இயக்குனர் மிஸ்கின் - நேர்காணல்:
Form Is Beauty
சண்முக ராஜா – மிஷ்கின் சின்ன அறிமுகம்?
72 தொழில்கள் செய்து தோற்றுப்போன ஒன்றுமே தெரியாத இளைஞன்., வாழ்க்கை என்றால் என்ன? வாழ்க்கையில் அடுத்து என்ன செய்ய வேண்டும்?, இப்படியான எந்தவித விசாரிப்புகளுமற்று, தன்னைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தவன், தான் எப்படி வாழ்க்கையில் முன்னேறுவது? என்பதை மட்டுமே சிந்திப்பவன், சினிமாவில் சேர்ந்தால் வாழ்க்கையில் உயரலாம் என்றெல்லாம் நினைத்தவன்தான் ராஜா. சினிமாத்துறைக்கு வந்த பின்னால் இவன் அறிந்து கொண்டது யாதெனில், சினிமா வாழ்க்கையையும், வாழ்க்கையினுடைய விசாரிப்புகளையும், தன்னுடைய அறிவையும், உயர்த்துகிற இடம். அவன் இப்பொழுது வேறொரு கற்பனையில் இருக்கிறான். வேறொரு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றான். ராஜா என்ற இளைஞன் மிஷ்கினிடம் இல்லை. ராஜா செத்துவிட்டான். மிஷ்கின் இப்பொழுதுதான் வாழவே ஆரம்பித்திருக்கிறான்.
ஒரு கதைக்கான ஆரம்ப புள்ளி கிடைத்தவுடன் அடுத்ததாக உங்கள் தேடல், அல்லது ஆய்வு, எதை நோக்கியதாக இருக்கும்?
ஒரு கதைக்காக பத்து, பதினைந்து ஆரம்பப் புள்ளிகள் கிடைக்கும். அது சினிமாவாக மாறுவதற்கு இரண்டு கேள்விகள் மிக முக்கியமானது. சிலருக்கு இந்தக் கேள்விகள் மாறுபடும். இந்த நடப்பு உலகத்திற்கு அந்தக் கதை எப்படி பொருந்துகிறது?, அந்தக் கதை எவ்வளவு கமர்ஷியலாக இருக்கிறது? என்றும் பல இயக்குனர்கள்ஆராய்கின்றனர். இதெல்லாம் பொய்.
என்னைப்பொறுத்தவரை,
இந்தக்கதையை இப்பொழுது நாம் எதற்காக படமாக்க வேண்டும். ?
கதைக்குள் பயணிக்கின்றபொழுது ஆன்ம ரீதியாக நாம் என்ன தெரிந்துகொண்டு வெளியே வரவேண்டும்.? இதற்கு இந்தக் கதையில் வழிமுறைகள் இருக்கின்றனவா? என்பதைப் பார்த்துக்கொண்டு தேர்வுசெய்வேன்.
”ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”, எழுதுகின்ற பொழுது நான் கொலைகாரர்களை பார்த்ததில்லை. ஆனால், அவர்களைப் பற்றி நிறைய படித்திருக்கிறேன், கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகையால், ஒரு கொலையாளியாக நான் இருந்தால் எப்படியிருக்கும்?. கொலையாளி தர்மம் சார்ந்த மனிதனாக இருந்தால் எப்படியிருக்கும்? என்று அந்த வாழ்க்கைக்குள் போய் நான் வெளியே வருகின்ற பொழுது புது மனிதனாக மாறுகிறேன்.
”பிசாசு” கதை எழுதுகின்ற பொழுதும், பிசாசுகளை விட மோசமானவர்கள் மனிதர்கள் தான். மனிதர்களுடன் ஒப்பிடுகின்றபொழுது பிசாசு ரெம்ப நல்லது என்று தோன்றும். சின்ன வயதிலிருந்தே ”அங்க போகாதே, பிசாசு இருக்கிறது, இங்கே போகாதே, பிசாசு இருக்கிறது”, என்கிறார்கள். இந்த 17 வருடத்தில் தமிழ் சினிமாவில் நிறைய மனிதபிசாசுகளைப் பார்த்துவிட்டேன். ஆகையால் இதைவிட பிசாசுகள் கொடியவைகள் கிடையாது என்று அந்த உலகத்திற்குள் சென்றால்., உண்மையில் பிசாசுகளின் உலகம் மிக நல்ல உலகமாக இருந்தது.
ஒவ்வொரு கதை எழுதுகின்ற பொழுதும் என்னையும், என் ஆன்மாவையும் கதை எப்படி சுத்தப்படுத்துகிறது, என் அறிவை எப்படி பலப்படுத்துகிறது என்று பார்க்கிறேன்.
கள/கதை ஆய்வு?
சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், நான் அமெரிக்கா செல்கின்ற பொழுது மைனஸ் டிகிரியில் குளிர் என்று சொன்னார்கள், உடனே ஸ்வட்டர் வாங்கிக்கொண்டேன் அதுதான் கள ஆய்வு. அந்தக் குளிரைத் தாங்க ஸ்வட்டர் வாங்கியாகவேண்டுமல்லவா? அதைப் போல படம் என்றால் அதற்குப் பின்பாக ஆய்வுகள் மிக முக்கியமானவை.
நல்ல சினிமாவிற்கான மாற்றங்கள் யாரிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும்?
சினிமாவில் ஒருவர் செய்கின்ற பிரச்சனையை மற்றவர்களின் மேல் திணிக்க முயல்கிறோம். நல்ல படங்கள் வராமல் இருப்பதற்கு ஒருகாலத்தில் இயக்குனர்கள் நடிகர்கள் மேல் குற்றம் சாட்டினார்கள். பின்பு இந்தப் பழி தயாரிப்பாளர்களின் மேல் விழுந்தது. பின்னர் தியேட்டர் வினியோகஸ்தர்களின் மேல் இந்தப் பழி திரும்பியது. அவர்கள், இப்படி படம் எடுத்தால்தானே மக்கள் திரயரங்கத்திற்குள் வருவார்கள் என்றனர். என்னைக் கேட்டால் நேரடியாக மக்களைத்தான் சொல்வேன். என்றைக்கு மக்களாகவே நல்ல படம் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறார்களோ அன்றைக்கு எல்லாமே மாறிவிடும்.
|
ஐந்து பாட்டுகள் வரக்கூடிய திரைப்படத்தில் ரசிகர்கள் வெறுப்பாகயிருக்கின்றது என்று தியேட்டரை விட்டு எழுந்துசென்று விட்டால் அல்லது ஒரேயொரு தியேட்டரில் ஆயிரம் பேரும் ’ஏன்யா! படத்துக்கு நடுவுல பாட்டு போட்றீங்க’னு, திட்ட ஆரம்பிச்சாங்கன்னா, தமிழ்சினிமாவினுடைய பார்வையே மாறும். மற்றொரு ஆயிரம் பேர் ”என்னய்யா படம் எடுக்கிறீங்க”,ன்னு அந்த தியேட்டரை விட்டு எழுந்துபோனால் அதன் பின்னர் நல்ல சினிமாக்கள் உருவாகும். மாற்றத்தை இயக்குனர் , தயாரிப்பாளர் என்ற தனிநபர் கொண்டுவரமுடியாது. இந்த ஆயிரம் பேரும் தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
இவர்கள் நினைத்தால் தான் நடக்கும். ஒரு வருடத்திற்கு சினிமா தயாரிப்பாளரின் கையில் இருக்கும், ஒரு வருடம் இயக்குனரின் கையில் இருக்கும். பல வருடங்களாக பெரிய பெரிய நடிகர்களின் கையில் இருந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலம் விநியோகஸ்தர்களின் கையில் இருக்கும். இதெல்லாம் மாற்றமே கிடையாது. இதெல்லாம் மாறி ஒரு மாற்றமும் வந்ததில்லை. பெரிய ஏமாற்றம் தான் வந்திருக்கின்றது.
உண்மையான மாற்றம் மக்களின் மன மாற்றம்தான். அந்த மனமாற்றம் வந்துவிட்டால் நாங்களெல்லாம் நிச்சயமாக நல்ல படம் செய்துவிடுவோம்.
ஆயிரம் பேரை முதலில் மாற்றிவிட்டால், தமிழ்சினிமாவில் நல்ல படங்கள் வந்துவிடும் என்றால், அந்த ஆயிரம் பேரை நல்ல சினிமாக்களை நோக்கி யார் திருப்புவது. ? வெகுஜன சினிமாக்களின் மோகத்திலேயே நின்றுகொண்டிருப்பவர்களிடம் நல்ல சினிமா இதுதான் என்று யார் அடையாளப்படுத்துவது?
திடீரென்று ஒரு நாள் ’மகாத்மா காந்தி’, வெள்ளைக்காரர்கள் அடிக்கும்பொழுது யாருமே திருப்பி அடிக்கக்கூடாது என்று சொல்கிறார். உலகம் முழுமைக்கும் ஒரு புது மொழி கற்றுக்கொடுக்கிறார். தலையில் அடித்து ரத்தம் வெளியேறினாலும் வெள்ளையர்களை நீங்கள் எதிர்ப்பது கூட கூடாது என்று சொல்கிறார். அது அகிம்சை. இதனை இந்த ஊரே , நாடே பின்பற்றியதே. உடனே சுதந்திரம் கிடைத்துவிட்டது. அந்த மாதிரியான சுதந்திரத்தை மக்கள் தான் எங்களுக்குத் தரவேண்டும். காந்தி மாதிரி பல காந்திகள் இந்த சினிமா உலகில் இருக்கிறார்கள்.
சென்சார் விதிமுறைகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள், அவர்கள் உங்கள் படைப்பு சுதந்திரங்களில் தலையிடுவதாக உணர்கிறீர்களா?
13 வயது நிரம்பிய என் மகள் என்னிடம் ”காமசூத்ரா ”படிக்கட்டுமா? என்று கேட்டால், நான் படிக்கக்கூடாது என்றுதான் சொல்வேன். இது சென்சார் கிடையாது. கலவியில் செய்கிற 64 கலைகள் அந்தக் குழந்தைக்கு தேவைப்படாது. அந்தக் கலைகளை அவள் மனநிலை தாங்காது. அவளே பதினெட்டு வயது நிரம்பியவுடன் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டால், ”காமசூத்ரா”, நானே வாங்கித்தருகிறேன் படி என்று சொல்வேன்.
ப்ளாட்டோவின் Rebuplic-ல் ஹோமரின் இதிகாசங்களை சென்சார் செய்யவேண்டும் என்கிறார்.
உலகம் முழுவதும் சென்சார் செய்யப்படவேண்டும், அல்லது சென்சார் செய்யப்படக்கூடாது என்ற கருத்து வேறுபாடு நிறைய இருக்கிறது. இப்பொழுது ஈரானை எடுத்துக்கொண்டால், அவர்கள் சினிமாவே எடுக்கமுடியாமல் செல்போனில் நிகழ்வுகளை பதிவுசெய்து சினிமாவாக உருவாக்குகிறார்கள். எல்லா காலகட்டத்திலும் இதை செய்யவேண்டும், இதை செய்யக்கூடாது என்று ஒருவர் சொல்கிறார், மற்றவர் மறுக்கிறார். இதைச் செய்ய வேண்டும் என்று நினைத்து செயல்படுபவர்கள், எழுத்தாளர்களும், இயக்குனர்களும்.
இந்தச் சமூகம் இதனைத் தாங்காது என்று தணிக்கைத்துறை சொல்கிறது. இதில் எது நியாயம், அல்லது எது அநியாயம் என்று பார்த்தால் இரண்டு பக்கமுமே நியாயமும் இருக்கிறது, அநியாயமும் இருக்கிறது.
வன்முறையும் வாழ்க்கையில் இருக்கிறதே என்று அதனை நீங்கள் சினிமாவில் அதிகமாக காட்சியாக்குகின்றபொழுது அதனைப் பார்க்கின்ற பார்வையாளன், பக்கத்துவீட்டில் ஒரு பிரச்சனை என்றாலும் சினிமாவில் பார்த்த வன்முறையை அந்தப் பக்கத்துவீட்டுக் காரனின் மேல் பரிசோதித்துப் பார்க்கிறான். ஆனால் ஒரு விஷயத்தைக் காட்டாமலேயே பார்வையாளனைத் தூண்டவைக்க முடியும் அதுதான் சினிமா.
என்னைப் பொறுத்தவரை, ஒரு சமூகத்திற்கு சென்சார் மிகவும் அவசியம். ஏனெனில் நம் இந்திய நாட்டில் பல்வேறு மதங்கள் பல்வேறு ஜாதிகள் இருக்கின்றன, ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவன் மட்டும், தனக்கு நேர்ந்த பிரச்சனைகளை சினிமாவில் காட்டிக்கொண்டேயிருந்தால் அது மற்ற மதத்தினருக்கும் மனதில் சஞ்சலம் ஏற்படுத்தும். இது வீணான சச்சரவுகளை சமூகத்தில் உண்டாக்கும். ஆனால், அதே வேளையில், இச்சமூகத்திற்கு இதன் மூலம் மிகச்சிறந்த கருத்துக்களைச் சொல்லவேண்டும் என்று நினைப்பவன் கூட இந்த சென்சாரில் பாதிக்கப்படுகிறான்.
என்னுடைய எல்லா படங்களிலும் தர்மத்தையும் அன்பையும் மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆனால், அந்தப் படத்திற்கும் சென்சாரில் ஏ சான்றிதழ் கிடைக்கின்றபொழுது வருத்தமாகத்தான் இருக்கிறது. அதற்காக, சென்சார் உறுப்பினர்களிடம் இது குறித்து வாதத்தில் ஈடுபடுவதில்லை, அவர்களும் படித்தவர்களாகயிருக்கிறார்கள். நிறைய படங்கள் பார்க்கிறார்கள். அவர்களை நான் மதிக்கிறேன். என் அம்மா என்னை வலியில் பெற்றாள் , என் வலியில் எனது படங்களைத் தந்துகொண்டிருக்கிறேன்.
இது உங்கள் கேள்வியிலிருந்து தப்பிப்பதாக ஆகாது. இந்த கோபம் முதல் இரண்டு படங்களுக்கு இருந்தது. ’பிசாசு’, படத்திற்குப் பின்பாக எனக்கு கோபமே வராது. என் படங்களில் எந்த தொப்புள்களையும் காட்டவில்லை. பெண்களின் அதரங்களை வைத்து காசாக்காவில்லை. அதனால் சென்சாரின் மீது எனக்கு பயமும் இல்லை.
நான்கு பாட்டுகள், மூன்று சண்டைக்காட்சிகள், ஹீரோ, இரண்டு ஹீரோயின் இதெல்லாம் இருந்தால் கமர்ஷியல் சினிமா என்கிறோம். இது அவர்களுக்கான வரையறை. அப்படியெனில் உலகசினிமா?
இன்றைக்கு உலகத்திலேயே மிக மோசமான படம் பண்ணுகிறவர்கள் ஹாலிவுட் காரர்கள்தான்.
உலகப்படம் என்பதில் ஹாலிவுட் படங்களை நீக்கிவிட்டு ஃபிரெஞ்சு படங்கள், இராணிய படங்கள் என்று சொல்வதுபோல தமிழ்நாடும் உலகத்தைச் சார்ந்தது தானே. உலக வரைபடத்தில் தமிழ்நாடும் இருக்கவே செய்கிறது. இங்கு எடுக்கப்படுகின்ற பாலாஜிசக்திவேலின் படமோ, ராமின் படமோ நல்ல படம்தான். இங்கு தமிழகத்திலிருந்து வருவதும் உலகப்படம் தான்.
கமர்சியல் சினிமாக்களை நாம் இப்படி புரிந்துகொள்ளலாம். மக்கள் அதிகமாக படம் பார்க்க வரக்கூடிய இடத்தில் கமர்ஷியல் சினிமாக்களின் சந்தை மிகவும் அதிகமாக இருக்கின்றது. ’தேவர் மகன்’, படத்தை மக்கள் மீண்டும் மீண்டும் பார்த்தார்கள். அதே மக்கள் ’சகலகலா வல்லவனை’யும் பலமுறை பார்த்தார்கள். இந்த இரண்டு படங்களில் பல ஆண்டுகள் கழித்தும் ஒரு படம் பேசப்படுகிறது என்றால் அங்கு ’தேவர் மகன்’, மட்டும் தான் பேசப்படும். ஏன் என்றால், வாழ்க்கைக்கு தேவையான செய்திகளும், நம் ரசனையை மேம்படுத்தக்கூடிய விஷயங்களும் ’தேவர் மகன்’, படத்தில்தான் இருக்கிறது. என்னைக்கேட்டால் இந்தியாவின் மிகச்சிறந்த திரைக்கதையென்று தேவர் மகனைச் சுட்டிக்காட்டுவேன்.
|
பின்பு ஏன் ’சகலகலா வல்லவன்’, மாதிரியான படமும் அதே நேரத்தில் ஓடுகிறது என்றால், மக்கள் வேறு வழியில்லாமல்தான் பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன். எல்லாருமே பாலாஜி சக்திவேல், பாலா, ராம் மாதிரியாக ஆகிவிட்டால், வேறு வழியே கிடையாது, மக்கள் நல்ல படங்கள் தான் பார்த்தாக வேண்டும்.
படங்களின் எண்ணிக்கை அதிகமாவது நல்ல படங்கள் உருவாகின்ற சூழலை எதிர்க்கிறதா?
ஒரு வருடத்திற்கு 200 படங்கள் வெளியாகின்றன. மக்களுக்கு படம் பார்த்தே ஆகவேண்டும். அவர்களுக்கு நிறைய நேரங்கள் இருக்கிறது.
முன்பெல்லாம் அப்பாவிற்கு ஒரு கடிதம் எழுதவேண்டுமென்றால் அரை நாள் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் இப்பொழுதோ செல்போன் வந்திருக்கிறது. இது அவர்களுக்கு கடிதம் எழுதும் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. அவர்களுக்கு நேரம் அதிகமாக இருப்பதால் சினிமாவிற்கு செல்கிறான். இந்தமாதிரியான மனிதர்களை கணக்கில் வைத்தே ஒரு வாரத்திற்கு நான்கு படங்கள் வருகின்றன. அவன் என்ன செய்கிறான், விடுமுறைநாட்களில் காலையில் ஒரு படம், மதியம் ஒரு படம், இரவு ஒரு படம் என்று பார்க்கிறான்.
ஆனால், எனக்கு ஒரு கதை எழுத ஆறு மாதங்கள் ஆகின்றது. ஆறு மாதத்திற்கு ஒருமுறை மக்கள் படம்பார்ப்பார்களா? மக்கள் ஆறு மணிநேரத்திற்கு ஒரு படம் பார்க்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். பின்பு எப்படி நல்ல படம் வரும். இப்படி நல்ல படம் வராமல் போனதற்கு நானும் ஒரு காரணம் என்று தான் சொல்கிறேன். ஆகையால் இதற்கு என்ன பண்ணலாம் என்று கேட்டால் கேள்வி மட்டும்தான் இருக்கிறது. பதில் கிடையாது. இது மிகவும் நியாயமான கேள்வி, இதற்கான நியாயமான பதில் என்னிடம் கிடையாது.
தொலைக்காட்சியை எடுத்துக்கொள்ளுங்கள், மக்கள் ஒரு நாளைக்கு எத்தனை சேனல்கள் பார்க்கிறார்கள். 100 சேனல்களையும் ஒரு நாளைக்கு 2100 தடவைக்கு மேல் மாற்றி மாற்றி பார்க்கிறோம். ஏனெனில் ஒரு சேனலை பத்து நிமிடத்திற்கு மேல் பார்க்க முடியவில்லை. உடனே இன்னொரு சேனலை மாற்றுகிறான். அந்த சேனலை பத்து நொடிகளுக்கு மேல் பார்க்க முடியவில்லை. பார்த்ததையே திருப்பித் திருப்பி பார்த்தாலும் வெறுப்பாகிறது. இருந்தாலும் அவர்கள் டி.வியை ஆஃப் செய்துவிட்டு சும்மாயிருக்கிறார்களா? மறுநாளும் அதையேத்தான் செய்கிறார்கள். அதற்கு மறுநாளும் அதனையேத்தான் செய்கிறார்கள். இதனை பரிதாபமான சூழ்நிலை என்றுதான் சொல்லவேண்டும். நம் ஐம்புலன்களுக்கும் கண்களுக்கும், காதுகளுக்கும் ஓர் அமைதி தேவைப்படுகிறது. இதற்கு சின்ன உதாரணம், ஒரு கைபேசியை மக்கள் எப்படி உபயோகிக்கிறார்கள் என்று பார்த்தாலே தெரிந்துவிடும். வெறும் சினிமாவினால் மட்டுமே இதனை ஒன்றுமே செய்யமுடியாது. இது இன்றைய வாழ்க்கையின் நிலவரம். இதில் அதிகமாக சினிமா சேர்க்கப்படுவதால் நாங்களும் குற்றவாளிகளாகிவிடுகிறோம். நானும் ஒத்துக்கொண்டு கைதூக்கிக்கொள்கிறேன்.
உங்கள் படங்களில் வருகின்ற கதாபாத்திரங்கள் வித்தியாசமான உடலசைவுகளும், வழக்கத்திற்கு மாறாகவும் நிற்கிறார்கள். நீங்கள் ஜாப்பனிஷ் படங்கள் அதிகமாக பார்க்கின்ற காரணத்தினால், உங்கள் படங்களில், அந்நாட்டு படங்களின் தாக்கம் இருக்கின்றதா? அப்படியெனில் அது அவர்கள் மொழி கலாச்சாரம் என்று வருகையில், சரியானதாகயிருக்கும். அதே பாவனைகள் நம் மொழி படங்களுக்கும் எப்படி ஒத்துப்போகும்.?
யார் நம்பினாலும், நம்பாவிட்டாலும் ஒரு உண்மையைச் சொல்கிறேன். நான் மொத்தமே மூன்று கொரியன் படம் தான் பார்த்திருக்கிறேன். ஜாப்பனிஷ் படங்களில் குரசோவா படங்களைத்தவிர்த்து ஓஷீ படங்களைக்கூட பார்த்ததில்லை. டகேஷி கிட்டானோவினுடைய மூன்று படங்கள் பார்த்திருக்கிறேன். மொத்தமாக ஜாப்பனிஷ் படங்கள் என்றால் ஆறு படங்கள் பார்த்திருப்பேன். ஜப்பானில் ஒருவரின் அம்மா இறந்துவிட்டால் அழுவோம், நாமும் அழுவோம். நாம் வேறு மொழி என்பதால் அழ மாட்டோமா?
பின்பு எப்படி என் படங்களில் நீங்கள் சொல்வது போல ஜாப்பனிஷ் படங்களின் தாக்கம் அதிகமாக வருகின்றது?
இன்றைக்கு இருக்கின்ற இளைய தலைமுறையினர்கள் அதிகமாக ஜாப்பனிஷ் படங்கள் பார்க்கின்றீர்கள் என்று அர்த்தம். எங்களைவிட அதிகமாக நீங்கள் பார்க்கிறீர்கள். இப்படி அதிகமாக பார்ப்பதன் காரணமாகத்தான் இந்த ஒற்றுமைகளை உங்களால் உடனே கண்டுபிடித்துக்கொள்ள முடிகிறது.
என்னைப்பொறுத்தவரை, சினிமாவின் மொழிகளில் ஒரு இயக்குனருக்கு அதிகமாக உதவி செய்வது அந்தப் படத்தில் பின்பற்றப்படுகின்ற மெளனம் தான். இந்த மெளனத்தை இந்த உலகத்திற்கு கற்றுக்கொடுத்தது பெளத்தம். இந்த பெளத்தம் தான் ஜப்பானும் கொரியாவும். இதுதான் நான். ஆகையால் ஒரு ஜப்பான் சினிமாவிற்கு முந்தியும், ஒரு கொரிய சினிமாவிற்கு முந்தியும் இந்திய சினிமாவிற்கு முந்தியும் ”பெளத்தம்”, என்ற ஒன்று இருந்தது. மெளனத்தை, நான் பெளத்த மதத்தின் வாயிலாக கற்றுக்கொண்டேன்.
என்னுடைய கதாபாத்திரங்கள் நடப்பது, என்னுடைய கதாபாத்திரங்களின் உடல் மொழி, என்னுடைய கதாபாத்திரங்கள் அமைதியாக இருப்பது, எல்லாமே, நான் பெளத்தத்தில் இருந்துதான் கண்டுபிடித்தேன். எனக்குத்தெரிந்து ”செவன் சாமுராய்”, படத்தை 2000 முறைகள் பார்த்திருக்கிறேன். இறப்பதற்குள் இன்னமும் ஒருலட்சம் முறையாவது பார்ப்பேன். ஒரு காட்சியையும் திருட முடியவில்லை. ஒரு WORK OF ARTலிருந்து நீ எதையுமே திருட முடியாது. அந்த அளவிற்கு அந்த கோயில் உருவாக்கப்பட்டிருக்கும். அந்தக் கதையிலிருந்து திருடி ஒரு காட்சியை உங்கள் படத்தில் வைத்தால் உங்கள் படமே அந்தக் காட்சியைத் தாங்காது.
ஒரு நல்ல கலைஞன் எதையுமே திருட ஆசைப்படமாட்டான். அதே நேரத்தில் நான் Inspireஆன படங்களையும் சொல்லியிருக்கின்றேன். Kikijaro படம் பார்த்து , என் தாய்க்கு பிறந்த என் அண்ணனுக்கு அதே சம்பவம் நடந்த காரணத்தினால் இரண்டையும் பொருத்திப்பார்த்து அந்தப்படத்தை எடுத்தேன்.
எப்பொழுதுமே நம் வாழ்க்கையை ஒரு Reference மூலமாகத்தான் கண்டுபிடித்திருக்கிறோம். மஞ்சள் வண்ணத்தை நாம் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை என்று வைத்துக்கொண்டால் எல்லாமெ பச்சைவண்ணத்தில்தான் தெரியும். அப்பொழுது மஞ்சள் கலரை என்னவென்று சொல்வார்கள். வெளுத்துப்போன பச்சை என்று சொல்வார்கள். நாம் வாழ்க்கையையே reference மூலமாக பார்ப்பதால், இந்தக் கேள்வியை நான் உங்களிடமே தருகின்றேன். நீங்கள் என்னைவிட ஜப்பான் படங்களும், கொரியபடங்களும் அதிகமாக பார்ப்பதால், அதன் தாக்கம் என் படத்தில் தெரிகின்றது.
நீங்கள் சொன்னது போல, ஜப்பான் படங்களிலிருந்து inspireஆகிறீர்கள் என்றால், அந்த இடத்திலிருந்து முற்றிலுமாக வெளிப்பட்டு, தமிழ்ச்சூழலுக்கு தக்க மாதிரியாக ஒரு கதையைக் கொடுக்க முடியும், ? நீங்கள் உங்கள் ஆய்வுகளில் முற்றிலுமாக ஒன்றிவிடுவதாக சொல்கிறீர்கள். அப்படி ஒருவேளை குரசோவாவின் பாதிப்புகளில் ஒன்றிணைந்துதான் அவருக்கான பாதிப்புகள் உங்களது படங்களிலும் வருகின்றது. உதாரணத்திற்கு. அஞ்சாதே படத்தில் காவல்நிலையத்தில் நரேன் பேசுகின்ற மொழி கிட்டத்தட்ட குரசோவாவின் ஜாப்பனிஷ் மொழியை ஒத்திருக்கிறது. ஒருவேளை அந்தப் பாதிப்பிலிருந்து மீண்டு வெளியே வந்து நீங்கள் கொடுக்கின்ற படைப்பு தானே, உங்களது படைப்பாக இருக்கும்?
என் அம்மாவின் மொழியைத்தான் நான் பேசுகிறேன். குரசோவா என் அம்மா .
என் கதாபாத்திரங்கள் பேசுகின்ற மொழி, நடை எல்லாமே எனக்குள்ளிருந்துதான் வருகின்றது. சொல்லப்போனால் ஜப்பானியப் படங்களின் உச்சரிப்புகளை நான் கூர்ந்து பார்த்ததே கிடையாது. ஆனால், ஜாப்பனிஸ் பழகியிருக்கிறேன். பின்னர் அதனை நான்கு மாதங்களுக்குப் பின்பாக கைவிட்டுவிட்டேன். ஒரு வேளை என் கதாபாத்திரங்கள் என்னைப் பிரதிபலிப்பதால், அவர்களுக்கும் அந்த பாவனைகள் வந்திருக்கலாம்.
குரசோவாவின் பாதிப்பு என் படங்களில் இருக்கிறது என்று வைத்துக்கொண்டால், நான் கையைத் தூக்கிவிடுவது தான் நியாயம், நீங்கள் சொல்வது போல நரேன், ”அஞ்சாதே” படத்தில் காவல்நிலையத்தில் பேசுவது என்னைப் பிரதிபலிப்பது தான். நரேன் ஒரு மலையாளி, அவர் என்னைத்தான் பிரதிபலித்தாக வேண்டும். இன்னும் சொல்லப்போனால், அஞ்சாதே எடுக்கின்ற பொழுது குரசோவாவைத்தெரியுமே தவிர அவரைக் கூர்ந்து கவனித்துக்கொண்டது கிடையாது.
நீங்கள் சொல்வதை இப்படி எடுத்துக்கொள்ளலாம்., ஒருவேளை அவரைக் கூர்ந்துகவனித்ததன் காரணமாக, குரசோவா என் மீது பாதிப்பைச் செலுத்தியிருந்தால் அவருக்கு நான் நன்றியைத்தான் தெரிவித்துக்கொள்கிறேன். என்னை ”வாழ்நாள் முழுவதும், குரசோவாவின் படங்களைவிட மோசமான படங்களைத்தான் மிஷ்கின் எடுத்தார்”, என்று சொல்வதில் தான் பெருமை. என் படங்களில் என்னை அறியாமலேயே குரசோவா இந்த அளவிற்குப் பிரதிபலிக்கிறார் என்றால் அவருக்கு கோயில்தான் கட்டவேண்டும். மயக்க நிலையில் அவரது படங்களின் பாதிப்புகள் என்னிடத்தில் வருவதாக வைத்துக்கொள்ளலாம்.
|
Harold Bloom எழுதிய The Anxiety of Influence புத்தகத்தில் எப்படி ஷேக்ஸ்பியர் ovidலயிருந்து இன்ஸ்பையர் ஆகியிருக்கிறார் என்று விளக்குகிறார். ஷேக்ஸ்பியரிலிருந்துதான் பெரும்பாலானொர் இன்ஸ்பையர் ஆகியிருக்கிறார்கள். ஷேக்ஸ்பியர் நல்ல கதாசிரியர் கிடையாது என்று சொன்ன டால்ஸ்டாயும், ஷேக்ஸ்பியரிலிருந்துதான் இன்ஸ்பையர் ஆகியிருக்கிறார். தஸ்தயெவ்ஸ்கியின் கதைகளைப் படித்துவிட்டுத்தான் நான் கதைகளை எழுதுகிறேன் என்று Willam Faulkner சொல்கிறார். Willam Faulkner தான், எப்படி கதை எழுத வேண்டுமென்று சொல்லிக்கொடுத்ததாக ”கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்”, சொல்கிறார். கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் தான் என் வாழ்க்கையின் மிக முக்கியமான ஆதாரம் என்று இடாலோ கேல்வினோ சொல்கிறார். இன்ஸ்பையர் இல்லாமல் யாராலும் வரமுடியாது.
சினிமாவில் குரசோவா, john ford, howard hawksலிருந்து இன்ஸ்பையர் ஆகியிருக்கிறார். இப்படி இணைப்பு போய்க்கொண்டேயிருக்கும். அம்மா, அப்பா இல்லாமல் யாராலும் பிறக்க முடியாது. கலைஞன் அம்மாவுடனும், அப்பாவுடனும் தான் பிறக்கிறான். நான் குரசோவானின் பாதிப்பு, ப்ரெஸ்ஸானின் பாதிப்பு என்று நீங்கள் சொன்னால், அந்தப் பாதிப்பிலிருந்து நான் வெளியே வரவே விரும்பவில்லை. அந்த தொப்புள்கொடியை அறுக்கவே முடியாது. இதனை நான் பெருமையாக நினைக்கிறேன். சிறுமையாக நினைக்கவில்லை.
ரஷ்யாவின் மிகப்பெரிய கம்போஸர் Tchaikovsky சிம்பொனி ஒன்றை எழுதிக்கொடுத்திருக்கிறார். பின்பு அந்த சிம்பொனியை மக்கள் முன்னால் வாசிக்கிறார்கள். அந்த இசையைக் கேட்டவர்கள் சொல்கிறார்கள், பீத்தோவனின் ஒரு இசைக்குறிப்பை அப்படியே ஓர் இடத்தில் பதிவுசெய்திருக்கிறார். Tchaikovsky சொல்கிறார், ”அதனால் என்ன தப்பு, நான் எழுதிக்கொண்டிருக்கையில் அடுத்த குறிப்பு இதுதான் தோன்றியது, மிகச்சிறந்ததாக இருந்தது உடனே சேர்த்துக்கொண்டேன்”, என்கிறார். நான் tchaikovskyயை விட சிறிய ஆள்தான். இன்ஸ்பையர் ஆவது தப்பு கிடையாது.
தமிழ்சினிமாவில் அவ்வப்போது வருகின்ற படங்கள் வித்தியாசமான கதைக்களம் கொண்டிருக்கின்றது. ஆனால், அந்தப் படங்களும் வழக்கமான கமர்ஷியல் தன்மைகள் அடங்கிய அல்லது காதல், காதல் முறிவு அதற்குப்பின்பான பாட்டு, க்ளைமேக்ஸில் சண்டை என வழக்கமான வடிவமைப்பையே கொண்டிருக்கின்றது. இது பற்றி அந்த இயக்குனர்கள் சொல்வதென்றால் சமரசம் செய்யப்பட்டே படங்கள் வெளிவருகின்றன. சமரசங்கள் என்று செய்யப்பட்டால்தான் இந்த தமிழ்ச்சினிமா சூழலில் இருக்கமுடியும் என்று கூறுகிறார்கள். எனில் சமரசங்கள் செய்யப்படாத தமிழ்ப்படங்கள் இங்கு எப்போது கிடைக்கும்.?
இங்கு சமரசம் செய்வதை எப்போதுமே நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அப்படிச்செய்து கொண்டால் தான் தமிழ்ச்சினிமாவில் இருக்கமுடியும் என்பதையும் ஒத்துக்கொள்ளமாட்டேன். இதனைச் சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், ”கதை வறட்சி”.
இந்தக் குற்றச்சாட்டை பார்வையாளர்கள் மேலோ, சமூகத்தின் மேலோ வைக்க விரும்பவில்லை. கதை வறட்சிதான் ஒரே மாதிரியான அமைப்பிற்குள் சினிமாக்கள் வந்துகொண்டிருப்பதற்கான காரணம்.
சொல்லப்போனால் ஒரு கதை தோன்றுவது அவ்வளவு ஒன்றும் எளிதானது கிடையாது. திரைக்கதையை 120 பக்கங்கள் எழுதவேண்டுமென்றால் அதற்கு நிறைய உழைப்பு தேவைப்படுகிறது. வாழ்க்கையில் கலைஞனாக இருக்கவேண்டுமென்றால் அதற்காக நிறைய தியாகங்கள் செய்ய தயாராகயிருக்கவேண்டும். இந்த தியாகங்கள் இல்லாமல் ஒரு கலைஞனாக முடியாது. கலைஞன் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகின்ற இயக்குனர்கள் இதனைப்பற்றி சொல்லமாட்டார்கள். பாலாஜா சக்திவேல், ’பூ’, சசி, ராம், பாலா, மணிரத்னம், வெற்றிமாறன் போன்றோரெல்லாம் இந்தக் கதைவறட்சியைப் பற்றி சொல்லவேமாட்டார்கள். நாங்களெல்லாம் புதுவகையான கதைகள் எழுதவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். இப்படி புதுக்கதைகள் எழுதமுடியாதவர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை.
முதலில் நான் நிறைய தமிழ்படங்கள் பார்ப்பதில்லை. ’கதை வறட்சி’ என்ற ஒரு காரணத்திற்காகவே நிறைய படங்கள் பார்ப்பதில்லை. நான் சினிமாவிற்கு வருவதற்கு முந்தியே நிறைய படங்கள் பார்த்ததில்லை. எனக்கு அப்பொழுதே சலித்துவிட்டது. வருகின்ற எல்லாக்கதையும் ஒரே கதைதான்.
சிலர் சொல்வார்கள், ராமாயணத்தில் இல்லாத கதையா? மகாபாரதத்தில் இல்லாத கதையா? என்று. இதெல்லாம் சொல்லப்போனால் பொய். அவர்கள் ARCHETYPES பற்றி சொல்கிறார்கள். கதை எழுத உட்காருகையில் வேறொரு வாழ்க்கை நமக்குத் தெரியவரும். அந்த வாழ்க்கையை கண்டுபிடிக்கணும். லட்சக்கணக்கான கதைகள் வரும், இதற்கு பின்பாக உழைப்பு தேவைப்படுகிறது.
தமிழ்படங்கள் அதிகமாக பார்ப்பதில்லை என்று சொன்னால், நீங்கள் சார்ந்திருக்கின்ற துறையில், நிகழ்காலத்தில் என்ன நடந்துகொண்டிருக்கின்றது என்பதை தெரிந்துகொள்ள நினைக்கவில்லையா?
ஏன் Update செய்யவேண்டும்?
ஒரு சினிமா கலைஞனுக்கு படம் பார்ப்பது மட்டும்தான் வாழ்க்கையா? நான் ஒரு கதாசிரியன். நான் ஒரு திரைப்பட இயக்குனர். எனக்கு நாவல்களும்,சிறுகதைகளும், இதிகாசங்களும், உலகத்து இலக்கியங்களும்தான் வேண்டும். ஆகையால் கதாசிரியர்கள் அதைத்தான் படிக்கவேண்டும். சினிமாக்கதைகள் ஒன்றுமே கற்றுத்தருவதில்லை.
இரண்டாவது, ஒரு இயக்குனராக எப்படி வேலை செய்யவேண்டுமென்றால், நீங்கள் கடலில் பயணித்துக்கொண்டிருக்கிறீர்கள், அப்போது திடீரென திமிங்கலம், சுறா மீன், ஆக்டோபஸ் என எது வேண்டுமானாலும் வரலாம். அடர்ந்த காடுகளுக்குள் பயணப்படுகின்றபொழுது எந்த விலங்குகள் வேண்டுமானாலும் உங்களைத் தாக்க வரலாம். அந்த நேரத்தில் தன்னை தற்காத்துக்கொள்ள ஒரு தனித்திறமை வேண்டும். Director is a problem solver. அந்த திறமையை எங்கு பெறமுடியும் என்றால், யாராவது ஒரு மாஸ்டரை நாம் கூர்ந்துகவனிக்க வேண்டும். ஒரு குரசோவா, தர்க்கோஸ்கி, ப்ரஸ்ஸான் மாதிரி ஒருவரை கவனித்துப்பழகியிருக்க வேண்டும். ஒரு மாஸ்டரை படிக்க 25 வருசமாவது ஆகிறது. ஆகவே, எனக்கு தமிழ்படங்கள் படங்கள் பார்க்க நேரமுமில்லை.எனக்கு அப்டேட் பண்ணவேண்டிய அவசியமில்லை.
நீங்கள் தமிழில் வித்தியாசமான பார்வை, கோணங்களுடன் கூடிய கதைசொல்பவர்கள் என்று ஐந்து பேரைக் குறிப்பிடுவீர்கள் என்றால் அதில் நானும் ஒருவனாக இருப்பேன். எனக்கு அப்டேட் தேவையில்லை. 17 வருஷமாக சினிமாவில் இருக்கிறேன். தமிழ்சினிமாவே பார்ப்பதில்லை. ஆனால், நான் சினிமா எடுத்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய போராட்டம் தமிழ்ச்சினிமாவில் யாருமே இதுவரையிலும் போராடவில்லை. ஆகையால் நீங்கள் சொல்கிற அப்டேட் எனக்குத்தேவையில்லை.
நல்ல சினிமா எடுக்கவேண்டுமா? முதலில் இலக்கியங்களைப் படியுங்கள் நல்ல சினிமாக்கள் வரும். ’செகாவ்’, எதாவது படம் எடுத்திருக்கிறாரா? ஆனால் செகாவும், டால்ஸ்டாயும் தான் நல்லகதை எடுக்கச் சொல்லிக்கொடுப்பார்கள். வேறு யாருமே சொல்லிக்கொடுக்கமாட்டார்கள். என்னைப்பொறுத்தவரை நான் இதையெல்லாம் கண்டுபிடித்துக்கொண்டேன். நிறையபேர் இதனையெல்லாம் தெரியாமல் பரிதாபமாக இருக்கின்றார்கள். இப்பொழுது வருகின்ற தமிழ்ச்சினிமாக்களைப் பார்த்து உங்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது. ? டால்ஸ்டாயின் ’போரும் அமைதியும்’, படித்துப்பாருங்கள், தஸ்தயெவ்ஸ்கியின் ’கரமசாவ் சகோதரர்கள்’, படித்துப்பாருங்கள், ஆயிரம் படங்களும், ஆயிரம் கதைகளும் அதில் இருக்கிறது.
பின்பு ஏன் தமிழ்ச்சினிமா பார்க்கவேண்டும். என்னுடைய அப்டேட் Reverse update.
உங்களுடைய அஞ்சாதே, சித்திரம் பேசுதடி, யுத்தம்செய் போன்ற படங்களில் குத்துப்பாடல்கள் வருகின்றது. அந்தப் பாடல் கதைக்கு துணைபுரியவும் இல்லை, அந்தப் பாடல் இல்லாவிட்டாலும், படம் ஓடியிருக்கும். பின்பு ஏன் அந்தப்பாட்டு?
ஒரு நல்ல படம் எடுப்பதற்கு அறிவு தேவை. அப்பொழுது குத்துப்பாட்டு வைக்கின்ற அந்த இடத்தில்/நேரத்தில் அதே அறிவு மங்கிவிட்டது என்ற அர்த்தம் கிடையாது. மேலும், என்னுடைய குத்துப்பாட்டு எனக்கு உதவிகரமாக இருந்ததே இல்லை. அந்தப் பாடலில் நடனமாடுகின்ற பெண்ணின் அங்கங்களை விரசமாக காட்சிப்படுத்தாமல் இருப்பதுதான் எனக்கு பெரிய வேலையாக இருந்தது. நீங்கள் சொல்வது போல், அந்தக் குத்துப்பாடல் இல்லாவிட்டாலும் என் படம் நல்லபடம் தான்.
ஒரு படத்தில் குத்துப்பாட்டு ஐந்து நிமிட அசிங்கமாக வருகின்றது. நம் உடலினுள் பலவிதமான அழுக்குகள், கழிவுகள் தங்கியிருக்கின்றன. நம் உடலுக்குள் தான் இது இருக்கின்றது. ஆனால் வெளியே வந்தால் நாறுகிறது. உள்ளே இருப்பதால் அது தெரியவில்லை. அதுபோல என் படத்தில் வருகின்ற குத்துப்பாட்டை ஐந்து நிமிட அழுக்காக எடுத்துக்கொள்ளலாம். தயாரிப்பாளர்களின் நலனுக்காக அந்த அழுக்கு தேவைப்பட்டது.
அப்படியெனில் நீங்கள் செய்துகொண்டது ஒருவகையில் வணிக சமரசம் தானே?
நான் எடுத்த ”ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”, படத்தில் வேலை செய்த உ தவி இயக்குனர்கள் சொன்னார்கள், ”எப்படியாவது ஒரு குத்துப்பாட்டு வைத்துவிடுங்கள்”, என்று, அப்பொழுதுதான் படம் ஓடும் என்றும் சொன்னார்கள். ஆனால், நான் சொன்னேன், படம் ஓடுகிறதோ, இல்லையோ, அதனை நான் செய்ய மாட்டேன். ஏனென்றால் எல்லா தயாரிப்பாளருக்காகவும் அதைச் செய்துவிட்டேன். நானே இந்தப்படத்திற்கு தயாரிப்பாளராக இருக்கின்ற காரணத்தினால் அது தேவையில்லை. குத்துப்பாட்டு இல்லாமல் படம் ஓடாவிட்டாலும் பரவாயில்லை. நான் என் சொந்தக்காசை படத்தில் போடுகிறேன்.
நீங்கள் சொன்ன குற்றச்சாட்டிற்கு பிராயச்சித்தம் பண்ணியிருக்கிறேன். மற்ற படத்தின் தயாரிப்பாளர்களுக்கு அவரவர்களின் பயத்திற்காக ஒரு குத்துப்பாட்டு கொடுத்தேன். என் படத்திற்கு அப்படிச்செய்யவில்லை. நான் என்னையே அழித்துக்கொண்டேன். இது ஒருவகையில் அவர்களுக்கு நான் செய்த தர்மம். இது சமரசம் கிடையாது.
தமிழ்ச்சினிமாவில் வெளிவருகின்ற படங்கள் பெரும்பாலும் வெகுஜன மக்களின் ரசனையை வைத்தே வெளிவந்துகொண்டிருக்கின்றது. இத்தனை வருட காலமாக மக்களும் அப்படியான படங்களை மட்டுமே பார்த்துவந்திருக்கிறார்கள். அவர்களின் பார்வைக்கு இதுதான் நல்லபடங்கள் என்ற புரிதல்களை, அல்லது தெளிவை, விழிப்புணர்வை இதுவரை யாரும் அதிகமாக எடுத்துரைக்கவில்லை. இச்சமயத்தில் நீங்கள் எடுக்கின்ற படங்கள் எந்த வகையில் நல்ல வரவேற்பைப் பெறும் என நினைக்கிறீர்கள்?
உலகம் முழுவதும் குப்பை இருக்கிறது. நம்ம வீட்லயும் குப்பை இருக்கட்டுமே. எதற்கு அதனை சுத்தப்படுத்த வேண்டும் என்று நினைக்க முடியாது. முதலில் நான் என் வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டும். நான் அதைச் செய்தால்தான் பக்கத்து வீட்டுக்காரன் செய்வான். பக்கத்துவீட்டுக்காரன் அதைச்செய்தால் என் தெரு சுத்தமாகும். என் தெரு சுத்தமானால்தான் என் நகரம் சுத்தமாக இருக்கும். என் நகரம் சுத்தமானால்தான் என் நாடு சுத்தமாகும். என் நாடு சுத்தமானால் உலகம் சுத்தமாகும். இந்த உலகம் சுத்தமானால் இருதயம் சுத்தமாகும். ஆக, நான் என் வீட்டைச் சுத்தப்படுத்துவது இந்த உலகத்திற்கு நல்லது செய்கிறேன் என்று அர்த்தம். அதுபோல நான் ஒருவன் நல்ல படம் எடுத்தால், என்னைப்போல பலபேர் நல்லபடம் எடுப்பார்கள், அதனால் மக்களுக்கு நல்ல படத்திற்கான அடையாளம் வரும் என்று நினைக்கிறேன்.
நீங்கள் சொல்வது போல் ”ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”, திரையரங்குகளில் ஓடவில்லை. ஆனால், நல்ல மனிதர்களில் இதயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. நல்ல மனிதர்களிடத்தில் அந்தக்காட்சி இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அது எனக்குத்தெரியும்.
|
காய்கறி வாங்கினால் அது நல்லதா?, கெட்டதா? என்று பார்த்து வாங்குகிறார்கள். மது வாங்கினால் அது ஒரிஜனலா என்று பார்க்கிறோம். ஒரு விலைமாதுவிடம் சென்றால் அவளுக்கு நோய் இருக்கிறதா? என்று கேட்கிறார்கள். எல்லாவற்றிலும் நல்லது? கெட்டது? என்று இருக்கிறது. எது நல்லது? எது கெட்டது? என்று மக்களுக்கு யாரும் சொல்லித்தரவில்லை. ஆனால் சினிமாவில் மட்டும் இது தேவைப்படுகிறது.
நீங்கள் எடுக்கின்ற ஷாட்ஸ் எல்லாமே கதையோடு ஒன்றி வருகின்றன, ஒரு காட்சிக்கான ஷாட்டை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்?
நான் சினிமாவிற்கு வந்து பதினேழு வருடங்கள் ஆகிவிட்டது. இதில் ஏழு படங்கள் எடுத்திருக்கிறேன். இருப்பினும் எனக்கு எங்கு ”க்ளோஸ் அப்”, வைக்க வேண்டும் என்று சரியாகத் தெரியாது. இந்தக் குழப்பம் இன்னமும் நீங்கவும் இல்லை. இதனை மணிரத்னத்திடம் கேட்டாலும் நான் சொன்னதையேச் சொல்வார். ஆகையால், எனக்கு இன்னமும் ஒரு ”க்ளோஸ் அப்”, கூட வைக்கத்தெரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். பின்னர் ”க்ளோஸ் அப்”, வைக்கத்தெரியவில்லை என்றால், மிட் ஷாட் எப்படி வைக்கவேண்டும் என்றும் தெரியவில்லை. இதைக்கண்டுபிடிக்க இன்னமும் பத்து வருடங்கள் தேவைப்படுகிறது.
ஆனால் நான் ஒரு காட்சியைக் குறித்து திட்டமிடுகிறபொழுது ஒவ்வொரு கோணத்தையும், ஷாட்டையும் கண்டுபிடிப்பேன். கதைக்குப் பொருத்தமாகத்தான் இது இருக்கும். அந்தக் காட்சியில் இதுதான் ’மிட் ஷாட்’, என்றோ ’லாங்க் ஷாட்’, என்பதோ தெரியாது. கதைக்குப் பொருத்தமாக இருக்கிறதா? என்பதை மட்டுமே கவனிப்பேன்.
சிலர் சொல்கிறார்கள். ”மிஷ்கின் காலுக்கே ஷாட் வைக்கிறார்”, என்று. ஆனால், என் பார்வை, உடம்பில் முக்கியமானது நம் கால், முகத்தை விட உண்மையைச் சொல்கிறது கால். முகத்தில் ஷாட் வைத்தால் நடித்து தள்ளுகிறார்கள். முகத்தை விட கால் உண்மையாக நடக்கிறது. அதற்கு பிரச்சனை வந்தால் ஓடுகிறது, இல்லையேல் அப்படியே ஒரேயிடத்தில் நிற்கிறது. இதைத்தெரியாதவர்கள் என்ன சொல்கிறார்கள். மிஷ்கின் காலுக்கே ஷாட் வைக்கிறார். இப்படி சினிமாவைப் பற்றி எல்லாமே தெரியும் என்று நினைத்துச் சொல்கிறவர்களைக் கண்டால் பரிதாபம் தான் வரும்.
நாடகத்தின் நீட்சிதான் சினிமாவா?
சினிமாவிற்கும், நாடகத்திற்கும் மிக அதிகமான வேறுபாடுகள் இருக்கிறது. இங்கு கதை எழுதுகிறவர்கள் இதைத்தெரியாமல் நாடகத்திற்கு எழுதுவதுபோலவே எழுதுகிறார்கள். காட்சிமொழியைக் கற்றுக்கொள்ள நிறைய படிப்பு தேவைப்படுகிறது. சாப்ளினின் படங்கள் நிறைய பார்க்க வேண்டும். நாடகத்திலிருந்து 20,000 கி.மீ தள்ளியிருப்பதுதான் சினிமா. இதேவேளையில் நாடகத்திலிருந்தும்., சினிமா பண்ணியிருக்கிறார்கள். Glengarry Glen Ross போன்ற பல உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால் இரண்டுமே வேறு வேறு ஊடகம். இதை அடிப்படையாக புரிந்துகொள்ளவேண்டும்.
நீங்கள் நடிகர்களிடம் நடித்துக்காட்டி வேலை வாங்குகிறீர்கள். அப்பொழுது உங்களின் நடிப்பைத்தான் அவர்களும் பிரதிபலிப்பார்கள். ஒருவேளை அவர்களை நடிக்கச்சொல்லி அவர்களிடமிருந்து வித்தியாசமான performance வாங்க முயற்சிக்கவில்லையா?
என்னைப் பொறுத்தவரை என் சினிமாக்களில் என் பார்வை தான் முக்கியமானது. ஒரு காட்சி எப்படியிருக்கவேண்டும் என்பதை நிர்மானித்துக்கொண்டு நான்தான் அவர்களை நடிப்பிற்கு உட்படுத்துகிறேன். நான் தான் கதாசிரியர். எனக்கு என்ன வேண்டும் என்பதை அவர்களிடம் நடித்துக்காட்டி வேலை வாங்குகிறேன் என்று சொல்கையில், அவர்களும் என்னை மாதிரியேத்தான் நடிக்கிறார்கள். நீங்கள் சொல்வது போல பிரதிபலிக்கிறார்கள். ஆனால், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை.
|
ஏனெனில், ஒரு கணவன், மனைவி எப்படி நடிக்க வேண்டும் என்று நான் நடித்துக்காட்டுகிறேன், இருவருக்குமே ஒரே மாதிரியாகத்தான் நடித்துக்காட்டுகிறேன் என்று சொன்னாலும் இருவருக்குமேயான ஆண்பால், பெண்பால் வேறுவேறு தானே. Billy wilder சொல்கிறார், ”நீ இயக்குனராக இருக்கவேண்டுமானால், நீ ஒரு நடிகராக இருக்க வேண்டும், படத்தொகுப்பாளராக இருக்கவேண்டும், ஒரு ஜோக்கராக இருக்க வேண்டும், ஒரு நண்பனாக இருக்க வேண்டும், சமயத்தில் ஒரு நாயாக கூட இருக்கவேண்டும்”, என்கிறார். ஆகையால், எனக்கான சினிமாவை உருவாக்க நான் என்னவேண்டுமானாலும் செய்துகொள்வேன். அவர்கள் என்னைப்போலவே நடிப்பதால் கவலையில்லை. ஒரே மாதிரியான படங்களையே ஐம்பது வருடங்களாக எடுத்துக்கொண்டிருக்கிறோம். ஒரே மாதிரியாகவே நடித்த நடிகர்கள் இந்த சினிமாவிலேயே இருந்து இறந்தும் போயிருக்கிறார்கள். அதனுடன் ஒப்பிடுகின்றபொழுது இதெல்லாம் தப்பில்லை என்றுதான் சொல்வேன். என்னுடைய பார்வைதான் எனக்கு முக்கியம்.
ஸ்டோரிபோர்ட் பின்பற்றும் முறை?
என்னுடைய பிசாசு படத்திற்கு ’ஸ்டோரிபோர்ட்’ வரைந்துகொடுத்தேன். இந்தப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிக்காக, காசு நிறைய செலவழிக்கக்கூடாது என்பதற்காகவும், துல்லியமாக எடுத்துவிட வேண்டும் என்பதற்காகவும் ’ஸ்டோரிபோர்ட்’வரைந்தேன். ஸ்டோரிபோர்டுடன் தான் படப்பிடிப்புத் தளத்திற்கும் சென்றேன். ஆனால், அங்கு சென்றவுடன் இந்தந்த மாதிரியான காட்சி மாறுதல்கள் தேவை என்று தோன்றியதால், என் ஸ்டோரிபோர்டை கிழித்துவிட்டு எனக்கான காட்சியமைப்புகளை தேர்வுசெய்துகொண்டேன்.
எல்லோரும் பழனி மலைக்குப் போகிறார்கள் என்றால், நானும் அதே பாதையில்தான் செல்லவேண்டும் என்று நினைக்கமாட்டேன். எனக்கான பாதையில்தான் நான் செல்கிறேன். ”ஹிட்ச்காக்”, மாதிரியாக ஸ்டோரிபோர்ட் முறைகளை நான் பின்பற்றுவதில்லை. எனக்கான தெளிவுகளுக்காக ஸ்டோரிபோர்ட் வரைந்துகொள்வேன்.
ஒவ்வொரு இயக்குனர்களும் வித்தியாசமான வழிமுறைகளை பின்பற்றுவார்கள். எனக்கான வழிமுறை இது.
காட்சிகளின் தீவிரம் குறையும்போதுதான், அந்த வெறுமையை நிரப்புவதற்காக அவ்விடத்தில் இசை பின்னணியாக சேர்க்கப்படுகிறது என்ற கோட்பாடு உண்டு. அதன்படி பார்த்தால், உங்கள் ”ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”, படத்தில் காட்சிகள் நன்றாகயிருக்கின்றன. தீவிரத்துடன் வருகின்ற காட்சிகளில் கூட பின்னணி இசையானது அதே தீவிரத்துடன் ஒலிக்கிறது. இது ஒரு வகையில் இடையூறுகள் ஏற்படுத்துவதுதானே?
”இசை ஒரு சினிமாவிற்கு தேவையே கிடையாது”, அப்படியும் கூட ஒரு கோட்பாட்டை எவரும் சொல்லலாம். நிஜ வாழ்க்கையைத்தானே சினிமா பிரதிபலிக்க வேண்டும் என்கிறார்கள். அதுவும் கிடையாது. உண்மைக்கு நெருக்கமாகத்தான் பிரதிபலிக்க முடியும். இப்படிப்பார்க்கையில் சில உணர்வுகளை நாம் பார்வையாளர்களுக்கு நகர்த்த வேண்டும். அந்தக்கலையை இன்னொருவர் எடுத்துக்கொள்கிறார். அவர் தான் இசையமைப்பாளர்.
இரண்டு காதலர்கள் பிரிந்துசெல்கிறார்கள், என்று வைத்துக்கொள்ளலாம். இருவரது பெற்றோர்களும் அருகில் தான் நிற்கிறார்கள். இருவருமே பேசிக்கொள்ள முடியாத சூழல். இந்த இடத்தை நான் இசையை வைத்து அவர்கள் உணர்ச்சியை காட்சியோடு இணைத்துக்கொள்கிறேன். இந்த மாதிரியான இடங்களில் ஒரு அழகான உணர்வுகளைச் சொல்வதற்கும், இசை பயன்படுகிறது. ஆகையால், ஒரு இசையை இப்படித்தான் பயன்படுத்தவேண்டும் என்ற கோட்பாடுகள் இல்லை. அது அந்த இயக்குனரைப் பொறுத்தது. நீங்கள் சொன்னதையும் நான் மறுக்கவில்லை, காட்சியில் சொல்ல முடியாத உணர்வுகளை, அல்லது காட்சியின் தீவிரங்கள் குறையும் போது அந்த இடத்தில்தான் இசை வரவேண்டும் எனச் சொல்வதெல்லாம், இசை எந்தெந்த இடங்களில் வரவேண்டும் என்பதில் ஒரு பகுதி. இதுபோல நிறைய பகுதிகள் உள்ளது.
இசையே வேண்டாம் என்று சொல்கின்ற இடங்களில் மெளனத்தை மட்டுமே கொடுப்போம். இந்த மெளனம் கூட ஒரு இசைதான். இப்படித்தான் நான் இசையை அணுகுகிறேன்.
காட்சியை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் சிலர் Grammer of shots பின்பற்றுவார்கள், ஆனால், எனக்கு Non Grammer of shots தான் ஒத்துப்போகிறது. சினிமா தினமுமே ஒரு Problem solving தான்.
ஒரு காட்சியை பார்வையாளர்களுக்கு விளக்க, அந்த உணர்வை கொடுக்க அந்த இடத்தில் இசை பயன்படுகிறது என்றால் கூட, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், படத்தில் காட்சிகளே அழகாக கதை சொல்கிறது. அப்பொழுது, மேற்கொண்டு எதற்காக இசையின் வாயிலாகவும் கதை சொல்கிறீர்கள்? ஒரே நேரத்தில் எதற்காக இரண்டுவிதமான Narration? இது ஒருவகையில் கதையின் போக்கில் இசையின் குறிக்கீடுதானே?
உன் காதலியிடம் காதலைச் சொல்கிறாய். காதலைச் சொல்வதிலேயே அந்த இடத்தில் அவளால் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. ஆனால், அதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவள் கையைப் பிடித்துக்கொள்கிறீர்கள், அவளுக்கு ஒரு முத்தம் கொடுக்கிறீர்கள், அவள் செல்கின்ற பொழுது அவளையே பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். இது தான் நடக்கும். இதை நான் இசையாகப் பார்க்கிறேன்.
அம்மா உங்களுக்கு சாப்பாடு போடுகிறாள். நீங்கள் விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள். சாப்பிடவில்லை. பின்பு பார்த்தால் சாப்பாடு அப்படியே இருக்கிறது. அம்மா பார்க்கிறாள், மீண்டும் உங்களைச் சாப்பிடக்கூப்பிடுகிறாள். நீங்கள் வரவில்லை. அம்மா மறுபடியும் கூப்பிடுகிறாள். இது எப்படி குறிக்கீடுகள் ஆகும். இது ஒருவகையில் கருணை. நீங்கள் சொல்கின்ற இரண்டாவது Narrationயை நான் கருணையாகப் பார்க்கிறேன்.
நான் ஒரு வகையில் Low level சினிமாதான் எடுத்துக்கொண்டிருக்கிறேன் என்று நம்புகிறேன். ஆனால், அதனை நான் Deliberate ஆக செய்துகொண்டிருக்கிறேன்.
இளையராஜா., ”நந்தலாலா”, படத்திற்காக பின்னணி இசை அமைக்க வேண்டும். முதல் காட்சி. தலைப்பு போடுகின்ற பொழுது தண்ணீரில் அமிழ்ந்த புற்கள் அப்படியே அசைந்துகொண்டிருக்கும். அதைப் பார்த்த இளையராஜா நான் அந்த இடத்திற்கு, மியூசிக் போடுகிறேன், என்கிறார்.
அந்நேரத்தில் இளையராஜாவிடம்,” இசை வேண்டாம் சார்” என்று சொல்கிறேன்.
”இந்த இடம் அழகான இடம், முழு சினிமாவின் கதையையும் இந்த இடத்தில் நான் இசையின் மூலம் சொல்கிறேன்” என்கிறார் இளையராஜா.
அப்பொழுதும் நான் ’வேண்டாம் சார் ’ என்றேன்.
”டைட்டில்ல மியூசிக் போடலைன்னா நல்லயிருக்காது, அதற்காக அந்த இடத்தில் மியூசிக் போடுகிறேன்” என்கிறார்.
அப்பொழுதும் நான் ”வேண்டாம் சார்” என்கிறேன்.
நான்காவது முறையாக இளையராஜா சொல்கிறார், ”37 வருடமாக நான் டைட்டிலில் இசை சேர்க்காமல் படம் பண்ணியது இல்லை”, என்கிறார். அப்பொழுதும் நான் ”வேண்டாம் சார்” என்றுதான் சொன்னேன்.
“டேய் வெளிய போடா” என்று இளையராஜா சொல்கிறார்.
“சரிப்பா.., “ என்று வெளியே வந்துவிட்டேன்.
நான் நினைத்திருந்தால் டைட்டில் கார்டிலிருந்தே கதையை ஆரம்பித்திருக்க முடியும். நீங்கள் சொல்வது புரிகிறது, ஆனாலும், நீங்கள் சொல்வதை முன்பே நான் செய்துகாட்டிவிட்டேன்.
உங்கள் படங்களின் கதை சொல்லும் விதம் அதாவது வடிவம் (Form) சினிமாவில் சிறப்பாக உள்ளது. ஆனால், மற்ற இயக்குனர்களின் படங்களில் இந்த வடிவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சொல்லவேண்டிய கதைக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கின்றனர். என்ன சொல்லப்படுகின்றது என்பதை விட, எப்படிச் சொல்கிறோம் என்பதில் இவர்கள் ஏன் அக்கறை காட்டுவதில்லை?
என் பாத்ரூம் கதவில் ஒரு கவிதை இருக்கிறது. The Moose என்பது கவிதையின் பெயர். (Elizabeth Bishop எழுதிய The Moose கவிதையை கீழ்க்கண்ட இணைப்பில் படிக்கலாம்: http://www.poets.org/poetsorg/poem/moose)
இதில் 28 பத்தி இருக்கிறது. ஒவ்வொரு பத்திக்கும் 6 வரிகள் உள்ளது. அப்படியெனில் 168 வரிகள். இந்தக் கவிதையை எழுதுவதற்கு எவ்வளவு நாட்கள் ஆகியிருக்கும் என்று நினைக்கிறீர்கள். ஒரு வருடம் , இரண்டு வருடம் அல்ல, பதினாறு வருடங்கள் ஆகியிருக்கிறது. எலிசபெத் பிஷப் எழுதியிருக்கிறார். ஒரு வடிவம் எப்படி கைகூடும் என்றால் எவ்வளவு நாட்கள் அதற்காக வேலை செய்கிறீர்களோ, அப்பொழுதுதான் அந்த வடிவம் கைகூடும். ஒவ்வொரு ஷாட்டையுமே தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும். வாழ்க்கையில் எங்கெங்கெல்லாம் இந்த க்ளோஸ் அப் ஷாட் உபயோகிக்கப்படுகிறது.
காதலி முத்தம் தருகின்ற பொழுது அவள் முகம், குழந்தையின் அரவணைப்பின் போது அந்த முகம்,
அப்பாவும், அம்மாவும் இறந்தபிறகு அவர்களை நீங்கள் க்ளோஸ் அப்பில் பார்க்கிறீர்கள். வாழ்க்கையிலேயே குறைந்த அளவிலான ”க்ளோஸ் அப்”, தான் இருக்கிறது.
ஆனால், இங்கு ஒரு ஹீரோ க்ளைமேக்ஸ் காட்சியில், அசிங்கமான மீசை, முகம் , இதையெல்லாம் வைத்துக்கொண்டு க்ளோஸ் அப்பில் நீண்ட நேரம் வசனம் பேசுகிறான். அதனையும் மக்கள் வேறு வழியில்லாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். க்ளோஸ் என்ற ஒரு ஃபார்ம் எங்கெங்கெல்லாம் உபயோகிக்க முடியும் என்று கண்டுபிடிக்கவே இன்னமும் பதினைந்து வருடங்கள் ஆகும். இப்படிக் கஷ்டப்பட்டு ஒரு ஃபார்ம் உங்கள் படத்தில் வந்துவிட்டது என்றால் எவ்வளவு சந்தோஷம் வரும் தெரியுமா? சைக்கிளை ஒரு மாதம் அரைப்பெடலாக ஓட்டிவிட்டு, மற்றொரு நாள் ஏறி உட்கார்ந்து கீழே விழுந்துவிட்டு, ரத்தம் வர, பின்பு ஏறி உட்கார்ந்து ஓட்டுகின்ற பொழுது, அவனுக்கு ஃபார்ம் தெரிந்துவிட்டது என்று சந்தோஷப்படுவான் பாருங்கள். அன்றைக்கு காலையில் இருந்து, இரவு வரை அவன் சைக்கிளிலிருந்து இறங்கவே மாட்டான். அந்த சந்தோஷத்தில் நான் இருக்கிறேன்.
இந்த Moose கவிதையை அவள் பதினாறு வருடங்கள் எழுதினாள் என்பது பெரிய விஷயம் கிடையாது. அவள் பதினாறு வருடங்கள் இந்தக் கவிதைக்காக போராடியிருக்கிறாள். ஆனால், பதினாறு வருடத்திற்கு முன்பே அந்த கவிதைக்கான கரு அவளுக்குத் தெரிந்துவிட்டது. கவிதை எதைச் சொல்லப்போகிறது என்பதும் தெரிந்துவிட்டது என்றுதானே அர்த்தம். அதை மிஞ்சிப் போனால் ஒரு வாரத்தில் எழுதியிருக்கலாமே, ஏன் அவள் பதினாறு வருடங்கள் எடுத்துக்கொள்கிறாள். அந்த வடிவம் அந்தக் கவிதைக்கு வேண்டும் என்பதற்காகத்தானே.
beethoven's egmont overture அந்த இசையை நீங்கள் கேட்டால், பீத்தோவனின் எல்லா இசை நுணுக்கமும் அதில் இருக்கிறது. அந்த வடிவத்தை அவன் கடுமையான உழைப்பின் மூலம் வெற்றிகொள்கிறான். ஒரு சிம்பொனிக்கு அவர் கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் எடுத்துக்கொள்கிறார். அதற்கு பெரிய போராட்டக் குணம் இருக்க வேண்டும்.
சிலர் என்னைக் கேலி பண்ண ஆரம்பித்திருக்கிறார்கள். இது மிஷ்கின் ஷாட் என்று ஒரு ஷாட்டை கூறுகிறார்கள். நான் உயிரோடு இருக்கின்ற காலத்திலேயே ஒரு ஷாட்டிற்கு என் பெயரை வைத்து அழைக்கிறார்கள். கூச்சமாகத்தான் இருக்கிறது. Form is Beauty. இந்த மகிழ்ச்சியை எப்படிச் சொல்லவேண்டுமென்றால், திரும்பியும் என் அம்மாவின் கருவறைக்குள் சென்று விட்டது மாதிரி இருக்கின்றது.
தமிழ்ச்சினிமாக்களில் எடுக்கப்படுகின்ற கதைக்கும், மக்களின் யதார்த்த வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறதே ஏன்?
மக்களின் வாழ்க்கைக்கு நெருக்கமானதுதான் சினிமா. ஆனால், சினிமாவில் காண்பிக்கப்படுவது உண்மை கிடையாது. படத்தொகுப்பு உண்மை கிடையாது.
”அஞ்சாதே”, படத்தில் ஒரு காட்சி வருகின்றது. காவல் நிலையத்திற்கு வருகிறான். மனைவியின் தலையை வெட்டி எடுத்து வருவான். ஏன் என்று கேட்டால், என் ”பெண்டாட்டி இன்னொருவருடன் இருந்தால், என்னால் தாங்கமுடியவில்லை, பொண்டாட்டியின் தலையை வெட்டிவிட்டேன்” என்பான். இது சினிமா.
வாழ்க்கைக்கு வருவோம். ரோட்டில் ஒருவன் ஒல்லியாக போய்க்கொண்டிருக்கிறான். அழுக்காக இருக்கிறான். கையில் பேக் வைத்திருக்கிறான். அவனைக் கேட்டால் ’பொண்டாட்டியின் தலையை வெட்டி பேக்கில் வைத்திருக்கிறேன்’, என்கிறான் என்று சொன்னால், உடனே நான் அதிர்ச்சியடைவேன். உடனே நான் வீட்டிற்கு வருகிறேன். மனைவி வீட்டில் அமர்ந்திருக்கிறாள். கலவரமான முகத்துடன் கணவன் வருவதைப் பார்த்ததும், மனைவி கேட்கிறாள். கணவன் நடந்தவற்றை பயத்துடன் சொல்கிறான். கணவனை மடியில் படுக்கவைத்துக் கொள்கிறாள் மனைவி. அவனைத் தேற்றுகிறாள். மறுநாள் இதனை மறந்துவிடுகிறார்கள். இதுதான் வாழ்க்கையில் நடக்கின்ற உண்மை.
இந்தக் காட்சி போன்ற ஒரு காட்சியைத்தான் நாங்கள் சினிமாவில் எடுக்கின்ற பொழுது, கதாநாயகனுக்கு காய்ச்சல் வந்துவிடுகின்றது. மகன் தான் எதிர்காலம் என்று நினைத்த தந்தை, மகனின் ஷீவிற்கு பாலிஷ் போட்டுக்கொண்டே, ” நீ போலிஸ் காரண்டா , பொணத்தைப் பார்க்க வேண்டி வரும், பொணத்தின் மேல் விழுந்து அழுகிற பொண்டாட்டியைப் பார்க்க வேணும், வாழ்க்கையை நீ நல்லா கண்ண தொறந்து பார்க்கணும்டா”, என்று விளக்குகிறார்.
என்னுடைய கதாபாத்திரங்களின் மனதை மாற்றுவதற்கும், அவனுடைய பயணத்திற்கு உதவி செய்யவும் அந்தக் காட்சியை பயன்படுத்திக்கொள்கிறேன். ஆகவே நான் அந்த ரியாலிட்டியை கடந்துசென்று அதிலிருந்து இன்னொன்றை உருவாக்குகிறேன்.
ஓநாயும் ஆட்டுக்குட்டியில் ஒருவனை சுடப்போகும்போது திருநங்கை குறுக்கே பாய்ந்து விழுகிறாள் என்றாள் அது உச்சக்கட்ட ஹைபர் ரியாலிட்டி. அது யதார்த்த வாழ்க்கையில் ஒருபோதும் நடக்கவே முடியாத சம்பவம். ”அஞ்சாதே”, படத்தில் செத்துப்போன இடத்தில் பாட்டி பூவைப்போட்டுச் செல்வதென்பது hyper reality.
But it teaches me, Hope, Morality & Meaning.
நிஜத்தை விட, புனைவு சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றம் மிக பெரியது. ஒரு நிஜ சம்பவத்தை நேரில் பார்க்கும்போது ஏற்படும் அனுபவத்தை விட, அதனை அப்படியே புனைவாக திரையில் பார்க்கும்போது ஏற்படும் அனுபவம் முக்கியமானது. நாம் நமக்கு அருகில் நிஜமாக நடக்கும் ஒன்றில் அதிக கவனம் செலுத்தாமல் கடந்துவிடுவோம். ஆனால் புனையப்பட்டு, இருட்டறையில், பலரோடு சேர்ந்து திரையில் அதே சம்பவத்தை பார்க்கும்போது நமக்குள் அதே சம்பவம் ஏற்படுத்தும் பாதிப்பு அதிகம். நிஜத்தில் பார்த்த சம்பவம் ஏற்படுத்தாத, அதையே புனைவாக சித்தரித்து, திரையில் காட்டினால் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறது? அங்குதான் படைப்பாளியின் நுட்பமான கலையாளுமை வெளிப்படுகிறது. நேரில் பார்த்த நிஜ சம்பவத்தில் பார்வையாளன் தவற விட்ட பல தருணங்களை வெவ்வேறு கோணங்களில், வெவ்வேறு வண்ணங்களில், ஷாட்களில் காண்பிக்கும்போது, பார்வையாளன் அதனோடு தன்னை நெருக்கப்படுத்திக் கொள்கிறான்.
உங்கள் படங்களில் வருகின்ற கதாபாத்திரங்கள் முற்றிலும் கெட்டவர்களும் இல்லை, நல்லவர்களும் இல்லை. உதாரணத்திற்கு ”அஞ்சாதே” கிருபா, ”யுத்தம் செய்” டாக்டர்.புருஷோத்தமன் , ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் வுல்ஃப் கதாபாத்திரம். இப்படி உங்கள் கதாபாத்திரங்களை அமைத்துக்கொள்வதன் காரணம்?
மனிதர்களைப் பார்த்தால் கறுப்பு அல்லது வெள்ளையாகத்தன் தெரிகிறார்கள். வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு மனிதர்களையும் கறுப்பு வெள்ளையாகத்தான் பார்க்கிறோம். ஆனால், இலக்கியத்தில் மட்டும் தான், இரண்டிற்கும் மத்தியிலான, கதாபாத்திரப் படைப்புகள் இருக்கின்றன. அந்த வாழ்க்கை தான் யதார்த்தம். கறுப்பும் வெள்ளையும் கலந்துதான் ஒரு மனிதன்.
வெள்ளையாக இருப்பவர்கள் முழு எம்.ஜி.ஆராக இருப்பார்கள். கருப்பாக இருப்பவர்கள் நம்பியார்கள். இது சலிப்புத்தரக்கூடியது. இரண்டிற்கும் இடையில் ஒரு மனிதன் நல்லவனாகவும் இல்லாமல், கெட்டவனாகவும் இல்லாமல் இருப்பான் என்பதை இலக்கியம் மட்டும்தான் பார்க்கச் சொல்லிக்கொடுக்கிறது.
இன்றைக்கு நீங்கள் வந்ததன் பிறகு எனக்கு வந்த முதல் போனில் என்னை பாலாவின் அலுவலகத்திற்கு அழைத்திருந்தார்கள். இரண்டாவது வந்த போன் அழைப்பில் எனக்கு ”குங்க்ஃபூ கற்றுக்கொடுத்த மாஸ்டர் இறந்துவிட்டார்”, என்று சொன்னார்கள். மிகவும் சோகமான விஷயம் தான். ஆனால், இதுதான் வாழ்க்கையின் யதார்த்தம். ஆகையால் இந்த யதார்த்தம் இல்லாமல் என்னால் ஒரு கதை பண்ணிவிடவே முடியாது. சொல்லப்போனால் ரியாலிட்டியில் இல்லாத ஒரு யதார்த்தம். ஹோமர் அழகாகச் சொல்வார்கள். கடுமையான போர்களை முடித்துவிட்டு, வீரர்கள் ஒரே பயங்கர அழுகையாம். ஏனெனில் நண்பர்கள் இறந்துவிட்டதை நினைத்து அழுகின்றார்களாம். அழுதுகொண்டேயிருக்கின்றபொழுது சாப்பிடுகிறார்களாம். சாப்பிட்டு விட்டு மீண்டும் அழுகிறார்களாம். கலைப்பின் மிகுதியால் அங்கேயே தூங்கியும் விடுகிறார்களாம். இதுதான் யதார்த்தம். இந்த பகுதி இருக்கிறதே, க்ரே கலர், இது சினிமாவிற்கு கச்சிதமாக கைகொடுக்கும்.
”கிங்காங்”, என்ற படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். முதல் பகுதியில் அது கறுப்பு (கெட்டது). அது மற்றவர்களை கடித்து தின்கிற கதாபாத்திரத்தில் காட்டியிருப்பார்கள். அதற்குப் பின்பாக நடுவில் க்ரே கலரில் இருக்கும். இறுதியாக அது வெள்ளையாகிவிடும். எல்லோருக்கும் நல்லது செய்யும். நம் கண்ணில்தான் அந்தக் கறுப்பும் வெள்ளையும் இருக்கிறது. நாம் தான் நினைத்துக்கொண்டிருக்கிறோம், உலகம் வண்ணமயமானது என்று, ஆனால், கறுப்பும் வெள்ளையும் தான் உலகம் முழுவதும் நிரம்பியிருக்கிறது. விலங்குகளுக்கு கூட இந்த கறுப்பும் வெள்ளையும் மட்டும்தான் தெரியும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் தான் அவைகள் அன்பாகயிருக்கின்றன. க்ரே ஷேட் தான் வாழ்க்கையின் உருவம், வாழ்க்கையின் நிஜம். அதைத்தான் என் சினிமாக்களில் மீண்டும் மீண்டும் முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு நொடியில் 24 பொய்களைச் சொல்கிற சினிமாவில் அந்த க்ரே மனிதர்களைக் காண்பிக்கின்ற பொழுதுதான் உண்மையாகிறது. இது எல்லாம் சினிமாவிற்கு வருபவர்களுக்கு ரகசியமாகச் சொல்லிக்கொள்கிறேன்.
நல்ல படைப்பு உருவாக பணம் ஒரு தடையாக இருக்குமா?
என் வாழ்க்கையில் அப்படி இல்லை, நான் ஏழு படங்கள் முடித்துவிட்டேன், இன்னமும் என் வங்கிகணக்கு பூஜ்யமாகத்தான் இருக்கிறது. நல்ல படங்கள் தான் எடுக்கவேண்டும் என்று நினைக்கிறேன், எடுத்துக்கொண்டிருக்கிறேன். பணம் ஒரு தடை என்று சொல்வதெல்லாம் பொய்.
உங்கள் படங்களின் வரிசையில் முகமூடி எப்படி இணைந்துகொண்டது?
முகமூடி பண்ண ஆரம்பித்தபொழுது வேறு. ஆனால் நான் முடிக்கின்றபொழுது அது வேறொன்றாக மாறிவிட்டது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றது. அந்தப் பல காரணங்களை நான் சொல்லவிரும்பவில்லை, அதில் ஒரு காரணம் நான். நான் விழிப்போடு இல்லை, இந்தப்படத்தில் நான் என் ஆன்மாவோடு பரிசோதனை செய்யவில்லை. அதனால் அந்தப் படத்தில் நடந்த எல்லா தவறுகளையும் என்மேல்தான் சுமத்தவேண்டும். அதில் நடித்தவர்களையோ, விநியோகஸ்தர்களையோ, தயாரிப்பாளர்களையோ குறைசொல்லவில்லை. அந்தப் படம் எடுக்கின்ற இரண்டு மாதங்களும் நான் கோமாவில் இருந்திருப்பதாக வைத்துக்கொள்ளலாம். ஆனால், அதற்குப் பின்பாகத்தான் நான் ”ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”, படம் பண்ணினேன்.
ஆனால், என் வாழ்க்கையை வேறொரு மாதிரி வாழப் பழக்கியதால் ”முகமூடி”, பிடித்திருக்கிறது. ”முகமூடி”, எனக்கு நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறது. இனிமேல் யாராவது என்னை ”முகமூடி”, மாதிரி படம் பண்ணச்சொன்னால், பண்ணமாட்டேன்.
அது ஒரு ஆசை, அடுத்து., நான் தண்ணீரில் குதித்து முதலையிடம் கடி வாங்கவேண்டும், அப்பொழுதுதான் இனி அந்த தண்ணீருக்குள் குதிக்க மாட்டேன். ஆழம் தெரியாமல் குதித்து முதலை என்னைக் கடித்து விட்டது, அதுவும் கடிக்க கூடாத இடத்தில் கடித்துவிட்டது, அதுதான் முகமூடி. அதிலிருந்து எப்படியோ வெளியே வந்துவிட்டேன். அது ஒரு அனுபவம்.
தமிழ்சினிமாவில் ஹீரோயிசம்? இந்த ஹீரோக்கள் சினிமாவில் காட்டுகின்ற ஹீரோயிசம் தான் அவர்களை அரசியல் நோக்கிச் செல்லவைப்பதும், திரைப்படத்தில் மக்களுக்கு நல்லது செய்கின்ற ஹீரோ வாழ்க்கையிலும் நமக்கு நல்லது செய்வார் என்று மக்கள் எதிர்பார்ப்பதும் இதன் விளைவு தானே.?
”அஞ்சாதே”, படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் ஒருவன் வெட்டப்பட்டு கிடப்பான், அவன் உதவிக்காக தவித்துக்கொண்டிருப்பான். அப்பொழுது ஒரு பாட்டி நான் வருகிறேன் என்று வந்தாள் அல்லவா அவள் தான் ஹீரோ.
பவா செல்லத்துரை ஒரு பெரிய ஹீரோ. நீங்கள் திருவண்ணாமலைக்குச்சென்று நள்ளிரவு 2 மணிக்கு சாப்பாடு இல்லாமல் இறங்கிவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது பவாவின் வீட்டுக் கதவை நீங்கள் தட்டினால், அவர் வீட்டிலிருக்கின்ற அரிசியை வைத்து சமைத்துக்கொடுப்பார். அவர் தான் ஹீரோ. இது பண்ணினால் இந்த விளைவு வரும் என்று சிந்திக்காமல் ஆபத்தில் ஒருவனுக்கு உதவுபவனும், கிணற்றுக்குள் ஒரு குழந்தை விழுந்தவுடன் அக்குழந்தையைக் காப்பாற்ற அதில் குதிப்பவனும்தான் என்னைப் பொறுத்தவரை ஹீரோ. உலகத்தில் இவ்வளவு ஹீரோக்கள் இருக்கின்ற பொழுது சினிமாவில் எதற்காக ஹீரோயிசம்.
Anny Hall படத்தில் woody allen நேரடியாக சினிமாவில் பேசுகிறார். நான் எனது ”யுத்தம் செய்”, படத்தில் பேசியிருக்கிறேன். இது ஒரு அறத்தோடு செயல்படுவது. தன்னையும், தன் சொந்த நலனையும் உயர்த்திக்கொள்வதற்காக இந்தக் காட்சிகள் சினிமாவில் வைக்கப்பட்டிருக்காது.
”உதிரிப்பூக்கள்”., கடைசிக் காட்சியில், ”இந்த ஒரு நாள் ஊரிலிருக்கின்ற எல்லாரையும் கெட்டவனாக்கி விட்டேன்” என்று சொல்லிய விஜயன். இது பெரிய ஹீரோயிசமாக இருந்தது. அதற்குப் பின்பாக தன் காதலியின் கணவனை, தன் உயிரைக் கொடுத்துக் காப்பாற்றும், ”நெஞ்சில் ஓர் ஆலயம்”, படம் ஹீரோயிசம் தான். ”சிறை” படத்தில் ஒரு பெண்ணைக் கற்பழித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் அந்தப் பெண்ணிற்கு இவ்வளவு பெரிய தீங்கு இளைத்துவிட்டோமே! என்று வருத்தப்பட்டு, வருத்தப்பட்டு, செத்தானே ராஜேஷ் என்கிற கதாபாத்திரம் அது பெரிய ஹீரோயிசம். என் வாழ்க்கையில், என் இதயத்தின் அழுக்குகளை எந்த மனிதன் சுத்தம் செய்கிறானோ அவன் தான் ஹீரோ. அவன் தான் என் வாழ்க்கையில் விளக்காக வருவான். அந்த மாதிரியான ஹீரோக்களின் படங்களை நான் தேடித்தேடி பார்த்திருக்கிறேன்.
பிசாசு எந்த மாதிரியான கதைக்களம்?
சின்ன வயதிலிருந்து என்ன சொல்வார்கள், அந்த” வேப்ப மரம் பக்கம் போகாதே, பிசாசு இருக்கும்”, என்பார்கள். இது மாதிரியான பல கதைகள் சமூகத்தில் சொல்லப்பட்டிருக்கும், ஆனால் நான் சமூகம் சொன்ன பக்கமே போகவில்லை. நான் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டேன்.
பிசாசு இருந்தால்?
அப்படி பிசாசு இருந்தால், என் பெற்றோர்கள் சொல்லிக்கொடுத்தது போல அவை பயமுறுத்துமா? அல்லது பிசாசுகளே இல்லை, அது மூட நம்பிக்கை என்று சொல்வது போல அவைகளை ஒதுக்கிவிட வேண்டுமா? என்ற சிந்தனைகளை புறந்தள்ளிவிட்டு இந்தக் கதைக்குள் நுழைந்தேன்.
பிசாசுகள் இருப்பதாக நம்பிக்கொண்டு அவைகளின் இருட்டு உலகத்தினுள் நுழைந்து அவைகளைச் சந்தித்தேன், இவர்கள் ரெண்டு பேர் சொல்லிக்கொடுத்த மாதிரியும் பிசாசுகள் இல்லை.
வாழ்க்கை எவ்வளவு அழகானது, வாழ்க்கையை எவ்வளவு கவனமாக வாழவேண்டும், என்பதை பிசாசுகள் சொல்லிக்கொடுக்கிறது. நாம் பேசுவதெல்லாமே உண்மை கிடையாது, பார்ப்பது எல்லாமே நிஜம் கிடையாது. நாம் உணர்வது எல்லாமே நியாயம் கிடையாது. இதுதான் பிசாசு. இந்த திறனாய்வு இந்தப் படத்தில் நடந்திருக்கிறது. அந்த இரண்டரை மணி நேரக் கதைக்குள் வாருங்கள் , நீங்கள் பிசாசுகளைப் பார்க்கப் போகிறீர்கள். இந்தச் சமூகம் பார்க்காத பிசாசை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்
இயக்குனர்களுக்கு வாசிப்பின் அவசியம்?
கண் இருப்பவர்களுக்கும், கண் இல்லாதவர்களுக்கும் இடையேயான வித்தியாசம்தான்.
சினிமாக்களைப் பார்த்து மட்டுமே சினிமாவினைக் கற்றுக்கொள்ள முடியும் என்று எப்படி நினைக்கிறார்கள். தமிழ்ச்சினிமாவில் அதிகமாக படித்தவர் பாலுமகேந்திரா. அந்தப் பெரிய ஆலமரத்திலிருந்துதான் பாலா, ராம், சீனு ராமசாமி , வெற்றிமாறன் போன்றோரெல்லாம் வந்திருக்கின்றனர். ’ஸ்ரீதர்’, நிறைய படித்தவர். முதலில் தமிழ்ச்சினிமா எடுத்த ”எல்லீஸ் ஆர் டங்கன்”, மிகவும் படித்தவர். பாலச்சந்தர் நிறையப்படித்தவர். ஆகையால் படிப்பு மிகவும் அவசியம். உடலில் சிகிச்சை செய்பவர் மருத்துவர், ஆனால், மனதளவில் சிகிச்சை செய்பவர் தான் இயக்குனர். ஒரு கதாசிரியனை நான் சமூகத்தின் மருத்துவர் என்றுதான் சொல்வேன்.
இந்தச் சமூகம் ஏன் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புகிறது. எதற்கு அனுப்புகிறார்கள்? யாருமே படிக்காதவர்களாகயிருந்தால் இந்த உலகம் எப்படியிருக்கும்? உங்களுக்கு வீடு கட்ட வேண்டுமென்றால், அந்த வீட்டிற்கு கட்டுமானப் பொறியியலாராக ஒரு படித்தவரைத் தேடுகின்றனர். வீட்டிலிருக்கின்ற கர்ப்பிணியின் பிரசவத்தின் போது ரோட்டில் போய்க்கொண்டிருக்கின்ற யாரோ ஒருவரை பிரசவம் பார்க்க அழைப்பதில்லை. இது மாதிரியான இக்கட்டான சூழலில் மட்டும் ஏன் படித்தவர்களிடம் செல்கிறோம். பின்னர் சினிமாவில் இருப்பவர்கள் மட்டும் படிக்க கூடாது என்று சொன்னால் என்ன அர்த்தம்?.
எனக்குத்தெரிந்த இயக்குனர்கள் சிலர் சொல்வார்கள், குமுதமும், ஆனந்தவிகடனும் மட்டுமே படித்தால் போதும் என்று. இயக்குனர்களுக்கு படிப்பு அவ்வளவு அவசியம். நான் எவ்வளவு பெரிய முட்டாள் என்பதை இந்தப் படிப்பு எனக்கு ஒவ்வொரு நாளும் சொல்லித்தருகிறது. ஒவ்வொரு நாளும் படித்து முடித்த பின்பாக நான் இவ்வளவு பெரிய முட்டாளாக இருந்திருக்கிறேனே! என்று என்னை அடையாளம் கண்டுகொள்கிறேன். படிப்பு அவ்வளவு அவசியம்.
சினிமா எடுக்கின்ற அல்லது எடுக்க வருகின்ற இளைய தலைமுறையினர்களுக்கு?
என்றைக்குமே இளைஞர்களுக்கு ஒன்று சொல்லவேண்டுமானால், மணிரத்னம் போன்றோரெல்லாம் இருக்கின்ற பொழுது, நாங்கள் திரைத்துறைக்குள் வந்தோம், நாங்கள் அப்போது இளைஞர்கள். பாலசந்தர் போன்றோர் காலகட்டத்தில் மணிரத்னம் இளைஞராக இருந்தார். கலை ஒன்றுதான், ஆட்கள் தான் மாறிமாறி வந்துகொண்டிருக்கின்றார்கள். அந்த தொடர்வண்டி போய்க்கொண்டேதான் இருக்கிறது.
சென்னையிலிருந்து திருச்சி வரையிலும் நீங்கள் காரில் சென்றால், மனநோயாளிகளை எக்கச்சக்கமாக சாலைகளில் பார்க்கலாம். நான் ஒருநாள் அவர்களை எண்ணிக்கொண்டே போகிறேன். கிட்டத்தட்ட நாற்பது பேர். அதனை நினைக்கிறபொழுது பயம் தான் வருகின்றது. நான் போகிற சாலையில் நாற்பது பேர் இருந்தால், ஒவ்வொரு ஊருக்குள்ளும் எத்தனை மனநோயாளிகள் இருப்பார்கள். இதற்கு என்ன காரணம்?. வாழ்க்கையின் அழுத்தம் தான்.
நம் சந்ததியினர் மாறிவிட்டனர். ஏனெனில் நம் குழந்தைகள் எல்லாருமே முதல் மதிப்பெண் வாங்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
ஆதிமனிதன் எதற்காக குகைக்குள் உட்கார்ந்து கதை சொன்னான் என்றால், அங்க ஒரு குளம் இருக்கும் டா, அந்தக் குளத்தில் இறங்கி தண்ணீர் குடிக்காதடா, அங்க தாண்டா புலி உட்கார்ந்திருக்கு என்று சொல்வான். அந்த மரத்திற்கு அருகில் போகாதடா, அந்த மரத்துக்குப் பக்கத்திலேயே ஒரு பொந்து இருக்குடா, அதுக்கு கீழ தான் டா பாம்பு இருக்கு என்று சொல்வான். பின்பு அவனே சொல்வான், ஆனால் நீ வேட்டையாடி ஆக வேண்டும். வேற வழியில்லை என்றும் சொல்வான். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு போடா, நானும் அப்படித்தாண்டா போய் வேட்டையாடினேன். புலியெல்லாம் அடிச்சேன் டா, என்று பொய் கூட சொல்வான். ஆகையால் அந்தக் கதையில் பொய்களையும், உண்மைகளையும் சேர்த்துச் சேர்த்துச் சொல்லி ஒரு வாழ்க்கைக்கான தத்துவங்களை அந்தக் கதையில் கொடுத்துக்கொண்டேயிருப்பான். அந்தக் கதைகள் இன்றைக்கு இளைஞர்கள் சந்திக்கின்ற சூழலில் மிக முக்கியமானது.
கதைகள் உங்கள் வாழ்க்கைக்கு மதிப்பு அளிக்கிறது.
ஒரு கதைசொல்லி இல்லையென்றால் இந்தச் சமூகம் என்னவாகும் என்பதை யோசித்துப்பாருங்கள்.
ஒரு சராசரி இளைஞன் எத்தனை தடவை வீட்டில் அழுகிறான் என்று சொல்லுங்கள் பார்க்கலாம். ஐந்து வருடத்திற்கு ஒருமுறை கூட அழுவது கிடையாது. ஆனால் ஒரு தியேட்டரில் மாதத்திற்கு ஒரு நல்ல படம் பார்த்தால் உடனே அழுகிறான். அவன் மனதிற்குள் யாரோ கல் எரிகிறார்கள். ஒருவன் திரைப்படத்தில் இறந்து போகிறான் என்றால், அதற்காக கஷ்டப்படுகிறாயே, அந்த மனிதத்தன்மையை உன்னிடத்தில் கொண்டுவருவதுதான் கலை.
அப்படியெனில் நிஜ வாழ்க்கையில் நடக்க முடியாத பிரச்சனைகள் நடந்துகொண்டிருக்கும்பொழுது, நாம் நம் வாழ்க்கையை மட்டுமே யோசித்துக்கொண்டிருக்கின்ற பொழுது அடுத்தவர்கள் வாழ்க்கையைப் பற்றியும் யோசிக்கவேண்டும்., சினிமாதான் அடுத்த வாழ்க்கையைப் பற்றி யோசிக்க வைக்கிறது. அது உங்களுக்கு பொறுப்புணர்வைத் தருகிறது. நல்ல படங்கள் தான் அதற்கு உதவும்.
நாவலாசிரியர்களுக்கும், திரைக்கதை ஆசிரியர்களுக்கும் உள்ள வேறுபாடு?
ஒரு நாவலாசிரியருக்கும் , சினிமாவில் திரைக்கதை ஆசிரியருக்கும் உள்ள தூரம் ஒரு அடி என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஒரு லட்சம் கிலோமீட்டர்கள். ழாக் தாத்தியிடம் (Jacques Tati) சென்ற jean- claude carriere, ”நான் ஒரு நாவலாசிரியர், நான் உங்கள் படத்திற்கு திரைக்கதை எழுத வேண்டும்”, என்கிறார். தாத்தி சொல்கிறார். ”ஒரு வருடம் என் எடிட்டிங்க் பிரிவில் வேலை செய்யுங்கள்”, என்று. ஒரு எடிட்டிங்க் அறிவு இருந்தால்தான் உனக்கு சினிமாவே புரிந்துகொள்ள முடியும் என்று சொல்கிறார்.
ஒருவருடம் இருந்த பிறகு அந்த நாவலாசிரியர், ”இப்பொழுதுதான் சினிமா என்றால் என்னவென்று புரிகிறது”, என்கிறார். சினிமா என்பது நாவல் அல்ல. நாவல் கடலில் குதித்து முத்து எடுப்பது போன்றது, ஆனால் சினிமா வானத்தில் பறந்து மேகத்தை உரசிப்பார்ப்பது. இவ்விரண்டிற்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடுகள் இருக்கிறது.
அவர்கள் நாவல்கள் எழுதுவதில் பெரிய ஆட்களாகயிருக்கலாம், அதை நான் குறையே சொல்லவில்லை, ஆனால் சினிமாவிற்கு வருகின்றபொழுது அவர்கள் சினிமாவின் வடிவம் படித்தபின்புதான் திரைக்கதை எழுதவே வரவேண்டும்.
வாழ்க்கையின் எல்லா விஷயங்களைப் பற்றிய புரிதல்களும் அவர்களுக்கு இருக்கிறது. அதனை மறுக்க மாட்டேன். அவர்கள் அதனை வெளிப்படுத்திய மீடியம் நாவல். அவர்கள் பார்வைக்கு எப்படி நாவல் ஒரு ஊடகமோ, அது மாதிரிதான் சினிமாவும் வேறு மீடியம். நீங்கள் வேற ஒரு மீடியத்திற்கு வருகின்ற பொழுது அதன் அரிச்சுவட்டைக் கற்றுக்கொண்டுதான் வரவேண்டும். அப்பொழுதுதான் சினிமாவைக் கையாள முடியும். இல்லையேல் அதனைக் கையாள முடியாது. அதனால்தான் பெரிய பெரிய எழுத்தாளர்கள் எழுதிய பெரிய படங்கள் கூட தோல்வி அடைந்திருக்கிறது. இதுதான் நிஜம். இங்கு மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும் உள்ளது.
நாவலாசிரியர்கள் சினிமாவிற்கு வரலாம் தப்பில்லை, ஆனால் அவர்களும் சினிமாவிற்கு வந்து ”க்ளோஸ் அப்”, என்றால் என்ன, ”மிட் ஷாட்”, என்றால் என்ன? ஒரு ஷாட்டின் நீளம் என்ன? ஒரு ட்ராலி ஷாட் எதற்கு? ஏன் டாப் ஏங்கிள் வைக்கிறார்கள். ? ஏன் அந்தக் காட்சியில் வார்த்தைகளை உபயோகிக்காமல் இசையை மட்டுமே கொடுக்கிறார்கள்? ஏன் வார்த்தைகள் உபயோகப்படுத்தினாலும் அந்த வார்த்தைகளை அமைதிப்படுத்திவிட்டு இசை மேலே வருகிறதே? நாவல் எழுத கற்றுக்கொள்ள வேண்டியவைகள் எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவும் சினிமாவிலும் இருக்கிறது. அனைத்தையும் கற்றுக்கொண்டு சினிமாவிற்கு எழுதலாம்.
அப்படியெனில் உங்கள் படத்திற்கு எழுத்தாளர்களைப் பயன்படுத்தமாட்டீர்களா?
சுருக்கமாகச் சொல்லலாம், ஜெயமோகனும், எஸ்.ராமகிருஷ்ணனும் எனது நெருங்கிய நண்பர்கள்தான். ஆனால் அவர்களை என் படத்திற்கு திரைக்கதை எழுத அனுமதிக்கவே மாட்டேன். ஏனென்றால் அவர்களைக் காட்டிலும் எனக்கு நன்றாக திரைக்கதை எழுதத்தெரியும். என்னால் அவர்கள் அளவிற்கு நாவல் எழுத முடியாது. என் படத்திற்கு என்னைவிட சிறந்த திரைக்கதையை அவர்களாலும் எழுதிவிட முடியாது.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com
முகநூலில் இணைய: htt://www.facebook.com/pesaamozhi |