‘யாருக்காகவோ அழுதான்...!’
திரைப்படங்கள் தயாரிக்க அடிப்படையான நிபந்தனை நேர்மை. ஒருவர் தம் சொந்த அனுபவங்களையும், தாம் கண்ட உண்மைகளையும் தம் அனுபவத்தின் மூலமே நம்பகமான முறையில் வெளிப்படுத்த முடியும்.
கேமெராவின் ஏமாற்றுத்திறன் பயங்கரமானது; உண்மையை திரித்துச் சித்தரிப்பதில் கேமராவை எதுவுமே மிஞ்ச முடியாது.
-மைக்கேலேஞ்சலோ ஆண்டோனியோனி
‘சினிமா...!’ அது கறாராக கண்டுபிடிக்கப்பட்ட காலத்துக்கு முன்பே கூட இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
ஒவ்வொருவரும் தாங்கள் படிக்கும் சிறுகதைகளையும், நாவல்களையும் –அதில் உலவும் பாத்திரங்களையும், இடங்களையும், காட்சிகளாகத்தான் மாற்றியமைத்து, பதிவு செய்து கொள்கிறார்கள்.
சிறுவர்கள் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. பாட்டிகள் சொல்லும் கதைகளையும் இவர்கள் தங்கள் திறனுக்கேற்றவாறு காட்சிகளாக மனத்திரையில் வடிவமைத்துக் கொள்கிறார்கள்.
பாட்டியின் கதை சொல்லும் திறனைப் பொறுத்தும், சிறுவர்களின் கற்பனைத் திறனைப் பொறுத்தும் இது மேலும் செம்மைப் படுத்தப்படுகின்றன என்றே சொல்ல வேண்டும் . இவர்களின் ‘மனத் திரைப்படத்திற்கு’ எடிட்டிங்கும் உண்டு, ஏன்...இசையும்கூட உண்டு?
|
தன்னை பாதித்த கிராமத்தையும், மனிதர்களையும் எழுத்தாளன் ஒவ்வொருவனும் தனக்கே உரித்தான சமூக அறிவோடும், கற்பனைத் திறனோடும் காட்சிகளாக ஆக்கிய பிறகே அதை கதைகளாக்குகின்றான்.
கதைகள் ‘டைரக்டர்களின்’ மனத்திரைக்கு வருகின்றன. இவை ‘வெள்ளித்திரையில்’ மறுபதிப்பாகவே வெளியிடப்படுகின்றன.
இப்படி மாறி மாறி சினிமா இயற்கையின் எல்லா இயக்க விதிகளின் படி தன்னையும், மக்களையும் வளர்திசையில் பரிணமிக்க வைக்கிறது.
இதனால் தான் ஒரே கதையை வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கும்பொழுது வெவ்வேறு விதமாக பதிவாகிறது.
எல்லா விஞ்ஞான கண்டுபிடிப்புகளையும் போலவே சினிமாவும், கண்டுபிடிப்பதற்கான தேவையும், முன் மாதிரியும் ஏற்கனவே மக்கள் மனதில் உலவி வந்தன.
மக்களிடம் இருந்து தோன்றியவர்தான் மக்களிடம் இருந்து பெற்றதை மறுபடியும் மக்களிடமே வேறு வடிவத்தில் வைக்கும் பொழுது வெற்றி பெறுகிறார்கள்.
சிலர் இதற்கு விதிவிலக்கு...!
இவர்கள் ‘களை’களைப் போல.
வயலில், நெல்லோடு களை வளர்வதால் நிலமே பொய் அல்ல. தொழிற்சங்கங்களில் ‘கருங்காலிகள்’ தோன்றுவதால், தொழிற்சங்க அமைப்பே பொய்யாகி விட முடியாது அல்லவே. இதைப்போலத்தான் சினிமாவில் வளரும் ‘கலை’யும் ‘களை’யும்.
ஆனால் மக்களிடம் இருந்து, அந்த பாதிப்புகளில் இருந்து, ‘விற்பனைக்காக...!’ கனவுகளை சுமந்து கொண்டு வந்தவர்கள், எல்லாவற்றையும் விற்றுதீர்த்தப் பின்னர் ‘நட்சத்திர ஓட்டல்’களின் ஏ.சி. அறைகளில் இப்பொழுது கதையை தேடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அங்கே அவர்களுக்கு கிடைப்பதெல்லாம் வெளிநாட்டு வீடியோ கேசட்டுகளும், வெளிநாட்டு மது வகைகளும் தான்.
அனைத்துக் கலைக்கும் ஊற்றுக் கண்ணான சமூக வாழ்க்கையில் இருந்து தங்களை துண்டித்துக் கொண்டவர்களை மக்களும் காலப்போக்கில் தங்களிடம் இருந்தும் இவர்களை துண்டித்து விட்டார்கள்.
பெரும்பாலானவர்களுக்கு தாங்கள் வெற்றி பெற்றதற்கான காரணமும் தெரிவதில்லை. இப்போது தோல்வி அடைந்ததற்கான காரணமும் புரிவதில்லை.
தாங்கள் மாமேதைகளாக ஆகிவிட்டதாக பாவித்துக் கொண்டு அமெரிக்க கதைகளை கடன் வாங்குவதின் மூலம் ‘இறக்குமதி’ தொழிலில் இறங்கியிருக்கிறார்கள்.
இளைஞர்களுக்கான சரியான முன்மாதிரியாக தங்கள் சினிமா வாழ்க்கையைத் தொடங்கியவர்கள். கடைசியில் தானே தவறான முன்மாதிரியாக ஆகிப்போவது என்பது கொஞ்சம் வருத்தப்பட வேண்டிய விஷயம்.
இந்திய சினிமா சரித்திரத்தில் நிலைப்பெற்றிருக்கும் தயாரிப்பாளர்களையும் டைரக்டர்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். இதனால் தான் திரும்பத்திரும்ப, சத்யஜித்ரே, அரவிந்தன், அடூர் கோபாலகிருஷ்ணன், பாரதிராஜா, பாலச்சந்தர், மகேந்திரன், பீம்சிங், ஜெயகாந்தன், மிருனாள் சென், சாந்தாரம், பிமல்ராய், ஸ்ரீதர், ரிஷிகேஷ் முகர்ஜி, வாசுதேவன் நாயர், ராமு காரியத், பத்மராஜன் போன்றவர்களையே சொல்ல வேண்டியிருக்கிறது.
ஏனெனில் அவர்கள் நவீன கலையாகிய சினிமாவை, அதன் ஆற்றலை, அதன் முழு வீச்சை அந்தக் கலையின் தர்மத்திற்குப் பயன்படுத்தினார்கள். புகழும் பெற்றார்கள். செல்வமும் பெற்றார்கள்.
தரமான படம் எடுத்தால் நஷ்டப்பட்டு விடுவோம் என்கிற சிலரது கூற்று அவர்களது அறிவின் பாற்பட்டதும் அல்ல, அநுபவத்தினால் வந்ததும் அல்ல, சொல்லப்போனால் இவ்விதம் கூறுபவர்களில் அநேகர் அப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டதே இல்லை.
ஆனால் சினிமா துறைக்கு அப்பாற்பட்டு எழுத்துத் துறையில் முத்திரைப்பதித்த ஜெயகாந்தன் இத்தகு முயற்சியை மேற்கொண்டார்.
சில நண்பர்களின் கூட்டு முயற்சியுடன் 1964ல் ‘உன்னைப் போல் ஒருவன்’ கதையை திரைப்படமாக்க முடிவு செய்து, மிகக் குறைந்த செலவில் செய்ய வேண்டியிருப்பதால் ‘கருப்பு-வெள்ளையில்’ தயாரிக்க 75 ஆயிரம் ரூபாய் பட்ஜெட் போட்டுக் கொண்டார்கள்.
|
எதிர்ப்பார்த்தபடி படம் 75 ஆயிரம் ரூபாயில் ‘முதல் காப்பியும்’ தயாராகி விட்டது. இத்தனைக்கும் ஜெயகாந்தனுக்கு இதைப்பற்றி முன்னனுபவம் குறைவு என்பதை விட இல்லவே இல்லை எனலாம்.
உதாரனத்திற்கு ஒரு காட்சி.
காந்திமதி தலைவாரிக் கொண்டு இருக்கிறார். அது எண்ணெய்ப் பசையையே பார்க்காத தலை, அதனால் வாரும்போது சீப்பு உடைந்துவிட வேண்டும். இது இயக்குனர் ஜெயகாந்தனின் மனத்திரையில் ஓடிய காட்சி. இது அப்படியே வெள்ளித் திரையில் வரவேண்டும் அவ்வளவு தான். ‘ஸ்டார்ட் கேமரா’...
கேமரா ஓடுகிறது...
காந்திமதி தலைவாரத் துவங்குகிறார்; அது மக்கி போன மரசீப்பு தான் என்றாலும் எதிர்ப்பார்த்தபடி உடையவில்லை; மறுபடியும் மறுபடியும் வாரிக்கொண்டே இருக்கிறார்.
கேமரா ஓடிக்கொண்டே இருக்கிறது.
ஜெயகாந்தனோ “ம் இன்னும் அழுத்தமாக வாருங்கள் இன்னொரு முறை...”
ஒளிப்பதிவாளர் நடராஜன் சற்று நிதானித்து, “ஜே.கே. பிலிம் ஓடிக்கொண்டே இருக்கிறது. ...”
“ஓடட்டும்... சீப்பு உடையும் வரை ஓடட்டும்.”
பிலிம் சுருள் அனைத்தும் ஓடி முடியும் போது தான் சீப்பு உடைந்தது.
உண்மையில் இந்தக் காட்சியை எடுப்பதற்கு இவ்வளவு பிலிம் தேவையில்லை தான். அதுவே ஒரு அனுபவமுள்ள இயக்குனராக இருந்திருந்தால் அதை கட் செய்து இரண்டு ஷாட்டுகளாகக் குறைந்த பிலிமில் எடுத்திருப்பார்.
என்ன செய்வது? எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு அந்த ‘சினிமா யுக்தி’ அப்போது தெரியவில்லை.
ஆனால் ‘உன்னைப் போல் ஒருவன்’ போன்ற முன்மாதிரியான சினிமா முயற்சி இன்றைய இயக்குனர்களுக்கு இன்று வரைகூட புரியவில்லை.
ஜெயகாந்தனின் நண்பர்கள் ‘உன்னைப் போல் ஒருவனை’, “தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய முயற்சிப்பதில்லை என்று” ஏற்கனவே தீர்மானித்து இருந்தார்கள்.
படத்தை தமிழ்நாடு முழுவதும் பொதுஜன ஸ்தாபனங்கள் மூலம் திரையிட்டுக் காட்டினார்கள். அதன் மூலம் 25௦௦௦ ரூபாய் வசூல் ஆனது.
அந்தப் படம் அகில இந்திய அளவில் மூன்றாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனாதிபதி பரிசையும் பெற்றது.
அதனால் சர்வதேச பட விழாக்களில் திரையிடப்பட்டது. சோவியத் நாட்டில் திரையிடப்பட்டதன் மூலம் 30000 ரூபாயும், இந்தியாவில் திரையிட்டுக் கொள்ள இரண்டு படங்களும் கிடைத்தன.
சென்னையில் மட்டும் விருப்பப்பட்டு வந்த விநியோகஸ்தரால் அது திரையிடப்பட்டு பத்தாயிரம் ரூபாய் பணம் வந்து சேர்ந்தது.
அதற்கு மேலும், டெல்லி, மற்றும் சென்னை தொலைக்காட்சிகளில் திரையிடப்பட்டதால் மேலும் பணம் கிடைத்தது.
இன்றைக்கு சினிமாவிற்கு வந்திருக்கிற கேடு என்னவென்றால், நவீன கலையாகிய, வெகுஜன கலையாகிய அத்துறைக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத பண ஆசை ஒன்றை மட்டுமே குறியாகக் கொண்டு ‘ரேசுக்கு’ போகிறவர்கள் மாதிரி சீக்கிரத்திலேயே பணம் பண்ணிவிடலாம் என்று வந்திருப்பது தான்.
நமக்கு வந்திருக்கிற எல்லா சாதனங்களும் மேற்கத்திய நாகரிகத்தினால் வந்ததுதான். இதில் அவமானம் இல்லை, நாகரிகம் என்பதே பரவுவது தான்.
சினிமாக் கலையை ஒரு டெக்னாலஜி என்ற முறையில் எவ்வாறு கையாளுகிறோம் என்பது ஒன்றும் முக்கியமில்லை. அதை; நமது சொந்த வாழ்கையை, சொந்தப் பிரச்சனைகளை, நமக்கே உரிய கலாச்சாரப் பின்னணியுடன் காட்டினால் தான் நாம் இந்தக் கலையைக் கற்றவர்கள் ஆவோம்.
‘உன்னைப் போல் ஒருவன்’ திரையிடப்பட்ட காலத்தில் அது இந்தியாவின் ஏழ்மையையும், அறியாமையையும் காட்டி தேசத்துக்கு அவமானம் தேடித் தருவதாக அநேகர் குற்றம் சாட்டினர். ஏன் எம்.ஜி.ஆர். கூட இதே கருத்தைக் கொண்டிருந்தார்.
உண்மையில், அது வறுமையிலேயும், துன்பத்திலேயும் வாழ்ந்தாலும் இந்திய மக்கள் எவ்விதம் மனிதாபிமானத்துடன் வாழ்கிறார்கள் என்பதைத்தான் உணர்த்தியது.
‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தின் வெற்றி முயற்சிக்குப் பிறகு ஜெயகாந்தனின், ‘யாருக்காக அழுதான்’ என்ற படம் அவருடைய டைரக்-ஷனில் உருவாகத் துவங்கியது.
|
தயாரிப்பாளர் விரும்பினார். இது விநியோகஸ்தர்களால் வாங்கப்பட வேண்டும். அதனால் புதுமுகங்கள் தேவையில்லை...?
‘காம்ப்ரமைஸ்...!’
புகழ்பெற்ற நடிகர்களான கே.ஆர்.விஜயா, நாகேஷ் போன்றவர்கள் புக் செய்யப்பட்டார்கள்.
அது ஒரு சிறுகதை. ஆதலால் அது 8000 அடிகளிலேயே திரைப்படமாக ஆகிவிட்டது. இது ரிலீஸ் செய்வதற்கு போதுவானதாக இல்லையே...?
‘காம்ப்ரமைஸ்...!’
கொஞ்சம் கனவுக் காட்சிகள், நெகடிவ்களில் இருந்து சேர்த்துக் கொள்ளப்பட்டது.
‘இன்னும் கொஞ்சம் சுவை கூடினால் தேவலை...?’
‘காம்ப்ரமைஸ்...!’
சில பாடல் காட்சிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டது. படம் என்னவோ எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் மக்கள் தான் பார்த்தாக ஞாபகம் இல்லை!
அது ‘யாருக்காக அழுதான்’ அல்ல; ‘யாருக்காகவோ அழுதான்...!’
நன்றி: நக்கீரன் பதிப்பகம்.
படத்தொகுப்பாளர் பீ.லெனின் எழுதிய சினிமா நிஜமா? என்கிற புத்தகத்தில் இருந்து இந்தக் கட்டுரை பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com
முகநூலில் இணைய: https://www.facebook.com/ArunThamizhstudio |