இதழ்: 25     ஐப்பசி (November 01 - 15), 2014
   
 
  உள்ளடக்கம்
   
சினிமா - நிழலா? நிஜமா? - அருண் மோ.
--------------------------------
தமிழகக் காளியும் மகாராஷ்டிர ஜபயாவும் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
எஸ்.எஸ்.ஆர் - அரிதாரமற்ற கலைஞர் - டிராட்ஸ்கி மருது
--------------------------------
இயக்குனர் மிஷ்கின் நேர்காணல் - தினேஷ்
--------------------------------
இயக்குனர் விக்ரம் சுகுமாரன் நேர்காணல் - தினேஷ்
--------------------------------
இயக்குனர் பாலாஜி தரணிதரன் - நேர்காணல் - கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி
--------------------------------
இயக்குனர் ப. ரஞ்சித் நேர்காணல் - விக்னேஷ் சேரல்
--------------------------------
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நேர்காணல் - சரவணன்
--------------------------------
இயக்குனர் கமலக்கண்ணன் நேர்காணல் - காளிமுத்து
--------------------------------
இயக்குனர் நவீன் நேர்காணல் - ஜெயகாந்தன்
--------------------------------
இயக்குனர் ரமேஷ் நேர்காணல் - அருண் தேவா
--------------------------------
இயக்குனர் வினோத் நேர்காணல் - ஐயப்பன்
--------------------------------
தயாரிப்பாளர் சி.வி. குமார் நேர்காணல் - யுகேந்தர்
--------------------------------
தயாரிப்பாளர் ஜே. சதிஷ்குமார் நேர்காணல் - தமிழரசன்
--------------------------------
   


   

 

 

சினிமா - நிழலா? நிஜமா?


- அருண் மோ

இந்த இதழ் பேசாமொழியின் 25வது இதழ். சிறப்பாக கொண்டு வரவேண்டும் என்பதற்காக கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக்கொண்டோம். அதனால்தான் சென்ற இதழ் வெளியாகவில்லை. இனி வழக்கம்போல், பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை பேசாமொழி வெளிவரும். அடுத்த இதழும் தமிழ் சினிமாவின் நிகழ்கால போக்கை அலசும் சிறப்பிதழாகவே வெளிவரவிருக்கிறது.

ஃபிலிம் என்கிற விஞ்ஞான கண்டுபிடிப்பு தமிழ்நாட்டில் இன்னமும் ஃபிலிம் என்கிற நிலையிலேதான் இருக்கிறது. விஞ்ஞான கண்டுபிடிப்பான ஃபிலிம் என்கிற வார்த்தை எப்போது சினிமா எனும் கலையாக மாறுகிறது? இந்த ஒரு கேள்விக்கான விடையை கண்டுபிடித்திருந்தால், தமிழ் சினிமா எப்போதோ அதன் உச்சத்தை தொட்டிருக்கும். ஆனால் இங்கே இன்னமும் நாம் ஃபிலிம்தான் எடுத்துக்கொண்டிருக்கிறோம். ஃபிலிம் எனும் கச்சாப்பொருள் வழியே உருவங்களை பதிவு செய்து, வசனங்களின் வழியாக கதைகளை சொல்லிக்கொண்டிருக்கிறோம். நல்ல சினிமா எடுக்க முயற்சிப்பதுக் கூட இல்லை. வெவ்வேறு காலக் கட்டங்களில் தமிழ் சினிமா புதிய ட்ரெண்டை நோக்கி நகர்ந்திருக்கிறது. இப்போது நிறைய இளம் இயக்குனர்கள் புதிது புதிதாக சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள், போன்ற வாதங்களை நாம் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். இப்போது மீண்டும் தமிழ் சினிமாவில் அதே வாதம் தொடங்கியிருக்கிறது. தமிழ் சினிமாவில் புதிய அலை வீசத் தொடங்கியிருக்கிறது. நிறைய இளம் தலைமுறையை சார்ந்த இயக்குனர்கள், தமிழ் சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தி செல்வார்கள் என்கிற அந்த வாதம், உண்மைதானா என்பதை பகுப்பாய்வு செய்வதே பேசாமொழியின் இந்த இதழ் மற்றும் அடுத்த இதழின் நோக்கம்.

புதிய அலை இயக்குனர்கள், எந்த விதத்தில் தனித்து தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள், சினிமா குறித்து அவர்களின் புரிதல் என்ன? என்பதுப் போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பல்வேறு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் வாயிலாகவே விடையை முன்வைத்து இருக்கிறோம். இந்த இதழ் மட்டுமல்லாமல், அடுத்த இதழிலும் சில இயக்குனர்களின் நேர்காணல் வெளிவரவிருக்கிறது. இந்த ஒட்டுமொத்த நேர்காணலும், நிச்சயம் தமிழ் சினிமாவில் புதிய அலை இயக்குனர்களின் பங்கு என்ன? உண்மையாகவே இங்கு புதிய அலைதான் வீசுகிறதா என்பதை வாசகர்களுக்கு தெளிவுப்படுத்தும். இந்த நேர்காணல்களின் தொகுப்பு விரைவில் பேசாமொழி பதிப்பகத்தின் மூலம் புத்தகமாகவும் வெளிவரவிருக்கிறது.

நேர்காணல் என்பது அத்தனை சாதாரணமான விசயமல்ல. ஒன்று அல்லது இரண்டு இயக்குனர்களை நேர்காணல் செய்வதில் பெரிய சிக்கல்கள் இருக்காது. ஆனால் பத்துக்கும் மேற்பட்ட இயக்குனர்கள், மூன்று தயாரிப்பாளர்கள் என ஒட்டுமொத்தமாக தமிழ் சினிமாவின் நிகழ்கால முகமாக இருக்கும் அத்தனை போரையும் நேர்காணல் செய்வது என்பது நிறைய வேலைப்பளு மட்டுமல்ல, நிறைய சிக்கலும் நிறைந்தது. ஆனால் அத்தனை தடைகளையும் தாண்டி, இந்த இதழ் வெற்றிகரமாக வெளிவருவதற்கு தினேஷ் முக்கிய காரணம். இரவு பகல் பாராமல், பலரது நேர்காணலை ஒலி வடிவில் இருந்து, எழுத்து வடிவத்திற்கு மாற்றி, தொடர்புடைய இயக்குனர்களிடம் ஒப்புதல் பெற்று, மீண்டும் சில பல மாற்றங்களை செய்து, அவர்களின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். தவிர தொடர்புடைய புகைப்படங்களை, தேடிக் கண்டுபிடித்து, அதனை தேவையான இடங்களில் வைத்து வடிவமைப்பதற்கும் சினிமாவின் மீது நிறைய காதல் வேண்டும். தினேஷ் அதனை செய்து முடித்திருக்கிறான்.

இந்த இதழில் நண்பர் யுகேந்திரனும் மூன்று கட்டுரைகளை முன்னின்று வழி நடத்திக் கொடுத்துள்ளார். இன்னொரு நிறுவனத்தில் வேலை செய்துக்கொண்டே, இப்படி சினிமா வேலைகளையும் செவ்வனே செய்வதற்கும் சினிமாவின் மீது அலாதிப் பிரியம் இருக்க வேண்டும். நண்பர் யுகேந்திரனுக்கு சினிமாவின் மீது அத்தகைய பிரியம் இருக்கிறது. இவர்கள் இருவர் தவிர, படிமை மாணவர் ஜெயகாந்தன் இரவும் பகலும், தமிழ் ஸ்டுடியோவின் அலுவலகத்தில் இருந்து சில இயக்குனர்களின் நேர்காணலை ஒழுங்கமைத்துக் கொடுத்துள்ளார். ஒவ்வொரு படிமை மாணவர்களும், அவர்களுக்கென கொடுக்கப்பட்ட இயக்குனர்களிடம் நேர்காணல் செய்ய, வினாக்களை தயார் செய்து, அதனை எழுதி முடித்து, ஒப்படைக்கும் வரை மேற்கொண்ட பிரயத்தனம் மெச்சத்தக்கது.

நிறைய பணிச்சுமை, எழுத முடியாத மனநிலை என பல்வேறு கடினமான சூழலிலும் யமுனார் ராஜேந்திரன் இந்த இதழில் ஒரு அருமையான கட்டுரையை எழுதி இருக்கிறார். நிகழ்கால தமிழ் திரைப்படங்களையும், ஃபன்றி திரைப்படத்தையும் பற்றிய அந்தக் கட்டுரை மிக முக்கியமான கட்டுரை. கடைசி நேரத்தில் இந்த இதழ் உருவாக்கத்தில், எங்களோடு சேர்ந்து நேர்த்தியாக இயக்குனர் பாலாஜி தரணிதரன் நேர்காணலை வெளிக்கொணர காரணமாக இருந்தார் நண்பர் ஜெயச்சந்திர ஹாஸ்மி.

இவர்கள் அனைவரும் எப்போதும் தமிழ் ஸ்டுடியோவின் மீது பற்றுக் கொண்டவர்கள்.

ஆனால் நேர்காணல் செய்ய வேண்டும் என்று சொன்னதும், நேரம் ஒதுக்கி, பதில் சொல்லி, மீண்டும் பிழைகளை திருத்தி, தங்கள் பொறுப்புணர்ந்து நிறைய கவனத்தோடு நேர்காணலை முடித்துக்கொடுத்த இயக்குனர்கள் மிஷ்கின், விக்ரம் சுகுமாரன், கார்த்திக் சுப்புராஜ், ரஞ்சித், பாலாஜி தரணீதரன், வினோத், நவீன், ரமேஷ், கமலக்கண்ணன் ஆகியோருக்கும் தயாரிப்பாளர்கள் சி.வி. குமார் ஜே. சதிஷ்குமார் ஆகியோருக்கும் பேசாமொழி சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: htt://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </