நுழைவுச் சீட்டா குறும்படங்கள்?
தமிழ்நாட்டில் தற்போது வெற்றிபெற்ற முக்கியமான ட்ரெண்ட் குறும்படங்கள் மூலம், பெரிய திரைக்குள் நுழைவது. குறும்படங்கள் எடுத்து, அதற்கென்று நடத்தப்படும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று, பிறகு நேரடியாக எவ்வித தடையுமின்றி பெரிய திரைப்படம் எடுக்க வந்துவிடுகிறார்கள், நாளைய இயக்குனர்கள்.
ஒரு ஜனநாயக நாட்டில் ஒருபோதும் இவர், இந்த வேலையைத்தான் செய்யவேண்டும் என்று யாரும், யாருக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது. குறும்படங்கள் எடுப்பவர்கள், முழு நீளத் திரைப்படங்கள் எடுக்க கூடாது என்று யாரும் சொல்லிவிட முடியாது. ஆனால் தமிழ்நாட்டில் குறும்பட இயக்கம் எப்படி உருவானது, உலகம் முழுக்க குறும்படங்கள் எத்தகைய மாற்றங்களை தோற்றுவித்தது, முழுக்க முழுக்க வியாபார ஸ்தலமான தமிழ் திரைப்பட தொழில் உலகில் குறும்படங்களின் பங்கு என்ன? என்பது போன்ற மிக நுட்பமான விசயங்களை நாம் தெரிந்துக் கொண்டால், குறும்படங்கள் மீது இருக்கும் மதிப்பும், அதை பெரிய திரைப்படத்திற்கான நுழைவு சீட்டாக பயன்படுத்தும் முறையும் நிச்சயம் மாறும்.
உலகம் முழுக்க முதலில் தோன்றியது குறும்படங்கள்தான். காட்சிமொழியில் முதலில் தோன்றிய வடிவம், குறும்பட வடிவம்தான். அதுதான் சாத்தியமானதும் கூட. முதலில் யாருக்கும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலான திரைவடிவம் கைகூடவில்லை. தவிர அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. பிறகு அதில் அதிகப்படியான பணம் முதலீடு செய்யப்படவே கொஞ்சம் கொஞ்சமாக அது இரண்டு மணிநேரத்திற்கும் மேலான திரைப்படமாக உருமாறியது. அந்த வரலாறு பற்றி பேசினால், நாம் இங்கே தொடர்தான் எழுத வேண்டும்.
வெளிநாடுகளில் எடுக்கப்படும் குறும்படங்கள் பெரும்பாலும், சமூக அளவில் ஏதோ மாற்றத்தை விரும்பியோ, அல்லது சினிமா என்கிற காட்சிமொழி கலையை மக்கள் மனதில் பதிய செய்து, அதன் மூலம் அவர்கள் செழுமை பெறவுமே இன்று வரை பயன்பட்டு வருகிறது. அங்கே குறும்பட / ஆவணப்படக் கலைஞர்கள் என்று தனியே ஒரு மாபெரும் பிரிவே இருக்கிறது.
தமிழ்நாட்டில், திரைப்படக் கல்லூரி மாணவர்கள் அவர்களின் இறுதி ஆண்டில் எடுத்து வந்த, Project படங்களே குறும்படங்கள் என்று அறியப்பட்டிருந்த சூழலில் முதன் முதலாக 1992 இல் படத்தொகுப்பாளர் லெனின் இயக்கத்தில் வெளிவந்த "Knock Out" படமே தமிழில் குறும்படங்களுக்கான அலையை தோற்றுவித்தது. நிறைய தயாரிப்பு நிறுவனங்கள் தோன்றி சினிமாவை, முழுக்க முழுக்க வியாபார கேந்திரமாக மாற்றிக்கொண்டிருந்த தருணத்தில், வியாபார தேவை கருதி, பெரிய படங்களில் சொல்ல முடியாத, ஒரு படைப்பாளியாக சமரசம் செய்துக் கொள்ள தேவையில்லாத இடமாகவே குறும்படதுறை தனது தோற்றத்தை உறுதிபடுத்திக் கொண்டு வந்தது.
இந்த இந்த அம்சங்கள் எல்லாம் வேண்டாம், இதற்கெல்லாம் வியாபார அந்தஸ்து இல்லை என்று, மக்களுக்கு தேவையான, சமூக மாற்றத்தை வலியுறுத்தும் பல விஷயங்கள் நிறுவன முதலாளிகளால் மறுக்கப்பட்டது, வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட பல விசயங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க மிக அருமையான தளமாக இருக்கும் என்றுதான் குறும்படத் துறை ஆரம்பத்தில் கருதப்பட்டது. அப்படிதான் 2008 ஆம் ஆண்டுவரை ஓரளவிற்கு குறும்படங்கள் பெரிய படங்களுக்கான நுழைவு சீட்டு அல்ல, அது தனித்த ஒரு மாபெரும் துறை என்பதாகவே இருந்துவந்தது.
2008 க்கு முந்தைய காலகட்டத்தில் சிறப்பான கருவோடும், சிறந்த மேக்கிங் தரத்தோடும் ஒன்றிரண்டு குறும்படங்கள் வெளிவரத் தொடங்கியது. அதில் ஒரு குறும்படம்தான் "கர்ணமோட்சம்". ஆனால் அப்போதிருந்த சூழலில் இந்த திரைப்படத்தின் இயக்குனர் முரளி மனோகருக்கு நேரடியான திரைப்பட வாய்ப்புகள் எதுவும் கிடைத்ததாக தெரியவில்லை. அப்போது குறும்படங்கள் வேறு, பெரியத் திரைப்படங்கள் வேறு, குறும்படங்கள் எடுப்பவர்களால் நிச்சயம் ஒரு பெரியத் திரைப்படத்தை எடுத்துவிட முடியாது என்கிற கருத்து வெகுவாக பரவி இருந்தது. இந்த கருத்து, திரைப்படத் துறை தாண்டியும், குறும்படங்களை எடுப்பவர்கள் மனதிலும் ஆழமாகவே பதிந்திருந்தது. காரணம், அதுவரை குறும்படங்களில் இந்த மாதிரியான பெரியத் திரைப்படத்திற்கான அம்சங்களின் தேவை குறைவாகவே இருந்தது. தவிர குறும்படம் எடுப்பவர்கள், இதன் தேவையை உணர்ந்தே இருந்தனர். அப்போது குறும்படங்களில் நிறைய பரிச்சார்த்த முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது. ஒரே ஒரு ஷாட்டில் ஒரு குறும்படத்தை எடுத்து வெளியிட்டார் கௌரி ஷங்கர், "லீ சாக்" என்கிற அந்த குறும்படம், குறும்படங்களில் நாம் எல்லாவிதமான பரிச்சார்த்த முயற்சிகளும் மேற்கொள்ளலாம் என்று பறைசாற்றுவதாக இருந்தது. நண்பர் கண்ணன் எடுத்த "அச்சுப் பிழை", பொன். சுதாவின் "மறைபொருள்", சுப்பராஜின் "செடி" கருணாவின் "ஏழுமலை ஜமா", செல்வாதரனின் "சின்ன மனுசி" (சில நல்ல குறும்படங்கள் விடுபட்டு போயிருக்கலாம்) போன்ற குறும்படங்கள் எல்லாம், குறும்படங்களுக்கான தேவையை, அதன் வணிக நோக்கில்லாத பார்வையை மிக தெளிவாக, நேர்மையாக வரையறுத்தது. பெரிய அளவில் பணம் தேவைப்பட்டாலும், தங்கள் சொந்த பணத்தை செலவழித்து, நண்பர்களிடம் கடனாகவோ, நட்பின் அடிப்படையிலோ பணம் பெற்று மட்டுமே குறும்படங்கள் எடுத்து வந்தார்கள். அதில் எந்தவித வணிக நோக்கமும் இல்லாமல் இருந்தது. மேற்சொன்ன குறும்படங்களை எடுத்த நண்பர்கள் யாரும் இதுவரை முழுநீளத் திரைப்பட இயக்குனர் அவதாரம் எடுக்கவில்லை. பொன்.சுதா, சுப்பராஜ் போன்ற நண்பர்கள் இயக்குனராகும் முயற்சியில் இருந்தாலும், அவர்கள் தங்கள் குறும்படங்களை அதற்காக பயன்படுத்தவில்லை.
|
இந்த காலகட்டத்தில் இந்திய அளவில் மிக சிறப்பாக செயல்பட்டு வந்த குறும்படப் போட்டிகள் போல், தமிழ்நாட்டிலும் சில அமைப்புகள் குறும்படங்களுக்கான போட்டியை நடத்தி தங்களை நிறுவிக் கொள்ள, தங்களை அடையாளபடுத்திக்கொள்ள நினைத்தனர். குறும்படங்களுக்கான சந்தை மதிப்பை கூட்டியதில், தமிழ்நாட்டில் நடத்தப்படும் குறும்பட விழாக்களுக்கு ஒரு பெரிய பங்கு இருக்கவே செய்கிறது. (இன்றுவரை மிக நேர்மையான முறையில் குறும்பட போட்டிகளை நடத்தும் அமைப்புகளும் இருக்கிறது). இந்த மாதிரியான குறும்படப் போட்டி நடத்தும் அமைப்பினரின் வருகைக்கு பிறகு, குறும்படங்களில் மேக்கிங் என்று சொல்லப்படும் தொழில்நுட்ப கூறுகளை ஆராய்ந்து, அதை முன்னிலைப்படுத்தி அந்த குறும்படங்களுக்கு பரிசுகளை வழங்கத் தொடங்கினர். மேலும், தொடர்ந்து உதவி இயக்குனர்கள் வாய்ப்பு மறுக்கப்படும்போது, தங்களை எப்படியாவது நிரூபிக்க வேண்டும் என்று உதவி இயக்குனர் வாய்ப்பு தேடிய பலர் ஒன்றாக இணைந்து குறும்படங்கள் எடுக்க ஆயத்தமாகினர். அப்போது, நாங்கள் ஒன்றும் உங்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க திரைப்படங்களில் வரும் பாடல்கள், சண்டைகள், சேச்சிங் காட்சிகள் என்று அசல் ஒரு திரைப்படத்தை போலவே, ஆனால் வடிவத்தில் குறுக்கி படமெடுத்து தங்கள் வாய்ப்பு தேடும் படலத்தை தொடங்கினர். இந்த மாதிரியான குறுகிய வடிவிலான திரைப்படங்கள், அதன் வடிவத்தை ஒற்றி குறும்படங்கள் என்கிற நாமகரனத்தில், குறும்படங்கள் பற்றிய எவ்வித புரிதலும் இல்லாத ஒரு பெரிய திரைப்பட கூட்டத்தால் அழைக்கப்பட்டது. என்ன மாதிரி படம் எடுத்து இருக்கிறான் பார்... என்கிற பாராட்டு கோஷங்களும் அவர்களது மேக்கிங்கை நோக்கி எழுப்பப்பட்டது.
இந்த இடத்தில்தான் குறும்படங்கள் மீதான வணிக படையெடுப்பு ஆரம்பமானது. குறும்படம் எடுப்பவர்கள் பெரிய திரைப்படங்கள் எடுக்கவும் தகுதியானவர்கள் என்கிற மாயையும் உருவானது. குறும்பட இயக்குனர்களும், குறும்படம் எடுப்பதே முழுநீளத் திரைப்படத்திற்கான ஆயத்தம் என்று தங்களை தயார்படுத்திக் கொண்டனர். 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு, குறும்படங்கள் மீது ஊடகங்களும் கண்பதிக்க தொடங்கியது. அச்சு ஊடகங்கள் தாண்டி, தொலைக்காட்சிகளும், குறும்பட இயக்குனர்களிடமிருந்து குறும்படங்களை பெற்று தங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தொடங்கினர். ஆனால் அவர்கள் அதற்காக அந்த குறும்பட இயக்குனர்களுக்கு ஒரு ரூபாய் கூட சன்மானமாக வழங்கியது கிடையாது (இங்கே சன்மானம் என்பது தவறான வார்த்தை. நியாயப்படி தொலைகாட்சி நிறுவனங்கள் அவர்களிடம் ஒரு நல்லத் தொகை கொடுத்து அந்த குறும்படங்களை வாங்கி இருக்க வேண்டும்). ஊடகங்கள் குறும்படங்களை அழித்தொழிக்க மேற்கொண்ட மிக தந்திரமான முயற்சியாகவே இதை நான் பார்க்கிறேன். குறும்பட இயக்குனர்களிடம் இருந்து படத்தை வாங்கும்போது, அதற்கு தகுந்த பணத்தை கொடுத்து வாங்கி இருந்தால், குறும்படம் என்பது இந்நேரம் ஒரு சக்தி வாய்ந்த தனியொரு துறையாகவே வளர்ந்திருக்கும்.
|
மாறாக நாங்கள் எங்கள் தொலைக்காட்சியில் உங்கள் குறும்படங்களை ஒளிபரப்பி அதன் மூலம் உங்களுக்கு புகழையும், பெரிய திரைப்படத்தில் நுழைவதற்கான வாய்ப்பையும் வாங்கித் தருகிறோம் என்று மறைமுக அழைப்பை விடுத்தன. இந்த காலகட்டத்தில், உதவி இயக்குனர் வாய்ப்பை தேடி குறும்படங்கள் எடுத்த நண்பர்கள், இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த தொடங்கினர். அவர்கள் நினைத்தது போலவே, அவர்கள் லைம் லைட்டில் வைத்து அழகு பார்க்கப்பட்டனர். இதன் உச்சக்கட்டமாக, வெளிப்படையாகவே உங்கள் குறும்படங்களை வைத்து நாங்கள் உங்களுக்கு பெரிய திரைப்படம் இயக்குவதற்கான வாய்ப்பை வாங்கித் தருகிறோம் அல்லது நாங்களே உங்களை இயக்குனராக்கி பெரிய திரைப்படம் தயாரிக்கிறோம் என்கிற அறைகூவலோடு ஒரு தொலைக்காட்சியில் குறும்படங்களுக்கான நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கியது. குறும்படம் இயக்குபவர்கள் எல்லாம், இயக்குனர்கள் அல்ல, நீங்கள் பெரியத் திரைப்படங்களை இயக்கும்போதுதான் உங்களுக்கு அந்த நாமகரணம் கிடைக்கும், என்கிற புரிதலில் அவர்களை "நாளைய இயக்குனர்"களாகவே சித்தரித்தது அந்த நிகழ்ச்சி.
ஆனால் இந்த நேரத்திலும், உண்மையாகவே குறும்படம் என்றால் என்ன என்கிற புரிதலில் படமெடுத்த பெரும்பாலான நண்பர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவே இல்லை. அவர்கள் இன்னமும் நேர்மையோடு குறும்பட துறையை அணுகி வருகிறார்கள். பொன்.சுதா, சுப்பராஜ், பொன்ராஜ் போன்றவர்கள் அதில் சில உதாரணங்கள்.
ஆனால் இதற்காகவே காத்திருந்த பலர் இந்த வாய்ப்பை இறுகப் பற்றிக்கொண்டு குறும்படத் துறையை பெரிய திரையில் அடகு வைக்க தொடங்கினர். தொலைக்காட்சிகளில் தொடர்ந்து வெற்றிபெற, நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்படும் டிஆர்பி, எனும் புள்ளிப்பட்டியல் அதிகரிக்க இந்த நிகழ்ச்சியில் குறும்படங்கள் என்கிற வடிவில் பெரிய திரைப்படங்கள் எடுக்கப்பட்டது. இப்போது வெளிவரும் குறும்படங்களில் இன்னும் ஒருபடி மேலாக குத்துப்பாட்டு, கிரேன் ஷாட், கவர்ச்சியான காட்சியமைப்புகள், சண்டைக் காட்சிகள் என குறும்படங்களிலும் எல்லா விதமான மசாலாத் தனங்களையும் நுழைத்து அதை கிட்டத்தட்ட ஒரு சின்ன திரைப்படம் போலவே கட்டமைத்து வைத்துள்ளனர் இன்றைய "நாளைய இயக்குனர்கள்". பெரிய திரைப்படங்களுக்கு, வணிக கேந்திர மயமாக்கலுக்கு எதிராக அல்லது மாற்றாக இருந்த குறும்படங்கள் இந்த புள்ளியில்தான் தனது சுயம் இழந்து, நான் பெரிய திரைப்படம் எடுக்க வருபவர்களுக்கு, அங்கே நுழைய துனைபுரிகிறேன் என்கிற சார்பு நிலைபாட்டில் நுழைந்தது.
இப்படி குறும்படங்கள் மூலம் பெரியத் திரைக்குள் நுழைந்த நண்பர்களின் படங்களான காதலில் சொதப்புவது எப்படி?, பீட்சா, சூது கவ்வும், ஆகிய மூன்று படங்களிலும், போஸ்டர் முதற்கொண்டு, சின்ன சின்ன கதாபாத்திரங்கள் வரை நிறைய உழைப்பு தெரிகிறது. தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் நிறைய சாத்தியக் கூறுகளை இவர்கள் அடையாளம் கண்டுவைத்திருக்கிறார்கள். குறிப்பாக இந்த மூன்று படங்களில், பீட்சா, சூது கவ்வும் இரண்டு படங்களின் இசையும் ஒரு புதுவிதமான அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுத்திருக்கிறது.
|
இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, இப்படி ஒவ்வொரு பிரிவிலும் மிக நுட்பமாக ஒரு குழுவாக இணைந்து வேலைபார்த்து, அதை ஒரு புதிய கோணத்தில் வெளிக்கொண்டு வருவது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. காதலில் சொதப்புவது எப்படி, ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா உள்ளே நுழைந்ததும், இது யாருக்கான படம் என்கிற புரிதல் ஏற்பட்டுவிட்டதாலும், இந்த படம் முழுக்க முழுக்க இளைஞர்களை குறிவைத்து, இளமை துள்ளலோடு எடுக்கப்பட்ட விதமும் இந்த படத்தின் வெற்றியை தீர்மானித்ததாக இருந்தது. ஆனால் இந்த படத்தை இன்னும் சில ஆண்டுகள் கழித்து பார்த்தால், எப்படி ஒரு நாடகத்தை எப்படி மக்கள் பார்த்தார்கள் என்கிற கேள்வி எழுவதை யாராலும் தவிர்க்க முடியாது. ஒரு போலியான, தமிழ், தெலுகு திரைப்படங்களுக்கே உரித்தான, சினிமா தனமான கதாபாத்திரங்களை நுழைத்து, கொஞ்சம் சுவாரசியமாக சொல்ல முற்பட்டு, வெற்றிகரமாக ஒரு நாடகத்தைதான் அரங்கேற்றி இருந்தார்கள். சித்தார்த், நீரவ் ஷா போன்ற பெரிய பட்ஜெட் சினிமாவுக்கான கலைஞர்களின் வருகையும் சேர்ந்து இதை மிக சாதாரணமான ஒரு முயற்சியாகவே அடையாளம் காட்டுவதால், இந்த படம் குறித்து அதிகம் பேசுவதை தவிர்த்துவிடலாம்.
அதே போல், பார்வையாளனை கொஞ்சமும் சிந்திக்க விடாமல், ஒரு திருப்பத்தை கொடுத்து, திரைக்கதையின் வீரியத்தை உணர்த்திய படங்களில் பீட்சாவும் ஒன்று. இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒலி மிக முக்கியமானது. அதுவும் தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர்கள், ஒலியின் பயன்பாடு பற்றி பெரிதும் அலட்டிக் கொள்ளாத சூழலில் ஒலியையும் முக்கிய கதாபாத்திரமாக கொண்டு, வெளிவந்த வகையில் பீட்சா படமும் முக்கியமான ஒன்றே. மேலும், ஒளியை மிக சரியான அளவில், கச்சிதமாக பயன்படுத்திய சமீபத்திய தமிழ் திரைப்படங்களில் மிக முக்கியமனாது சூது கவ்வும் திரைப்படம். மேலும், ஒரு கதாப்பாத்திரத்தை அதுவும் ஹீரோயின் கதாப்பாத்திரத்தை கற்பனை பாத்திரமாக உலாவவிட்டு, அதில் நிறைய இளமை துள்ளலோடு, ஒரு தமிமனித ஆண் விரும்பும் பெண்ணாக, அவரை வடிவமைத்திருப்பதும், கதாப்பாத்திர வடிவமைப்பில் இந்த மாதிரியான புது யுக்தியும் சூது கவ்வும் திரைப்படத்தை கொஞ்சம் திரும்பிப் பார்க்க வைத்தது உண்மைதான். தவிர, Black Comedy என்கிற வகைமையில் தமிழ் சினிமாவில் வெளிவந்த ஒரு முக்கியமான திரைப்படம் இது. இப்படி இந்த படங்கள் குறித்து இன்னமும் வெவ்வேறு வடிவில், வெவ்வேறு புதிய முயற்சிகளை நண்பர்கள் சுட்டிக் காட்டலாம். ஆனால் அதெல்லாம் சினிமாவிற்கான சரியான கலைவடிவத்தை தந்தனவா என்கிற கேள்விக்கான பதில் மிகுந்த ஏமாற்றத்தையே அளிக்கும்.
மேலும் இதுப்போன்ற திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றவுடன் நிறைய நண்பர்கள் ஏதோ, தமிழ் சினிமாவில் புதிய அலை தோன்றிவிட்டது போல் புளங்காகிதம் அடைந்தனர். உண்மையாகவே இது புதிய அலைதான். ஆனால் புதிய வணிக அலை. எது வெற்றிபெருமோ, வெற்றிக்கான மசாலாக் கலந்த சூத்திரம் என்னவோ அதை பயன்படுத்தி, ஒரு கலையை, அதன் கலைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் புதிய அலை.
தொழில்நுட்பம், வித்தியாசமாக சிந்தித்து, புகுத்தும் சில திருப்பங்களும் மட்டும்தான் சினிமாவா? பீட்சா, சூது கவ்வும் இரண்டு திரைப்படங்களும் மிக குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது, எந்தவிதமான நட்சத்திர அந்தஸ்தும் இன்றி வெற்றிபெற்றது என்பதற்காக இதையெல்லாம் ஆக சிறந்த சினிமா என்று வகைப்படுத்த முடியுமா? தொழில்நுட்ப அளவில் மிக அருமையாக இருக்கிறது, அதற்காக எனக்கு இந்த படம் பிடித்திருக்கிறது என்று சொன்னால், நாம் எல்லாரும் டிஸ்கவரி சேனலில் வரும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு மிக சிறந்த பார்வையாளராக இருப்போம். அதைவிட வேறு எந்த சினிமாவில், ஒளிப்பதிவு சிறப்பாக இருந்துவிடப் போகிறது? எது வெற்றிபெறுமோ, அதற்கான சூத்திரங்களை அரைகுறையாக கற்றுக்கொண்டு, தேவையான மசாலாக்களை தூவிக்கொண்டு ஒரு திரைப்படத்தை வெளியிட்டு இப்போது வெற்றிபெற்றுவிடலாம். ஆனால் அது கலை, படைப்பு என்கிற வகைப்பாட்டில் காலா காலாத்திற்கும் நிலைபெற்றிருக்க வேண்டுமா இல்லையா என்கிற பதிலில்தான் இருக்கிறது நமது தேடல்.
பேரரசு, கே. எஸ். ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் கொடுக்காத வெற்றிப் படங்களா? இன்று அவர்கள் எல்லாரும் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை நாம் நினைவுகூர்ந்து பார்க்க வேண்டும். சினிமா என்பதற்கான வடிவத்தையே நாம் மிக தவறாக புரிந்துக் கொண்டுள்ளோம். நாடகத்தின் நீட்சியாகவே நாம் சினிமாவை இன்றளவிலும் பார்த்து வருகிறோம். பீட்சா, சூது கவ்வும் இரண்டு படங்களிலும் இருக்கும் நாடகத் தன்மையே அதற்கு சான்று. கம்பனி ஆர்டிஸ்ட் என்று ஒரு வகையறாவை சொல்வார்கள். தொடர்ந்து ஒருவரது எல்லாப் படங்களிலும் ஒரே மாதிரியான நடிகர்களை பயன்படுத்துவது, அவர்களுக்காகவே சில காட்சியமைப்புகளை உருவாக்குவது, அவர்களை மனதில் வைத்தே கதாபாத்திரங்களை வடிவமைப்பது என்பதெல்லாம் அதில் சேர்த்தி, இந்த திரைப்படங்களும் அத்தகைய பழைய உத்தியை மீண்டும் சினிமாவிற்குள் புகுத்தியுள்ளது. இந்த இரண்டு படங்களும் வெற்றிபெற்று, நிறையவே வசூல் செய்துள்ளது, எனில் இந்த சமூகத்திற்கு இந்த இரண்டு படங்களும் விட்டு சென்றது என்ன?
ஒரு மாடு பால்கொடுக்கிறது என்பதற்காக தொடர்ந்து கறந்துக் கொண்டே இருந்தால், இறுதியில் அதன் குருதிதான் நமக்கு மிஞ்சும். தொடர்ந்து வணிகம் ஒன்றே எங்கள் இலக்கு, எப்படி ஒரு படத்தை வெற்றிபெற செய்வது என்கிற இலக்கில் மட்டுமே குறிக்கோளாக இருப்போம் என்றால், அத்தகைய வெற்றியை உங்களுக்கு கொடுக்க ஒரு நல்ல ஆரோக்கியமான சமூகமே இல்லாமல் போய்விடும். அல்லது அத்தகைய வெற்றியைக் கொடுக்க கலைஞர்கள் கிட்டத்தட்ட தரகர்களாகவே மாற வேண்டிய நிலை ஏற்படும். பொழுதுபோக்கு ஒன்றுதான் சினிமாவின் இலக்கா என்கிற கேள்வியும் இதனூடாக எழுவதை தவிர்க்க முடியவில்லை.
குறும்படங்கள் மூலம் பெரிய திரைக்குள் நுழைந்த நண்பர்கள் செய்த புரட்சி என்ன? அவர்களின் சினிமா என்பதன் மீதான புரிதல் என்ன? ஒரு கலையை அவர்கள் கையாளும் விதம் எப்படிபட்டது? அவர்களால் இந்த சமூகத்தை ஒரு கலைக்குள் பயணம் செய்ய வைக்க முடியுமா? இந்த திரைப்படங்கள் விட்டு சென்ற ரசனை என்ன? கொடுத்து வாங்குதல் என்பதுதான் இந்த உலகம் தொடர்ந்து இயங்குவதற்கான கோட்பாடு. அதன்படி, இந்த திரைப்படங்கள் சமூகத்திற்கு எதை கொடுத்து இந்த வணிக வெற்றியைப் பெற்றுள்ளது? இந்த திரைப்படங்கள் முன்வைத்த அரசியல் கோட்பாடுகள் என்ன? என்கிற எல்லாக் கேள்விகளுக்கும் நீங்கள் ஒரு பதில் தயார் செய்து பாருங்கள். இந்த பதிலும், அவரவர் அறிவின் அடிப்படையிலும், இந்த சினிமா நமக்கு கற்பித்த கற்பித்தலின் அடிப்படையுலுமே அமையுமாயின் அதில் எந்தவித பயனும் இல்லை. மாறாக, உலகம் முழுவதுமான படைப்புகளை ஒப்புமை செய்து, சினிமா என்கிற ஊடகத்தின் சக்தியை அறிந்து, அதில் என்னவெல்லாம் செய்யலாம், செய்திருக்கிறார்கள், என்கிற தகவல்களை அறிந்து, நம்மை கைபிடித்து ஒரு கலைப்பயணம் அழைத்து செல்லும் நிறைய திரைப்படங்களை பார்த்து இதற்கான பதிலை தயார் செய்தால், நிச்சயம் இந்த படங்களில் மிஞ்சுவது ஒன்றுமில்லை. வெறும் பொழுதுபோக்கையும், வணிக வெற்றியையும் தவிர.
இதையும் தாண்டி, பொதுபுத்தி சார்ந்தவர்களின் மிக எளிமையான கேள்வி, ஏன் அப்படி அவர்கள், குறும்படங்கள் எடுத்துவிட்டு, பெரிய திரைப்படங்கள் எடுக்க செல்லக்கூடாதா என்பது? இதற்கான பதிலை நான் முன்னமே சொல்லிவிட்டேன். குறும்படங்கள் எடுப்பவர்கள் இறுதி வரை, குறும்படங்கள் மட்டும்தான் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிற அவசியமும், கட்டுப்பாடும் இல்லை. ஆனால், முற்றிலும் வணிக மயமான, பெரிய திரைப்படங்களில் சொல்ல முடியாத, பல விசயங்களை எடுத்தாள பயன்பட்டு வந்த குறும்பட துறையை, மீண்டும் ஒரு பயன்பாட்டு நோக்க அடிப்படையில் அணுகுவதையும், அதிலும், வணிக நோக்கத்தை புகுத்தி வணிகமாக்குவதையுமே நான் உட்பட, இங்கே பலர் எதிர்த்து வருகின்றனர். அப்படி குறும்படங்களிலும் வணிகம் சார்ந்து இயங்குவதால் என்ன பிரச்சனை என்று தொடர்ந்து கேள்விகள் எழுந்தால், நாம் அதை ஒரு விவாத வெளியில் வைத்துதான் அணுக வேண்டும். இங்கே எல்லாவற்றையும் வணிகம் சார்ந்து நாம் பயன்படுத்த தொடங்கினால், எளியவர்களின் கருவியாக நாம் எதை விட்டுவைக்கப்போகிறோம். வலியவர்களுக்காக குரல் கொடுக்க இங்கே ஆயிரம் கேந்திரங்கள் உண்டு. ஆனால் எளியவர்களுக்காக, அவர்களின் பிரச்சனைகளை உலகறிய செய்ய இங்கே காட்சி ஊடகங்கள் மட்டுமே ஒரே சக்தி வாய்ந்த ஆயுதம்.
உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் இந்த குறும்பட / ஆவணப்படங்கள் மூலம் நடந்த மாற்றங்களை பட்டியலிட்டால் அதன் வீரியம் உங்களுக்கு புரியும். ஆனால் இந்த கட்டுரையின் தலைப்புக்கு அது இப்போது இங்கே தேவை இல்லை என்பதால் இங்கேயே நிறுத்திக் கொள்கிறேன். எப்போதும் மெயின் ஸ்ட்ரீமுக்கு மாற்றாக, ஒரு வடிவத்தை வைத்திருப்பதே அறிவார்ந்த ஒரு சமூகத்திற்கு நல்லது. மாறாக, மெயின் ஸ்ட்ரீம் மாதிரியே அதற்கு மாற்றாக உருவாகி வரும் ஒன்றையும், நாம் பயன்படுத்த ஆரம்பித்தால், நாம் அழிவை நோக்கி பயணிக்கிறோம் என்பதே உண்மை.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |