இதழ்: 25     ஐப்பசி (November 01 - 15), 2014
   
 
  உள்ளடக்கம்
   
சினிமா - நிழலா? நிஜமா? - அருண் மோ.
--------------------------------
தமிழகக் காளியும் மகாராஷ்டிர ஜபயாவும் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
எஸ்.எஸ்.ஆர் - அரிதாரமற்ற கலைஞர் - டிராட்ஸ்கி மருது
--------------------------------
இயக்குனர் மிஷ்கின் நேர்காணல் - தினேஷ்
--------------------------------
இயக்குனர் விக்ரம் சுகுமாரன் நேர்காணல் - தினேஷ்
--------------------------------
இயக்குனர் பாலாஜி தரணிதரன் - நேர்காணல் - கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி
--------------------------------
இயக்குனர் ப. ரஞ்சித் நேர்காணல் - விக்னேஷ் சேரல்
--------------------------------
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நேர்காணல் - சரவணன்
--------------------------------
இயக்குனர் கமலக்கண்ணன் நேர்காணல் - காளிமுத்து
--------------------------------
இயக்குனர் நவீன் நேர்காணல் - ஜெயகாந்தன்
--------------------------------
இயக்குனர் ரமேஷ் நேர்காணல் - அருண் தேவா
--------------------------------
இயக்குனர் வினோத் நேர்காணல் - ஐயப்பன்
--------------------------------
தயாரிப்பாளர் சி.வி. குமார் நேர்காணல் - யுகேந்தர்
--------------------------------
தயாரிப்பாளர் ஜே. சதிஷ்குமார் நேர்காணல் - தமிழரசன்
--------------------------------
   


   

 

 

'தெகிடி' ரமேஷ் - நேர்காணல்

'நான் யோசித்த என்னுடைய கதையை எந்தவொரு மாற்றமும் செய்ய விடமாட்டேன்'

- அருண் தேவா

'தெகிடி ' என்கிற தலைப்பை எதனால் தேர்வு செய்தீர்கள் ?

முதலில் நாங்கள் 'பகடை ' Dice என்ற ஆங்கிலத் தலைப்பைத்தான் தேர்ந்தெடுத்தோம். இந்த தலைப்பை எங்களால் பதிவு செய்யமுடியவில்லை . வேறொரு இயக்குனர் ஏற்கனவே பதிவு செய்திருந்தார் , பின் என்ன செய்யலாம்? என்று கதைக்கான தலைப்பை தேடிக்கொண்டிருக்கும்போது 'தெகிடி' என்ற இந்த வார்த்தை கிடைத்தது. இது என்ன என்று அகராதியில் தேடிப்பார்க்கும் போது வஞ்சகம் , சூதுவிளையட்டு , defection என பல்வேறு அர்த்தங்கள் கிடைத்தது . இந்த தலைப்பை வேறு யாரும் பதிவு செய்யாமல் இருந்ததாலும் இதனை நாங்கள் பயன்படுத்திக்கொண்டோம்.

’தெகிடி' இது உங்களுக்கு முதல் படம். மார்க்கெட் பிரபலம் இல்லாத நடிகரை வைத்துதான் இந்த படத்தை எடுத்தீங்க, ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில் எப்படி கொள்ளையடிக்கிறார்கள் என்பதையும் அவர்கள் செய்யும் குற்றத்தையும் மையமாக உள்ள இந்த கதையை நீங்கள் திரைப்படமாக எடுக்க காரணம் ?

நாளைய இயக்குனரில் வெளியான என்னுடைய முதல் குறும்படத்திலிருந்து, அதிகபட்சமாக சமுகம் சார்ந்துள்ள கதைகளைத்தான் தேர்ந்தெடுப்பேன் , ஆனால் இந்த படத்தை பொறுத்தவரைக்கும் பொதுவான ஒரு தகவல் இருக்கும் , அப்படி இதில் நாங்கள் சொல்ல நினைத்த செய்திதான் நம்முடைய, நம்மைப்பற்றிய தகவல்கள், விபரங்கள் நமக்குத்தெரியாமல் வேறொருவரிடம் போகும் விஷயம்.

இன்றைக்கு தமிழ்சினிமாவில் நுழைய குறும்படத்தை ஒரு நுழைவு சீட்டாக பயன்படுத்தும் இந்த சூழல் குறித்து உங்கள் பார்வை?

சினிமாவிற்கு போவதற்கான துருப்புச்சீட்டு, நுழைவுச்சீட்டு என்று எல்லாம் ஒன்றுமே கிடையாது,சினிமா என்ற வார்த்தையை முதலில் விட்டுவிடுங்கள், நீங்கள் குழந்தையாக இருந்தபொழுது உங்களைத்தூங்க வைப்பதற்காக பாட்டி கதை சொல்வாள், அதற்கு பின்பாக கூட்டமாக உட்கார்ந்து ஒருவர் அல்லது ஒரு குழு மட்டும் வந்து கதை சொல்ல, மற்றவர்கள் கேட்க ஆரம்பித்தனர். அதை நாடகம் என்று சொன்னார்கள். நாடகம் என்று இருந்ததை சில நாட்கள் கழித்து அவர்களாக ஒரு கற்பனை செய்து அவர்களாக ஏதாவது ஒரு கதை சொல்லுவார்கள். அதுமாதிரியான கதை சொல்லல்தான் இந்த மீடியம். அதனால் இது ஒரு நுழைவுச்சீட்டு என்பதெல்லாம் கிடையாது ,ஏன் என்றால் நீங்கள் ஐந்து நிமிடத்தில் ஒரு குறும்படத்தை எடுத்துக் காட்டினாலும், அந்தப்படம் நன்றாகயிருக்கின்ற பட்சத்தில் அது உலக அளவிற்கு கடந்து செல்லும் . ”இந்த ஐந்து நிமிடத்திலே நல்லதொரு கதை சொல்லியிருக்கான். இதுவரைக்கும் யாரும் சொல்லாத கதையாக இருக்கிறதே” என்று பரபரப்பாக பேசுவார்கள்.

இப்போது இந்த ஐந்து நிமிடம், இல்லை மூன்று மணிநேரம், இல்லை நான்கு மணிநேரம் எடுத்து கொண்டு ஒரு சலிப்பான கதையை சொன்னீர்கள் என்றால் அந்த படத்தை யாரும் பார்க்கவே மாட்டார்கள். இதை நீங்கள் ஒரு கதை சொல்லலில் மட்டும் எடுத்து கொண்டீர்களென்றால், அதனுடைய புரிதல் மிக சரியாக இருக்கும். இப்போது ஒரு கதை சொல்லலை குறும்படமாகவும், திரைப்படமாகவும் எடுக்கிறீர்கள். நீங்கள் கதை சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். ஆனால் அவர்களுக்கு புரியவில்லை, பிடிக்கவில்லை என்று அவர்கள் சலிப்படையும் பொழுது இங்க பாருங்க, திரைய பாருங்க உங்களுக்கு வேறுறொரு கதையை சொல்லபோறேன் என்று மாற்றி மாற்றி அதாவது பல்வேறு கதைகளை இணைத்து சொல்லும் போது பார்வையாளர்களை ஈர்க்கவும் முடிகிறது. ஈர்க்கக்கூடிய சில விசயங்களையும் இவர்கள் சேர்க்கவும்செய்கிறார்கள், அதில் நல்ல விசயங்களும் இருக்கிறது கெட்ட விசயங்களும் இருக்கிறது. ஆனால் இதெல்லாம் சார்ந்த ஒரு கதை சொல்லல் தான் இந்த மீடியம். இது குறும்படமாகவும் இருக்கலாம் சினிமாவாகவும் இருக்கலாம் தொலைக்காட்சியாகவும் இருக்கலாம் . எதில் எங்கிருந்து யார் வேண்டுமானாலும் வரலாம் , இதற்கு ஒரே காரணம் கதை சொல்லல் மட்டும் தான்.

இன்றைக்கு சினிமா ஆர்வத்தில் அதற்கான புரிதல் இல்லாமல் கல்லூரி மாணவர்கள் ஒரு விளையாட்டாக குறும்படம் எடுத்துவிட்டால் சினிமாவில் சுலபமாக நுழைந்துவிடலாம் என்று நினைக்கிறார்களே?

ஒரு நடிகரிடம் சென்று உங்களுக்கு நடிக்க தெரியுமா? என்று கேட்டால் அவர் நடித்துக்காட்டுவார், ஒரு ஒளிப்பதிவாளரிடம் சென்று கேட்டால் அவர் எந்த காட்சிக்கு எந்த லென்சு , கலர்ஸ் , கேமரா அசைவு போன்ற ஒளிப்பதிவு நுணுக்கங்களை பேசுவார் .

அதே போல ஒரு எழுத்தாளராக உங்களால் ஒரு கதை சொல்ல முடியும். ஆனால் ஒரு இயக்குனராக உங்களை நிரூபிப்பதற்கான சாத்தியகூறுகள் மிக குறைவு. அந்த சமயத்தில்தான் இந்த மாதிரியான ஒரு கதை சொல்லலை, புதிய தகவலோடு செய்துபார்க்கிறார்கள் . இதை பார்ப்பவருக்கு பிடிக்கிறது , அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு இது பயிற்சியாகவும் ஒரு அனுபவமாகவும் இப்படியும் நடக்க வாய்ப்பிருப்பதாகவும் இருக்கிறது.

தயாரிப்பாளர் கையில் இருக்கும் சினிமா இயக்குனருக்கு ஏற்றவாறு மாறுமா ?

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நம்மை நம்பி பணம் செலவழிக்கும் முதலாளிக்கு ஒரு பாதுகாப்பு , பய உணர்ச்சி எப்பவும் இருக்கும். அதனால் நாம் என்ன செய்கின்றோம்? எப்படி செய்கின்றோம்?, சரியாகத்தான் செய்கின்றோமா? என்று கேட்பது ஒரு முதலாளியின் வேலை, நம் தவறுகளை சுட்டிக்காட்டலாம். அவருடைய கருத்துகளை நம்முடன் பகிர்ந்து கொள்ளலாம் , இந்தமாதிரியான பழக்கங்கள் ஜெமினி, ஏ.வி.எம் என அந்த காலத்திலிருந்தே இருந்து வருகின்றது. அதுமட்டுமல்ல தயாரிப்பாளர்கள் தங்கள் கருத்துக்களை இயக்குனருடன் பகிர்ந்துகொண்டு வெளிவந்த படங்கள் வெற்றியையும் தந்துள்ளது. அதற்கு பின் ஜெமினி பிக்சர்ஸ் எஸ் எஸ் வாசன் அவர்களும் ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஏனென்றால் தயாரிப்பாளர்கள் என்பவர் ஒரு ஊக்கத்தில் வருபவர். அப்படி வரும் பொழுது எல்லாத்துறைகளிலும் இருக்கும் எதிர்ப்பார்ப்பை போலவும் இவருக்கும் இருக்கும். அதுமட்டுமல்ல இந்த படம் சரியாக வரவில்லை என்றால் , முழுக்க முழுக்க அது இயக்குனரையே சாரும் அந்த பய உணர்ச்சி தான் அவர்களை இப்படி பேச வைக்கிறது, தவிர பணம் போடும் எந்தவொரு துறையாக இருந்தாலும் இப்படி ஒரு கட்டுப்பாடு இருக்கும். இப்போது நான் உங்களுக்கு பணம் கொடுத்தால் கூட உங்களை நான் கண்டிப்பாக கட்டுப்படுத்துவேன் , அதுவும் ஒரு இயக்குனரை கட்டுப்படுத்துவதை அவர்களால் ஏற்று கொள்ளமுடியாது அடுத்து நான் நினைத்ததை சொல்லமுடியவில்லை என்ற வருத்தமும் கண்டிப்பாக இயக்குனர்களுக்கு இருக்கும் .

குறும்படங்கள் எடுத்த எல்லா இயக்குனர்களும் அவர்களே தான் தயாரிப்பாளர்களாகவும் இருக்கிறார்கள். இதில் எத்தனை பேர் தங்கள் குறும்படங்களை தாங்கள் நினைத்தமாதிரி எடுத்தார்கள் என்று கேட்டால் அதன் எண்ணிக்கை மிக குறைவு. ஏனென்றால் நாம் எடுக்கும் போதே நமக்கு தெரியும். நாம் என்ன நினைத்தோம் , என்ன நடந்துகொண்டிருக்கிறது , எவ்வளவு வர முடிந்தது , என்னால் இவ்வளவுதான் எடுக்க முடிந்தது என இப்படி நமக்குள்ளே ஒரு கட்டுப்பாடு வந்துவிடும் .

உங்கள் படத்தை நீங்கள் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக எடுத்தீர்களா ?

நான் யோசித்த என்னுடைய கதையை எந்தவொரு மாற்றமும் செய்ய விடமாட்டேன். ஒருவேளை என்னுடைய கதையில் தயாரிப்பாளர் மாற்றம் செய்ய நினைத்தால், "இல்ல சார் . இந்த கதை நான் நினைத்த மாதிரி வராது அதனால் நாம் வேறொரு கதையை பண்ணலாம்" என்று சொல்லுவேன். அந்த ஒரு சுதந்திரத்தை தான், நான் சொல்வது. என் கதையை எந்த வகையிலும் மாறாதபடியும் நான் செய்துகாட்டுவேன். ஏனென்றால் சினிமா என்பது ஒரு குழுவான வேலை, அவர்களுக்கு தெரிந்த கருத்துகளை அவர்கள் தெரிவிப்பார்கள். அப்படி அவர்கள் கூறும் கருத்துகள்,கதைக்கு அழகு சேர்க்கும் விசயங்களை சொல்லும்போது அது என் கதைக்கு நல்லா இருக்கும் என்றால் அதை அங்கீகரிக்கிறேன். அந்த இடத்தில் ஒரு இயக்குனராகவும் ் முடிவு எடுக்கிறேன் .

'தெகிடி' உங்களுக்கு திருப்தி அளித்ததா?

குட் ., இதுதான் எனக்கு முதல்படம் என்ற அளவில் எனக்கு திருப்தியாகவே இருக்கிறது.

ஒரு இயக்குனராக இந்த சமூகத்தில் உங்கள் பங்கு என்னவாக இருக்கும் ?

ஒரு திரைப்படம் நல்ல ஒரு கதை அம்சத்துடன் வரும் போது, அந்தப்படம் ஏற்படுத்தும் தாக்கத்திற்கு அழிவே கிடையாது . அப்படி ”காதலிக்க நேரமில்லை” என்ற படம் ஒரு நல்ல நகைச்சுவையான சிறப்பான போழுதுபோக்குள்ள படம். இந்தப்படத்தில் உள்ள எதாவதொரு காட்சியை இப்பொழுது நாம் நினைத்துப்பார்த்தாலும் நாகேஷ் அவர்களின் நடிப்பாகவும் இருக்கலாம் , பாலையா அவர்களின் நடிப்பாகவும் இருக்கலாம். நமக்குள் ஏதோ ஒரு உணர்வு பூர்வமான சந்தோஷத்தை கொடுக்கிறது இந்த படம், இப்போது ”பரதேசி” படத்தை எடுத்து பார்த்தால் ஒரு அடிமைபடுத்தப்பட்ட சமூக வழ்க்கையை காட்டுகிறார்கள். இந்தப்படம் வேறொரு மாதிரியான உணர்வை கொடுக்கும். இப்படி என்னுடைய படமும் சமூக உணர்வுள்ளதாக இருக்கும் .

கலைப்படம் மற்றும் வணிகப்படம் சினிமாவில் பல்வேறு பிரிவினைகள் இருப்பதற்கு காரணம் ?

இந்த மாதிரியான வார்த்தைகள் எல்லா மொழி படங்களிலும் உபயோகிக்கப்படுகிற சொல்லாடல்கள்தான். தெலுங்கு, ஹிந்தி, பெங்காளி என இந்த பிரிவினைகள் எல்லா இடத்திலும் இருக்கிறது. ஆனால் எந்தவொரு பார்வையாளனுக்கும் இது ஒரு வணிகப்படம் இது ஒரு கலைப்படம் என்ற எந்த வித பாகுபாடும் தெரியாது. அவனுக்கு தேவையானது எல்லாம் இந்த படம் அவனுக்கு நிறைவை தரவேண்டும். அப்படி பிரித்துக் கொள்கிற பார்வையாளர்களும் இங்கு கிடையாது, ஏனென்றால் இங்கிருந்து தூத்துக்குடியில் இருக்கும் ஒரு தியேட்டருக்கு சென்று ஒரு ரசிகனை அழைத்து இது என்ன படம் என்று ஒரு நான்கு பாகுபடுகளாக பிரித்து கேட்டீர்களென்றால் சிறிதுநேரம் யோசித்துவிட்டு அதெல்லாம் எனக்கு தெரியாது என்று சொல்வார். அவனுக்குதெரிந்ததெல்லாம் ஒன்று படம் சூப்பர், இல்லையென்றால் ஓகே, அடுத்து தெரியவில்லை , இதுதான் இவர்கள் பதில்களாக இருக்கும். இந்த பாகுபாடுகளை பிரிப்பது பார்வையாளர்கள் இல்லை ,சினிமா விமர்சனம் செய்யும் விமர்சகர்கள் தான். தமிழ்சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு சில பாகுபாடுகளை பிரித்துவைத்துள்ளனர். குறிப்பாக உலக தரத்தில் விருதுக்கு வரும் திரைப்படத்துடன் நமது படங்களையும் ஒப்பிட்டு, அந்த படத்திற்கு இணையான தரமான கதைகளை தேர்ந்தெடுப்பதற்கும், தொழில்நுட்ப ரீதியில் படங்களை உருவாக்கவும் மற்றும் திரைப்பட தொழில் வல்லுனர்களை ஊக்குவிப்பதற்கான ஒரு வழியாகவும் இது இருக்கலாம். மற்ற எதற்கும் இந்தபாகுபாடு பயன்படாது.

உங்களுடைய ’தெகிடி'படத்தை சிலர் மாற்று சினிமா என்று கூறுவதை நீங்கள் ஒப்புகொள்கிறீர்களா ?

மாற்றுசினிமா என்ற ஒரு விஷயமே கிடையாது , அப்படி ஒரு tagஐ நீங்கள் உருவாக்கி கொடுத்தீர்கள் என்றால் அதுவேறு. life is beautiful என்ற படத்தை பார்த்தால் ஒரு அப்பா, அம்மா, குழந்தை என குடும்பமாக ஜெர்மனுக்கு செல்கிறார்கள் அங்கு ஒரு பிரச்சனை நடக்கிறது. ஒரு சீரியசான முடிவில் தந்தை மகனுடன் சந்தோஷமாக விடைபெற்று செல்வதுபோல் இந்தப்படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதில் நகைச்சுவை கிடையாது ,பாடல்கள் கிடையாது. இதில் வழக்கமான கதையாடல் இல்லாமல் இந்தப்படத்தில் ஒரு நல்ல கதைசொல்லலை மட்டும் பயன்படுத்தி இருக்கிறார்கள். அப்படியென்றால் இது ஒரு மாற்றுசினிமாவா? இல்லை இது ஒரு உலகசினிமா. எனக்கு எல்லா படங்களும் பிடிக்கும் அதில் இருக்கும் நல்ல தகவல்களை மட்டும் நான் எடுத்துகொள்வேன். சில நேரங்களில் எந்தவொரு கதை அம்சமும் இல்லாமல் வெறும் நான்கு பாடல்கள் , நான்கு சண்டைக்காட்சிகள் என வரும் படத்தில் எனக்கு ஈடுபாடு கிடையாது.

ஏனென்றால் அந்தப்படம் எனக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் சிவாஜியில் கருப்பு பணத்தை எப்படி வெள்ளையாக மாற்றுவது என்ற இந்தத்தகவலை A class,B class,C class என பிரிந்திருக்கும் ஒரு சாதாரண பார்வையாளனுக்கும் புரியும் வகையில் எடுத்துள்ளார்கள் . ஆனால் இந்த தகவலை சிலர் எப்படி தெரிந்திருப்பார்கள் என்றால் ஒன்று பத்திரிகை மூலமாக இன்னொன்று வலைத்தளங்களின் மூலமாகவும் அல்லது உரையாடல்களின் மூலமாகவும் தெரிந்து கொண்டிருப்பார்கள். இப்படி அதைப் பற்றிய எந்தவொரு சிந்தனையும் இல்லாதவர்கள் திரையரங்கிற்கு வருகிறார்கள், தெரிந்துகொள்கிறார்கள். வெளியில் செல்கிறார்கள். எனக்கு இப்படிப்பட்ட சினிமாவைத்தான் பிடிக்கின்றது . 'தெகிடி ' மாற்று சினிமா கிடையாது , இப்போது இல்லை எதிர்காலத்தில் கூட நான் மாற்றுசினிமாவை எடுக்க மாட்டேன் . சரி நீங்க சொல்லும் மாதிரியான படம் எங்க வருகிறது?

பைசைக்கிள் தீஃப் , ஃபான்றி ,மொபீயோஸ் போன்ற படங்கள் நல்ல காட்சி மொழியில்
எடுக்கப்பட்டுள்ளதே ?

ஒத்துக்கொள்கிறேன்.

12 Angryman என்று ஒரு படம் உள்ளது. அந்தப்படத்தில் ஒரு கைதிக்கு தண்டனை வழங்கலாமா வேண்டாமா என்று தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள். இந்த படத்தை உங்களால் எப்படி காட்சிமொழியில் எடுக்கமுடியும். இந்த படத்தில் போய் இது ஒரு விஷுவல் மீடியம் நீங்க இங்க பேசக்கூடாது என்று உங்களால் சொல்லமுடியாது. இப்போது மாற்று சினிமா என்று சொல்கிறீர்கள் , ஒரு படம் காட்சிமொழியில் எடுத்துவிட்டால் அது மாற்றுசினிமாவா? அப்படி ஒன்றும் இல்லை. ஒரு நல்ல கதை ,காமிரா அசைவு ,நல்ல வசனம், அவற்றின் பாவனைகள் என இதெல்லாம் சேர்ந்து ஒரு நல்ல விறுவிறுப்பான கதையுடன் கூடிய காட்சியை காட்டினாலே போதும். தெகிடி மாற்று சினிமா என்று சொல்வதெல்லாம் ஒன்றும் கிடையாது. தெகிடி ஏன் மாற்று சினிமா இல்லையென்றால் இதில் நான்கு பாடல்களும் ஒரு சண்டைக்காட்சியும் உள்ளது. இது ஒரு சரியான கமெர்ஷியல் படம்.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: htt://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </