லீனாவின் ஆவணப்படங்கள் – மாத்தம்மா, தேவதைகள்
பெரும்பாலும் ஊமைச் சமூகத்தின் குரல்களாகத்தான் லீனா மணிமேகலையின் படைப்புகள் தொடர்ந்து ஒலிக்கின்றன. இத்தகைய தெறிப்புகளுக்கு, ”எனது தொடர் பயணங்கள்தான் காரணமென”, லீனா சொல்லியிருந்தாலும், இன்னொரு பக்கமாக லீனாவின் ஆவணப்படங்களில் ஒளிந்திருக்கும் கனமான உள்ளடக்கத்தையும், தேர்ந்த வணிக சினிமாவிற்குரிய தொய்வடையாத வேகத்தையும், செறிவான கருத்துக்களையும், தொழில் நேர்மையையும், காட்சிப்படுத்துதலின் நுட்பத்தையும், சிறந்ததை நோக்கியே செல்லும் பார்வையையும், இடர்களை துச்சமென நினைக்கும் மன பக்குவத்தையும், உடனிருந்து பயணிக்கின்ற குழுவினையும் நாம் மறந்துவிடலாகாது.
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொண்டு, சமூகத்தில் மாதர்களுக்கு நிகழும் துன்பியல் சம்பவங்களை மாதர் குலத்தின் ஒருத்தியே முன்வைத்திருப்பது அவருடைய சமூக மாற்றத்தை நோக்கிய அக்கறையை காட்டுகின்றது.
ஆனால், முன்னொரு காலத்தில் பெண்கள் பங்கெடுத்துக்கொள்ளக்கூடாத உலகம் இதுவென ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தவைகளில் கூத்தும் அதன் தொடர்ச்சியான சினிமாவும் இடம்பிடித்திருக்கின்றது. ஆரம்ப கால சினிமாக்களில் பெண் வேடம் தரிக்க ஆளற்று, மொழுமொழுவென இருந்த ஆண்களையே பெண்களுக்கான அரிதாரம் பூசி காட்சியை அலங்கரித்ததற்கான தரவுகள் மறைந்துவிடாமல் இன்னும் நம்மிடையே உலவிவருவதை பாட்டனார்கள் சொல்லச்சொல்ல நாம் கேட்டதுண்டு.
|
ஏன்? திரைப்படம் தயாரித்த முதல் தமிழரான நடராஜ முதலியாரது படம் ”திரெளபதி வஸ்திராபரண”த்தில் பெண் வேடமேற்று நடிக்க ஆள்களே கிடைக்கவில்லையாம். விலைமாதுக்களும் சினிமாவில் நடிப்பதனை கேவலமாக எண்ணி தன்னை அண்ட விடாமல் ஒதுக்கித் தள்ளியிருக்கின்றனர். பின்னர் திரெளபதி கதாபாத்திரத்தில் நடிக்க ஆங்கிலேய பெண்மணி ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருக்கான காட்சியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச்சொல்லி விளங்க வைக்க ரங்கசாமிப் பிள்ளை என்பவரையும் நியமித்து படத்தை ஒரு வழியாக முடித்துள்ளார் நடராஜ முதலியார்.
சினிமாவில் பெண்கள் தோன்றினால் சமூகத்தின் புனித பிம்பத்தில் அழுக்கு படிந்துபோகும் என்று நினைத்த சமூகம்தான், கோவில்களில் ”தேவதாசிகள்”, என்ற பின்புலத்தில் விபச்சாரத்தை ஊக்குவித்திருக்கின்றன.
தேவதாசி எனப்பட்டவள் தேவர்களுக்கு அதாவது இறைவனுக்கு அடிமையானவள் என்று பொருள். இறைவனது திருப்பணியே தம்பணி என உணர்ந்து கடவுளின் திருத்தலத்திற்குண்டான வேலைகளைச் செய்வதே இவர்களின் தலையாய கடைமையென்ற போதிலும், அவ்வப்போது கோயிலுக்கு வருகைதருகின்ற ஊர்ப்பெரியவர்கள், தர்மகர்த்தாக்கள் முன்னிலையில் ஆடிப்பாட வேண்டும். இதற்காக முறைப்படி நடனமும் இப்பெண்கள் கற்றுக்கொண்டதாக வரலாறு கூறுகின்றது. வந்தவர்கள் நடனத்தில் லயம் கொள்ளாமல் நடனக்காரியின் மேல் இச்சை வைத்திருந்தாள், அதற்கும் மறுப்பு சொல்லாமல் இப்பெண்கள் அந்நீசர்களுடன் இரவைக்கழிக்க உடன்பட வேண்டுமாம், இன்னும் சிலர் இவர்களை ஆசை நாயகிகளாகவும் வெகுநாட்கள் வைத்துக்கொண்டிருந்தனர்.
தேவதாசிப்பெண்களுக்கு யாரையும் விருப்பப்பட்டு கல்யாணம் செய்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது., காரணம் இவர்கள் இறைவனையே கணவனாகப் பெற்றவர்கள் என்ற பெயருள்ளதால் பிறரை மணம்புரியக்கூடாது. அதாவது முழுக்க முழுக்க பிறரின் இச்சைக்காகவே தேவதாசிப்பெண்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
தனது வனப்பும் செழுமையும் இருக்கும்வரை இப்பெண்களுக்கான வரவேற்பு தொடர்ந்திருக்கும், பின்நாட்களில் இவர்களுக்கு தோலில் சுருக்கம் தென்பட்டவுடன் கோயில் முற்றத்தில் உட்கார்ந்துகொண்டு பிச்சையெடுக்க வைத்துவிடுவார்களாம். சகல செளபாக்கியங்களுடன் கணவன் மற்றவர்களுக்கு அருள் பாழிக்க மனையாள் மட்டும் வெளியே பிச்சையெடுப்பதா? என்றோ, இறைவனின் சொத்துக்கள் பாதியை இறைவனின் மனைவிக்கும் எழுதிவைக்கலாம் என்றோ எந்தச் சமூகமும் இவர்களுக்காக குரல்கொடுக்க முன்வரவில்லை. தனது காலம்தான் ஆடிப்பாடி ஓய்ந்துவிட்டது என்று அமைதியாகும் வேலையில் அடுத்ததாக இவர்களது மகள்கள் மீண்டும் இறைவனை (தந்தையை) மணந்துகொண்டு அடுத்தகட்ட தேவதாசிகளின் சேவை தங்கு தடையின்றி தொடர்ந்திருக்கின்றது. இப்படியான கட்டுப்பெட்டித்தனமாக வாழ்க்கையைத்தான் சுதந்திரத்திற்கு முந்தைய பெண்கள் வாழ்ந்து முடித்துள்ளனர்.
இதன்படி தென் மாநிலங்களில் நிகழ்ந்த தேவதாசி முறையினைப் பற்றி ஹங்கேரிய எழுத்தாளர் saskiya perserboom எழுதிய நித்யசுமங்கலி (nityasumangali) புத்தகத்தில் விலாவாரியாக குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கம் 1930 வரையிலும் உச்சத்தில் இருந்தாலும், டாக்டர். முத்துலெட்சுமி காலத்தில் இம்முறைக்கான கடும் எதிர்ப்பும், விழிப்புணர்வும் கொண்டுவரப்பட்டு அரசாங்கத்தின் மூலமாகவே இம்முறை ஒழிக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் பெருமையாக பறைசாற்றுகின்றன.
எனினும் அண்டை மாநிலங்களான கர்நாடகாவில் இம்முறை மாற்று வடிவில் உலாவருவதை பத்திரிக்கைகள் சில அம்பலப்படுத்தின. அதாவது ”ஜல்லம்மா”, என்ற தெய்வத்தின் பெயரால் பெண்கள் நேர்ந்துவிடப்பட்டு, தேவதாசி முறையானது வழுவாமல் பின்பற்றப்பட்டுவருகின்றது. வெளிப்படையாக சொல்லவேண்டுமானால் கடவுள் பெயரால் பாலியல் தொழில் கொடிகட்டிப் பறக்கின்றது.
இதேபோல்தான் சென்னைக்கு மிக அண்மையிலுள்ள அரக்கோணத்தின் கிராமமான மாங்கட்டுச்சேரியிலும் “மாத்தம்மாக்கள்”, என்ற பெயரில் தேவதாசிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றனர்.
இங்கு வாழ்க்கை நடத்திவருகின்ற அருந்ததியின சமூக மக்களிடையே வீட்டில் எந்தவொரு பிரச்சனையானாலும் ஆடு மாடுகளை கோயிலுக்கு நேர்ந்துவிடுவது போல பெண்களை மாத்தம்மாவிற்கு நேர்ந்துவிடுகின்றனர். இப்படியாக ஊருக்குள் பெரியதும் சிறியதும் பொடுசுமாக நிறைய மாத்தம்மாக்கள் சிவப்பு வண்ண உடையுடன் காணப்படுகின்றனர்.
இச்சூழலை மையமாக வைத்து லீனா மணிமேகலை 16 நிமிடத்தில் எடுத்த படம்தான் ”மாத்தம்மா”, இதுவே லீனாவின் முதல் படமென்பதும் கூடுதல் சிறப்பு.
சில வாரங்களுக்கு முன்பு ஊடகங்களில் நடிகை, பரதநாட்டியக்கலைஞர் ஸ்வர்ணமால்யா, வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது அவர் மேற்கொண்ட ஆய்வின் படி தேவதாசிகள் தெய்வத்திற்கு தொண்டுகள் செய்து சந்தோஷமாகவே வாழ்க்கை நடத்தி வந்திருக்கின்றனர் என்றும், எனவே அம்முறையை ஒழிக்காமல் அப்படியே விட்டிருக்கலாம் என்பது போலவும் தரவுகள் சேகரித்துவைத்திருந்தார்.
நாம் அக்காலத்திற்குச் சென்று தேவதாசிகள் எவ்வாறு வாழ்க்கை நடத்தினர் என்று பார்ப்பது ஆகாத காரியம், ஆனால் இந்த மாத்தம்மாவில் பெண்கள் பேசும் விஷயங்களிலிருந்து ஓரளவேனும் தேவதாசிகளின் துன்பங்களைத் தெரிந்துகொள்ளலாம். எந்தப் பெண்ணும் இதனை வரவேற்கும் விதமாக ஒரு வார்த்தையும் உதிர்க்கவில்லை. திருவிழாக்களுக்கு சென்று ஆடும் காலகட்டத்தில் அங்கு கூடி நின்று வேடிக்கை பார்க்கும் ஆண்கள் அவர்களுக்கு இஷ்டப்பட்ட இடத்தில் குத்திவிடப்படும் பணத்தை எடுத்துக்கொண்டு பேசாமல் வரவேண்டுமாம்.
லீனாவின் படங்களது சிறப்பே சம்பவங்கள் நடக்கும் களத்தை அதே ரணத்துடன் பார்ப்பவர்களுக்கு அளிப்பதே. இது அவருக்கு முதல்படத்திலேயே கைகூடிவரப்பட்டிருக்கின்றது, அடுத்தடுத்த படங்களில் இன்னும் மெருகேற்றப்பட்டிருக்கின்றது.
ஆரம்பத்தில் அக்கிராம மக்களுக்கேயுரிய குலதெய்வமான மாத்தம்மாவைப் பற்றிய பாடலுடன் தொடங்கி வைத்து சுற்றுவட்ட கிராமத்தின் பகுதிகளையும் மக்களின் நடைமுறைகளையும் பதிவுசெய்வதன் வாயிலாக எளிதாக படத்தினுள் பார்ப்பவர்களை உட்புகுத்தி விடுகின்றார்.
ஒவ்வொரு பெண்ணையும் நேர்காணல் செய்வதற்கு முன் அவரது இயல்பான செயல்களை படம்பிடித்து, அதிலிருந்து தொடர்கின்றார்.
எனினும் இப்படத்தில் முழுக்க முழுக்க பெண்களின் பார்வையிலேயே படம் பயணிக்கின்றது. ஒரு ஆவணப்படம் நடுநிலையுடன் இருக்க எதிர் தரப்பினரையும் விசாரித்திருந்து அவரது கருத்துக்களையும் பதிவுசெய்திருக்க வேண்டும். ஆனால் இதனை மாத்தம்மாவில் லீனா முற்றிலுமாக தவிர்த்துவிட்டதன் காரணம் புரியவில்லை.
ஆண்களது பார்வையிலான மாத்தம்மக்களின் நிலை என்ன? இத்தகைய மூட நம்பிக்கைகளுக்கு அவர்கள் சொல்கின்ற விளக்கங்கள் என்னவாகயிருக்கும்? என்பதெல்லாம் லீனா மாத்தம்மாவில் பதிவிட தவறியிருக்கின்றார். ஆனால் லீனாவின் படமேயான ”பறை”யை இதற்கான சரியான உதாரணமாகச் சொல்லலாம். அதாவது தாழ்த்தப்பட்ட மக்கள் மேல்தட்டு மக்கள் கொடுக்கின்ற பாலியல் தொல்லைகளை ஒவ்வொருவராக முன்னிலைப்படுத்தி வருவர். ஆனால் லீனா அதோடு நின்றுவிடாமல் அடுத்த கட்டத்தைநோக்கி படம் முன்னேறுகின்ற தருணத்தில் குற்றம் சாட்டப்படுகின்ற உயர்சாதியினரின் கருத்துக்களையும் பதிவுசெய்திருப்பார். தலித்களின் வலி நிறைந்த உண்மைக்கு முன்னால், மேல்தட்டுகளின் பகட்டான பொய்கள் சிதறடிக்கப்பட்டுவிடும், என்பது பார்ப்பவர்களுக்கு அப்பட்டமாகத்தெரிந்தாலும் எதிர்தரப்பினரது கருத்துக்களையும், மனோநிலையையும் பதிவுசெய்வது அவசியம்., இது மாத்தமாவில் இல்லை.
மேலும் இப்படத்தில் ஆவணப்படத்திற்கேயுரிய பேச்சுகள் நீண்டுகொண்டிருப்பது தெரிகின்றது. படம் எடுத்துக்கொண்ட கருத்து மிகவும் ஆழமானது எனினும் அதற்கு இப்படத்தில் ஆழம் தொனிக்கும் படியான காட்சியமைப்புகள் மிகவும் சொற்பமே. இன்னும் கொஞ்சம் ஆழமாக பாய்ந்திருந்தால், மாத்தம்மாக்களின் நிலையை சமுதாயத்தின் முகத்தில் அறைந்தாற் போல சொல்லியிருக்க முடியும்.
ஆனால் மாத்தம்மாவில் ஏற்பட்டுள்ள ஓரிரு குறைகளை தேவதைகள் ஆவணப்படத்தில் காண்பதரிது. 2003ல் மாத்தம்மா எடுத்த லீனாவிற்கும், 2008ல் தேவதைகள் எடுத்த லீனாவிற்கும் மிகப்பெரிய சத்தான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. தனது அடுத்தடுத்த வேலைகளிலேயே நிறைய நுணுக்கங்களையும், செய்நேர்த்தியையும் கற்றுக்கொண்டுள்ளாரென்பது தெரிகின்றது.
ஆவணப்படத்திலேயே வித்தியாசமான கதைசொல்லும் திறனை தேவதைகள் படத்தில் காணலாம். லீனாவின் ”பெண்ணாடி”, படத்திலும் மாறுபட்ட திறனாய்வு முறைதான் பின்பற்றப்பட்டிருக்கின்றது.
மூன்று பெண்களின் கதைகளை, வேறுபட்ட ஊர்களை, ஒன்றோடொன்று இணைந்து கலந்து ஒன்றன் பின் ஒன்றாக காட்சிப்படுத்தியிருக்கின்றார். ஒருசிலர் இம்மாதிரியான கதைக்கருவை தேர்ந்தெடுத்தால், ஆவணப்படத்தில் குழப்பம் விளைவிக்காமலிருக்க ஒரு பெண்ணின் கதையினை முழுமையாக திரையில் பதிவிட்ட பின் அடுத்த பெண்ணை பற்றிய சம்பவங்கள் காட்சிப்படுத்த படும், எனினும் படத்தில் எவ்வித சறுக்கல்களும் தெரியாது. லீனாவின் தைரியத்தை பறை சாற்றுவதுபோல ஒன்றுக்கொன்று கலப்பாக மூன்று பெண்களைப்பற்றியும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த மூன்று ஊர்களைப் பற்றி திரையில் வருவதற்கு முன்னர் அதனை மிக சாத்தியமாக பகுத்தறிந்து காட்சிப்படுத்தியிருக்கின்றார். உதாரணமாக புதுச்சேரியை காண்பிக்கும் சமயத்தில் புல்லாங்குழலின் இசை ஒலிக்கின்றது. இத்தகு படத்தொகுப்பை சாத்தியப்படுத்திய படத்தொகுப்பாளர் தங்கராஜை பாராட்டலாம்.
|
பிணம் எடுக்கும் வேலை செய்யும், ’கிருஷ்ணவேனி’, சாவுக்கு முன் ஒப்பாரி வைத்து ஆடி சம்பாரிக்கும், ’லட்சுமி’, பெண்களுடன் கடலுக்கு சென்று மீன் பிடிக்கும், ’சேதுராக்கு’, என மூவரையும் தம் காமிராவிற்குள் அடைத்துவைத்துவிட்டார். மற்ற ஆவணப்படங்களைப்போலல்லாமல் இப்படமானது பிற பெண்களுக்கும் தன்னால் வாழ முடியுமென்ற தன்னம்பிக்கையை ஊட்டுகின்றது.
அவர்கள் மூவரும் பேசும்பொழுது அவர்களுக்கேயுரித்தான வட்டார வழக்கும், பேச்சு நடையும், இயல்பான வாழ்க்கை முறையும் படத்திற்கு தொய்வடைய விடாமல் கை கொடுத்து தூக்கி நிறுத்துகின்றன. முன்பு மாத்தம்மாவில் செய்த தவறை இதில் நிவர்த்தி செய்துவிட்டார். என்னவெனில் மாத்தம்மாவில் குறிப்பிட்ட ஒருவரை உட்காரவைத்து அவரது கருத்துகள் கேட்கப்படும், ஆனால் தேவதையில் அவ்வாறில்லை. உடம்பு நோவுக்கு தண்ணீர் காயவைத்தல், முத்துச்சிப்பி பொறுக்குதல், குழந்தகளுடன் ஒன்றாக உண்ணுதல், ஒப்பாரி வைப்பது, ஆட்டம், கடலில் துடுப்பு என்று வாழ்க்கையினூடாக பதிவுசெய்யப்பட்ட தேவதைகள் சிறப்பானது.
மூன்று பெண்களும் தனது அன்றாட அலுவல்களை கவனித்துக்கொண்டிருக்கையில் நேர்காணல் கண்டது போலயிருக்கும், ஒரேயொரு சம்பவத்தை தவிர மற்ற இடங்களில் யதார்த்தமான வாழ்க்கை முறையானது இயல்பாக பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது. அந்த ஒரு இடத்தை பின்பு காணலாம்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த பெண் லட்சுமி பாடும் பாட்டில் ஆகாத சொற்கள் என நம்மக்கள் புறந்தள்ளியிருக்கும், கெட்ட வார்த்தைகள் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்படுகின்றது, ஆனால் எந்தவித தயக்கமும் இல்லாமல் அதனையும் அப்படியே பதிவிட்டிருப்பதிலிருந்து லீனாவின் உள்ளதை உள்ளபடி காட்டும் மனப்பாங்கு தெரிந்துகொள்ளலாம்.
|
லட்சுமி தன் ஆட்களுடன் வேலைக்குச்சென்றுகொண்டிருக்கும் சமயத்தில் அவள் பிற ஆட்களுடன் பேசும் வசனங்கள், லாரியில் ஏறும்போது கூட எதற்கும் அஞ்சாத பாங்கு என காட்சிப்படுத்திக்கொண்டிருக்கின்ற சமயத்தில் லாரி கடந்ததை மையப்படுத்தி காட்சி வெட்டப்பட்டு புதுச்சேரி கிருஷ்ணவேனி தெரிவார். எந்த இடத்திலும் குறுகுறுக்காத சரியான நுட்பங்களுக்கான உதாரணங்களாக இக்காட்சிகளை சொல்லலாம், இது போன்று ஏராளமான நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
லீனா காட்சிகளை தேர்ந்தெடுப்பதிலும், கருத்துச்செறிவுமிக்க கருவை மையப்படுத்துவதிலுமே சக போட்டியாளர்கள் பக்கத்தில் நெருங்காதபடி தணலாய் நிற்கின்றார். இவர் படத்திற்கு சம்பந்தமற்ற எந்தக் காட்சியையும் இடைச்செருகலாக நுழைப்பதில்லை, மக்களிடம் கருத்துக்கேட்கும்பொழுது கூட படத்திற்கு என்ன தேவையோ அதனை மட்டும் எடுத்தே பயன்படுத்துகின்றார். வசனங்களை சரியான இடத்தில் நிறுத்த தெரிந்திருப்பதால், படத்தின் நகர்விற்கும், துல்லியத்திற்கும் இவை உதவுகின்றது.
இந்த மூன்று பெண்களுமே தனது நிலைமைக்கு வருந்துபவர்களாக தெரியவில்லை, வாழ்வின் சூனியத்தை உணர்ந்துகொண்டு அதனை வென்று நடைபோடுகின்றனர், அதனினும், . தனக்காக விதிக்கப்பட்ட வேலையை உணர்ந்து செய்கின்ற போது வாழ்க்கையின் கசடுகளை துடைத்தெறிந்துவிட முடியுமென்பதால் சுடுகாட்டு வேலை செய்தாலும் அதனை உணர்ந்தவராக எனக்கு பிறந்து இறப்பு வரை சுடுகாட்டு வாடையிலேயே இருந்தால் போதும் என்று பதிவிடுகின்றார், கிருஷ்ணவேணி
எனினும் இவர் சடலத்தை புதைக்கும் காட்சியை ஆவணப்படுத்திய பொழுது அந்தப் பெண்ணே பிணத்தை எடுத்து தூக்கி குழிக்குள் போடும்பொழுதுதான் காட்சி சிறப்பாக வரும் என்ற நினைத்து அவரே சென்று பிணத்தை எடுத்துத் தூக்கிப் போடுமாறு பின்குரல் கேட்கின்றது., பின்னரே கிருஷ்ணவேனி சென்று அவர்கள் சொன்ன காரியத்தைச் செய்கின்றார். இது ஆவணப்படத்தில் புகுத்தப்பட்டது போல் தெரிவதால், இயல்பான காட்சியோடு ஒன்றிவருவது இல்லை. முழு ஆவணப்படத்தையும் பார்த்து முடித்த பின்பும் இந்த ஒற்றைக் காட்சி மட்டுமே உறுத்திக்கொண்டிருக்கின்றது.
|
எனினும் கிருஷ்ணவேனி அந்த வேலையைதான் செய்கின்றாலென்பதால் அவளே பிணத்தை எடுத்து போடுவது மாதிரியாகக் காட்சி அமைப்பது தவறில்லை, ஆனால் பின்னாலிருந்து ஒலிக்கும் குரலையாவது வெட்டியிருக்கலாம். அவ்வாறு செய்யாமல் லீனா விட்டிருப்பது எதற்காக?
இந்த ஆவணப்படத்தை பார்க்கும் சமயத்தில் பெண்கள் பற்றிய ஒரு கவிதைதான் ஞாபகம் வருகின்றது, ஆவணப்பட இயக்குனர், கவிஞர் ரவி சுப்ரமணியத்தின் வாயிலாக கேட்கப்பட்டாலும், எழுதியவர் பெயரும், கவிதையும் சரியாக ஞாபகமில்லை. எனினும் அதன் சாராம்சம் இதுதான்,
“தேவதையொருத்தி சிலுவையில் அறையப்பட்டிருக்கின்றாள்.
அவளுக்கு மென்மேலும் நாம் துன்பங்கள் விளைவித்துக்கொண்டிருக்கின்றோம்,
எனினும் அவள் புன்னகையை தவிர வேறு எதையும் தர தவறியதில்லை,
அந்தத் தேவதை யாரென தெரிந்துக்கொள்ள வேண்டுமானால்
கொஞ்சம் எட்டிப்பாருங்கள்
உங்கள் வீட்டு சமயலறையில்”
இப்படி சமயலறையில் ஒளிந்துகொண்ட பெண்களும், இன்று தைரியமாக வெளியுலகத்திற்கு வந்து ஆண்களுக்கு நிகரான வேலையை செய்து ஊடகத்துறையில் ஜொலித்து வருகின்றார்களென்பது பெருமைப்பட்டு வரவேற்கத்த விஷயம். இனி எதிர்காலத்தில் ஆண்களுக்கு நிகரான வேலை என்று எதுவுமே இருக்கப்போவதில்லை என்பது உறுதி.
படம் முடிந்த பின்பு முழுப்பெருமையும் தனக்கே உரித்தாக்கிக்கொள்ளாமல் இறுதியில் லீனா & குழு என்றுதான் இடம்பெற வைக்கின்ற நியாயம் லீனாவிடமும் காணமுடிகின்றது.
மாற்றத்தை நோக்கி முன்னேறத்துடிக்கும் கலைஞர்களுக்கு மத்தியில் எவருக்கும் வளைந்து கொடுக்காமல் தான் நினைத்த விஷயத்தை திரையில் கொண்டுவரும் லீனாவிற்கு தனியிடம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் லீனா அந்த தனியிடத்திலிருந்து அவ்வப்போது விலகிவந்து மக்களோடு மக்களாக இணைந்து இதுவரை 10க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களையும், செங்கடல் என்னும் திரைப்படத்தையும் முடித்துள்ளார். தலித் மக்களின் வாழ்க்கை குறித்தும் ஆவணப்படங்களை பதிவு செய்திருக்கின்றார். பறை என்ற படத்தின்மூலம் மேல் சாதியினர், தாழ்த்தப்பட்ட சாதி மக்களை எவ்வாறு வயது வித்தியாசம் பாராமல் காம இச்சைக்கு ஆட்படுத்தியிருக்கின்றனர் என்பதனையும், வளர்ந்து வரும் உலகமயமாதலால் பெருகிவருகின்ற தொழில்நுட்பத்தில் தலித் மக்களின் வாழ்வாதாரம் எவ்வாறு நசுக்கப்பட்டிருக்கின்றது என்பதனை break the shackles படமும் அழகாக பதிவு செய்கின்றது.
கவிதைச் சாறு நிறைந்த பெண்ணாடி, பாலியல் திருமணத்தின் அவலங்களை முன்வைக்கும் பலிபீடம் முதலானவைகளும் இவரது படைப்புக்கான முத்திரைகள்.
உண்மையின் மடியில் அமர்ந்தும், நேர்மையின் தோளைப் பற்றியும் இவர் தரித்திருக்கும் பத்து ஆவணப்படங்களையும் உலகமெங்கும் வரவேற்கின்றது, இத்தகைய படங்களின் நோக்கமான சமூகவியல் மாற்றங்களும் லீனாவால் நிகழ்ந்துள்ளன. இவரை தமிழக மக்கள் மட்டுமல்லாமல், உலக மக்களும் அங்கீகரித்து பல பெருமைமிகு விருதுகளை அளித்துள்ளனர். தொடர்ந்து மாற்று சினிமாக் கலைஞர்களை ஊக்குவித்து கெளவரப்படுத்தும் தமிழ் ஸ்டூடியோவின் 2013ஆம் ஆண்டிற்கான லெனின் விருதினையும் இவர் பெற்றுள்ளார்.
எவரும் எளிதில் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்திற்கு லீனா மணிமேகலை சென்றிருப்பதால், சக ஊடகத்துறை நண்பர்களாலேயே புறக்கணிக்கப்பட்டு
“திமிர் பிடித்தவள்”, என்ற பெயரையும் லீனா சம்பாதித்துள்ளார்.
பலவருடங்கள் பேசப்போகும் ஆவணப்படங்களையும், கவிதைத் தொகுப்புகளையும், எவரும் பேசத் தயங்குகின்ற ஈழத்தையும், இலங்கையும் மையப்படுத்தி ”செங்கடல்”, என்ற படமெடுத்து, தணிக்கைக்குழுவுடன் தொடர்ந்து போரிட்டு, பின்பு தானாகவே வெவ்வேறு ஊர்களில் அப்படத்தை திரையிட்டு, மக்களை விழிப்புணர்வு அடையச்செய்வது ஒன்றையே நோக்கமாக கொண்டு போராடிவருகின்ற திறமைகள் லீனாவிற்கு மட்டுமே உரியதால், லீனா உண்மை தெறிக்கும் திமிருக்கு தகுதியானவர்தான்.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |