ஏழை படும் பாடு – காட்சிமொழியால் தீட்டிய ஓவியம்
இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் தமிழ் ஸ்டுடியோ முக்கியமான நூறு படங்களை திரையிடும் செய்தி எனக்கு மகிழ்ச்சி அளித்தது.. ஆர்வமாக திரையிடப்படும் பட்டியலை பார்த்தேன்.
அந்த பட்டியலில் நான் பார்க்க வேண்டிய படங்கள் என சில படங்களை குறித்து வைத்தேன். தவிர்க்க வேண்டிய படங்கள் என சில படங்களை சிவப்பு நிறத்தில் அடிக்கோடு இட்டேன். அப்படி சிவப்பு நிறத்தில் அடிக்கோடு இடப்பட்ட படங்களில் ஒன்றுதான் ஏழை படும் பாடு.
இதை தவிர்க்க விரும்பியதற்கு இரண்டு காரணங்கள். படத்தலைப்பு சோகப்படம் என்று சொல்கிறது. பழைய கால சோகப்படம் என்றால் நம் மனதில் ஒரு பிம்பம் எழுமே.. சோகமயமான பாடல்கள் , அழுது வடியும் கதாபாத்திரங்கள் , நீள நீளமான வசனங்கள் என்ற டெம்ப்ளேட்டை எத்தனை படங்களில் பார்த்து விட்டோம்.
இன்னொரு காரணம் படத்தின் நாயகன் நாகையா. இவரைப்பற்றி அந்த காலத்தில் என் சித்தப்பா ஒருவர்தான் முதன் முதலில் அறிமுகப்படுத்தினார். இவர் பெயர்தாண்டா நாகையா.. எல்லா படத்திலும் வருவார். ரத்தம் கக்கி இருமி இருமி சாவார்.. என்றார். அவர் சொன்னது போலவே , நான் பார்த்த எல்லா படங்களிலும் கொஞ்ச நேரம் வந்து , இருமி விட்டு இறந்து விடுவதை வாடிக்கையாக கொண்டு இருந்தார். முழு படத்திலும் இருமிக்கொண்டு இருக்கப்போகிறாரா என்ற சந்தேகம் இந்த படத்துக்கு அல்ல...இந்த படம் திரையிடப்படும் கோடம்பாக்கம் இருக்கும் திசைக்கே போகக்கூடாது என்று எண்ண வைத்தது.
இந்த எண்ணத்தை மாற்றி அமைத்தது சில நாட்களுக்கு முன் பார்த்த மர்ம யோகி திரைப்படம். இயக்கம் கே ராம்னாத்... ஆங்கிலப்படம் போல எடுத்து இருப்பார். செருக்களத்தூர் சாமாவின் நடிப்பும் அந்த படத்தில் இயல்பாக இருந்தது. எனவே ரிஸ்க் எடுக்க துணிந்தேன்.
முதல் ஷாட்டிலேயே கதை தொடங்கி விடுகிறது. ஜெயில், கைதிகள், அவர்களின் வேதனை என சில நொடிகளில் படத்துக்குள் நம்மை கொண்டு போய் விடுகிறது கேமரா.
இன்னும் சில நாட்களில் எனக்கு விடுதலை என்கிறான் ஒரு கைதி.. வெளியே போனாலும் உன்னை கைதி கைதி என்று பரிகாசம் செய்து மீண்டும் உன்னை உள்ளே தள்ளி விடும் சமூகம். ரொம்ப மகிழாதே என்கிறான் சக கைதி.
சுருக்கமான வசனம்தான்.. ஆனால் அந்த கைதியின் மன ஓட்டம், சமூக நிலை, கதை எப்படி செல்லப்போகிறது என்பதெல்லாம் ஷார்ட் அண்ட் சிம்பிளாக புரிந்து விடுகிறது.
அந்த கைதி ஏன் சிறைக்கு வந்தான் என்பது சிறிய ஃப்ளேஷ்பேக் மூலம் சொல்லப்படுகிறது. சட்டத்தை கடுமையான அமுல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்ட போலிஸ் அதிகாரி ஜாவர் கேரக்டர் அறிமுகமாகிறது.
படத்தின் பிரதான பாத்திரங்கள் , படம் செல்ல இருக்கும் திசை என எல்லாம் வெகு சில நிமிடங்களிலேயே சொல்லப்பட்ட நேர்த்தி ஏதோ நேற்று பார்த்த ஹாலிவிட் த்ரில்லர் போன்று இருந்தது.
அந்த இன்ஸ்பெக்டருக்கும் , சந்தர்ப்ப சூழ்னிலையால் சிறைக்கு வந்த அந்த கைதி கந்தனுக்கும் இடையேயான முரணியக்கம்தான் படத்தை எடுத்து செல்கிறது. தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையேயான மோதல் என்ற - இன்று வரை செல்லுபடியாகும் - டெம்ப்ளேட்டை விடுத்து, இரு தர்மங்களுடையேயான மோதல் என்பது படத்தை முக்கியமான படம் ஆக்குகிறது.
அந்த இன்ஸ்பெக்டர் கடுமையானவன் . ஆனால் கெட்டவன் அல்லன். தன் சுய தர்மத்துக்கு அவன் உண்மையாக இருக்கிறான் என்பது பல அழுத்தமான காட்சிகள் மூலம் எஸ்டாப்ளிஷ் செய்யப்படுகிறது.
படத்தை ஐந்து கட்டங்களாக பிரிக்கலாம்.
கந்தன் ஏன் ஜெயிலுக்கு வந்தான் , சிறை வாழ்க்கை , விடுதலைக்கு பின் புது மனிதன் தந்தை தயாளனாக உருவெடுத்தல் , தயாளனாக இருக்க முடியாத நிலை உருவாகி அம்பலவாணனாக உருவெடுத்தல்.
தன் அக்காவையும் அவள் குழந்தைகளையும் காப்பாற்றும் பொருட்டு ஒரு வெகு சாதாரண திருட்டு குற்றத்துக்காக கந்தன் சிறை செல்கிறான். போலீஸ் அதிகாரி ஜாவரால் கடுமையாக நடத்தப்படுகிறான். விடுதலை ஆகும் அவன் , ஒரு பாதிரியாரால் புதிய மனிதன் ஆக்கப்பட்டு தொழிலதிபர் ஆகிறான். எல்லோரையும் நேசிக்க வேண்டும் என்பது மட்டுமே அவர் அவனிடம் கேட்கும் உதவி.
தன் அடையாளத்தை மாற்றிக்கொண்டு தொழிலதிபர் ஆகும் தயாளன் , தந்தை தயாளன் என அழைக்கப்பட்டு பதவி செல்வம் என செல்வாக்கோடு இருக்கிறார். அக்காவின் மகள் ராஜத்தை கண்டு பிடிக்கிறார்.
அவள் கதை சோகமாக இருக்கிறது..
இந்த ராஜத்தை ஒருவன் (பாலையா) பணத்துக்காக திருமணம் செய்து ஏமாற்றி ஓடி விட்டான் . அவ்ள் தன் பெண் குழந்தை லட்சுமியை ஒருவர் வீட்டில் விட்டு விட்டு , வேலை செய்து அவர்களுக்கு பணம் அனுப்பி வந்தாள்.அவர்கள் பணத்தையும் வாங்கி கொண்டு லட்சுமையிடன் வேலையும் வாங்குகின்றனர். தம் குழந்தை அஞ்சலாவை மட்டும் நன்றாக கவனித்து கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் லட்சுமியை தன்னுடன் அனுப்புமாறு கேட்க , அந்த குழந்தைக்கு தாங்கள் செலவழித்த காசை கொடுத்து விட்டு குழந்தையை அழைத்து செல்ல சொல்லி விட்டார்கள்.
இதை கேட்ட தயாளன் அந்த குழந்தையை அழைத்து வந்து ராஜத்திடம் ஒப்படைக்க நினைக்கிறார். இதற்கிடையே அந்த ஊருக்கு வரும் இன்ஸ்பெக்டர் ஜாவர் , தயாளன் தான் பழைய கந்தனோ என சந்தேகிக்கிறார் . ஆனால் யாரோ ஒருவனை கந்தன் என நினைத்து கைது செய்து , பிரச்சினை முடியும் நிலையில் இருக்கிறது.
ஆனால் தனக்கு பதில் , இன்னொருவன் கஷ்டப்படுவதை விரும்பாத தயாளன் உண்மையை சொல்லி விடுகிறார். குழந்தையை மீட்கும் வரை நேரம் கொடுக்குமாறு அவர் கெஞ்சுவதை ஜாவர் கேட்கவில்லை. குழந்தை கிடைக்காத ஏக்கத்தில் ராஜம் இறந்து விடுகிறாள்.
குழந்தைக்காக வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதால் , ஜாவரிடம் இருந்து குழந்தையுடன் தப்பி விடுகிறார். இதில் அந்த அஞ்சலாவின் பெற்றோருக்கு தயாளன் மீது கோபம். அவரை காட்டிக்கொடுக்க நேரம் பார்க்க ஆரம்பிக்கின்றனர்.
தப்பித்த தயாளன் , அம்பலவாணன் என்ற புதிய அடையாளத்துடன் குழந்தை லட்சுமியை வளர்த்து ஆளாக்குக்கிறார்.
அவள் உமாகாந்த் என்ற சுதந்திர போராட்ட வீரனை காதலிக்கிறாள். அஞ்சலாவுக்கும் உமாகாந்த் மீது காதல்.
அஞ்சலாவை தற்செயலாக சந்திக்கும் தயாளன் அவளுக்கு உதவும் பொருட்டு அவள் வீட்டுக்கு செல்கிறார், அப்படி அவள் வீட்டாரோடு பழக்கம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் பழைய பகையை மனதில் வைத்து அவர்கள் காட்டிக்கொடுக்க மீண்டும் ஜாவர் துரத்துகிறார்.
இந்த நிலையில், சுதந்திர போராட்ட வீரர்கள் ஜாவரை கொல்ல முனைகின்றனர்..
அந்த இடத்துக்கு அம்பலவாணம் வந்து சேர்கிறார். தன் அக்கா , அக்காவின் மகள் மரணத்துக்கு காரணமான ஜாவரை பழி வாங்கினாரா , மன்னித்தாரா... மன்னித்தால் ஜாவர் அதை எப்படி எடுத்துக்கொண்டான் என்பதே கிளைமேக்ஸ்.
இரு வெவ்வேறு தர்மங்களும் தத்தம் கொள்கையில் இருந்து கிஞ்சித்தும் மாறாத ஓர் உக்கிரமான கிளைமேக்ஸ். படத்தின் உச்சம் இந்த காட்சிதான்.
இன்று எடுத்து இருந்தால் , இத்துடன் முடித்து இருப்பார்கள்.. ஆனால் அன்றைய ரசிகர்களை திருப்திப்படுத்தும் பொருட்டு , அஞ்சலாவின் தியாகம் , ராஜத்தை ஏமாற்றிய கணவனை போலீஸ் கைது செய்வது , உமாகாந்த் லட்சுமியை சேர்த்து வைத்து , நிம்மதியாக கந்தன் என்ற அம்பலவாணன் கண் மூடுவது என சுபம் . பாதிரியாரின் மெசேஜ் தாங்கிய புகைப்படத்துடன் படம் முடிகிறது.
இந்த படம் அன்று சூப்பர் ஹிட் ஆனதற்கு இது போன்ற லேசான விட்டுக்கொடுத்தலும் காரணமாகும் . ஆனால் முழுக்க முழுக்க விட்டுக்கொடுத்து சராசரி படமாக்கிவிடவில்லை.
கேமரா கோணங்கள் , வசனம் , கட்டுக்கோப்பான திரைக்கதை என வெளி நாட்டு படம் பார்ப்பது போல இருக்கிறது.
ஜெயிலில் செய்யாத குற்றத்துக்காக கந்தனை கடுமையாக தண்டிபார் ஜாவர். வேறு வழியின்றி கந்தன் அதை ஏற்பான். பின் அவன் விடுதலை ஆகும் நேரம் வருகிறது.
அந்த கட்டத்தில் ஒரு விபத்து நிகழ்கிறது. அதில் ஜாவரின் உயிரை ரிஸ்க் எடுத்து காப்பாற்றி விடுகிறான் கந்தன்.
இதுதான் சீன். படத்துக்கு வசனம் , தமிழ் படங்களில் வசனத்துக்கு என்றே ஸ்டார் அந்தஸ்து பெற்ற முதல் வசனகர்த்தா இளங்க்கோவன்.
தான் இகழந்தவன் , தன்னை காப்பாற்றி விட்டான் என்ற நிலையில் ஜாவர் உணர்வுபூர்வமாக ஏதோ பேசப்போகிறார் என காதுகளை தீட்டி வைத்துக்கொண்டு தயாராகிறோம். அடுக்கு மொழியில் வசன மழை பொழியப்போகிறது என நினைக்கிறோம்..
ஜாவர் கந்தனை பார்த்து ஒரே ஒரு வரி பேசுகிறார்.
“ கந்தன் ... நீ நல்லவன்”
அவ்வளவுதான்... அவ்வளவேதான்..அதற்கு மேல் ஒரு வார்த்தை இல்லை..
தமிழ் படங்களில் வசனத்துக்கு இருக்கும் இடம் உலகின் எந்த மூலையிலும் இல்லாத ஒன்று. ஒரே ஷாட்டில் 5 நிமிடம் வசனம் பேசறார்யா...சான்சே இல்லை...என இன்றும்கூட சிலாகிக்கிறோம் என்றால் நாடக ஆதிக்கம் உச்சத்தில் இருந்த அந்த கால கட்டத்தில் வசனத்தின் இடத்தை சொல்லவே வேண்டியதில்லை. அந்த சூழ் நிலையில் இப்படி ஒரு வசனத்தை வைத்த இயக்குனர் , வசனகர்த்தா போன்றோரின் தன்னம்பிக்கையை வியக்காமல் இருக்க முடியவில்லை.
இப்படி காலத்தை மீறி சிந்தித்தாலும் , அந்த காலத்துக்கே உரிய பாடல்களை அதிகம் வைக்கும் பாணியையும் கை விடவில்லை.. ஒவ்வொரு பாடலும் தேனாய் இனிக்கிறது.
இதில் ஒரு பாடலைப்பற்றி சொல்லியே ஆக வேண்டும்.
விதியின் விளைவால் என்று ஒரு அற்புதமான பாடல். ராஜம் பாடுவது போன்ற காட்சி. அந்த பாடல் கட் ஏதும் இன்றி ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இருக்கும். விஷ்யம் தெரிந்தவர்கள் இன்றளவும் அதை வியக்கின்றனர். அப்படி என்றால் அந்த காலத்தில் அது எப்பேற்பட்ட சாதனையாக இருந்து இருக்கும். அந்த பாடலை பார்க்கையில் , எப்பேற்பட்ட மேதைகள் எல்லாம் இங்கு வாழ்ந்து இருக்கிறார்கள் என நினைத்து பிரமை பிடித்தது போல அமர்ந்து இருந்தேன். இசை , ஒளிப்பதிவு , நடிப்பு என எல்லாம் கச்சிதமாக எப்போதாவது நிகழும் அற்புதம் அந்த காட்சியில் நிகழ்ந்திருக்கிறது.
இங்கே இன்னொரு ஷாட்டையும் சொல்லியாக வேண்டும்.
ஒரு பயங்கரமான விமான விபத்தில் பள்ளிக்குழந்தைகள் கடலில் மூழ்கி உயிர் இழந்தனர். அதை பிபிசி காட்சிப்படுத்தியவிதம் பலரை கண்ணீர் கடலில் தள்ளியது. குழந்தைகளின் உடலையோ , விமானத்தின் பாகங்களையோ அவர்கள் காட்டவில்லை.. குழந்தைகள் ஆசையாக பயன்படுத்திய பொம்மைகள் , புத்தகங்கள் அனாதைகளாக கடலில் மிதப்பதைத்தான் அவர்கள் கேமரா படம் பிடித்தது. அது உலகை உலுக்கியது.
நம் தமிழ் படத்தில் அது போன்ற ஒரு ஷாட் அந்த காலத்தில் இடம்பெற்று இருப்பது என்ன ஆச்சர்யப்படுத்தியது. ஜாவர் தற்கொலை செய்து கொள்வதை கொடூரமாக காட்டாமல் உணர்வுபூர்வமாக காட்டி இருப்பார்கள். தற்கொலை செய்யும் பொருட்டு , ஆற்றில் குதிக்கும் சத்தம் கேட்கும். ஓடிப்போய் பார்ப்பான் கந்தன். ஜாவரின் அடையாளமாக விளங்கிய அவரது உடமைகள் தண்ணீரில் மிதந்து கொண்டு இருக்கும்.. வயலின் இரைச்சலோ , ஒப்பாரியோ இல்லாமல் ஒரு ஷாட் மூலம் ஒரு அழுத்தமான உணர்வை கொடுக்கும் இந்த மேதமையை சமீபத்திய படங்களில்கூட பார்க்க முடியவில்லை.
வயலின் இரைச்சலைப்பற்றி சொல்லும்போது பின்னணி இசை பற்றி சொல்லியாக வேண்டும். மிக மிக குறைவாக , எப்போது தேவையோ அப்போது மட்டும் , ஒரு காட்சியொல் அடிக்குறிப்பு இட வேண்டும் என்ற நிலையில் மட்டும் , அழகாக ஒலிக்கிறது பின்னணி இசை.பாடல்கள் ஒவ்வொன்றும் தேனில் ஊறிய பலா . படத்துக்கு இசை எம் எஸ் விஸ்வ நாதனின் குருவான சுப்பையா நாயுடு .
இயற்கையான ஒலிகளைக்கொண்டு , குறைந்த பட்ச வாத்தியங்களைக்கொண்டு ஒரு நடன இசை படத்தில் வரும். அற்புதம்.
மேதைகளைப்பற்றி சொல்லும்போது காமெடி நடிகர் ஒருவரைப்பற்றி சொல்லியாக வேண்டும். காமெடியில் பெயர் வாங்குவது சாதாரணம் அல்ல. வரும் ஆனா வராது... என்னத்த போயி , என்னத்த செஞ்சு , என்பது போன்ற அழியாபுகழ்பெற்ற வசனங்கள் பேசிய என்னத்த கன்னையாவின் முதல் படம் இதுதான்.
அதிகார வர்க்கம் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது போன்ற ஒரு சீன். யாரோ ஒருவனை பிடித்து அவன்தான் கந்தன் கைதிகளை சாட்சி சொல்ல வைப்பார்கள்... அதில் ஒருவராக என்னத்தை கன்னையா வருவார்.
ராஜத்தை மணம் புரிந்து ஏமாற்றும் வேடத்தில் கலக்கி இருப்பார் பாலையா. லேசான காமெடி கலந்த வில்லன். உமாகாந்த் அப்பாவை ஏமாற்றி பணம் பறிக்கும் காட்சிகள் சுவாரஸ்யம்.
ஒரு கட்டத்தில் முழுமையாக சுருட்ட திட்டம் இடுவார். பையன் என்ன அரசியல் , சமூக சேவைனு சுத்றான்,,,இதை எல்லாம் நிறுத்தலைனா சொத்து எல்லாத்தையும் என் பேர்ல எழுதி வச்சுடுவேனு மிரட்டுங்க என அமைதிப்படை அமாவாசை போல அவர் கொடுக்கும் ஐடியா ரசிக்க வைத்தது .
(அதுக்கு அவன் பயப்படலைனா என்ன செய்றது ? மிரட்டினபடி செஞ்சுடுங்க)
ஒரு நடிகரைப்பற்றி நண்பர்கள் மூலமோ , நாமாகவோதான் அதிகம் தெரிந்து கொள்வோம். ஜாவர் சீத்தாராமனைப்பற்றி எனக்கு முதலில் சொன்னது என் அம்மாதான். அவர் நடிகர் மட்டுமல்ல, நல்ல எழுத்தாளரும்கூட என உயரவாக சொன்னார்கள்.. இப்படி சின்ன வயதிலேயே அவரைப்பற்றி கேள்விப்பட்டாலும் , அவருக்கு பெயர் வாங்கித்தந்த இந்த படத்தை பார்த்ததை சந்தோஷமான நாட்களில் ஒன்றாக கருதுகிறேன். இதில் நடித்த ஜாவர் என்ற பெயரால்தான் அவர் கடைசிவரை அறியப்பட்டார். அந்த அளவுக்கு வலுவான பாத்திரப்படைப்பு.
முரட்டுத்தனமாக இன்ஸ்பெக்டர் , இரக்கம் இல்லாதவர்.. பலரை கொடுமைப்படுத்தியவர்... ஒரு பெண்ணின் மரணத்துக்கு காரணமானவர்,,,ஆனால் தனக்கான நெறிகளில் இருந்து கிஞ்சித்தும் விலகாதவர். ஒரு கட்டத்தில் தயாளனை சந்தேகப்பட்டது தவறு என நினைப்பார். உடனே தன்னை டிஸ்மிஸ் செய்து விடும்படி மன்றாடுவார். தன் தர்மத்தை விட்டு விலகிய பின் தனக்கு பதவி தேவை இல்லை என நினைப்பார்.
அதேபோல கிளமேக்ஸ் காட்சி... முட்டாளே...என்னை காப்பாற்றாதே..காப்பாற்றினால் நான் உன்னை கைது செய்ய வேண்டி வரும்,வேண்டாம் என்னை கொன்று விடு என்பார். எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை...உன்னை காப்பாற்றுவேன் என்பான் கந்தன். இரு வேறு தர்மங்களின் மோதல் அடையும் உச்சம்.. தர்ம அதர்ம மோதலை விட , இந்த மோதல் உக்கிரமானது.
நாகையா சிறப்பாக நடித்திருந்தார்.
தமிழின் சிறப்பு ழ என்கிறோம் அல்லாவா... ஆனால் நாம் அதை சரியாக உச்சரிப்பதில்லை.. கேரளாவில் சரியாக உச்சரிக்கிறார்கள். அதுபோல , உகாரம் , ka ga , sa cha போன்றவை வரும் தமிழ் சொற்களை நாம் தவறாகவே உச்சரிக்கிறோம். ஆனால் தமிழ் தெரிந்த தெலுங்கர்கள் இதை எல்லாம் நன்றாக உச்சரித்து நம்மை விட நன்றாக தமிழ் பேசுவது சற்று அசவுகரியாமான உண்மை. தெலுங்கை தாய்மொழியாகக்கொண்ட எஸ்பிபீ , தமிழ் பாடல்களை துல்லியமாக பாட முடிவது இதனால்தான்.
நாகையா நன்றாக தமிழ் பேசி நடித்து இருக்கிறார். உடல் வலுவும் , இரக்க குணமும் கொண்ட பாத்திரப்படைப்பு . ஒரு காட்சியில் உண்மையை சொல்லாவிட்டால் , சூடு வைக்கப்போவதாக அவரை மிரட்டுவார்கள்... சூட்டுக்கோலை பறிக்கும் கந்தன், தனக்கே சூடு வைத்து கொள்வான்.
இதெல்லாம் சிறையில் எனக்கு பழக்கமான ஒன்று..இதற்கெல்லாம் அஞ்ச மாட்டேன் என்பான், அருமையான காட்சி.
ஏழையை ஓட ஓட விரட்டும் சமூகம் , கூட இருப்பவர்களே அனுதாபம் காட்டாத சூழல் , உணவுக்கு இல்லாமல் ஒருவன் வாடுகையில் அதிக உணவால் ஒருவன் வருந்தும் முரண் என பலவற்றை காட்சிப்படுத்தி இருக்கிறார்.
வசனங்கள் சுருக்.
”இங்கே ஒரு குடிசை இருந்துச்சே ..என்ன ஆச்சு”
”அது மாளிகை ஆய்டுச்சே..பார்க்கலையா..”
ராஜம் , பத்மினி , லலிதா , துரை ராஜ் , செருக்களத்தூர் சாமா என அனைவரும் சரியாக தம் கேரக்டரை செய்து இருக்கிறார்கள். திறமைசாலியும் , பலருக்கு வழிகாட்டியுமான வி கோபால கிருஷ்ணன் உமாகாந்த் வேடத்தை அழகாக செய்து இருக்கிறார்.
விக்டர் ஹியூகோவின்'லேமிசரபிள்' நாவலை சுத்தானந்த பாரதியார் மொழி பெயர்த்தார். அதன் அடிப்படையில் உருவான படம் இது . தமிழக சூழலுக்கேற்ப மாமா , அக்கா என உறவுகளை கலந்த புத்திசாலித்தன, , இந்திய சூழலுக்கேற்ப சுதந்திர போராட்டத்தை கலந்த அழகு போன்றவை இன்றைய படைப்பாளிக்கு பாடமாகும்.
இது 1950ல் வந்த படம். பக்ஷிராஜா ஃபில்ம்ஸ் சார்பாக ஸ்ரீராமுலு நாயுடு எடுத்த படம். சில ஆண்டுகள் கழித்து இதே தீமின் அடிப்படையில் சிவாஜி நடிப்பில் ஞான ஒளி என்ற படம் வந்தது.. இரண்டு ஆடுகள் வெவ்வேறு திசையில் சென்றன..மீண்டும் சந்தித்தபோது , பேச முடியவில்லையேஏஏஏஏ
என்பது போல வசன அடிப்படையில் அந்த படம் வெற்றி பெற்றது..
இந்த படம் காட்சி ரீதியாக மனதை கொள்ளை கொள்கிறது. பாதிரியாரும் கந்தனும் பேசும் காட்சி வரும். அதில் இருவரும் வெவ்வேறு உணர்வு நிலையில் இருப்பதை காட்டுவது போல இருவரும் ஃப்ரேமின் இரு எக்ஸ்டீரிமில் இருப்பார்கள், சிம்மட்ரிக்கலாக காட்சி இருக்கும், நடுவில் இயேசுனாதர் படம் இருக்கும். இது போன்ற எக்ஸ்டீம் உணர்வுகளை சொல்லும் காட்சிகள் ஆங்காங்கு வருகின்றன…
தண்டனையா விடுதலையா
நம்பலாமா வேண்டாமா
பாதிரியார் பேசும்போது அவர் பின்னணியில் தெரியும் இயேசுவின் படம் ஆழமான அர்த்தம் கொடுக்கும்.
மன்னிக்கவோ தண்டிக்கவோ நாம் யார்?
ஒரே காட்சியில் அம்பலவாணன் , லட்சுமி , உமா காந்த் ஆகியோர் சில காட்சிகளில் வந்தாலும் அம்பலவாணனின் பாயிண்ட் ஆஃப் வியூவில் இருவரும் ஒரே ஃப்ரேமில் தோன்ற மாட்டார்கள். ஒரு கட்டத்தில் இருவரையும் அவர் ஏற்றுகொண்டார் என்ற நிலையில் இருவரும் ஒன்றாக காட்டப்படுவார்கள்.. இப்படி கேமராவை தூரிகை ஆக்கி தான் விரும்பும் ஓவியம் தீட்ட முயன்று இருக்கிறார்கள்...
எல்லாவற்றுக்கும் மேலாக காட்சிகளின் கட்டமைப்பு, தேவையின்றி ஒரு சீன் கூட இல்லை.ஒன்றின் தொடர்ச்சியாக இன்னொன்று..அதன் தொடர்ச்சியாக இன்னொன்று என அழகாக செல்கிறது கதை.
மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான் என்கிறாள் அக்கா.. அடுத்த காட்சியில் மழை...அதன் விளைவாக அடுத்த காட்சி என இரு காட்சிகளின் இணைப்பு ரசிக்கும்படி இருக்கிறது.
கஷ்டப்பட்டு அக்கா பெண்ணை கண்டு பிடிக்கிறார் தயாளன்.. அப்பாடா , இனி பிரச்சனையே இல்லை என்கிறார்.. வெளியே நிழல் தெரிகிறது..ஜாவர் நுழைகிறார். அதன் விளைவாக அடுத்த காட்சி என கற்க வேண்டியவை படத்தில் நிறைய இருக்கின்றன.
பாதிரியார் வீட்டில் கந்தன் திருடிவிடுகிறான்.. அவனை போலிசார் பிடித்து பாதிரியாரிடம் அழைத்து வருகிறார்கள்... நான் தான் எல்லாவற்றையும் கொடுத்தேன். பாவம் அவசரத்தில் இந்த விளக்கை விட்டுவிட்டு சென்று விட்டார் என விளக்கை கொடுக்கிறார் பாதிரியார்... அழகான சிறுகதை. அந்த விளக்கு படம் முழுக்க ஒரு குறியீடாக வருகிறது.
மொத்தத்தில் இந்த படம் தமிழ் படங்களின் சிகரம் என்று சொல்லலாம்... இதற்காக இயக்குனர் ராம்நாத்துக்கு எவ்வளவு வேண்டுமானாலும் நன்றி சொல்லலாம். காலத்தை மிஞ்சிய அந்த கலைஞனின் காட்சி மொழியிலான விருந்தை காண்பது நம் கண்களுக்கு நாம் கொடுக்கும் கவுரவமாகும்.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |