஷீவல் மீடியம் என்பதனை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். நீலப்படம் பார்த்து ஒருவனுக்கு ஸ்கலிதம் வருகிறதென்றால் நீங்களே புரிந்துகொள்ளலாம் விஷீவலின் வலிமையை.

நீங்கள் தேசீய அளவிலான படத்தை எடுத்துக்கொண்டாலும், உலகளாவிய படத்தினை எடுத்துக்கொண்டாலும் சிறந்த படமாகயிருந்தால் அதில் சொல்லப்படுகின்ற விஷயங்கள் முழுக்க முழுக்க அந்தக் கதையினை மட்டும் சார்ந்ததல்ல. நுண்மையாக கவனித்தால் அங்கு வாழ்கின்ற மக்களின் வாழ்வைப்பற்றியும், அங்கு நிலவுகின்ற சூழலையும் பதிவுசெய்பவையாக இருக்கும்.
ஒரு படத்தை பார்க்கும்பொழுது அது என்னசொல்ல வருகின்றதோ? அதனைக்கவனிக்க வேண்டும். இங்கு பலரும்பலவாறான கருத்துக்களை தெரிவித்தார்கள், ஒருசிலர் ஒரு வரியிலேயே தனது கருத்துக்களை நறுக்கென தந்தனர்.

ஒரு சிலர் எய்ட்ஸ் தன் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் பற்றி பேசினர், மற்றைய சிலர் ஆப்பிரிக்க நாட்டின் பழக்க வழக்கங்களையும், வாழ்க்கை முறைகளையும் பேசினர், பெண்ணின் மனவுறுதியைப் பற்றி வேறுசிலர் கூறினர். ஆனால், என்னைக்கேட்டால் இந்தப்படம் மொழிந்த கருத்து அந்த பெண்ணின் குழந்தையை படிக்கவைக்க வேண்டுமென்பதே.

இதேதான் இந்த டி.வி.டி அட்டையின் பின்பகுதியிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
மேலும் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற காட்சிகளை கவனியுங்கள், தொடக்கத்தில் மிக நீண்ட நேரத்திற்கு ஆப்ரிக்க நாட்டின் பகுதியினைக் காண்பிக்கின்றனர். அங்கிருந்து கேமிரா பக்கவாட்டு கோணத்தில் நீண்ட நேரத்திற்கு நகர்கின்றது. அது தொடர்காட்சியா அல்லது வெட்டி ஒட்டியதா என்பதனை பகுத்தறிய முடியாத அளவிற்கு துல்லியமான காட்சியமைப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இக்காட்சியே என்னை டெக்னீசியனாக இல்லாமல் ஒரு பார்வையாளனாக ரசிக்க வைத்தது. இது மாதிரியான காட்சிகளை எந்த தமிழ் சினிமாவில் பார்க்க முடியும், முற்றிலுமாக லைவ் செளண்ட் மூலம் பதிவு செய்து காட்சிகளில் தேவைக்கேற்ப பயன்படுத்தியிருக்கும் முறையினை எங்கே காணக்கிடைக்கும்?.

இங்கு ஒருவர் சொன்னார், ”ஆப்பிரிக்காவுக்கே போய் வந்த மாதிரி இருக்கின்றது”, என்று இது அனைத்துமே இந்த இயற்கையான ஒலியமைப்பு பன்ணுகின்ற மாயாஜாலம்தான். லைவ் செளண்டில் படத்திற்கான தரம் இருப்பதனை நாம் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.

ஆனால், நம்மிடத்தில் இயற்கையான ஒலியமைப்பினை பதிவுசெய்யும் துணிச்சலானது கைகூடிவரவில்லை. ஏன்? பின்னணி குரல் கூட எல்லா நடிகையருக்கும் ஒருவரேதான் பேசி கல்லா கட்டி வருவாதாக நான் அறிந்தேன். ஏனெனில் இங்கு நடிக்கும் நடிகையர் எவரும் தமிழ் அறியார்.

எனவே இம்மாதிரியான படங்களைப்பார்த்து, அவை கற்றுக்கொடுக்கும் பாடங்களை தெரிந்து கொள்வது மிக முக்கியம். நான் மீண்டும் ஆங்கிலோ இந்தியன் கச்சேரி கேட்கவேண்டுமென்பதால் உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன். மீண்டும் சந்திக்கலாம் வணக்கம்.

தமிழ்ஸ்டூடியோ அருண்:
எப்போதுமே நாளையை விட நேற்றுதான் சிறந்தது என்கிற மொழியுண்டு. ஏனெனில் நான் நாளைக்கு இருப்பேனா என்பதனை எவராலும் உறுதியாக கூற முடியாது.. ஆங்கிலத்தில் இதனை மையமாக வைத்து நாவலே வந்துள்ளது.

இங்கு வந்து பேசிய பலரும் அப்படத்தை பற்றிய கதையோடு நின்றுவிட்டனர். மேலும் சிலர் பேச விருப்பமில்லாமல் அமைதியாக இருந்துவிட்டனர். இந்நிகழ்ச்சியை கேரளத்தில் நடத்தியிருந்தால் குறும்படத்தைப் பற்றி விவாதித்து, அலசி, துவைத்து, காயப்போட்டு அதனை இஸ்திரிபோட்டு தூய்மையாக திரும்ப இயக்குனரின் கையில் கொடுத்துவிடுவார்கள். ஆனால் நாம் படத்தினை தண்ணீரில் மட்டுமே நனைக்கின்றோம், அலசக்கூட தயாராகயில்லை.

”yesterday” சாயலில் தமிழ்ப்படங்களும் ஓரிரண்டு வெளிவந்துள்ளன. அதற்காக நான் தமிழ் படங்களையும், உலக படங்களையும் ஒப்பிட்டு பேசுகின்றேன் என நினைக்கவேண்டாம். ஆனால் நமது படங்களை இதே கதையமைப்பில் பார்க்கும்பொழுது பலப்பல முயற்சிகள் செய்து பார்வையாளர்களை அழுக வைத்துவிடுவார்கள். அழுக வைப்பதற்காகவே கதைக்கு சம்பந்தமில்லாத காட்சிகளை வைத்திருப்பார்கள். ஆனால், இந்த ”yesterday” படத்தைப் பார்த்து எவரேனும் அழுதாதக சொல்ல முடியுமா.

நான் சில படங்களின் பெயரையே குறிப்பிடுகின்றேன்., அங்காடித்தெரு, பருத்திவீரன் போன்ற படங்களும் கதைதான் வேறேதவிர இதே அழுகை பாணியில்தான் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு பார்வையாளனை அழ வைப்பதுதான் சிறந்த படைப்பா என்றால் நிச்சயமாக இல்லை. நகைச்சுவைக்காக ஒரு சம்பவம் சொல்வார்கள், அதாவது ”ஏன் அழுகின்றீர்கள்?”, என்று மக்களைக் கேட்டால், அவர்கள் சொல்வார்களாம் ஹீரோ, ஹீரோயின் அழறாங்க அதனாலதான் நாங்க அழுகின்றோம். அவங்க பணத்தை வாங்கிட்டு அழறாங்க அதனால நீங்க ஏன் அழணும்?, புரிகின்றதா உங்களை அழ வைத்தால்தான் அவர்கள் சம்பாதிக்க முடியும்.

இந்த படத்தில் வரும் ஒட்டுமொத்த காட்சிகளையும் கவனித்தால் புரியும், மிக குறைந்த எண்ணிக்கையிலான ஷாட்களே பயன்படுத்தியுள்ளனர். முதலில் காண்பிக்கப்படும் காட்சியினை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். தூரத்தில் புள்ளி மாதிரி பெண் தன் குழந்தையுடன் நடந்து வருவதை மிக நீண்ட நேரம் காண்பித்திருப்பார்கள். இந்த மாதிரியான ஷாட்களை வெகுசில இந்தியப்படங்களில் மட்டும் காணலாம், ஆனால் தமிழில் சாத்தியமேயில்லை. ஏனெனில் தமிழ் சினிமாவில்தான் ஃபாஸ்ட் கட்(fast cut) என்ற வஸ்து உள்ளது. ஒரு காட்சியினையே வேகவேகமாக கட் பண்ணிட்டு அடுத்த வேலையை பார்க்க போயிட்டேயிருப்பாங்க.

இந்தப் படத்தில் குறிப்பிடப்பட வேண்டிய அடுத்த முக்கியமான நுணுக்கம் என்னவெனில் புவியியல் அமைப்பை மிகுந்த செரிவுடன் பதிவு செய்துள்ளனர். ஊரார் பயன்படுத்தும் தண்ணியடிக்கும் பம்பு, கிராமத்திற்குச் செல்லும் பயணம்.. ஊர்மக்களை வரவேற்கும் விதம் இதனையெல்லாம் விட அவ்வூரின் வறுமையை மிக எதார்த்தமாக பதிவுசெய்துள்ளார்கள் என்பதற்கான காட்சியானது, நம்மிடம் ஒரு ஆரஞ்சு பழத்தை கொடுக்கும்பொழுது அதனை நாம் மிகவும் லாவகாமாக வாங்கி தோலை உரித்து ரசனையாக சாப்பிடுவோம், ஆனால் அதனையே அந்தக் குழந்தையிடம் கொடுக்கும்பொழுது அவள் சாப்பிடுவதை கவனியுங்கள், குழந்தை அதனை அப்படியே வாங்கி சாறு பீய்ச்சி அடிக்க கடித்து சாப்பிடத் தொடங்கிவிடும், இதனை விட அவ்வூரின் வறுமையை காட்சிப்படுத்தமுடியாது.,
மற்றும் சிலர் கேட்டனர், ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் பற்றியதான விழிப்புணர்வு இல்லையா? என்று . ஆப்பிரிக்கால எப்ப விழிப்புணர்வு இருந்துச்சு, நம்ம நாட்ல மட்டும் இருக்கா. இந்தப்படம் எய்ட்ஸை மட்டும் சொல்லாமல் அதையும் தாண்டி அடுத்த தலைமுறையை வளர்ப்பதற்காக அந்தப்பெண் படும் பாடுகளை சூழுரைக்கின்றது.

இப்படியான ஒரு படத்தினைப்பார்த்து அதனைப்பற்றி விவாதித்து ஆராய்ந்தால் மட்டுமே திரைப்பட ரசனை என்பது வளரும். ஆனால் நமது திரைப்பட ரசனை என்பது குறுகிய பார்வையிலானது, அதாவது படம் வேகமாக நகர்ந்தால் வணிக சினிமா, மெதுவாக நகர்ந்தால் கலைப்படம்.
அடுத்து இந்தக் குறும்படத்தை பற்றி விவாதிக்கலாம். தயவுசெய்து இதில் கதையோடு நின்றுவிடாமல், எடுக்கப்பட்ட விதங்களிலிருந்து அதனை அலசி ஆராயலாம். ஆனால், அனைவரும் தயக்கத்தை விடுத்து தங்களது கருத்துக்களை பதிவுசெய்யுங்கள்.

இந்தக் குறும்படத்தைப்பற்றிய விமர்சனத்தையும், கேள்விகளையும் நீங்கள் அப்பட இயக்குனர் முன் வைக்கலாம். ஏன் குறும்படத்தை இப்படி எடுக்கவில்லை என்பதனை மட்டும் தயவுசெய்து கேட்கவேண்டாம், ஏனெனில் குறும்படம் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டது. எனவே படத்தைப்பற்றிய சந்தேகங்களையும், கருத்துக்களையும் மட்டும் முன்வைக்கலாம்.

பாலாஜி சுப்ரமணியம்( ”14/6”, குறும்படத்தின் இயக்குனர்) எதனைப்பற்றியும் தவறாக எடுத்துக்கொள்ளமாட்டார். மேலும், நாளை முகநூலில் பகிரங்கமாக அறிக்கை எதுவும் விடமாட்டார். அதனால் தைரியமாக அவரிடம் படம் பற்றியதான உங்களது கேள்விகளைக் கேட்கலாம், அதற்கெல்லாம் சேர்த்து இறுதியாக பாலாஜி சுப்ரமணியம் பதில்சொல்வார்.

14/6 குறும்பட விவாதம்:

பார்வையாளர்: இரத்தம் காலையில் எடுத்து, மாலையில் அவருக்கே கொடுக்கப்படுகின்றது. அது எப்படி சாத்தியம்? காலையில் எடுக்கப்பட்ட ரத்தம் மாலையில் கொடுக்க முடியுமா? அந்த ரத்தம் அவருக்கே திரும்ப கொடுப்பது எவ்வாறு சாத்தியம்? இந்த இரு சந்தேகங்களைத்தவிர இது நல்ல படம்தான்.

பார்வையாளர்: (இயக்குனரைப் பார்த்து) இந்த படம் எடுக்க எத்தனை நாட்களாக களப்பணியில் இருந்தீர்கள்?

பாலாஜி சுப்ரமணியம்: 3 மாதங்கள்.

பார்வையாளர்: நான் ஒரு டாக்டர். நான் உங்க படத்தை குற்றம் சொல்வதற்காக வரவில்லை, நீங்கள் எடுத்த குறும்படம் ஒரு நல்ல தகவலை மக்களுக்கு விட்டுச்சென்றிருக்கின்றது. அருமையான பதிவு. ஆனால், உங்கள் படத்தில் உண்மைத்தன்மையென்பது இல்லை.
முதல் விஷயம், காலையில் எடுத்த ரத்தம் உடனடியாக மாலைக்குள் மற்றவர்களுக்கு கொடுக்க முடியாது. ரத்தம் பரிசோதனைகளெல்லாம் முடிந்து வர குறைந்தது 3 மாத காலமாகும்.
இரண்டாவது விஷயம் ab –ve பிரிவு ரத்தம் உண்மையிலேயே அரிதான வகையல்ல.
O-ve இரத்தமுள்ள மனிதர்கள் எவரும் இவருக்கும் ரத்தம் கொடுக்கலாம்.

மற்றபடி உங்கள் சிந்தனைக்கு சிறந்த முயற்சி செய்துள்ளீர்கள், பின்னணி ஒலியமைப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

தமிழ்பிரபா கேள்வி: ஒரு பத்து நிமிட நேரத்திற்குள் சிறந்த செய்தியொன்றை குறும்படம் வாயிலாக கொடுக்க முடியுமா என்றால் கண்டிப்பாக கொஞ்சம் கடினம் தான். ஆனால், அதனை அருமையாக செய்திருக்கின்றார் இயக்குனர்.

இந்த படத்தில் எக்மோர் போன்ற இடங்களை லாவகமாக கையாண்டிருக்கின்றார்களென்பதால் நம்மால் கதையோடு இயல்பாக பொருத்திப் பார்க்க முடிகின்றது. மருத்துவ ரீதியான குறைகளை இதற்கு முன்னால் பேசிய நண்பரே குறிப்பிட்டுவிட்டார்.

பின்னர், ஏன் குற்றவாளிங்கிறவன் கிறிஷ்டினாத்தான் இருக்கணுமா?, அப்புறம் அவன்பேரு சிலுவை. சிலுவைங்கிற பெயருக்கு ஏத்த மாதிரி அவன் கையில சிலுவைனு பச்சை குத்தியிருக்கின்றான். இதை அடையாளப்படுத்துற மாதிரி ஒரு காட்சி.

அப்புறம் பாத்தீங்கனா, சென்னை மொழியை மிக மட்டமாக பயன்படுத்துவது. நான் பார்த்த வரையில் நிஜ வாழ்க்கையில் அவ்வாறு யாரும் பேசுவதில்லை, நான் அண்மையில் ஒரு படம் பார்த்தேன், அதனை நீங்கள்யாரும் பார்த்திருப்பீர்களா எனபது தெரியவில்லை. படத்தின் பெயர் குருவம்மா, தேவையானி நடித்திருப்பார், இதில்கூட சென்னை மொழி மிகமட்டமாக பயன்படுத்தப்பட்டிருக்கும்.
சென்னை வாழ்க்கையை மையப்படுத்த ”கயித”, “கசுமாலம்” போன்ற வசனங்களையே சினிமாவில் பயன்படுத்துகின்றனர். ஆனால், நானும் சென்னையில்தான் வசிக்கின்றேன் இதைப்போல மக்கள் பேசி நான் பார்க்கவில்லை, மேலும் இதுமாதிரியான படம் எடுக்கும்பொழுது நன்றாக ஆராய்ந்து எடுக்கவேண்டும். ஏனெனில் நாளைக்கு நம்மை யாரும் பார்த்து அபத்தமாக கேள்வி கேட்டுவிடக்கூடாது. மற்றபடி ஒரு பத்து நிமிடத்திற்குள் இப்படியான படம் கொடுக்க முடிந்த நீங்கள், நல்ல படத்திற்காக தொடர்ந்து முயற்சி செய்யலாம்.

பார்வையாளர் : நீங்கள் ஏன் கிறிஸ்டியானிட்டிய குறிக்கிற மாதிரி கேரக்டர் வச்சிருக்கீங்க. அந்த மாதிரியான தொழில்(அடியாள்) செய்யறவங்க கிறிஸ்டியனாத்தான் இருக்கணுமா? இதைத் தவிர்த்து பார்த்தால் படம் நல்லாவேயிருந்துச்சு.

தமிழ்ஸ்டூடியோ அருண்:

நீங்க எல்லோரும் உங்களோட கருத்துக்களை சொல்றீங்க, ஆனா, ஒவ்வொரு கருத்தின் முடிவிலும் இலவச இணைப்பு மாதிரியாக இயக்குனர் தப்பா நினைச்சுக்க கூடாதுன்னு, படம் நல்ல நோக்கத்துக்காக எடுத்துறுக்கீங்க, மற்றபடி படம் நல்லாயிருந்துச்சு, அப்படீனெல்லாம் சேர்த்துக்க வேணாம்,
படம் நல்ல நோக்கத்துக்காகத்தான் எடுக்கப்பட்டதுனு அவருக்கே தெரியும், ஏன்னா இரத்தம் பத்தி படம் எடுத்திருக்காரு, அவருக்கு அது நல்லதுன்னு தெரிஞ்சதாலதான் அப்படியொரு கதையினை தயார் செய்ய முடிந்தது.

பாலாஜி சுப்ரமனியம் தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார், அதனால் அனைவரும் தயங்காம தங்களோட கருத்துக்களை சொல்லுங்க.

பார்வையாளர்: நாங்க காலையிலிருந்து பெங்காலி திரைப்படம் முதற்கொண்டு மூணு படம் பார்த்திருக்கோம், எங்களைப்பொறுத்தவரைக்கும் MNCல இருக்கிறதால அமெரிக்கன் கல்ச்சர் தெரியும். அவர்களெல்லோரும் நாலைந்து தலைமுறைகளின் பெயர்களையும் அவர்களைப் பற்றிய குறிப்புகளையும் சேகரித்து வைத்திருக்கின்றனர். சரி அதை விடுவோம்.

இந்தக் குறும்படத்தினை பொறுத்தமட்டில் கடந்த சில வருஷங்களாகவே இரத்தம் குறித்த குறும்படங்கள் அதிகமாக வந்துள்ளன. இவர்களும் இதே மாதிரியான படம் எடுக்காமல், சமூகத்தில் நடக்கின்ற பிரச்சினைகளை மையமாக வைத்து பார்க்கலாம். எத்தனையோ விவகாரத்து சம்பவங்கள் நடைபெறுகின்றன., நடைபாதை வியாபாரிகள் சந்திக்கின்ற பிரச்சினைகள் இப்படி பலதளங்களிலும் மக்கள் இயங்கினால் நன்றாக இருக்கும்.

இதற்குமுன் பேசிய நண்பர்கள் நிறைய பேர், ”அந்த இரத்தம் பரிசோதனைப் பண்ணப்பட்டுதான் வருதா?”, அப்படீன்னு கேட்டாங்க. ஆனால் மருத்துவமனைக் காட்சியில் மருத்துவர், சிலுவைக்கு ரத்தம் கொடுப்பதற்கு முன்னால் செவிலியரிடம் “ப்ளட் டெஸ்ட் பண்ணியாச்சா”, என்று கேட்பார். இப்படியான காட்சியில் ரத்தம் பரிசோதிக்கப்பட்டுதான் வந்திருக்கின்றது என்பதனை அறிந்துகொள்ளலாம் .

கீழ்த்தட்டு மக்களில் ஒருவனுக்கு சாகவும், வாழவும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது. ஆனால் அவன் ஆபத்தில் சிக்காமல் காலையில் அவன்கொடுத்த ரத்தத்தாலேயே காப்பாற்றப்பட்டு திருந்தி நல்ல மனிதனாக வாழ்கின்றான்.

கிறிஸ்டியானிட்டி பத்தியும் பெரும்பாலானோர் பேசினார்கள். அனாதையாக தெருவில் கிடப்பவனை பாதிரியார் எடுத்து வளர்த்து ”சிலுவை”, என்று பெயரிடுகின்றார். ஒருசமயத்தில் அவன் தேவாலயத்திலிருந்து வெளியே வர சமூகத்தால் அலைக்கழிக்கப்பட்டு ரவுடி ஆகின்றான் என்பது மாதிரியாக காட்சிகளை அமைத்திருக்கின்றனர். வறுமையும், படிப்பிறிவின்மையும் கொண்ட ஒருவனிடத்தில் இப்படியான மாற்றங்கள்தானிருக்கும்..

இதே தவறுகள்தான் மேல்மட்ட வர்க்கத்திலும் நடக்கின்றன. ஐ.பி.எல்லில் நடந்த தவறுகள் எல்லாம் யார் செய்தது. நீயும், நானுமா பண்ணினோம்?. இல்லையே. பணமுதலைகள் பல ஆயிரம் கோடி சம்பாதிக்கின்றனர்.

அமெரிக்காவுல இருக்கிறவனுக்கு எவன் எவனுக்கு பொறந்தான்னே தெரியாது. அம்மா சொல்றான்னா அது உண்மையாயிருக்குமா.?

எல்லோரும் ஜீன் டெஸ்ட் எடுத்து வச்சிருக்கானுக. ஏன்னா?, யாரும், யாருகூடயும் சேர்ந்து ஒற்றுமையா வாழலை. அம்மா நாலாவது புருஷங்கூட வாழ்வாள், அப்பன்காரன் மூணாவது பொண்டாட்டிகூட வாழ்க்கை நடத்துவான். அதனாலதான் தன்னோட முன்னோர்களைப் பற்றிய குறிப்பெடுத்து வச்சிக்கிட்டு பணத்தை மட்டும் மனசுல ஏத்திட்டு ஆபத்தை நோக்கியே போயிட்டிருக்காங்க.

அப்படியிருக்கின்ற சூழ்நிலையையும் மையமாக வைத்து குறும்படங்கள் வரவேண்டும். சினிமாவில் அடியாள் , ரெளடி இவர்களை மையமாக வைத்து, நாலு சண்டைக்காட்சிகள், நாலு பாட்டுகள் என்றும் வெற்றுக் காமெடிகளை வைத்தும் படம் எடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். இதில் இயக்குனருக்கு வேலையென்பதேயில்லை. அப்படியான சூழலில் ”yesterday”, படம் பார்த்ததை நினைத்து மிகவும் சந்தோஷம்.

பார்வையாளர்: இந்தப் படத்தில நடிச்சவங்க எல்லோரும் பெரும்பாலும் பழக்கப்பட்ட ஆட்களாகவேயிருக்கின்றனர். கூத்துப்பட்டறை மாதிரியான இடங்களிலிருந்தும் ஆட்களை தெரிவு செய்யலாம் என்பதே என் எண்ணம்.

ஒரு ஷாட் பிலிம் எடுத்துட்டு அதன் மையத்தை மட்டும் கூகுளில் தேடினால் அதுமாதிரியாக ஆயிரக்கணக்கான படங்கள் எடுத்திருப்பார்கள். நான் என்ன சொல்ல வருகின்றேனென்றால் யாருமே தொடாத களத்தை வைத்து படம் எடுத்து பாருங்கள், உங்களுக்கான அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்கும்.

பார்வையாளர்: ஒவ்வொரு ஷாட்ஸ்ம் மிக நேர்த்தியாக எடுத்திருக்கின்றனர். டாக்டரும் ரம்யாவும் பேசிக்கொண்டிருக்கையில் ஒருவர் பேசி முடிக்கவும், அடுத்தொருவர் பேசவும் சரியாக உள்ளது. ஏற்ற இறக்கங்களுடன் இருவரும் பேசிக்கொள்ளும் காட்சி சிறப்பானது.

ஒரு ரெளடி அடிபட்டு கிடக்கின்றான், அவனை காரில் வருபவர்கள் பார்த்து காப்பாற்றுகின்றனர். ஆனால் இதனை யதார்த்தத்தோடு ஒப்பிட்டுப்பார்த்தால் எவரும் அடிபட்டிருப்பவர்களை இரக்கத்தோடு பார்ப்பதுகூட கிடையாது. ஒருவேளை அப்படிப்பட்ட நல்லவர்களும் கூட இருக்கலாம், இருந்தாலும் மகிழ்ச்சியே.

தொழில்நுட்பங்களுக்காக கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். கேமிரா ஒளிப்பதிவு எல்லாமே சிறப்பாக உள்ளது.

தமிழ் ஸ்டூடியோ அருண்:
நான் முன்னமே சொன்னது மாதிரி இந்த படம் எடுத்து முடிச்சாச்சு, பின்னரும் ஏன் இப்படி, அப்படி எடுக்கவில்லை என்பது அபத்தமான கேள்விகளாக படுகின்றது.

அப்புறம் இன்னொருத்தர் அமெரிக்காவை எல்லாம் புடிச்சு இழுத்துட்டாரு. உங்க கருத்து தான் சிறந்ததுன்னு நீங்க எப்படி முடிவு பண்ண முடியும்?

பார்வையாளர்: நிச்சயமா, இதை வேற யாரு சொல்றது.

அருண்: ஏங்க உங்க கருத்துதான் சிறந்த்துன்னு நீங்க எப்படி சொல்ல முடியும்? இது என்ன அநியாயமாயிருக்கு?

நான் நல்லவன்னு நானே சொல்ல முடியுமா?

பார்வையாளர்: சொல்லவேண்டாம், கருத்தை சரியா பதிவு பண்ணுங்கனு தான் சொல்றேன்.
அருண்: ஏன் சார் அமெரிக்காவுல நல்லவெங்களே இல்லையா?

பார்வையாளர்: அமரிக்கென் கவர்மெண்ட் என்ன பண்ணிட்டுயிருக்கு. நம்ம பேஸ்புக் எல்லாத்தையும் கண்காணிச்சுட்டு இருக்கான்.

(பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் தனது கருத்தினையும் கூற ஆர்வமாக எழுந்தனர். ஆனால் பலரும் ஒரே சமயத்தில் எழுந்த காரணத்தில் அவர்களின் பேச்சானது கருத்துக்களில் போய் சேராமல் கூச்சலின் வரிசையில் சேர்ந்துகொண்டது.)

பார்வையாளர்களின் கருத்துக்களின் மீதான தன் பார்வையினையும், அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லவும் பாலாஜி சுப்ரமணியம் அழைக்கப்பட்டார்.

பாலாஜி சுப்ரமணியம்:
ஒரு படைப்பாளியா இந்த குறும்படத்தை நான் எடுக்கும்பொழுது யூ ட்யூப்ல தேடிப்பார்த்தேன். அதில் இரத்தம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆவணப்படங்களும் ஓரிரு குறும்படங்களும் வந்துள்ளன. ஆனால் இந்த குறும்படங்களும் ஆவணப்பட வகையைச் சேர்ந்ததாகத்தான் இருக்கின்றது. இதனால்தான் நான் இந்தப் படம் எடுக்க முன்வந்தேன்.

100 சதவீதம் உண்மையாக ஒரு படம் பண்ணமுடியாது. குறும்படத்தில் சில விஷயங்களை சுவாரஷ்யமாக கொண்டுசெல்ல சில இடங்களில் சமரசம் செய்தே ஆகவேண்டும்.

(முதலில் பேசிய டாக்டரை சுட்டிக்காட்டி) ஒரு மருத்துவராக இந்த தவறை நீங்கள் சுட்டிக்காட்டினீர்கள், ஆனால் இதனையே ஒரு சாதாராண பார்வையாளனால் அடையாளம் காணமுடியுமா? என்றால் அது முடியாது. (மீண்டும் பார்வையாளர்களிடையே விவாதக் கூச்சல்)

ரத்த பரிசோதனைக்காக நான் சரியான காட்சியினை வைத்துள்ளேன். மருத்துவர் இரத்தம் பரிசோதனை செய்யப்பட்டதா என்று கேட்க, நர்ஸும் பரிசோதிக்கப்பட்டது என்பார். இப்படியாக காலையில் ரத்தம் கொடுத்த ஒருவருக்கு மாலையில் அவனுக்கே திரும்பி கொடுக்கிறாங்க என்பதைவிட அவன் ரத்தம் கொடுக்கின்றான் என்ற செய்தி சரியாக புரிந்துக்கொள்ளப்பட்டதால் நான் அங்கேயே ஜெயித்துவிட்டேன். (மீண்டும் விவாதக் கூச்சல், பலரும் தனது கருத்தினை ஒரே சமயத்தில் கூறினர்)

பின்னர் இன்னொரு விஷயம் சொன்னார்கள், ஏன் கிறிஸ்டியானிட்டியை எடுத்தீர்கள் என்று. அதாவது அவன் குழந்தையாக அனாதையாக இருக்கின்றபொழுது பாதிரியார் எடுத்து வளர்க்கின்றார். அதனால் அவன் பெயர் சிலுவை. பின்னர் அவன் அங்கிருந்து வெளியே வரும்பொழுது வன்முறையில் சில காலம் ஈடுபட்டு பின்னர் மனம் திருந்தி வாழநினைக்கையில் மீண்டும் தனது எதிரிகளால் ஆபத்து ஏற்பட அவனது ரத்தத்தாலே காப்பாற்றப்படுகின்றான். அப்பொழுதுதான் அவன் சிந்திக்கின்றான் இனிமேல் தனது ரத்தம் வன்முறைக்காக பயன்படக்கூடாது, நல்ல விஷயங்களுக்காக பயன்படட்டும். அந்த உணர்வு தோன்றும்பொழுதுதான் அவன் மனம்மாறுகின்றான். அதனால் நான் கிறிஸ்டியானிட்டியை வேணுமென்றே தேர்ந்தெடுத்தேன் என்பது தவறு. நீங்களே எண்ணிப்பாருங்கள், ஒரு அனாதைக்கு அடைக்கலம் கொடுக்கக்கூடிய முக்கியமான இடமாக இருப்பது கிறிஸ்டியானிட்டிதான்.

தமிழ் பிரபா: சார் நான் கிறிஸ்டியானிட்டியை பத்தி கேட்கவில்லை. அவரது பெயர் சிலுவை என்று இடம்பெற்றிருக்கின்றது. தொடர்ந்து ரவுடிகளின் பெயர்கள் சிலுவை, பீட்டர் இதே மாதிரிதான் வைக்கவேண்டுமா?. மேலும் நான் நன்றாக படித்து வேலைக்கு இண்டர்வியூவிற்கு செல்கின்றேனென்று வைத்துக்கொள்ளுங்கள். என் பெயர் சிலுவை.

உயர்அதிகாரி ஒருவேளை நீங்கள் எடுத்த குறும்படத்தை பார்த்திருக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம் இதனால் என் பெயர்மீதும் என்மீதும் தவறான மதிப்பு ஏற்பட எனக்கு அவர் வேலை கொடுப்பாரா?

பாலாஜி சுப்ரமணியம்: கண்டிப்பா கொடுப்பார் சார். இந்த சின்ன விஷயம் எப்படி அவரது மனநிலையை மாற்றும்.

தமிழ்பிரபா: அந்தக் குறும்படம் அவரை பாதிச்சிருந்தா?

பாலாஜி: சிலுவைங்கிற விஷயமெல்லாம் அவரை பாதிக்காது சார். எது தெரியுமா பாதிக்கும்? அவன் ரத்தம் கொடுத்து காப்பாத்தப்பட்டு திருந்தி நல்ல வாழ்க்கை வாழ்றான் பாத்தீங்களா? அதுதான் பாதிக்கும். இரத்த தானம் பண்ணனும்கிற எண்ணம்தான் நிற்கும்.

பார்வையாளர்: ஏன் சார் அவன் சர்ச்சுக்குள்ள இருந்த வரைக்கும் நல்லவனா மாறலயா? வெளியே வந்தவுடனேதான் நல்லவனா மாறணுமா?

பாலாஜி சுப்ரமணியம்: அவன் சர்ச்சுக்குள்ளயே நல்லவந்தான் சார். ஆனா வெளியே வந்தவுடன் அவன் நல்லவங்க யாரு? கெட்டவங்க யாருன்னு தெரியாம கெட்டவங்களோட சேர்ந்து பின்னர் இந்த மாதிரியான சம்பவங்களால திருந்தறான்.

பார்வையாளர்: அவனுக்கு அவனது ரத்தம்தான் கொடுக்கப்பட்டதுங்கிறதுக்கான அடையாளம் எங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.?

பாலாஜி சுப்ரமணியம்: அது ரத்த வகையினையும் அந்த மனிதரைப்பற்றியும் செவிலியரிடம் விளக்கிக்கொண்டிருப்பார் டாக்டர். இன்று காலையில்தான் ரத்தம் கொடுத்தார், இப்பொழுது அவரது உயிரையே காப்பாற்றப்போகின்றது என்று? இப்படியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
(மீண்டும் பலத்த கூச்ச்ச்சல்)

பாலாஜி சுப்ரமணியம்: ஓ.கே சார் இனிமே இது மாதிரியான தவறுகள் நிகழாமல் பார்த்துக்கிறேன்.
உங்கள் கேள்விகளுக்கு யாருக்காவது பதில் சொல்லவில்லையா? அநேகமாக அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருப்பேன்.

அதாவது ஒரு படைப்பாளியா நல்ல விழிப்புணர்வு தரக்கூடிய படமாக நினைத்து என்னால் முடிந்த அளவு ஒரு படம் எடுத்திருக்கின்றேன். அதில் சில குறைகளும் இருக்கின்றன அதனை ஒத்துக்கொள்கின்றேன். இனிமேல் எனது அடுத்த படத்தில் இதுபோன்ற தவறுகள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்கின்றேன். இன்னும் சிலபேர் பின்னணி இசை பற்றி சொன்னார்கள், இயக்குனரும் நானும்தான் ஒன்றாக சேர்ந்து உழைத்திருக்க வேண்டும் ஆனால் இசையமைப்பாளர் சரியாக ஒத்துழைக்காத காரணத்தினால் தவறாகிவிட்டது. என்னுடைய படைப்பை மிகச்சிறந்த முறையில் விமர்சித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

இந்தப் படத்தை நான் சென்ற மாதம் தமிழ்ஸ்டூடியோவுக்கு அனுப்பி வைத்தேன். அருண் அவர்கள் பார்த்து ஜீன் மாதம் திரையிடலாம் என்றார். அத்தோடு நான் மறந்துவிட்டேன். பின்னர் அருணே என்னை தொடர்புகொண்டு இந்த வாரம் உங்கள் குறும்படம் திரையிடப்படயிருக்கின்றது என்று கூறினார். நல்ல முறையில் நிகழ்ச்சியும் முடிந்துவிட்டது. அருணுக்கு மிக்க நன்றிகள். வணக்கம்.

தமிழ்ஸ்டூடியோ அருண்:
உங்கள் எல்லோருடைய கருத்துக்களுக்கும் நன்றி. இந்த மாதிரியான விவாதங்கள் திடீரென வேறொரு இடத்திற்கு சென்று மீண்டும் பழைய இடத்திற்கே வரும். எடுத்துக்காட்டாக நம் தமிழாசிரியர் பாடம் எடுக்கும்பொழுது திடீரென மன்மோகன் சிங் என்பார். அப்படி இப்படி போயி அந்த ரெண்டு திருக்குறளை இரண்டு மாதகாலமாக எடுத்துக்கொண்டிருப்பார். அதுமாதிரிதான் இங்கு நடந்ததும்.
எல்லோரும் நல்லா சந்தோசமாக இருந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். (நானும் சந்தோசமாக இருந்தேனென்று பாலாஜி சுப்ரமணியமும் கையைத்தூக்கினார்), ஆமா கண்டிப்பா வாங்குனவர் சந்தோசமாகத்தான் இருப்பார். வீட்டுக்கு போனாத்தான் தெரியும். ஆனா, படைப்பாளிக்கு சிலவிஷயங்கள் கண்டிப்பாக சொல்லணும், ஒரு பட்த்தை நாலாவிதமாகவும் விமர்சிக்கத்தான் செய்வார்கள் அதில் தவறில்லை. ஆனால் ஒரு டாக்டர் இரத்தம் பற்றிய தகவலை கூறிக்கொண்டிருக்கையில் அதனை ஒத்துக்கொண்டால்தான் இயக்குனருக்கு நேர்மையாகயிருக்கும். இரண்டாவதாக நீங்க மியூசிக் டைரக்டர் மேலெல்லாம் பலி போட்டது தவறு. உங்க படத்துக்கு நீங்க தான் டைரக்டர். அதுல தப்பு வந்தா நீங்கதான் பொறுப்பு, நீங்கதான் அவருகிட்ட வேலை வாங்கணும்.
தொடர்ந்து தமிழ் சினிமா பார்ப்பதற்குண்டான அடையாளங்கள்தான் இந்த தவறுகளெல்லாம். அப்புறம் ரத்தத்தைக் கண்டுபிடிப்பதைப் பற்றி குஷி படத்தில் கூட அழகாக காண்பித்திருப்பார்கள். இது விஜயின் ரத்தம், இதுஜோதிகாவின் ரத்தம் என்பதெல்லாம்.

இயக்குனரா நீங்கள் தமிழ்சினிமாவில் எடுக்கவேண்டியதை தவிர்த்துவிட்டு, பின்பற்ற வேண்டாதவற்றை பின்பற்றியுள்ளீர்கள். பின்னர் நண்பர் ஒருவர் குறிப்பிட்டார் இரத்தம் சம்பந்தப்பட்ட குறும்படங்கள் அதிகமாக வந்துள்ளன என்று. ஆனால், காதல் படங்கள்தான் அதிகமாக வந்துள்ளன. இதுமாதிரியான குறும்படங்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளது.

இத்துடன் இம்மாத குறும்பட வட்டம் நிறைவுறுகின்றது, அடுத்த மாதமும் இரண்டாவது சனிக்கிழமை குறும்படத்திரையிடல் திரையிட்டு விவாதங்கள் நடைபெறும் அனைவரும் அடுத்த மாத நிகழ்விற்கும் கண்டிப்பாக வரவேண்டும். இவ்வளவு நேரமும் அமைதியாக உட்கார்ந்து நிகழ்ச்சியை கவனித்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றிகள்.

சச்சரவுகளுடனும், கூச்சல்களுடனும் இணைந்து தமிழ் சினிமாவினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த துடிக்கும் ஆரோக்யமான விவாதத்துடன் தமிழ் ஸ்டூடியோவின் 54ஆவது குறும்பட வட்டம் இனிதே நிறைவுற்றது.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </