உன்னைப் போல் ஒருவன்
|
தனது சிறுகதைகள் மூலம் ஜெயகாந்தன் எழுத்துலகில் பிரவேசம் செய்த பொழுது அவருக்கு இலக்கிய உலகமும் பத்திரிகை உலகமும் கொடுத்த அதே பரவசமான வரவேற்பினை நல்ல சினிமா ரசிகர்கள் அவரது முதல் படமான உன்னைப் போல் ஒருவனுக்கும் அளித்தனர். தமிழ் திரை உலகம் கொடுத்த வரவேற்பு? அது முற்றிலும் வேறானது.
ஒரு படம் வெளியாகும் பொழுது படத்தயாரிப்பாளரோ டைரக்டரோ ரசிக தெய்வங்களைக் கும்பிட்டு படத்தைப் பார்த்து தங்களை வாழ வையுங்கள் என்று வேண்டுகோளுடன் பத்திரிகையில் தங்கள் புகைப்படங்களைப் பிரசுரிப்பார்கள். படத்திலும் அக்காட்சிகள் டைட்டிலுடன் வரும். ஆனால் ஜெயகாந்தன் வீர முழக்கத்துடன் ஒரு கலைஞனாய் தன்னை உணர்த்திய பாங்கு அதுவரை தமிழ் திரையுலகம் கண்டிராத ஒன்றாகும்.
‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தைப் பார்க்க வந்த பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த அறிக்கையின் ஒரு சிறு பகுதி இது. ‘இன்றைய தமிழ் சினிமா ரசனையையும் அதன் சிருஷ்டி முறைகளையும் இந்தப்படம் பூரணமாக மறுத்து ஒதுக்கி இருக்கிறது என்று தெரிந்தும் பார்க்க வந்திருக்கும் நண்பர்களே, உங்களை நான் வணங்குகிறேன்; பாராட்டுகிறேன். காலத்தின் தேவையை உணர்ந்து ஒரு கடமையை ஆற்ற வந்தவர்கள் நாங்கள். இந்தப்படம் அதற்கான ஓர் ஆரம்பமே!’
தமிழ் சினிமாவையும் அதில் பங்கேற்றவர்களையும் தொடர்ந்து விமர்சித்து வந்தவர் ஜெயகாந்தன். அவரே ஒரு படம் எடுக்க வேண்டும் என்கிற விதையினை அவரை நன்கறிந்த நண்பர்கள் அவரிடம் இட்டனர். அவருக்கும் அத்தகைய நம்பிக்கை முளையிடவே படமுயற்சிகள் துவங்கின. தனது ‘உன்னைப் போல் ஒருவன்’ நாவலைப் படமாக்க முனைந்தார். அவர் அதற்கு எழுதிய திரைக்கதை-வசனத்தைப் படித்துப் பார்த்த சினிமா தயாரிப்பாளர் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி ‘என்ன இது? படம் பூராவும் சமைப்பதும் சாப்பிடுவதும் படுத்துத் தூங்குவதாகத்தான் இருக்கும் போலிருக்கு. இது மாதிரி எடுத்தால் வங்காளிப் படம் மாதிரி LAG ஆக இருக்குமே’ என்று கையை விரித்தார். அதன் பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து ஆசிய ஜோதி பிலிம்ஸ் பட நிறுவனத்தை ஆரம்பித்து படத்தை எடுப்பது என்று தீர்மாணிக்கப்பட்டது. அதன் ஆறு தயாரிப்பாளர்களில் ஜெயகாந்தனும் ஒருவர். திரைப்படம் எடுப்பதில் சற்றும் அனுபவம் இல்லாத ஜெயகாந்தன். பின்னர் அவர் எவ்வாறு டைரக்ட் செய்தார்? பி.லெனின் ‘சினிமா நிஜமா?’ என்னும் நூலில் அதை விவரிக்கிறார்.
|
‘உன்னைப் போல் ஒருவன் படத்தில் கதாநாயகியாக நடித்த காந்திமதி தலைவாரும் காட்சி அது. காட்சிப்படி பல காலம் எண்ணெய் பசையற்ற பரட்டையான அவரது தலை முடியில் சீப்பு வாரப்பட்டு சிக்கி இரண்டாக ஓடிய வேண்டும். கேமரா ஓடுகிறது’. காந்திமதி தலைவாரத் துவங்குகிறார்; அது மக்கி போன மரசீப்பு தான் என்றாலும் எதிர்ப்பார்த்தபடி உடையவில்லை; மறுபடியும் மறுபடியும் வாரிக்கொண்டே இருக்கிறார்.
கேமரா ஓடிக்கொண்டே இருக்கிறது.
ஜெயகாந்தனோ “ம் இன்னும் அழுத்தமாக வாருங்கள் இன்னொரு முறை...”
ஒளிப்பதிவாளர் நடராஜன் சற்று நிதானித்து, “ஜே.கே. பிலிம் ஓடிக்கொண்டே இருக்கிறது. ...”
“ஓடட்டும்... சீப்பு உடையும் வரை ஓடட்டும்.”
பிலிம் சுருள் அனைத்தும் ஓடி முடியும் பொது தான் சீப்பு உடைந்தது.
உண்மையில் இந்தக் காட்சியை எடுப்பதற்கு இவ்வளவு பிலிம் தேவையில்லை தான். அதுவே ஒரு அனுபவமுள்ள இயக்குனராக இருந்திருந்தால் அதை கட் செய்து இரண்டு ஷாட்டுகளாகக் குறைந்த பிலிமில் எடுத்திருப்பார்.’
படம் 21 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்டது. ஆர்.காந்திமதி, பி.உதயன், ஏ.கே. வீராசாமி, எஸ்.என்.லட்சுமி ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்திருந்தனர். பாடல்கள் இல்லாத இப்படத்தின் பின்னணி இசையை வீணை வித்வான் சிட்டிபாபு அமைத்திருந்தார். மொத்த செலவு ஒரு லட்ச ரூபாய். 1964ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் நாள் படம் தணிக்கை ஆகியது. அகில இந்திய அளவில் ‘உன்னைப் போல் ஒருவன்’ படம் மூன்றாம் பரிசினை மத்திய அரசிடமிருந்து பெற்றது. ஆங்கிலப் பத்திரிகைகள் பாராட்டின. எந்தக் கட்சி அரசியலும் பேசா விடினும் அதை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பார்த்துப் பாராட்டவும் செய்தனர்.
அப்போதைய முதலமைச்சர் காமராஜ் உட்பட சிலர் மனதாரப் பாராட்டவும் செய்தனர். படம் சென்னை கிருஷ்ணவேணி தியேட்டரில் திரையிடப்பட்டது. மக்களின் ஆதரவும் அதற்கு நாளுக்கு நாள் பெருக ஆரம்பித்தது. ஆனால் தியேட்டர்காரர்களும் விநியோகஸ்தர்களும் படத்தை ஓடவிட்டால் தானே? மக்களைப் பார்க்க விடக் கூடாது என்பதற்காகவே 6.30 மணிக்கே டிக்கெட் தராமல் மாலைக்காட்சி திரையிடலுக்கு தியேட்டர் வாயிலை மூடினார்கள். ஜெயகாந்தனும் அவரது நண்பர்களும் கையில் தடியோடு தியேட்டர் வாயிலில் எல்லாக்காட்சிகளுக்கும் கேட்டைத் திறந்து வைத்துக்கொண்டு காவல் காத்தனர். கோர்ட் நோட்டீஸ் வாங்கியும் படத்தை ஒப்பந்த காலத்திற்கு மேல் ஒரு காட்சி கூட ஓட்ட விடாமல் படம் தியேட்டரில் இருந்து எடுக்கப்பட்டது. படம் வழக்கமான விநியோக முறையில் தோற்றுப்போனதே ஒழிய அழைப்பின் பேரில் பல இடங்களில் காட்டப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டதன் பேரில் ஓரளவு வருமானம் கிடைத்தது.
தமிழ்ப் பட உலகம் உன்னைப் போல் ஒருவன் படத்திற்குத் தார் பூசி மகிழ்ந்த வரலாறு நம்மை வெட்கித் தலைகுனிய வைக்கும். தமிழ்ப்பட உலகம் ஒரு போதும் அதற்காக வெட்கப்பட போவதில்லை. செய்த தவறுக்காக வெட்கப்படப்போவதில்லை. செய்த தவறுக்காக வெட்கப்படுவது கூட ஒரு தகுதியின் பொருட்டுதான் அமையும். அத்தகுதி அதற்கு சிறிதும் கிடையாது.
படத்தைப்பற்றி சில நல்ல விமர்சனங்களும் வந்தன. முதலாவது அதன் கும்மிருட்டு ஒளிப்பதிவு பற்றியது. படம் முழுக்க கருப்பாக இருந்தது. சேரிக்குடியிருப்பில் சூர்யா ஒளிக்கூட விழவில்லை. தனது பிடிவாதத்தால் நேர்ந்த குறைதான் அது என்று ஜெயகாந்தன் பின்னர் அதற்கு பொறுப்பேற்றார். இரண்டாவது குறை படம் முழுக்க முழுக்க ஸ்டுடியோவிலேயே எடுக்கப்பட்டிருந்தது. சேரி செட் தத்ரூபமாக இல்லை.
|
இரண்டாவது குறை தான் முதல் குறைக்கும் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. ஐம்பதுகளுக்குப் பின் புதிய பாதையில் செல்லத் தொடங்கிய இந்திய சினிமா முயற்சிகள் – அவை சொற்பமே ஆயினும் – வெளிப்புறப் படப்பிடிப்பைப் பெரிதும் வரவேற்றன. ஜெயகாந்தன் ஏனோ கேமராவை ஸ்டுடியோவுக்கு வெளியே எடுத்துச் செல்லத் தயங்கினார். அக்காலத்தில் மசாலாப்படங்கள் தான் ஸ்டுடியோவிலேயே பிரகாசமான செட்களில் முழுக்க எடுக்கப்பட்டன. உன்னைப் போல் ஒருவன் நாவல் பேசின் ப்ரிட்ஜ், எழும்பூர் ஆகிய பகுதிகளில் களம் கொண்ட நாவல். நடிகர்களை அங்கெல்லாம் உலவவிட்டு எடுத்திருந்தால் ‘உன்னைப் போல் ஒருவன்’ தமிழ் சினிமாவின் நியோ – ரியாலிசப் படமாக உயர்ந்திருக்கும். குறைந்த தயாரிப்பு செலவு, நட்சத்திர அந்தஸ்து இல்லாத நடிகர்கள், அன்றாட வாழ்க்கை பிரதிபலிப்பு, மாண்பு மிக்க மனிதம் மற்றும் ஹீரோயிசம் இல்லாத கதை ஆகிய பிற நியோ – ரியாலிச பண்புகள் அதற்கு உண்டு. நடிகர்களின் நடிப்பு சோடை போகவில்லை. நன்கு உணர்ந்து நடித்திருந்தார்கள்.
ஆனால் படம் மிக மெதுவாக நகர்கிறது. சேரியில் வாழ்கிற மனிதர்களின் வாழ்க்கை வேகம் அதுவல்ல. அந்த விமர்சனங்களையும் மீறி உன்னைப் போல் ஒருவன் மெச்ச தகுந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகப் புதிய முயற்சிகளின் முன்னோடியாக, இன்று திரையிடப்பட்டாலும் பார்ப்பவர்களைச் சிந்திக்க வைக்கவும் கலங்க வைக்கவும் கூடியதான ஒரு படைப்பாக இருக்கிறது. அதன் உள்ளார்ந்த பலம் எது?
உதய சங்கரின் கல்பனா (1948) ஒரு நடனக் கலைஞரின் படம் என்பதைப் போல உன்னைப் போல் ஒருவன் ஒரு இலக்கிய படைப்பாளியின் படம். அந்த இலக்கியப் படைப்பாளிக்கு திரைப்படம் எடுப்பதில் தடுமாற்றங்கள் இருந்ததேயொழிய சினிமாவின் மொழி பற்றிய தெளிதல் நன்றாகவே இருந்திருக்கிறது. இலக்கியத்திற்கும் சினிமாவிற்கும் உள்ள அடிப்படை நுணுக்கங்களைப் பற்றிய அறிதலும் காணப்படுகிறது. நமது பண்புகளுடன் கூடிய வாழ்க்கையை அது திரைப்படமாகக் காட்சி படுத்தியிருந்தது.
உன்னைப் போல் ஒருவன் நாவலின் கதை தான் உன்னைப் போல் ஒருவன் படத்தின் கதையும்; நாவலில் வருகிற கதாபாத்திரங்கள் தான் படத்திலும் வருகிறார்கள். நாவலில் உள்ள சில சம்பவங்கள் நீக்கப்பட்டுள்ளன. ஆனால் நாவலில் சொல்லப்படாத காட்சியில் சொல்வதால் மட்டுமே மேன்மையுறும் சம்பவங்கள் படத்தில் உண்டு.
உன்னைப் போல் ஒருவன் நாவலின் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் அபிமானத்தைப் பெற்ற நாவல்.
தங்கம் ஒரு சித்தாள். அவளுக்கு ஒரே மகன் சிட்டி பாபு. மகனைக் கொடுத்த காதலன் எப்போதோ ஓடித் தொலைந்துவிட்டான். அவளுக்கு மற்றொரு உறவு ஆப்பக்கார ஆயா.
|
சிட்டி ஒரு தறுதலையாக வளர்கிறான் அவன் தீங்கான செயல்களுக்கு தாவுமுன்னரே அதிர்ஷ்டவசமாக ஒரு ஐஸ்கிரீம் தொழிற்சாலை முதலாளியை சந்திக்கிறான். அவர் அவனுக்கு வேலை தருகிறார். அவர் நடத்தும் இரவுப் பள்ளியில் அவனை பயிலவும் வைக்கிறார். தாய் என்னும் உறவின் மேன்மையையும் அவரிடமிருந்து அவன் கற்றுக் கொள்கிறான். தங்கத்திற்குத் தனது மகனின் வளர்ச்சி ஆச்சர்யத்தையும் ஆனந்தத்தையும் தருகிறது.
தங்கத்திற்கு ஒரு புதிய உறவு கிடைக்கிறது. வேலை செய்யப்போகும் இடத்தில குருவி ஜோசியக்காரன் ஒருவனுடன் பழகுகிறாள். ஆதரவற்ற அவன் மீது ஏற்படும் பரிவு காதலாக மாறுகிறது. இப்போழுதுஅவல் வயிற்றில் துளிர்த்திருக்கும் சிசுவிற்கு அவன் தான் தந்தை. சிட்டியைப் போல் அப்பன் பெயர் தெரியாத பிள்ளையாகப் புதிதாகப் பிறக்கவிருக்கும் குழந்தையும் இருந்துவிடக் கூடாது என்பதால் அவனைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்து ஒன்றாக வாழ விரும்புகிறாள். தனக்கு மட்டுமே தன தாய் சொந்தம் என்ற பிடிப்புடன் தங்கத்தின் மீது உறவு கொண்டுள்ள சிட்டிக்கு ஜோசியக்காரனை சற்றும் பிடிக்கவில்லை. வீட்டிற்குச் செல்வதில்லை. வேலைக்கும் போவதில்லை. நம்மால் தாய்க்கும் மகனுக்கும் உறவில் விரிசல் வரக் கூடாது என்பதை உணர்ந்து ஜோசியக்காரன் அவர்கள் வாழ்விலிருந்து வெளியேறுகிறான். தங்கத்திற்கு பெண் குழந்தை பிறக்கிறது. தங்கம் உடல் நிலை மோசமாகி ஆஸ்பத்திரிலேயே இறந்து போகிறாள். ஆனால் அவள் பயப்பட்டது போல் ஆகிவிடவில்லை. பிறந்த குழந்தைக்கு பெயர் சொல்ல தகப்பன் இல்லையே ஓழிய ஆயுசுக்கும் ஆதரவாக இருக்கப்போகிற ஒரு ரோஷமுள்ள சகோதரன் சிட்டி கிடைத்துவிட்டான்.
தமிழ் இலக்கியத்திற்கு யதார்த்த வாதத்தைக் கொண்டு வந்தவர்களில் தலையானவர் ஜெயகாந்தன். அவரது யதார்த்த வாதத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று காட்சி பூர்வமான வர்ணனைகள். வர்ணனைகளைப் படித்துவிட்டு கண்களை மூடினால் மனதினுள் காட்சி விரிய வேண்டும் என்றார் செகாவ். ஜெயகாந்தனின் வர்ணனைகள் அத்தகையவையே. திரைப்பட ஊடக மொழியின் பாதிப்பும் அவரது படைப்புகளில் உண்டு. ‘இந்த இடத்தில் இருந்து’ என்னும் அவரது சிறுகதை கேமரா உத்தியை பயன்ப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இயல்பான இப்பண்புகள் அவரது திரை ஆக்கத்தை மிகவும் தூண்டியுள்ளன.
பெரும்பாலான அவரது கதைகளைப் போல ‘உன்னைப் போல் ஒருவன்’ நாவலும் ஒரு ப்ளாஷ்பேக்கிலிருந்து துவங்குகிறது. நெடுநாட்களுக்குப் பிறகு தங்கம் தலை வாருகிறாள். அவள் ஏன் தலை வாரி அலங்கரித்து தயாராகிறாள் என்பதை சொல்ல கதை பின்னோக்கி நகர்கிறது. படத்தில் இந்த ப்ளாஷ்பேக் இல்லை. படத்தில் எதை எதிர்ப்பார்க்க வேண்டும் என்பது பற்றி ஒரு பிரகடனம் காட்டப்பட்டு படிக்கப்படுகிறது. கூடவே ‘We deal with problems’ என்கிற வாசகமும் திரையில் காட்டப்படுகிறது. பிரச்சனைகள் என்பது எங்கெங்கும் காணப்படும் மனித உறவுப் பிரச்சனைகள் தான். ஏழை எளியோர்களுக்கு இருப்பதெல்லாம் பொருளாதார பற்றாக்குறை பிரச்சனைகள் தான் என்ற தவறான எண்ணம் பலருக்கும் உண்டு. இப்படம் அந்த எண்ணத்தை முற்றாகக் கலைக்கிறது. நம் எல்லோரையும் போன்று தான் அவர்களுக்கும் பிரச்சனைகள். உன்னைப் போல் ஒருவன் என்கிற படத்தின் தலைப்பு அதை தான் சொல்கிறது. அதில் ஏழ்மை பிரச்சனையாக்கப்படவில்லை. சிறு வயதிலேயே தன் சம்பாத்யத்தில் தன் தாயைக் காப்பாற்ற முடியும் என்று சிட்டி உறுதி கொள்கிறான். அவனால் தன் தாய் வேறு ஒருவனுடன் வாழத் தீர்மானிப்பதைத்தான் ஒப்புக்கொள்ள முடியவில்லை. படத்தில் வரும் கதாப்பாத்திரங்களுக்கு அதனாலேயே பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன. இதை ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் ஆராய்ச்சிக்கு வழக்கம்போல் உட்படுத்தலாம். ஆனால் சிட்டி பிற ஆண்களின் சவகாசத்தால் தன் தாயின் கௌரவம் பங்கப்படுவதாகக் கருதுகிறான் என்பது முக்கியம். அவள் சித்தாளாக வேலை செய்யும் இடங்களில் சித்தாளாக வேலை செய்யும் இடங்களில் ஆண்கள் அவளை ‘வாம்மே, போம்மே’ என்று அழைப்பது கூட அவனுக்கு ஒப்புதல் இல்லை. அவள் தன்னுடன் வேலை செய்பவர்களொரு சகோதர பாசத்துடன் தான் தன்னிடம் பழகுகிறாள் என்று சமாதானமாகச் சொல்வதையும் அவனால் ஏற்க முடியவில்லை.
கொந்தளிப்பான உணர்வுகளுடன் உழலும் தங்கத்தையும் சிட்டியையும் எட்டி நின்று பார்க்கிற பக்குவம் ஜோசியக்காரனுக்கு இருக்கிறது. தங்கத்தின் மீது காதல் கொண்டதாலேயே சிட்டி மீதும் அவனுக்கொரு தந்தைக்குரிய பாசம் ஏற்பட்டுவிடுகிறது. இயல்பாக அந்தக் குடும்பத்துடன் தன்னை அவன் பொருத்திக் கொள்கிறான். சிட்டியின் மூரக்கத்தனமான நடவடிக்கைகளைப் பார்த்த பிறகு தன்னால் அவர்களுடன் தொடர்ந்து வாழ முடியாது என்பதைக் கண்டு கொண்டு அவர்களை விட்டுப் பிரிகிறான். மனிதர்களுடன் உறவு கொள்வதிலும் பிரிவதிலும் அவன் ஒரு இலட்சியவாதியாகத் திகழ்கிறான். படத்தில் வில்லன் எவரும் இல்லை. ‘எனக்கு என்னோட தான் சண்டை’ என்று சிட்டி சொல்கிறான். தமிழ் சினிமா ஹீரோக்கள் எவரும் பேசாத வசனம் இது. சமுகம் மனிதர்களை விரோத குணமுடையவர்களாக உருவாக்கிவிடுகிறது. பரஸ்பர அன்பும் அக்கறையும் மனிதர்களிடையே இருப்பின் ஏழ்மை வெல்லக்கூடியது. மற்றுமொரு லட்சியவாதியான ஐஸ்கிரீம் தொழிற்சாலை முதலாளி சிட்டியிடம் அன்பைத்தான் வளர்க்கப் பாடுபடுகிறார்.
|
படத்தில் மிகவும் வேதனைக்குள்ளாகிற ஒரு கதா பாத்திரம் தங்கம். அவள் தனக்காக வாழ்கிற தருணங்கள் மிகக் குறைவு. அத்தருணங்களும் அவள் மீது அதிகப்படியான சுமையைத் திணித்துவிடுகின்றன. காதல் வயப்பட்டதால் கருவுற்ற அவள் பிறக்கப் போகிற இரண்டாவது குழந்தைக்காவது ஆண் துணையுடன் கூடிய ஒரு குடும்ப அமைப்பினை வேண்டுகிறாள். ஆனால் அதெல்லாம் ஒத்து வராது என்பதை புரிந்தவுடன் மகன் மீதே தனது கவனம் அனைத்தையும் செலுத்துகிறாள். ஜோசியக்காரன் சென்ற பிறகும் கூட சிட்டியின் அன்பை அவளால் திரும்பப் பெற முடியவில்லை. வாழ்க்கை வெறுத்துப் போன அவளுக்கு வேறு காரணத்தால் வரும் மரணம் இயற்கை ஆனது போல் தோன்றுகிறது. சிட்டியைப் போல் தனக்கு ஒரு சகோதரன் இருந்திருந்தால் தான் தறி கெட்டு வாழ்ந்திருக்க மாட்டேன் என்று ஆஸ்பத்திரியில் மரண வாக்குமூலம் தருகிறாள் தங்கம். படம் முழுக்க முழுக்க அன்பின் அரவணைப்பு இன்மையால் மனிதர்கள் படும் துயரங்கள் சித்தரிக்கப்படுகின்றன.
தன தாய் தன்னை விட்டு நிரந்தரமாகப் பிரிந்துவிட்டாள் என்பதைப் புரிந்துக் கொள்ளவே சிட்டிக்கு சில காலம் பிடிக்கிறது. அது அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. படத்தின் துவக்கக் காட்சிகள் ஒன்றில் சிட்டி ஆப்பகார ஆயா, தங்கம் ஆகியோர் இரவில் தூங்கத் தயாராகிக்கொண்டிருப்பார்கள். அப்பொழுது தள்ளு வண்டியில் ‘அரிணா ஒரிணா பால் ஐஸ்’ என்ற சத்தம் கேட்கும். சிட்டி தங்கத்திடம் காசு வாங்கிக் கொண்டு ஓடிப்போய் ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிடுவான். இரண்டாவது முறை ஐஸ்கிரீம் வண்டி வரும் சப்தம் கேட்கும் பொழுது சிட்டி, தங்கம்,ஜோசியக்காரன் ஆகியோர் படுத்திருப்பார்கள். சிட்டி அப்பொழுது தூங்கியிருப்பான் அல்லது ஜோசியக்காரன் அருகிலிருப்பதால் தூங்குவது போல் நடித்தானோ என்னவோ! மூன்றாவது முறை ஐஸ்கிரீம் வண்டிக்காரனின் குரல் தாயை இழந்த சிட்டி உறங்கிக்கொண்டிருக்கும் பொழுது கேட்கும். உடனே சிட்டி எழுந்தமர்ந்து கொண்டு அம்மாவை நினைத்து அழுவான். முதல் இரண்டு முறைகளும் ஐஸ்கிரீம் வண்டி வரும் பொழுது அவன் அம்மாவுடன் இருந்திருக்கிறான். மூன்றாம் முறை ஐஸ்கிரீம் வண்டியின் சத்தம் அவனுக்கு ஐஸ்கிரீமை நினைவூட்டுவதில்லை. அவன் இழந்துவிட்ட அம்மாவை நினைவூட்டுகிறது. இது நாவலில் இல்லாத காட்சி. காட்சி பேச வேண்டும். அது தான் சினிமா என்பதை ஜெயகாந்தன் உணர்ந்து படத்தை இயக்கிருக்கிறார். சிறப்பான வசனங்களும் காட்சிகளுடன் பின்னிப் பிணைந்துள்ளன. டெக்னாலஜி தெரிந்த பல தமிழ் சினிமா இயக்குனர்கள் உன்னைப் போல் ஒருவன் படத்திலுள்ள குறைகள் இன்றி படமெடுக்கத் தெரிந்தவர்களாக இருக்கலாம். ஆனால் கட்புலனுக்குரிய ஊடகம் சினிமா என்பதை உணர்ந்து கொண்டதற்கான இத்தகைய சான்றுகள் அவர்கள் படங்களில் இருப்பதில்லை. ஜெயகாந்தனின் கதை வசனங்களை வைத்துக்கொண்டு பிறர் எடுத்த படங்களையும் அவரே இயக்கிய உன்னைப் போல் ஒருவன் படத்தையும் ஒப்பிடுவதன் மூலமே இதை உணரமுடியும். இதனாலேயே சினிமா இலக்கணக் குறைகளைக் கண்ணுற்றும் அதன் மனித சித்தரிப்பின் சிறப்புகளுக்காக உன்னைப் போல் ஒருவன் படத்தைப் பிரெஞ்சு சினிமா சரித்திர ஆய்வாளர் ஜார்ஜ் சாடுல்(George Sadoul) பாராட்டினார்.
ஒரு எரிமலை போல் வெடிக்கும் சிட்டி அவிந்து போய் நீரூற்றாகிறான். தனது தங்கையைப் பார்க்கும் அவனது கண்களில் பிரகாசம். அவனது வாழ்க்கைப் பயணம் புதிய பொறுப்புடன் துவங்கிறது. ‘And problems never end’ என்று படத்தின் இறுதி டைட்டில் காட்டப்படுகிறது. சுபம், வணக்கம் என்றெல்லாம் படங்களின் இறுதியில் மொண்ணையாக காட்டப்பட்ட டைட்டில்களுக்கு நடுவே இதுவும் ஒரு கலை முழக்கம் தான்.
நன்றி: அம்ஷன் குமார், இந்தக் கட்டுரை அம்ஷன் குமார் எழுதிய பேசும் பொற்சித்திரங்கள் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.
நன்றி: ரவிசுப்பிரமணியன் - கட்டுரைக்கான படங்கள் ஜெயகாந்தன் ஆவணப்படத்திலிருந்து எடுக்கப்பட்டவை.
தட்டச்சு உதவி: ஜெயகாந்தன் (படிமை மாணவர்)
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com
முகநூலில் இணைய: https://www.facebook.com/ArunThamizhstudio |