இதழ்: 11, நாள்: 15- ஐப்பசி -2013 (October)
   
 
  உள்ளடக்கம்
 
உயிர் கொடுக்கும் கலை 8 - ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
திரைமொழி 7 - ராஜேஷ்

--------------------------------

எழுத்தாளர்களும் தமிழ் சினிமாவும் – தியோடர் பாஸ்கரன்

--------------------------------
அச்சிலிருந்து திரைக்கு – தியோடர் பாஸ்கரன்
--------------------------------
மெட்ராஸ் கஃபே - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
சினிமாவும் இலக்கியமும் - சாஹித்ய அகாடெமி கருத்தரங்கு - இரா.குமரகுருபரன்
--------------------------------
To Live - வாழ்வென்பது யாதெனில்!! - தினேஷ்
--------------------------------
ஏழை படும் பாடு – காட்சிமொழியால் தீட்டிய ஓவியம் - பிச்சைக்காரன்
--------------------------------
சிறுகதையிலிருந்து உருவான குறும்படங்கள் - தினேஷ்
--------------------------------
நாவலில் இருந்து படமாக்கப்பட்ட திரைப்படங்கள் பட்டியல். - தினேஷ்
 
   

   

 

 

To Live - வாழ்வென்பது யாதெனில்!!

- தினேஷ்

கணவன்:
ஏன் அழுகின்றாய்? என்ன தப்பு நடந்தது?
அழாதே., உன் வயிற்றில் வளருகின்ற கருவிற்கு ஆகாது.

மனைவி: நான் கருவுற்ற பிறகு, சூதாட மாட்டேன் என்று சொன்னீர்களே?

கணவன்: யார் சூதாட சென்றது?
சும்மா வேடிக்கை பார்க்கலாமென்றுதான் இரவு அங்கு சென்றிருந்தேன்.

மனைவி: ஒவ்வொரு நாளும் உங்களுக்கு சொல்லி வருகின்றேன். ஆனால் நீங்கள் கேட்கவில்லை. தயவு செய்து சூதாடுவதை விட்டுவிடுங்கள்.

மகள் வளர்ந்து விட்டாள், இன்னொன்றும் கருவில் இருக்கின்றது.

உங்களிடம் நான் அதிகமாக கேட்கவில்லை, சூதாடுவதை நிறுத்திவிட்டு சாதாரண வாழ்வு நடத்தினால் போதும்.

நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு முக்கியமானது, சூதாட்டமா? குடும்பமா?

சொல்லுங்கள்

மனைவி சொல்வதை கவனியாது, கணவன் அலுப்பில் மெத்தையில் தூங்கிவிடுகின்றான்.

(காலம் கடந்த நிலையில் கணவனும், மனைவியும், தாத்தாவாகவும் பாட்டியாகவும் ஆன பின்பு தங்கள் பேரனுடன் உரையாடுகின்றனர். பேரன் விளையாட கோழிக்குஞ்சுகளை ஒரு மரப்பெட்டியில் வைத்தபடியே, தாத்தா பேசுகின்றார்,)
பேரன்: கோழிகள் எப்ப வளர்ந்து பெரிதாகும்.

பாட்டி: கூடிய சீக்கிரமே.

பேரன்: அப்புறம்.

தாத்தா: ம்ம்ம். அப்புறம்...,
கோழிகள் ஆடுகளாக மாறும்.

பின்னர் ஆடுகள், எருதுகளாக மாறும்.

பேரன்: எருதுக்கு பின்னர்?

தாத்தா: எருதுக்கு பின்???

பாட்டி: எருதுக்கு பின்,
பேரன் பெரியவனாகிவிடுவான்.

பேரன்: நான் பெரியவனானவுடன், எருதில் சவாரி செய்வேன்.

தாத்தா: நீ எருதில் எல்லாம், சவாரி செய்ய வேண்டாம்,

நீ பெரிய பெரிய விமானங்களிலும், இரயிலிலும் பயணம் செய்வாய்.
வாழ்க்கை சிறப்பினும், சிறப்பாக இருக்கும்.

என்பதுடன் TO LIVE படம் முடிகின்றது. அதாவது முதலில் சூதாடுபவனாக பொறுப்பில்லாமல் இருப்பவன், இறுதியாக வாழ்வில் தன் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்கின்றான், என்பதை இவ்விரு காட்சிகளின் துணைகொண்டு எளிதாக அனுமானிக்க முடிகின்றது. ஆனால், இவ்விரு காட்சிகளுக்கும் இடையே நிகழ்ந்துள்ள வாழ்விற்கான எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும், சுய வெறுப்பும், கழிவிரக்கமும், மகிழ்ச்சியும், பெருமிதமும் நிறைந்தது தான் இப்படம்.

இளம் வயதிலேயே சூதாட்டத்தில் ஈடுபட்டு சொத்துக்களையெல்லாம் இழந்த காரணத்தினால் fuguiனுடைய தந்தை இறந்துவிடுகின்றார், சிறிது நாட்களில் அவனது அம்மாவும் இறந்துவிடுகின்றாள், fuguiன் குழந்தை youqing விபத்தில் இறந்துவிடுகின்றான், இரண்டாவது குழந்தை பேசும் திறனை இழந்து ஊமையாகி விடுகின்றாள். எனினும் அவளுக்கும் கல்யாணம் ஆகின்றது, ஆனால் அவளுக்கு வாய்த்த கணவன் சரியாக நடக்க முடியாதவனாக இருக்கின்றான். நாட்கள் கடக்கையில் அவளும் கர்ப்பமாக இருந்து குழந்தை பிறக்கும்பொழுது அதிகப்படியான உதிரப்போக்கின் காரணமாக ஊமைப்பெண்ணும் காலமாகிவிடுகின்றாள். என்ன நடந்தாலும் வாழ்க்கை தன் பாதையில் பயணித்துக்கொண்டேயிருக்கின்றது, அதற்கு பயந்து எங்கும் நீ ஓடி ஒளிந்துகொள்ளாதே, நீயும் அதனுடன் பயணப்படு”.

இதுதான் இப்படத்தின் கதையென்றால் எவரும் இப்படம் திரையிட்டிருக்கின்ற தியேட்டர்களுக்கு நெருங்கவே தயங்குவார்கள்.

என்ற சமன்பாட்டை மனதில் ஏற்றிவிட்டு, ஒரு டஜன் கைக்குட்டைகளை ஆர்டர் செய்து தியேட்டர்களுக்குள் நுழைகின்ற வேந்தர்களும் இருக்க வாய்ப்புண்டு.
ஆனால், ஒரு டஜன் கைக்குட்டைகளுக்கும் வாய்ப்பளிக்க, இப்படம் தொடர்பாக இரண்டு விஷயங்கள் குறுக்கே நிற்கின்றன.

முதலாவது, இப்படம் வெளிவந்தது 1994 ஆம் வருடம், வெளிவர தயாராகயிருக்கின்ற திரைப்படங்களுக்கே திரையரங்குகள் கிடைக்காத நிலையில் to live படத்தை தியேட்டர்களில் பார்க்க காத்திருப்புகளுக்கான வருடங்களின் எண்ணிக்கை அதிக எண்ணிக்கையில் இருக்கலாம்..

இரண்டாவது, to live முழுக்க முழுக்க அழுகாச்சி காவியமே அல்ல. இப்படத்தை பார்க்கின்ற சமயத்தில் மனதின் நெகிழ்ச்சியை உங்களால் உணரமுடியுமே தவிர, குப்புறபடுத்து அழுகவைக்கின்ற சந்தர்ப்பத்தை தராது. உடைந்த மனக்கட்டுக்களை, ஒட்டவைக்கும் பசையாக செயலாற்றி, வாழ்விற்கான புதிய பரிமாணத்தை திறந்தவிடுகின்ற திறவுகோலாக இது அமையுமென்பதில் ஐயத்தினும் ஐயமில்லை.

இப்படிப்பட்ட தேர்ந்த படைப்புகளை மீட்ட ஏதேனும் ஆதார ஸ்ருதி இருந்தால்தான் முடியும். அப்படியாக இப்படைப்பிற்கான மூலாதாரம் “to live” எனும் நாவல். ஆமாம், இப்படம் yu hua எழுதிய to live என்னும் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். நாவலிலிருந்து சினிமா உருவானால் சிறப்பானதாக அமையுமென்பதற்கு இப்படமும் சான்று. அதனை நேர்த்தியாக வடிவெடுக்க சிறப்பான இயக்குனரால்தான் முடியுமென்பதற்கு zhang yimouதான் நல்லதொரு உதாரணம். இவரது படங்கள் பெரும்பாலும் நாவல்களை அடிப்படையாக வைத்ததாகயிருக்கும். மேலும், இவர் நாவலை அப்படியே படமாக்கவில்லை, அதிலிருந்து சினிமாவிற்கான மாற்றங்களைச்செய்த பின்பே அதனை செவ்வகச்சட்டகங்களுக்குள் அடைத்திருக்கின்றார்.

இந்தக் கட்டுரை எழுதும் முன்பு இரண்டு படங்களை பார்க்க நேரிட்டது. ஒன்று not one less அடுத்தது to live. இவற்றில் இறுதியாக to live பற்றி எழுதலாம் என்று முடிவானாலும், இவ்விரண்டு படங்களின் இயக்குனரும் ஒருவர்தான். அவர்தான் zhang yimou.

ஒரு கைதேர்ந்த இயக்குனரின் படைப்பு இதுவென்பது, இயக்குனரைப்பற்றிய தரவுகளைக் காணும்போது தெரிகின்றது. Zhang yimou சீன தேசத்து தவிர்க்க இயலாத படைப்பாளி. ஒளிப்பதிவாளராகவும், தயாரிப்பாளராகவும் , நடிகராகவும் , இயக்குனராகவும் தன்னளவில் இயன்ற பங்கினை சினிமாவிற்கு வழங்கி வருகின்றார். தன் பாணியிலான படங்களாக இவர் எதையும் நிர்ணயித்துக்கொள்ளவில்லை. To live படத்தில் யதார்த்த மீறலான ஒரு இடத்தையும் நீங்கள் காணவியலாது, fugui, பொம்மலாட்டக்கலைஞர்கள் மத்தியில் பாடும் பாட்டு, மனைவியானவளின் இயல்பான வயதானவர்களுக்குரிய தோற்றம், ஊமைப்பெண்ணின் தேர்ந்த முகம், சிறு வயது சிறுவர்களுக்கேயுண்டான அடம், நண்பர்கள் சூழ கல்யாணம் என அனைத்திலுமே தாம் தம் வாழ்க்கையோடு தொடர்புடைய பதிவுகளாகத்தான் இருக்கும்.

எங்கோ தூரத்து தேசத்திலோ, வேற்று கிரகத்திலோ நடப்பதுபோலயில்லை, நமக்கும், நாம் பார்த்து வளர்ந்த ஒவ்வொரு குடும்பத்திலும் காணக்கிடைக்கின்ற காட்சிகள்தான். சமகாலத்தை ஒருங்கே நேர்மையாக பிரதிபலிக்கின்ற படைப்புகளெல்லாம் காலத்தால் அழியாது இப்படத்தைப்போல பேசப்படுகின்றன.

அப்படியாக இப்படத்தினையும் zhang yimou யின் படமேயான ’HERO’வையும் எடுத்துக்கொண்டால், நேரெதிர் பிம்பங்கள்தான்.

’Hero’ படத்தில் துடைத்தெடுக்கப்பட்ட காமிராவினால் காட்சியாக்கப்பட்டதைப்போல தெளிவான ஒளிப்பதிவென்பது அழகிற்கே முக்கியத்துவம் கொடுத்து அமைக்கப்பட்டிருக்கும், மேலும் காட்சியில் இருவர் ஆக்ரோஷமாக சண்டைபோட்டுக்கொள்கின்றனர் என்றால், விண்ணிலிருந்து பத்தடிக்கு எம்பிக் குதிக்கும் ஆற்றல் பெற்றவர்களாகயிருக்கின்றனர் இப்படத்தின் கதாபாத்திரங்கள். மேலும், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு பறந்தே சென்றுவிடும் ஆற்றலும் உண்டு. இது முற்றிலும் யதார்த்த மீறலான படம், ஆனால் இது மாதிரியான படங்களையும் எடுத்தவர்தான் இயக்குனர் zhang yimou. தனக்கான ஒரு குறுகிய எல்லைக்கோட்டை வரையறுத்துக்கொண்டு, அதற்குள்ளேயே விளையாடிக்கொண்டிருக்காமல், கோடுகளை விசாலப்படுத்தி வைத்திருப்பவர். இவரது அதிக பொருட்செலவிலான படங்களும், சினிமாவிற்குண்டான நேர்த்தியையும், ஒழுங்கையும் தவறாமல் கடைப்பிடித்திருக்கின்றன.

To live படத்தில் பெரும்பாலும் மென்மையான புல்லாங்குழல் இசைதான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அவ்விசையும் வெளிப்படுகின்ற தருணம் நோக்கி, காவல் காத்து, தக்க சமயம் பார்த்து வெளிவந்து, காட்சிக்கு வலிமை சேர்க்கும் விதமாக இயைந்துள்ளது.

கதையை முன்னகர்த்த பயன்படுகின்ற சிறு சிறு நுணுக்கங்களையும் இயக்குனர் சிரத்தையுடன் காட்சிக்குள் இழுத்து வந்திருக்கின்றார். எந்த விஷயத்திற்கும் கவலைப்படாதவனாக ஆரம்ப காலத்தைய fugui இருக்கின்றான் என்பதனை அவன் கையெழுத்திடும்பொழுது வெளிப்படுத்துகின்ற முக பாவனையில் நமக்கு புரிந்துவிடுகின்றது. அதேபோல fugui சொகுசாக வாழ்கின்றான் என்பதனைக் காண்பிக்க, ஒரு குண்டான ஆசாமியின் முதுகில் தான் அவன் சவாரி செய்து வீட்டிற்கே வருகின்றான்.

அவனே சொத்துகள் அனைத்தையும் இழந்து வருகின்ற சமயத்தில் அவனது தளர்ந்த நடையையும், தொய்வடைந்த கைகளையும் குறிப்பிடும்படியாக சொல்லலாம். பின்னர் அந்த ஒட்டுமொத்த குண்டர்களையும் நாற்காலியால் அடித்து துரத்தி விடுகின்றான்.

இத்தனை பணத்தையும், சொத்துக்களையும் இழந்துவிட்டோமே என்ற எண்ணத்தையும் அடுத்தடுத்த காட்சிகளில் கதையின் போக்கில் காண இயலவில்லை. பகட்டான உணவுகளை பார்த்து ஏக்கப்பார்வையோ, ஏகபோக உடைகளைப்பார்த்து ஆதங்கமோ எதுவுமே தெரியவில்லை. போதும் என்ற அளவிற்கு அனுபவித்த பணம்தான், என்பதால் அதனை ஒரு பொருட்டாகவே அந்த தம்பதியர் மதிப்பதாகத் தெரியவில்லை. நாங்கள் மிகவும் கஷ்டப்படுகின்ற குடும்பம் என்று முகத்தை பாவமாக வைத்துக்கொள்ளும் போலி வேஷங்களும் இல்லை. இதனையெல்லாம் வைத்து பார்க்கும் சமயத்தில் கதை எதை கேட்கின்றதோ, அதனை மட்டுமே கொடுத்திருக்கின்றார் இயக்குனர். வாழ்வில் கஷ்டப்படுகின்ற குடும்பங்களுக்கும், அவர்களுக்குரித்தான சந்தோஷங்கள் சூழ்ந்திருக்கின்றன என்பதைக் குறிக்கும் படம். அதற்கு உதவியிருக்கின்ற, கதையை உள்வாங்கிக்கொண்ட நடிப்புதான் to liveல் நாம் பார்ப்பது.

இப்படத்தில் சிறப்பாக நடித்த காரணத்தினால், சிறந்த நடிகருக்கான கேன்ஸ் விருதினை fugui கதாபாத்திரத்தில் நடித்த ge you பெற்றுள்ளார்.

படம் 1940 களிலிருந்து தொடங்குகின்றது. நடுத்தரவயதுக்காரர்கள் கிழவர்களாக ஆகும்வரை கதை பயணித்தாலும் கொஞ்சமும் கதை ஓரிடத்திலிருந்து இன்னோர் காட்சிக்கு குதித்து அடுத்த பகுதியை அடையவில்லை. ஒவ்வொரு காட்சியும் அடுத்தவருகின்ற காட்சியோடு கோர்வையாக பயணிக்கின்றது. இப்படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் சமயத்திலும் ஒவ்வொரு விஷயத்தை கற்றுக்கொள்ளலாம் என்பது உறுதி.

பிரம்மாண்டத்திற்கான வெவ்வேறு அடையாளங்களை தன் மனத்தில் வைத்துள்ளவர்கள், இப்படத்தில் வருகின்ற ஒரு காட்சியினை காண வேண்டும். கதையோடு இழைகின்ற பிரம்மாண்டம். எதிரிப்படையிலுள்ள நூற்றுக்கணக்கான வீரர்களால் fugui துரத்தப்படுகின்ற காட்சியானது பிரம்மாண்டமான தோற்றத்திலும், ஒவ்வொரு காட்சியுமே அதற்குரிய இலக்கணத்தோடும் பதிவாக்கப்பட்டிருக்கின்றது. படத்தில் இருக்கின்ற குழந்தைகளும் அதற்குரிய குழந்தை தனத்தோடுதான் நடந்துகொள்கின்றன. தன் சகோதரியை கல்லால் அடிப்பவரை திருப்பி அடித்து துரத்துகின்றான் youqing., மேலும், சகோதரியை அடித்தவர்களை தக்க சமயத்தில் பலிவாங்க வேண்டுமென்று எண்ணியிருக்கும் youqingவின் பார்வையில், சகோதரியை அடித்தவன் தென்படுகின்றான். எனவே தட்டு நிறைய உணவை வாங்கிக்கொள்ளும் youqing, சாப்பிட்டுக்கொண்டிருக்கின்ற அவனின் தலையில் கொட்டுகின்றான். இதுதான் குழந்தையின் செய்கை. இதற்காக youqingன் அப்பா fugui அவனைக் கடுமையாக கண்டித்துவிட்டு, கூட்டத்திலேயே அடிக்கின்றார். இதனால் fugui மீது கோபம் கொண்டு சிறுவனான youqing பேச மறுத்துவிடுகின்றான்.

பின்னர் அங்கு நடக்கின்ற பொம்மலாட்ட நிகழ்ச்சி தந்தையின் தலைமையில் நடந்துகொண்டிருக்கின்றது. இதனையறிந்து அப்பாவை தண்டிக்க வேண்டுமென்று எண்ணி அம்மாவின் யோசனையின்படி, அப்பாவிற்கு மிளகாய்பொடியை தேநீரில் கலந்து கொடுத்துவிடுகின்றான். ஆனால், நம்மூர் சினிமாவில் வாழ்கின்ற குழந்தைகள் பிஞ்சிலேயே பழுத்துவிட்டு விஷமத்தனமான வேலைகளைச் செய்வதில் நம்பர் 1. காதலுக்கு ஐடியாக்கள் கொடுப்பது, அரட்டை அரங்கத்தில் வருவதுபோல வயசுக்கு மீறி பேசுவது, பெரியவர்களுக்கு அட்வைஸ் கொடுப்பது இதையெல்லாம் செய்வதில்தான் மும்மரம்.

படத்தில் கருத்து சொல்லவேண்டும் என்று வரிந்துகட்டிக்கொண்டு எதனையும் சொல்லவில்லை. ஆனால் படம் எந்த விஷயத்தை போதிக்கின்றது என்பது சாமான்யருக்கும் தெரிந்துவிடுவதாக உள்ளது. இதுதான் அப்படத்திற்கான நியாயமான வெற்றி. ஆனால், இப்படம் ஏற்படுத்திய சர்ச்சைகளால் சீன அரசாங்கத்தாலேயே இப்படமும், இயக்குனரும், நடிகரும் இரண்டு வருடங்களுக்கு படமெடுக்கவோ, திரையிடவோ, தடை செய்யப்பட்டனர். ஆனால், அதற்குள் இடைப்பட்ட காலத்தை தனக்கான பயிற்சிக்காக வைத்துக்கொண்டதில் அடுத்தடுத்து The road home, hero, not one less, house of flying daggers முதலான படங்களைக் கொடுத்தார்.

படத்தின் இரண்டாம் பாதியில் மகிழ்ச்சிக்குரிய தருணங்கள் அநேகமாக பரவி நிற்கின்றன. ஆனால் அந்த மகிழ்ச்சியான சம்பவங்கள் எல்லாமே, இறுதியில் மகளுக்கு (fengxia) நடக்கவிருக்கின்ற துர்பாக்கியத்திற்கான மன தேற்றுதல்கள் என்பது கதாபாத்திரத்திற்கும், பார்க்கின்ற நமக்கும் புரிய தாமதமாகின்றது.

நாம் அடிக்கடி கூறுவது போல வாழ்வில் இன்பமும், துன்பமும் மாறி வரும் என்பது இப்படத்திற்கே பொருந்தும். ஆனால், இதனை சரியான திரைக்கதை யுக்தி என்றுதான் சொல்ல வேண்டும்.

அப்படியாக பிரசவத்தில் மகள் இறந்த பின்னும், மற்றவர்கள் ஒன்றும் வாழ்வில் நொடிந்து போய் மூலையில் உட்கார்ந்துவிடவில்லை. உணர்ச்சிகரமான கட்டத்தில் கூட இயல்பான சம்பவங்களையும் சேர்த்தே வைத்திருக்கின்றார் இயக்குனர். அதாவது, மகளுக்கு பிரசவம் நடக்கின்றது, அவளுக்கு பிரசவம் பார்க்கின்றவர்கள் மேல் தாயானவாளுக்கு நம்பிக்கையில்லை, காரணம் மகள் (fengxia) பேசும் திறனை அறவே இழந்திருக்கின்ற காரணத்தினால், சிகிச்சை சமயத்தில் மகளின் நிலையை சரியாக இளம் மருத்துவர்களால் புரிந்துகொள்ள இயலாது என்பது அவள் எண்ணம். எனவே, fengxiaவின் குடும்பத்தினர், வயதில் முதிர்ந்த அனுபமுள்ள மருத்துவர் இன்னொருவரை அழைத்து வருகின்றனர். ஆனால், அவரோ பஞ்சப் பரதேசியாக சாப்பாட்டிற்கு வழியில்லாத பக்கிரியாக வந்துசேர்கின்றார், அவரைப் பார்த்து பரிதாபமடைந்து அவருக்கு உதவும் நோக்கத்தில் பன் (bread) தின்பதற்கு வாங்கி கொடுக்கின்றார் fugui. பூரிப்பில் இருந்த காரணத்தினாலோ என்னவோ, வயசாலிக்கு மொத்தம் ஏழு பன்கள் வாங்கி கொடுக்கின்றார். ஆனால், அந்தக் கிழவர் ஏழு பன்களையும் தின்று ஏப்பம் விட்டு விடுகின்றார்.

அந்நேரத்தில் தான் மகளுக்கு பிரசவத்தின் காரணமாக அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்பட்டுவிடுகின்றது. அவளுக்கு பிரசவம் பார்த்தவர்களும், போதிய பயிற்சியின்றி அனுப்பப்பட்டவர்கள் என்பது அப்போது தெரிந்தவுடன், இப்போதைய இவர்களது ஒரே நம்பிக்கை, அந்தப் பெரியவர்தான், ஆனால் அவரோ அந்த ஏழு பன்களையும் தின்றுவிட்டிருந்த காரணத்தினால், மூச்சு விட முடியாமல் திணறித் தவிக்கின்றார்.

என்ன செய்ய?

மகளைக்காப்பாற்றியாக வேண்டுமே, என்ற எண்ணத்தில் பெரியவரது மூச்சுத்திணறலை தவிர்க்க அவருக்கு தண்ணீர் கொடுக்கப்படுகின்றது. ஆனால், அதற்கும் பயனில்லை, அதற்குள் மகள் இறந்துவிடுகின்றாள். படத்திலேயே அதி முக்கியத்துவம் வாய்ந்த காட்சியானாலும், அவ்விடத்தில் நகைச்சுவை வைப்பதற்கும் துணிச்சல் வேண்டும். காரணம், இவ்வளவு நேரமாக அரும்பாடுபட்டு வளர்த்தெடுத்த திரைப்படமும் இம்மாதிரியான அபத்தங்களால் சிதறுண்டுவிடும். ஆனால் அதனை இயல்பானதாக மாற்றியதில்தான் To live நினைவில் நிற்கின்றது.

அவருக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறிலின் பொழுது, தண்ணீர் கொடுத்ததற்கான மடத்தனத்தை பிற்பாடு அந்தக்குடும்பமே ஆச்சர்யத்துடன் பேசி வருகின்றனர். ஒரு பன் (bread) ஆனது தண்ணீர் குடிக்க அது ஏழு பன்களுக்கு சமமாகுமாம். ஆனால், இவர் தின்றதோ மொத்தம் ஏழு பன்கள், அது ஏழாம் வாய்ப்பாட்டின் படி 49 ஆகின்றது. ஆக, 49 பன்களை வயிற்றில் நிரப்பிக்கொண்டு அவதிப்பட்டிருக்கின்றார் அந்த முதியவர்.

இப்படம் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களுக்காகவோ, நாட்டிற்காகவோ, எடுக்கப்பட்டதாகயில்லாமல் உலகப்பொதுவான விஷயத்தை மையப்படுத்தியிருப்பதால், வசனங்கள் புரியாவிட்டாலும் காட்சிகளின் வாயிலாக படத்தை முழுவதுமாக புரிந்துகொள்ள முடியும். படத்தின் கருவும் எல்லா ஊர் மக்களுக்கும் பொதுவான ஒன்றுதான், இதனை அங்கீகரித்துக்கொள்ள அவர்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது.

உங்கள் வாழ்க்கையில் சிறந்தது என்ற பட்டியலை நீங்கள் பின்பற்றி வருவீர்களேயானால், அதில் இந்த படமும் இணைந்துகொள்ள அனைத்து தகுதிகளையும் வாய்க்கப்பற்றதுதான், to live.

செல்வச்சீமான்களின் சடலத்தோடு புதைக்கப்பட்டதில்லை, இனிமையான வாழ்வின் ரகசியம். மண்ணில் இன்னமும் துளிர்விட எத்தனிக்கின்ற ஒவ்வொரு மனித உள்ளத்திற்குள்ளும் உறைந்துபோய் கிடக்கின்றது, அவரவரின் மனநிலைக்கு ஏற்ப.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </