இதழ்: 32    சித்திரை (May), 2015
   
 
  உள்ளடக்கம்
 
திரைப்படம் எதிர் இலக்கியம் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
ஜெயகாந்தனும் தமிழ் சினிமாவும் - தியடோர் பாஸ்கரன்
--------------------------------
உன்னைப் போல் ஒருவன் - அம்ஷன் குமார்
--------------------------------
சில நேரங்களில் சில மனிதர்கள் - B.லெனின்
--------------------------------
சினிமாவுக்குப் போன சித்தாளு - ஜெயகாந்தன்
--------------------------------
வரலாற்றுக்கு எதிராக ஜெயகாந்தன் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
ஜெயகாந்தனின் அறிவை செப்பனிட்ட சினிமா - அம்ஷன் குமார்
--------------------------------
‘யாருக்காகவோ அழுதான்...!’- B.லெனின்
--------------------------------
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
பார்வையாளர்களின் கூட்டு உளவியலும், ஹாலிவுட் மையநீரோட்ட சினிமாவும் 2 - வருணன்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ்
 
 
   


   

 

 

ஜெயகாந்தனும் தமிழ் சினிமாவும்

- தியடோர் பாஸ்கரன்


அரசியலும் சினிமாவும் பின்னிப் பிணைந்திருக்கும் தமிழக வரலாற்றில் இடதுசாரி முகாமிலிருந்து அவ்வப்போது திரைக்கு வந்தவர்களில் சிறப்பிடம் பெற்றிருப்பவர் ஜெயகாந்தன். மார்க்சீய சிந்தாந்த்தால் உந்தப்பட்ட ஜெயகாந்தன், சமுதாயக் கரிசனத்துடன் சினிமா செயல்பட வேண்டும் என்றும் அதற்கு தமிழ் இலக்கியம் உதவ முடியும் என்றும் நம்பினார். ஹிந்திப்படவுலகில் கே.ஏ. அப்பாஸின் முயற்சிகளை கண்டு வியந்தார். சத்யஜித் ரேயின் மூன்று அப்பு படங்களின் நேர்மையையும் தாகத்தையும் போற்றினார். சினிமா கலையை முறையாக கற்காமலேயே அதன் அழகியலை உணர்ந்தவர் ஜெயகாந்தன். இவ்விஷயத்தில் இவர் மலையாள சினிமாவின் அரவிந்தனை எனக்கு நினைவூட்டுகின்றார்.

தமிழ்த்திரையில் யாதார்த்த சினிமாவை அழுத்தமாக அறிமுகப்படுத்தியவர் ஜெயகாந்தன். திரைப்படமொன்றின் தாக்கம் ஆழமானதாக அமைய வேண்டுமானால் அதில் நம்பகத்தன்மை அடிநாதமாக இருக்க வேண்டும். அந்தத் தன்மையின் அடிப்படை யதார்த்தம். படத்தின் தாக்கம் நன்றாக அமைந்தால், இயக்குனர் சொல்ல வரும் கருத்து பார்வையாளர்கள் மனதில் பதிந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஜெயகாந்தன் நன்கு உணர்ந்திருந்தார். உன்னைப்போல் ஒருவன் (1964) என்ற தனது குறுநாவலை பாடமாக்கினார். நாவலாசிரியரே தனது படைப்பை படமாக்குவது ஒர் அபூர்வமாக நிகழ்வு. மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் நிர்மால்யம் (1973) என்ற தனது நாவலை அதே பெயருடன் படமாக இயக்கி புகழ் பெற்றார். யதார்த்தத்திலிருந்து வெகு தூரம் விலகியிருந்த தமிழ்த்திரைக்கு உன்னைப்போல் ஒருவன் உள்ளடக்கத்திலும் வடிவமைப்பிலும் ஒரு புதுமையாக வந்தது. பாத்திரப்பேச்சும் இயல்பாக அமைக்கப்பட்டிருந்தது. விளிம்பு நிலை மக்களை கதாமாந்தர்களாக கொண்டிருப்பதே ஒரு புதுமையாக அமைந்திருந்தது. படத்தைக் காண வந்தோருக்கு ஒரு கொடுக்கப்பட்ட ஒரு துண்டறிக்கையில் ‘ பொழுது போக்கிற்காக இங்கு வந்தவர்களல்ல. ஒரு புதிய ரசனையின் பிரதிநிதிகள் நீங்கள்” என்று கூறி ரசிகர்களை வரவேற்றிருந்தார் ஜெயகாந்தன்.

இதை அடுத்து அவர் இயக்கிய, அவரது கதையான யாருக்காக அழுதான்? (1966) படத்திலும் யதார்த்த தன்மை அழுத்தமாக இருந்தது. இந்தப்படத்தை ஒளிப்பதிவு செய்த நிமாய் கோஷின் பங்களிப்பும் இதற்கு முக்கியமான காரணம். அதிலும் அவரது ஒளியூட்டல் உத்திகள் இந்த யதார்த்த்திற்கு கைக்கொடுத்தன. சத்தியஜித் ரே யதார்த்த ரீதியில் படமெடுத்து புகழடையும் முன்னரே சின்னமூல் (புலம் பெயர்ந்தவர்கள்,1951) என்ற வங்காளப்படத்தை யதார்த்த பாணியில் எடுத்து, புகழடையாவிட்டாலும், இந்திய சினிமா வரலாற்றில் இடம் பெற்றவர் நிமாய் கோஷ். இவர் பொதுவுடமை இயக்கத்தை சேர்ந்தவர். ரஷியாவில் இப்படம் 188 அரங்குகளில் திரையிடப்பட்டது, இந்திய சினிமாவிற்கு கிடைத்தப் பெருமை. ரித்விக் கட்டக் ஒரு நடிகராக தனது திரை வாழ்வை துவக்கியது இதில் தான் என்ற பெருமையும் பெற்றது இப்படம்.
எந்த கதாபாத்திரத்திற்கு எந்த நடிகரைத் தெரிந்தெடுக்க வேண்டும் (casting) என்பதில் மிக்க் கவனம் செலுத்தினார் ஜெயகாந்தன். உன்னைப்போல் ஒருவனில் கதாநாயகியாக காந்திமதியையும், யாருக்காக அழுதான்? படத்தில் ஜோசப் பாத்திரத்திற்கு நாகேஷையும் பார்க்கும் போது வேறு எந்த நடிகரும் அந்தப் பாத்திரங்களில் சோபித்திருக்க மாட்டர்கள் என்றே உணர்கின்றோம்.

1966இல் வெளியான ஜெயகாந்தனின் ‘அக்னிப்பிரவேசம்’ என்ற சிறுகதை பெருத்த சர்ச்சையை கிளப்பியது. அந்தக்கதைக்கு வேறுவிதமான முடிவைக்கொடுத்து, அதன் நீட்சியாக ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற நாவலை எழுதினார். இந்த இரு கதைகளையும் அடிப்படையாக்க் கொண்டு, நாவலின் தலைப்பிலேயே ஒரு படம் உருவாக்கப்பட்ட்து. படத்தின் ஆழத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒளிப்பதிவு அமையவில்லை. நாவலில் கதாபாத்திரங்கள் நீண்ட வசனம் பேசுவது போலவே பட்த்திலும் இருந்தது. கங்காவின் தாயாராக நடித்த சுந்தரிபாயும் கங்காவாக நடித்த லட்சுமியும் தங்களுடைய தீர்க்கமான நடிப்பால் படத்தில் ஆதிக்கம் செலுத்தியிருந்தனர். இந்த பட்த்தில் நடித்ததிற்காக, சிறந்த நடிகைக்கான தேசிய விருது லட்சுமிக்கு கிடைத்தது. புகைப்பிடித்துக்கொண்டும் மது அருந்திக்கொண்டும் இருக்கும் கதாபாத்திரமான ஸ்ரீகாந்தின் நடிப்பு லட்சுமியின் நடிப்பிற்கு முன் மங்கிப்போய் விட்டது. (புகைப்பிடிக்கும் கதாநாயகர்கள் எழுபதுகளின் இறுதி வரை தொடர்ந்தார்கள்)

நாவலின் வீரியமும் நேர்மையும் சில காட்சிகளில் நீர்த்துப்போயின. காருக்குள் கங்கா கற்பழிக்கப்படும் போது, திருமணம் போன்ற மங்களகரமான நிகழ்ச்சிகளில் ஒலிக்கும் நாதஸ்வர ஓசை பின்னணியில் இருந்தது. படத்தின் இறுதிக்காட்சியில் விதவைகள் உடுத்தும் வெண்ணிற புடவையில் கங்கா தோற்றமளிக்கின்றாள். அப்போது திரைக்கு பின் எழும் குரல் அழுத்தம் திருத்தமாக கங்கை நதியைப்போல தூய்மையாகவும் அமைதியாகவும் கங்கா செல்கிறாள் என கூறுகின்றது.

சமுதாய கரிசனம் இல்லாத சினிமா பயனற்றது என்ற கருத்தில் இவர் உறுதியாக இருந்தார். ஆட்டம் பாட்டம், பெண்ணுடல் காட்டல், துரத்தல், குத்தாட்டம், சண்டை இவைகளால் ஆன நேரம்கொல்லி திரைப்படங்களை வெறுத்தார்.. 1993இல் இவர் எழுதிய ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் என்ற நூலின் இறுதிப்பகுதியில் தமிழ் சினிமா உலகம் பற்றி எழுதியது.

”இந்தக் கலையுலகம் மிகவும் சீரழிவுற்று மேனாமினுக்கிகளால், மைனர் பயல்களால், விபச்சாரகர்களால், எதையும் கூட்டிக்கொடுத்து தங்கள் லாபக் கணக்கை பெருக்கிக் கொள்ளுபவர்களால், கறுப்புப்பண கயவர்களால், சமூக விரோதிகளால், பணம் எனும் பெரும் வலையை வீசி முற்றாகப் பிடிக்கப் பட்டுள்ளது. எனவே இந்த சமுத்திரத்தில் நமது கட்டுமரத்தில் போன பயணம் மறுபடியும் நாம் கரையேறி வருகிற பட்சத்தில் வெற்றிகரமான பிரயாணம் என்றே சொல்லப்பட வேண்டும்.”

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: https://www.facebook.com/ArunThamizhstudio

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </