உயிர் கொடுக்கும் கலை 6 - டிராட்ஸ்கி மருது
- ஒலிப்பதிவும் எழுத்தும் : யுகேந்தர் |
ப்ரொடக்சன் டிசைனர் (Production Designer)
ஒரு திரைப்படத்தை காட்சி பூர்வமாக, சிறப்பாக வழுங்குவதற்காக பணி செய்பவர் ப்ரொடக்சன் டிசைனர். நம் தமிழ் சினிமாவில், கலை இயக்குனரை ப்ரொடக்சன் டிசைனர் என்று ஒரு விதத்தில் கூறலாம். முதல் முறையாக ப்ரொடக்சன் டிசைனர் என்ற வார்த்தை 1939`இல் வெளிவந்த Gone with the wind திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது. கலை இயக்குனரின் பங்கு அல்லாமல், Menzies`இன் பங்களிப்பை குறிப்பிடும் நோக்கத்தில் ப்ரொடக்சன் டிசைனர் என்பதை இயக்குனர் அறிமுகப்படுத்தினார். வண்ணம், ஓவியம், mood, படத்தின் மிக முக்கியமான லாங் ஷாட், உட்புற வடிவமைப்பு, உடை என இவை எல்லாவற்றிலும் மென்சிஸின் பங்களிப்பு இருந்தது. திரைப்படத்தை கலைநயத்துடன் உருவாக்க இயக்குனருக்கு மென்சிஸ் உறுதுணையாக இருந்ததால் ப்ரொடக்சன் டிசைனர் என அவரை குறிப்பிட்டிருந்தார்.
இப்போது ப்ரொடக்சன் டிசைனரின் செயல்பாடு என்பது பல்வேறு தரப்பினரால் வெவ்வேறு விதமாக குறிக்கப்படுகிறது. விளம்பர வடிமைப்பில் ப்ரொடக்சன் டிசைனரின் வேலை வேறு, அனிமேஷன் படங்களில் ப்ரொடக்சன் டிசைனரின் வேலை வேறு. ஜப்பானிய அனிமேஷன் படங்களில், சினிமாவின் பின்புலத்தை (background) வடிவமைத்து, ஒழுங்கு செய்து, அதில் பணிபுரியும் கலைஞர்களை ஒருங்கிணைக்கும் வேலை செய்பவரை ப்ரொடக்சன் டிசைனர் என குறிப்பிடுவார்கள். ஹாலிவுட்டில் ப்ரொடக்சன் டிசைனரின் நிலை வேறு மாதிரியான ஒரு இடத்தில் இருக்கிறது. சமகாலத்தில் நாம் கண்களால் பார்க்கும் விஷயங்களையும் கடந்து, அதீதமான கற்பனை (fantasy, அவதார் போன்ற படங்கள்) அல்லது வேறு ஒரு காலத்தில் நடக்கும் கதை (period film) படமாக எடுக்க வேண்டுமெனில் அதை pre-visualise செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதை ஒரு அனுபவமிக்க ஒருவர் கட்டுப்படுத்தும் ஒரு வழக்கம் கொண்டுவரப்பட்டது.
பெரிய செலவில் படம் எடுக்கும் ஹாலிவுட் படத்தயாரிப்பாளர், ஒரு கதையை திரைப்படமாக்கலாம் என முடிவெடுத்த பின், முதலில் அணுகுவது ப்ரொடக்சன் டிசைனரை தான், இயக்குனரை அல்ல. படத்தின் பிரதியை (script) ப்ரொடக்சன் டிசைனரிடம் கொடுப்பார்கள். பிரதியை படித்த பின் திரைப்படமாக்கும் சாத்தியம் (prodcution viable) உள்ளதா என்பதை முதலில் தெரிவிப்பார். சாத்தியம் என்றால், திரைப்படத்தின் scale, mood, உடை, look, எந்த இடத்திலெல்லாம் செட் போட வேண்டும், எந்த இடத்திலெல்லாம் CG இருக்க வேண்டும், எந்தெந்த மென்பொருள்கள் பயன்படுத்த வேண்டும், வெளிப்புற படப்பிடிப்புகள் எந்தளவுக்கு தேவை, தயாரிப்பு செலவு, எவையெவை செய்முறை சாத்தியமானது/சாத்தியமற்றது, புத்திசாலிதனமாக பார்வையாளர்களுக்கு எப்படி வெளிப்படுத்துவது ஆகியவற்றை ப்ரொடக்சன் டிசைனர் (கலை இயக்குனராக இருந்த அனுபவம் மற்றும் இது சார்ந்த ஆய்வு பொருட்களின் உதவியுடன்) நிர்ணயம் செய்வார். இந்த மதிப்பீடுகளுக்கு பிறகு, ஹாலிவுட் படங்களில் இதை அடிப்படையாக வைத்து சில படங்கள், ஓவியங்கள் செய்வார்கள். பிறகு
வெளிப்புற படப்பிடிப்பு இடங்களை தேடி கண்டுக்கொள்வார்கள். ப்ரொடக்சன் டிசைனர் ஓவியம் வரைந்து, முக்கிய படங்களையெல்லாம் வரைவதோடு, என்ன mood இருக்க வேண்டும், என்ன lighting இருக்க வேண்டும், என்ன colour scheme`ல இருக்க வேண்டும் என்றும் படத்தை visual`ஆக எப்படி அளிப்பது என்பதையும் வடிவமைப்பார். ஒவ்வொரு பகுதிக்கும் உள்புற படப்பிடிப்பு சரிவருமா அல்லது வெளிபுற படப்பிடிப்பு சரி வருமா என தயாரிப்பு செலவை குறிப்பிட்ட செலவுக்குள் முடிப்பதற்கும், கலைநயத்துடன் வடிவமைப்பதற்கும் என இரண்டும் சேர்ந்து நிர்ணயம் செய்வார்.
கலை (ART), அறிவியல் (SCIENCE), தொழில்நுட்பம் (TECHNOLOGY) இவை மூன்றையும் இணைப்பவராக ப்ரொடக்சன் டிசைனர் இருக்கிறார். டிஜிட்டல் தொழிநுட்பம் வந்த பிறகு pre-visulaisation’க்கான சாத்தியமும் இப்போது வந்துவிட்டது. திரைப்படத்திற்கு தேவையெனில் அது சார்ந்து ஆய்வும் செய்வார். ஒரு நூற்றாண்டுக்கு முன் நடக்கும் கதையென்றால், அது துறைமுகத்தில் நிகழும் காட்சியென்றால், துறைமுக தொழிலாளி எப்படி இருந்தார், துறைமுகம் எப்படி இருந்தது, அன்று லைட்டிங் எப்படி இருந்தது, வாழ்வு முறை எப்படி இருந்தது, prop என்னவெல்லாம் இருந்தது ஆகியவற்றை ஆய்வின் மூலம் தெரிந்துக்கொள்வார். ஏற்கனவே ஒரு கலை இயக்குனராக இருந்த பட்சத்தில் அவருக்கு கிடைத்த அனுபவம், ஒரு செட் வடிவமைப்பாளரை எப்படி வேலை வாங்குவது, ஒரு செட் எப்படி போடுவது போன்றவை உதவும். ஒளிப்பதிவாளருக்கு இந்த படத்தினுடைய mood`ஐ வெளிப்படுவதறகான ஓவியத்தையோ அல்லது ஏற்கனவே இருக்கும் பிரபல ஓவியரின் ஓவியத்தையோ வழங்க வேண்டும். Source material’களை சேகரித்து, இது
சாத்தியம் என்பதை இன்னின்னவற்றை மினியேட்ச்சராக பண்ணலாம், இவற்றையெல்லாம் செட் போடலாம், இவற்றையெல்லாம் லைவ்வாக அங்கேயே சென்று எடுக்கலாம், லைவ் லொக்கேஷனிலேயே செட்டையும் போடலாம் என கலாபூர்வமான வழியிலும் பொருளாதாரரீதியிலும் படத்தினுடைய structure`ஐ வடிவமைப்பதற்கான சாத்தியங்கள் ப்ரொடக்சன் டிசைனரில் இருந்துதான் ஆரம்பிக்கிறது.
காட்சிரீதியாக, கலைநயத்துடன் பார்வையாளனுக்கு சொல்ல வரும் கருத்தை உடனடியாக வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பல ப்ரொடக்சன் டிசைனரை எடுத்துகாட்டாக சொல்லலாம். பலரை நான் ஊன்றி கவனித்திருக்கிறேன். தி மிஷன் (The Mission) என்று ஒரு படம் வெளியானது, ராபர்ட் டி நிரோ நடித்த படம். திரையரங்கில் அந்த படத்தை முதல் முறை பார்த்த போது அதன் காம்போசிஷன், வண்ணம் என எல்லாம் எனக்கு ஸ்பானிஷ் ஓவியங்களை நினைவு படுத்தியது. ஸ்பானிஷ் ஓவியங்களை பார்பது போலவே இருக்கிறது என்று நினைத்துக்கொண்ட்டேன். அந்த படத்தைப்பற்றி பிறகு படிக்கும் போது, ஒளிப்பதிவாளர், இயக்குனர் மற்றும் ப்ரொடக்சன் டிசைனர் மூவரும் ஐரோப்பாவில் உள்ள அனைத்து அருங்காட்சியத்தில் இருக்கும் ஸ்பானிய ஓவியங்களை பார்த்து அதன் அடிப்படையில் இந்த படம் வடிவமைத்திருக்கிறார்கள் என்று அறிந்தேன். எனக்கு அந்த படம் பார்த்த உடனே தெரிந்துவிட்டது. கொலம்பஸ் பிறகான காலம், அப்போது இருந்த ஸ்பானிய ஓவியங்களின் தாக்கம், எதன் மூலமாக நாம் ஸ்பெய்னை பார்த்திருக்கிறோமோ, அந்த லைட், கலர், பெரிய மாஸ்டர்ஸுடைய ஓவியங்களை பார்த்தது, அந்த அனுபவத்தை திரைப்படம் எனக்கு தந்தது. நான் விரும்பி பார்க்கும் பல ப்ரொடக்சன் டிசைனர் இருக்கிறார்கள். க்ளாடியேட்டரின் (Gladiator) ப்ரொடக்சன் டிசைனர் - Arthur Max. பைரேட்ஸ் ஆப் கேரிபியனின் ப்ரொடக்சன் டிசைனர் - Brian Morris (முதல் படம்). பைரேட்ஸ் ஆப் கேரிபியன் படம் பார்த்த போது ஓவியர் Howard Pyle`இன் (painter,illustrator) ஓவியங்கள் நினைவுக்கு வந்தது. பைரேட்ஸை பற்றி அதிகமாக ஓவியம் வரைந்திருக்கிறார். கிட்டத்தட்ட 600-800 படங்களுக்கு மேல் பைரேட்ஸ் குறித்து அவர் வரைந்திருக்கிறார். அவருடைய 300-400 மாற்றி வரிசையாக அடுக்கினாலே கதை வந்துவிடும். அவர்களின் வாழ்வு, கதை என பல சம்பவங்களை ஓவியமாக படைத்திருக்கிறார். முதல் முறையாக பைரேட்ஸ் ஆப் கேரிபியன் பார்த்த போது, ஜானி டெப்பை பார்த்தவுடனே Pyle`யின் ஓவியம் உயிருடன் வந்தது போல நான் உணார்ந்தேன். ஆடை, தலைமுடியில் இருக்கும் முத்து என இவை அனைத்தும் அவருடைய ஓவியத்திலிருந்து எடுத்தது தான். இது குறித்து மேலும் ஊன்றி படிக்கும் போது, சில புகைப்படங்களை பார்த்தேன், அதில் இந்த படக்குழுவினர் அவர்களுடைய ப்ரொடக்சன் அலுவலகத்தின் சுவர், தரையென அனைத்திலும் Pyle'யின் ஓவியங்களை ஒட்டி வைத்து இருந்தனர். அங்கு தான் கதையும் ப்ரொடக்சன் வேலையும் நடந்திருக்கிறது. Pyle அமெரிக்க சுதந்திர போர் குறித்து பல அருமையான ஓவியங்கள் வரைந்திருக்கிறார். மெல் கிப்சன் நடித்த Patriot படத்தின் பல ஷாட்கள் Pyle`இன் ஓவியங்களிலிருந்து எடுத்தது. 60, 70களில் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்காக பணிபுரிந்த ப்ரொடக்சன் டிசைனர்களின் பங்களிப்பும் நான் விரும்பி வெகுவாக ரசித்தது.
`அவதாரோ` அல்லது `டைட்டானிகோ`, என்னோட எண்ணத்தில் சிறுகதைகள் அல்லது நாவல் எழுதும் எழுத்தாளரால் இந்த படங்களை பிரமிக்க தக்க முறையில் காண்பிக்க முடியாது. கதை நடத்தப்படுவதற்கான உணர்வுகள் குறித்து எழுதலாம். ஓவியருக்கு இருக்கும் அதே மாதிரியான பார்வை இயக்குனருக்கும் தேவை. டைட்டானிக்கை இயக்கிய ஜேம்ஸ் கேமுரூனும், க்ளாடியேட்டர் திரைப்படத்தை இயக்கிய ரிட்லி ஸ்காட்டும் ஓவியர்கள், இவர்களின் படத்தினுடைய வீச்சு மிக அதிகம், அதே போல் ப்ரொடக்சன் டிசைனரின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க ஒன்று. 1850களில் பிரான்ஸில் வாழ்ந்த `ஜெரோம்` என்ற ஓவியரின் ஒரே ஒரு ஓவியம் தான் க்ளாடியேடர் திரைப்படம் சாத்தியமாவதற்கான காரணமாகும். ப்ரொடக்சன் டிசைனர் அந்த ஒரு படத்தை அடிப்படையாக வைத்து தான் திரைப்படத்தை வடிவமைத்தார். Lawrence Alma-Tadema என்ற ஓவியர், கிரேக்க காலத்தினுடைய சடங்குகள், தினப்படி மக்கள் வாழ்க்கை முறை, வீதிகள் என பல ஓவியங்களை அருமையாக படைத்திருக்கிறார். அவருடைய ஓவியங்களிலும் prop மற்றும் உடை இருந்தது. அவரின் ஓவியங்களும் கிளாடியேட்டர் திரைப்படத்தை வடிவமைக்க பெரிதும் உதவியது. சில நேரங்களில் ப்ரொடக்சன் டிசைனர் சைக்காலஜிக்கலாகவும் அழகியியல் நிலையை பயன்படுத்த வேண்டியிருக்கும். உதாரணமாக, கென்னத் பிரானக் இயக்கிய பிராங்யென்ஸ்டின் படத்தை ஊன்றி கவனித்தால் தெரியும். மக்களை பயமுருத்த வேண்டும், அதனால் மக்களெல்லாரையும் விட பிராங்யென்ஸ்டினை ஒரு பெரிய உருவமாக காட்ட வேண்டும் என்று நினைத்தனர். சாதரணமாக போடும் செட் அனைத்தையும் கொஞ்சம் தூக்கி போட்டார்கள். அதாவது ஒரு வீடு கட்டுகிறோம் என்று வைத்துக்கொள்வோம், அதன் உள்புறத்தை கொஞ்சம் தூக்கி பெரிதாக கட்டினார்கள். பின்புறத்தை பெரிதாக்குவதால் மனிதர்கள் சின்னதாகிறார்கள், அதன் மூலம் ஒரு பயத்தை உருவாக்கினர். இவையெல்லாம் ப்ரொடக்சன் டிசைனர் செய்தது.
|
இத்தாலியை சேர்ந்த Dante Ferretti என்ற ப்ரொடக்சன் டிசைனர் எனக்கு விருப்பமானவர். அவர் சமீபத்தில் பணிபுரிந்த திரைப்படம் ஹியுகோ. அவர் மாபெரும் இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ளவர். Felini, Martin Scorsese போன்ற இயக்கனுர்களுடன் பணியாற்றியுள்ளார். Age of innocence, Gangs of New York படங்களில் Martin Scorsese உடன் பணிபுரிந்திருக்கிறார். Interview with vampire என்ற நீல் ஜோர்டனின் படத்திலும் பணிபுரிந்துள்ளார், இது போன்று தனியாக நான் இரசித்து பார்த்த பல படங்களுக்கு, யார் ப்ரொடக்சன் டிசைனர் என தேடுகையில் பெரும்பாலும் இவராகத்தான் இருந்தார். நான் ஆரம்பகாலத்தில் இரசித்தவர் Anton Furst என்ற ப்ரொடக்சன் டிசைனர். டிம் பர்டன் இயக்கிய முதல் பேட்மேன் படத்தில் ப்ரொடக்சன் டிசைனராக பணிபுரிந்தவர். அதற்கு முன்பு நீல் ஜோர்டனின் முக்கியமான படமான கம்பெனி ஆஃப் வொல்வ்ஸ் (Company of Wolves) திரைப்படத்தில் பணிபுரிந்தார். Little Red Riding Hood கதையையே பெரியவர்களுக்கு சொல்வது போன்ற கதை தான் கம்பெனி ஆஃப் வொல்வ்ஸ். சமீபத்தில் வெளிவந்த டோடல் ரீகால் (Total Recall).மறு வடிவமைக்கப்பட்ட படமாகும். முதலில் வெளிவந்த டோட்டல் ரீகால் படத்திலும் சிறந்த ப்ரொடக்சன் டிசைன் காணப்பட்டது. 22 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் க்ராபிக்ஸூடன் டோடல் ரீகால் மீண்டும் வெளிவந்தது. அந்த படத்திலும் மிகவும் சிறந்த ப்ரொடக்சன் டிசைன் காணப்பட்டது.
தமிழில் period film வந்து ஒரு 35 காலகட்டத்திற்கு மேலாகிவிட்டது என கூறலாம். செலவு குறைப்பதற்கான காரணத்திற்காக கிராமத்தில் படமெடுப்பது என்றும் முனைந்தனர். ஒரு படத்திற்கு தேவையான முன் முதலீடு, உடை வடிவமைப்பு. செட் வடிவமைப்பு போன்றவை தேவைபடாமல் போய்விட்டது. இப்படி வந்தவுடன் period film மாதிரி படங்களின் தயாரிப்பு நின்று போய்விட்டது. ஒரு சில காட்சிகள் நாம் பழக்கப்படுத்திய படிமங்களோடுதான் மனதில் காட்சிப்படுத்துவோம். அப்படியே பழக்கப்பட்டுள்ளோம். அப்படியான காலகட்டத்தில் யாரிடம் நீங்கள் கதை சொன்னாலும், அவர் என்.டி.ஆர் படத்தை தான் பார்த்திருப்பார். அதனால் நீங்க சொல்லும் கதையை என்.டி.ஆர் தோற்றத்தில் பழைய செட்டுடன் தான் யோசித்து பார்ப்பார். யோசித்து பார்த்துவிட்டு, சமகாலத்தில அது நன்றாக இருக்காது என சொல்லிவிடுவார். தமிழ் திரைப்படத்தில் pre-visualisation'க்கான சாத்தியமே இல்லாத காலகட்டத்தில் நான் தேவதையில் அப்படி செய்து பார்க்க இடம் கிடைத்தது. அதன் பிறகு முழு சினிமாவையும் period film`ஆக செய்ய வேண்டும் என செய்தவை தான் அடுத்து செய்து வரும் முயற்சிகள். அதில் ஒன்று திருட்டு போயும் விட்டது. கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் யாரும் செய்யாமல் இருப்பதால், நாம் ஒரு முழு period film செய்யலாம் என்ற முயற்சியில் இருந்தேன், கலை இயக்கம் மட்டும் செய்வதை விட, ஆரம்பத்திலிருந்து ஒரு கதை எடுத்து அதை காட்சிபூர்வமாக வடிவமைப்பதில் எனக்கு பெரிய ஈடுபாடு இருக்கிறது. தமிழ்நாட்டின் சூழலில் அப்படியான சாத்தியங்கள் இதற்கு முன்பு வரை இல்லை, இப்போது டிஜிட்டல் தொழிநுட்ப வருகைக்கு பின் எப்படி படமாக்கினாலும் இறுதியில் தேவையான கலர் கரெக்ட் செய்து கொள்ளலாம். படத்தை முழுவதுமாக ஒரு வண்ணக்கோர்வைக்குள் விரும்பி செய்துக்கொள்ளலாம் என்பது போன்றவை ஒளிப்பதிவாளர் இடத்தில் தான் உள்ளது. சொன்ன கதையையே திரும்ப எடுக்கலாம், இராமாயணமோ அல்லது புராணக்கதைகளையோ மறு வடிவமைப்புக்கு உட்படுத்தலாம். அவ்வளவு சாத்தியங்கள் இருக்கிறது. அப்படியான ஒரு நிலைக்கு தமிழ் சினிமா எப்போதும் செல்லவில்லை. ஏன் செல்லவில்லை என்றால், தமிழ் சினிமா எப்போதும் எழுதிய வார்த்தைகளை (வசனங்களை) முன்னிறுத்திய சினிமாவாக இருப்பதால்தான் ப்ரொடக்சன் டிசைனர் என்ற இடமே இங்கு இல்லை. கலை இயக்குனர் சமகாலத்தில் இந்த பகுதியை செய்துக் கொண்டு இருக்கிறார். பெரிய செயல் திட்டம் இல்லாத காலகட்டத்தில் இல்லாத பொருட்களை உடனே கடைகளிலிருந்து பெறுகிறவராக இருக்கிறார் கலை இயக்குனர்.
முழுமையான வடிவம் இல்லையென்றாலும் சூது கவ்வும் காட்சிப்பூர்வமாக வேறு மாதிரியான சினிமாவாக இருந்தது. Alternate image மாறுவதற்கான இடமே ஸ்க்ரிப்ட் ரைட்டர் அல்லது இயக்குனருக்கு ஒரு விதமான pre-visualisation sense இருக்கிறது என்பதை காண்பிக்கும். அடிப்படையில் பெரிய ப்ரொடக்சன் டிசைனர் என ஒருவர் இதெல்லாம் செய்து கொடுப்பது போன்ற இடமில்லையென்றாலும், தமிழ் சினிமாவில் அந்த பழக்கம் இல்லாததற்கு காரணம் என்னவென்று நான் கருதுகிறேன் என்றால், இந்த சினிமாவில் இந்த காட்சி பின்புறம் எப்படி இருக்கவேண்டும், என்ன வண்ணத்தில் இருக்க வேண்டும், உட்புறம் என்ன இருக்க வேண்டும் என ஒரு photographical reference, ஓவியம், பெரிய photographer`இன் படங்களில் இருக்கும் லைட்டிங், இப்படியான visual reference 50-100 படங்கள் வைத்துக் கொண்டு பணி செய்வது போன்ற பழக்கம் கிடையாது. மிஷ்கினின் நந்தலாலாவில் ஒரு 45 நிமிடங்கள் எடிட்டாகிவிட்டது. அதில் இறுதி செட் ஒன்றை floor plan உடன் மிஷ்கின் வைத்திருந்தார். கலை இயக்குனர் அதை செயல்படுத்தினார். நானும் கூட இருந்து அதில் ஒரு பகுதி செய்தேன். ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர், மிஷ்கின் மற்றும் நான் அனைவரும் ஒன்றாக சேர்ந்து 30-40 ஓவியங்கள் referenceஆக வைத்துக்கொண்டு உருவாக்கினோம். ஆனால் அது வெளியில் வராமல் போய்விட்டது. தமிழ் சினிமாவில் ப்ரொடக்சன் டிசைனர் வேலையை சமகாலத்தில் செய்யும் சில முயற்சிகள் எப்படி இருக்கிறதென்றால், இயக்குனரின் ஆசையாய் இருக்கிறது, ஒளிப்பதிவாளரை சார்ந்திருக்கிறது, கலை இயக்குனரை மதித்து சில நேரங்களில் நடக்கிறது. ப்ரொடக்சன் டிசைனரின் முக்கியத்துவத்தை எனக்கு தெரிந்து யாரும் தெளிவாக புரிந்துக்கொண்டதாக தெரியவில்லை. சில இடங்களில் நடந்திருக்கு, ஆனால் அனைத்தும் uncoordinated ஆக நடந்திருக்கு. சமீபத்தில் வந்த பெரிய பட்ஜெட் படங்களில் ஓரளவு இருக்கிறது. ஆனால் செயல் திட்டத்துடன் pre-visualistation - இதை தான் செய்ய போகிறோம் என்று முடிவெடுத்து, ஒரு pre-design செய்து அதை செயல்படுத்துவது என்பது மிக குறைவு. ஆனால் வரும் காலக்கட்டத்தில் இளம் கலைஞர்களுக்கு இது போன்ற விழிப்புணர்வு இருப்பதால், இவையாவும் சாத்தியம். ஹிந்தியில் சமீபத்தில் வந்த கேங்கஸ்டர்ஸ் குறித்த படத்தில் மிக அழகாக தெரிகிறது, அதில் pre-visualisation நடந்திருக்கிறது. சேகர் கபூருக்கு pre-visualisation மீது மதிப்புண்டு. ஒரு சிறந்த திரைப்படத்தின் பின்பு இருப்பது ப்ரொடக்சன் டிசைனின் பங்களிப்பாகும். pre-visualistaion`க்கு மென்பொருள்கள் வந்துவிட்டது. படத்தின் மிகவும் முக்கியமான தொடர் நிகழ்வு, அது சண்டைக்காட்சியாக இருக்கலாம் அல்லது ஒரு உணார்ச்சிப்பூர்வமான காட்சியாக இருக்கலாம், இவற்றுக்கு story board தேவை என்ற விழிப்புணர்வு தேவை. மீரா நாயரின் காம சூத்ரா எடுத்துக்கொண்டால், காலனிய ஓவியர்களின் சில ஓவியங்களின் அடிப்படையில் தான் எடுக்கப்பட்டது. pre-visualisation'க்கும் ப்ரொடக்சன் டிசைனுக்குமான பயிற்சி அதனுடைய முக்கியத்துவம் தெரியாமல் இருந்ததற்கு காரணமே எழுத்தாளர்கள் எழுதும் வார்த்தையை நம்பிய சினிமாவாக தமிழ் சினிமா பெருங்காலம் இருந்தது தான்.
|
எனக்கு மிகவும் பிடித்த, நான் ஊன்றி கவனிக்கும் ப்ரொடக்சன் டிசைனர்கள் பலர். அதில் ஒரு சிலரை மட்டும் குறிப்பிடுகிறேன்.
Dante Ferretti
Anton Furst
Rick Carter, Jim Erickson
John Myhre
Ken Adams
Eve Stewart & Anna Lynch-Robinson
Rick Carter
Bo Welch
Rick Heinrichs
Nathan Crowley
Robert Stromberg
Grant Major
Alex Mcdowell
#
Barbara Darragh - Costume designer (Spartacus)
Frank Miller - Artist famous for Comic stories.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |