இதழ்: 25     ஐப்பசி (November 01 - 15), 2014
   
 
  உள்ளடக்கம்
   
சினிமா - நிழலா? நிஜமா? - அருண் மோ.
--------------------------------
தமிழகக் காளியும் மகாராஷ்டிர ஜபயாவும் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
எஸ்.எஸ்.ஆர் - அரிதாரமற்ற கலைஞர் - டிராட்ஸ்கி மருது
--------------------------------
இயக்குனர் மிஷ்கின் நேர்காணல் - தினேஷ்
--------------------------------
இயக்குனர் விக்ரம் சுகுமாரன் நேர்காணல் - தினேஷ்
--------------------------------
இயக்குனர் பாலாஜி தரணிதரன் - நேர்காணல் - கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி
--------------------------------
இயக்குனர் ப. ரஞ்சித் நேர்காணல் - விக்னேஷ் சேரல்
--------------------------------
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நேர்காணல் - சரவணன்
--------------------------------
இயக்குனர் கமலக்கண்ணன் நேர்காணல் - காளிமுத்து
--------------------------------
இயக்குனர் நவீன் நேர்காணல் - ஜெயகாந்தன்
--------------------------------
இயக்குனர் ரமேஷ் நேர்காணல் - அருண் தேவா
--------------------------------
இயக்குனர் வினோத் நேர்காணல் - ஐயப்பன்
--------------------------------
தயாரிப்பாளர் சி.வி. குமார் நேர்காணல் - யுகேந்தர்
--------------------------------
தயாரிப்பாளர் ஜே. சதிஷ்குமார் நேர்காணல் - தமிழரசன்
--------------------------------
   



   

 

 

”மெட்ராஸ்” இயக்குனர் பா. ரஞ்சித் - நேர்காணல்:

’முழுமையான தலித் சினிமா இங்கு சாத்தியமில்லை’

- விக்னேஷ் சேரல்

சினிமா என்னும் கலை வடிவத்தைக் கையாள வேண்டும் என்று எது தூண்டியது?
என்ன நோக்கம்?

நான் ஓவியக்கல்லூரி மாணவன். சினிமா பொதுஜன ஊடகமாக இருக்கிறது. பின்பாக , இதுவரை தமிழ்சினிமாவில் பேசப்பட்ட கருத்துகளே உண்மையான தமிழர்களின் அடையாளமாகவும் இருந்துவருகிறது. இப்பொழுது தமிழும், தமிழ் மண்ணும் என்று எடுத்துக்கொண்டால் என்னைப்பொறுத்தவரை சில விஷயங்களை முன்வைக்க முடியும். தமிழர்கள் என்றால் யார்? தமிழ்நாடு எதைக்குறிக்கிறது? என்றெல்லாம் கேட்டால் இதன் ஒரு சில பகுதிகளைத்தான் நாம் உதாரணமாக முன்னிறுத்த முடியும். தென்மாவட்டங்கள் அதிகமாக காட்சிப்படுத்தப்பட்டும், வடமாவட்டங்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படும் சூழலே இங்கு நிலவுகிறது. இந்தி சினிமாவைப்பொறுத்தவரை தமிழர்கள் யார் என்று அடையாளப்படுத்துகிறார்கள் என்று பார்த்தால், மிஸ்டர்&மிஸஸ் ஐயர், டூ ஸ்டேட்ஸ், பின்னர் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தையும் எடுத்துக்கொள்ளலாம், இதிலெல்லாம் யாரைத் தமிழர்களாக முன்னிலைப்படுத்துகிறார்கள், இவர்கள் மட்டும்தான் தமிழர்களா? என்ற கேள்வியும் இருக்கிறது.

பின்னர் சினிமா என்பது பொதுஜன ஊடகம். திரையரங்கில் மட்டும்தான் எல்லா சாதியினரும், மதத்தினரும் ஒன்றாக உட்கார்ந்து படம் பார்க்கின்றனர்., நான் பேச நினைக்கின்ற விஷயங்களும் மக்களிடம் எளிதாகச் சென்று சேரவேண்டும். என் கருத்துகள் மக்களால் பேசப்படும் பொருளாக மாற்றவும் சினிமாவே மிகச்சிறந்த ஊடகமாக தோன்றியது.

தமிழ்சினிமா தமிழ்சமூகத்திற்கு எந்தவிதத்தில் பயனுள்ளதாக இருக்கிறது.?

பயனுள்ளதா? இல்லையா? என்பதை பயன்பெறுகின்றவர்களை வைத்துத்தான் சொல்ல முடியும். சினிமா என்பதே நாடகத்தை அடிப்படையாக வைத்து வந்த ஒன்றுதான், நாடகங்கள் ஆரம்ப காலகட்டத்தில் என்னவாக இருந்திருக்கிறது?, சுதந்திரப்போராட்டங்கள் மாதிரியான சமயங்களில் நாடகங்கள் என்னவாக பயன்படுத்தப்பட்டன. அது பின்பு எப்படி கலைவடிவமாக மாறியது. பின்னர் பார்த்தீர்களேயானால், நாடகத்தின் அடுத்த அடி தான் சினிமா. அப்படிப்பார்க்கின்ற பொழுது தமிழ்சினிமாவில் சில புரட்சிகர விஷயங்கள், குறிப்பாக பராசக்தி மாதிரியான படங்கள், வந்திருக்கின்றன. திராவிட இயக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் முக்கியபங்கு தமிழ்சினிமாவிற்கு உண்டு. எம்.ஜி.ஆர், கலைஞர் போன்ற தலைவர்களைச் சொல்லலாம், இவர்களெல்லாம் தமிழ்சினிமாவினை தன் திராவிட இயக்கக் கொள்கையை பரப்புவதற்கு பயன்படுத்திக்கொண்டனர். இந்த வகையில் தமிழ்சினிமா உதவியிருக்கிறது என்று சொல்லவேண்டும்.

இதன் பின்னர் சினிமா முற்றிலுமாக வியாபாரம், வியாபார நோக்கு, என்று மாறுகிற வேளையில், இவையெல்லாம் காணாமல் போகிறது. இதன்படி தமிழ்சினிமாவினால் சில சாதகமான சூழலும், அதே வேளையில் பாதிப்பும் நிகழ்ந்திருக்கிறது.

சினிமாவிற்கு பிரதானமானது வடிவமும் உள்ளடக்கமும், அது மெட்ராஸ் படத்தில் உள்ளதாக உணர்கிறீர்களா?

நான் இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்.

குறியீடுகள் சார்ந்த கலையம்சமாகத்தான் இந்தப்படம் முழுவதையும் நான் செய்திருக்கிறேன். வெளிப்படையாக ஒரு சினிமாவாக, main strean ஆக, எல்லோருக்கும் எளிதில் சென்று சேரக்கூடியதுமான, சினிமாவாக இருந்தாலும், இந்தப்படத்தை எடுத்துக்கொண்டால் தேவையில்லாத ஷாட்ஸ்கள் கிடையாது. நிறைய விஷயங்கள் முன்கூட்டியே முடிவுசெய்துதான் வேலை பார்த்திருக்கிறோம். அதன் வடிவமுமே வழக்கமான கமர்ஷியல் பாணியில் வந்துவிடக்கூடாது என்று நினைத்துதான் வேலைபார்த்திருக்கிறோம். ஏதும் வித்தியாசமான கோணங்களோ, காட்சிகளோ வைக்க கூடாது. அந்தக் காட்சிக்கான பொருளின் வெளிப்படுத்தன்மையை அடிப்படையாக வைத்துதான் ஒவ்வொரு ஷாட்டும் தேர்ந்தெடுத்திருக்கின்றோம்.வடிவம் மட்டுமல்ல, உள்ளடக்கம் நிறைய இருக்கிறது. அதை படத்திலேயே பார்க்கமுடியும், இரண்டும் சேர்ந்துதான் இருக்கும்.

வடிவம் என்று நீங்கள் குறிப்பிடுகின்ற பொழுது, இதனுடன் இன்னொரு கேள்வியும் சேர்ந்தே வருகின்றது. ஒரு படத்தை ஒலியின் மூலமே புரிந்துகொள்ளும் வகையில் வசனங்கள் வைத்திருப்பதனால், காட்சிரீதியான கதை சொல்லல் உங்கள் படத்தில் இல்லை என்றுதானே ஆகிறது?

காட்சி என்பதை நீங்கள் எதனை வைத்து முடிவுசெய்கிறீர்கள். காட்சியை எதை வைத்து தீர்மானிக்கிறீர்கள?.இதை நீங்கள் இப்படி புரிந்துகொள்ளலாம். அதாவது சென்னை மாதிரியான நகரச்சூழலை அதை சினிமாவில் எப்படி காண்பிக்க வேண்டும் என்ற வரைமுறை அதன் இயல்பு தன்மை சார்ந்தே இருக்கிறது. Street Theatre Form என்ற வகைமையில் என்னவெல்லாம் சொல்ல முடிகிறது, முடியும் என்பதை பார்க்க வேண்டும். இதன் முக்கிய அம்சமே பார்வையாளரையும், அதை நடத்துகிறவரையும் ஒரே சமயத்தில் அதில் பங்குபெற வைப்பதுதான்,. அதைத்தான் இதில் நாங்கள் செய்திருக்கிறோம். சினிமா மொழிக்கான நிறைய காட்சிகளும் மெட்ராஸ் படத்தில் இருக்கிறது. எல்லா இடங்களிலும் வசனங்களாலேயே நிரப்புவது என்று செய்யாமல், சினிமா மொழி சார்ந்தும் நிறைய வேலை செய்திருக்கிறோம்.

"மெட்ராஸ்", திரைப்படம் விளிம்புநிலை மக்களின் வாழ்விடமாக இருப்பதால் மட்டுமே, அதனை தலித் அரசியல் பார்வை கொண்ட படமாக கருதமுடியுமா?

வாழ்க்கையே அரசியலாக இருப்பது விளிம்புநிலைமக்களின் வாழ்வுதான் என்று சொல்கிறேன். சாப்பாடு, உறைவிடம் என்று நான் காட்சிப்படுத்துகிற எல்லா பொருட்களுமே அரசியலில்தான் இருக்கிறது. ஏன் பத்துக்கு பத்து அளவுள்ள ஒரு வீட்டில்தான், இவர்கள் இருக்கவேண்டும் என்று யார் முடிவுசெய்வது?. வடசென்னை பகுதி ஏன் ஒதுக்குப்புறமாக இருக்கிறது?. ஏன் நகரத்திற்கு பின்னாடி இருக்கிறது?. ஏன் அவன் வாழ்கின்ற பகுதிகளின் சாலைகள் சீர்படுத்தப்படவில்லை. அங்கு எண்ணிக்கையில் அதிகமான மக்கள் இருக்கிறார்கள், ஏன் அங்கு வேலைவாய்ப்பு சம்பந்தமான பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. என்றெல்லாம் அந்த மக்களைக் காட்சிப்படுத்துகிறபொழுதே, அந்த மக்களின் மொழியிலிருந்து, பேச்சிலிருந்து, வாழ்விலிருந்து எல்லாமே அங்கு அரசியல் பார்வை கொண்டதாக மாறுகிறது.

தலித் அரசியல் பார்வை என்பது நேரடியான சாதிய பிரச்சனைகளை புரட்சிகர கருத்துகளை பதிவு செய்வது போலவே, தலித்களின் இருப்பை நிலம், மொழி, பண்பாடு சார்ந்து பதிவு செய்வதும் அதன் அரசியல் பார்வையாக தான் இருக்கிறது.

இன்னொன்று இது தலித் அரசியல் பார்வை இல்லாத படமாக கருதினாலும் பிரச்னையில்லை. இத்திரைப்படம் அதன் தன்மையில் ஏற்ப்படுத்த வேண்டிய உரையாடல்களை உண்டு பண்ணிவிட்டதாக நம்புகிறேன். திரை ஓரத்தில் ரௌடிகளாக, நகைச்சுவை கதாபாத்திரங்களாக, அண்டிபிழைக்கும் மக்களாக இருந்தவர்கள் திரையின் மையத்தில் கதாநாயகர்களாக காட்டுவதே பெரிய அரசியல் தான்.

இங்கு விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை அரசியலா? இல்லையா? என்பதை அந்த வாழ்க்கைச் சூழல்தான் தீர்மானிக்கிறது. ஒரு குடியிருப்பு பகுதிக்குப் பக்கத்திலேயே கூவம் ஓடுகிறது, என்பது அவனின் பிரச்சனை. சூழல், மக்கள், இவையிரண்டையுமே காட்சிப்படுத்துகிறபொழுது அரசியலாக இருக்கிறது. இதை வைத்துப் பார்க்கின்ற பொழுது அங்கு எல்லா இடங்களிலுமே அரசியலைப் பார்க்கமுடியும்.

இது முதல் படம். இது மாதிரியாக இன்னமும் 5 படங்கள் வருகின்ற பொழுது, இன்னமும் பல யோசனைகள் வரும், அதைக் காட்சிப்படுத்துவோம், அடுத்து பல அடிகள் முன்னோக்கி நகர இதுபோன்ற படங்களே பயன்படும்.

மெட்ராஸ் படத்தில் வரும் பாடல் வரிகளில் உள்ள காத்திரமான சொல்லாடல்கள், ஏன் காட்சிப்பூர்வாமாக திரைப்படத்தில் இல்லாமல் போனது?

இங்கு கதை, கதைக்கான நோக்கம் என்ற ஒன்று உள்ளது. கதை என்ன சொல்கிறது?, என்பதை வைத்துத்தான் படம் எடுக்க முடியும்.

போஸ்டர் ஒட்டி பந்தல் போட்டு ஏமாற்றமே எங்கள் பண்பாடு” இதுதான் படத்தில் வருகிற கதை.

பின்னர், “அனல் காயும் பறையோசை வாழ்வின் வசந்தம் ஆகிடுமே” வெப்பத்தில் காய்கிற பறை அடிக்கிற போது வெளிப்படும் ஒலி வசந்தமானது. இது தான் காளியின் வாழ்க்கை. இந்த வரிகளுக்கு எதிர்மறையாக படம் பயணிக்கவில்லை.

இந்த இரண்டு பாடல்களையும் நீங்கள் எடுத்துவிட்டாலும், இந்த இரண்டு வரிகளிலும் உள்ள ஒட்டுமொத்த அம்சமும் படம் நெடுகிலும் வருகின்றது.

உழைக்கும் மக்கள் ஒண்ணா நின்னா. இந்த உலகத்தையே ஜெயிக்கலாம்.” என்பதைத்தான் படத்தின் இறுதிக்காட்சியில் வைத்திருக்கிறேன்.

முதலில் அன்பு என்ற கதாபாத்திரம் பேசுகின்ற விஷயங்களே இதுதான். அரசியல் அதிகாரம்தான் இந்த மக்களின் விடுதலை என்று சொல்கிறான். காளி அதற்கு, ”வெறும் அரசியல் அதிகாரம் மட்டுமே மக்களுக்கான விடுதலை கிடையாது. அந்த அரசியல் அதிகாரத்தை நாம் என்னவாகப் பயன்படுத்துகிறோம். என்பதுதான் முக்கியம்” என்று சொல்கிறான்.

மராத்தியில் சமீபத்தில் வந்த ஃபன்ட்ரி ( FANDRY) திரைப்படம் தலித் மக்களின் வாழக்கையை மிக நுட்பமாகவும், ஆதிக்கசாதி மனோபவத்தை காட்சிப்பூர்வமாகவும் பதிவுசெய்கிறது, ஆனால் மெட்ராஸ் திரைப்படம் அந்த உணர்வை சிறிதளவும் காட்சிப்படுத்தவில்லையே ஏன்?

அது படம் பார்ப்பவர்களின் பிரச்சனை.

’ஃபன்ற’., படத்திற்கு தேவையான களம் அது. மெட்ராஸ் படத்திற்கு என்ன பண்ணியிருக்க வேண்டுமோ அதைத்தான் பண்ணியிருக்கிறோம். இந்த மாதிரியான அரசியல் கட்சிகள் மக்களை எப்படி பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதுதான் கதையின் நோக்கமே. எனவே அதை நோக்கித்தான் நாம் பயணப்பட முடியும். அதைத்தான் நானும் மெட்ராஸில் செய்திருக்கிறேன். இதைப் புரியவில்லை என்று சொல்வதை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. நான் முடிந்தவரை படத்திற்கு தேவையான உழைப்பைக் கொடுத்திருக்கிறேன். அப்படியும் ”புரியவில்லை” என்று சொல்லுமளவிற்கு படத்தில் என்ன பிரச்சனை என்பதை யோசித்துத்தான் பார்க்க வேண்டும். அது யாருடைய பிரச்சனை என்பதையும் யோசிக்க வேண்டும்.

இந்தக் கேள்வியைக் கேட்பதற்கான, நோக்கம், மெட்ராஸ் படம் வெளியாகும் முன்பு, நீங்கள் பேட்டி ஒன்றில் ”கதை இல்லை என்று சொல்லாதீர்கள், வடசென்னையைச் சுற்றிப்பாருங்கள் ஆயிரம் கதைகள் கிடைக்கும்”, என்று சொல்லியிருந்தீர்கள். அப்படியெனில் பா.ரஞ்சித்திற்கு கிடைத்த கதைகள் இதுதானா?

நீங்கள் நினைக்கிற கதையை நான் எடுக்க வேண்டும் என்று நினைக்கக்கூடாது. நீங்கள் நினைக்கிற கதையை என்னால் நிச்சயமாக எடுக்கவும் முடியாது. நான் எடுக்கிற கதையில், சரியாக இதையெல்லாம் இந்தப் படத்தில் சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டு அதை முயற்சித்துப்பார்க்கிறேன். எண்ணிப்பாருங்கள் mainstream சினிமாவில் எந்த மாதிரியான கதைகள் சொல்லப்படும், எந்த மாதிரியான கதைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற விதிமுறைகள் இருக்கிறது. இங்கு முழுக்க முழுக்க வியாபாரம் என்கிற பொழுது, இதுவரைக்குமான தலித் சூழலை மையமாகக்கொண்ட படங்களோ, தலித் வாழ்வியலை மையமாகக் கொண்ட படங்களோ அதிக அளவில் வெற்றிபெற்றதேயில்லை. இதன் தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இங்கு தமிழ்சினிமா என்ன மாதிரியாக இருக்கிறது. என்ன மாதிரியான கதைகள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. என்பதையும் பார்க்க வேண்டும். ’அம்பேத்கர்’ என்ற பெயரை நேரடியாக வசனத்தில் இடம்பெற வைப்பதை தடை செய்கின்ற ஆட்களையும் நான் சந்தித்திருக்கின்றேன். முதலில் அந்த வசனத்தை கதையிலிருந்து எடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த வசனத்தை எடுத்துவிடுங்கள், இதெல்லாம் இங்கு ஓடாது, இங்கு வேறுமாதிரியான படங்கள் தான் ஓடுகின்றது” என்று சொல்கிறார்கள். அச்சூழலில் தலித் வாழ்வியல் சார்ந்த படங்கள் எடுக்கவே முடியாது என்ற இக்கட்டான தருணத்தில் நாம் படமெடுக்கின்றோம், இங்கு என்ன மாதிரியான காட்சி வைக்க முடியும், எதெல்லாம் வைக்க முடியாது என்று நிறைய தடைகள் இருக்கிறது.

மக்களைச் சென்று சேரவேண்டும் என்பதுதான் நோக்கமெனில் எந்தமாதிரியான படங்கள் எடுக்க வேண்டும் என்பது என்னுடைய கடைமை. என்னுடைய அரசியல் பார்வையோடு இங்கு நிலவிவருகின்ற பிரச்சனைகளின் அடிப்படையில் , நான் என்னவாக படம் எடுக்கிறேன் என்பதுதான் மிகவும் முக்கியம். இதுவரைக்கும் தலித் வாழ்வியலை சொன்ன சினிமாக்களே கிடையாது என்பதுதான் இங்கு நடப்பது. ”வெண்ணிலா கபடி குழு” போன்ற சில படங்கள் மேலோட்டமான தலித் வாழ்வியலை சொல்லிச் செல்கிறது

இந்தமாதிரியாக சிலபடங்களில் சில விஷயங்களை தமிழ்சினிமாவில் முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் இதுவரைக்கும் நேரடியான தலித் படங்கள் ஏதும் வந்திருக்கிறதா? என்று கேட்டால் இல்லை என்று சொல்லவேண்டும். எனக்குத்தெரியாமல் ஓரிரண்டு படங்கள் இருந்தாலும் அவை வணிக ரீதியாக வெற்றிபெற்றிருக்கிறதா? என்று கேட்டால். சத்தியமாக இல்லை. ’என்னுயிர் தோழன்’ படத்தில் கூட, கிராமத்தில் விவசாயம் செய்கிற ஒரு பெண், ஒருவனை நம்பி ஏமாற்றப்பட்டு, நகரத்தை நோக்கி வருவாள். கடைசியாக அந்தப்பெண் பழிவாங்குவது போலத்தான் அந்தப்படம் முடிந்திருக்கும். சரி, போகட்டும், இது தலித் வாழ்வியலா? என்றால் அதையும் கேள்விக்குறியோடுதான் அணுக முடியும். ஆனால், இதுமாதிரியான குறைந்தபட்ச படங்கள்தான் இதுமாதிரியான விஷயங்களைப் பேசுகிறது. இங்கு தலித் அரசியலப் பற்றி திறந்த புத்தகமாக சினிமாவில் பேச முடியாது. அவ்வளவு கட்டுப்பாடுகள் இந்தச் சினிமாவில் இருக்கின்றது.

கதை எழுதுகிறோம், கதை எழுதுகிற தன்மையைத் தாண்டி வந்து ஒரு தயாரிப்பாளரை நம் கதை திருப்திப் படுத்தவேண்டும். தயாரிப்பாளரைத்தாண்டி நடிகர்களைச் சென்றடையும்போது அவர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். பின்னர் விநியோக உரிமை என்பதையெல்லாம் தாண்டித்தான் சென்சார் போர்டு பிரச்சனைக்கு வருகிறோம். தணிக்கையைத் தாண்டித்தான் படம் வெளியாகவேண்டியிருக்கிறது. பின்னர் நம்படத்தில், நான் என்ன சொல்கிறேன் என்ற நோக்கமும் உள்ளது. மேற்சொன்ன எந்தப் பிரச்சனைகளும் இல்லை என்று வருகின்ற பட்சத்தில் நாம் ஃபான்றி மாதிரியான ஒரு படத்தை எடுத்துவிடலாம். பிரச்சனையே கிடையாது. ஆனால், ஃபன்றி மாதிரியான ஒரு படம் எடுக்கவேண்டும் என்ற யோசனை நமக்குள்ளிருந்துதான் வரவேண்டும். என்னைப் பொறுத்தவரை நான் எடுக்கிற சினிமா, மக்களுக்கானது, மக்களை சென்றடைய வேண்டும். இங்கு இந்தமாதிரியான விவாதங்கள் துவங்கப்படாமலேயே இருக்கிறது. இதை நாம் ஏற்படுத்த வேண்டும். இது எல்லோரிடமும் சேர்க்கப்படவேண்டும். இதுதான் என்னுடைய நோக்கம்.

நான் படமெடுத்து முடித்துவிட்டு நான்கு பேர் உட்கார்ந்து பேசுவதில், எனக்கு உடன்பாடு கிடையாது. எல்லோருக்கும் சாதி அரசியலைப் பற்றித்தெரியும். எல்லோருமே சாதிய உணர்வால்தான் பிரிந்திருக்கிறோம். இதுவரைக்குமான தமிழ்சினிமாவில் எத்தனை சாதி சம்பந்தமான படங்கள் வந்திருக்கின்றன. அப்படி வந்த படங்களில் எத்தனை படங்கள் தலித்களின் வாழ்க்கையை உண்மையாக காட்டியிருக்கிறது?. இதுவரைக்கும், தமிழ்சினிமா தலித் மக்களை கேவலமாகவும், இல்லையேல் சமூகத்தில் அண்டிப்பிழைக்கிற மக்களாகவும்தான் காட்டியிருக்கிறார்கள்.

தலித் வாழ்க்கையைப் பற்றி பேசவைத்ததும், அவர்களின் உறவு முறையையும், வாழ்க்கையையும், கொண்டாட்டத்தையும், பிரச்சனைகளையும் நேரடியாக காட்டவில்லை. முதல் முறையாக சினிமாவாக, மெட்ராஸில் இது இருக்கிறது என்று நினைக்கிறேன். இந்தப்படம் பார்த்தபின்பு என்னிடம் பேசியவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். இதை நீங்கள் வடசென்னை வாசிகளைச் சந்தித்து கேட்டுப்பாருங்கள். இந்தப்படம் அவர்களின் பிரச்சனைகளைப் பேசுகிறதா? இல்லையா? என்று. அவர்களின் வாழ்க்கையை இது பதிவுபண்ணியிருக்கிறதா? இல்லையா? என்பது அவர்களைக்கேட்டால்தான் தெரியும்.. அவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.

ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனையை பேசுகிற சமுக அக்கறையுள்ள இயக்குனராக அறியப்படும் ப.ரஞ்சித் எப்போது புனைவற்ற யதார்த்த சமூகவாழ்வை முன் வைக்கும் படத்தை எடுப்பீர்கள்?

அதைக் கதைதான் தீர்மானிக்க வேண்டும். அதாவது நாம் தான் தயாரிப்பாளர் என்கிற பொழுது, இது நடக்கலாம். நான் கலை, கலை செய்நேர்த்தி என்ற பிரச்சனைகளுக்கு வரவேயில்லை. அதற்கு நீங்கள் போகவே வேண்டாம். அப்படியெனில் நான் ஒரு ஓவியனாக படம் வரைந்துகொண்டு, இருந்திருப்பேன். என்னுடைய வாழ்க்கை, வாழ்க்கை சம்பந்தமான பிரச்சனைகள் , சாதி அரசியல் எல்லாமே என்னுடைய ஓவியத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். நான் அங்கேயே நின்றிருக்கலாம். என்னுடைய நோக்கம் அது கிடையாது. நான் கலைஞனாக, கலைப்படைப்பாளியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் யோசிக்கவேயில்லை. மக்களுக்கான சினிமா எடுக்கவேண்டும், மக்களின் பிரச்சனைகளைப் பேசவேண்டும், மக்களுக்கான விஷயத்தைச் சொல்லவேண்டும்,. அவர்களை நோக்கி என் சினிமா போகவேண்டும். அவர்களின் வாழ்க்கையோடு என் சினிமா பேச வேண்டும் என்பதே என் சிந்தனை. அதை நோக்கித்தான் என் ஒவ்வொரு அடியும் இருக்கும். நானே தயாரிப்பாளராக ஆனாலும் கூட நான் அதைநோக்கித்தான் செல்வேன்.

தமிழ் சினிமா இயக்குனர்கள் பொதுவாக வாசிப்பு பழக்கமற்று இருப்பதால்தான் அரசியல் சினிமா எடுப்பதில் சரியான புரிதல்கள் இல்லாமல் போகிறதா?

அப்படியும் இருக்கலாம். வாசிப்பு அனுபவங்கள் இல்லை என்பது ஒன்று. பின்பு அரசியல் பிரச்சனைகளை இங்கு யாருமே புரிந்துகொள்வதே கிடையாது. அப்படிப்பார்க்கையில் நீங்கள் சொல்வதை முழுதாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது. ஏனெனில் நன்றாக நிறைய படிக்கின்ற இயக்குனர்களே புரிதல் இல்லாமல் நடந்துகொள்கிறார்கள். அவர்கள் சமூகப்பிரச்சனையை சரியாகப் புரிந்துகொள்ளாமல் படத்தை அணுகுகிறார்கள். இன்னொரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். எல்லோருமே சாதிய அடிப்படையில்தான் பிறந்திருக்கிறோம். அப்பொழுது அந்த இயக்குனர்கள் எடுக்கின்ற படங்களிலும் அவர்களை அறிந்தோ அறியாமலோ அவர் சார்ந்த சாதியை அவரது படங்கள் வெளிப்படுத்துகின்றன. அல்லது பிற சாதியினரை இழிவாகச் சித்தரிப்பதும் நடக்கிறது.

பிரபலமான இயக்குனர் எடுத்திருக்கின்ற படம் தான், அதில் இப்படியான வசனம் வருகிறது. “நான் சுத்த தேவன் கத்தியை எடுத்தா வெட்டாம வைக்கமாட்டேன்”. “இந்த வேலையை விட்டுட்டா நான் என்ன பீ அள்ள போறதா?” என்று சொல்கிறார்கள் .

”மலையாளத்தான் மாட்டுக்கறி துன்னாலும் கூட அவங்களுக்கு அறிவு இருக்குதுடா” என்று வசனம் வைக்கிறார்கள். அப்படிப்பார்த்தால் மாட்டுக்கறி சாப்பிட்டால் அறிவு இருக்காதா? இன்னொரு முக்கியமான விஷயம், மாட்டு இறைச்சி சாப்பிடுபவனை வில்லனாகச் சித்தரிப்பது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் குடிசைப்புற பகுதிகளில் இருப்பவர்களை வில்லனாக காட்டுவது.

சென்சார் போர்டில் ஒரு பெண்மணி சொன்னார், “இது ரவுடிகளின் படம் தானே” என்று. ”காளி ரவுடி இல்லை, ஹவுசிங்க் போர்டில் இருக்கிறான்” என்று பதில் சொன்னேன். ”ஆமா, ஹவுசிங்க் போர்ட் ஆளுங்கன்னா, ரவுடிங்க தான” என்று சொல்கிறார். இந்தப் பொதுபுத்தி பாரபட்சமின்றி எல்லாரிடமும் இருக்கிறது. முக்கியமாக படித்த அறிவுஜீவிகளிடம் இது கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. முதலில் அவர்கள்தான் சமூகப்பிரச்சனைகளை புரிந்துகொள்ள வேண்டும்.

நான் ஆதிக்க சாதி உணர்விற்கு எதிராக ஒரு படம் எடுக்கிறேனென்றால், அப்பொழுது ஒவ்வொரு வசனம் வைக்கிறதுக்கு முன்னாடியும் நான் யோசிக்கிறேன். ஏனென்றால் இதுவரைக்கும் தலித் சமூகம் தொடர்ந்து சாதி எதிர்ப்பை முன்னிறுத்துகிறபொழுது, இதுவரையிலும் சாதி எதிர்ப்பில் மாற்றங்கள் நிகழாதபொழுது நம் முன்னால் ஒரு கேள்வி வருகிறது. நாம் ஏன் அவர்களுடன் சண்டை போட வேண்டும் என்ற ஒன்று இருக்கிறது. இந்த இரண்டு இனக்குழுக்களும் ஒன்றாக ச் சேர்ந்தால் மட்டுமே இந்தப் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் கிடைக்கும். நான் அவர்களோடு சண்டையிடுவதற்கு மாறாக பேசவேண்டும் என நினைக்கிறேன். அவர்களோடு என் பிரச்சனை சார்ந்து விவாதிக்க வேண்டும் என நினைக்கிறேன். என் சொந்த அனுபவங்களின் வாயிலாகத்தான் அவர்களைச் சென்று சேரவேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு இதுமாதிரியான படங்களைப் பயன்படுத்திக்கொள்கிறேன். என் படம் தலித் சமூகத்திற்கு மட்டுமேதான் பிடித்திருக்கிறதா? என்றால், இவ்வளவு நாட்கள் ”மெட்ராஸ்”, படம் ஓடியிருக்க வேண்டிய அவசியம் கிடையாது.

அறிவுஜீவிகளும், விமர்சகர்களும், ஒரு சிலர் இது தலித் வாழ்வியலை பேசுகிறதா ? இல்லையா? என்று அணுகுகிறார்கள். பொதுஜனம் என்று வருகிற வேளையில் அனைத்து மக்களுமே இதில் கலந்திருக்கிறார்கள். அப்படி அனைத்து மக்களுமே இதனை ஒரு ஜாலியான கொண்டாட்டமான படமாகப் பார்க்கிறார்கள். அரசியல் வாதிகளின் கழிவிரக்கற்ற நிலைப்பற்றி விவாதிக்கிறார்கள். ஒரு வாழ்க்கைக்குள் நுழைந்து அவர்களால் இந்தப்படத்தைப் பார்க்கமுடிவதே இந்தப்படத்தின் வெற்றியாக நான் நினைக்கிறேன். முதலில் நீ வேற நான் வேற என்று இல்லாமல், இந்த விவாதத்தை துவங்க வேண்டும். அதைத்தான் மெட்ராஸ் படத்தில் துவங்கியிருக்கிறேன்.

தலித் அரசியலை வெளிப்படையாக பேசுகிறதா மெட்ராஸ், வணிகத்துக்காக சில திணிப்புகளைத் திணித்துக்கொண்டாதாக தெரிகிறதே?

வணிகத்திணிப்பு என்றால் நான் முன்னாடி கூறிய பதில்களைத்தான் திருப்பிக் கூறவேண்டியிருக்கும். வணிகத்திணிப்பு என்பதை எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள்?

தலித் சார்ந்த வாழ்வியலைக் காட்ட கார்த்திக் இந்தப்படத்தில் தேவையா?

ஏன் தேவையில்லை? . ”வெள்ளையாக இருக்கிற பெண் எப்படி தலித் வாழ்வியலுக்குள் வரும்” என்று ஒரு எழுத்தாளர் கேட்கிறார். ”காளி ”அதாவது ஐ.டி.யில் வேலை செய்பவன் எப்படி தலித் வாழ்க்கைக்குள் வருவான் என்கிறார்கள். எங்கள் ஊரில் எவ்வளவு அழகான பெண்கள் இருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு காட்டமுடியும்.

என் வீட்டில் எடுத்துக்கொள்ளுங்கள், என் பெரியப்பா பையன் எம்.பி.பி.எஸ் படித்திருக்கிறான். அவன் டாக்டராக இருக்கிறான். இதுபோல நான் உங்களுக்கு எத்தனைப் பேரை காட்டவேண்டும். தலித் வாழ்வியல் என்றாலே அழுக்காக இருக்கவேண்டும், அவர்கள் வாழ்க்கை என்பதே, கொண்டாட்டமே இல்லாத , அவர்களைக் கீழானவர்களாகவே காட்டிவிட்டு , அதே மனப்பான்மையுடன் எங்களை நீங்கள் பார்க்காதீர்கள் என்று சொல்கிறேன்.

எங்கள் வாழ்க்கையில் கொண்டாட்டம் எக்கச்சக்கமாக இருக்கிறது. அவ்வளவு சந்தோஷமான வாழ்க்கையை நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

வடசென்னைப் பசங்களை தயவுசெய்து போய்ப்பாருங்கள். அவன் உழைக்கிற காசை பெரும்பாலும் அவனின் உடைக்கும், வெளித்தோற்றத்திற்கும் பயன்படுத்துகிறான். தலித் வாழ்வியல் என்றால் நீங்கள் எதை அர்த்தப்படுத்துகிறீர்கள் என்றே புரியவில்லை .

மற்ற சமூகத்தில் பிரச்சனைகளே கிடையாதா? இந்தப்படத்திலும் பிரச்சனைகள் சொல்லப்படவேயில்லையா? அந்த இடத்தில், அந்த கதையில் என்ன பிரச்சனை பேசமுடியுமோ அதைப்பேசியிருக்கிறோம். வடசென்னையில் சாதி பிரச்சனைகளே இல்லையா? என்று கேட்டால் 1960களில் பெரிய கலவரம் நடந்திருக்கிறது. அங்கிருந்து வெளியே வந்தால், பெரும்பான்மையான தலித் மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் அவர்களின் உற்பத்திக்கு என்ன பிரச்சனை என்பதைக்கொஞ்சம் பார்க்க வேண்டும்? அவர்களின் பிரச்சனை தண்ணீர் பிரச்சனையாக இருக்கலாம். சுற்றுப்புற வாழ்வாதாரப் பிரச்சனையாக இருக்கலாம். குடிசைகள் மாற்றுவது தொடர்பான பிரச்சனைகள் போன்றுதான் அங்கு இருக்கிறது. அப்படி நாம் ஒரு கதை எடுக்கிறபொழுது எது மாதிரியான பிரச்சனைகளைத்தொடலாம், என்பது இங்கு இருக்கிறது.

ஆனால் தலித்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்ற ஒரே மாதிரியான சிந்தனைகளை அழித்துவிட்டு, உண்மையிலேயே தலித்கள் எப்படியிருக்கிறார்கள் என்று அங்குபோய்பார்க்க வேண்டும். என்னுடைய முக்கியமான கோபமும், நோக்கமும் என்னவென்றால், பொதுவாக தலித்கள் என்றாலே வறுமையானவர்கள்தான், பண்பாடு பழக்கவழக்கங்கள் எதுவுமே இல்லாததுமாதிரியாக இதுவரைக்கும் நீங்கள் சினிமாவில் காட்டியிருக்கிறீர்கள். அதையெல்லாம் அழித்துவிட்டு எங்கள் வாழ்க்கை இதுதான் என்று காண்பிக்கிறபொழுது இது தலித் வாழ்வியல் இல்லை என்று உங்களால் சுலபமாக கேள்வி கேட்க முடிகிறது என்று நினைக்கிறேன். நான் அங்கிருந்து வந்த காரணத்தினால், உண்மையாக, நேர்மையாகச் சொல்கிறேன் இதுதான் அங்கிருக்கிற வாழ்க்கை. இதிலும் பிரச்சனைகள் இருக்கு. மறுக்கல. இது இந்தப்படம். வேறொரு படம் எடுக்கின்ற பொழுது நாம் அந்தப்பிரச்சனைகளை நோக்கிப் பேசப்போகிறோம். இந்தக்கதையின் பாடுபொருள் என்ன என்பதுதான் நோக்கம். மேலும் கார்த்திக் வணிக சந்தையில் முன்னிலையில் இருக்கும் நடிகர் அவர் நடிப்பதின் மூலம், மேலும் நிறைய பேரை இக்கருத்து / இப்படம் சென்றடைய வாய்ப்பு உள்ளது. அதன்படிதான் மெட்ராஸ் அமைந்திருக்கிறது.

மராத்தியில் தோன்றி தமிழுக்கு வந்த தலித் இலக்கியங்களில் தலித் மக்களின் கலாச்சாரம், பண்பாடு, உணவுமுறை மற்றும் உள்ளார்ந்து அவர்களின் வாழ்க்கைமுறை சிக்கலை மையப்படுத்தி உருவாகிறது இலக்கியப்படைப்புகள், ஆனால் மிக வலிமையான கலை ஊடகமாக இருக்கும் சினிமாவில் இது சாத்தியப்படாமல், வணிகம் சார்ந்த ஹீரோயிசமும் சில வணிக துணுக்குகள் சார்ந்தே வெளிவரும் படங்கள் எப்படி தலித் மக்களின் மைய வாழ்வியலை பேசும் படமாக சொல்லமுடியும்?

இதுதான் என்று சொல்லி முற்றுப்புள்ளி வைக்கவில்லை. திரும்பவும், தலித் மக்களுக்கான விவாதத்தை குறிப்பிட்ட இடம் ஒன்றிலேயே வைக்கவேண்டுமா?, அல்லது விவாதத்தை அடுத்த தளத்திற்கு வெளியே கொண்டுபோக வேண்டுமா? என்று பார்க்க வேண்டும். இதுவரையிலும் எடுக்கப்பட்ட படங்கள் வெளியில் விவாதிக்கப்படவில்லை என்றால் அதற்காக என்ன சமரசங்கள் செய்யவேண்டுமோ அதைச்செய்கிறோம். சாதாரணமாக ஒரு குறும்படம் எடுக்கிறீர்கள். அந்தக் குறும்படத்தை உங்களால் முழுமையாக எடுத்துவிட முடிகிறதா? தயாரிப்பாளர் 2000 ரூபாய் கொடுப்பார். அந்தப்பணத்தில் நீங்கள் நினைத்த சினிமாவை எடுக்க முடியுமா? அப்பொழுது அந்தப்படத்திற்கும், பொருளாதார சம்பந்தமான விஷயங்களுக்கும் காம்ப்ரமைஸ் செய்வீர்கள். இங்கு வணிக ரீதியாக சில விஷயங்கள் அல்ல, பல விஷயங்கள் இருக்கிறது. சில விஷயங்கள் சமரசங்கள் செய்துதான் எடுக்க முடியும். அப்படித்தான் எடுக்கிறார்கள். நான் சமரசம் செய்துதான் எடுக்கிறேன். சமரசம் செய்யாமல் எடுக்கவும் முடியாது. ஒரு நேரடியான தலித் படத்தை தயாரிப்பாளரிடம் சொல்லி சம்மதம் வாங்கிவிட்டால் நீங்கள் பெரிய அதிர்ஷ்டசாலி என்று தான் சொல்வேன். அப்படி நடந்தால் எனக்கும் கூட சந்தோஷம்.

உங்களால் ஆட்டுக்கறி கடிப்பதை காட்சியாக வைக்க முடியும், மாட்டுக்கறிக்கு ஒரு காட்சி வைப்பதில் அவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது . மெட்ராஸ் மாதிரியான படங்கள் எல்லாம் முதல் அடிகள்தான். இதில் விமர்சனங்கள் இல்லையா? என்றால், எக்கச்சக்க விமர்சனம் எனக்கே இருக்கிறது. ஒரு படமாக பார்க்கின்ற பொழுது என்னென்ன தப்புகள் செய்திருக்கிறேன் என்பது எனக்குத்தெரிகிறது. நாம் இவ்வளவு தப்பு செய்திருக்கிறோம், இதனால் இப்படியான விமர்சனங்கள் வருகின்றன., என்று எனக்குத் தெரிகிறது. ஆனால் இது தலித் வாழ்க்கை இல்லை என்று நீங்கள் சொன்னால், நீங்கள் தலித் வாழ்க்கையை பார்க்கவில்லை என்றுதான் சொல்வேன். இந்தப் படத்தில் குறியீடுகளாகவே நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கிறேன். இதைப்பார்க்கின்றபொழுது கமர்ஷியல் சினிமாவாகவே இருந்தாலும் கூட, அந்தச் சுவரை சுவராகவே நீங்கள் பார்த்தால் அது உங்கள் பிரச்சனை. ஒரு சாதாரண ஆள் அதை சுவராகப் பார்ப்பதில் பிரச்சனைகிடையாது. ஆனால், படித்த விமர்சகராக இருக்கின்றவர்கள் அதனை வெறுமே சுவராகவே பார்த்தால் அது உன் பிரச்சனை. நான் அந்தச்சுவரை என்னவாகவெல்லாம் உருவகப்படுத்தியிருக்கிறேன் என்று எனக்குத் தெரியும், அப்பொழுது நான் அந்தச்சுவரை இப்படி வைத்திருக்கிறேன், இந்தக்காரணத்திற்காக வைத்திருக்கிறேன், என்று அந்தப்படத்தில் வசனங்கள் மூலமாகவோ காட்சிகள் மூலமாகவோ விளக்கிக்கொண்டேயிருந்தால் அது படமல்ல. நான் செய்திருப்பது Film Language. அதை நீங்கள் தான் புரிஞ்சுக்கணும். அதை நீங்கள் தான் தேடிப்போகணும், நான் ஒரு பார்வையில் படம் பண்ணியிருக்கிறேன், அதை உன்னால் தொடர்பு படுத்திப் பார்க்கமுடியவில்லை, இன்னொருவன் சரியாக தொடர்புபடுத்துகிறான் என்றால் அது அவரவரின் பார்வை. ஏன் அவனால், தொடர்புபடுத்த முடியவில்லை, ஏன் இன்னொருவனால் முடிந்தது என்றெல்லாம் வருகையில் நாம் அதனை நோக்கிப் போகவேண்டும். இது அந்தக்கதைக்கான நோக்கம்.

பின்னர் நாம் அடுத்த கதைக்கு என்னமாதிரியான கதைக்களம் என்பதை வைத்து, அதற்குத் தேவையான கருப்பொருட்களை வைத்து ப்படம் எடுக்கலாம் . உதாரணமாக ஒரு ஆக்‌ஷன் படம் என்றால், அதனுள் எந்தவிதமான நல்ல முயற்சிகளைச் செய்யவேண்டும் என்று பார்த்து அதனை நோக்கிப்போக வேண்டும்.

”அட்டக்கத்தி” படத்தில் மாட்டிறைச்சி சம்பந்தமான வசனங்களை வைத்திருக்கிறோம். ”மெட்ராஸ்”, படத்தில் தலித் வாழ்வியலையே முழுமையாக காட்டியிருக்கிறோம். அடுத்த படத்தில் இதைவிட என்ன விஷயங்களைப் பேச வேண்டுமென்று சிந்திக்கிற அதே வேளையில், வணிக சந்தையில் படம் வெற்றிபெற வேண்டும் என்கிற எண்ணமும் இருக்கிறது.


இந்தியா சாதியின் பிடியில் சிக்கி நாற்றமெடுக்கும் தேசமாக இருக்கிறது, தலித் மக்களின் விடுதலைக்கு எந்த அரசியல் பாதை நமக்கு தேவை என்று ஒரு படைப்பாளியாக கருதுகிறிர்கள்?

சாதி எதிர்ப்பையே பிராமண எதிர்ப்பாக மட்டுமே பார்க்கிறார்கள். முக்கியமாக தமிழகத்தில், பிராமண எதிர்ப்பாகத்தான் இருக்கிறதே தவிர, இதுவரைக்கும் சாதி ஒழிப்பை யாரும் முழுதாக புரிந்துகொள்ளவில்லை. இடைநிலைசாதிகள் தங்களின் சாதிய படிநிலைகளை தொடர்ந்து பாதுகாத்துக்கொண்டே வருகிறது. சாமி, சடங்குகள் என்று வருகின்ற நேரத்தில் இவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்துகொண்டு தலித்களுக்கு எதிராகப் பேசுகிறார்கள். பிராமணர்., பிராமணர் அல்லாதவர்களாகயிருந்த இயக்கங்கள் இன்று தலித்., தலித் அல்லாதவர்களாக மாறியிருக்கிறது. பொது சூழலில் நீங்கள் தலித் என்றால், உங்களுக்கு எதிராக சிலர் இருப்பார்கள் முக்கியமாக அவர்கள் இடைநிலைச் சாதிகளாகயிருக்கிறார்கள். பிராமணசமூகம் முற்றிலுமாக ஒதுங்கி ஒரு இடத்தில் இருக்கின்ற சூழலில், எல்லா இடங்களிலும் இருக்கின்ற சாதியினராக இடைநிலைச் சாதியினரே இருக்கின்றனர்.

பின்னர் இவர்கள் சாதி எதிர்ப்பை எப்படி புரிந்துகொள்கிறார்கள், என்று பார்க்கிறபொழுது சிக்கலான கேள்வி வருகிறது. அப்படியெனில் சாதிய எதிர்ப்பு என்பது வெறும் பிராமண/ பிராமணீய எதிர்ப்பு மட்டும்தானா? அல்லது நமக்குள்ளிருக்கும் சாதியை ஒழிப்பதா? என்பது முக்கியமான கேள்வியாக இருக்கிறது. அதை நோக்கி நாம் பயணமாகவேண்டும். இங்கிருக்கின்ற மக்களும், நாமும் இதனை ஒரு விவாதப்பொருளாக மாற்றி அதனை கொண்டுசெல்ல வேண்டும். ஆனால் இது நடப்பதாகவே தெரியவில்லை. அதுவும் தமிழ்சூழலில் மிகவும் மோசமான ஒன்றாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் தர்மபுரி சம்பவத்தை ஒட்டிநிகழ்ந்த சம்பவங்களை கொஞ்சம் நினைவு கூர்ந்துபார்த்தால் தெரியும்.

அதற்குப்பின்பாக அனைத்து சமுதாயக்கூட்டம் என்று நடத்துகிறார்கள். அதில் தலித் சமூகம் இல்லை. இந்தச்சமூகம் இல்லாமலேயே ’அனைத்து சமுதாயக்கூட்டம்’, என்ற பெயர் எப்படி பொருந்தும். அங்கு பேசப்படுகின்ற விஷயங்களையும் நீங்கள் பார்க்க வேண்டும். அனைவரும் தலித் மக்களைத்தான் திட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு தலைவரும் திட்டுகிறார்கள். ஒவ்வொருவரும் பேசுகின்ற பொழுது தலித்களிடமிருந்து தங்கள் பெண்களைப் பாதுகாக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். தலித்களுக்கு அவர்கள் பெண்கள் பின்னால் சுற்றுவதைத் தவிர வேறு வேலையே இல்லையா?. அவ்வளவு மோசம். தமிழ்சூழலில் சாதி ஒரு பயங்கரவாதத்தை நோக்கி நகர்ந்துகொண்டேயிருக்கிறது. இதை இளைஞர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பள்ளிக்கூடங்களில் நடக்கின்ற சாதியப்பிரச்சனை அதிகமாகவே இருக்கின்றது. தென்மாவட்டங்களில் வகுப்பறைக்குள் தங்கள் கைகளில் கயிறுகளை கட்டிவைத்து எவன் என்ன சாதி என்று பிரிக்கிறார்கள். பசங்களே குழுகுழுவாக பிரிந்திருக்கிறார்கள். எட்டாம் வகுப்பிலிருந்தே சண்டை நடக்கிறது. அங்கிருக்கின்ற ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால், துப்புரவுத்தொழிலாளர்களின் குழந்தைகளை அழைத்து வந்து , நீங்கள்தான் அந்த கழிப்பறையை சுத்தம் செய்ய வேண்டும் என்று சுத்தம் பண்ண வைத்திருக்கிறார்கள். தலித்கள் தொடர்ந்து சாதி எதிர்ப்பைப்பற்றி பேசினாலும், அவர்களுக்குள்ளே இருக்கிற சாதி உட்பிரிவுகளைப் பற்றியும் பேச வேண்டும். இந்திய சமூகத்திற்கு சாதியும், மதமும் மிகப்பெரிய தடையாகத்தான் இருக்கிறது.

முன்பெல்லாம் படித்துவிட்டால் இந்தப்பிரச்சனை தீர்ந்துவிடும் என்று சொல்வார்கள். ஆனால், இன்று படித்துவிட்ட பின்புதான் நவீன தீண்டாமை அதிகமாயிருக்கிறது. வலைத்தளங்களில் இது இன்னமும் மோசம். எனக்கு ஒரு செய்தி வந்திருந்தது. “உன் சாதிய உயர்த்தி படம் எடுத்துக்கோ, அதற்காக என் சாதியைப்பத்தி தாழ்த்திப்பேசினா உன்னைக் கொன்னுருவேன்” என்று சொல்கிறான். அவனது பார்வையிலிருந்து இது யாருக்கான படம் என்பது மிகவும் தெளிவாகிறது.

இவர்கள் எல்லாரும், ஈழம் சம்பந்தமாகவும், தமிழ் சம்பந்தமாகவும் பேசக்கூடிய முற்போக்குச் ஆதரவு ஆட்களாகவும் இருகிறார்கள், சிந்தனையுணர்வு கொண்டவர்களாகவும் இருகிறார்கள், ஆனால், அவர்கள், சாதி என்று வருகிறபொழுது மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொள்கிறார்கள். எப்போது இது மாறும் என்பது தெரியவில்லை.

முதலில் நமது காழ்ப்புணர்ச்சியை விலக்கிவைத்து ஒன்றிணைய வேண்டும் , அம்பேத்கர் சொல்கிற அரசியல் கல்வியைப் பெற வேண்டும் என நினைக்கிறேன். நமக்கு சமூகக்கல்வி தேவை. நம்மை யார் சூத்திரர் என்றும், தாழ்த்தப்பட்டவர், பிராமணர், சத்திரியர் என்றும் பிரித்தது என்பதைப்பற்றிய கல்வியை ஆரம்பக்கட்டத்திலேயே கொடுக்க வேண்டும். குழந்தைகளிடம் இதைப்பற்றி நாம் விவாதிப்பதே கிடையாது. இந்தக்குழந்தைகள்தான் வளர்ந்தபின்பு தனித்தனி இனக்குழுக்களாக பிரிந்து நிற்கிறார்கள். எல்லோரும் ஒன்று சேர்ந்துதான் இதனை மாற்றவேண்டும்.

இங்கு சமரசம் செய்துகொண்டுதான் படம் எடுக்க முடிந்த சூழல் இருக்கின்றது. என்றுசொல்கிறீர்கள். ஆனால், ஒரு படைப்பாளியாக சமரசம் செய்யப்படாத படங்கள் எடுக்கவேண்டிய தேவையிருக்கிறதே. தமிழ்சினிமாவில் இருக்கக்கூடிய இளம் இயக்குனர்களாகிய நீங்கள் ஏன் இதனையெல்லாம் முன்னெடுக்க கூடாது என்று நினைக்கிறீர்கள்?

இங்கு சமரசத்திற்கெதிரான போராட்டங்கள் இல்லை என்று நினைக்கிறீர்களா?

ஆனால் கமர்ஷியல் சார்ந்துதானே இயங்குகிறீர்கள்?

இங்கு கமர்ஷியல் என்று எதைக்குறிப்பிடுகிறீர்கள்?. செய்யப்படுகின்ற பொருள் விற்பனைத்தளத்திற்குப் போகிறது. ஒரு பானை செய்கிறீர்கள். எந்த ஒரு கலைப்படைப்பாக இருந்தாலும், அதனை ஒரு பத்து பேருக்கு கொண்டுபோய்ச்சேர்க்க நினைக்கிறோம். அங்கு கலை சார்ந்து, படைப்பு சார்ந்து நேர்மையாக இருக்கிறோமா? என்பதுதான் எனக்கு நானே கேட்கக்கூடிய கேள்வி. ஆனால், நேர்மை இங்கு பொதுவாகவே கம்மியாகத்தான் இருக்கிறது, ஆகவே நாம் அதை நோக்கித்தான் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறோம். அதற்காக தீவிரமான படங்கள் எடுக்கக்கூடாது என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. அப்படியான படங்களும் வரவேண்டும், அதனை நோக்கித்தான் நாம் செல்லவேண்டும் என்று நினைக்கிறேன்.

மதுரை சம்பந்தமான காட்சிகளை வைத்துக்கொண்டு, அதனைபின்னணியாக வைத்து ஒரு படம் இயக்கினால், அதில் என்னமாதிரியான ஒரு சாதிப்பின்னணி வந்திருக்கின்றது என்று யாரும் பார்ப்பதில்லை, ஜாலியாக, அனைவரும் படம் பார்த்துவிட்டு அதனை வெற்றிபெற வைக்கின்றனர். அதை ஒரு பொதுசினிமாவாக எடுத்துக்கொள்கிறார்கள்.

”மெட்ராஸ்”, படத்தை மட்டும் தலித் படம், என்றும், தலித்படம் இல்லை என்றும் பேசுகிறார்கள். இதுவும் ஒரு பொதுசினிமாதான். பொதுசினிமாவில் தலித் வாழ்வியலைப் பேசியிருக்கிறோம். அவ்வளவுதான். இது வணிகரீதியாக ஒரு முதல் வெற்றி அடைந்திருக்கிறது. ’அட்டக்கத்தி’, பரவலாக அங்கீகரிக்கப்பட்ட படம். மெட்ராஸ் பெருவெற்றி பெற்ற படமாக மாறியிருக்கிறது.

’நண்பன்’ வெற்றிபெற்ற படம். அதில் கருப்பாக இருக்கின்ற முதிர்கன்னியை அசிங்கப்படுத்துவது போல காட்சி வைத்திருக்கிறார்கள். ’அட பண்டாரப் பயலுகளா” என்று வெளிப்படையாக குறிப்பிட்ட சாதியைத் திட்டுவது போல அந்தப்படத்தில் இருக்கிறது. இதைவிட ’பாரி வேந்தன், பூரி வேந்தன்’ என்று தமிழ் மன்னர்களை கொச்சைப்படுத்துவதுபோல காட்சி வைத்திருக்கிறார்கள். இதையெல்லாம் யாருமே கேட்கவில்லை.

ஆக ”மெட்ராஸ்”, வணிகப்படமா?, கலைப்படமா? என்பதை நீங்கள் தீர்மானிக்கிறீர்கள். நான் அதற்குள் போகவேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். இது வணிகப்படம் இல்லை, என்று சொன்னாலும் பிரச்சனையில்லை, கலைப்படம் என்று சொன்னாலும் எனக்குப் பிரச்சனையில்லை. நான் மக்களுக்கான சினிமா எடுக்கவேண்டும் என்று நினைத்தேன் அதைச்செய்திருக்கிறேன்.

நான் என் நண்பர்கள் பத்து பேரை ”மெட்ராஸ்” படத்திற்கு அழைத்துச்சென்றிருந்தேன். அவர்கள் வடசென்னையைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களுக்கு படம் பிடித்திருக்கிறது. ஆனால் அவர்கள் சொன்னது, வடசென்னையில் இன்னமும் நிறையபிரச்சனைகள் பேசப்படாமல் இருக்கிறது. இங்கு சொல்லப்படுகின்ற சுவர் பிரச்சனை தேனாம்பேட்டையில் கூ ட இருக்கின்றது. இதற்கு எதற்காக வடசென்னையைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று கேட்டார்கள்?

இது வெறும் சுவர் பிரச்சனை என்று நினைத்தால். நாம் என்ன செய்வது? எல்லாப் பிரச்சனைகளும் எல்லா இடங்களிலும் உண்டு. ஒரு படம் அதன் உள்ளடக்கம், சுற்று புறம் சார்ந்து கதையின் பேசு பொருள் சேரும் போது கதையாசிரியர் நினைக்கும் சில வினைகளை தோற்றுவிக்க முடியும் என்று நினைக்கிறான் அதை இப்படம் குறிப்பிட்ட இந்த இடத்தினை சுற்றுப்புறமாக கொண்டு இயங்குவதால் தான் உரையாடல்களை ஏற்படுத்தியதாக நான் நினைக்கிறேன்.

படத்தின் இடைவேளைக்கு முன்பாக, காளி, பெருமாளை அடிக்கின்ற பொழுது ஒட்டுமொத்த தியேட்டரும் பரவசத்திற்கு உள்ளாகிறதே?. அந்தக்காட்சி வேணுமென்றே வைக்கப்பட்டது போன்று வன்மம் நிறைந்த ஹீரோயிசமாக இருக்க காரணம்?

என்னுடைய ஸ்கிரிப்டில் அது கிடையாது. எதேச்சையாக நடந்த விஷயம் தான் இது. ஹீரோயிசம் நோக்கம் கிடையாது. காளியின் முன்கோபம் அவனது கதாபாத்திர வடிவமைப்பிலேயே இருந்திருக்கும். அந்த ஷாட்டும் சுவருக்குப்பக்கத்திலேயேதான் முடியும். அந்தச்சுவருக்குப்பக்கத்தில் தான் இந்தச்சம்பவமும் நடக்கிறது என்று சொல்வது தானே தவிர, ஹீரோயிசம் காட்டுவதற்காக இல்லை. உண்மையாக அந்தக்காட்சியில் நான், காளி மேல் பரிதாபம் உண்டாகும் என்று எதிர்பார்த்தேன். தியேட்டரில் ரசிகர்கள் கத்துவதைப்பார்த்து எனக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது

காளி எல்லா ஆட்களையும் அடித்து, சண்டைகளில் ஈடுபட்டு, இறுதிக்காட்சியில் பார்த்தால் அவனை சமூகம் சார்ந்த செயல்களில் ஈடுபடுவதாக காட்டுகிறீர்கள். பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கிறார். இது எல்லா படங்களிலும் வருகின்ற வழக்கமான மெஸேஜ் போல ஆகிவிடாதா?

வன்முறை என்பது ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு மாதிரியான விமர்சனம் இருக்கிறது. அதிகார வர்க்கத்திற்கு எதிராக சண்டை போடுவது வன்முறை என்று சொன்னால், அது வன்முறைதான்., வேறு வழியே கிடையாது. பிரபாகரன் இலங்கைக்கு எதிராகச் செயல்பட்டது வன்முறையா? அது ஒரு போர், ஒரு போராட்டம்.

’காளி ’,கதாபாத்திரம் வெளிப்படையாக ஏதும் சொல்லமாட்டானாயினும் , அவனுக்குள் இது சார்ந்த செயல்பாடுகள் இருக்கவே செய்யும். சிறு மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டேயிருக்கும். அவனின் கையில் ”தீண்டாத வசந்தம்”, நாவலை வைத்திருப்பான், உணர்ச்சிவசப்பட்ட அரசியல் வேண்டாம் என்று சொல்லக்கூடிய ஒரு ஆளாகத்தான் அவன் இருக்கிறான். நம்மை எல்லாம் இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று சொல்லக்கூடிய ஆளாகத்தான் காளி இருப்பான். பின்னர் கோபம் காரணமாக அவன் வாழ்க்கை மாறுகிறது. அதில் அவன் வெற்றிகண்டவுடன், சமூகம் சார்ந்த செயல்பாடுகளுக்கு வருகின்றான். வன்முறையைக் கையாண்டவன் இதுமாதிரியான கல்விசெயல்பாடுகள் சார்ந்த செயல்களில் ஈடுபடக்கூடாது என்று யார் சொன்னது ?

நீங்கள் ’சே குவேரா’, பற்றி என்ன நினைக்கிறீர்கள்?. அவரை சமூகத்திற்காக மிகப்பெரிய போரை நிகழ்த்தி முடித்தபின்பு அமைச்சரவைப்பதவியில் உட்கார வைக்கிறார்கள். அவர் போர்கொள்வதை மீறியும், சமூகத்திற்கான அக்கறை அந்தப்போரில் இருக்கிறது. அந்த அக்கறையின் வெளிப்பாடுதான் அவரை அமைச்சகம் நோக்கி அழைத்துச்செல்கிறது.

படத்தில் அந்தச்சுவரில் பெயிண்ட் ஊற்றப்படுகின்ற பொழுதே அங்கு படம் முடிந்துவிட்டது போலத்தோன்றுகிறது. மேலும், அங்கேயே முடித்திருந்தால், மக்களை நோக்கி சிந்திக்கத்தூண்டும் க்ளைமேக்ஸாக இருந்திருக்க வாய்ப்புண்டு. பின்பு ஏன் அதனை நீட்டிக்க வேண்டும். ?

கதை, கதையின் நோக்கம்தான் அதனை தீர்மானிக்கிறது. நீங்கள் சொன்னதுபோல அங்கேயே கூட படத்தை முடித்திருக்கலாம். எனக்கும் கூட தோன்றியது.

உங்கள் படத்தில் ’செங்கன்’, என்கிற கதாபாத்திரம் மட்டும்தான் அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் காத்திரமாக ஈடுபடுபவராக இருக்கிறார். உடன் வருகின்ற அன்பு , காளி கதாபாத்திரங்கள் எல்லாமே நட்பு சார்ந்து பயணப்படுகிறதே தவிர அவர்களிடம் அரசியல் நிலைப்பாடுகள் குறைவாகவே இருக்கிறதே ஏன்? நட்பிற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு, அரசியல் சார்ந்த பிரச்சனைகள் பேசப்படாத மாதிரியாக உள்ளது?

எங்கள் ஊரில் என் அண்ணன், அரசியல் சார்ந்த வேலைகளில் தான் இருக்கிறார். ஆனால், வீட்டில் இருக்கின்ற அண்ணனை எனக்குத்தெரியும். அண்ணியுடன் பேசுவார். குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச்செல்வார். அவருக்கு நண்பர்களும் இருக்கிறார்கள். நண்பர்களுடன் அவர் எப்படிப் பழகுகிறார் என்பதும் இருக்கிறது. வாழ்க்கையோடு சேர்ந்து ஒரு அரசியல் தன்மையைக் காட்டுவதுதான் என் நோக்கமே.

அவர்களின் வாழ்க்கைக்குள் பாசம், காதல், நட்பு எல்லாமே இருக்கிறது. வெகுஜனத்திற்கு எதிராக ஒரு படம் பண்ணுகிறபொழுது, அவர்களை எப்படி இதில் கலந்துரையாட வைப்பது என்றுதான் யோசிக்கவேண்டும்.அவர்கள் பேசுகிற அரசியல் உனக்கு எதிராக இருக்கிறது. உனக்கு எதிராக இருக்கிற விஷயத்தை படம் முழுவதிலும் பேசினால் நீ உட்கார்ந்து பார்ப்பாயா? இது ஒரு வகையான தந்திரம்தான். பொதுசனங்களில் சாதியை எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள் அவர்களையும் என் படத்தினுள் கொண்டுவரவேண்டும்.
இப்பவெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்?

இவர்களுக்கு வேறு வேலையே இல்லை?

என்று சொல்கிறவர்கள் பொதுசனத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கு எதிராகத்தான் நாங்கள் படத்தில் பேசியாக வேண்டும். அப்பொழுது எப்படி அவர்களை படம் பார்க்க வைப்பீர்கள். அவர்களிடம் எப்படி நீங்கள் சொல்ல நினைத்த விஷயத்தைக் கொண்டு சேர்ப்பீர்கள். அவர்கள் படத்திற்கு வெளியில் இருக்கிறார்கள், அவர்கள் வெளியில் இருக்க கூடாது, அவர்களைக் கூட அழைத்து அவனையும் உட்காரவைத்துத்தான் பேசவேண்டும்., அதற்கு என்ன செய்ய வேண்டும்.? ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கிறது. ஃபான்றி படம் பண்ணினால் அவர் படத்திற்கு ஒரு நோக்கம் இருக்கிறது.

நீங்கள் நினைத்ததுபோல உங்கள் படம் பரவலாக அனைவராலும், பாராட்டப்பட்டு வருகிறது அதைக்குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

ஆமாம், படம் சார்ந்த விவாதம் உண்டாகியிருக்கின்றது. படைப்பாளியாக இதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

சமூக வலைத்தளங்களில் கூறப்படும் கருத்துகள் அல்லது சமூக வலைத்தளங்கள் ஒரு படம் வெற்றியாக பெரிதும் உதவுகிறதா?

முதலில் அங்கு பகிரப்படுகின்ற கருத்துக்களைப்பற்றிக்கூறவேண்டுமானால், நான் ஒரு படைப்பாளி, அங்கு படைப்புச் சார்ந்த விமர்சனங்களை முன்வைக்கலாம். அதற்கு கருத்தியல் ரீதியாக பதில் சொல்லவும் கூடும். இது வரவேற்கத்தக்கது. ஆனால், சில சமயம் அது படைப்பின்மீதான விமர்சனமாக அல்லாமல், படைப்பாளியின் மீதான தனிநபர் தாக்குதலாக ஆகிவிடுகிறது. இது தவறு. இது சினிமாவிற்கு சாதகமாகவும் இருக்கிறது, அதே சமயம் பாதகமாகவும் இருக்கிறது. இதில் இன்னொன்று, நல்லாயில்லை என்று சொன்ன படங்கள் கூட வெற்றிகரமாக ஓடுகிறது உண்டு. படத்தின் வெற்றி தோல்வியை சமூக வலைத்தளங்கள் தீர்மானிக்கிறதா? என்றால் அப்படி கிடையாது.

ஓவியமும், சினிமாவும்?

கிட்டத்தட்ட ஓவியமும் சினிமாவும் ஒன்றுதான் என்று நினைக்கிறேன். வடிவங்கள்தான் மாறுமே தவிர க்ராப்ஃ ட், கலை எல்லாமே ஒன்றுதான்.

மாற்றுசினிமாவை எப்படி அணுகுகிறீர்கள்?

மாற்றுசினிமா என்பது பார்வையாளர்களை நோக்கிய சினிமாவாக இருக்க வேண்டும். பார்வையாளர்களை ஒதுக்குகிற சினிமாவாக இருக்கக்கூடாது.நான் படித்த புத்தகத்தில் , தோழர் ம சே துங் சொல்கிறார்,

சினிமா என்பது, உன்னுடைய கலை. அது யாருக்கானதாக இருக்க வேண்டுமானால்,

உன்னுடைய எதிரிகள், உன்னுடைய நேசர்கள், நான், என்று சொல்லப்படுகிறது. மிக முக்கியமானது.

இவர்களை மீறி யாரிடமும் கலையை கொண்டுபோய்ச்சேர்க்க முடியாது.

உங்களுடய எதிரிகளிடம் எப்படி கொண்டுபோய்ச்சேர்க்க முடியும் என்றால், எதிரிகள் உன்னை விட பலம் வாய்ந்தவர்களாக இருக்கலாம், அவன் துப்பாக்கி வைத்திருக்கலாம். அதையெல்லாம் பார்த்துவிட்டு பின்வாங்கிவிட முடியாது. அவனை நீ எதிர்க்கவேண்டுமானால், அவனிடம் இருப்பதுபோன்ற பலம் வாய்ந்த துப்பாக்கியை நீயும் வைத்திருக்க வேண்டும். அவனுக்கு சம அளவு பலமாக நீ உருவாகவேண்டும்.

உன்னுடைய நேசர்கள் சம்பந்தமாக பேசுகின்றபொழுது, உன்னுடைய நேசர்கள் யார்? என்ற கேள்வி இருக்கிறது. உன்னைக் கொண்டாடுகிறவனா? உண்மையிலேயே உன்னை விமர்சனம் பண்ணுகிறவனா? யாரைத்தேர்ந்தெடுக்கிறாய் என்ற ஒன்று இருக்கிறது. விமர்சனம் பண்ணுகிறவர்களை ஏற்றுக்கொள்.

பின்பு மக்கள்.

”உன்னுடைய சினிமா யாருக்கானது ?, கதை யாருக்கானது?, மக்களுக்கானது. அப்படியெனில் மக்களிடம் போ”, என்கிறார்கள். மக்கள் என்ன யோசிக்கிறார்கள்?, மக்களுக்கு என்ன பிடிக்கும்?, மக்கள் என்ன கேட்கிறார்கள்? என்பதை அவர்களிடமிருந்து கேட்டுத்தெரிந்துகொள்” என்று சொல்லப்படுகிறது. மக்களுடன் சேர்ந்து வாழ பழகிக்கொள். அப்பொழுதுதான் மக்களுக்கு என்ன பிடிக்கும், பிடிக்கவில்லை என்பது தெரியும் என்று சொல்கிறார்.

அப்படியெனில் மாற்றுசினிமா என்பது மக்களுக்கான சினிமாவாக மாறவேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு சின்னகுழு மட்டும் பார்ப்பதற்கு சினிமா எடுப்பது, மாற்று சினிமா என்றால் எனக்கு உடன்பாடு கிடையாது.

மக்களை நீங்கள் சாதாரணமாக சொல்ல முடியாது. அவர்களுக்கு எல்லாமாதிரியான சினிமாவும் புரிகிறது. ’சதுரங்கவேட்டை’, ஓடுகிற சமயத்தில் ’அரண்மனை’ படம் ஓடுகின்றது. ’அரண்மனை’ நன்றாக ஓடுகின்ற பொழுது ’மெட்ராஸ்’ படமும் ஓடுகின்றது. இன்றைக்கு “ ஜீவா ”படமும் வெற்றிபெற்ற ஒரு படமாக இருக்கின்றது. அவங்களுக்கு மெட்ராஸ், ஜீவா, அரண்மனை என எல்லாமே பிடிக்கிறதென்றால் பிரச்சனை அவர்களிடம் கிடையாது, நம்மிடம்தான். நமக்கான சினிமாவை அவர்களின் ரசனை அடிப்படையில் கொண்டுசெல்ல வேண்டும். மாறாக, அவர்களை முற்றிலுமாக நிராகரித்துவிட்டு எடுக்கின்ற சினிமாவை மாற்றுசினிமா என்று சொல்வதில் உடன்பாடில்லை.

ப்ரான்சில் ஒரு மாற்றுசினிமா எடுக்கிறார்கள் என்றால், பிரான்சின் வரலாறு வாழ்கை சார்ந்த ஒன்று. ப்ரான்சின் புதிய அலை இயக்குனர்களுக்கு ஒரு வரலாறு இருக்கிறது. அந்த மாதிரியான அமைப்பு இங்கு தோன்றியதா என்றால், இதுவரை தோன்றியதே இல்லை. உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்படுகின்ற எல்லா படங்களுமே அங்கு வெளியாகின்ற பத்து சினிமாக்களில் ஒரு சினிமா மட்டுமே. மீதி எட்டு சினிமாக்கள் எப்படி இருக்கிறது என்பதை அங்குபோய்தான் பார்க்கவேண்டும். இங்கு ம் மாற்றுசினிமா தோன்றினால், நம்முடைய கலாச்சாரம் சார்ந்து, பண்பாடு சார்ந்து, மக்கள் சார்ந்து வெளிவருவதுதான் மாற்றுசினிமாவாக இருக்க முடியும். நமது பாரம்பரிய கூத்து வடிவத்தில் எல்லாமாதிரியான க்ராஃப்டும் இருக்கிறது. நமது சினிமாவும் அப்படிதான், உலகசினிமாவில் பண்ணுகிற அதே மாற்று சினிமாவை, நம் மண்ணிலும் செய்தால் அது மாற்றுசினிமாவாக இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

மாற்றுசினிமா தனித்த சினிமாவாக இல்லாமல், மக்களின் சினிமாவாக இருக்கவேண்டும். கமர்சியல் சினிமா ஓடிக்கொண்டிருந்த தியேட்டர்களில் இந்த மாதிரியான படங்களும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனை நல்ல முயற்சியாகத்தான் பார்க்கிறேன். இவைகள் நீங்கள் சொல்கிற எதிர்பார்க்கிற மாற்று சினிமாவாக மாற்றம்பெரும்

மதுபானக்கடை போன்ற படங்கள் வெளியாகின்றது. இங்கு புதிய அலை என்று சொல்லப்படுகின்ற மாற்றத்திற்கான சினிமாவாக இது மாறிக்கொண்டிருக்கிறது என்று சொல்கிறேன். அதற்கான முயற்சிகளை இளைஞர்கள் சிலர் முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். நானும்.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: htt://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </