இதழ்: 25     ஐப்பசி (November 01 - 15), 2014
   
 
  உள்ளடக்கம்
   
சினிமா - நிழலா? நிஜமா? - அருண் மோ.
--------------------------------
தமிழகக் காளியும் மகாராஷ்டிர ஜபயாவும் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
எஸ்.எஸ்.ஆர் - அரிதாரமற்ற கலைஞர் - டிராட்ஸ்கி மருது
--------------------------------
இயக்குனர் மிஷ்கின் நேர்காணல் - தினேஷ்
--------------------------------
இயக்குனர் விக்ரம் சுகுமாரன் நேர்காணல் - தினேஷ்
--------------------------------
இயக்குனர் பாலாஜி தரணிதரன் - நேர்காணல் - கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி
--------------------------------
இயக்குனர் ப. ரஞ்சித் நேர்காணல் - விக்னேஷ் சேரல்
--------------------------------
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நேர்காணல் - சரவணன்
--------------------------------
இயக்குனர் கமலக்கண்ணன் நேர்காணல் - காளிமுத்து
--------------------------------
இயக்குனர் நவீன் நேர்காணல் - ஜெயகாந்தன்
--------------------------------
இயக்குனர் ரமேஷ் நேர்காணல் - அருண் தேவா
--------------------------------
இயக்குனர் வினோத் நேர்காணல் - ஐயப்பன்
--------------------------------
தயாரிப்பாளர் சி.வி. குமார் நேர்காணல் - யுகேந்தர்
--------------------------------
தயாரிப்பாளர் ஜே. சதிஷ்குமார் நேர்காணல் - தமிழரசன்
--------------------------------
   



   

 

 

கார்த்திக் சுப்புராஜ் - நேர்காணல்

குறும்படம் இயக்கியது உதவினாலும் படப்பிடிப்பு தளத்தில் நிறையவே கற்றுக்கொள்ள வேண்டி இருந்தது

- சரவணன் : தட்டச்சு உதவி - ஜெயகாந்தன்

இயக்குனர் ஆர்வம் உங்களிடம் உருவானது எப்படி?

பள்ளியில், கல்லூரியில் படிக்கும் பொழுதே கலை நிகழ்ச்சிகளில், நாடகங்கள் நிறைய எழுதி நடத்தியிருக்கிறேன். நிறைய படங்களும் பார்ப்பதுண்டு. முதலில் சினிமா என்றில்லாமல் ஏதாவது ஒரு Creativity சார்ந்து இயங்க வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது. சாப்ட்வேர் துறையிலும் ஆர்வம் அதிகமாவே இருந்தது. அதே சமயம் சினிமா சார்ந்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் பகுதி நேரமாக குறும்படம் எடுக்க ஆரம்பித்தேன். குறும்படத்தில் இருந்துதான் சினிமா ஆர்வம் இன்னும் மேல் எழுந்தது.


இயக்குனர் ஆவதற்கு நீங்கள் எதிர்கொண்ட போராட்டங்கள்?

சவால்கள் நிறையவே இருந்தது. எடுத்தவுடன் சினிமா, முழுநீளத் திரைப்படம் என்று இறங்காமல் குறும்படம் எடுத்து முதலில் கற்றுக்கொள்வோம் என்றே திட்டமிட்டிருந்தேன். பெங்களூரில் இருக்கும் Filmcamp Academyல் நடந்த சினிமா சம்மந்தமான ஒரு பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டேன். அது மட்டுமில்லாமல் இரண்டு மாதத்திற்கு, ஒரு course-ம் படித்தேன். பின்பு நானே குறும்படங்கள் நிறைய எடுக்க ஆரம்பித்தேன். அவை எல்லாமே அமெச்சூர் படங்களாகவே இருந்தது. அப்படிப்பட்ட ஒரு குறும்படம் தான் நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கு தேர்வானது. நாளைய இயக்குனர் நிகழ்ச்சி வருவதற்கு முன் நானும் யாரிடமாவது உதவி இயக்குனராய் சேர வேண்டும் என்றே இருந்தேன். பிறகு அந்த நிகழ்ச்சியை பார்த்த பிறகுதான் இதுவா? அதுவா? என்று யோசித்து, நாளைய இயக்குனர் தான் என்று முடிவு செய்து அதில் தீவிரமாய் இறங்கினேன். அந்த நிகழ்ச்சிக்கு படம் எடுக்கும் போதெல்லாம், பணம் ஒரு பெரிய பிரச்சனை இல்லை. நான் சம்பாதித்திருந்த பணத்தை வைத்து நானே எடுத்துவிட்டேன். அனால் நாளைய இயக்குனர் முடிந்த பிறகு, அடுத்து என்ன? சினிமாவா? என்று யோசித்த போது வீட்டிலும் ரொம்ப உறுதுணையாய் இருந்தார்கள். தயாரிப்பாளர் கிடைக்காமல் இரண்டு வருடங்கள் கஷ்டப்பட்ட பின்பு C.V. குமாரை சந்தித்தேன். அவரிடம் ஒப்புதல் கிடைத்த பிறகு செய்த படம் தான் பீட்சா.

நாளைய இயக்குனரில் ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பிற்கு குறும்படம் இயக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. ஆனால், சினிமா என்பது கிரியேட்டிவிட்டி சார்ந்த வேலை, அப்படியெனில் இயக்குனர்களை இப்படி குறிப்பிட்ட தலைப்பிற்குள்தான் படம் எடுக்க வேண்டும் நிர்பந்திக்கும் போக்கு நல்லதா? கெட்டதா?

இதை நல்லது, கெட்டது என்றெல்லாம் பார்க்க முடியாது. பள்ளிக் காலத்திலே கவிதை, கட்டுரை, பேச்சு என எந்தப் போட்டி என்றாலும் ”தலைப்பு” ஒன்று நிச்சயமாக இருக்கும். நாளைய இயக்குனர் ஒரு போட்டி, ரியாலிட்டி ஷோ என்கிற அளவில் அவர்கள் தெளிவாக சில கட்டுப்பாடுகளை உருவாக்கி நடத்துகிறார்கள். நாம்தான் விருப்பப்பட்டு அந்தப் போட்டியில் கலந்து கொள்கிறோமே தவிர, அவர்கள் யாரையும் கட்டாயபடுத்துவது இல்லை. என்னதான் தலைப்பு என்கிற கட்டுப்பாடுகள் இருந்தாலும் அதற்குள் ஒரு creativity வேண்டும் என்கிற சவால் இருக்கிறது. அதையும் தாண்டி இது போன்ற கட்டுப்பாடுகளில் சிக்கும்போதே creativity அதிகமாய் வெளிப்படுகிறது.

நம்மை பாதித்த ஒரு நிகழ்விலிருந்து குறும்படம் எடுப்பதற்கும், ஒரு தலைப்பிலிருந்து குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறும்படம் எடுப்பதற்கும் வித்தியாசமுள்ளது. இதிலிருந்து நல்ல படம் வரும் என்று நினைக்கிறீர்களா?
நல்ல படங்கள் வரலாம். நிறையவும் வந்திருக்கிறது. பாதித்த நிகழ்வில் இருந்துதான் நீங்கள் படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தால் அப்படியே செய்யலாம். உங்களை யாரும் கட்டுப்படுத்தவில்லை. குறும்படங்களுக்கான சந்தையை உருவாக்குவதும் அதை மேலேடுத்து செல்வதும் அவர்களுடைய நோக்கமல்ல. இது ஒரு நாளைய இயக்குனருக்கான தேடல் என்று சொல்லியே அவர்கள் ஆரம்பித்தார்கள். இது தமிழ் சினிமாவிற்குள் நுழைய ஒரு மேடை போல தான் செயல்படுகிறது. நாளைய இயக்குனர் மட்டும் இல்லையென்றால் நான் குறுகிய காலத்தில் திரைப்படம் எடுத்திருக்கவே முடியாது.

வணிக சினிமாவிற்கு மாற்றாக, வணிக சினிமாவில் ஒரு கதையைச் சொல்ல இயலாத சூழலில் அவர்கள் தேர்ந்துகொண்ட மீடியம் தான் குறும்படங்கள். ஒரு பரிட்சார்த்த முயற்சியாய் செயல்பட்டு வந்த குறும்படம், நாளைய இயக்குனருக்கு பிறகு தரம் குறைந்து, திரைப்படத்திற்கு செல்வதற்கான வழியாக மட்டுமே மாறிவிட்டதே? பரிட்சார்த்த முயற்சிகளும் படிப்படியாக குறைந்துதானே வருகின்றது. ?

குறும்படங்கள் ஒரு Parallel சினிமா போலத்தான் இருந்தது. Film Festival சார்ந்த ரசிகர்கள் அதற்கு நிறையவே இருந்தனர். இது ஒரு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சி என்பதால் நிறைய பேரிடம் சென்று சேர்கிறது. அதனால் சினிமா வாய்ப்புகள் வருவதற்கு, குறும்படம் எடுத்தால் போதுமென எல்லோரும் எடுக்க ஆரம்பித்திருப்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால் நான் குறும்படங்கள் எடுக்கும்போது நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்காக எடுக்கிறோம் என்று நினைத்து எடுக்கவில்லை. Film Festivalகளுக்கு அனுப்புவதற்குதான் எடுத்தேன். கலிபோர்னியா, டோக்யோ ஏன் இங்கேயே Indian Documentary Film Festival போன்றவைகளில் என் படத்தை அனுப்பி இருக்கிறோம். இப்படி நினைத்து தான் நான் எடுத்தேன், நிறைய filmmakersம் இப்படி நினைத்தே எடுத்தார்கள். ஆனால் இன்று அதை சினிமாவிற்கு செல்லவே தேவைப்படுகிறது என்பதால் குறும்படத்திற்கான தரம் குறையவே செய்யும். நாங்களே Stonebench என்று சுயாதீன திரைப்படக் கலைஞர்களுக்காக ஒரு நிறுவனம் ஆரம்பித்திருக்கிறோம். அதற்காக நல்ல குறும்படங்களைத்தான் தேடுகின்றோம். வந்த ஒரு ஐந்நூறு குறும்படங்களிலும் 30 தான் நல்ல படங்களாய் இருக்கும். அதற்கு மேல் எங்களால் தேர்ந்தெடுக்கவே முடியவில்லை. மற்றவை சினிமா தாக்கத்தில் எடுக்கப்பட்டவைதான். நல்ல குறும்படங்கள் வரவேண்டும் என்பதற்காகவே இந்த வேலை செய்ய இருக்கிறோம்.

Stonebench Creationsல் எந்த மாதிரியான செயல்பாடுகள் உள்ளன?

இரண்டு விஷயங்கள் செய்ய இருக்கிறோம் . Benchfix என்பதில் சுயாதீன திரைப்படம், குறும்படம், ஆவணப்படம் போன்றவற்றை வாங்கி mainstream திரைப்படங்களை போல திரையரங்குகளில் வெளியிடப்போகிறோம். எங்களுக்கு வருகிற படங்களில் எது சிறந்த படமோ அதையே நாங்கள் வெளியிட இருக்கிறோம். திரையரங்குகள் மட்டுமின்றி satellite தொலைக்காட்சி போன்றவற்றிலும் வெளியிட இருக்கிறோம். இதிலிருந்தெல்லாம் கிடைக்கின்ற வருமானத்தில் ஒரு பங்கை அந்த படத்தின் இயக்குனருக்கு தருவதே இதன் நோக்கம். நான் நிறைய குறும்படங்களை எடுத்தும், அதன் மூலமாக எந்த வருமானமும் பெற்றதில்லை. ஐம்பதாயிரம் செலவு செய்து ஒரு குறும்படம் எடுத்த படைப்பாளிக்கு அறுபதாயிரமாவது கிடைப்பது என்பதே நல்ல விஷயம். யாரையும் பொருளாதாரத்திற்காக நம்பிக்கொண்டிருக்கும் அவசியமில்லாத போதே தான் நினைக்கிற மாதிரியான படங்களை அடுத்து செய்ய முடியும். நீங்கள் சொல்வது போல ஒரு Parallel சினிமாவுக்காகதான் நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம். அப்படியான படம் எங்களிடம் இதுவரை வந்து சேரவில்லை.


அடுத்து கதாபாத்திர தேர்வு சம்மந்தப்பட்டது. இன்று வரைக்கும் எல்லோரும் வாய்ப்பு தேடி அலுவலகம் வந்து புகைப்படம் தந்துவிட்டு தான் போய்க்கொண்டிருக்கிறார்கள் . நான் அதை கொஞ்சம் நவீனப்படுத்தலாமென்று நினைத்தேன். அதுதான் Benchcast. ஆன்லைனில் இயக்குனர்களும், நடிகர்களும் உரையாடிக்கொள்ளும் வாய்ப்பை உருவாக்கி கொடுப்போம். நிறைய படங்களுக்கு தமிழில் subtitle எழுதிக் கொடுக்கிறோம். இதுவரை 25 படங்களுக்கு மேல் subtitle எழுதியுள்ளோம். தொழில்நுட்பம் சார்ந்து சினிமாவிற்கு தேவையான நிறைய வாய்ப்புகளை உண்டாக்கித்தர இருக்கிறோம். முறையாக இதனை நவம்பர் 10ல் அறிமுகப்படுத்தினோம்.

நீங்கள் குறும்படம் எடுத்து எடுத்து கற்றுக்கொண்டீர்கள், சிலர் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார்கள். இன்னும் சிலர் உதவி இயக்குனராக சேர்ந்து கற்றுக்கொள்கிறார்கள். சினிமா கற்றுக்கொள்ளும் முறையில் எது சரியானது என்று நினைக்கிறீர்கள்?

இதில் எது சிறந்தது என்று சொல்லவே முடியாது. எல்லாமே சினிமாவை சென்றடைவதற்கான வழியே. உதவி இயக்குனராக இருந்தவருக்கு படப்பிடிப்பு தளத்தில் நிகழும் பிரச்சனைகளை சமாளிக்கும் அனுபவம் நிறைய இருக்கிறது. கல்லூரியில் படித்துவிட்டு வருபவர்கள் தொழில்நுட்பத்தில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள். இது கற்றுக்கொள்பவரை பொறுத்துதான், எந்த முறையென்றாலும் நாம் எவ்வளவு விஷயத்தை எவ்வளவு சீக்கிரமாக உள்வாங்கிக்கொள்கிறோம் என்பதே முக்கியம்.

உதவி இயக்குனராக பணிபுரியாமல் வந்ததால் படப்பிடிப்பு தளங்களில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள்?

நான் குறும்படங்களை இயக்கும்போதே சில கைதேர்ந்த கலைஞர்களை வைத்தே செய்ததால், unit, lighting setup போன்றவற்றை உபயோகித்து வேலைவாங்கிய அனுபவம் இருந்தது. அதே இங்கு பெரிய அளவில் தேவைப்பட்டது. குறும்படம் செய்யும் போது 20 பேர் என்றால் சினிமாவில் 100 பேரை வைத்து வேலை வாங்கவேண்டும். நிறைய துறைகளை சார்ந்தவர்களும் தேவைப்படுவார்கள். குறும்படம் இயக்கியது உதவினாலும் படப்பிடிப்பு தளத்தில் நிறையவே கற்றுக்கொள்ளவும் இருந்தது.

நீங்கள் குறும்படம் எடுக்கும் போது என்ன மாதிரியான படம் எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தீர்கள்?

இந்த மாதிரி தான் , பீட்சா, ஜிகர்தண்டா.

வணிகப்படங்களாகவா?

வணிகப்படம் என்று எப்படி சொல்கிறீர்கள்? பீட்சா ஒரு வணிகப்படமென்று சொல்ல முடியாது. அது ஒரு புது முயற்சி. ஜிகர்தண்டா ஒரு gangster படமென்றாலும்,. ஒரே Typical Templateல் இல்லாமல் அதில் கொஞ்சம் artistic valueவும் பொழுதுபோக்கு அம்சமும் சேர்ந்திருக்கும். பொழுதுபோக்கு அம்சங்கள் இருப்பதினால் அதை நீங்கள் வணிகப்படங்கள் என்று ஒதுக்க முடியாது. எனக்கென்று ஒரு எல்லை இருக்கிறது. அதை தாண்டி நான் இங்கும் சரி அங்கும் சரி செல்ல மாட்டேன். அந்த எல்லையிலே தான் இனியும் தொடர்வேன்.

நீங்க target audienceக்கு படம் பண்ணுகிறீர்களா?

இல்லை. நான் அப்படி செய்வதில்லை. இவர்கள் சொல்கிற C center ஆடியன்சுக்கும் அது பிடித்து இருந்தது. பெரும்பாலும் எல்லோருக்குமே எனது படங்கள் பிடித்து போய்விட்டது. நான் எல்லோருக்காகவும் தான் படம் பண்ணுகிறேன்.

உங்களது ஜிகர்தண்டா படத்தில் நாயக பிம்பத்தை உடைத்துவிட்டதாக பரவலான விமர்சனங்கள் எழுதப்பட்டன. ஆனால் பாபி சிம்ஹாவோ, விஜய் சேதுபதியோ திரையில் வருகின்ற நேரத்தில் விஜய்க்கும், அஜித்துக்கும் கிடைக்கின்ற கைத்தட்டல்கள் கிடைக்கின்றன. இது நாயக பிம்பத்தை உடைத்துவிட்டதாக ஏற்றுக்கொள்கிறீர்களா?

நாயக பிம்பத்தை உடைத்தது என்று சொல்ல முடியாது. கடவுளை வணங்குவது கூட ஒரு நாயகனை வணங்குவது போலத்தான். நானாக எதிர்பார்த்து எதையும் வைக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை சேதுவின் கதாப்பாத்திர தன்மையை மிகைப்படுத்திக்காட்ட வேண்டிய தேவை இருந்தது. அந்த மிகைப்படுத்துதல் என்பது கூட கதைக்கு தேவையாக இருப்பதாலே வைக்கப்பட்டது.

கொடூரமான ரவுடியின் வாழ்க்கையை படமாக எடுக்கச் செல்பவனுக்கு என்ன ஏற்படும் என்பதே கதை. அதை நியாயப்படுத்தவே அவனைப் பற்றி வார இதழில் கட்டுரை எழுதியவனை தீ வைத்து கொளுத்துகிற காட்சி தேவை எனப்பட்டது. ஆனால் மக்கள் அதை திரையில் பார்க்கிறபோது, அதையே ஒரு ஹீரோயிசமாக ரசிக்க ஆரம்பித்துவிட்டனர்.

சினிமா ஒரு காட்சி ஊடகம். ஜிகர்தண்டா படத்தில் வசனம் மூலமாகவே கதை நகர்த்தபடுகிறதே?

ஜிகர்தண்டா படத்தை அப்படி சொல்ல முடியாது. வசனங்களால் நகரும் படத்திற்கு நான் நிறைய உதாரணங்கள் சொல்வேன். இந்த படம் காட்சி வடிவத்தில் எடுக்கப்பட்டதுதான். ஆனால் வசனங்களின் உதவியில்லாமல் எடுக்க முடியாது. இந்த படம் முழுவதும் காட்சி வடிவத்தில் இருக்கிறது என்று சொல்ல வரவில்லை, ஆனால் அதே சமயம் நீங்கள் சொல்வது போல முழுவதும் வசனமாக கதை நகர்கிறது என்பதையும் நான் ஏற்கவில்லை. சேதுவை கொடூரமான வில்லன் என்றே சொல்லிவிட்டு போகலாமே எதற்காக அவன் இன்னொருவனை தீ வைத்து கொளுத்துவதை காட்ட வேண்டும்.

குறிப்பிட்டு சொல்வதென்றால் , போலீஸ் அதிகாரி கார்த்திக்கிடம், நீங்க கேட்ட மாதிரி ஒருத்தன் இருக்கான், வித்தியாசமாய், கொடூரமாய் என்கிறார். மேலும் சேது கொலை செய்யும்போது headsetல் இரண்டு பேரும் கேட்டுக்கொண்டு இருப்பார்கள், ஆனாலும் அதை கிரிக்கெட் live commentary போல சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இந்த இடத்திலெல்லாம் வசனங்கள் தேவையில்லை தானே?

மக்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்பதில்லை. Filmmaker ஒருவன் படம் செய்வதற்காக காவலர் ஒருவரை அணுகி கேட்கிறான். கேட்கும் போதே வித்தியாசமாய் யாராவது இருக்கிறார்களா? என்று கேட்கிறான். அந்த கேள்விக்கான பதிலையே அந்த காவலர் அவனிடம் சொல்கிறார். அது கதாபாத்திரத்திற்கான மிகைப்படுத்துதல் கிடையாது. கதை சொல்வதில் வசனத்தின் பங்கு என்பது முக்கியமானது. அதற்காக பக்கம்பக்கமாக வசனம் பேசுவது என் படத்தில் இல்லை. கொலையை பற்றி எதையுமே அறியாதவர்கள் அங்கு நடப்பதை கேட்கிறார்கள் என்றால் அப்படித்தான் பேசிக்கொள்வார்கள். இது மனித இயல்பு. இரண்டு பேர் கிரிக்கெட் commentary பார்க்காமல் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால் விக்கெட் விழும் நேரத்தில் அவர்களும் இப்படித்தான் பேசிக்கொண்டிருப்பார்கள். இங்கு அந்த வசனத்தை வைத்தது என்பது அவர்களின் உணர்ச்சி மாற்றத்தை பதிவு செய்யத்தான். அந்த சூழ்ச்சிகளை சிலாகித்துக்கொண்டிருக்கும் போதே தங்களுடன் பழகி வந்த ஒரு கதாபாத்திரத்தை கொலை செய்கிறான் சேது. அப்போது மாறும் அவர்களின் உணர்ச்சியை பதிவு செய்யத்தான் அந்த வசனங்கள்.

நீங்கள் மேற்க்கத்திய கலாச்சாரத்தில் வாழ்ந்திருக்கிறீர்கள், அங்கு வெளியாகின்ற படங்களைப் பெரும்பாலும் பார்த்திருப்பீர்கள். ஆனால், இங்கு வந்து வழக்கமான தமிழ் வணிக சினிமா பாணியிலே படம் எடுக்கிறீர்களே? உதாரணமாக அந்த கிணற்றுக்குள் உள்ள குத்துப்பாட்டு தேவையில்லாமல் திணித்தது போல் இருந்தது?

இதை தேவையில்லாத குத்துப்பாட்டு என்று சொல்லக்கூடாது. இந்த பாடல் தான் படத்தை மாற்றக்கூடிய இடமாக இருக்கிறது. அதற்கு முன் காட்சியில் தான், கதாநாயகி கார்த்திக்கிடம் ”நீ என்னை ஏமாற்றியதாய்..”, அவனிடம் அழுதுவிட்டு வந்திருப்பாள். அவனோ இங்கு சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாய் ஆடிக்கொண்டிருப்பான். அதைப்பார்த்து கோபத்துடன் சேதுவிடம் அவள், கோர்த்து விடுவதாய் கதை மாறுகிறது. இப்போது நல்ல சினிமா என்று பேசுபவர்கள் கேட்கும் கேள்வியே clicheவாகத்தான் இருக்கிறது. அவர்களே cliche வாக மாறிக்கொண்டிருக்கும் பட்சத்தில் சினிமா cliche வாக இருக்கிறது என்று பேச அவர்களுக்கு தகுதியே கிடையாது.

கிணற்றுக்குள் உட்கார்ந்து தண்ணியடிப்பவர்களையும் சீட்டாடுபவர்களையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றோம். தண்ணியில்லாத கிணறு, இதற்கெல்லாம் தான் இன்று பயன்படுகிறது. இது ஒரு கொண்டாட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய ஒரு பாடல்தான். Band வாத்தியத்தில் வரக்கூடிய ஒரு பாடலை குத்துப்பாட்டு என்று சொல்வதே தவறு. மதுரையில் இறப்பாக, இருந்தாலும் விசேஷமாய் இருந்தாலும் band இசை என்பது முக்கிய பங்கு வகிக்கும். ஆக இது ஒரு பண்பாட்டை பதிவு செய்யும் கதையை ஒட்டி வருகின்ற பாடல்தான். அந்தப்பாடலில் ஆடியவர்களும் பாடியவர்களும் அந்த ஊரில் விசேஷங்களுக்கு சென்று ஆடிப்பாடும் கலைஞர்களே. தமிழ் இசையில் band வாத்தியம் கிடையாதா என்ன? band வாத்தியங்களை வைத்து நாட்டுப்புற கலைஞர் பாடுவது என்பது தமிழ் இசையின் இன்னொரு பரிமாணம் தான். இதை எப்படி நீங்கள் ஒரு குத்துப்பாடல் என்று சொல்லலாம்.


இந்தப் படத்தை கதாநாயகியே இல்லாமல்தான் நீங்கள் முதலில் எழுதியதாகவும், தயாரிப்பாளர் கேட்டதற்கு இணங்கியே மாறுதல் செய்ததாவும் உங்களது மற்ற நேர்காணலில் சொல்லியிருக்கிறீர்கள். இப்படி சமரசம் செய்துகொண்டு படம் செய்யும் போது நீங்கள் நினைத்த கதை பாதிப்படையாதா?


சமரசம் செய்யவில்லை என்றால் இங்கு படமே செய்ய முடியாது. அதையே படத்தில் பழனி கதாப்பாத்திரமும் சொல்லும். சமரசம் செய்ததாலே நான் இன்று உங்கள் முன் இருக்கிறேன். சமரசம் செய்யாமல் எந்த ஒரு திரைப்படக் கலைஞர்களாலும் ஒரு நிலையை அடைய முடியாது. ஆனால் அந்த சமரசத்திற்கென ஒரு எல்லையுண்டு . இதே கதாநாயகி கதாபாத்திரத்தை சும்மா வந்து போவதாய் திணித்திருந்தால் அது ஒரு கேவலமான சமரசம். நானே தயாரிப்பாளராக இருக்கின்ற பட்சத்தில் இதுமாதிரியான சமரசங்களுக்கு வேலையே இல்லை, ஆனால், இன்னொருவர் பணம் தருகின்றபொழுது அவரது கோரிக்கையின் அடிப்படையில் சில சமரசங்களைச் செய்ய முற்படுகிறோம். அப்போது கூட அந்த கதாநாயகி பாத்திரத்தை எந்த அளவிற்கு அர்த்தமுள்ளதாய் உபயோகிக்க முடியுமோ, அதையே நான் செய்திருக்கிறேன்.

என்னதான் நீங்கள் சொன்னாலும், ஒரு பார்வையாளனாய் படம் பார்க்கிற போது கதாநாயகிதான் கதையை வேறு இடத்திற்கு நகர்த்தப்பட்டிருப்பது திணித்துள்ளதாய் தெளிவாய் தெரிகிறதே?

எதற்கு இந்த படத்தில் கதாநாயகி என்ற கேள்வி வருகிற மாதிரி நிறைய படங்கள் வந்திருக்கிறது. திரைக்கதை ஆசிரியராக நான் உருவாக்கும் கதாபாத்திரங்கள் என் சுதந்திரத்திற்கு உட்பட்டது. நான் கதாநாயகி இல்லாமல் எழுதிய கதையில் சேதுவே கதாநாயகனாய் நடிக்கலாமே என்று சொல்லுவது இன்னொரு பெண் பாத்திரம். அவள் கார்த்திக்கை காதலிக்கும் பெண்ணாக இல்லை. எனவே எப்படியும் எனக்கொரு பெண் கதாபாத்திரம் தேவை. நான் அதையே கதாநாயகியாக்கி அவள் செய்கிற சூழ்ச்சியாக எழுதினேன். இந்த கேள்வியே நான் கதாநாயகி இல்லாமல் தான் முதலில் கதையை எழுதினேன் என்று நான் ஒப்புக்கொண்டதால் தானே உங்களுக்கு உருவாகியிருக்கிறது.

ஏனெனில் அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரம் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. ஆகவே இதை திணித்தது என்று சொல்லக்கூடாது.

படத்தில் சங்கிலிமுருகன் கதாபாத்திரம் சத்யஜித் ரே படம் எடுக்க முடியாது என்று சொல்வது போல வரும். இது எதார்த்த சினிமா செய்ய ஆசையிருக்கும் இளம் படைப்பாளிகளுக்கு எதிர்மறையாகவும் தடையாகவும் உருவாகும் வாய்ப்பு உள்ளதே?

அவர் "இங்கே முதல் படத்திலே எல்லோரும் சத்யஜித்ரே ஆகிவிடவேண்டும் என்ற கனவில் தான் வருகிறார்கள். நீ புத்திசாலி என்றால் சமரசம் செய்து முதல் படத்தில் ஜெயித்து விட்டு பிறகு நீ நினைக்கிற மாதிரியான படங்களை எடு”, என்று கார்த்திக்கை தெளிவுப்படுத்தும் கதாபாத்திரம்.

முதல் படமே “ரே “மாதிரி இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு என்கிறீர்களா?

தவறு இல்லை. ஆனால் படத்தில், சமரசம் செய்யாமல் எடுக்க நினைத்து தோற்றுப்போன அந்த கதாபாத்திரம், குழப்பத்தில் இருக்கும் இளம் படைப்பாளியான கார்த்திக்கிற்கு தன்னைப் போல ஒரு நிலைமை வந்துவிடக்கூடாது என்ற ஆதங்கத்தில் சொல்வது.

வருடத்திற்கு 200 படங்கள் சமரசம் செய்துகொண்டுதான் வருகிறது. அப்படி சமரசம் செய்து படம் எடுத்தும் தோற்றவர்கள் இருக்கிறார்களே?

இது சினிமா கலைஞர்களுக்கு சொல்லும் அறிவுரை இல்லைு. இரண்டு கதாபாத்திரங்கள் சந்திக்கும் இடம். ஒன்று, தன் கண்முன்னே இருக்கும் நல்ல வாய்ப்பை சமரசம் செய்தால் உபயோகித்து வென்றுவிடலாம். ஆனால் சமரசம் செய்ய மனம் வராது தவிக்கின்ற கார்த்திக். இன்னொன்று, அப்படி வந்த வாய்ப்பை சமரசம் செய்யாமல் வாழ்வில் தோற்ற பழனி. அவனிடம் இவர் சொல்லும் வசனங்கள் அவனை ஊக்கப்படுத்தவும் அந்த கதாபாத்திரத்தின் வளர்ச்சிக்கும் கதை நகர்த்துவதற்கும் அடிப்படையாய் இருக்கிறது.


மற்றும் நீங்கள் சொன்னது போல சமரசம் செய்து தோற்றவர்களும் இருக்கிறார்கள், ஜெயித்தவர்களும் இருக்கிறார்கள். அதே சமயம் சமரசம் செய்ய மாட்டேன் என்று போலியாய் திரியும் நபர்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு பத்து உலக படத்தை பார்த்துவிட்டு, பத்து புத்தகங்களை படித்துவிட்டு தன்னை ஒரு மேதாவி என்று நினைத்துக்கொண்டு சொல்கிறார்கள். எல்லாருமே அடிப்பட்டு தான் தெரிந்துகொள்கிறார்கள்.
சத்யஜித் ரே எப்படி வந்தாரென்றால் அவருடைய கற்றதலில் இருந்துதான். ஆக சும்மா சமரசம் செய்யமாட்டேன் என்று போலியாக அலையாமல், சின்ன சின்ன சமரசம் செய் என்கிற பழனியின் அறிவுரையை கார்த்திக் ஏற்றுக்கொள்கிறான்.

கோவா, கேரளா Film Festivalகளில் தமிழ்படங்களை அதிகமாய் தேர்ந்தெடுப்பது இல்லையே. இதை குறித்து உங்களது பார்வை?

நியுயார்க்கில் நடக்கப்போகிற South Asian international Film Festivalல் ”ஜிகர்தண்டா” தேர்வாகியிருக்கிறது. கோவா ஃபிலிம் பெஸ்டிவலில் மலையாளத்தில் இருந்து ஆறு படங்களும், பெங்காலியில் இருந்து நிறைய படங்களும் தமிழில் இருந்து ஒரே படமும் தேர்வாகி திரையிடப்படுகிறது. எனக்கு தெரிந்து அது Juryக்களை பொறுத்து அமைகிறது. அங்கு நடக்கும் விவாதங்களை பொறுத்தது. அங்கு juryயாக யார் வருகிறார்கள், அவர்களுக்கு நடுவில் என்ன நடக்கிறது? அவர்கள் யாருக்கு ஆதரவாய் பேசுகிறார்கள் என்பது நமக்கு தெரிவதில்லை. இன்னும் சொல்லப்போனால் ஜிகர்தண்டா படம் நாங்கள் காலதாமதமாகவே அனுப்பினோம். இது போன்ற ஏகப்பட்ட காரணங்களால் பல நல்ல திரைப்படங்கள் அங்கு சென்று சேராமல் இருந்திருக்கலாம். போன வருடம், இந்த வருடமென ஒரு சில படங்கள் தேர்வாகிக்கொண்டு வருகிறது. மலையாளத்தில் இருந்து ஆறு படங்கள் தேர்வாகிறதே என்று ஒப்பிட்டு பேசுபவர்கள் தமிழில் இருந்து இப்போது உலகின் மிகச்சிறந்த Toronto Film Festivalல் ”காக்காமுட்டை”, என்ற படம் தேர்வாகியுள்ளது என்பதை மறந்து விட வேண்டாம். எனவே நீங்கள் மொத்தமாக தமிழ் சினிமாவில் இப்படியான நிலைமை இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது.

அதற்காக தமிழ் சினிமா அந்த இடத்தை எட்டி விட்டது என்றும் சொல்ல வரவில்லை. நல்ல படங்களும் எடுத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள், திரைப்பட விழாக்களுக்கும் அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அதற்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருப்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு படம் எடுத்து முடித்தவுடன், அது வெளியாகி வணிகம் பார்த்த பத்து பதினைந்து நாட்களில் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் படத்திற்குமான உறவு மறைந்து விடுகின்றது. இங்கு உருவாகும் இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் Film Festival பற்றிய போதுமான விழிப்புணர்வு இருப்பதாய் உணர்கிறீர்களா?

இது நீங்கள் எந்த நோக்கத்தில் படமெடுக்க வந்திருக்கிறீர்கள் என்பதை பொறுத்தே அமைகிறது. ஒரு படம் வணிக வெற்றி பெற்றவுடன், அடுத்த படம் எடுக்க செல்வது ஒன்று. படத்தோடு பயணம் செய்வது என்பது இன்னொன்று. ஜிகர்தண்டா படம் Berlinale Film Festivalல் திரையிட்டு வெளியிடுவதற்கான வாய்ப்பை அவர்களிடம் படத்தின் ஒரு வரி கதையை சொல்லி படத்தை பார்க்கவும் ஏற்பாடு செய்தோம். அவர்களும் பார்த்துவிட்டு ஒப்புதல் அளித்த நிலையில் தயாரிப்பாளர் மறுத்துவிட்டதால் தான் அங்கு சென்று திரையிட முடியவில்லை. தயாரிப்பாளர்களுக்கு அவர்களுடைய பிரச்சனை. படம் இங்கு வெளியிடுவதற்கு முன் அங்கு திரையிட்டால் திருட்டு VCDக்கள் வந்துவிடுமோ என்று பயப்படுகிறார்கள். இப்படி இதில் நிறைய போராட்டங்கள் இருக்கிறது.
Berlinale மட்டுமில்லாமல் அதன் பிறகு இரண்டு Film Festivalகளில் திரையிட வந்த வாய்ப்பையும் நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்கும் காரணங்கள் சொல்லி தயாரிப்பாளர் நிராகரித்துவிட்டார். சில Film Festivalகளில் திரையரங்கங்களில் வெளியாகாத படங்களே திரையிடப்படுகிறது. லண்டன்,துபாய் Film Festivalகளில் திரையிட முடியாமல் போனதற்கு இது தான் காரணம். அதற்கு முன்பே அந்த நாடுகளில் படம் வெளியாகிவிட்டது. இதையெல்லாம் தயாரிப்பாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நல்ல படம் எடுக்கின்ற ஒவ்வொரு இயக்குனரும் Film Festivalக்கு அனுப்ப போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதையும் மீறி சில படங்கள் செல்கிறதென்றால், தயாரிப்பாளருக்கு அந்த சந்தை பற்றி தெரிந்திருக்கிறது என்பதே அர்த்தமாக இருக்கும். ஆனால் இன்னமும் அந்த சந்தையின் வருமானத்தை பற்றிய அறியாமையில் தான் இங்கு பலர் இருக்கிறார்கள். பிரான்ஸ், பெர்லின் போன்ற Film Festivalக்கு சென்று வெளியிட்டு, அங்கு திரையிடப்பட்டது என்று DVD, Satellite Rightsவைத்து விற்றால் இங்கு இப்போது வரும் வசூலுடன் ஒப்பிடவே தோன்றாது. அத்தனை அதிகமாய் விலைபோகும். ஆஸ்திரேலியா Film Festivalல் திரையிட்டால், அதை அங்கேயே DVD யாகவும் அங்குள்ள தொலைக்காட்சிகளுக்கும் விற்கலாம். இதை நிறைய Indie Filmmakers செய்கிறார்கள். அந்த படங்களை திரையிட்டு இந்த நிறுவனம் சம்பாதித்த பணம், இங்கே இருக்கிற பெரிய வணிக வெற்றியடைந்த படங்கள் கூட ஈட்டியிருக்காது. ஆனால் அது இங்கு சாத்தியமாக தயாரிப்பாளர்கள் முன் வரவேண்டும்.

தமிழ் சினிமாவில் மாற வேண்டும் என்று நினைப்பது ?

Censor Certification வரி விதித்திருப்பதை இல்லாமல் செய்தால் இங்கு இன்னும் Bold Script வர வாய்ப்புள்ளது.

உங்கள் நண்பர் சோமீதரன் யாழ்ப்பாண நூலக எரிப்பை, "எரியும் நினைவுகள்" என்று ஆவணப்படம் எடுத்து பதிவு செய்துள்ளார். உங்களுக்கு இது போன்று ஆவணப்படம் இயக்குவதில் ஆர்வம் உள்ளதா?

ஆவணப்படம் இயக்குதாய் ஒரு எண்ணம் உள்ளது. விரைவில் இயக்குவேன் என்றே நினைக்கிறேன்.

”இனம்”, படம் நன்றாக இருக்கிறது என்று உங்கள் முகப்புத்தக பக்கத்தில் எழுதியிருந்தீர்களே?

வெளிப்படையாய் சொல்லவேண்டுமென்றால் எனக்கு ஈழப் பிரச்சனைக்கு பின்னிருக்கும் அரசியல் பற்றி முழுதாய் தெரியாது, அந்த படத்தை முதலில் நான் பார்க்கும் போது அது இலங்கை ராணுவத்தை விமர்சித்தும், அவர்கள் செய்த அநியாயங்களை சொல்வதாகவே எனக்கு தெரிந்தது. ஆனால் படத்திற்கு அத்தனை எதிர்ப்பு கிளம்பிய உடன் தான், அந்த படத்தை எதிர்த்த சில filmmakers மற்றும் என் நண்பர்கள் சிலரிடம் விசாரித்தேன். அந்த படத்தில் சில விஷயங்கள் இப்படி காட்டியிருக்கிறார்கள் என்று என்னிடம் சொன்னார்கள். அதன் பிறகு தான் அதிலுள்ள சில நுணுக்கமான, தமிழர்களுக்கு எதிரான பதிவுகளை நான் புரிந்துகொண்டேன்.

சினிமா மற்றும் ஈழ அரசியல் சார்ந்தும் இந்த படத்தில் இருந்து நான் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டுள்ளேன்.

தற்போது தமிழ் சினிமாவில் வரக்கூடிய படங்களை புதிய அலை படங்கள் என்றும், இயக்குனர்களை புதிய அலை இயக்குனர்கள் என்றும் சொல்லும் சூழல் உருவாகியுள்ளதே? இது உண்மை என்று நினைக்கிறீர்களா?

புதிய அலை என்று எதன் அடிப்படையில் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. நிறைய புது இயக்குனர்கள் புதிது புதிதாக கதையையும், கதை சொல்லும் விதத்தையும் முயற்சித்து பார்க்கிறார்கள். எனவே கதை சொல்லும் விதத்தில் வேண்டுமென்றால் இப்போது ஒரு புது அலை இங்கு உருவாகியிருக்கிறது என்று சொல்லலாம்.


அப்படி புதிதாக வந்த இயக்குனர்களில் உங்களுக்கு பிடித்தவர்கள்?


நலன் குமாரசாமி, சதுரங்க வேட்டை வினோத், முண்டாசுபட்டி இயக்குனர் ராம்குமார், அருண் (பண்ணையாரும் பத்மினியும்)., பா.ரஞ்சித், பாலாஜி தரணிதரன் என இன்னும் நிறைய பேர் இருக்கின்றனர்.

உங்களுக்கு எது போன்ற படங்களை எடுக்க விருப்பம்?

என்னை inspire செய்த செய்யக்கூடிய கதைகளை எடுத்து தான் நான் படம் செய்கிறேன். படம் எடுக்கும் போதே, இந்த படம் பார்த்து இரண்டு நாட்களுக்கு யாரும் தூங்க கூடாது என்று நினைத்து நான் எடுப்பதில்லை. ஒரு கதை எழுதும் போது அதில் உள்ள கதாபாத்திரங்கள் வழியே தான் கதை நகரும். ”ஜிகர்தண்டா”, படம் ஒரு gangster movie என்று முடிவாகுவதற்கு முன்பே சேது, கார்த்திக் என்ற இரண்டு குணச்சித்திரங்களை மையமாக வைத்தே கதை எழுதிக்கொண்டிருந்தேன், மற்றவை எல்லாம் போக போக வந்து சேர்ந்துகொண்டதுதான். அதனால் இரண்டாம் பாதியில் எல்லோரையும் சிரிக்க வைக்க வேண்டும் என்று எடுத்தது இல்லை. அது கதை எழுதும் போது வந்தது. அதே போல, நீங்கள் கதை எழுதும் போதே, பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்து எழுதினால், அது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தாது.

உங்கள் படத்திற்கு வந்த விமர்சனங்களை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

எல்லா விமர்சனங்களையும் நான் பார்ப்பதும் படிப்பதும் உண்டு. சில நியாயமானதாய் இருக்கும், சில நான் முன்னே சொன்னது போல clicheவாக போலியாய் இருக்கும். அவர்களிடம் போய் நீ ஏன் இப்படி எழுதியிருக்கிறாய் என்று சண்டையிட முடியாது. படம் பொது பார்வைக்கு வந்த பிறகு ஆயிரம் விமர்சனம் வரும். நியாயமான விமர்சனங்களை மதித்து படிக்கிறேன். யாருடைய விமர்சனம் போலியாய் இருக்குமென்று. எனக்கு தெரியும் அப்படிப்பட்ட விமர்சனங்களையும் படித்து சிரித்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விடுவேன்.

எந்த ஒரு இடையூறும் இல்லாமல் நான் இதை தான் செய்வேன் என்ற தமிழ் சினிமாவில் படம் செய்ய முடியுமா?

படம் எடுக்க முடியும். ஆனால் அதை திரையரங்குகளில் வெளியிட முடியுமா என்று தான் தெரியவில்லை. உங்களிடம் ஒரு கதையும் அதற்கான பட்ஜெட்டும் இருக்கிறதென்றால் தைரியமாய் நீங்கள் படம் எடுத்துவிடலாம். யார் உங்களை தடுக்க முடியும். ஆனால் நீங்கள் அதை 150 திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்று நினைக்கும் போது தான் நிறைய பிரச்சனை வரும். யாரும் படத்தை வாங்க தயாராக இருக்க மாட்டார்கள். மற்றபடி நீங்கள் film festival அனுப்பி சம்பாதித்து கொள்வீர்கள் என்றால் தாராளமாய் செய்யலாம்.

உங்கள் அடுத்த படம் பற்றி?

’இறைவி’, எனது அடுத்த படம். இது ஒரு லவ் டிராமா. படத்தில் குடும்பம், Romance மற்றும் காமெடி இருக்கும்.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: htt://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </