இதழ்: 9, நாள்: 15- ஆவணி -2013 (August)
   
 
  உள்ளடக்கம்
 
உயிர் கொடுக்கும் கலை 6 - ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
திரைமொழி 7 - ராஜேஷ்
--------------------------------

பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: வெங்கட் சாமிநாதன்

--------------------------------
ஊருக்கு நூறு பேர்: சினிமாவின் வலிமைக்கு ஒரு சான்று - தியடோர் பாஸ்கரன்

--------------------------------

தமிழில் அரசியல் சினிமா - யமுனா ராஜேந்திரன்

--------------------------------
தமிழ் ஸ்டுடியோ லெனின் விருது வழங்கும் விழா - 2013 - தினேஷ்
--------------------------------
திரை உலகை திசை மாற்றிய இரு திரைப்படங்கள் - பிச்சைக்காரன்
--------------------------------
லீனாவின் ஆவணப்படங்கள் – மாத்தம்மா, தேவதைகள் - தினேஷ்
--------------------------------
லெனின் எனும் கலைஞன்: தேவபாரதி - எழுத்து வடிவில் - தினேஷ்
--------------------------------
ஒருத்தி – ஒப்பனையற்ற கிராமத்து சித்திரம் - பிச்சைக்காரன்
--------------------------------
நுழைவுச் சீட்டா குறும்படங்கள்? - அருண் மோ.
--------------------------------
   

   


ஒருத்தி – ஒப்பனையற்ற கிராமத்து சித்திரம்

- பிச்சைக்காரன்


சமீபத்தில் லீனா மணிமேகலையின் குறும்பட திரையிடலுக்கு சென்று இருந்தேன். திரையிடல் முடிந்ததும் கலந்துரையாடல், விவாதங்கள் நடந்தன.

பெரும்பாலும் பாராட்டி பேசினாலும் ஒரு பெண் ஆவேசமாக எதிர் குரல் எழுப்பினார். இன்னும் எத்தனை காலத்துக்கு தலித்துகளை பரிதாபத்துக்குரியவர்களாகவே காட்டப்போகிறீர்கள். அவர்களிடம் பாசிடிவ் அம்சங்களே இல்லையா என்பது அவர் பேச்சின் சாராம்சம்.

அதன் பின் லீனா அதற்கு பதில் அளித்தார் என்பது வேறு விஷ்யம். இந்த கட்டுரை லீனாவைப் பற்றியது அல்ல.

அந்த பெண் பேசிய கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. தலித்துகள் சொல்லவொண்ணா கொடுமைகள் அனுபவிப்பது உண்மைதான். அதை கவனத்துக்கு கொண்டு வருவதும் ஏற்கத்தக்கதே,

ஆனால் அவர்களை பாசிட்டிவாக காட்டுவதும் , அவர்களிடம் இருக்கும் பாசிட்டிவ் அம்சங்களை காட்டுவதும் , அவர்கள் வாழ்க்கையில் இருக்கும் அழகியல் , நட்பு, காதல் , அன்பு போன்றவற்றை காட்டுவதும் அவசியம்தானே. ஆனால் பெரும்பாலும் யாரும் இதை செய்வதில்லை.

அம்ஷன் குமாரின் ஒருத்தி திரைப்படம், தலித் பெண் ஒருத்தியைப் பற்றிய படம் என கேள்விப்பட்டபோது, அவரும் இப்படித்தான் எடுத்து இருப்பார் என நினைத்தேன். ஆனால் அந்த படம் கிரா அவர்களின் கிடை குறுநாவலை தழுவி எடுக்கப்பட்டது என தெரியவந்தபோது லேசான ஆர்வம் வந்தது. கிரா என்றாலே கரிசல் மண்ணின் அழகியல் , நுட்பமான சித்திரிப்பு , நகைச்சுவை போன்றவைதான் நினைவுக்கு வரும்.

அளவை வைத்து பார்த்தால் கிடையை சிறுகதை என்றுதான் சொல்ல முடியும். பத்து பக்கங்களுக்குள்தான் இருக்கும் . ஆனாலும் அது குறு நாவல்தான். செவனி , எல்லப்பன் , அந்த மண் , ஆடுகள் ,ஆடுகளின் வகைகள் , கிடை மறித்தல் எனும் நீதி முறை உணவுப்பழக்கங்கள் என சில பக்கங்களில் வித்தை காட்டி இருப்பார்.

இது சினிமாவாக எப்படி வந்து இருக்கிறது என்று பார்க்க இயல்பாகவே ஆசை எழுந்தது.

ஒரு கதை அதன் மையத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பார்கள். செவனியிடம் இருந்து படம் துவங்கும்போதே ஆச்சர்யம் ஏற்பட்டது. நாவலில் இருந்து வேறுபட்டு இருக்கிறதே என நினைத்தேன்.

ஓர் இலக்கியப்படைப்பை படமாக்கும்போது , அதை கமர்ஷியல் குப்பைகள் சேர்த்து ஒழித்து கட்டுவது ஒரு முறை. அல்லது எழுத்துக்கு எழுத்துக்கு அப்படியே நகல் செய்வது ஒரு முறை. இரண்டுமே தவறு என்கிறார் தியடோர் பாஸ்கரன்.

“ சில இயக்குனர்கள் ஓர் இலக்கியப்படைப்பை படமாக்கும்போது , சினிமாவின் சாத்தியக்கூறுகளை உணர்ந்து , வலிமையை அறிந்து , ஒரு தனிப்படைப்பு ஒன்றை உருவாக்குகிறார்கள். இதில் திரைப்படத்தின் தனித்துவம் மிளிர்வதால் , இதுவே சிறந்த தழுவல் முறை ஆகிறது. இம்மாதிரி படமெடுக்க அந்த இயக்குனருக்கு இலக்கியம் மற்றும் சினிமாவில் நல்ல ரசனை வேண்டும் “ என்கிறார் அவர்.

இந்த படத்தை அம்ஷன் குமார் ஒரு தனிப்படைப்பாகத்தான் உருவாக்கி இருக்கிறார். இதை கிடை நாவலின் தழுவல் என சொல்ல இயலாது. அதில் இருக்கும் கேரக்டர்கள் , சம்பவ இடங்கள் , பழக்க வழக்கங்கள் போன்றவற்றை பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் புதிய சில கேரக்டர்கள் சேர்த்து , முடிவை முழுமையாக மாற்றி , ஒரு புதிய தனித்த படைப்பு உருவாக்கி இருக்கிறார் அம்ஷன்.

யதார்த்தத்தை அப்படியே காட்டுவது கலை ஆகாது. அதை எப்படி காட்டுகிறோம் என்பதில்தான் கலை அம்சம் இருக்கிறது என்பார்கள்.

நுட்பமான காட்சிப்படிமங்கள், சம்பவங்கள் , பாத்திரப்படைப்புகள் போன்றவைதான் இந்த படத்தை ஒரு கலைப்படைப்பாக மாற்றுகின்றன.

1884ல் ஆலம்பட்டி எனும் கிராமத்தில் இந்த கதை நிகழ்கிறது.

கூலிக்காக ஆடுகளை மேய்க்கும் தலித் பெண் செவனியும் , உயர் சாதியை சேர்ந்த எல்லப்பனும் காதலிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இது எல்லப்பனின் பெற்றோருக்கு தெரிந்து விட , அவனுக்கு அவர்கள் சாதியிலேயே பெண் பார்க்க முடிவு செய்கிறார்கள்.

அப்போது ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசின் பிரதினிதியாக வரும் ஆங்கிலேய அதிகாரி ஜமீந்தாரை சந்தித்து வரி வசூல் குறைவாக இருப்பதற்கு காரணம் கேட்க , ஜாமீந்தாரோ மக்கள் சரியாக வரி தருவதில்லை என்கிறார். ஆனால் வரியில் பிரிட்டிஷ் அதிகாரி பிடிவாதமாக இருக்கவே, ஜமீந்தார் மேலும் கடுமையான வரிகள் விதிக்கிறார்.

அவர்கள் தரும் வரியை பிரிட்டிஷாருக்கு செலுத்தாமல் தானே விழுங்கி விடுவதால் , எல்லப்பன் குடும்பத்தினர் ஊரை விட்டே போக முடிவு செய்கிறார்கள்.

இதற்கிடையில் பிரிட்டிஷ் அதிகாரியுடன் செவனிக்கு பழக்கம் ஏற்படுகிறது. ஜமீந்தார் செய்யும் கொடுமைகளை அவனிடம் சொல்ல, அவன் ஜமீந்தாரிடம் இருந்து வரி வசூல் செய்யும் உரிமையை பிடுங்கி , இனி நேரடியாக பிரிட்டிஷ் அரசுக்கே வரி செலுத்த ஏற்பாடு செய்கிறான்.
இதனால் கோபம் அடைந்து ஜமீந்தார் ஆட்கள் அவளை தாக்குகின்றனர்.

ஆயினும் ஊர் அவள் அருமையை உணர்கிறது. இதற்கிடையே எல்லப்பனுக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதை அறிந்த செவனி அந்த ஊர் வழக்கப்படி கிடை மறிக்கிறாள்.

கிடை மறித்தல் என்றால் , பிராது கொடுத்தவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை யாருடைய ஆடுகளும் மேய்ச்சலுக்கு போக முடியாது. எனவே எல்லோரும் சேர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்ற லாஜிக் அடிப்படையில் அமைந்த அருமையான நீதி முறை இது.

பஞ்சாயத்து கூடி ஜாதி ஒழிப்புக்கு ஒப்புக்கொண்டு , அவள் ஜாதியை “ மன்னித்து “ அவளை “ ஏற்க” முடிவு செய்கிறது.

அதாவது அவள் அவளது ஜாதி, குடும்பம், மண் எல்லாவற்றையும் துறந்து வந்தால் , திருமணத்துக்கு ஓக்கே சொல்கிறது பஞ்சாயத்து.

அப்போது அவள் எடுக்கும் முடிவுதான் படத்தின் , அந்த செவனி கேரக்டரின் உச்சம்.

அவள் தான் சார்ந்த சாதி குறித்தோ, தன்னை குறித்தோ எந்த தாழ்வு மனப்பான்மையும் கொண்டவள் அல்லள். தன் அடையாளத்தை ஒழித்து விட்டு , மேல் நிலை அடைந்த பின்பு கிடைக்கும் வாழ்வை அவள் விரும்பவில்லை. அவளை அவளாக ஏற்கும் வாழ்வையே அவள் விரும்புகிறாள்.

அவள் விரும்புவது பிச்சையையோ, மன்னிப்பையோ அல்ல. அவள் விரும்புவது மரியாதையை. அது கிடைக்காத பட்சத்தில் காதலை தூக்கி எறிகிறாள்.

கடைசி காட்சியில் அந்த பிரிட்டிஷ் அதிகாரி பயன்படுத்திய , இறகினால் ஆனால் எழுதுகோலை யாரோ விளையாட்டாக தூக்கி எறிகிறார்கள். அவள் அதை பாய்ந்து பிடிக்கும் காட்சியுடன் படம் முடிகிறது. அறிவாயுதம் கொண்டு அவள் போராட்டம் தொடரும் என்ற கவித்துவமான காட்சியுடன் படம் முடிகிறது.

தலித் அல்லாதவர்கள் பார்வையில்தான் பெரும்பாலும் தலித் படங்கள் வந்து இருக்கின்றன. ஜாதி ஒழிப்பு அதாவது அவர்கள் அடையாளத்தை அழிப்பதுதான் அவர்களுக்கு செய்யும் சேவை என்பது போல புரிந்து கொண்டு படம் எடுப்பார்கள்.

உண்மையில் தலித்துகளுக்கு தேவை பரிதாபமோ , மன்னிப்போ அல்ல. அவர்களுக்கு தேவை சம மரியாதை.

அவர்களுக்கு அவர்கள் இனம் மேல் பெருமிதம் உண்டு .அவர்களுக்கு என உயர்ந்த விழுமியங்கள் உண்டு. அவர்கள் அவர்களாகவே மதிக்கப்பட வேண்டுமே தவிர , அவர்கள் இப்படி மாறினால்தான் மதிப்பேன் என சொல்வது பெரிய பிசகு. அந்த மேல் நிலையாக்கலைத்தான் படம் உடைக்கிறது.

உதாரணமாக , மதுரை வீரன் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவன். ஆனால் அவனை அவனாக ஏற்க சிலர் விரும்பவில்லை. அவன் உயர் சாதிக்காரன் என்றும், ஏதோ சாபத்தால் இப்படி பிறந்தான் என்றும் சொல்லி அவன் அடையாளத்தை அழிப்பதுதான் அவனுக்கு செய்யும் கவுரம் என நினைக்கிறார்கள். இந்த மேல்னிலை ஆக்கல்தான் தவறு.

ஆனால் படம் இப்படி பிரச்சாரம் செய்வதில்லை. அடையாளம் இன்றி வாழும் எத்தனையோ பெண்களில் ஒருத்தியை தேர்ந்தெடுத்து அவள் வாழ்க்கையை , அவள் எடுக்கும் முடிவுகளை சொல்கிறது. அதை வைத்து நாம் சிலவற்றை புரிந்தி கொள்கிறோமே தவிர படம் எந்த பிரச்சாரமும் செய்வதில்லை.

படம் முழுக்க இருக்கும் மெல்லிய நகைச்சுவை குறிப்பிடத்தக்கது. பேய் கதைகள் , பேய் பயத்தை பயன்படுத்தி திருடுவது , உயர் சாதியினர் வந்தால் எழுந்து நிற்க வேண்டும் என்ற கட்டளை சிறுவர்களிடன் கேலிக்கூத்தாக மாறுவது , தன் ஆங்கிலப் புலமை மேல் செருக்கு கொண்ட மொழி பெயர்ப்பாளன் செவனி சொல்லும் ஆட்டி பெயர் பட்டியலை மொழி பெயர்க்க முடியாமல் திணறுவது என ரசிக்க வைக்கும் காட்சிகள் ஏராளம்.

மக்களின் குமுறல்களை அவன் மொழி பெயர்த்து வருவான். ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் அதிகாரி , போதும் எனக்கு அவர்கள் உணர்வு புரிகிறது என சொல்லி , மொழி பெயர்ப்பு இன்றி அவர்கள் பேச்சை கேட்பான். அட்டகாசமான காட்சி.

அதே போல, ஒவ்வொருவரின் நில விபரங்களை சொல்ல , மொழி போதாமல் போகும்போது, மணலில் படம் வரைந்து அவள் எளிமையாக விளக்கி விடுவாள். அவள் அறிவுக்கூர்மை, அவள் மேல் அவனுக்கு ஏன் மரியாதை ஏற்பட்டது என ஒரே காட்சியில் சொல்லி விடுவார் இயக்குனர்.

ஒவ்வொரு கேரக்டரும் முழுமையாக அமைந்து இருப்பது சிறப்பு.

ஒரு பெண்ணின் தோட்டத்தில் ஆடுகள் மேய்ந்து அழித்து விட்டன என அவள் கிடை மறிப்பாள். படத்தின் திருப்பு முனைக்காட்சி இது, அதை கண்டு பிடிக்க நியமிக்கப்படும் புத்திசாலி சுப்பையா, அவ்வபோது திருடக்கூடிய ஆனால் சேவை மனப்பான்மை கொண்ட கிராம வைத்தியர் பொன்னு சாமி , கிடை மறிக்கும் ராக்காயி, கிடைத்தலைவர் , முறை மாமன் , தோழிகள் என எந்த கேரக்டரையும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது.

முள் வாங்கி, ஆட்டின் வகைகள் , கிராமத்து வழிபாட்டு முறை போன்ற நுண் தகவல்கள் கச்சிதமாக பதிவாகி இருக்கும்.

இசை எல் வைத்தியனாதன். அழகாக தன் பணியை செய்து இருக்கிறார்.

கணேஷ் பாபு , பூர்வஜா போன்ற அனைவரும் இயல்பாக தம் கேரக்டரை செய்து இருக்கிறார்கள். பாரதி மணி நன்றாக செய்து இருக்கிறார் என சொன்னால் , சூரியன் சுடும் என சொல்வது போன்ற , அதிகப்பிரசங்கித்தனம் ஆகி விடும்.

கலைப்படம் , வணிக்கப்படம் என்ற பிரிவினைகளை தாண்டி எல்லா விருதுகளும் பெற தகுதி கொண்ட, ஆனால் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாகவும் இருக்கக்கூடிய படம்தான் ஒருத்தி.

பார்வையாளனை அழ வைப்பதுதான் வெற்றி என நினைக்காத, துவேஷங்களை தூண்டுவதுதான் சீர் திருத்தம் என கருதாத, எந்த ஒப்பனைகளும் இல்லாமல் , கிராமத்து சித்திரத்தை கண் முன் நிறுத்துகிறாள் ஒருத்தி.
----------------------------------------
கி.ரா இதயம் நிறைந்து பாராட்டினார் - ”ஒருத்தி” திரைப்பட இயக்குனர் அம்ஷன் குமார் சிறப்பு பேட்டி

தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒருத்தி படத்துக்கு சிறப்பான இடம் ஒன்று உண்டு. கி.ரா அவர்களின் கிடை நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தை காண்பதே ஓர் அலாதி அனுபவம். தலித்துகளை ஒரு வித நெகட்டிவ் கண்ணோட்டத்திலேயே பார்த்து பழகிய நமக்கு இந்த படத்தில் அவர்களை வெற்றியாளர்களாக பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கும், அந்த படம் குறித்து அதன் இயக்குனர் திரு.அம்ஷன் குமார் , பேசாமொழிக்கு அளித்த சிறப்பு பேட்டி..

படத்தின் டைட்டில் ஒருத்தி என்பது ஒரு பெண்ணின் கேஸ் ஸ்டடி என்ற அர்த்ததில் புரிந்து கொள்ளலாமா’

அவளைப்போல் எத்தனயோ பெண்கள் விலாசமில்லாதவர்களாக இருக்கிறார்கள்.ஆனால் அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு குறிப்பிடத்தக்க பண்பு உள்ளது. ஒருத்தி என்கிற தலைப்பில் இப்படியான அர்த்தங்கள் இருப்பதாக நினைக்கிறேன்.

படத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை ( அந்த பிரிட்டிஷ் அதிகாரியை )கிட்டத்தட்ட கதாநாயகன் ரேஞ்சுக்கு கொண்டு சென்று விட்டீர்களே... தலித்துகள் பார்வையில் அவர்கள் மாற்றம் கொண்டு வந்த நல்லவர்கள் என சொல்ல வருகிறீர்களா?

படத்தில் கதாநாயகி மட்டும்தான் உண்டு. கதாநாயகன் என்று எவரும் இல்லை .செவனியின் வாழ்க்கையில் குறுக்கிடும் மனிதர்கள் கதாபாத்திரங்களாக வருகிறார்கள். ஆங்கிலேய அதிகாரி அவர்களில் ஒருவன். தாழ்த்தப்பட்டவர்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் எவ்வித இன்னல்களுக்கும் ஆளாகவில்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் ஆங்கிலேயர்கள் தீண்டாமை பாராட்டவில்லை. மேல் சாதிகாரன் வீட்டிற்குள் ஒரு தலித் நுழைவதென்பது அக்காலத்தில் நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று. ஆங்கிலேயர்கள் வீட்டில் தலித்துகள் பலவிதமான அலுவல்களையும் பார்த்தனர். அவர்களுக்கு மாட்டிறைச்சியை சமைத்து கொடுத்தவர்கள் தலித்துகள்தாம். நமது சுதந்திரப் போராட்டம் நகர்ப்புறம் சார்ந்தது என்பதாலும் கிராமத்து தலித்துகள் ஆங்கிலேயர்கள் மீது பெரும் வெறுப்பு கொண்டிருக்கவில்லை. தலித்துகள் மட்டும் இன்றி படத்தில் வரும் மேல்சாதிகாரர்களும் அந்த அதிகாரி மீது பகைமை பாராட்டவில்லை. ஆங்கிலேயர்களை நேசித்த சமுகமாயும் இந்திய சமூகம் இருந்தது. இந்தியர்களின் நன்மைதிப்பினைப் பெற்ற பல அன்னியர்கள் நம்மிடையே வாழ்ந்தனர் . ரிப்பன் பிரபுவை ரிப்பன் எங்கள் அப்பன் என்று மக்கள் பாராட்டினர். எல்லா ஆங்கிலேயர்களையும் லத்தியை சுழற்றுபவர்களாக மட்டும் படங்களில் சித்தரிப்பது காலாவதியாகிவிட்ட ஒன்று.

மூல நூலின் முடிவில் இருந்து , கிளைமேக்சை மாற்ற வேண்டும் என எப்படி தோன்றியது?

மூலப் படைப்பில் செவனிக்கு பேய்பிடித்துவிடுகிறது . தலித்துகளைப் பற்றிய நைந்துபோன ஆனால் யதார்த்தமான பல சித்தரிப்புகளில் அதுவும் ஒன்று. அக்காலத்திலேயே நம்பிக்கை ஊட்டக்கூடிய வகையில் பல தலித்துகள் வாழ்ந்திருக்கிறார்கள். மனிதன் தன்னை உணரத்தலைப்பட பிறகு எல்லாமே மாறிவிடுகிறது . அதைத்தான் படம் சொல்கிறது. செவனி புரட்சிகரமாய் எதையும் செய்யவில்லை. தன் வரையில் ஒரு முடிவை எடுக்கிறாள். அது மிகவும் வித்தியாசமானதாகவும் இருக்கிறது. அது இயல்பான ஒன்றுதான் .

வில்லன் தோற்கடிக்கப்பட்டான் அல்லது கதாநாயகி வீழ்த்தப்பட்டாள் என்ற வழக்கமான ஃபார்முலாவுக்குள் போகாமல். கதாநாயகி தனக்கான வழியை கண்டுபிடித்தாள் என்ற பாசிடிவ் முடிவை கிளைமேக்சாக வைக்க நிறைய யோசித்து இருப்பீர்கள் என நினைக்கிறேன்.. அதைப்பற்றி சொல்லுங்கள்.

இது வழக்கமான கதை சொல்கிற படமாக இல்லை. கதாபாத்திரங்களின் மனநிலையை ஒட்டியதாக படத்தின் முடிவு அமைந்துள்ளது .

படத்தில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் படம் முழுக்க விரவியுள்ள மெல்லியநகைச்சுவை..இப்படி ஒரு சீரியஸ் படத்தை நகைச்சுவை நீர்க்க செய்யும் என்ற அச்சம் உங்களுக்கு ஏற்படவில்லையா ( இந்த தீமில் வரும் பெரும்பாலான படங்களில் நகைச்சுவையை இந்த காரணத்தாக் தவிர்த்து விடுவார்கள்)

நகைச்சுவையில் வாழ்வைப்பற்றிய ஒரு அனுகூலமான நோக்கு வெளிப்படுகிறது. வாழ்க்கையின் எல்லாத்தருணங்களிலும் அது நம்முடனேயே இருக்கிறது.

இலக்கியப்படைப்பில் இருந்து சினிமா எடுப்பது அனுகூலமா, பாதகமா?

ஒருத்தியை பொறுத்தவரை அதன் மூலப்படைப்பான கிடை கதையை படித்துவிட்டு படம் பார்க்க வந்தவர்கள் குறைவு. எனவே இரண்டையும் அவர்கள் ஒப்பிடவில்லை. இது சாதகமான விளைவு . தவிரவும் முலத்திலிருந்து நிறைய வேறுபாடுகளை படம் கொண்டிருந்ததால் இரண்டும் வெவ்வேறானவை என்பதை எவரும் ஒப்புக்கொள்வார்கள். இலக்கியத்தின் கட்டமைப்பு ஒரு சாதகமான முன்வரைவினை திரைப்பட படைப்பாளிக்கு தந்துவிடுவதால் அதை ஒரு சாதகம் என்றே சொல்லலாம். ஆனால் கோவலன் கொலையுறுவதற்கு முன்பாக கண்ணகி அவனை வந்து காப்பற்றுவதாக படம் காட்டினால் அதை எவரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். அதற்கு மிகவும் பலமான காரணங்களை முன் வைக்க வேண்டும். ஆனாலும் அது அவ்வளவு எளிதல்ல. எல்லாவற்றிற்கும் ஒரு வரையறை உண்டுதானே? திரைப்பட படைப்பாளி இலக்கியத்தை மாற்றும்பொழுது பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். அதேசமயம் அவனது சுதந்திரத்தையும் மக்கள் சரிவர புரிந்துகொண்டு ஏற்கவேண்டும். இலக்கியம் அச்சாக திரைப்படத்தில் இடம் பெறவேண்டும் என்று பிடிவாதம் கொள்வதும் தவறு.

இந்த படத்தில் செவனி, எல்லப்பன் இவர்களைத்தவிர மற்றவர்களையும் முழுமையாக சுவராஸ்யமாக படைத்து இருக்கிறீர்கள். ஊர் புத்திசாலி சுப்பையா. ,முறை மாமன், சுருட்டு பிடிக்கும் கிழவி, பிரிட்டிஷ் அதிகாரி , ஜமீன்தார் என செதுக்கி இருக்கிறீர்கள். இதில் மிகவும் சுவையான பாத்திரம் , சின்ன சின்ன திருட்டுகள் செய்யும், ஆனால் இலவச வைத்தியம் செய்யும் மருத்துவர்..இந்த கேரக்டரைப் பற்றி உங்கள் பார்வை என்ன?

நகர்புறவாழ்வில் மனிதன் சமூகத்தின் ஒரு உறுப்பினனாகப் பார்க்கப்படுவதில்லை . பைத்தியக்காரர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோர் விலக்கி வைக்கப்பட்டுவிடுகிறார்கள். அவர்களையும் உள்ளடக்கியதுதான் சமூகம் என்கிற எண்ணம் அங்கு இல்லை. சிறு திருடர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவர்களை ஒழித்து விடுவதில் தான் நகரம் ஆர்வம் காட்டுகிறது . கிராமத்தில் திருடர்கள் தண்டிக்கப்பட்டாலும் அவர்கள் சுதந்திரமாக உலபுவர்கள். மாட்டுத்திருடர்கள் கிராமத்து வைபவங்களில் இயல்பாக கலந்து கொள்வதை நான் பார்த்திருக்கிறேன் . மனிதர்கள் திருட மட்டுமா செய்கிறார்கள் ? அவர்களுக்கு வேறு முகங்களும் உண்டு . அந்த வைத்தியர் அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம்.

கிடை கதையை படமாக்க தூண்டிய அதன் சிறப்பம்சம் என்ன? கிடை மறித்தல் போன்றவற்றை பார்க்கையில் , அந்த கால தமிழகம் அற நெறிகளில் தற்காலத்தை விட சிறப்பாக இருந்தது போல தோன்றுகிறது..ஆனால் சாதி போன்றவற்றில் பிற்போக்காகஇருந்ததாகவும் தோன்றுகிறது..இந்த முரண் குறித்து?

கிடை கதையில் வரும் மனிதர்கள் மிகவும் முற்போக்கானவர்கள். ஒரு தவறு நடந்தால் அதனால் பாதிப்பு பெற்றவர்களுக்கு தண்டம் தருவதை உடனடியான கடமையாக நினைக்கிறார்கள் . பின்னர்தான் குற்றவாளிக்கு தண்டனை தருவதுபற்றி அவர்கள் முடிவெடுக்கிறார்கள். கிடை கதையின் இந்த உயிரோட்டமான பண்பு என்னைக் கவர்ந்தது. ஆனாலும் இவ்வளவு முற்போக்கானவர்கள் சாதி என்று வரும்பொழுது புரையோடிப்போன உணர்வுகளுக்கு பலியாகிவிடுகிறார்கள். இந்த முரண் நமது இந்திய சமுகத்தில் வேருன்றிய ஒன்று. நம் எல்லோரிடமும் இது ஏதோ ஒரு சமயத்தில் தலைகாட்டுகிறது .ஆனால் நாம் எப்பொழுதும் மற்ற வர்களிடம்தான் அது இருப்பதாக பாவித்துக்கொள்கிறோம். நம்மை நாமே உள்முகமாக இதைப்பார்க்க வேண்டும். அப்படியொரு சந்தர்ப்பம் படத்தில்வரும் முற்போக்கான மனிதர்களுக்கு ஏற்படுகிறது. அதை அவர்கள் எவ்வாறு கோழைத்தனத்துடன் எதிர்கொள்கிறார்கள் என்பதைத்தான் படம் சித்தரிக்கிறது.

ஒருத்தி படத்தை பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள். விருதும் பெற்று இருக்கிறது. ஆயினும் படம் அதன் தகுதிக்கு உரிய அங்கீகாரம் பெற்று விட்ட மன நிறைவு உங்களுக்கு உண்டா

உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி . படம் நிறைய மனிதர்களை சென்றடையவில்லை என்பதுதான் மனக்குறை.

இந்த படத்தை கி.ரா பார்த்தாரா...என்ன சொன்னார்.

கி.ராஜநாராயணன் இதைப்பார்த்துவிட்டு நான் ஒரு வீடு கட்டினேன் . நீங்கள் அதன்மீது ஒரு மாடி கட்டிவிட்டீர்கள் என்று கூறினார். அது இதயம் நிறைந்த பாராட்டு.

இந்த படத்திற்கு கிடைத்த பெரிய பாராட்டாக எதை கருதுகிறீர்கள்?

பல படங்கள் வந்த சுவடு தெரியாமல் மறைந்து போகின்றன . இவ்வளவு வருடங்கள் கழித்தும் இப்படத்தைப் பார்த்து உங்களைப் போன்றோர் ரசிப்பதுதான் எனக்கு கிடைத்துள்ள பெரிய பாராட்டு .

இந்த படம் எடுக்க ஏற்பட்ட சிரமத்தை விட வெளியிட அதிகம் போராடி இருப்பீர்கள் என கருதுகிறேன்.. இது போன்ற படங்களை தேடிச்சென்றுபார்க்கும் ரசனை வளர்ந்து வரும் நிலையில், ரசிகர்களுக்கு படத்தை கொண்டு போய் சேர்க்கும் முறைகளில் மாறுதல் வேண்டும் என நினைக்கிறீர்களா?

ஒருத்தி சத்யம் அரங்கில் சில காட்சிகள் மட்டும் திரையிடப்பட்டது. அக்காட்சிகளில் அரங்கம் நிறைந்திருந்தது. எவ்வித விளம்பரமும் அதற்கில்லை. ஆனால் படம் பார்க்க வந்தவர்களில் பெரும்பாலோனோர் என்னைப் பற்றி அறிந்தவர்கள். பலரையும் அது சென்றடைய வேண்டுமென்றால் அதற்கு நிறைய விளம்பரம் செய்திருக்க வேண்டும் . அதற்கான ஒரு விநியோகம் இங்கு உருவாகவேண்டும். ஒருத்தி மாற்றுப்பட வரிசையை சேர்ந்தது . மாற்றுப்படங்களுக்கு மாற்று விநியோக முறை தேவை . பெருவழக்குப்படங்களுக்கான(Mainstream film) விநியோக முறையை இதற்கு பயன்படுத்திக்கொள்ள முடியாது.

மாற்றுப் படங்களை தனியார் தொலைக்காட்சிகள் வெளியிட முன்வருவதில்லை. விலை எதுவும் தராமல் தங்களுக்கு நிகழ்ச்சிகள் கிடைக்கின்றன என்பதால் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் குறும்படங்களை இன்று ஒளிபரப்புகின்றன.

மாற்றுப் படங்களுக்கென மாற்று திரை அரங்குகள் உருவானால் முழுநீள மாற்றுப் படங்கள் மட்டுமின்றி குறும்படங்களையும் அவற்றில் திரையிட்டு கட்டணம் வசூலிக்கமுடியும். இதனால் குறும்படங்களை எடுப்பவர்களும் பலனடைவார்கள். தமிழகத்தில் குறைந்தது நூறு அரங்குகளாவது அவ்வகையில் கட்டப்படவேண்டும். அது கலை சேவை மட்டுமல்ல . அங்கே வியாபாரமும் இருக்கிறது . மேலும் அவற்றிற்கென புதிய பார்வையாளர்களும் உருவாகுவார்கள். திரைப்பட சங்கங்கள் அத்தகைய பார்வையாளர்களை உருவாக்கத் தவறிவிட்டன.

1.30 மணி நேரத்தில் இத்தனை கேரக்டரகளை அறிமுகப்படுத்தி கதை சொல்லி விட்டீர்கள்..ஆனால் தமிழகத்தில் திரைப்படத்திற்காக்ன ஸ்டாண்டர்ட் நேரம் 2.30 ,மணி நேரம் என்ற நிலை ஏன் ஏற்பட்டது? இதை மாற்ற முடியாதா?

ஒரு படத்தின் கதை என்று பார்த்ததால் அது ஒன்றரை மணி நேர அளவினுடையதாக இருப்பதை நீங்கள் உணரமுடியும். பாடல் ஆடல் காட்சிகள் , சண்டைகாட்சிகள் , காமெடி ட்ராக்குகள் என்றெல்லாம் போவதால் நேரம் அதிகரிக்கிறது, இதை படம் எடுப்பவர்களும் பார்ப்பவர்களும் உணரும்பொழுது படத்தின் நீளம் தானாகக் குறையும்.

இனி எடுக்கும் படம் ஒருத்தியை மிஞ்சும் வகையில் இருக்க வேண்டும் என்ற சவால் உங்கள் முன் இருக்கும் நிலையில், உங்கள் அடுத்த கட்ட திட்டம் என்ன?

ஒருத்தி படத்தை நானும் எனது நண்பர் கோபால் ராஜாராமும் எங்கள் பொருளாதார நிலைக்கேற்ப மிகவும் சிக்கனமாக தயாரித்தோம். ஒருத்தியை மிஞ்சும் வகையில் எடுக்கும் வேகம் என்னிடம் உண்டு. ஆனால் அதை மக்களிடம் எப்படி எடுத்து செல்வது? இன்றுள்ள நிலையில் படத்திற்கு செலவு எவ்வளவு செய்யப்படுகிறதோ அதே அளவிற்கு விநியோகத்திற்கும் செய்ய வேண்டும். அவற்றிற்கெல்லாம் முதலீடு செய்பவர்கள் எவரும் இல்லை. தமிழில் பெருவழக்குப்படங்கள் மிகவும் மாறுதல்களுக்குள்ளாகியுள்ளன. நான் அடுத்தாற் போல் வெகுஜனத்திற்காக படம் எடுக்க விரும்புகிறேன் .

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </