ஜெயகாந்தனின் அறிவை செப்பனிட்ட சினிமா
ஜெயகாந்தனின் கம்பீரம் நிறைந்த குரலில், “இந்தப் படத்தின் கதை சேரி மாந்தர்களைப் பற்றியது. அவர்களின் உணர்ச்சிகள் பற்றியது. அவர்களின் ஆன்மாவைப் பற்றியது. இந்தப் படம் அந்த வாழ்க்கையைப் போல் தேக்கமானது. இயல்பானது. ஆழமானது. இந்த முதல் முயற்சியில் குறைகள் பல இருக்கலாம். அவை புதுமையான குறைகளாக இருப்பின் நான் திருப்தியுறுவேன்” என்று ஒலித்த இவ்வார்த்தைகள் டைட்டிலாகவும் காட்டப்பட்டு ‘உன்னைப் போல் ஒருவன்’ படம் (1964) வெளிவந்தது.
உன்னைப் போல் ஒருவன் என்று தனது கதாநாயகக் கதாபாத்திரமான சிறுவன் சிட்டியை அவர் அறிமுகப்படுத்தினார். சிட்டி சேரியில் பிறந்து வளர்ந்தவன். பிறந்தவுடன் அவன் தகப்பன் ஓடிவிடுகிறான். பீடி குடித்துக்கொண்டு அலைந்து திரியும் அவனை ஐஸ் பாக்டரி முதலாளி நல்வழிப்படுத்துகிறார்.
அச்சமயம் அவனது தாயாருக்கு வேறு ஒருவனுடன் காதல் தொடர்பு ஏற்படுகிறது. சிட்டியால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மீண்டும் இலக்கற்றுப் போகிறான். கருவுற்றிருந்த அவன் தாய் பிரசவத்தின்போது இறந்துபோகிறாள். சிட்டிக்குத் துணையாக ஒரு தங்கை இப்போது கிடைத்திருக்கிறாள். பட இறுதியில் சுபம், வணக்கம் என்றெல்லாம் டைட்டில் போடவில்லை. And problems never end என்று டைட்டில் காட்டப்படுகிறது.
வலுவான கதாபாத்திரங்கள் , யதார்த்தமான கதை சொல்லல் ஆகியவை படத்தின் சிறப்புகள். ஜெயகாந்தன் கருதிய குறைகள் யாவும் தொழில்நுட்பக் குறைகள்தான் என்பதால் அதில் அலட்டிக்கொள்வதற்கு ஒன்றுமில்லை. அப்படத்தைப் பார்க்கும்போது நாம் அடையும் நெகிழ்ச்சி முக்கியமானது.
படைப்பாளியின் முத்திரை
வீறு கொண்ட ஒரு தமிழ்ப் படைப்பாளியின் சினிமா பிரவேசம் தமிழ் சினிமா உலகத்தை ஒருவாறாகக் குலுக்கத்தான் செய்தது. ஏற்கனவே ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் அறிமுகம் பெற்ற நாவல் அது. ரசிகர்கள் அதன் புதுமையை விரும்பினார்கள். தனது படத்தைத் தானே எடுத்துச்சென்று பல இடங்களிலும் திரையிட்டார் . மக்களிடம் அதற்கான கட்டணத்தையும் வசூலித்தார்.
உன்னைப் போல் ஒருவன் படத்திற்குப் பிறகு யாருக்காக அழுதான் படத்தை இயக்கினார். கெட்டது என்று ஒன்று இருக்கிறதா என்று வியக்கும் பரிசுத்தமான ஜோசப், சூதாடி, பண ஆசையால் சறுக்கும் ஓட்டல் முதலாளி, காதலனால் கைவிடப்பட்ட பெண் , நேர்மையை நிலைநாட்டும் சமையல்காரர் ஆகியோரை உள்ளடக்கிய உளைச்சல் மிகுந்த உலகத்தை அப்படம் காட்டியது.
உன்னைப் போல் ஒருவனைப் போல் விமர்சகர்களிடையே பரபரப்பைத் தோற்றுவிக்காவிடினும் அதுவும் நல்ல படமே. புதுச் செருப்பு என்ற படத்தையும் இயக்கினார். அப்படம் தொலைந்தே போனது. அவரது கதைகள் பல பிறரால் படமாக்கப்பட்டன.
சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஊருக்கு நூறு பேர் போன்ற படங்கள் அவரது கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவானவை. ஜெயகாந்தனின் கதைகளை ஜெயகாந்தனே படமாக்கியதற்கும் பிறர் படமாக்கியதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
காட்சிபூர்வமாகச் சிந்திக்கும் இயக்குநர்
இயக்குநர் ஜெயகாந்தன் காட்சிபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படும் திறன் படைத்தவர். அவரது கைவிலங்கு குறுநாவல் காவல் தெய்வம் என்னும் பெயரில் இயக்குநர் கே.விஜயனால் படமாக்கப்பட்டது.
அதில் ஒரு கைதி சிறையிலுள்ள அறைக் கம்பிகளை ரம்பத்தால் அறுத்து உள்ளே புகுந்து மற்றொரு கைதியைக் கொல்வான். கொல்லப்படும்வரை அரவம் எதுவும் கேட்காமல் கைதி உள்ளே படுத்துத் தூங்கிக்கொண்டிருப்பான். படத்தைப் பார்த்த ஜெயகாந்தன் நம்பகத்தன்மையற்ற அக்காட்சியை விமர்சித்தார்.
ஜெயகாந்தனின் படங்களில் மௌனம் நிரம்பிய இடைவெளிகள் வெளிப்படும். உன்னைப்போல் ஒருவன் படத்தில் ஐஸ் பாக்டரி உரிமையாளரும் சிட்டியும் உரையாடும்போது அவர்களிடயே நீண்ட மௌனம் வெளிப்படும்.
அப்போது பின்னணியில் குதிரை ஓடும் சப்தம் கேட்கும். அச்சிறப்பு சப்தம் மௌனத்தை ஆழப்படுத்துவதாக அமையும். அந்த இடத்தில் பின்னணி இசை சேர்க்கப்பட்டிருந்தால் அந்த மௌனம் அழிந்துபோயிருக்கும். இத்தகைய குணங்களை மற்றவர்கள் அவர் கதைகளைக் கையாளும்போது காண முடிவதில்லை.
சினிமாவை நேசித்த எழுத்தாளர்
ஜெயகாந்தனின் எழுத்துகளே காட்சி யதார்த்தம் கொண்டவை. படித்துவிட்டுக் கண்ணை மூடினால் மனக்கண்ணில் காட்சி விரியும் என்று செகாவ் கூறியது ஜெயகாந்தனின் கதைகளுக்கும் சாலப் பொருந்தும். புத்தகங்களை விடவும் சினிமாதான் தன் அறிவைச் செப்பனிட்டது என்று வாக்குமூலம் கொடுத்தவர்.
அவரது படங்களில் கலைப் படங்களுக்கேயுரிய பண்புகள் தலை தூக்கி நின்றாலும் தமிழ்ப் படத்தின் ஆகிவந்த சில அம்சங்களையும் அவர் புறக்கணிக்கவில்லை. அவரது படங்களில் பாடல்கள் இடம்பெற்றன. அவரே ஒரு சிறந்த பாடலாசிரியரும்கூட. தனது படங்களுக்கு மட்டுமின்றி நிமாய் கோஷின் ‘பாதை தெரியுது பார்’ படத்திற்கும் பாடல்களை எழுதினார்.
நாகேஷ், கே.ஆர். விஜயா, காந்திமதி, சகஸ்ரநாமம் போன்ற பிரபல நட்சத்திரங்களையும் தன் படங்களில் நடிக்கவைத்தார் . தனது படங்கள் ஏனைய பெருவழக்குப் படங்களைப் போலவே தியேட்டர்களில் திரையிடப்பட்டு மக்களை அடைய வேண்டுமென விரும்பினார்.
காங்கிரஸ் தலைவர் காமராஜ் “உன்னைப்போல் ஒருவன் படத்தை அரசாங்கமே வாங்கி மக்களுக்கு இலவசமாகக் காட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கூறியதை ஜெயகாந்தன் பாராட்டாக எடுத்துக்கொண்டாலும் அதில் அவருக்கு ஒப்புதல் இல்லை.
நல்ல படங்கள் மக்களின் நேரிடையான ஆதரவைப் பெற வேண்டும் என்று விரும்பினார். தமிழ் சினிமாவில் அவரைப் போன்று சாதனை படைத்த இலக்கியவாதி வேறு எவருமிலர்.
நன்றி: தமிழ் இந்து
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com
முகநூலில் இணைய: https://www.facebook.com/ArunThamizhstudio |