இதழ்: 11, நாள்: 15- ஐப்பசி -2013 (October)
   
 
  உள்ளடக்கம்
 
உயிர் கொடுக்கும் கலை 8 - ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
திரைமொழி 7 - ராஜேஷ்

--------------------------------

எழுத்தாளர்களும் தமிழ் சினிமாவும் – தியோடர் பாஸ்கரன்

--------------------------------
அச்சிலிருந்து திரைக்கு – தியோடர் பாஸ்கரன்
--------------------------------
மெட்ராஸ் கஃபே - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
சினிமாவும் இலக்கியமும் - சாஹித்ய அகாடெமி கருத்தரங்கு - இரா.குமரகுருபரன்
--------------------------------
To Live - வாழ்வென்பது யாதெனில்!! - தினேஷ்
--------------------------------
ஏழை படும் பாடு – காட்சிமொழியால் தீட்டிய ஓவியம் - பிச்சைக்காரன்
--------------------------------
சிறுகதையிலிருந்து உருவான குறும்படங்கள் - தினேஷ்
--------------------------------
நாவலில் இருந்து படமாக்கப்பட்ட திரைப்படங்கள் பட்டியல். - தினேஷ்
 
   

   

 

 

மெட்ராஸ் கஃபே

- யமுனா ராஜேந்திரன்


மெட்ராஸ் கஃபே படத்தின் உருவாக்கம் குறித்து அதனது இயக்குனர் சுஜித் சர்க்கார் சொல்லும்போது இப்படம் இலங்கைப் பிரச்சினை குறித்த படம் என்றும், ராஜீவ்காந்தி படுகொலை குறித்த படம் என்றும், நிஜங்களின் அடிப்படையிலான புனைவுப்படம் எனவும் குறிப்பிடுகிறார். ஏழு ஆண்டுகள் இப்படத்தின் திரைக் கதைக்காக ஆய்வு மேற்கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். படத்தின் ஓரு காட்சியில் கூட தமிழ் இனப் பிரச்சினைக்கான வேர்கள் என்ன என்பது குறித்தோ, தமிழர்கள் ஏன் ஆயுதமேந்தினார்கள் என்பது குறித்தோ, ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை, இந்திய ராணுவத்தினரின் படுகொலைத் தாக்குதல்கள் குறித்தோ எந்தவிதமான உரையாடல்களும் இடம்பெறவில்லை.

நிஜத்தில் அவருக்குப் பிரச்சினையின் அடிப்படைகள் குறித்தோ அல்லது தமிழகத்தில் ஏன் இப்படம் ஆட்சேபிக்கப்படுகிறது என்பது குறித்தோ எந்த விதமான புரிதலும் இல்லை. அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜேர்னலில் 2013 ஆகஸ்ட் 23 ஆம் திகதியிட்ட இதழ் நேர்முகத்தில் அவரிடம் "இது தமிழருக்கு எதிரான படம் எனப் பலர் சொல்கிறரார்கள், இது குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"’ எனக் கேட்கிறார்கள். இதற்கான அவரது பதில் பின்வருமாறு : “நிச்சயமாக இல்லை. நான் சிந்தித்துப் படமெடுக்கிற இயக்குனர். முக்கியமாக நான் இந்தியன் என்பதில் கர்வப்படுகிறவன். எனது நாட்டை நான் ஏன் மோசமாகக் காட்;ட வேண்டும்? எனது நோக்கு முரண்பாடுகளைத் தூண்டுவதோ அல்லது யுத்தம் பற்றி உணர்ச்சிகரமாகப் பேசுவதோ அல்ல. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு எவ்வாறு இப்படி மாற்றமடைந்தது என்பது குறித்த ஒரு உள்ளார்ந்த பார்வையை பர்வையாளனுக்கு வழங்க விரும்பினேன். இந்தப் பிரச்சனையை குறித்து பாலிவுட் வெகுஜன சினிமா பேசியதே இல்லை. இந்தப் படத்தை எடுப்பதற்கு ஒருவருக்குத் துணிச்சல் வேண்டும்”. மனத்தளவில் ஒரு இயக்குனருக்குரிய மத்திம நோக்கு சுஜித் சர்க்காரிடம் இல்லை என்பதற்கும், உலக அரசியலை இந்திய 'தேசபக்தப் கர்வத்துடன்’ அணுக நினைக்கிற ஒருவரின் முன்கூட்டிய சாய்வு மனத்துக்கும் அவரது இந்த நேர்முகமே சான்றாகிறது.

இரண்டு ஆண்டுகளில் (2012, 2013) இந்திய உளவு அமைப்பான ரா நிறுவனத்தின் செயல்பாடுகளை மையமாகக் கொண்டு ஜனரஞ்ஜக தளத்தில் ஒரு ‘வெற்றிகரமான’ இந்திய திரைப்பட வகையினம் ஒன்று உருவாகி வந்திருக்கிறது. அமெரிக்க உளவுத்துறையான சிஜஏ, பிரித்தானிய உளவுத்துறையான MI5 போன்றவற்றுக்கு இணையாக இந்திய உளவுத்துறையான ரா அமைப்பை முன்னிறுத்தி அதிக அளவில் பாலிவுட் திரைப்படங்கள் உருவாகி வந்திருக்கின்றன. ஏஜென்ட் விநோத் (2012), ஏக் த டைகர்(2012), விஸ்வரூபம் (2013), டி டே (2013) மற்றும் மெட்ராஸ் (2013) கஃபே போன்றன இந்தத் திரைப்படங்கள்.

ஏஜென்ட் விநோத் படத்தில் கதாநாயகன் ரா ஏஜென்ட். கதாநாயகியாக பாகிஸ்தான் உளவமைப்பான ஐஎஸ்ஜ உளவாளியாக இருக்கிறார். அவர் பிரித்தானிய உளவமைப்பான MI5 உளவாளி எனவும் ஒரு காட்சியில் கோரிக் கொள்கிறார். ஏக் த டைகர் படத்தின் நாயகன் ரா உளவாளி. கதாநாயகி ஐஎஸ்ஜ உளவாளி. இந்த இருவரும் காதல்வயப்பட்டு தமது உளவுவேலைகளை உதறிவிட்டு உலக நாடுகளெங்கும் அலைகிறார்கள். இவர்களைத் தேடிக் கண்டு பிடித்துக் கொலை செய்துவிட ரா அமைப்பும் ஐஎஸ்ஜ அமைப்பும் கூட்டாக வேலை செய்கின்றன. டி டே படம் இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் செய்யும், பாகிஸ்தானில் ஒளிந்து வாழும் தாவூத் இப்ராகிம் போன்ற ஒரு மும்பை தாதாவைப் போட்டுத் தள்ள பாகிஸ்தானுக்குள் ஊடுறுவிச் சென்று சாகசங்கள் புரியும் ரா உளவாளியைக் கதாநாயகனாகக் கொண்டிருக்கிறது. 'பின்லாடனைக் கடத்த சிஜஏ பாகிஸ்தானுக்குள் நுழைய முடியுமானால், தாவூத் இப்ராகிமைக் கடத்த ஏன் ரா பாகிஸ்தானுக்குள் ஊடுறுவ முடியாது' எனக் கேட்கும் படம் டி டே.

கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் அமெரிக்க காவல்துறையான எப்பிஜ உடன் இணைந்து, நியூயார்க் நகரில் ஆப்கானிய பயங்கரவாதியை வேட்டையாடும் ரா உளவாளி பற்றிப் பேசுகிறது. இந்த வழியில்தான் ஐந்தாவது படமாக மெட்ராஸ் கஃபே வந்திருக்கிறது. பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்காவிலும் மட்டுமே அலைந்துகொண்டிருந்த பாலிவுட் ரா உளவமைப்பு இப்போது இலங்கைக்குள்ளும் நுழைந்திருக்கிறது. இந்தப் படங்களில் ஏஜென்ட் விநோத்தைத் தயாரித்து கதாநாயகனாக நடித்திருக்கிறார் சையிப் அலிகான். கமல்ஹாசன் தயாரித்து அவர் ரா ஏஜெனட்டாக நடித்த படம் விஸ்வரூபம். மெட்ரோஸ் கஃபேயின் தாயாரிப்பாளரும் கதாநாயகனும் ஆனவர் ஜான் ஆப்ரஹாம்.

ராஜீவ் காந்தி படுகொலை குறித்து இன்னொரு படம் மெட்ராஸ் கஃபே. இப்பிரச்சினை குறித்து தமிழில் தமிழில் டெரரிஸ்ட்(1999), குற்றப் பத்திரிக்கை (2007), கன்னடத்தில் சைனைட் (2006) , மலையாளத்தில் மிசன் நைன்டி டேஸ் (2007), என நான்கு தென்னிந்தியப் படங்களையடுத்து நான்காவதாக வந்திருக்கும் வடஇந்திய, இந்திமொழித் திரைப்படம் மெட்ராஸ் கஃபே. தென்னிந்தியப் படங்களுக்கும் மெட்ராஸ் கஃபே படத்திற்கும் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் இருக்கின்றன. ராஜீவ் காந்தி படுகொலைக்கும் ஈழத்தில் இந்திய ராணுவம் புரிந்த படுகொலைகளுக்கும் பாலியல் வல்லுறவுகளுக்கும் ஆன உறவைக் காட்சியளவில் அல்ல வசனங்கள் எனும் அளவிலாவது கொண்டிருந்தது தென்னிந்திய மொழிப்படங்கள். இந்திய ராணுவத்தின் வன்முறை குறித்துக் குறிப்பாகப் பேசாத இப்படங்கள், இலங்கை ராணுவம் தமிழர்கள் மீது மேற்கொண்ட வன்முறைகள் தொடர்பாக வசனங்கள் எனும் அளவிலேனும் பேசின. மெட்ராஸ் கஃபே படத்தில் இந்திய ராணுவத்தின் படுகொலைகள் பாலியல் வல்லுறவுகள் தொடர்பான காட்சிகளும் இல்லை; வசனங்களும் இல்லை. இந்திய ராணுவம் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க இலங்கைக்கு அனுப்பப்பட்ட அமைதிப்படையாகவே காண்பிக்கப்படுகிறது. இந்திய, இலங்கைப் படையினரின் படுகொலைகள் குறித்து மெட்ராஸ் கஃபே மௌனத்தையே கொண்டிருக்கிறது.

தென்னிந்தியத் திரைப்படங்களில் ராஜீவ் காந்தி படுகொலைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக ராஜீவ் காந்தி அரசு கொண்டிருந்த அழித்தொழிப்புக் கொள்கைக்கும் இடையிலான அரசியல் பதட்டங்கள், நிகழ்வுகள் என்பன வசனங்களிலோ காட்சி அமைப்புகளிலோ இல்லை. மெட்ராஸ் கஃபே திரைப்படம் இந்தப் பரிமாணத்தை காட்சிகள் மற்றும் வசனங்கள் என விஸ்தாரமாகப் பேசியிருக்கிறது. பிற மூன்று படங்களையும் ஒப்பிடுகிறபோது மெட்ராஸ் கஃபே திரைப்படம் ‘இந்திய அமைதிப் படை ஈழத்தில் நுழைந்தது முதல் ராஜீவ் காந்தி படுகொலை வரையிலான’ அரசியலைப் பேசும் திரைப்படம். தென்னிந்தியப் படங்கள் அனைத்துமே ராஜீவ் காந்தி படுகொலையில் ஈடுபட்டவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் புலன்விசாரணை திரில்லர் மற்றும் வேகப்படம் எனும் வகைமைக்குள் தம்மை மட்டுப்படுத்திக் கொள்கின்றன. இதில் குற்றப் பத்திரிக்கை தணிக்கைக் குழுவின் நீண்ட காலத்தடைக்குப் பின், பல்வேறு வெட்டுக்களின் பின் வெளியாகி முக்கியத்துவமற்ற படமாகத் தேய்ந்துபோனது.

சைனட் படமும் மிசன் நைன்டி டேசும் காவல்துறை மற்றும் ராஜீவ் காந்தி படுகொலை விசாரணை அதிகாரிகளின் ஆலோசனைகளுடனும் ஒப்புதலுடனும் எந்தவிதமான தணிக்கைப் பிரச்சினையும் இன்றி வெளியாகியிருக்கின்றன. மெட்ராஸ் கஃபேயும் எந்தவிதான தணிக்கைப் பிரச்சினையும் இன்றி யுஏ சான்றிதடன் வெளியாகி இருக்கிறது. இந்த இடத்தில் ராஜீவ் காந்தி படுகொலை குறித்த பிறிதொரு படமான குற்றப் பத்திரிக்கை, விடுதலைப்புலிப் பெண் போராளி குறித்த காற்றுக்கென்ன வேலி போன்றன இந்திய தணிக்கைக் குழவில் எதிர்கொண்ட பிரச்சினைகளையும் தடையையும் ஒருவர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்திய, இலங்கை ராணுவத்தினரின் வன்முறையையும் பாலியல் வல்லுறவுகளையும் காட்சிப்படுத்திய இன் த நேம் ஆப் புத்தா படத்தினையும் இங்கு ஞாபகம் வைத்துக் கொள்வது நல்லது. ராஜேஸ் தொடுபுழா எனும் மலையாள இயக்குனர் இப்படத்தினை இயக்கியிருந்தார். இன் த நேம் ஆப் புத்தா இலங்கையில் தடை செய்யப்பட்டது. இந்தியாவில் திரையிடப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை.

மெட்ராஸ் கஃபே திரைப்படம் திரைக்கதை, இயக்கம், தொழில்நுட்பக் கலைஞர்கள் என முழுமையாக வடஇந்தியர்களால், வட இந்திய மனோபாவத்தில் உருவாக்கப்பட்ட ஒரு பாலிவுட் ஜனரஞ்ஜக அரசியல் திரில்லர் படம். அண்ணா பாஸ்கரனாக நடிக்கும் அஜய் ரத்னம், ராஜீவ் காந்தி படுகொலைக்குண்டு தயாரிக்கும் பொறியிலாளராக நடிக்கும் இளைஞர் என இரு தமிழக நடிகர்கள் தவிர முழுமையாக பாலிவுட் சினிமா நடிகர்களாலும் நடிகைகளாலும் நிறைந்தது மெட்ராஸ் கஃபே திரைப்படம். மெட்ராஸ் கஃபே திரைப்படம் பாத்திரப் படைப்புகளாலும், அவர்கள் சஞ்சரிக்கும் நிலப்பரப்புக்களாலும் ஒரு அகில இந்திய, அகில உலகத் திரைப்படம்.

படத்தின் டைட்டில்கள் போடப்படும் முன்னால், யாழ்ப்பாணத்தின் சாராம்ச அரசியல் நிலையைக் காண்பிப்பது போல ஒரு காட்சி வருகிறது. துப்பாக்கி ஏந்திய தமிழ்ப் போராளிகள் பேருந்தில் வரும் பொதுமக்களை, குறிப்பாகக் குழந்தைகள் பெண்களைக் கருணையின்றிச் சுட்டுக் கொல்கிறார்கள். படத்தில் இரு போராளிக் குழுக்கள் காண்பிக்கப்படுகின்றன. ஓன்று இந்திய அரசு ஆரவுக் குழுவான சிறி என்பவரால் தலைமை தாங்கப்படும் குழு, பிறிதொன்று விடுதலைப் புலிகள் அமைப்பு. இந்த அவக்காரியத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்கிற தெளிவு இந்தக் காட்சியில் கொஞ்சமும் இல்லை. சாராம்சமாக விடுதலைப் புலிகள் அமைப்பை உடைக்கும் காரியத்திற்காக அனுப்பப்படும் இந்திய உளவு அமைப்பான ராவின் அதிகாரி விக்ரம்சிங் கேரளத்தின் கொச்சியில் தனது காதல் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். இந்த விவரத்துடன்தான் பிரதான படம் துவங்குகிறது. இவர் தனது செயல்பாடுகளுக்காக யாழ்ப்பாணம், சென்னை, மதுரை, கோலாலம்பூர்;, புதுதில்லி, கொழும்பு எனச் சஞ்சரிக்கிறார். இவருக்கு மேலதிகாரியாக யாழ்ப்பாணத்தில் இருக்கும் இன்னொரு ரா அதிகாரி பாலகிருஷ்ணன் தனது மலையாள மனைவியுடன் சென்னையில் வாழ்ந்துவருகிறார். ரா அமைப்பின் செயல்பாடுகளை விடுதலைப் புலிகளுக்குத் தகவல் தரும் இந்திய அரசுக்குத் துரோகியான அவர், இயக்கத்தவருடன் நல்ல தமிழில் உரையாடுகிறார்;. இவர் தமிழரா அல்லது தமிழ் பேசத் தெரிந்த கேரள நாட்டவரா என்பது படத்தில் தெளிவுபடுத்தப்படுவதில்லை.

ரா அதிகாரியான சீக்கிய வழித்தோன்றலான விக்ரம் சிங் ஏன் கொச்சியில் வாழ்கிறார் என்பதற்கான காரணமும் திரைக்கதையில் இல்லை. மனைவியும் அவருடன் மலையாளத்தில் அல்ல, இந்தியில்தான் பேசுகிறார். அவர் கேரளத்தவர் என்பதற்கான அடையாளங்களும் இல்லை. படத்தின் மூன்றாவது முக்கியமான பாத்திரம் ஜெயா சாஹ்னி எனப்படும் பெண் பத்திரிக்கையாளர். இலண்டனை மையமாகக் கொண்ட பத்திரிக்கையாளர். இவர் படம் முழுக்க அமெரிக்க ஆங்கிலத்தில்தான் பேசுகிறார். இயக்கத்தின் தலைவர் அண்ணா பாஸ்கரனைச் சந்தித்து நேர்காணல் செய்வதற்காக யாழ்ப்பாணம் வரும் அவர், விக்ரம்சிங்கை யதேச்சையாக கடற்பயணத்தில் சந்திக்கிறார். விடுதலைப் புலிகளுடன் இணைந்து ராஜீவ் காந்தி படுகொலையில் ஈடுபட்ட இந்திய ரா அதிகாரி பாலா தொடர்பான விவரங்களை இவரே விக்ரம் சிங்கிற்கு வழங்குகிறார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடனான அனிதா பிரதாப்பின் நேர்காணல் மிகமுக்கியமான வரலாற்று ஆவணமாக ஆகியது என்பதனை ஒருவர் இங்கு ஞாபகப்படுத்திக் கொள்ளலாம்.

புதுதில்லி, கொழும்பு, யாழ்ப்பாணம், மதுரை, சென்னை, கோலாலம்பூர் என உலகை ஊடறுத்துக் கதை நகரும் இப்படம் தனது பெயர்க் காரணத்தை இலண்டனில் கொண்டிருக்கிறது. ராஜீவ் காந்தி படுகொலை திட்டமிடப்படும் இடம் இலண்டனில் உள்ள மெட்ராஸ் கஃபே எனும் விடுதிதான். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவு செய்யும் ஒருவர், குருஜி என அழைக்கப்படும் தாடி வைத்த ஒருவர், சர்வதேச ஆயுத விற்பனையாளர் ஒருவர், அதனோடு இந்திய ரா அதிகாரி பாலகிருஷ்ணன், இயக்கத் தலைவர் அண்ணா பாஸ்கரன் போன்றவர்கள்தான் தொலைபேசி உரையாடலின் வழியாக ராஜீவ் காந்தி படுகொலையைத் திட்டமிடுகிறார்கள். படத்தில் இயக்கத்தின் பெயர் எல்டிடிஈ என்பதற்கு மாற்றாக எல்டிஎப் எனக் குறிப்பிடப்படுகிறது. நகரம் ஜாப்னா என்பதற்கு மாற்றாக ஜாப்ரா எனக் குறிப்பிடப்படுகிறது. இயக்கத் தலைவர் அண்ணா பாஸ்கரனது இருப்பிடத்தை இந்திய ராணுவத்திற்குக் காட்டிக் கொடுத்து அடுத்த தலைவராக நினைக்கும் இரண்டாம் கட்டத்தலைவரின் பெயர் மலாயா எனக் குறிப்பிடப்படுகிறது. இந்திய அரசுடன் சேர்ந்து சதி செய்த குற்றத்திற்காகப் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட மாத்தய்யா எனும் பெயர் இங்கு ஞாபகம் வருவது தவிர்க்கவியலாதது.

பாத்திரப் படைப்புகள், வரலாற்று நிகழ்வுகள், ராஜீவ் காந்தி படுகொலையில் ஈடுபட்டவர்கள் எனச் சொல்லப்பட்ட சாமியார் சந்திராசாமி மேற்கத்திய அரசுகள் மற்றும் உலக ஆயுத விற்பனையாளர்கள் போன்றவர்கள் குறித்த சந்தேகங்கள் அத்தனையும் கொண்டதாகத்தான் இப்படத்தின் திரைக்கதை இருக்கிறது. விடுதலைப் புலிகளின் தலைவர் இந்தியப் படையினருடன் நடந்த சண்டையில் மாங்குளம் எனும் கிராமத்தில் கொல்லப்பட்டதான வதந்தி, ராஜீவ் காந்தி மீளவும் ஆட்சிக்கு வந்தால் மறுபடியும் விடுதலைப் புலிகளை கட்டுக்குள் கொண்டு வருவேன் என்ற அவரது பத்திரிக்கை அறிக்கை, மறுபடியும் ராஜீவ் காந்திதான் ஆட்சிக்கு வருவார் என வந்த பத்திரிக்கைக் கணிப்புகள், விடுதலைப் புலிகளின் தலைவரைக் கொல்ல ராஜீவின் அரசு எடுத்த முயற்சிகள் என அனைத்துத் தகவல்களையும் திரைப்படம் தனது திரைக்கதைக்குள் கொண்டிருக்கிறது.

தென்னிந்திய மொழித் திரைப்படங்களுடன் ஒப்பிடும்போது சந்தேகமில்லாமல் இந்தத் திரைப்படம் ஆவணங்கள், ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக இன்று வரை நிலவும் வெற்றிடங்கள் போன்ற அனைத்தையும் தனது திரைக் கதைக்குள் கொண்டிருக்கிறது. அவ்வகையில் இப்படம் அரசியல் ரீதியில் விவாதங்களை எழுப்பும் படமாகவே இருக்கிறது. இந்தப் படம் நேர்மையானது, துணிச்சலானது, அசலானது, ஆய்வை அடிப்படையாகக் கொண்டது எனும் விமர்சனங்களை தென்னிந்திய ஆங்கிலப் பத்திரிக்கைகளான ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் முதல், வட இந்திய ஆங்கில நாளேடுகளான டைம்ஸ் ஆப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ் வரை முன்வைத்திருக்கின்றன. மெட்ராஸ் கஃபேயின் திரைக் கதையைப் பொறுத்து இந்தக் கோருதல்கள் எந்த வகையிலும் பொருத்தமில்லாதவை, வரலாற்று ரீதியில் அர்த்தமற்றவை. இலங்கை தொடர்பான இந்திய அரசின் கொள்கைகளையும், இந்திய இராணுவம், இலங்கை ராணுவம் போன்ற வன்முறை அமைப்புகள் திட்டமிட்டு தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளையும் காட்சிப்படுத்தாமல் ஒரு கலைஞனை இன்றைய நிலைமையில் நேர்மையாளன், துணிச்சலானவன், அவன் உருவாக்கும் படம் நேர்மையானது என்று சொல்ல முடியாது.

மெட்ராஸ் கஃபே படத்தின் செய்தி என்ன? அது பார்வையாளனைப் பார்த்து என்ன சொல்கிறது அல்லது அவனிடம் எதனைக் கோருகிறது? தயாரிப்பாளராக ஜான் ஆப்ரஹாமும் இயக்குனராக சுஜித் சர்க்காரும் இரண்டு காட்சிகளில் அதனைத் தெளிவாகச் சொல்கிறார்கள். ராஜீவ் காந்தியின் படுகொலையின் பின் குடிகாரராகிவிட்ட விக்ரம்சிங் ஒரு பாதிரியாரிடம் தனது துயரைச் சொல்லி அழுகிறார். தன்னால் அந்த நிகழ்வைத் தடுக்க முடியாமல் போனதைச் சொல்லி வருந்துகிறார். படத்தின் திரைக் கதையே இந்தத் துயரில் தொடங்கி அது குறித்த கேள்வியோடுதான் முடிகிறது. "அண்ணா பாஸ்கரன் தமிழர்களுக்குத் தலைவராக இருக்கலாம், ஆனால் கொல்லப்பட்டவர் எனது பிரதமர், அவர் செய்த தவறுதான் என்ன?" என்று கேட்கிறார் இயக்கத்தைப் பிளப்பதற்கும் இயக்கத்தின் தலைவரைக் கொல்வதற்கும் திட்டமிட்ட இந்திய தேசபக்தரும் உளவாளியுமான விக்ரம் சிங். விக்ரம் சிங்கின் மேலதிகாரியும் இயக்கத் தலைவரைக் கொல்வதற்கான கட்டளை தந்தவரும், இலங்கையின் இந்திய ராணுவக் கொள்கை வகுப்பாளருமான ராபின் தத் ராஜீவ்காந்தி படுகொலையின் பின் வீடு திரும்புகிறார். அவரது மனைவி அப்போது தொலைக் காட்சிச் செய்தியைப் பார்த்து அழுது கொண்டிருக்கிறார். அழுதபடி தனது கணவரிடம் அவர் கேட்கிறார் : “எதற்காக இது, அவர் செய்த தவறுதான் என்ன?” இந்தக் கேள்விக்கான பதில்கள் கதை அமைப்பிலேயே இருக்கின்றன. இது தொடர்பான ஆய்வுகளுக்கோ காட்சிகளுக்கோ வசனங்களுக்கோ படத்தில்தான் இடமிருக்கவில்லை. இந்திய ராணுவத்தினர் ஈழ மக்களின் மீது செலுத்திய வன்முறைகளும் புரிந்த பாலியல் வல்லுறவுகளும் ஒரு காரணம். தமது நோக்கத்தை எய்துவதற்கு இயக்கத்தைப் பிளவுபடுத்த நினைத்ததும் அதற்காக இயக்கத் தலைவரைக்; கொல்லத் திட்டமிட்டதும் பிறிதொரு காரணம். இந்த இரண்டு காரணங்களதும் தார்மீக மற்றும் அரசியல் நியாயங்கள் அல்லது தவறுகள் படத்தில் கடைசி வரையிலும் விவாதிக்கப்படவேயில்லை.

நடைமுறையில் தமிழர்களை ‘மற்றவர்கள்’ எனவும் ராஜீவ்காந்தியை ‘எனது பிரதமர்’ என்றும்தான் மெட்ராஸ் கஃபே கதாநாயகனும் இந்திய உளவுத்துறை அதிகாரியுமான விக்ரம்சிங் குறிப்பிடுகிறார். படத்தின் அடிப்படையான குழப்பம் அதனது ‘சொல்மொழியில்’ இருக்கிறது. யாழ்ப்பாணம், சென்னை, கேரளம், கொழும்பு, புதுதில்லி, இலண்டன் என வேறு வேறு இடங்களையும் வேறு வேறு மொழி பேசும் மனிதர்களையும் பாத்திரங்களாகக் கொண்டிருக்கிறது. எனில், படம் தேர்ந்து கொண்டிருக்கும் வேறு வேறு மொழி சார்ந்த இடங்கள் எதற்காக என்பதற்கான நம்பகத்தனமான காரணங்களைக் கொண்டிருக்க வேண்டும். கேரளாவில் வாழ்பவர் ஏன் மலையாள மொழி பேசவில்லை? தமக்குள் அவர்கள் இந்திதான் பேசுகிறார்கள் எனில், ஏன் அவர்கள் கேரளாவில் வாழ்கிறார்கள்? யாழ்ப்பாணத் தமிழர்கள், தமிழகத் தமிழில் பேசுகிறார்கள், அதே பொழுதில் இந்தி சரளமாகப் பேசுகிறார்கள். தமிழகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் மொழி அடிப்படையில் உள்ள உச்சரிப்பு வித்தியாசம் ஏன் படத்தில் இல்லை? முழுப் படத்திலும் சென்னையில் வாழ்கிற பாலகிருஷ்ணனின் மனைவி மட்டுமே ஒரே ஒரு இடத்தில் மலையாளத்தில் பேசுகிறார். படத்தில் இதனது ‘குறிப்பிட்ட’ அர்த்தம் என்ன? எதற்காக அவர் மலையாள மொழி பேச வேண்டும்? படம் இவ்வாறு எண்ணற்ற பதில் காணப்படாத துணைப்பிரதிகளை படமெங்கிலும் விட்டுச் செல்கின்றது.

பிரதான பாத்திரங்களாக வரும் வட இந்தியர்கள், பிற இந்திய மாநிலத்தவர் என அனைவரும் ‘நம்மவர்’ எனவும், ‘வித்தியாசம்’ காட்டப்படாத தமிழக, ஈழத் தமிழர் அனைவரும் ‘மற்றவர்’ எனவும்தான் படமெங்கிலும் கட்டமைக்கப்படுகிறார்கள். தமிழகம் இந்தியாவின் ஒரு மாநிலம் என்ற உணர்வு கூட இந்தத் திரைப்படத்தில் இல்லை. ஈழத் தமிழர் பிரச்சினை தமிழகத் தமிழர்களின் உணர்வுகளுடன் இணைந்தது என்கிற அடிப்படையான பொதுப்புத்தி கூட பட இயக்குனருக்கும் இல்லை; தயாரிப்பாளரான ஜான் ஆப்ரஹாமுக்கும் இல்லை. முழுத் தமிழரையும் ‘மற்றவர்’ எனும் நோக்கில் அணுகியிருக்கும் இப்படம், இலங்கை, இந்திய ராணுவத்தினரால் ஈழத் தமிழருக்கு நேர்ந்த துயர்களை முற்றிலும் நிராகரித்திருக்கும் இப்படம், முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின் ராஜீவ்காந்தி படுகொலை எனும் ஒற்றைப் பிரச்சினையை மட்டும் முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரப்படம் போல இருப்பதால், வட இந்தியர்களால் எடுக்கப்பட்ட தமிழர் எதிர்ப்புப் படம் என இதனைப் புரிந்து கொள்வதில் ஏதும் தவறு இல்லை.

விடுதலைப் புலிகளின் தலைவர் இப்படத்தில் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்? கடுமையான, எதிரி என முடிவெடுத்துவிட்டால் எவரையும் அழிக்கத் தயங்காதவர், விட்டுக் கொடுக்காத நிலைபாடு கொண்டவராகவே சித்தரிக்கப்படுகிறார். விடுதலைப் புலிகள் அமைப்பும் அதனது தலைவரும் அவ்வாறுதான் இருந்தார்கள். இதனை நேரடியான, வலிமையான குணம் என அவரை நேர்காணல் செய்யும் பெண் பத்திரிக்கையாளர் படத்தில் சொல்லவும் செய்கிறார். மாற்று இயக்கத் தலைவர்கள், ராஜீயத் தலைவர்கள், துரோகம் இழைத்தார்கள் எனக் குற்றம் சாட்டப்பட்ட தமது இயக்கத்தவர்கள் என அனைவருமே விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டார்கள். இது வரலாறாக இருக்கிறது. இந்த அரசியல் இன்று மிகப் பெரும் விவாதத்திற்கான பிரச்சினையாகவும் இருக்கிறது. இந்த முறை என்னவிதமான விளைவுகளை விடுதலைப் போராட்டத்திற்குக் கொணர்ந்தது என்பதும் விவாதத்திற்கான பிரச்சினையாகவே இருக்கிறது. பிறரை அழிப்பது பற்றிக் கவலைப்படாத இந்த மனம் தன்னழிவு குறித்தும் கவலைப்படவில்லை என்பதும் வரலாறாகவே இருக்கிறது. தமது நிலைபாட்டுக்கு மாறாகச் செயல்படும், தன்னைக் கொல்வதற்கு இந்திய ராணுவத்திற்கு உதவும் மாற்று இயக்கத் தலைவரை கொல்பவராக, தன்னை இந்திய ராணுவத்திற்குக் காட்டிக் கொடுக்கும் பிரதித் தலைவரைக் கொல்லும், தனது அரசியல் இலக்குக்கு எதிராகத் தன்னை அழிக்கவும் முயற்சித்த இந்தியப் பிரதமரைக் கொல்லும் இயக்கத் தலைவராகவே விடுதலைப் புலிகளின் தலைவர் படத்தில் சித்தரிக்கப்படுகிறார். அவரை இந்திய, இலங்கைப் படையினரை எதிர்த்துப் போரிடுபவராகப் படம் சித்தரிக்கிறது.

ராஜீவ்காந்தி படுகொலையை விடுதலைப் புலிகள் செய்தார்கள் என்பது இந்திய அரசின் சட்டத்துறை சார்ந்த, நீதித்துறை சார்ந்த ஒரு நிலைபாடு. இப்படியான நிiபாட்டுக்கான ஆதாரங்களை முன்வைத்து ஏற்கனவே நான்கு தென்னிந்தியப் படங்கள் வந்துவிட்டன. அந்தப் படங்கள் தமிழகத்தில் வெளியாகி திரையிடவும் செய்யப்பட்டன. அப்படங்கள் அப்பிரச்சினையை ‘சம்பவம்’ எனும் அளவில் முன்வைத்ததேயொழிய அதனது அரசியலைப் பேசவேயில்லை. மெட்ராஸ் கஃபே படம் படுகொலையின் பின்னிருந்த அரசியலைப் பேசியிருக்கிறது. படுகொலையின் பின்னிருக்கக் கூடிய தமிழக, இந்திய, சர்வதேசியக் காரணிகள் குறித்த சந்தேகங்களைப் படம் தனக்குள் கொண்டிருக்கிறது. படம் தனது சித்திரிப்பில் பல்வேறு வரலாற்று விடுபடல்களையும் பலவீனங்களையும் கொண்டிருந்தாலும் வட இந்திய விமர்சகர்களால் படம் வடக்கில் முக்கியத்துவப் படுத்தப்படுவதற்கான ‘அரசியல்’ காரணங்கள் இவைதான். தமிழகத்தில் இப்படம் திரையிடப்பட்டிருப்பதன் மூலம் இத்தகைய விவாதங்களை உருவாக்கியிருக்க முடியும். ராஜீவ்காந்தி படுகொலையும் அதனைச் சுற்றிய அரசியலும் எதிர்கொண்டே ஆகவேண்டியது. ஈழப் பிரச்சினை முன்னெப்போதையும் விட சர்வதேசமயப்பட்டிருக்கும் இன்றைய சூழலில், ராஜீவ்காந்தி படுகொலை என்பது ஈழப் போராட்டத்தின் பின்னடைவுக்கான முக்கியமான அரசியல் பிரச்சினையாகவும் இருக்கும் சூழலில், அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று தவிர்க்க நினைப்பது பிரச்சினையை எளிமைப்படுத்திப் புரிந்து கொள்வதாகவே இருக்கும்.

படத்தின் இயக்குனர் சுஜித் சர்க்கார் ஏற்கனவே இரண்டு படங்களை இயக்கியவர். காஷ்மீர் பிரச்சினை பற்றிய இந்து முஸ்லீம் காதல் படமான யஹான் அவரது முதல் படம். விந்து தானம் குறித்த நகைச்சுவைப்படமான விக்கி டோனர் அவரது இரண்டாவது திரைப்படம். யஹான் காஷ்மீருக்குப் பணிபுரிய வரும் இந்திய இந்து ராணுவ வீரனொருவனுக்கும், அவனது முகாமின் அருகிலிருக்கும் ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதலைச் சித்திரிக்கிறது. இஸ்லாமியப் பெண்ணின் சகோதரன் ஒரு தீவிரவாதி. ஓரு வன்முறை தொடர்பான விசாரணையை கதாநாயகனின் சகாவான ஒரு ராணுவ அதிகாரி மேற்கொள்கிறபோது இஸ்லாமியப் பெண்களின் மீது வன்முறையில் ஈடுபடுகிறான். கதாநாயகன் அவனைக் கண்டிக்கிறான். அதனால் கோபமுறும் அந்த அதிகாரி, இஸ்லாமியக் காதலிக்காக இந்திய ராணுவ வீரன் அவளது தீவிரவாதியான சகோதரனோடு தொடர்பு கொண்டவன் எனத் தந்திரமாககக் கதை கட்டுகிறான். ராணுவ வீரன் கைது செய்யப்பட்டு அவன் மீது மீது ராணுவக் கோர்ட் விசாரணை நடக்கிறது. தனது காதலன் குற்றமற்றவன் என நிரூபிக்க தொலைக்காட்சி நிலையத்தின் உதவியை நாடுகிறாள் நாயகி. இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதுகிறாள். அதிகார வர்க்கம் செவி சாய்க்கிறது. விடுவிக்கப்படும் ராணுவ வீரன் மசூதியில் கடத்தி வைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய மக்களையும் விடுவித்து, காதலியின் சகோதரனைத் தவறாக வழிநடத்தும் பாகிஸ்தான் ஊடுறுவல்காரர்களையும் கொன்றொழிக்கிறான். வழமையான மணிரத்னம், சந்தோஷ் சிவன் பாணி காஷ்மீர் காதல் படம் என்பதற்கு அப்பால் எந்த முக்கியத்துவமும் இல்லாத படம் யஹான்.

முதல்பார்வைக்கு குழந்தைகளற்ற பெற்றோரின் மீதான பரிவான பார்வை கொண்ட படமாகத் தோற்றம் தரும் திரைப்படம் விக்கி டோனர். விந்துதானம் செய்வதன் மூலம் குழந்தைகளற்ற பெற்றோரை மகிழ்வுறச் செய்யும் ஒரு வேலையற்ற வாலிபனின் கதையாக விரிகிறது படம். விந்துத் தேர்வில் மிகக் கேவலமான இனவெறிக் கருத்தமைவைக் கொண்டது இப்படம். விந்து தானம் செய்யும் அவன் இப்படத்தில் கொண்டாடப்படக் காரணம் அவனது விந்தின் பூர்வீகம் ஐரோப்பிய மன்னனான அலக்சான்டரின் வழி சுத்த இந்தோ ஐரோப்பிய விந்துவாக இருக்கிறது என்கிறது படம். பிறக்கும் குழந்தைகளும் ஆரிய ஐரோப்பிய இந்துவின் வீர்யம் கொண்டதாக இருக்கின்றன என்கிறது திரைப்படம். நவீன தாராளவாதச் சிந்தனை கொண்டதாகத் தோற்றமளிக்கும் இந்த இரு படங்களும் அடிப்படையில் இந்திய ராணுவத்தின் மேன்மை பேசுவதாகவும் ஆர்ய மேன்மை பேசுவதாகவுமே இருக்கின்றன. இவரிடமிருந்து ‘திராவிடர்களான‘ தமிழர்களின் பிரச்சினை குறித்த சமநிலை கொண்ட படத்தினை எதிர்பார்ப்பதில் ஏதும் அர்த்தமில்லை.

அரசியல் கொலைகள் நியாயப்படுத்த முடியாதவை. ராஜீவ் காந்தியின் அரசு பிரபாகரனைக் கொல்ல முயன்றாலும் சரி அல்லது விடுதலைப் புலிகள் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்ய முயன்றாலும் சரி, அது அரசுகளில் அல்லது இயக்கக் கருத்தியலில்; பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்துவிடுவதில்லை. மாறாக, அது குறிப்பிட்ட அரசு மற்றும் இயக்கத்திற்கு பெரும் அரசியல் பின்னடைவையே தரும். அழித்தொழிப்பு அரசியல் என்பது, இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கையானது, தென்னாசிய பிராந்திய அரசியலில் அவமானத்திற்குரியதாக ஆகி இருக்கிறது. விடுதலைப் புலிகள் புரிந்த அரசுத்தலைவர்கள் படுகொலைகள் என்பது அந்த இயக்கத்தை உலக நாடுகள் பயங்கரவாதப் பட்டியலில் சேர்ப்பதிலேயே சென்று முடிந்தது.

ராஜீவ் காந்தியின் படுகொலையில் நேரடியாக ஈடுபட்டவர்கள் அனைவரும் நடந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டு விட்டார்கள் அல்லது தற்கொலை செய்து கொண்டுவிட்டார்கள். சந்திராசாமி தொடர்பாகவும், சுப்ரமணியசாமி தொடர்பாகவும் நடந்து வரும் விவாதம் இவர்கள் இப்படுகொலையில் நேரடியாக அல்லது நேரடியிலல்லாமல் வகித்திருக்கக் கூடிய பாத்திரம் பற்றித்தான். படுகொலையில் ஈடுபட்டவர்கள் இந்திய, தமிழக அரசியலில் உயரளவில் தொடர்புகள் இல்லாமல் இதனைச் செய்திருக்க முடியாது. இதில் மேற்கத்திய ஆயுத விற்பனைச் சக்திகளும் ஈடுபட்டிருக்கலாம். இவர்கள் அனைவருக்கும் ராஜீவ்காந்தியைக் கொல்வதற்கான அவரவர் நியாயங்கள் இருந்தன. எவர் எவரை எந்த அளவில் பயன்படுத்தினார்கள், வேறு வேறு காரணங்கள் எவ்வாறு ஒரு அரசியல் படுகொலையாக ஆனது என்பதுதான் விசாரணைக்குரிய பிரச்சினை. இந்தக் கோணத்தையும் முற்றிலும் நிராகரிக்க முடியாது.

ராஜீவ் காந்தியின் படுகொலை என்பது இந்திய, தமிழக, உலக அரசியலில் விடுதலைப் புலிகளுக்கு மீளமுடியாத பின்னடைவையே கொண்டு வந்தது. இதனைக் கவனம் கொண்டே பின்னாளில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அதனைத் ‘துன்பியல் நிகழ்வு’ என்றார். இதன் பொருட்டுத்தான் ‘அந்த நிகழ்வைப் பொருத்து நான் சொல்வது இதுதான் : "அது ஒரு மாபெரும் துயரநிகழ்வு, மிகப்பெரும் வரலாற்றுத் துயரம், அதற்காக நாங்கள்; வருந்துகிறோம். இந்திய அரசும் இந்திய மக்களும் பெருந்தன்மையுடன் இருக்க வேண்டுமென நாங்கள் கோருகிறோம். கடந்த காலத்தைப் பின்விட்டு மாறுபட்ட நோக்கில் இனப் பிரச்சினையை அணுகுமாறு நாங்கள் கோருகிறோம்" என இந்தியாவின் என்டிடிவி நேர்முகத்தில் அன்டன் பாலசிங்கம் இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு ஜீன் மாதம் கேட்டுக் கொண்டார். பிற்பாடு, "ராஜீவ்காந்தி மரணத்திற்கு வருத்தம் தெரிவித்தோமே ஒழிய அந்தப் படுகொலைக்கு தாம் உரிமை கோரவில்லை" என அன்றைய விடுதலைப் புலிகளின் பேச்சாளர் தயா மாஸ்டர் இது குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக விசாரணை நடத்திய ஜெயின் கமிஷன் படுகொலைக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், உளவமைப்பின் பொறுப்பாளர் பொட்டு அம்மான் போன்றவர்களைக் காரணமானவர்கள் என அதிகாரபூர்வமாக அறிவித்தது. இவை அனைத்தும் ராஜீவ்காந்தி படுகொலைப் பிரச்சினையைச் சுற்றி நடந்த நிகழ்வுகள்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக வெளியான இரு ஆங்கிலப் புத்தகங்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. இந்திய அரசுப் பிரதிநிதியான ரகோத்தமன் எழுதிய ராஜீவ் கொலை வழக்கு, வட இந்திய இதழியலாளர் ராஜீவ் சர்மா எழுதிய விடுதலைப் புலிகளுக்கு அப்பால் என்பன அந்த இருநூல்கள். இதுவன்றி திராவிடக் கழக வழக்குரைஞரும் நளினிக்காக வாதாடியவருமான துரைசாமி ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக ரீ டிப் (13 அக்டோபர் 1999), தெகல்கா (21 ஜனவரி (2012) போன்ற இணையதளங்களுக்கு குறிப்பிடத்தக்க நேர்முகங்கள் அளித்திருக்கிறார். சிவராசன், சுபா, தனு போன்றவர்கள்தான் கொலையைச் செய்தார்கள்; நளினி உள்பட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் அதில் ஈடுபடவில்லை எனும் வழக்குரைஞர் துரைசாமி, உள்நாட்டைச் சேர்ந்தவர்களும் இந்தக் கொலையில் பங்கு பற்றியிருக்கலாம், அதனை விசாரிக்க வேண்டும் என்கிறார். இவற்றுடன், ரா அமைப்பில் பயங்கரவாத எதிர்ப்புக் குழவில் பொறுப்பதிகாரியாகச் செயலாற்றிய பி.ராமன் எழுதிய கவ் பாய்ஸ் ஆப் ரிசர்ச் அன்ட் அனாலிசிஸ் விங் எனும் நூலும் சேர்த்து வாசிக்க வேண்டியதாகும்.

ரகோத்தமன், பி.ராமன் போன்ற உளவு மற்றும் புலனாய்வு அமைப்பினுள் செயலாற்றியவர்களின் நூல்களில் ஒரு பொதுத்தன்மையுண்டு. தமது நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்காத அதிகார வர்க்கம் சார்ந்த நபர்களால் குளறுபடிகள் நிறைந்து நிர்வகிக்கப்படுவதாக இந்த அமைப்புகள் இருக்கின்றன என இந்த நூல்களும் சொல்கின்றன. அதே வேளை அதிநுட்ப மனமும் தியாகசிந்தையும் சாகச உணர்வும் நாட்டுப்பற்றும் உள்ள, ‘செயல்படும் தனிநபர்களைக் கொண்டதாகவும்’ இந்த அமைப்புகள் இருக்கின்றன எனவும் இந்த நூல்கள் சொல்கின்றன. நேர்மையான தேசபக்த அதிகாரிகள், குளறுபடி கொண்ட அதிகார வர்க்கம் என்பது ஒரு அற்புதமான திரைப்பட பார்முலா என்பது ஜேம்ஸ்பான்ட் மற்றும் ஹாலிவுட் உளவமைப்பு தொர்பான திரைப்படங்களி;ல் எவரும் பார்க்க முடியும். சிபிஐ கோப்புகளின் ஆதார அடிப்படையில் எழுதப்பட்ட ராஜீவ் சர்மாவின் நூலும் அதிகார வர்க்கம் மற்றும் அர்ப்பண உணர்வுள்ள அதிகாரிகள் எனும் எதிர் சமன்பாட்டில் மேற்கண்ட தேசபக்த உணர்வையே முன்வைக்கும் நூலாகும். இதே முரண்முடிச்சு டி டே படத்திலும், மெட்ராஸ் கஃபே படத்திலும் இருக்கிறது. ரா அமைப்பின் அதிகார வர்க்கக் குளறுபடிகளால் மெட்ராஸ் கஃபேயின் கதாநாயகனால் இந்தியப் பிரதமரைக் காப்பாற்ற முடியாமல் போகிறது. டி டே படத்தில் இந்தியாவுக்குள் நாசவேலை செய்துகொண்டு பாகிஸ்தானில் வாழும் ஒரு பயங்கரவாதியைப் பிடிக்க முயலாமல் ரா அமைப்பு அதிகாரிகள் குளறுபடிகள் செய்ய, அதனை மீறி ரா அமைப்பின் இயக்குனர் ரகசியமாக அவனைப் பிடித்துக் கொல்லத் திட்டமிடுகிறார்.

ரகோத்தமன், பி.ராமன், ராஜீவ் சர்மா போன்றவர்களின் நூல்களில் இன்னொரு இணைப்புச் சங்கிலியும் உண்டு. இவர்கள் இந்தியா பிற நாடுகளில் செய்கிற ‘அரசியல்’ குறித்து எங்கேயும் எப்போதும் பேசுவதில்லை. இந்திய அரசு வெளிநாட்டுக் கொள்கையின் தவறுகள் குறித்தும் இவர்கள் பேசுவதில்லை. இந்தியப் பாதுகாப்பு எனும் நிலையிலிருந்து, அதனைப் பாதுகாக்கும் தேசபக்தர்கள் எனும் நிலைபாட்டில் இருந்து மட்டுமே இவர்கள் இந்தியத் தலையீட்டை ‘நியாயமானது’ எனும் நிலையிருந்தே பார்க்கிறார்கள். இந்த நிலைபாட்டில் இருந்துதான் இஸ்ரேல் அரபு நாடுகளில் ஊடுறுவுகிற மாதிரி, அமெரிக்கா பின்லாடனுக்காக பாகிஸ்தானில் ஊடுறுவுகிற மாதிரி இந்தியாவும் பிறநாடுகளில் ஊடுறுவி இந்தியாவின் எதிரிகளைக் கொல்ல வேண்டும் எனும் ராஜீவ் சர்மா, பிரபாகரனைக் கொல்ல இந்திய விமானங்கள் இலங்கைக்குச் சென்றிருக்க வேண்டும் எனவும் எழுதுகிறார். இதே மனநிலைதான் பாகிஸ்தானுக்குள் ஊடுறுவும் டி டே ரா அதிகாரியிடமும், விடுதலை இயக்கத்தைப் பிளப்பதற்காக யாழ்ப்பாணத்துக்குள் ஊடுறுவும் மெட்ராஸ் கஃபே ரா கதாநாயகனிடமும் செயல்படுகிறது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக இந்திய அளவில் வெளியான முதல் நூல் விடுதலைப் புலிகளுக்கு அப்பால் நூலின் ஆங்கிலப் பதிப்பு. 1996 ஆம் ஆண்டு எழுதி முடிக்கப்பட்டு 1998 ஆம் ஆண்டு அந்த நூல் வெளியானது. நூலின் ஆசிரியரான ராஜீவ் சர்மா மெட்ராஸ் கஃபே திரைப்படம் தொடர்பாக தனது கருத்தைப் பின்வருமாறு பதிவு செய்கிறார் : “கடந்த நான்கு ஆண்டுகளாகக் குறைந்தபட்சம் மூன்று பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர்கள் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்காக என்னைத் தொடர்பு கொண்டார்கள். பிற்பாடு, அரசியல் படுசூடாக இருப்பதாக அதிலிருந்து பின்வாங்கிக் கொண்டார்கள். தமது சொந்த நலன்களின் அடிப்படையில் ராஜீவ் காந்தியின் படுகொலை குறித்து ஒரு சொல்லும் உதிர்த்துவிடக்கூடாது எனும் மனப்பான்மை காங்கிரஸ் கட்சிக்கு உள்ளும் வெளியிலும் இருக்கிறது. இந்தியாவின் நூற்றிருபது கோடி மக்களுக்குத் தமது முன்னாள் பிரதமரை யார் கொலை செய்தார்கள் என அறிந்து கொள்வதில் ஆர்வமில்லை. ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட ஆண்டான 1991 ஆம் ஆண்டு ஹாலிவுட் இயக்குனர் ஆலிவர் ஸ்டோன் இயக்கிய கென்னடி படுகொலை பற்றிய ஜேஎப்கே படம் வெளியானது. அது ஒரு அற்புதத்தை விளைவித்தது. அந்தப் படத்தின் பின் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடி படுகொலை தொடர்பான மறுவிசாரணைக்கு உத்தரவிட்டார். ஜான் ஆப்ரகாமுக்கும் சுஜித் சர்க்காருக்கும் அப்படி ஒரு ஜேஎப்கே திரைப்பட வாய்ப்பு மெட்ராஸ் கஃபேயில் இருந்தது. அதனை அவர்கள் தவற விட்டுவிட்டார்கள்“.

ரகோத்தமன், துரைசாமி, ராஜீவ் சர்மா, மெட்ராஸ் கஃபே திரைக் கதையாசிரியர்கள் போன்றவர்கள் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. சிவராசன், சுபா, தனு போன்றவர்கள் தான் அடிப்படையில் ராஜீவ்காந்தி படுகொலையில் ஈடுபட்டார்கள் என இவர்கள் அனைவரும் சொல்கிறார்கள். தனு பற்றிய ஒளிப்பதிவு நாடா ஒளிக்கப்பட்டு விட்டது என்கிறார் ரகோத்தமன். ராஜீவ் சர்மா இந்தப் படுகொலையில் காஷ்மீர், கலிஸ்தான், விடுதலைப் புலிகள் என பலருக்கும் பங்கிருக்கக் கூடிய சாத்தியம் இருக்கிறது என்கிறார். ஆயுத வியாபாரிகள், மேற்கத்திய உளவு அமைப்புகள், இந்திய அரசியல்வாதிகள் போன்றவர்களின் சதியும் இருக்கக் கூடும் என்கிறார். ராஜீவ்காந்தி மீது கடும் விரோதம் கொண்டிருந்த, விடுதலைப் புலிகளுக்கு அன்று நிதியும் ஆயுதங்களும் அளித்த இலங்கை ஜனாதிபதி பிரேமதாசாவும் சந்தேகத்துக்கு உட்பட்டவர்தான் என்கிறார் அவர். இத்தனை சாத்தியங்களும் இப்படத்தில் விரிவாகப் பேசப்பட்டிருக்க வேண்டும் என்கிறார் ராஜீவ் சர்மா.

மெட்ராஸ் கஃபே திரைப்பட இயக்குனருக்கு ஒரு குழப்பம் இருந்தது எனும் ராஜீவ் சர்மா, இனப் பிரச்சினையைச் சொல்வதா, ராஜீவ் காந்தி படுகொலையைச் சொல்வதா என்பதுதான் படத்தின் அந்தக் குழப்பம் எனவும் அவர் சொல்கிறார். ராஜீவ் சர்மா சொல்கிற இந்தக் குழப்பம் ராஜீவ் சர்மாவுக்கும், ரகோத்தமனுக்கும், மெட்ராஸ் கஃபே இயக்குனர் சுஜித் சர்க்காருக்கும் என 'அனைத்து இந்திய தேசபக்தர்களின் கர்வம்' சம்பந்தமான அடிப்படைக் குழப்பம்தான். விடுதலைப் புலிகளும் ராஜீவ் காந்தியும் படுகொலையும் தொடர்பான பிரச்சினை அடிப்படையில் வெறுமனே ஒரு நாட்டின் முன்னாள் பிரதமர் கொலை எனும் தனித்த நிகழ்வு தொடர்பான பிரச்சினை இல்லை. ராஜீவ் காந்தி படுகொலை என்பதும் அதனோடு தொடர்புடைய ஈழ மக்கள் மீதான இந்திய ராணுவத்தின் கொடுமைகள் என்பதும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்ட அரை நூற்றாண்டு அரசியல் நிகழ்வுகளின் விளைவு.

1983 ஜீலை இனப்படுகொலை, இந்திய ராணுவ ஆட்சியின் கீழ் பனிரெண்டு விடுதலைப் புலிகள் தற்கொலை செய்து கொண்டமை, புலிகளின் தலைவரைக் கொலை செய்ய இந்திய அரசு திட்டமிட்ட செயல், இந்திய ராணுவத்தின் பாலியல் வல்லுறவு, முப்பதாண்டு கால இலங்கை ராணுவ அடக்குமுறை, உலக வல்லரசுகள் அனைத்தும் இணைந்து நடத்திய முள்ளிவாய்க்கால் பேரழிவு என அனைத்தும் இணைந்த ஒரு வரலாற்றுச் செயல்போக்கின் அங்கம்தான் ராஜீவ் காந்தி படுகொலை. இதனை ‘இந்திய ராணுவம் யாழ்ப்பாணத்தில் நுழைந்த காலத்தில் துவங்கி, ராஜீவ் காந்தி படுகொலை நடந்த நாள் வரையிலான’ சம்பவங்களாகக் குறுக்கி, அவருக்கான இரங்கலைத் துயருடன் சொல்வதால் மட்டும் விளக்க முடியாது.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </