இதழ்: 32    சித்திரை (May), 2015
   
 
  உள்ளடக்கம்
 
திரைப்படம் எதிர் இலக்கியம் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
ஜெயகாந்தனும் தமிழ் சினிமாவும் - தியடோர் பாஸ்கரன்
--------------------------------
உன்னைப் போல் ஒருவன் - அம்ஷன் குமார்
--------------------------------
சில நேரங்களில் சில மனிதர்கள் - B.லெனின்
--------------------------------
சினிமாவுக்குப் போன சித்தாளு - ஜெயகாந்தன்
--------------------------------
வரலாற்றுக்கு எதிராக ஜெயகாந்தன் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
ஜெயகாந்தனின் அறிவை செப்பனிட்ட சினிமா - அம்ஷன் குமார்
--------------------------------
‘யாருக்காகவோ அழுதான்...!’- B.லெனின்
--------------------------------
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
பார்வையாளர்களின் கூட்டு உளவியலும், ஹாலிவுட் மையநீரோட்ட சினிமாவும் 2 - வருணன்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ்
 
 
   

   

 

 

இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை

11. ‘மீனவப் பெண்’ - பெயர் மாறிய படம்

- தம்பிஐயா தேவதாஸ்

‘ஆழிக்கரையின் அன்புக் காணிக்கை’ என்றொரு தமிழ்ப் படம் நீண்ட நாட்களாகவே தயாரிப்பில் இருந்து வந்தது. இலங்கையின் முதலாவது தமிழ்ப் படத்தை (35 மி.மீ) உருவாக்கிய பி.எஸ். கிருஷ்ணகுமாரே இப்படத்தையும் தயாரித்து நெறியாண்டார்.

1964ஆம் ஆண்டு கொழும்பு முன்னேற்ற நாடக மன்றத்தின் உதவியுடன் இப்படம் எடுக்கப்பட்டது. இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள கலைஞர்களை ஒன்று சேர்த்தே இப்படம் உருவாக்கப்பட்டது.

எம்.எல்.ஜெயகாந்த் (யாழ்ப்பாணம்), தேவன் அழகக் கோன்(மன்னார்), கே.தங்கையா (பதுளை), முத்தழகு (ஹட்டன்), சிலோன் சின்னையா (அம்பிட்டிய), சுசில்குமார் (தலவாக்கலை), ராஜலக்ஷ்மி (திருகோணமலை), சுப்பையா, லீலாரஞ்சனி, கே. நல்லதம்பி, கே.வேலாயுதன், எஸ். மாரிமுத்து, பெனடிக் லாசரஸ், கே.ஆப்தீன் ஆகியோர் நடிகர், நடிகைகளாகத் தெரிவுசெய்யப்பட்டனர். தோட்டக்காரியைப் போல் இப்படம் இயக்குநருக்கு அதிக கஷ்டத்தை ஏற்படுத்தவில்லை. எல்லோரும் உணர்ந்து நடித்தமையே அதற்குக் காரணமாகும். கதை வசனத்தையும் கிருஷ்ணகுமாரே எழுதினார். தோட்டக்காரி படத்துக்கு இசை அமைத்த கே.எம்.சவாஹிர்தான் இப் படத்துக்கும் இசை அமைத்தார்.

படம் 10 வருடங்கள் தயாரிப்பில் இருந்துவிட்டது. பணக் கஷ்டம் காரணமாக இத்தனை காலம் நீண்டுவிட்டது. சினிமா ஆர்வமிக்க வர்த்தகர் ஒருவர் கிருஷ்ணகுமாரின் கஷ்டத்தை உணர்ந்து உதவ முன்வந்தார். ‘ஒற்றுமை இருந்தால் தமிழ் நாட்டைவிடச் சிறந்த முறையில் இயங்கும் தமிழ்ப் படம் தயாரிக்கலாம்’ என்ற கருத்தைக் கொண்டிருந்த இந்த வர்த்தகர்தான் ஜனாப். கே.காதர் மீரா (முத்தலீப்)

‘ஆழிக்கரையின் அன்புக் காணிக்கை’ என்ற பெயர் அழகாக இருந்தாலும் அதிஷ்டம் இல்லாததாகிப் போய் விட்டது. அப்படம் ‘மீனவப்பெண்’ என்று பெயர் மாற்றப்பட்டு கே.காதர் மீராவின் உதவியுடன் வளர்ந்து வந்தது. இத்தயாரிப்பில் பி.எஸ். அருண்ராஜ் என்ற இளைஞரும் உதவி புரிந்தார். அந்தக் காலத்தில் 24000 ரூபா செலவு செய்து படம் முற்றுப் பெற்றது.

எம்.என்.எம். புரடக்ஷன் ‘மீனவப்பெண்’ 1973ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திரைக்கு வந்தது. இலங்கை எங்கும் 5 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இக் காலத்தில்தான் ‘இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம்’ ஆரம்பிக்கப்பட்டது.. உள்ளூர்த் திரைப்பட வளர்ச்சியை ஊக்குவிக்கவேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இக் கூட்டுத்தாபனத்தால் ‘மீனவப்பெண்’ணுக்கு எதுவித உதவியும் கிடைக்காதது துரதிஷ்டமே.

தோணிக்கரை என்ற மீன்பிடிக் கிராமத்தில் ‘ராமையா’ என்ற நேர்மையான மீனவன் வாழ்ந்து வந்தான். இவனுக்குப் ‘பார்வதி’ என்னும் மகளும் ‘ராஜு‘ என்னும் மகனும் இருந்தார்கள். சங்கர் என்பவனும் ராமையாவுடன் தோணியோட்டி உழைத்துவரும் அநாதை இளைஞன். நாளாவட்டத்தில் பார்வதிக்கும் சங்கருக்கும் காதல் மலருகிறது.

தோணிக்கரையின் வியாபார உரிமையை, முதலாளி ராஜப்பன் தனதாக்கியிருந்தான். இவனால் மீனவர்கள் கஷ்டப்பட்டனர். ராமையா குடும்பம் சொந்தத்தோணி வைத்திருந்ததால் இன்னல்களுக்கு ஆளாகவில்லை.

வருடா வருடம் இடம்பெறும் முருகன் திருவிழாவில் ராஜப்பன் பார்வதியைக் கண்டுவிட்டான். அவளை எப்படியும் அடையவேண்டுமென்பது அவனது ஆசை. பார்வதியை ஒருமுறை அவன் இழுத்தபோது ஆவேசம் கொண்ட அவள் அவனது கன்னத்தில் அறைந்துவிட்டாள்.

ஆத்திரம் கொண்ட ராஜப்பன் வழிவாங்கும் எண்ணத்துடன் ராமையாவின் தோணியைச் சதி செய்து தான் உடமையாக்கிக் கொண்டான். சங்கரையும் பார்வதியையும் கடத்திச் சென்று சித்திரவதை செய்தான். முடிவில் சங்கர் சொல்லப்பட்டான். பார்வதி தப்பியோடி மஞ்சுளா என்ற பெயருடன் டொக்டர் முரளியின் ஆஸ்பத்திரியில் நேர்சாக வேலை செய்கிறாள்.

டொக்டர் முரளியின் உதவியுடன் தோணிக் கரை வந்த மஞ்சுளாவுக்கு (பார்வதி) அதிர்ச்சி காத்திருக்கிறது. அவள் யாரை இறந்ததாக எண்ணியிருந்தாளோ அதே சங்கர் மீண்டும் தோணிக்கரையில் நின்றான். சி.ஐ.டி. சிவராம் சங்கரைப்போல் உருவமுள்ளவனாகையால் ரௌடி ராஜப்பனையும் அவன் கள்ளக் கடத்தல் செய்வதனையும் சங்கர் என்ற பெயரில் வந்து கண்டுபிடிக்கிறான். அதுவரை தனக்கு உதவிய மஞ்சுளாவை விரும்பிய டொக்டர் முரளி உண்மையை உணர்ந்து அவர்களுக்கு உதவுகிறார்.

இதுதான் மீனவப்பெண் திரைப்படத்தின் கதைச் சுருக்கமாகும். ராமையாவாக வீ. சுப்பையாவும், பார்வதியாக ராஜலக்ஷ்மியும், சங்கராக ஜெயகாந்தும், ராஜப்பனாக தேவன் அழகக்கோனும் டொக்டர் முரளியாக சுசில்குமாரும் தோன்றினார்கள்.

‘மீனவப்பெண்’ திரைப்படத்தில் கதை அமைப்பு, தொழில்நுட்பம் போன்ற பல்வேறு அம்சங்களில் குறைகள் இருந்தனதான். அக் காலத்தில் திரையிடப்பட்டிருந்த பிரபலமான தென்னிந்தியப் படங்களுடன் மீனவப்பெண்ணும் ஓடியது. அந்த ஆரம்ப காலத்திலேயே இப்படியான துணிகர முயற்சியில் பி.எஸ். கிருஷ்ணகுமார் ஈடுபட்டிருக்கிறார். முதன்முதலில் இரண்டு தமிழ்ப்படங்களை இயக்கிய பெருமை அவரையே சாரும்.

‘மீனவப்பெண்’ பற்றிப் பத்திரிகைகளில் பல விமர்சனங்கள் வெளிவந்தன. அப்பொழுது வெளிவந்த ‘தேசாபிமானி’ என்னும் பத்திரிகையும் வித்தியாசமான முறையில் விமர்சனம் எழுதியது.

‘இலங்கையின் அழகான ஒரு கடற்கரை ஊர் தோணிக்கரை. அங்கே ஒரு காடு இருக்கிறது. அந்தக் காட்டிலுள்ள பயங்கரக் குகைகளில் ஒரு பெரிய கொள்ளைக் கோஷ்டி, அதற்குத் தலைவன் நன்றாகச் சிரிக்கத்தெரிந்த மீனவன். இன்னொரு மீனவன் பஞ்சாயத்துத் தலைவனாம். அவனுக்கு ஒரு மகளும் ஒரு வளர்ப்பு மகனும் இருக்கிறார்கள்.

ஒருநாள் தேவன் அழகக்கோன், சுப்பையாவைத் தொழில் செய்ய முடியாமல் செய்து விடுகிறார். மூவாயிரம் ரூபா சீதனத்துக்கு ஜெயகாந்தை காசநோய்க்காரிக்குக் கல்யாணம் பேசுகிறார்கள். மணவறையில் இரத்தவாந்தி எடுக்கும் மணப்பெண்ணுக்கு முதலுதவி செய்யாமல் ஜெயகாந்த் தாலி கட்டுகிறார்.

ஜெயகாந்தைக் குகைக்குக் கடத்திப்போய்க் கட்டி வைத்துச் சாட்டையால் அடிக்கிறார்கள். கடற்கரையில் வாழும் ராஜலக்ஷ்மி விறகு பொறுக்க காட்டுக்குள்தான் போவாள். அவளையும் குகைக்குள் கொண்டுபோய்விடுகிறார்கள். அங்கு அவள் சோகமான பாடலொன்றைப் பாடுகிறாள். ஜெயகாந்தைக் கடற்கரையில் புதைத்துவிடுகிறார்கள்.

குகைக்குள்ளிருந்த ராஜலக்ஷ்மி கடலில் குதித்துக் கோட்டைப் புகையிரத நிலையத்துக்கு முன்னால் வந்து மிதக்கிறார். அவருக்கு டொக்டர் ஒருவர் அடைக்கலம் தருகிறார். ஜெயகாந்துக்கு மீண்டும் படத்தில் தோன்றும் லக் அடிக்கிறது. அவர் கராட்டி தெரிந்த சி.ஐ.டி. ஆகிவிடுகிறார். சுசில்குமார் மூக்கைப் பிடித்து ஒரு காதல் பாட்டு பாடுகிறார். ஜெயகாந்த் இதுவரை பாடாததால் அதே பாடலுக்கு இன்னுமொரு கட்டுமரத்தில் நின்று ‘ஓகோ’ என்று அபிநயம் பிடிக்கிறார். அதே பாடலுக்கு பற்றிக் ஆடை அணிந்த பெண்கள் கரையில் ஆடிக்காட்டுகிறார்கள்.

வில்லன் பிடிபடுகிறான். மீனவப்பெண் முடிந்துவிட்டது. ரொம்ப சுபம், இப்படி எழுதப்பட்ட அந்த விமர்சனத்தின் இறுதிப் பகுதியில் ‘பின்குறிப்பு’ என்று பின்வருமாறு சில வாக்கியங்கள் எழுதப்பட்டிருந்தன.

‘இலங்கைத் தமிழ்ப் படம்’ என்றால் காசு கொடுத்துப் பார்ப்பது நமது கடமை என்று சொல்லப்படுகிறது. நான் எனது கடமையைச் செய்தேன். இலங்கையில் தமிழ்ப் படம் எடுக்கத் தொடங்கி ஏறக்குறைய 15 ஆண்டுகளாகி விட்டன. 15 ஆண்டுகள் என்பது லேசுபட்ட சங்கதியல்ல. எனவே, பத்தாவது படம் லேசுப்படாத சங்கதியாக இருக்கவேண்டும்’ என்று அந்த பி.கு. முடிவடைகிறது.

மீனவப்பெண் சுமாராகவே இருந்தது. சுமாராகவே ஓடியது. இலங்கையில் முதலாவது (35 மி.மீ) தமிழ்ப்படத்தை நெறியாண்டவர் என்ற பெயருடன் முதன் முதலில் இரண்டு படங்களை நெறியாண்டவர் என்ற பெயரும் பி.எஸ். கிருஷ்ணகுமாருக்கே கிடைக்கிறது.

----------------------------------------------------------------------------------------------------மின்னஞ்சல் முகவரி: thambytheva@gmail.com

இந்த புத்தகத்தை வெளியிடுவதிலும், நூலை இணையத்தில் வெளியிட வசதியான வடிவில் கொடுத்து உதவிய, நண்பர் ரிஷான் செரிப்பிற்கு பேசாமொழி சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamoli

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </