திரை உலகை திசை மாற்றிய இரு திரைப்படங்கள்
திரையுலக பிதாமகன் லெனின் தமிழுக்கு வழங்கிய கொடை
****************************************************************
தமிழர்கள் மரணத்தை கொண்டாடுபவர்கள் என்பார் சாரு நிவேதிதா.அதாவது இறந்த காலத்திலேயே வாழ்பவர்கள். அந்த காலம் மாதிரி வராது சார், அவர் அப்பா அந்த காலத்துல ஒரு புக் எழுதினாரு, இப்ப அந்த மாதிரியெல்லாம் யாரும் எழுதறதில்லை , நல்ல விஷயங்கள் இப்பல்லாம் வர்றது இல்லை என வித விதமாக அலுத்து கொள்வார்கள்.
ஆனால் நல்ல விஷ்யங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. சாதனையாளர்கள் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நல்ல நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. என்ன ஒன்று, அவை நம் வீடு வராது. நாம்தான் தேடிச்செல்ல வேண்டும். கொஞ்சம் தேடல் இருந்தால் போதும். எண்ணற்ற நல்ல விஷயங்கள் , நல்ல சினிமாக்கள் , நல்ல புத்தகங்கள், நல்ல மனிதர்கள் நம்மை சுற்றி இருப்பதை கண்டு கொள்ள முடியும்.
சில நாட்கள் முன்பு தமிழ் ஸ்டுடியோ நடத்திய குறும்பட திரையிடல் ஒன்றுக்கு சென்று இருந்தேன். அந்த நிகழ்ச்சிக்கு திரை உலக பிதாமகர் லெனின் வந்திருந்தார். அவர் பேச்சைக் கேட்க அங்கிருந்த ஒவ்வொருவரும் ஆவலாக இருந்தோம். அவரோ மற்றவர்களை பேச வைத்து அதை கேட்பதையே விரும்பினார். அதன் பின் கடைசியாக கொஞ்சம் பேசினார். கொஞ்சம் பேசினாலும் ஒரு பல்கலைக்கழகத்தில் பாடம் எடுப்பது போன்ற ஓர் அற்புத சொற்பொழிவை வழங்கினார்.
அவரை திரையுலக போராளி என சொல்வார்கள்.தனக்கென ஒரு பாதை வகுத்து , அதில் பயணிப்பவர் அவர்.
அவர் எடுத்த நாக் அவுட் அனும் குறும்படம்தான் தமிழின் முதல் குறும்படமாக கருதப்படுகிறது. (திரைப்பட கல்லூரிகளில் பயிற்சிக்காக எடுப்பது வேறு.) அந்த படம் எடுத்த நேரத்தில் அது புது முயற்சி என்பதால் பலரும் அவரை கிண்டல் செய்தனர். லெனின் இந்த படத்தோடு நாக் அவுட் ஆகப் போகிறார் என அவர் காதுபடவே பேசினார்கள். ஆனால் எதைப்பற்றியும் கவலைப் படமால் அவர் எடுத்த நாக் அவுட் படம் இன்று சினிமா மாணவர்களுக்கு ஒரு பாடமாக திகழ்கிறது.
அதே போல , அவரது இன்னொரு படைப்பான , தேசிய விருது பெற்ற படம் ஊருக்கு நூறுக்கு பேர். என்னிடம் நூறு இளைஞர்களை கொடுங்கள் , உலகையே மாற்றிக்காட்டுகிறேன் என விவேகானந்தர் அறைகூவல் விடுத்தாரே, அந்த பாதிப்பில் ஜெயகாந்தன் உருவாக்கிய நாவலை அடிப்படையாக கொண்டது இந்த படம்.
இந்த இரு படங்களையும் ஒருசேர பார்க்கும் அரிய வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. என்னதான் டிவிடி , இண்டர்னெட்டில் படம் பார்த்தாலும் , ஓர் அரங்கில் பெரிய திரையில் , ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்ப்பது விருந்து சாப்பிடுவது போன்றது என்றால் , படம் முடிந்து பார்வையாளர்களுடன் உரையாடுவது . விவாதிப்பது , விருந்துக்கு பின் ஐஸ்கிரீம் சாப்பிடுவது போன்றது. இந்த இரண்டையும் சுவைக்கும் வாய்ப்பு எனக்கு சமீபத்தில் கிடைத்தது.
லெனின் விருது வழங்கும் விழாவையொட்டி இந்த இரு படங்களும் தமிழ் ஸ்டுடியோ சார்பில் திரையிடப்பட்ட நிகழ்ச்சியில் இந்த இரு படங்களையும் பார்த்தேன்.
இந்த இருபடங்களின் அடிப்படை வெவ்வேறு, வெளி வந்த காலம் வெவ்வேறு.. ஆனால் இரண்டும் அற்புதமான படங்கள் என்ற ஒற்றுமையை தாண்டி இன்னொரு ஒற்றுமையும் கருத்தியல் ரீதியாக உண்டு, அது என்ன என்பது இரு படங்களையும் பார்த்தால் உங்களுக்கே தெரியும்.
********************************************************
ஊருக்கு நூறு பேர்
ஒரு தூக்கு தண்டனை கைதி. சமூக மாற்றத்துக்கு உழைக்கப்போய் தூக்கை எதிர் நோக்க வேண்டிய நிலை. அவர் சமூக சேவை, அவர் மனைவிக்கு பிடிக்கவில்லை. ஆனால் அந்த மனைவியின் தந்தை அவருக்கு ஆதரவாக இருக்கிறார். ஆதரவோ எதிர்ப்போ தெரிவிக்க முடியாத சிறிய வயதில் அவரது மகன் இருக்கிறான், அவனை விட்டு விட்டு செல்ல வேண்டிய அவல நிலையில் அவர் இருக்கிறார்.
இந்த அனைத்து விஷயங்களும், படம் ஆரம்பித்து கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்களில் சொல்லப்பட்டு விடுகின்றன. உலகத்தரம் மிக்க ஒரு படத்தை பார்த்து கொண்டு இருக்கிறோம் என நம்மால் கொஞ்ச நேரத்திலேயே உணர முடிகிறது.
படத்தின் அடிப்படை, இது என்ன மாதிரியான படம் என்பதெல்லாம் தேவையற்ற காட்சிகள் இல்லாமல் சுருக்கமாக சொல்லப்பட்டு விடுவதால் , அதன் பின் பல்வேறு காட்சிகள், பல்வேறு உன்னத நிகழ்வுகள் என ஆழ்ந்த தரிசனங்களுக்கு நேரம் இருக்கிறது.
ஜெயகாந்தன் படைப்புகளில் மறக்க முடியாத ஒரு குறு நாவல்தான் ஊருக்கு நூறு பேர்.
மறக்க முடியாத நாவல் என சம்பிரதாயமாக சொல்ல வில்லை. உண்மையில் என் அனுபவத்தை சொல்கிறேன் . பள்ளி வயதில் ஒரே ஒரு முறைதான் இதைப் படித்தேன். மலையாண்டி காவலரை கிண்டல் செய்வதற்காக தான் வைத்து இருக்கும் கார்ல் மார்க்ஸ் படத்தை தன் தாத்தா என சொல்லி அவனை நம்ப வைப்பது , கவலைப்படாமால் தூக்கு மேடை ஏறுவது என பல விஷயங்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன.
இந்த அற்புதமான நாவலை கொஞ்சம் கூட சிதைக்காமல் , நாவலின் உணர்வுகள் பாதிக்கப்படாமல் படம் ஆக்கி இருந்தாலும் , நாவலை பக்கத்துக்கு பக்கம் அப்படியே எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்து மொழி வேறு , திரை மொழி என்பது வேறு.
காட்சிப் படிமங்கள் மூலம் சொல்ல வேண்டியதை வார்த்தைகள் மூலம் சொல்ல முயன்றால் அங்கே சினிமா சீரழிகிறது என்பார் ஹிட்ச்காக். எழுத்தில் விரிவாக சொல்லப்பட்ட பல விஷயங்களை காட்சிப்படிமங்களாக காட்டி விடுகிறார் படத்தில்.
நாவலில் , போராட்டம் பத்திரிக்கை ஆசிரியர் ஆனந்தன் பார்வையில்தான் கதை ஆரம்பிக்கும். அவருக்கு தூக்கு தண்டனை கைதி ஒருவனிடம் இருந்து கடிதம் வரும். தன்னை காப்பாற்ற சொல்லி அல்ல. அவன் இறக்க போவதால் , அவன் சார்ந்த இயக்கத்தில் அவனை இடத்தை நிரப்ப சொல்லி , ஆனந்தனுக்கு வேண்டுகோள் விடுத்து அந்த கடிதம் வந்து இருக்கும்.
அவர் போய் கைதியை சந்திக்கிறார். அவன் சார்ந்த இடது சாரி இயக்கத்துக்கு பொருள் தேடும் பொருட்டு கோயிலை கொள்ளையிட முயல்கையில் அர்ச்சகரை தற்செயலாக கொல்ல நேர்ந்து தூக்கை எதிர்பார்ப்பதை அறிகிறார்.
இந்த தூக்கை தவிர்க்க முடியாதா என யோசித்து , கை எழுத்து இயக்கம் தொடங்குகிறார். இப்படி செல்லும் கதையில் திரைப்படம் பெரிய அளவில் வேறுபடவில்லை என்றாலும் , திரை ஊடகத்துக்கு ஏற்றார்போல கொஞ்சம் செதுக்கப்பட்டுள்ளது.
படம் தூக்குதண்டனை கைதி பாலனிடம் இருந்து தொடங்குகிறது. பாலன் என்ற பெயரில் குறியீடு பலருக்கு புரிந்து இருக்கும். சிறையில் இருக்கும் அவரைப் பார்க்க அவர் பையனும் , மாமனாரும் வருகிறார்கள். மனைவி வரவில்லை.
அந்த ஒரே காட்சி பல கதைகளை சொல்லி விடுகிறது.
ஏன் மனைவி வரவில்லை. தன் மகள் வராதபோதும் அவள் தந்தை ஏன் வந்தார்.
புரட்சியைப் பற்றி பேசும் படம். பராசக்தி போல ஒவ்வொரு கேரக்டரும் பக்கம் பக்கமாக பேசுவதற்கு ஸ்கோப் உள்ள கதை. ஆனால் எங்கே காட்சி மட்டும் போதவில்லையோ அங்கு மட்டும் வசனம் இருந்தால் போதும் என்பார்களே , அது போல அளவான ஆனால் ஆழமான வசனங்கள் படம் முழுதும்.
அந்த முதல் காட்சியில் பாலனிடம் அந்த பெரியவர் சொல்வார் . “ நீ சமுதாயத்தையே உலகமா பார்த்தே..ஆனால் சரோஜாவோ குடும்பத்தையே உலகமா நினைக்கிறா “
அந்த முதல் காட்சி , இந்த ஒரு வரி வசனம்.. ஒரு முழுமையான சித்திரத்தை அளித்து விடுகிறது.
முன்னும் பின்னும் செல்லும் நான் லீனியர் திரைக்கதை அமைப்பு , இந்த ஆழமான கதையை சொல்ல , கச்சிதமாக பயன்பட்டு இருக்கிறது.
கொல்லாமை திருக்குறளுடன் ஒரு காட்சி ஆரம்பிக்கும். அது ஒரு முக்கியமான காட்சி.
சமூக மாற்றத்துக்காக , இடது சாரி தீவிரவாத இயக்கம் ஒன்றில் சேர்ந்து , உழைத்து வருபவர் பாலன். ஆயுதம் வாங்கும் பொருட்டு பொருள் சேர்க்க, கோயில் நகையை கொள்ளை அடிக்க முயலும்போது தற்செயலாக கோயில் குருக்களை கொல்ல நேர்கிறது.
பாலனின் இயக்க நடவடிக்கைகள் அவர் மனைவிக்கு பிடிக்கவில்லை. தன்னையும் , தன் சின்னஞ்சிறிய மகனையும் பார்த்து கொள்வதை விட்டுவிட்டு, ஏன் இந்த வேண்டாத வேலை என நினைக்கிறாள். ஆனால் பாலனை எடுத்து வளர்த்த அவளது தந்தையோ ( இவர் ஓர் ஆசிரியர் ) பாலனுக்கு ஆதரவாக இருக்கிறார்.
இந்த நிலையில் பாலன் கொலை செய்து ஜெயிலுக்கு போகிறார்.
போராட்டம் என்ற பத்திரிகை மரண தண்டனைக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துகிறது. அதன் ஆசிரியர் ஆனந்தன் பாலனை சந்தித்து கருணை மனு/ மேல் முறையீடு போடச்சொல்கிறார். அதிகார வர்க்கத்திடம் மன்னிப்போ , பிச்சையோ கேட்க முடியாது என பகத்சிங்கை உதாரணம் காட்டி பாலன் திட்டவட்டமாக மறுத்து விடுகிறார்.
தனக்கு வேறு ஒரு உதவி தேவைப்படுவதாக சொல்லி , தன்னால் கொல்லப்பட்ட அர்ச்சகரின் மனைவி மற்றும் மகனை பார்க்க விரும்புவதாக சொல்கிறார்.
ஆனந்தன் கைஎழுத்து விஷ்யமாக பாலன் வீட்டுக்கு செல்கிறார். அர்ச்சகர் வீட்டுக்கும் சென்று அர்ச்சகர் மனைவி மற்றும் மகனை சந்திக்கிறார்.
ஆனந்தன் கதை இன்னொரு தளம். அவரும் சமூக மாற்றத்தில் ஆர்வம் கொண்டவர். சிறைக்கு சென்றவர்.
அதன் பின் அறிவாயுதம் கொண்டு போராடுவதே வலுவான போராட்டம் என கருதி போராட்டம் பத்திரிக்கை மூலம் சமூகசேவையை தொடர்கிறார். அவரது சகாதான் அந்த பதிப்பகத்தை கைக்காசை செலவழித்து நடத்தி வருகிறார். ஒரே ஒரு முறை தன் மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆனந்தனை கேட்கும் அவர் , மற்றபடி முழுக்க முழுக்க ஆனந்தனுக்கு அவரது பத்திரிக்கை பணிக்கு பிரதிபலன் எதிர்பாராது உறுதுணையாக இருக்கிறார்.
பாலன் சார்ந்த இயக்கத்தினரை சந்தித்து பேசும் ஆனந்தனுக்கு வன் முறை மூலம் மாற்றம் என்ற கருதுகோள் உவப்பானதாக இல்லை. இதை அந்த இயகத்தினருட்மே சொல்கிறார், விவாதங்கள் நிகழ்கின்றன.
அர்ச்சகர் மகன் மற்றும் மனைவியை பாலனை சந்திக்க ஜெயிலுக்கு அழைத்து வருகிறார் ஆனந்தன். தான் செய்ததில் தவறில்லை , அரசிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்ற பாலன், தான் செய்த செயல் ஒரு குடும்பத்தையே உருக்குலைத்து விட்டதை கண்கூடாக பார்த்து நெகிழ்கிறார்,அர்ச்சகர் மனைவியிடம் மன்னிப்பு கேட்கிறார், இந்த படத்தின் உச்சம் இந்த காட்சிதான்.
ஆனால் அந்த மனைவியோ , மகனோ அவனை வெறுக்கவும் இல்லை.. தூக்கில் தொங்க வேண்டும் என் ஆசைப்படவும் இல்லை. நல்லா இருப்பா என சாவு உறுதி ஆகிவிட்ட பாலனை ஆசிர்வதித்து கிளம்புகிறாள் அவள்.
இது ஒரு தளம். இந்த தளத்தில் இதுதான் உச்சம், இன்னொரு தளத்தில் இன்னொரு சித்திரிப்பு.
ஆயுத போராட்டம், ஆயுதம் வாங்க ஆலய கொள்ளை, அர்ச்சகர் கொலை என செயல்பட்ட அந்த இயக்கத்தினர், சில சந்தர்ப்பங்களில் வன்முறை அடிப்படையிலான சாகசம் வேலைக்காகாது என முடிவெடுக்கின்றனர், தம் எதிர்ப்பை கறுப்பு கொடி போராட்டம், துண்டறிக்கை மூல்ம் வெளிப்படுத்தி மக்களுடன் உரையாட முடிவு செய்கிறார்கள் அவர்கள்.
மக்கள் போராட்டம் என்பது என்றும் அழிந்து விடாது. வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்ற தளம் அது.
இன்னும் ஒரு தளம்.
சில ஆண்டுகள் முன்பு ஆங்கிலம் அல்லாத வெளினாட்டு படம் ஒன்று உலகை கலக்கியது. கிரிஸ்டோவ் கியலோவ்ஸ்கி இயக்கத்திலெ ஷார்ட் ஃபில்ம் அபவுட் கில்லிங் என்றொரு போலந்து படம் வந்தது.
தூக்குத்தண்டனைக்கு எதிரான படம். அந்த படம் ஏற்படுத்திய பாதிப்பால் , எழுந்த விவாதங்களால், அந்த நாட்டில் தூக்கு தண்டனையே கைவிடப்பட்டது.
அதை விட வலுவாக , தூக்குத்தண்டனைக்கு எதிராக குரல் கொடுக்கிறது படம். இந்த படம் பல தளங்களில் இயங்கினாலும் இதன் ஆதார ஸ்ருதி , தூக்குத்தண்டனை எதிர்ப்புதான்.
பாலன் கொலை செய்கிறார் என்றால் அது ஒரு விபத்து , சில நிமிடங்கள் தன்னை மறந்ததால் நிகழ்ந்த ஒரு நிகழ்வு. ஆனாலும் அது தவறுதான், அதன் விளைவாக ஒரு குடும்பமே பாதிக்க்ப்படுகிறது. அதைப்பார்த்து அவனுக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது
ஆனால் அரசு இயந்திரம் எந்த பதட்டமும் இல்லாமல். எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் , மிகுந்த கலை நயத்துடன், அழகாக திட்டமிட்டு, ஏகப்பட்ட ஃபார்மாலிட்டிகளுடன் ஒரு கொலையை நிகழ்த்துகிறது.
ஓர் அன்னைக்கு இரு குழந்தைகள் என வைத்து கொள்ளுங்கள்..அதில் ஒரு குழந்தை இறந்து விடுகிறது. அவளுக்கு நீதி வழங்குகிறேன் என்ற பெயரில் இன்னொரு குழந்தையையும் கொன்று விடுவது அவளுக்கு சந்தோஷமாகவா இருக்கும்.
அதேபோல சமுதாயத்தை ஓர் அன்னையாக உருவகித்து பாருங்கள். அந்த அர்ச்சகர் பாவம்தான், அவர் மரணத்தால் அவர் குடும்பவம் உருக்குலைவது அவலம்தான்,
பாலனைக் கொன்று., அவன் குடும்பத்தை நிர்க்கதியாக்குவது எந்த வகையில் அர்ச்சகர் குடும்பத்துக்கு உதவப்போகிறது. சமுதாயம் என்ற அன்னையின் இரு குழந்தைகளும் இறப்பதுதான் இந்த மரண தண்டனையால் கிடைத்த பலன்.
ஆனால் தூக்கு தண்டனைக்கு எதிரான பிரச்சாரப்படாமாக இல்லாமல் , ஊருக்கு நூறு பேர் இயக்கத்தின் தேவை ஏன் இருக்கிறது என்பதை இயல்பாக சொல்லி செல்கிறது படம்
பார்வையாளனின் கற்பனைக்கு வேலை கொடுக்கும் வகையிலான திரைக்கதை. நான் லீனியர் பாணியில் கதை சொல்லப்படுவ்தால் , ஒவ்வொரு சம்பவமும் அதற்கு உரிய முக்கியத்துவம் பெற்று விடுகிறது.
உதாரணமாக ஆனந்தனின் பார்வையில் கதை நகரும்போது , பத்திரிக்கை , அதை நடத்த ஏற்படும் கஷ்டம், அவனுடன் திருமணம் பற்றி பேசுவது என ஒரு அழகிய சிறுகதையாக மிளிர்கிறது.
ருக்குவுக்கு ஆனந்தன் மேல் மரியாதை மட்டுமா அல்லது காதலும் இருக்கிறதா என்பதை பார்வையாளரின் யூகத்துக்கு விட்டு விடுகிறார் இயக்குனர்.
பாலனுக்கு அந்த அர்ச்சகரை தெரியும் . சில உதவிகள் செய்து இருக்கிறார். அந்த அர்ச்சகரையே கொல்ல நேரும் அவலம் ஒரு புறம் என்றால் உடல் ரீதியாக பலவீனமான அர்ச்சகர் பாத்திரப்படைப்பு ஓர் அற்புதம்.
தன்னால் ஓர் இளைஞனை வெல்ல முடியாது என அவருக்கு தெரியும். ஏதாவது பேரம் பேசவோ ,கெஞ்சவோ அல்லது கண்டு கொள்ளாமல் போகவோ செய்யாமல் , தான் செய்யும் பணிக்கு உண்மையாக இருந்து அந்த இளைஞனுடன் போராடி பலி ஆகிறாரே. அந்த தியாகம் அந்த இளைஞன் பிறகு செய்யும் தியாகத்துக்கு எந்த வகையிலும் குறைவானது அன்று.
பத்திரிக்கை நடத்த தன் பெண்ணின் நகையை எல்லாம் அடகு வைத்த தந்தை, அந்த நகையை எல்லாம் மீட்கப்போவதாக அவளிடன் பேச ஆரம்பிக்கிறார். அவளும் உற்சாகமாக பேசுகிறாள்..அடுத்த மாதம் கண்டிப்பாக மீட்டு விடலாம், இந்த மாதம்தான் கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது என அவர் பேச பேச , அவர் எங்கே வருகிறார் என புரிந்து கொண்டு அவர் பேசி முடிக்கும் முன்பே மிச்சம் இருக்கும் வளையலை கழட்டி விடுகிறாள் அவள்.
இது போன்ற நறுக்குதெறித்தாற்ப்போன்ற காட்சிகள் ஏராளம்.
பாலன் ஓர் ஓவியன் என்பதால் , தன் உணர்வுகளை ஓவியமாக சொல்வது, தன் ஆன்மாவாக தன் ஓவியத்தை கருதுமாறு அர்ச்சகரின் மகனிடம் சொல்வது, பிண்ட சோற்றை தன் சித்தாந்தரீதியில் விளக்குவது , சமுதாய நலனுக்காக தன் ஆசைகளை துறந்து தூக்கு தண்டனையை ஏற்க தயாராக இருப்பவனிடம் போய், உன் கடைசி ஆசை என்ன என கேட்பதன் அபத்தம் கண்டு சீறுவது, தன் பெண்ணுக்காக ஆனந்தனிடம் பேசும் தந்தை , இடதுசாரி புரட்சியாளர்க்ள் தரப்பு வாதங்கள், அர்ச்சகர் மற்றும் பாலனுக்கு இடையேயான உரையாடல், அர்ச்சகரின் மனைவி பாலன் சந்திப்பு என எத்தனையோ விஷ்யங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
வசனங்கள் , இசை, ஒளிப்பதிவு போன்றவை பக்க பலமாக இருக்கின்றன. நடித்த ஒவ்வொருவரும் பாத்திரங்களுக்கு கச்சிதமாக பொருந்துகின்றன. அதேபோல கடைசியில் வரும் பாடல் வரிகளும் அருமை..
திரை மொழி என்றால் என்ன என சிலர் அவ்வப்போது கேட்பார்கள். இதை சொல்லி புரிய வைக்க முடியாது என்றே பெரும்பாலும் பதில் கிடைக்கும். அப்படி பதில் அளிப்பதை விட, இந்த படத்தை பாருங்கள்...உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும் என்று ஒரே வார்த்தையில் இனிமேல் சொல்லிவிடலாம் என்றே நினைக்கிறேன்.
தமிழ் சினிமாவுக்கு லெனின் அளித்த கொடையாகவே இந்த படத்தை பார்க்கிறேன்
***************************************************************
நாக் அவுட்
லெனின் அவர்களின் இன்னொரு முக்கியமான படம் , நாக் அவுட். தமிழின் முதல் குறும்படமான இது , எந்த முன்மாதிரியும் இல்லாமல் எடுக்கப்ட்டு இருந்தாலும் , பலரும் ஒன்றும் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளத்தக்க அளவில் சிறப்பாக வந்து இருக்கிறது.
நாக் அவுட் என்பது விளையாட்டில் அதிகம் பயன்படும் சொல். நாக் அவுட் சுற்று என்றெல்லாம் கேள்விப்பட்டு இருப்போம்/ ஓர் அணியை வீழ்த்தி இன்னொரு சுற்றுக்கு முன்னேறும் சுற்றுத்தான் நாக் அவுட் சுற்று.குத்துச்சண்டயில் இந்த சொல் அதிகம் பயன்படும். பாயிண்ட் அடிப்படையிலும் வெல்வதுண்டு , ஒருவரை நாக் அவுட் செய்து வீழ்த்தி வெல்வதும் உண்டு,
ஓர் அனாதைப் பிணத்தில் இருந்து படம் ஆரம்பிக்கிறது, அந்த பிணத்தை யாரும் சட்டை செய்யவதில்லை .உலகம் தன் போக்கில் இயங்குகிறது, எல்லோரிடனும் ஐந்து பத்து என வாங்கி ஒருவன் அந்த பிணத்தை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்கிறான், அபப்டிப்பட்ட ஆதரவற்ற பிணம் யார் என காட்சி கொஞ்சம் கொஞ்சமாக பின் நோக்கி விரிகிறது.
அவன் ஒரு குத்துச்சண்டை வீரன் , தோல்வியே காணாதவன். பலரை நாக் அவுட் செய்து வென்றவன். தங்கப்பதக்கம் வென்ற சாம்பியனாக இருந்தவன்.( இவை எல்லாம் காட்சி படிமங்களாகவே சொல்லப்படுகிறது.. வசனங்கள் மிக மிக குறைவு.)
ஆனால் நம் அமைப்புகள். அரசு இயந்திரங்களால் நாக் அவுட் செய்யப்பட்டு , ராஜா போல வாழ வேண்டியவன் , அனாதைப்பிணமாக கிடக்கிறான்.
ஆனால் இதை மட்டும் சொல்லி இருந்தால் , படம் முழு கலைப்படைப்பாக மிளிர்ந்து இருக்காது. அவன் இறந்து புதைக்கப்பட்ட பின்பும் கூட நாக் அவுட் செய்து தோற்கடிக்கபடுகிறான் என்பதே படத்தின் உச்ச கட்ட காட்சி.
அவன் புதைக்கப்பட்ட இடம் , ஒரு சாம்பியன் புதைக்கப்பட்ட இடம் மிருகங்களும் மனிதர்களும் தம் கழிவுகளை வெளியேற்றும் இடமாக இருக்கிறது.
சற்று தொலைவில் அவன் பெயரில் மணி மண்டபம் , சமாதி அமைக்கப்பட்டு மரியாதை செய்கிறார்கள். பலரும் வந்து பார்க்கிறார்கள்.
உரிய மரியாதை. அங்கீகாரம் இல்லாதாதால்தான் அவன் இறந்தான்/ ஆனால் இறந்த பின்னும் அவனுக்கு , ஒரு விளையாட்டு வீரனுக்கு , அவன் தகுதிக்கேற்ற மரியாதையோ , அங்கீகாரமோ கிடைக்கவில்லை என பொட்டில் அடித்தது போல சொல்கிறது படம்.
சினிமா என்பது காட்சி ஊடகம் என்பதை உணர்ந்து எடுக்கப்பட்ட படம் இது , வசனங்கள் வெகு குறைவு.
அவன் அனாதை பிணமாக புதைக்கபடுகிறான். அவன் அணிந்திருந்த பதக்கமும் , வேஷ்டியும் கூட உருவப்படுகின்றன,. முழுமையாக வீழ்த்தப்படுகிறான்.
குத்துச் சண்டையில் ஒரு வீரன் வீழ்த்தப்பட்டால் , உடனடியாக அவன் தோல்வியாளன் என அறிவிக்க மாட்டார்கள். அவன் அருகே வந்து கவுண்டிங் செய்வார்கள். அதற்கு பின்னும் அவன் எழாவிட்டால்தான் , அவன் தோற்றதாக கருதப்படுவான்.,
இந்த வீரம் எத்தனையோ முறைகள் இப்படி வீழத்தப்பட்டு , கவுண்டிங்க்கில் துள்ளி எழுந்து எதிரிகளை பந்தாடியவன். ஆனால் இப்போது முழுமையாக தோற்கடிக்கப்பட்டு விட்டான் என ஒரு காட்சியில் சொல்லி இருப்பார். கண் கலங்கி விடும்.
அதே போல , உயிரிடன் இருந்த போதுதான் அவன் திறமை , உழைப்பு சுரண்டப்பட்டது என்றால், புதைகுழிக்கு போகும் கடைசி நொடி வரை அவன் சுரண்ட்டப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறான்,
இன்னொரு விதத்தில் பார்த்தால் , அவன் புதைக்கப்பட்ட பின்பும் , அவனுக்கு சேர வேண்டிய புகழ் , மரியாதை சுரண்டப்பட்டு வருகிறது.
விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை இப்படி மோசமாக இருப்பது உண்மைதான். இப்படி நாக் அவுட் ஆனவர்கள் ஏராளம்.
அதுமட்டும் அல்லாமல் இபப்டி அங்கீகாரம் மறுக்கப்பட்டு , நாக் அவுட் செய்ய்யப்பட்டவர்கள் , மற்ற துறையிலும் ஏராளம்.
அந்த காலத்தில் ஜெயபிரகாஷ் நாராயணன் என ஒருவர் இருந்தார், சுதந்திர போராட்ட வீரர், எமஜென்சி கொடுமைகளை எதிர்த்து போராடியவர். ஆனால் அவரைப் பற்றி எந்த பாட புத்தகத்திலும் இருக்காது. அவரை யார் என்றே தெரியாதவர்கள் இங்கு அதிகம். அவருக்கு கிடைக்க வேண்டிய மரியாதை யார் யாருக்கோ சென்று கொண்டு இருக்கிறது.
இப்படி மறக்கப்பட்ட எத்தனையோ வரலாற்று நாயகர்களை ஒரு கண்மேனும் நினைக்க வைத்து விடும் இந்த குறும்படம் என்றென்றும் நினைக்கப்படும்.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |