தயாரிப்பாளர் ஜே. சதிஷ்குமார் (JSK) - நேர்காணல்:
மாற்றுப்படங்கள் வரும்போது கண்டிப்பாக ஆதரிப்பேன்
உங்களைப் பற்றிய அறிமுகம்? நீங்கள் சினிமாவில் தயாரிப்பாளராக வருவதற்கான காரணம்??
சினிமாவில் வருவதற்கு முன்பு நான் நிறைய கற்றுக்கொள்ளவேண்டி இருந்தது. இன்று திரைப்படத்தை எளிமையாக எடுத்துவிடலாம் ஆனால் வெளியிடுவது மிகவும் சிரமமான விஷயம். ஆதலால் முதலில் தயாரிப்பு நிர்வாகத்திற்குள் வருவதற்கு பதில் Distributionல் நுழைந்தேன். பழக்கமான பகுதிகளான செங்கல்பட்டு, வட ஆற்காடு போன்ற பகுதிகளில் சிறிய முதலீட்டு படங்களை விநியோகம் செய்ய ஆரம்பித்தேன். படிப்படியாக பகுதிகளை விரிவுபடுத்தி தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை கவனித்தோம். மினிமம் கேரன்டி, வெளியிடும் முறை போன்ற விஷயங்களை முழுமையாக தெரிந்துகொண்டோம். அடுத்து தியேட்டர் உரிமை மட்டும் இல்லாமல் நெகடிவ் ரைட்ஸ் வாங்கவும் முனைந்தோம். வெளியிடும் உரிமை பெற்றால் குறிப்பிட்ட ரைட்ஸ் மட்டும் தான் நமக்கு கிடைக்கும், நெகடிவ் ரைட்ஸ் வாங்கும்போது FMS, குறுந்தகடு, ஆடியோ ரைட்ஸ் என அனைத்தையும் நம்மால் பெற்று வெளியிட முடிந்தது. இந்த மாதிரி நான் ரிவேர்ஸ்ஆக இருந்துதான் சினிமாவைக் கற்றுகொண்டேன். மற்றவர்கள் தயாரிப்பதில் ஆரம்பித்து வெளியிடும் முறைக்கு வருவார்கள் நான் முதலில் திரைப்படங்களை வெளியிட்டுப் பிறகு சினிமா தயாரிக்கும் பக்கம் வந்தேன்.
|
இப்படியாக படிப்படியாக உயர்ந்து 2012 இல் முழுமையாக திரைத்துறையில் இறங்கினேன். முதலில் ”ஆரோகணம்” திரைப்படத்தின் நெகடிவ் வாங்கி வெளியிட்டேன். விமர்சன ரீதியாக அந்த திரைப்படம் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது, வியாபாரமாகவும் எனக்கு அது லாபரகரமாக அமைந்தது. அதன் பிறகு ”நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்”. இந்த திரைப்படம் அனைத்து பகுதிகளிலும் வெற்றியடைந்த திரைப்படம், அதற்கு பிறகு ”பரதேசி” பண்ணினேன், ”தங்கமீன்கள்” திரைப்படம் பாதி தயாரிப்பையும் வெளியிடும் உரிமையும் பெற்று அது தேசிய விருது வரைக்கும் கொண்டு சென்றது. ”இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” எனது சொந்த தயாரிப்பாக, ”மதயானைக் கூட்டம்”, ”ரம்மி”, ”ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்” போன்ற படங்கள் எடுத்தேன், இப்பொழுது வரை தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
தயாரிப்பாளராக உங்களைக் கவரும் கதைக்களம் என்ன?? உங்களைத் தேடிவருகின்ற ஒவ்வொரு ஸ்கிரிப்டையும் படித்துப்பார்ப்பீர்களா?
முதலில் நான் ப்ளாட்(Plot) தேர்வு செய்வேன். இன்றைக்கு சினிமா மாறிவிட்டது மசாலா சினிமா இல்லாத கன்டென்ட் சார்ந்த படங்கள் மட்டுமே வெற்றியடைகின்றன. நான் ஒரு குறிக்கோளை நோக்கி சென்றுகொண்டிருக்கிறேன். நாளைக்கு JSK திரைப்படங்கள் சினிமாவின் நூலகமாக இருக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் எங்களது படங்களைப் பார்த்து கற்றுக்கொள்ளும் படியாக இருக்க வேண்டும். நாமே அதை திரும்பத் திரும்ப பார்க்கும்படியான திரைப்படமாக இருக்க வேண்டும்., கன்டென்ட் சார்ந்து இருக்க வேண்டும். அந்த நோக்கத்தோடுதான் கதைகளை கேட்கத் தொடங்குவேன். வருபவர்கள் அனைவரிடமும் நான் திரைக்கதை புத்தகத்தை வாங்கி படிப்பது கிடையாது. முதலில் ப்ளாட் என்ன என்பதை கேட்பேன், பிறகு அந்தக் கதையின் out line என்ன என்பதையும், அந்தக்கதையின் பாத்திரங்களின் வடிவம், கதை செல்லும் பாதை, இடைவெளி திருப்பங்கள் போன்றவற்றின் வடிவத்தை புரிந்துகொண்டு அந்த வடிவம் என்னை திருப்தி செய்தால் பிறகு அந்த திரைக்கதை புத்தகத்தை பெற்றுக்கொண்டு, திரைக்கதையை முழுவதும் படித்துப் பார்த்து பிறகு மற்ற வேலைகளை தொடர்வேன். அனைவரிடமும் கதைகளை கேட்பதில்லை.
வணிகம் – கதை தேர்வு இதற்க்கான இடைவெளி என்ன?
இன்றைய சூழலில் கலையில் தான் வணிகம் இருக்கிறது. வணிகத்திலிருந்து கலைக்குள் வர முடியாது. சினிமா என்ற கலையை மனதிற்கு பிடித்த, அதற்கான வடிவமும், சரியான திட்டமிடலோடு இருந்தாலே அது வியாபாரம் ஆகிவிடும். ”ஆரோகணம்” திரைப்படம் வெறும் முப்பத்தி ஐந்து லட்ச்சத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம், பெண் இயக்குனரால் எடுக்கப்பட்டது தமிழில் முகம் தெரியக்கூடிய அளவில் அமைந்த திரைப்படம். இந்த திரைப்படத்தை எந்த அளவிற்கு வணிக ரீதியாக வெளியிட முடியும் என்று பார்த்தால் அந்த முப்பத்தி ஐந்து லட்ச திரைப்படத்திற்கென்று ஒரு அளவு இருக்கிறது.
முப்பத்தி ஐந்து லட்ச ரூபாய் திரைப்படத்திற்கு மேலும் முப்பத்தி ஐந்து லட்சம் செலவு செய்து வெளியிடும் பொழுது நமது குறிக்கோள் எழுபது லட்சம் அதுவே போதுமானது. முப்பத்தி ஐந்து லட்சத்தில் படம் எடுத்து நான் ஒன்னரை கோடியில் படமெடுத்து இருக்கிறேன் என விளம்பரம் செய்து, அதனை நாலு கோடிக்கு வியாபாரம் செய்யும் போது தவறாக முடிந்துவிடும். நம்முடைய முதலீடுக்கு தகுந்தாற்போல அளவுகளை சரிசெய்து கொள்ளும் போது வணிக ரீதியாக வெற்றி அடையலாம். இப்படியாகத்தான் நான் வணிகத்தையும் கலையையும் பார்க்கிறேன்.
உலக அளவில் பல விஷயங்களை மையமாக கொண்டு திரைப்படங்கள் வந்துகொண்டிருகின்றன, இதில் உங்களுடைய படைப்பு எப்படி தனித்துவம் வாய்ந்தது என தீர்மானம் செய்கின்றீர்கள்.?
தேர்வு செய்யும் கன்டென்ட் பொறுத்துதான் மாறுபடுகிறது. அதனை திரைக்கதை அமைக்கும் முறை, present செய்யும் விதம் தான் வித்தியாசம். நான் இதனை சந்தோஷமாக நான் வெளிப்படுத்திக் கொள்ளலாம். நான் கொண்டுவந்த திரைப்படங்கள் யாவும் ஒரே மாதிரியாக இருக்காது, ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கதைக்களம். இது வரையில் நான் தயாரித்த திரைப்படங்கள் எதுவும் ஒரே மாதிரியான சாயலில் இருக்காது..
என்னுடைய படங்களைப் பார்க்கும் பொழுது அனைத்தும் வேறு மாதிரியான form இல் தான் இருக்கும் படத்தொகுப்பு வரிசை முதல் அதன் வேறுபாடு தெரியும். பரதேசி, பாலாவின் சுதந்திரத்தில் வந்த படம், அதன் காப்பி மட்டும் நான் வாங்கியது. தங்கமீன்கள் வேறு விதமாக இருக்கும்.
”குற்றம் கடிதல்”, ”தங்கமீன்கள்” திரைப்படங்கள் விருதுகள் பெறும் என நினைத்துதான் தயாரிக்க முன் வந்தீர்களா?? உங்களுக்கு விருதுகள் மீது உள்ள விருப்பம்தான் காரணமா? அல்லது கதைக் கருவின் மீது உள்ள நம்பிக்கையா?
என்னுடைய தயாரிப்புகளை நோக்கும் பொழுது, அதாவது ”ஆரோகணம்” திரைப்படத்தினை பார்க்கும் போது women welfare சார்ந்த களம். படத்தில் ஒரு நடுத்தரம் அல்லாத மிகவும் ஏழ்மையான சூழலில் வாழும் ஒரு பெண், அவளுக்கு வந்த ஒரு நோய், அந்த நோயின் ஆதிக்கம், அவளை பாதிக்கும் விதம், சமூதாயத்தால் எப்படி மாற்றப்படுகிறாள், என்பதை பற்றிய திரைப்படம். ஒன்னரை மணி நேர திரைப்படம் தான். இந்த திரைபடத்தில் உறுதியான ஒரு மெசேஜ் இருந்தது. நமக்குள் இருக்கும் குணங்கள் தான் நம்மை பிரதிபலிக்கும் என்பதைப் போல அந்தப் படம் விமர்சன ரீதியாக பெரிய விளம்பரம் கிடைத்தது. நான் விளம்பரப்படுத்தியது இரண்டாவது விஷயம், கன்டென்ட் அருமையானது, விருதை நோக்கி வரும் என்பதை நோக்கி நான் எடுக்கவில்லை நிச்சயமாக பேசப்படும் என்பது தெரியும். நம்முடைய ப்ராண்ட் jsk படம் என்பது நல்ல படமாக அமையவேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட படம் தான். இந்த படத்திற்கு விஜய் விருதில் ஸ்பெஷல் ஜூரி அவார்ட் கிடைத்தது.
|
”நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” இதுவும் ஒரு வகையான கல்ட் திரைப்படம் தான். ப்ளாக் காமெடி இருக்கும் இந்தப் படம் மதில் மேல் பூனை போல அப்படியும் இருக்கலாம், இப்படியும் இருக்கலாம். ஒரு திரைப்படம் கதாநாயகி இரண்டாவது பகுதியில், அதாவது இறுதி காட்சிக்கு முன்னாடி வருவது, பாடல்களே இல்லாமல், மிகப் பெரிய பாத்திரங்களும் இல்லை, இந்த திரைப்படம் வெற்றி அடையுமா? என்பது சந்தேகம் தான். ஆனால் இந்த திரைபடத்திற்கு விளம்பரங்களை மிக பெரிய அளவில் கொடுத்தேன். இந்த படம் வணிக ரீதியாகவும் எனக்கும் வெற்றி கொடுத்த திரைப்படம் தான். அதுமட்டும் இல்லாமல் இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்ட திரைப்படம். கன்னடம், மலையாளம், தெலுங்கு, பெங்காலி, மராத்தி போன்ற மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு, இப்பொழுது இந்தியில் நானும் இன்னொரு தயாரிப்பு நிர்வாகமும் இணைந்து தயாரிக்கிறோம். இது விருதுகளை நோக்கி எடுத்த திரைப்படம் கிடையாது. ஆனால் இந்த திரைப்படத்திற்கு நிறைய அங்கீகாரம் கிடைத்தது.
”பரதேசி” திரைப்படம் வேறு வகையானது, இந்த படத்தினை பார்த்து இயக்குனரிடம் கூறினேன் “சொந்த படம் எடுக்கும் போது வணிக ரீதியாக வெற்றியை அடையக்கூடிய திரைப்படங்களை மட்டுமே எடுப்பார்கள் அடுத்தவரின் தயாரிப்புகளில் இயக்கும் போது தான் தன்னுடைய கவிதையை கூறுவார்கள், ஆனால் பாலா நீங்கள் படத்தில் என்ன சொல்லவேண்டும் என நினைத்தீர்களோ அதை மிகவும் தெளிவாக கவிதையாக, அதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு முறை தேநீர் அருந்தும் போதும் இந்தப் படம் ஞாபகம் வரும்” என்றேன். ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம், அதற்கு நிச்சயம் அங்கீகாரம் மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்த திரைப்படம் தான்,
”தங்கமீன்கள்” தந்தை மகளின் உறவை சார்ந்து எடுக்கப்பட்டது. எனக்கும் பெண் குழந்தைகள் தான், வீட்டில் நாம் பார்த்து நடந்து கொண்டிருக்கும் விஷயங்கள், இது எல்லாரிடமும் சென்றடையும் என நினைத்தோம், வணிகரீதியாக வெற்றி இல்லை என்றாலும், அது வணிக ரீதியாக வெற்றி கொடுத்திருந்தாலும் இந்த திருப்தி ஏற்பட்டிருக்காது. அதன் பிறகு நிறைய வணிகப்படங்களை தயாரித்தேன்.
”இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா”, முழுக்க முழுக்க வணிக படம்தான். விருதை நோக்கி எடுக்கவில்லை, நல்ல கதைகளை மட்டுமே எடுக்கிறேன். ”இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா” திரைபடம் வணிக படமாக இருந்தால் கூட கடைசியாக ஒரு மெசேஜ் சொல்லி இருப்போம்.
”ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்”, திரைப்படம் நேரத்தை நோக்கி நகரும் திரைக்கதை மனிதனின் வாழ்க்கை ஒரு நிமிடத்தில் தொடர்ந்து, அடுத்த நிமிடத்தில் இப்படியாக முடியும்” என அமைந்திருக்கும்.
”மதயானைக்கூட்டம்”, திரைப்படத்தில் இன்னும் நமக்குள் இருக்கும் இன வெறி, நமக்குள் இருக்கும் மூடத்தனம் இதனை நோக்கிய பயணம் இருக்கும்.
நான் எடுக்கும் படம் விருதுக்கான திரைப்படம் அல்ல ஆனால் விருதுக்கு தகுதியான படங்களை எடுக்கிறேன்.
ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், திரைப்படம் ஆங்கில படமான run lola run படத்தின் சாயல் இருக்கிறதே?
எல்லாரும் எல்லா படத்தையும் அப்படித்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். கதை என்பது எல்லா இடத்திலும் ஒன்று தான். action என்றால் அதற்கான கதை, பழி வாங்குதல் அதற்கான கதைக்களம், காமெடிக்கான தளம் இது, கதை என்பது திரைக்கதை அமைப்பதற்கான இடம்தான் நிர்ணயிக்கும். இதில் திரைக்கதை அமைத்த விதம் வேறுவிதமாக இருக்கும். run lola run இல் ஒரு வகை இருக்கும் அதுதான் 12B திரைப்படத்திலும் வந்தது. அப்பொழுது நீங்கள் 12B அதோடு ஒன்றி பார்க்க முடியாது. இந்த படத்தில் இயக்குனர் சரியாக திரைக்கதை அமைத்து இருப்பார். ஒருவன் வீட்டைவிட்டு வெளியே வந்த பிறகு அவன் கடந்து வந்த சம்பவங்களை ஒரு இடத்தில் கொண்டு வந்து முடிப்பார். நாம் ஒரு வினாடிக்கு பிறகு கடந்து வந்தால் அதே காட்சிகள் ஒரு நிமிடத்திற்கு பிறகு நடக்கும், ஒரு காய்கறிக்காரன் அவன் முன் நின்று கொண்டிருந்தால் அடுத்த ஒரு நிமிடத்திற்கு பிறகு அவன் வேறு ஒரு வீட்டின் முன் இருப்பான் இப்படியான திரைக்கதையின் நுணுக்கம் தான் ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்.
தங்கமீன்கள் திரைப்படத்தை நீங்கள் வெளியிடுவதற்க்கான காரணம் என்ன.? அந்த திரைப்படம் உங்களுக்குள் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியது? தமிழ் சினிமா இதனை ஏற்கும் என நினைத்தீர்களா?
நானும் பெண் பிள்ளையின் அப்பா, படத்தின் மீது இருந்த ஈர்ப்பு, நானும் சில சந்தர்ப்பங்களை கடந்து வந்து இருக்கிறேன்.
|
பெண் பிள்ளைகள் மீது இருக்கும் ஒரு ஆசை, நடுத்தர குடும்பத்தின் சூழ்நிலையில் உள்ள தந்தை, இன்று பாசம் என்பது எல்லாருக்கும் ஒன்று தான், பணம் இருந்தாலும் இல்லை என்றலும், ஒரே மாதிரியான பாசம் தான். குழந்தைகளின் சந்தோஷத்தை நிறைவேற்றும் இடங்களில் அதன் வேறுபாடு இருக்கும். இந்த படத்தில் ராம் அவர்களின் கதாபாத்திரம் சிறந்த ஒன்றாக இருக்கும் சின்ன சின்ன விஷயங்களை கூட குழந்தைக்குச் செய்ய முடியாத தவிப்பு அதனால் அவனுக்குள் ஏற்படக்கூடிய விஷயங்கள், சமுதாயம் பார்க்கும் விதம், அந்த குழந்தையின் பள்ளியில் நடக்கின்ற விஷயங்கள், சாதாரண குழந்தையாக இல்லாமல் வேறு மாதிரி கவனிப்பது, கல்வியில் மாணவர்கள் மதிப்பெண் எடுக்கும் இயந்திரமாக தான் பார்க்கிறார்கள், கல்வி கல்வியாக இல்லாமல் இருப்பது, இதையெல்லாம் பார்த்து தான் அந்த படத்தின் மீது ஈர்ப்பு வந்தது. இந்த படம் பேர் சொல்ல கூடியதாக இருக்கும் என எதிர்பாத்தேன். நடந்திருக்கிறது.
சினிமாவில் நடிகர்களையும், இயக்குனர்களையுமே தவிர தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை என்றும், விருது விழாக்களில் கூட அவர்களுக்கான அங்கீகாரம் சரிவர தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் குறித்து?
(உதாரணம்:” சேது, நந்தாஆரண்ய காண்டம், உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், அவள் அப்படித்தான் போன்ற படங்களின் இயக்குனர்கள் பெயர்கள் தெரிகின்றதே தவிர, அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களினது அங்கீகாரம்)
ஒருகாலத்தில் இருந்திருக்கலாம். இன்று அப்படி ஒன்றும் கிடையாது. jsk என்பது இந்த அளவிற்கு சென்றடைந்தது எங்களுடைய திரைப்படங்களால் தான். விருதுகளால் கிடைத்த அங்கீகாரம் தான். அந்த பாதையை நாம் கடந்து வந்துவிட்டோம். அது முடிந்து விட்டது. இப்பொழுது ஸ்டுடியோவிற்கு என தனியாக ரசிகர்கள் இருக்கிறார்கள். அதை நாம் மறுக்க முடியாது. AVM productionக்கு என தனியாக ஒரு ரசிகர்கள் கூட்டம் இருந்தது. தற்பொழுது ரெட் ஜெயண்ட் திரைப்படங்கள், திருப்பதி ப்ரதர்ஸ், தனுஷின் வொன்டர் பார்க்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். நாம் கொண்டு செல்லும் திரைப்படங்கள் தான் ரசிகர்களை சேர்க்கும். யாரையும் ஒதுக்கி விட்டார்கள் என்று கூற முடியாது. ஒதுக்கி இருந்தால் நீங்கள் கூட வந்து பார்த்து இருக்க மாட்டீர்கள். என்னுடைய அனுபவத்தால் கூறுகிறேன். இன்று இயக்குனர்களுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தால் தயாரிப்பளர்களுக்கும் அதே மாதிரியான அங்கீகாரம் கொடுக்கப்படுகிறது
. இது திரைப்பட விழாக்கள் சார்ந்தும், மனநிலையை சார்ந்தும் இருக்கிறது.
நான் film fare award வாங்கும் போது இயக்குனரை அவர்கள் அழைக்கவில்லை, நான் தான் இயக்குனரையும் அழைத்து அந்த விருதை பெற்றுகொண்டேன். இது ஒருவகையான டீம் வொர்க் தான்.. நீங்கள் கூறியது போல, ”சேது” தயாரிப்பாளர் யார் என்று நிறைய பேருக்கு தெரியாது, நந்தா தயாரிப்பாளர் யாருக்கும் தெரியாது, ஆனால் இன்று சமூக வலைதளங்கள் வந்த பிறகு facebook, whastsup, twitterல் நினைத்த நேரத்தில் அனைவரிடமும் பேசமுடிகிறது. நீங்கள் சொல்கிற காலகட்டம் முடிந்துவிட்டது
ஒரு வருடத்தில் நூற்றுக்கும் அதிகமான படங்கள் வெளியாகின்றன. அதில் 20 க்கும் குறைவான படங்களே வெற்றிபெறுகின்றன என்றும் ஒரு புள்ளி விவரங்கள் சொல்கின்றது. இருப்பினும் ஒவ்வொரு வருடமும் படங்கள் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிக அளவில் தான் இருக்கின்றன. இதற்கான காரணம்?
இந்திய அளவில் அனைவருக்கும் சினிமா வாழ்வில் ஒரு அங்கமாகவே இருந்துகொண்டு வருகிறது. இது ஒரு passion யாரும் தடுக்க முடியாது. புதிதாக வரும் தயாரிப்பாளர்கள் கன்னி சாமி போலதான், யாரும் ஒரு இடத்தில் தடைப்பட்டு நிற்பது கிடையாது. இந்த வருடம் நூறு தயாரிப்பாளர்கள் வருகிறார்கள் என்றால் சினிமாவின் கஷ்ட நஷ்டங்களை பார்த்து சென்று விடுகிறார்கள். திரும்பவும் புதியதாக நூறு தயாரிப்பாளர்கள் வந்துகொண்டு தான் இருக்கிறார்கள். அதை தொடர்ந்து செய்துகொண்டு வருவது மொத்தமே இருபது பேராக இருப்பார்கள். இந்த இருபது பேரும் சினிமாவை தொழிலாகச் செய்பவர்கள், அந்த நூறுபேர் சினிமாவை பொழுதுபோக்காக நினைப்பவர்கள். ஹாபியாக வருபவர்களுக்கு ஒரு முறைதான் அவர்களின் ஆர்வமே தவிர தொடர்ந்து தயாரிக்க விருப்பம் இருக்காது. தொடர்ந்து தயாரிக்கவும் நினைக்க மாட்டார்கள். இதனை தடுக்க முடியாது. தமிழில் இந்த வருடம் 315 திரைப்படங்கள் சென்சார் அனுமதியுடன் வெளியிடுவதற்கு தயார் நிலையில் இருக்கிறது. நமக்கு இருக்கிறது மொத்தம் 52 வாரங்கள் தான் ஒரு வருடத்திற்கு. வாரத்திற்கு ஆறுபடங்கள் நாம் வெளியிட வேண்டும். அதற்க்கான போதிய திரையரங்குகள் இல்லை. அதனால் தான் நான்கு காட்சிகள் இருந்ததைத் தொடர்ந்து இப்பொழுது ஒரு காட்சியாக மாற்றப்பட்டுள்ளது. இருப்பது ஒரு திரையரங்கு என்றால் அனைவருக்கும் அவர்கள் இடம் தரவேண்டும். ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு திரைப்படம் வீதம் கொடுக்கப்படுகிறது. இதனை மாற்ற முடியாது தொழில் அனைவருக்கும் பொதுவானது. தொழிலாக நினைப்பவர்களுக்கு இது தொழில், மற்ற விஷயங்களுக்கு பயன்படுத்துபவர்கள் வந்துகொண்டுதான் இருப்பார்கள்.
படங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால்தான் தரம் குறைத்துள்ளதா???
மக்கள் திருந்திவிட்டார்கள். இப்பொழுது என் வீட்டில் இருக்கும் சிறுவன்கூட ஒரு திரைப்படம் எடுத்துவிடுவான். மொபைல் இருந்தால் படம் எடுத்துவிடலாம். இதனை வரைமுறைபடுத்த முடியாது. எடுக்ககூடாது என நீங்களோ, நானோ சட்டம் போட முடியாது. அதேபோல தரம் குறைவாக வருவதற்கு அதிக படங்கள் வருவது தான் காரணம் என கூறிவிட முடியாது நூறு படங்களில் ஆறு படங்கள் தான் வெற்றி அடைகிறது. இன்று செய்தித்தாள் பார்க்கும் பொழுது நமக்கே சலிப்புத் தன்மை ஏற்படுகிறது. இருபது திரைப்பட விளம்பரங்கள் வந்தால் நீங்கள் தேர்ந்தெடுத்து நான்கு விளம்பரங்களைத் தான் பார்ப்பீர்கள். நல்ல திரைப்படங்கள் எது என உங்களது பார்வைக்கே தெரியும். நீங்கள் குறிப்பிட்ட திரைப்படங்களை ஒதுக்கி வைத்து இருப்பீர்கள். அந்த படங்களை திரைப்படமாகவோ நினைக்க மாட்டீர்கள், திரை அரங்கிற்கும் சென்று பார்க்க மாட்டீர்கள். அவர்கள் படங்களை எடுத்துகொண்டு தான் இருப்பார்கள், நூறுநாட்கள் என விளம்பரங்களும் செய்வார்கள். இதை நாம் காமெடி ஆகத்தான் எடுத்துக்கொண்டிருக்கிறோம். இந்த மாதிரியான விளம்பரங்கள் மக்களுக்கு சலிப்பு ஏற்படுத்திவிட்டது. யாரையும் கட்டுப்படுத்திவிட முடியாது. indian competitive authority என்ற ஒரு குழு இருக்கிறது. கமல்ஹாசன் அவர்களுக்கு நிகழ்ந்தது அனைவருக்கும் தெரியும். தனிமனிதனை கட்டுப்படுத்தும் அதிகாரம் யாருக்கும் இங்கு இல்லை. உங்கள் கையில் கேமரா இருந்தால், நடிப்பதற்கு தயாராக யாரேனும் இருந்தால் நீங்களும் படம் எடுக்கலாம். வெளியிடுவதற்கும் உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. தியேட்டர் கொடுத்தால் வெளியிடுங்கள். திரைக்கட்டி வெளியிடும் காலமும் வரப்போகிறது.
வித்தியாசமான அல்லது யதார்த்தமான கதைக்களம் என்ற முத்திரையுடன் வெளிவரும் படங்களும் கூட அதே கமர்சியல் அம்சங்களுடன் வெளிவருகின்றன. பெரும்பாலும் அந்த கமர்சியல் தன்மைகளுக்கு காரணம்,தயாரிப்பாளர்களின் நிர்பந்தங்கள் என்றும் சொல்லப்படுகிறது. இயக்குனர்களிடம் கேட்டால் அது தயாரிப்பாளர்கள் தலையீடு என்றும், தயாரிப்பாளர்களைக் கேட்டால் விநியோகஸ்தர்களின் தலையீடுகள் என்றும், விநியோகஸ்தர்களைக்கேட்டால் அது மக்களின் ரசனை சார்ந்த விஷயம் என்றும் சொல்கிறார்கள். இது குறுகிய வட்டப்பாதையில் இருக்கின்றது. தயாரிப்பாளராக இது குறித்து உங்கள் கருத்து என்ன?
நல்ல படங்கள் கண்டிப்பாக வெற்றியடையும். கமெர்சியல் இல்லாமல் ஓடிய திரைப்படங்களை பட்டியலிடுங்கள் எத்தனை படங்கள் வணிக ரீதியாக வெற்றி அடைந்து இருக்கிறது. புதிதாக வந்தவர்களைக் கூட ரெட் கார்பெட்டில் வரவழைத்த படங்களும் உண்டு. சதுரங்க வேட்டை சமீபத்தில் வந்து வணிக ரீதியாக வெற்றியடைந்த திரைப்படம். கமெர்சியல் தன்மை குறைந்த படமாகத்தான் அதனை நான் பார்க்கிறேன். முழுக்க முழுக்க புது முகங்களை வைத்து எடுத்து, 420 கும்பலை பற்றிய திரைப்படம், வணிக ரீதியாகயும் வெற்றியடைந்த திரைப்படம், அடுத்து ”கோலிசோடா” பற்றி சொல்லலாம், ”பசங்க” இது போன்று நிறைய இருகின்றன. அந்த மாதிரி படங்களும் வெற்றியடையத்தான் செய்கின்றன. கன்னட சினிமாவின் Lucia திரைப்படம், தமிழில் ”எனக்குள் ஒருவன்” என மொழிமாற்றம் செய்யப்படுகின்ற படம், இந்த படத்தில் கமெர்சியல் தன்மை குறைவாகத்தான் இருக்கும். இந்த மாதிரி திரைப்படங்கள் வெற்றியடைய காரணம் மக்களின் ரசனை மாற்றம் தான். புதிதாக ரசிக்கும் படியாக சொல்லும் போது வெற்றியடைகிறது. குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது அதில் இனிப்பு இருக்கிறது என்று சொல்லிக் கொடுக்கிறோம், அல்லது இனிப்பு இருக்கிறது என பொய் சொல்லி எப்படியாவது ஊட்டி விடுகிறோம்.மக்களின் ரசனையை மாற்றும் விதம் நம்ம கையில் தான் இருக்கிறது. சில விதிவிலக்குகள் இருக்கின்றன நாலு சண்டை, நாலு பாடல்கள் இருக்கவேண்டும் என அது “சுட்ட கதை”யாகவும் இருக்கலாம் சொந்த கதையாகவும் இருக்கலாம் எடுத்ததையும் திரும்ப திரும்ப எடுத்துக்கொண்டும் இருக்கலாம். மக்களை குறை கூற கூடாது. நாம் எடுப்பதில் தான் இருக்கிறது.
” சதுரங்க வேட்டை” திரைப்படம் உங்களது பார்வையில் யதார்த்த திரைப்படமா?
நமக்குள் இருக்கிற மூடநம்பிக்கைக்கான படமாகதான் நான் பார்க்கிறேன் நிறைய விஷயங்களை தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள். இதனை எதார்த்தம் என்று தானே சொல்ல வேண்டும். ”மண்ணுளி பாம்பு”, பற்றிய புரிதல் எல்லாரிடமும் தான் இருக்கிறது. ஆனால் ஏமாந்து கொண்டு தானே இருக்கிறார்கள். தீபாவளிச் சலுகை மோசடிகள் வருடா வருடம் நடந்து கொண்டுதானே இருக்கிறது, வருடம் பத்து பேர் சிறை சொன்று கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் மக்கள் இன்னமும் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த மாதிரி தோலுரித்த விஷயங்களைத்தான் காட்டி இருக்கிறார்கள்.
இந்த மாதிரியான விஷயங்களை மட்டும் வைத்துக்கொண்டு யதார்த்த சினிமா என்று சொல்லிவிட முடியாது அல்லவா.?. படம் முழுக்க நாடகத் தன்மையாகவும், வசனங்கள் நிறைந்தும் காணப்படுகிறது.?
படத்தில் உள்ளடக்க விஷயங்கள் தான் முக்கியமானது. இல்லை என்றால் யாரும் திரையரங்கிற்கு வந்து பார்த்திருக்க மாட்டார்கள். தமிழ் மக்களின் சிந்தனையை வசனங்கள் மூலமாக கதை சொல்லும் விதமாக பழக்கப்படுத்திவிட்டார்கள். அதில் ஒரு பிரச்சனையை மட்டும் மையப்படுத்தி எடுத்திருந்தால் அந்த சினிமாவின் பார்வை வேறுமாதிரி அமைத்து இருக்கலாம்.
படத்தை குறைந்த பட்ஜெட் செலவில் எடுத்து முடிந்துவிட்டால் கூட அதனைக்காட்டிலும் இரண்டு மடங்கு செலவு அதனை மக்களிடம் கொண்டுசேர்க்க publicity தேவைப்படுகிறது. இது சரியா?
மிகவும் தவறான ஒரு சூழ்நிலையில் தான் இருக்கிறோம். இதற்கு முன் இருந்தவர்கள் பழக்கபடுத்தி விட்டார்கள் இப்பொழுது அந்த நிலைமையை மாற்றி, சில மாற்றங்களை தயாரிப்பாளர்கள் சார்பாக செய்துகொண்டு வருகிறோம். ஆந்திராவில் நீங்கள் விளம்பரம் செய்ய நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றன. தனியாக நீங்கள் youtubeஇல் திரைப்படத்தின் முன்னோட்டங்களை கூட வெளியிட முடியாது. தமிழில் அந்த மாதிரி இல்லை என்னுடைய படங்களின் முன்னோட்டம், நான் நினைத்த நேரத்தில் வெளியிட முடியும். தெலுங்கில் முதலில் தயாரிப்பாளர் சங்கத்தில் உங்களுடைய முன்னோட்டத்தை அனுப்பவேண்டும். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலமாகத்தான் வெளியிட முடியும். அவர்கள் மூன்று வகையாக பிரித்து வைத்துள்ளனர் A B C . என்னுடைய படம் A வகையைச் சார்ந்து இருந்தால் அதற்கென தனியாக விளம்பரங்கள் அனுமதிக்கப்படுகின்றன. எனக்குத் தெரிந்து ஐம்பதில் இருந்து எழுபத்தி ஐந்து லட்சங்கள் இருந்தால் மிகப்பெரிய விளம்பரங்கள் தெலுங்கு திரைப்படத்துறையில் கிடைக்கும். ஆனால் தமிழில் அப்படி இல்லை. என்னுடைய ”இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” திரைப்படத்திற்கு விளம்பர செலவுகள் மட்டும் இரண்டுகோடி ருபாய். ”நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்திற்கு ஒன்றில் இருந்து ஒன்னே கால் கோடி ரூபாய் செலவு செய்தேன்.
|
தயாரிப்பு செலவில் மிகபெரிய பங்கு விளம்பரங்களுக்கும் இருக்கிறது. உங்களது படம் என தனியாக தெரியும் அளவிற்கு பார்வையாளர்களைக் கவர வேண்டும். ஆனால் தமிழகத்தில் இந்த நிலைமை கொஞ்சம் மாறி இருப்பதை உணரலாம். போஸ்டர்கள் ஒட்டுவதில் விதிமுறைகள் இருக்கிறது. வெறும் Nine ஷீட்ஸ் மட்டும் தான் ஒட்டவேண்டும். படங்களை வெளியிடும் போது மட்டும் தான் nine ஷீட்ஸ் ஒட்டமுடியும். வெளியிட்டுக்குப் பிறகு four sheets & six sheets மட்டுமே விளம்பர போஸ்டர்களை ஒட்டுவது அனுமதிக்கப்படுகிறது. அதே போல படங்கள் வெளியாவதற்கு முன் four sheets & six sheets மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. செய்தித்தாள்கள் விளம்பரங்களிலும் சில விதிமுறைகள் இருக்கின்றன. தி ஹிந்து வில் ஆங்கில விளம்பரங்களிலும், டைம்ஸ் பத்திரிகையில் விளம்பரங்கள் கிடையாது, வார பத்திரிகையில் விளம்பரங்கள் இல்லை, இணையதளத்தில் விளம்பரங்கள் கிடையாது. இந்த விதிமுறைகள் சென்ற அக்டோபர் மாதத்தில் இருந்து கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த மாதிரியான விதிமுறைகள் வந்ததால் தமிழில் விளம்பரங்களுக்கு என செலவிடும் தொகைக் கணிசமாக குறைகிறது. இது தேவையான ஒரு விஷயம்தான்.
தியேட்டர் ரிலீஸை மட்டுமே நம்பி பெரும்பாலும் திரப்படங்கள் வெளியாகின்றன. அதே வேளையில் அண்மையில் (இயக்குனர் சேரனின் C2H )தியேட்டர் ரிலீஸ் அல்லாமலும், குறுந்தகடுகள் வழியாகவும், ஆன்லைன் மூலமாகவும் உங்கள் படங்களைக் கொண்டுசேர்க்க முயற்சிக்கிறீர்கள். இந்த மாற்று விநியோக முறை எவ்வளவு தூரம் சாத்தியம்? C2H எந்த அளவிற்கு வெற்றி பெறும் என்று நினைக்கிறீர்கள்?
கேரளாவில் திரையரங்கை நேரடியாக அரசாங்கமே நடத்துகிறது. தமிழில் அந்த மாதிரி எதுவும் இல்லை. 2000, 1500 என டிக்கெட் விற்பனை இருக்கிறது. என்னதான் நீங்க DVD கொடுத்தாலும், அதாவது ”கத்தி” திரைப்படம் வெளியிடும் பொழுது நீங்கள் DVD கொடுத்தாலும், நாம் வளர்ந்த விதம் திரையரங்கு சென்று கூட்டத்தோடு கூட்டமாக படம் பார்ப்பதும், விசில் அடித்து ரசிப்பதும் தான் நமது தமிழ் சினிமா. கைதட்டலோடு பார்ப்பது தான் திரைப்படம், தீபாவளியில் பாட்டாசு வெடிப்பதை விட இன்று படம் பார்ப்பது தான் தீபாவளி. இன்று பட்டாசு சப்தம் குறைந்துவிட்டது அந்த அளவிற்கு நம்மிடம் சினிமாவிற்கு வரவேற்பு இருக்கிறது.
C2H சேரன் கொண்டுவந்தது மிகவும் நல்ல விஷயம் தான். திரையரங்கு கிடைக்காவிட்டால் அவர்களே ஆங்காங்கே கொட்டகை போல திரை அமைந்து படம் பார்க்க வைக்க, ஒரு திட்டம் இருக்கிறது. பழைய சினிமா கொட்டைகைகள், நாம் மறந்து போன விஷயங்களை, மணலில் உட்கார்ந்து படம் பார்ப்பது, தரையில் உட்கார்ந்து பார்ப்பது, தனியாக திரை அமைத்து பார்ப்பது என்பது எதிர்காலத்தில் வரும்.
சாட்டிலைட் உரிமையாளர்கள் நம்மிடம் இருக்கும் மொத்த பலனையும் சேர்ந்து வாங்கிவிடுகிறார்கள். இது C2Hல் இல்லை. சாட்டிலைட் உரிமத்தில், எவ்வளவு வருடம் வேண்டுமானாலும் ஒளிபரப்பு உரிமம், 99 வருட காலம் அனுமதி, எதிர்கால அனுமதி, dvd அனுமதி என அனைத்தையும் வாங்கிவிடுகிறார்கள். காரணம் என்ன என்றால் ஆறு கோடிக்கு திரைப்படம் எடுக்கும் பொழுது நான்கு கோடி வியாபாரம் சாட்டிலைட் உரிமையில் போய்விடுகிறது. ஒரு வியாபாரியாக நாம் போட்ட முதலீட்டை 80% இதன் மூலமாகவே பெற்றுவிடலாம். இந்த 80% சாட்டிலைட் உரிமையில் கிடைக்கும் பொழுது அனைவரின் கவனமும் அதில் தான் செல்லும், யாராவது வேறு வழிகளை காண்பித்தால் தவிர இந்த நிலைமை மாறாது. யாருமே அதற்கான சோதனையை செய்ய முன் வருவதில்லை. இப்பொழுது dvd, இன்டர்நெட் போன்றவை வந்துவிட்டன என்னுடைய படங்களை நான் பெரும்பாலும் DVD உரிமையை சாட்டிலைட்டிற்கு கொடுப்பதில்லை, இன்டர்நெட்இல் அனுமதிக்கவில்லை. வெறும் சாட்டிலைட் உரிமை மட்டுமே என்னால் என்னுடைய படங்கள் அனுமதிக்கப்படுகின்றன. எனக்கென சில விதிமுறைகளைக் கடைப்பிடித்து வருகிறேன். ஆனால் நடைமுறையை என்னால் மாற்ற முடியவில்லை. இந்தியாவில் மும்பையில் சாட்டிலைட் உரிமம் ஐந்து வருடங்கள் மட்டும் தான் அனுமதி.
ஆனால் தமிழ்,தெலுங்கு, கன்னடா திரைப்படங்கள் மட்டும் தான் சாட்டிலைட் உரிமை 99 வருடங்கள். இதனை மாற்ற வேண்டும் மற்ற மொழிகளில் எடுத்துகாட்டாக வைத்து யாராவது நிரூபித்துக் காண்பித்தால் மட்டுமே, சோதனைகளுக்கு முன் வந்தால் மட்டுமே அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
மேலை நாடுகளில் ஒரு படம் வெளியாகையில் அதில் தயாரிப்பாளரும் ஒரு அங்கமாகவே இருப்பார். ஆனால் இங்கு அவரை ஒரு பணம் கொடுக்கின்ற எந்திரமாகவே பாவித்து வருகின்றனர். அவர்களுக்கு சினிமா பற்றிய போதிய புரிதல் இல்லாமல் இருக்கின்ற காரணத்தினால்தான் அவர்களால் ஈடுபாடுகாட்ட முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது. தயாரிப்பாளர்களுக்கு சினிமா மீதான போதிய புரிதல் இல்லாததுகூட, நல்ல சினிமாக்கள் வரமுடியாமல் இருப்பதற்கான காரணங்களா?
இப்பொழுது நிலைமை மாறிவிட்டது. நான் சினிமாவை கற்றுக்கொண்டு தான் உள்ளே வந்தேன். சினிமாவில் படத்தொகுப்பில் இருந்து, DI யில் இருந்து ஒலி அமைப்பு, எபக்ட்ஸ் dubbing, grading எல்லாமே எனக்குத் தெரியும். இது என்னுடைய தனிப்பட்ட ஆர்வம் தான், இதனால் தான் என்னால் மேலும் வேறு விதமாக செய்யமுடிகிறது. யாரையும் சார்ந்து இல்லாமல் இருக்கிறேன். ஒரு டிரைவரை நம்பி மட்டுமே கார் வாங்கிவிட முடியாது எனக்கும் ஓட்ட்த் தெரியவேண்டும் அது தான் என்னுடைய விருப்பம். இத்தனை விஷயங்களை கற்றுகொண்ட பிறகு சினிமாவில் என்னுடைய தெளிவு அதிகமாக இருக்கிறது. இன்று மாறிவிட்டார்கள் cv குமார் இயக்குனர் ஆகப்போகிறார் அவர் சினிமாவை கற்றுகொண்டு விட்டார். வேறு யாரோ இயக்கி இனி பெயர்களை வைத்துக்கொள்ள முடியாது, அந்த காலகட்டம் மாறிவிட்டது. தயாரிப்பாளர்கள் தொழில் நுட்ப ரீதியாக ஆர்வம் காட்டுகிறார்கள். என்னுடைய படங்களின் முதல் நாளில் இருந்து கடைசி வரை என்னன்ன நடக்கிறது என்பதை முன்கூட்டியே வரையறுத்துக் கொள்வோம். அதுபோல விளம்பரங்களிலும் சில விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறேன். இந்த நாள் வரைதான் விளம்பரம் வரவேண்டும், இந்த நாளில் தான் வெளியிட வேண்டும், இந்தநாளில் வெளிவந்தால் இந்த அளவு வருமானம் வரும் இந்த மாதிரி முன்கூட்டியே வரையறத்துக் கொண்டு வேலை செய்கிறோம். கட்டாயமாக அந்த நுண்ணறிவு இருக்க வேண்டும்
அதுபோல கதைகள் தேர்வு செய்வதிலும் அவரசம் காட்டமாட்டேன். ”குற்றம் கடிதல்” திரைப்படத்தில் இறுதியில் நான் பார்த்து படத்தின் வரிசையை மாற்றினேன். அதாவது படத்தொகுப்பு வரிசையை நான் மாற்றி அமைத்தேன். கடைசி வரைக்கும் கூட இருப்பேன். இயக்குனர் ஒரு விஷயம் சொல்லிவிட்டால் அதனை அப்படியே செய்துவிட மாட்டேன் எனக்கு சரியென படவேண்டும். இயக்குனருடன் விவாதிப்பேன். நான் எல்லா திரைப்படங்களிலும் படத்தொகுப்பில் கூடவே இருந்திருக்கிறேன். வடிவமைப்பில் இருப்பேன். என்னுடைய படங்களில் அதிகமான விளம்பர எண்ணங்கள் என்னுடையதாக இருக்கும். ”பரதேசி” பட விளம்பரகள் என்னுடையது தான். பாலாவிடம் நான் அவ்வளவு விரைவில் சமாதனம் ஆகவில்லை. முதலில் இயக்குனரின் எண்ணம் போல விளம்பரங்கள் வந்தன, அதன் பிறகு நான் அதனை மாற்றினேன், வண்ணங்களையும் மாற்றினேன் ஒருவனின் கூவல் மட்டுமே இருக்க கூடாது என கூறிவிட்டு கதையின் சுவாரசியத்தை காண்பிக்க வேண்டும் என நினைத்து செய்தது தான், பரதேசி பட போஸ்டர் டிஸைன்.
இதனை இயக்குனரின் சுதந்திரத்தில் தலையிடுவதாக எடுத்துக்கொள்ளலாமா??
இயக்குனரின் சுதந்திரத்தில் தலையிடுவதாக கூற முடியாது. இயக்குனரின் கற்பனை அனைவரையும் திருப்தி செய்ய வேண்டும். முதல் நாள் இயக்குனர் இது தான் தேவை என கூறுகிறார். அந்த விஷயங்கள் எனக்கும் சரியாக இருந்தால் அந்த வேலையை ஈடுகொடுத்து முடிப்பது அந்த இயக்குனரின் கடமை. இரு கைகளும் சேர்ந்து தட்டினால் தானே ஓசை வரும். இது இயக்குனரின் சுதந்திரத்தை பறிப்பது கிடையாது.
நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நான் இருக்க மாட்டேன். சினிமா என்பது மீண்டும் சொல்கிறேன் ஒரு கூட்டு முயற்சிதான். நான் சமரசம் ஆகமாட்டேன் என்று கூறுவது விதண்டாவாதம். இந்த மாதிரியான பிரச்சனைகள் preproduction பொழுது வரலாம், திரைப்படத்தை ஆரம்பிக்கும் முன் நூறு முறைகூட மாற்றிக்கொள்ளலாம், கதையாக இருந்தாலும், நாயகன் தேர்வாக இருந்தாலும், ஆனால் படம் எடுக்க தொடங்கிய பிறகு சமரசம் இருக்க கூடாது. இதில் சமரசம் ஆகக்கூடிய நபராக நான் இல்லை. முதல் நாள் நாம் பேசும்போது எப்படி வேண்டும் ஆனாலும் தெளிவுபடுத்திகொண்டு சமரசம் செய்துகொள்ளலாம். ஆனால் பாதி படத்திற்கு பிறகு மாற்றவேண்டும் என நினைக்கும் பொழுது தான் உரசல்கள் ஆரம்பிக்கின்றன. ஒரு முறைக்கு பல முறையாக முடிவு செய்துகொள்வேன். இதுவரைக்கும் அந்த மாதிரியான பிரச்சனைக்கள் வந்தது இல்லை.
Independent filmmaker பற்றி?
இந்த மாதிரி ஒரு விஷயத்தை திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறோம். ஒருவர் தன்னுடைய கதையை எழுத்து வடிவில் புத்தகமாக கொண்டு வர இருக்கிறார். புத்தகத்தின் பெயரை தனியாக அறிவிக்கிறேன். அது இன்னும் publish ஆகவில்லை. இந்த புத்தகம் பரபரப்பாக பேசக்கூடிய விஷயங்களை அடக்கியிருக்கிறது.
உலக சுற்றுச்சூழல் பற்றிய விஷயம் அதற்கு அந்த இயக்குனர் ஒரு கான்செப்ட் கொடுத்து இருக்கிறார். அந்த கோயம்புத்தூர் சார்ந்த நடுத்தர இளைஞரிடம் நிறைய திறமைகள் இருகின்றன, அந்த புத்தகத்தை 80% வரையிலும் படித்துவிட்டேன். அதனை முடிக்கும் பொழுது independent film ஆகத்தான் இருக்கும் முழுவதும் யாதார்த்த கதாபத்திரங்கள் தான் இருக்கும், எந்த வகையையும் சாராமல், அதன் பயணத்தில் கதை யதார்த்தமாக பயணிக்கிறது. இந்த மாதிரியான விஷயங்கள் வரும்போது கண்டிப்பாக ஆதரிப்பேன்.
ஆவணப்படங்களை பற்றிய உங்களது பார்வை ? ஆவணப்படங்கள் தயாரிக்கின்ற எண்ணம் இருக்கிறதா?
கட்டாயம் உதவியாக இருப்பேன். அதனால் நல்ல விஷயங்கள் நடக்கக்கூடியதாக இருந்தால் கண்டிப்பாக உதவியாக இருப்பேன். அதில் வணிக ரீதியாக தலையிட மாட்டேன் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைவேன். நான் தொழில் பண்ணும் போது எல்லாமே வணிகமாக செய்ய முடியாது. நான் சினிமாவில் இருந்ததற்கான அடையாளமாக ஏதேனும் இருக்க வேண்டும்.
தமிழ் சினிமாவின் வரலாற்றை பதிவு செய்வது குறித்தும், திரைப்பட சேமிப்பகம் குறித்தும் திரைத்துறையில் இருப்பவர்களுக்கு அக்கறை இருப்பதாக தெரியவில்லை. தயாரிப்பாளர்கள் முன் வராத நிலையில் வேறு யார் இதை செய்யவேண்டும் என நினைக்கிறீர்கள்?
South indian film chamber இல் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. அது போல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பாகவும் அதற்கான வேலைகள் நடந்துகொண்டு இருக்கிறது. சினிமாவின் தோற்றம், அதற்கான என்று வருகின்ற போது கிடைக்க கூடிய அனைத்து விஷயங்களும் அங்கு கிடைக்கும் அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்படும். தற்பொழுது நிறைய படங்களின் நகல்கள் நம்மிடையே இல்லை. இதற்கு பிறகு வரக்கூடிய படங்கள் சேமிப்பகத்தில் இணைக்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது.
fandry திரைப்படம் பற்றி?. தமிழில் இந்த மாதிரியான சினிமா சாத்தியமா?
இந்த வருடத்தில் இந்தியன் பனோரமாவில் ஏழு படங்கள் தேர்வாகி இருக்கிறது. ஆனால் வணிக ரீதியாக வெற்றி அடையவில்லை. மராத்தியில் ”நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்தின் உரிமையை என்னிடம் இருந்துதான் பெற்று கொண்டார்கள். அதற்கான வணிகம் படம் வெளி வருவதற்கு முன்பாகவே நடத்துவிட்டது. fandry திரைப்படம் தமிழில் எடுபதற்கு நிறைபேரின் முயற்சிகள் நடக்கின்றன. மராத்தியில் திரைப்படம் எடுக்கும் பொழுது உங்களுக்கு அரசாங்கமே அதற்கான உதவிகளை செய்கிறது. 60% வரைக்கும் மானியமாக அரசாங்கம் கொடுக்கிறது. அந்த மானியம் மட்டும் தான் அவர்களுக்கு லாபம். திரையரங்கு வணிகம் மிக குறைவு தான். சமீப காலத்தில் time pass என்கிற திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடைந்தது. மராத்தி திரைப்பட வரலாற்றில் மிக பெரிய வெற்றியடைந்த திரைப்படம். மீதி படங்கள் அனைத்து ஒரு பரிட்சார்ந்த முயற்சிக்கான படங்கள்தான். மக்கள் யாரும் ரசிக்கவில்லை.. 60% மானியம் என்பது மராத்தி சினிமாவை உயர்த்துவதற்கு தான். இந்தியில் படங்களை எடுக்காமல் மராத்தியில் எடுப்பதற்காக மட்டும் தான். லாபகரமாக இருந்தால் அரசு மானியம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
நான் ஒரு ரசிகனாக இருந்தால் அந்த மாதிரியான சோதனை முயற்சியில் வெளிவரும் படங்களை பார்ப்பேனா? என்பது எனக்கு தெரியவில்லை. சினிமா entertainmentக்கும் strong message க்கு மட்டும்தான். entertainmentகுள்ள message என்பது ஒரு அங்கம். ”கத்தி”, திரைப்படம் எவ்ளோ பெரிய வெற்றி என்பதை தவிர்த்து நீங்கள் பார்த்தால் அதில் ஒரு சிறிய விவசாயத்தை பற்றிய கருத்தை வைத்தார்கள். இன்று அதனை பற்றி பேசக்கூடிய அளவு வளர்ந்து இருக்கிறது. தெரியாத நபர்களுக்கு அந்த விஷயம் தெரியக்கூடிய அளவாக அமைந்தது. தமிழ் நாட்டில் இந்த இடத்தை விட்டுச் சென்றால் ஒரு குடம் தண்ணீர் கிடைப்பது கடினம். ஆனால் நாம் வீட்டில் நீச்சல் குளம் கட்டி தினமும் தண்ணீர் மாற்ற வேண்டும் என நினைக்கிறோம். shower இல் வேகமாக நீர் வந்தால் தான் குளிப்பேன் என்று இருக்கிறோம். entertainmentஇல் ஒரு message கொடுத்தால் பார்க்கிறார்கள். வெறும் message மட்டுமே எடுத்தால் யாரும் பார்க்க முன்வருவது இல்லை.
காட்சிமொழி சினிமாவிற்கான போதிய சூழல் தெரியவில்லை. கண்டிப்பாக மற்றவர்கள் தயாரித்தால் நானும் அதற்கான முயற்சிகள் செய்வேன்.
உங்களது திரைப்படத்திற்கு விவாத மேடை அமைத்து ரசிகர்களை, விமர்சகர்களை கலந்துகொள்ள வைத்து விவாதிக்க, விமர்சனம் செய்ய அதற்கான இடைவெளி அமைத்து தருவீர்களா? ரசிகர்களின் மனநிலையை புரிந்துகொண்டு செயல்படுவீர்களா??
நிறைய அந்த மாதிரியான சூழ்நிலை அமைந்தது, ’தங்கமீன்கள்’, ’பரதேசி’, ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ”இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா”, போன்ற படங்களுக்கு விவாதிக்க போதிய இடைவெளி இருந்தது. IIT, layola போன்ற இடங்களில் நானும் இயக்குனரும் கலந்து கொண்டோம். பல கேள்வி பதில்கள் இருந்தது. இதன் மூலம் வரவேற்பு நன்றாக இருக்கிறது. ரசிகர்களின் மனநிலை புரிந்துகொள்ள முடிகிறது.
கதாபத்திரங்கள் தேர்வு செய்வதில் உங்களது தலையீடு எந்த அளவிற்கு இருக்கும்?.கதாநாயகனுக்கு தகுந்த கதையாக உங்களின் கதையை மாற்றி அமைதுகொள்வீர்களா? உங்கள் படங்கள் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுமா? பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுமா?
கதைக்கு தேவையான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்கிறோம். இது ஒரு கூட்டு முயற்சி நான் தனிப்பட்ட முறையில் தலையிட மாட்டேன். பிடித்து இருந்தால் ஏற்று கொள்வோம், இல்லை என்றால் அதற்கென விவாதம் செய்து தேர்ந்து எடுப்போம்.
.
திரையரங்கு வெளியீடு இல்லாமல் தயாரிக்க முடியுமா? ”குற்றம் கடிதல்” திரைப்படம் பற்றி கூறுங்கள் ?
திரையரங்கை மட்டும் நான் நம்பி இருந்தால் கண்டிப்பாக குற்றம் கடிதல் திரைப்படத்தை முன்கூட்டியே வெளியிட்டு இருப்பேன். ”குற்றம் கடிதல்” திரைப்படம் தயாராகி இரண்டு மாதங்கள் ஆகின்றன. திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிவிட்டு தான் வெளியிடும் முடிவில் இருக்கிறேன். திரையரங்குகளை நம்பி இந்த திரைப்படத்தை தயாரிக்கவில்லை. இந்தப் படத்தில் முழுக்க முழுக்க அனைவரும் புதிய முகங்கள். இயக்குனர் யாரிடமும் வேலை செய்யவில்லை. இயக்குனரின் வாழ்கையில் நடந்த விஷயத்தை மிகவும் நுட்பமாகவும், கட்சிகளை பிரித்துவைப்பது போன்ற விஷயங்கள் தெளிவாக இருந்தது. அடுத்து வருகிற இயக்குனர்களுக்கு எடுத்துகாட்டாக இருக்கக்கூடிய படமாக இருக்கும். குறைந்த முதலீடு அதே சமயத்தில் தரமானதாகவும் இருக்கும். ஆனால் படம் பார்க்கும் பொழுது குறைந்த முதலீடு படம் என கூற முடியாது. இந்த படம் எல்லாருடைய பார்வையும் வந்த பிறகு இங்கு வெளியிடலாம் முடிவு செய்து இருக்கிறேன்.
|
தங்கமீன்கள் திரைபடத்தில் ஏற்பட்ட அனுபவம் தான் இதற்குக் காரணம். படம் வெளியான பொழுது பெரியதாக வணிகம் கிடையாது. ஆனால் அடுத்த சில நாட்களுக்கு பிறகு பரவலாக பேசப்பட்டது. வெறும் படத்தை பற்றிய உரையாடல் மட்டுமே இருந்தது., வணிக சார்ந்து ஏதும் இல்லை. இப்பொழுது ”குற்றம் கடிதல்”, திரைப்படத்தை தலைகிழாக முயற்சிக்கிறேன். முதலில் அனைத்து திரைப்பட விழாக்களுக்கும் அனுப்பி அதன் பிறகு வெளியிடலாம் என நினைக்கிறேன். இதனால் அனைவரின் பார்வை அதன் மீது படும். என்ன தான் நான் ஐம்பது லட்சம் கொடுத்து விளம்பரம் செய்து இருந்தாலும் இந்த அளவிற்கு யாரும் கேள்வி கேட்டு இருக்க மாட்டீர்கள். இந்தியன் பனோரமா வில் தேர்வு ஆனதால் அந்த படத்தில் ஏதோ இருக்கிறது என எண்ணங்களை எழுப்புகிறது. இந்தியன் பனோரமா வில் தேர்வு ஆவதற்கு முன் இந்தப்படத்திற்காக நான் திரைப்பட நண்பர்களுக்கு சிறப்பு காட்சி ஏற்படு செய்ய முயன்றேன். யாரும் நேரத்தை வீணடிக்கவில்லை தயாரில்லையென அதனை தவிர்த்தனர். அடுத்த அடுத்த வாரங்கள் என தள்ளி போய்கொண்டிருந்தது. ஒவ்வொருத்தருக்கும் ஒரு கட்சியாக போட முடியாது. இந்தியன் பனோரமா வில் தேர்வு ஆன பிறகு எனக்கு நூறு அழைப்புகளுக்கு மேல் வருகிறது. குற்றம் கடிதல் எப்பொழுது பார்க்கலாம் என. நான் வேண்டாம், காத்திருங்கள் என்று கூறி இருக்கிறேன். இதைத்தான் நான் ரசிகர்களிடமிருந்து எதிரிபார்க்கிறேன். திரையரங்கு வரும் ரசிகர்களுக்கு இது ஒரு உந்துதலாக அமையட்டும்.
அனைத்து படங்களையும் நான் திரைப்ட விழாக்களுக்கு அனுப்புவதில்லை. மதயானைக்கூட்டம், குற்றம் கடிதல் அனுப்பி இருந்தேன். குற்றம் கடிதல் தேர்வானது. விழாக்களில் கலந்துகொள்ள ஒரு தகுதி இருக்கிறது என உணர்ந்தேன். அதனால் அனுப்பினேன். எல்லாப்படத்தையும் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை.
நான் முடிவு செய்தது என்னவென்றால் என்னுடைய முந்தைய படம் ”மேகா” திரைப்படத்தில் இருந்து FOS Rights கொடுக்கப்போவது இல்லை. நானே எல்லா இடத்திற்கும் கொண்டுசெல்லும் முடிவில் இருக்கிறேன். உறுதியாக முடிவு எடுக்கப்பட்டு கொண்டுவந்துவிட்டேன். என்னுடைய அடுத்த படங்கள் அப்படியாக தான் இருக்கும். ”குற்றம் கடிதல்”, போன்ற காத்திருப்பு யார் செய்வார்கள்? என்று எனக்கு தெரியாது. காப்பி தயாராகி இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன ஆனால் என்னுடைய குழுவிற்கு கூறிவிட்டேன் நீங்கள் காத்திருங்கள் அனைத்து இடத்திற்கும் அனுப்பி அதில் இருந்து வருகிற ரிப்போர்ட் வைத்து பிறகு வெளியிடலாம் என கூறி இருக்கிறேன். என்னுடைய கணிப்பு சரியாக இருந்தால் இந்த வருட தேசிய விருது இந்த படத்திற்கு கொடுக்கலாம். பனோரமாவில் தேர்வு செய்தால் தேசியவிருதில் கண்டிப்பாக ஒரு அங்கம் இருக்கும். உலகளாவிய விழாக்களுக்கு அனுப்புகிறோம், துபாயில் சிறப்பு காட்சிக்காக அழைப்பு வந்து இருக்கிறது. இது வருகின்ற டிசம்பரில் நடக்கிறது. மற்ற விழாக்கள் அனைத்தும் ஜனவரிக்கு பிறகுதான் இருக்கிறது. திரைப்பட விழாக்களை பற்றி முழுமையாக தெரிந்துகொண்டேன். சுவட்சர்லாந்தில் வசிக்க கூடிய இலங்கை தமிழர்கள் குற்றம் கடிதல் படத்தினை சிறப்பு காட்சிக்கு ஏற்பட்டு செய்ய விண்ணப்பித்து இருக்கிறார்கள். உலக அளவில் நாங்கள் கொண்டு செல்கிறோம் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என கேட்டு இருக்கிறார்கள்
உங்களது அடுத்த இலக்கு?
நிறைய கற்றுக்கொண்டு ஒரு படத்தினை இயக்க வேண்டும். எனக்கான அடையாளம் அதுவாகவும் இருக்கும்.
மாற்று சினிமா எடுக்க முனையும் இயக்குனர்களுக்கு உங்கள் தயாரிப்பில் வாய்ப்பளிப்பீர்களா? சுயாதீன படங்களை தயாரிக்க நீங்கள் முன்வருவீர்களா??
முதலில் அதனது வடிவமைப்பு பார்க்கவேண்டும். அது என்னை திருப்திப்படுத்தும் விதமாக இருந்தால் நிச்சயமாக தயாரிப்பேன். நான் பண்ணியதில் அனைத்தும் சோதனை முயற்சிதான் அப்படிப்பார்க்கையில் இந்த மாதிரியான படங்களையும் செய்வேன்.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com
முகநூலில் இணைய: htt://www.facebook.com/pesaamozhi |