இதழ்: 11, நாள்: 15- ஐப்பசி -2013 (October)
   
 
  உள்ளடக்கம்
 
உயிர் கொடுக்கும் கலை 8 - ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
திரைமொழி 7 - ராஜேஷ்

--------------------------------

எழுத்தாளர்களும் தமிழ் சினிமாவும் – தியோடர் பாஸ்கரன்

--------------------------------
அச்சிலிருந்து திரைக்கு – தியோடர் பாஸ்கரன்
--------------------------------
மெட்ராஸ் கஃபே - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
சினிமாவும் இலக்கியமும் - சாஹித்ய அகாடெமி கருத்தரங்கு - இரா.குமரகுருபரன்
--------------------------------
To Live - வாழ்வென்பது யாதெனில்!! - தினேஷ்
--------------------------------
ஏழை படும் பாடு – காட்சிமொழியால் தீட்டிய ஓவியம் - பிச்சைக்காரன்
--------------------------------
சிறுகதையிலிருந்து உருவான குறும்படங்கள் - தினேஷ்
--------------------------------
நாவலில் இருந்து படமாக்கப்பட்ட திரைப்படங்கள் பட்டியல். - தினேஷ்
 
   

   

 

 

எழுத்தாளர்களும் தமிழ் சினிமாவும் – தியோடர் பாஸ்கரன்

- தியடோர் பாஸ்கரன், தட்டச்சு உதவி: தினேஷ்.

தியடோர் பாஸ்கரனின் "மீதி வெள்ளித் திரையில்" என்கிற நூலில் இந்தக் கட்டுரை வெளிவந்துள்ளது. காலச்சுவடு பதிப்பகம் இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

எழுத்தாளர்களும் தமிழ் சினிமாவும் – தியோடர் பாஸ்கரன்

தற்காலத் தமிழ் இலக்கியம் அடைந்திருக்கும் நிலையுடன் ஒப்பிடும்போது, தமிழ் சினிமா அந்த அளவுக்கு வளரவில்லையே. ஏன்? முற்றிலும் புதிய இந்த கலை வடிவம் தமிழ் எழுத்தாளர்களால் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது? இவ்வூடகத்தின் வளர்ச்சிக்கு தமிழ் எழுத்தாளர்களின் பங்களிப்பு என்னவாக இருந்திருக்கின்றது? இன்றைய நிலை என்ன?

திரைப்படம் ஒரு பொழுதுபோக்கு உபகரணமாக தமிழ் நாட்டில் தோன்றிய சமயத்தில்தான் தொழிலாளி வர்க்கம் என்ற ஒரு மக்கள் பகுதி உருவாக்கிக்கொண்டிருந்தது. துணி ஆலைகள், தொடர்வண்டி போக்குவரத்து முதலியன தோன்றிய சமயம், மக்கள் திரள் சமுதாயம் தோன்ற ஆரம்பித்த காலகட்டம். இந்த புதிய தொழிலாளர் சமூகத்தை , ஜாதி, வர்க்க பேதமில்லாமல் எல்லாரும் கூடமுடிந்த திரை அரங்கு, வசீகரித்தது. 1900ல் முதல் திரையரங்கு சென்னையில் உருவானது. பல கூடாரக் கொட்டகைகளும் இருந்தன. யாவரும், பாகுபாடின்றி பார்த்து அனுபவிக்கக்கூடிய ஒரு பொழுதுபோக்குச் சாதனமாகச் சலனப்படம் பரிணமித்தது. சமூகத்தின் எல்லா அடுக்களிலிருந்த மக்களும், கலாச்சார வரம்புகளை மீறி ஒருங்கே கூடக்கூடிய ஒரு ஜனநாயக பொது இடமாக உருவானது. இம்மாதிரியான கூடுகை தமிழ்ச்சமுதாயத்திற்கே முற்றிலும் ஒரு புதிய நிகழ்வு.

ஆனால் சினிமாவின் வரவை, உயர்வர்க்கம், மத்தியதர மக்கள், படித்தவர்கள் வரவேற்கவில்லை, கண்டு கொள்ளவுமில்லை. சினிமாவை ஒரு கீழ்க்கலாச்சார வெளிப்பாடு என்றே கருதினார்கள். அன்றைய எழுத்தாளர்களும் இந்த மேட்டுக்குடி நோக்கையே பின்பற்றினார்கள். இந்த புதிய கலை வடிவின் இயல்புகளைப் புரிந்துகொள்ள அவர்கள் எந்தவித முயற்சிகளும் எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. சினிமா பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனாலும் அதைப்பற்றி எழுதுவோர் யாருமில்லை. சினிமா பற்றி அறிவார்ந்த ரசனை உருவாகாமல் புலனார்ந்த ரசனையே வளர்ந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.

தமிழ் சினிமாவின் மெளன சகாப்தத்தைப்பற்றி அன்றைய எழுத்தாளர்கள் எந்தப் பதிவும் செய்யவில்லை என்பதை சமகாலத்துப் பத்திரிக்கைகளைப் பார்க்கும்போது நாம் அறிகிறோம். 1904 முதல் 1908 வரை சென்னையில் வசித்த பாரதி, சினிமாவைப் பற்றி எந்தக் குறிப்பும் விட்டுச்செல்லவில்லை. எலக்ட்ரிக் தியேட்டர் மெளண்ட் ரோடில் இயங்கிக்கொண்டிருந்த காலம், 1916ல் சென்னையில் முதல் ஸ்டுடியோ நிறுவப்பட்டு, பல படங்கள் தயாரிக்கப்பட்டன. பத்திரிக்கையில் பணியாற்றிய பாரதி இந்த அதிசயக் கலைவடிவம் பற்றி, அதிலும் சென்னையில் தயாரிக்கப்பட்ட படங்களைப்பற்றி பல செய்திகளைப் படித்திருப்பார் என்று நம்பலாம். எனினும் சினிமாவின் இருப்பைப் பற்றி அவர் எந்த குறிப்பும் விட்டுச்செல்லவில்லை. 1910ல் சென்னையில் முதன்முதலாக விமானம் தீவுத்திடலில் வந்திறங்கிய செய்தியை படத்துடன் வெளியிட்டார். (இந்தியா 19.02.1910) ஆனால் அசையும் படம் என்றோ அந்த அற்புதத்தையோ அல்லது புதிய கலையையோ அவர் பொருட்படுத்தவில்லை என்றே கொள்ள வேண்டியுள்ளது. 1916 சென்னையில் முதல் திரைப்படத்தை நடராஜ முதலியார் தயாரித்து வெளியிட்டதையும் யாரும் கண்டுகொள்ளவில்லை. அதே காலகட்டத்தில் பத்திரிகை நடத்தி கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்த அ. மாதவையாவும் சினிமா பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. அவரது பத்மாவதி சரித்திரம் நாவலில் அரங்கு பற்றிய வர்ணனை ஒன்றுள்ளது.

படம் பேச ஆரம்பித்த பின்னரும் இதே கண்ணோட்டம் தொடர்வதைக் காண்கிறோம். ஆனால் சினிமா வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. இனியும் இதைக் காணாததுபோல் இருக்க முடியாது என்று உணர்ந்த எழுத்தாளர்கள் பலர் அதை எதிர்க்க ஆரம்பித்தனர். சினிமா ஒரு தீமையான பொழுதுபோக்கே என்று கூறிய காந்தியடிகள், சமூகத்தை சீரழிக்கும் நஞ்சாக சினிமாவைக் கண்ட இராஜாஜி போன்ற தலைவர்களின் நோக்கையே இவர்கள் பிரதிபலித்தார்கள். சினிமாவின் இயல்புகளை, தனித்தன்மைகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்காமல், அதை குறை சொல்வதிலேயே எழுத்தாளர்கள் கவனம் செலுத்தினார்கள். முப்பதுகளில் வந்த பல கட்டுரைகள் இந்த தொனியிருப்பதைக் காணலாம்.

முப்பதுகளின் பிற்பகுதிகளில் கர்நாடகா இசை மேதைகள் பலர் திரையுலகிற்குள் நுழைந்தது, சில எழுத்தாளர்கள் நோக்கில் தமிழ் சினிமாவிற்கு ஒரு மரியாதையைக் கொடுத்தது. சினிமாவைப் பற்றி எழுத இயலாவிட்டாலும் தமக்கு பரிச்சயமான கலை வடிவமான கர்நாடக இசை திரையில் இடம் பெற்றதால், அவர்களின் கவனிப்பை இந்த அம்சம் பெற்றது. எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற இசைக் கலைஞர்கள் நடித்த படங்கள் நல்ல விமர்சனங்களைப் பெற்றன. பார்வையாளர்களும் ஒரு சங்கீத கச்சேரிக்குப் போவது போல் சினிமாவுக்குச் சென்று வந்தார்கள்.

இதே காலகட்டத்தில் தமிழ் சினிமா எழுத்தாளர்களின் கவன ஈர்ப்பைப் பெற்றதற்கு மற்றுமொரு காரணம் திரைப்படங்களில், தேசியக் கருத்து பிரதிபலிக்க ஆரம்பித்தது. இரு சகோதரர்கள் (1936) போன்ற படங்களில் காந்தியக் கருதுகோள்கள் இடம்பெற்றன. பின்னர் 1937 முதல் 1939 வரை மதராஸ் ராஜதானியில் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் ஆட்சி வந்தது. இந்த இரண்டு ஆண்டுகள், தணிக்கை இல்லாமலிருந்தது. அப்போது பல தேசிய பிரச்சாரப் படங்கள் வெளிவந்தன. பல நடிகர்கள் சத்யாக்ரகம் போன்ற அரசியல் போராட்டங்களில் பங்கேற்று அரசியலில் நேரடியாக இயங்கினர். எழுத்தாளர்கள் கண்ணோட்டத்தில் இது ஒரு புதிய மரியாதையை சினிமாவிற்குப் பெற்றுத்தந்தது. இத்தகைய தேசியக்கருத்துள்ள படங்களை அவர்கள் போற்றி எழுதியதைக் காண முடிகின்றது.

இதனைத் தொடர்ந்து மணிக்கொடி பத்திரிகையைச் சார்ந்த சில எழுத்தாளர்கள் சினிமாவைக் கூர்ந்து நோக்க ஆரம்பித்தனர். ச.து. ச.யோகி. பி.எஸ்.ராமையா, இளங்கோவன் இதில் அடக்கம். திரையுலகில் இவர்களின் ஈடுபாடு இரண்டு வகையில் அமைந்தது. சினிமாவைப் பற்றி எழுதுவது, இரண்டாவது சினிமாவிற்காக எழுதுவது. இவர்கள் யாவரும் முதலில் கட்டுரைகள் எழுதி பின் கதை, வசனம், எழுத ஆரம்பித்தனர். பி.எஸ்.ராமையா படங்களை இயக்கவும் செய்தார். இவர்களுக்குப் பின்னால் வந்த புதுமைப்பித்தன், ஒருபடி மேலேபோய், சினிமா தயாரிப்பு முயற்சியிலும் ஈடுபட்டார்.

புதுமைப்பித்தன் 1938ஆம் ஆண்டு ஈழகேசரியில் எழுதிய கட்டுரை , சினிமாபற்றிய அவரது அணுகுமுறையைக் காட்டுகின்றது. சினிமாவின் தனித்துவத்தை அவர் அறிந்திருந்தார் என்று தெரிகின்றது. பிம்பங்கள் மூலமல்லாமல் பாத்திரப்பேச்சு மூலம் கதையை நகர்த்தும் வழக்கத்தைப்பற்றி எழுதுகின்றார். 1943ல் மாயாபஜார் என்ற தெலுங்குப் படத்தை விமர்சிக்கையில், “இதை சினிமா என்று சொல்ல முடியாது. படமாக்கப் பட்ட நாடகம்” என்கிறார். ஆரம்ப காலத்தில் கம்பெனி நாடகங்களை முன்கோணத்தில் படமாக்கி, திரைப்படமென்று வெளியிட்டனர். திரைப்படத்திற்கும் நாடகத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் புதுமைப்பித்தன் நன்கு உணர்ந்திருந்தார் என்று தெரிகின்றது. இன்றும் பல இயக்குநர்களுக்கு இந்த வேறுபாடு தெரியவில்லை. புதுமைப்பித்தன் நாடகத்தின் இயல்புகளையும் அறிந்திருக்கிறார். சுத்தானந்த பாரதி எழுதிய நாடகம் ஒன்றை விமர்சிக்கையில், “இது ஓர் சம்பாஷணைக் கோவை, நாடகமல்ல” என்றெழுதினார். இன்றும் பல சபா நாடகங்கள் சம்பாஷணைக் கோவையாக இருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

1947ல் அவர் சினிமா உலகில் நுழைகின்றார். காமவல்லி (1948) என்ற படத்திற்கு வசனம் எழுதினார். பின்னர், புனேயில் ஆறுமாதங்கள் தங்கி ராஜமுக்தி (1948)க்கு கதை, வசனம் எழுதினார். வாக்கும் வக்கும் என்ற அவரது கதையைச் சார்ந்த லட்சுமி விஜயம் என்ற ஒரு படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதினார். ஆனால் இது தயாரிக்கப்பட்டவில்லை. ஒளவையார் (1953)படத்திற்கு திரைக்கதை எழுதினார். திரைக்கு எழுதுவதில் உள்ள பிரச்சனைகளை புதுமைப்பித்தன் அன்கு அறிந்திருந்தார். “பழைய புலவர்களுக்கு வெண்பா புலி என்பது போல, இன்றைய கதை எழுத்தாளர்களுக்கு சினிமா என்ற துறை ஒரு புலி.” பின்னர் பார்வதகுமாரி புரொடக்‌ஷன்ஸ் என்ற கம்பெனியை நிறுவி வசந்தவல்லி என்ற படம் தயாரிக்கப் போவதாக விளம்பரம் செய்தார். எனினும் தமிழ்ச் சினிமாவில் அவரது பங்களிப்பு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.

இந்த காலகட்டத்தில் பெருவாரியான எழுத்தாளர்கள் சினிமாவைத் தாக்கி எழுதுபவர்களும் , திரைப்படங்களை விமர்சனம் செய்ய முற்பட்ட கல்கி போன்ற எழுத்தாளர்களும் சினிமாவை இலக்கிய ரீதியாகவே அணுகினார்கள். திரைப்படங்கள், சினிமா அழகியல் ரீதியாக மதிப்பிடப்படாமல் படத்தின் உள்ளடக்கமான கதை, வசனம், பாட்டு என்று இலக்கிய ரீதியிலேயே எடை போடப்பட்டன. ஒரு அரிய கலை வடிவை விமர்சனங்கள் மூலம் செறிவாக்க முடியும் என்ற பொறுப்புணர்ச்சி காணப்படவில்லை. அகில இந்திய அளவிலும் சினிமாவை ஒரு கவனிப்பிற்குரிய துறையாக பல்கலைக்கழகங்களோ, சமூகவியல் ஆய்வாளர்களோ கருதவில்லை. எழுபதுகளில்தான் இந்த துறையில் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டது.

பின்னர் சிற்றிதழ்கள் காலத்தில் சினிமாவிற்கு சிறிது இடம் தரப்பட்டது. 1955ல் துவங்கப்பட்ட சரஸ்வதி, 1960ல் செல்லப்பா, ஆரம்பித்த எழுத்து, எழுபதுகளில் வெளிவந்த ப்ரக்ஞை, ஜீவா அவர்களின் தாமரை இவைகளில் சினிமா பற்றிய கட்டுரைகள் வெளிவந்தன. ஐரோப்பிய சினிமாவால் கவரப்பட்டவர்களும் இந்திய சினிமாவின் இணை சினிமாவை கவனித்த எழுத்தாளர்களும் இவ்விதழ்களில் எழுதினார்கள்.

பி.எஸ்.ராமையா

இந்த நேரத்தில்தான் 1978ல் சென்னையில் ஒரு முக்கிய நிகழ்வு நடந்தது. புனே திரைப்படக் கல்லூரியும் தேசிய திரைப்பட ஆவண காப்பகமும் இணைந்து சினிமா ரசனைப்பயிற்சி ஒன்றை நடத்தினர். இதுதான் தமிழ்நாட்டில் முதன்முறையாக நடத்தப்பட்ட சினிமா ரசனைப் பயிற்சி. பேராசிரியர் சதீஷ் பகதூரும், ஆவணக்காப்பக இயக்குனர் பி.கே.நாயரும் உரை நிகழ்த்தியும். உலக சினிமாவின் அரிய திரைப்படங்களை திரையிட்டுமொரு புதிய விழிப்பை ஏற்படுத்தினர். மேலும் மூன்று பயிலரங்குகள் சென்னையில் நடத்தப்படன. மதுரையில் யதார்த்தா பிலிம் சொசைட்டி ஆதரவில் ஒரு பயிலரங்கு நடத்தப்பட்டது. சினிமா அழகியல் என்ற புதியதொரு பொருள் தமிழ் எழுத்தாளரக்ளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ப்ரக்ஞை இதழைச்சேர்ந்த ரவிசங்கர், வீராச்சாமி, அலையான்ஸ் ஸ்ரீராம், ந.முத்துச்சாமி, சுந்தர ராமசாமி, சுகுமாரன் முதலியோரும் பயிற்சி பெற்றனர். ஜான் ஆபிரகாமின் அக்கிரகாரத்தில் ஒரு கழுதை விருது பெற்றதும் இந்த ஆண்டுதான். அவரும் இந்த பயிற்சியில் பங்களித்தார். இதே ஆண்டு ஒரு பன்னாட்டு திரைப்பட விழாவும் சென்னையில் நடைபெற்றது.

சுந்தர ராமசாமி சினிமாவைப்பற்றி தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தது இந்த காலகட்டத்தில்தான். எனக்கு அவரது அறிமுகம் கிடைத்ததும் இந்த சமயத்தில்தான். சினிமாவின் சாத்தியக்கூறுகள் பற்றி அவர் அறிந்திருந்தார். தமிழ்சினிமாவைப் பற்றி நாங்கள் பலமுறை பேசியிருக்கின்றோம். சினிமா அழகியல் பற்றி அவருக்கு நல்ல பரிச்சயம் உண்டு. ஒரு கட்டுரையில் அவர் எழுதினார். “நல்ல சினிமா வாழ்க்கையைப் பற்றிய ஒரு அலசலையோ நல்ல விமர்சனத்தையோ, அவ்வாழ்க்கைகளில் , கலைப்பாங்காக முன்வைக்கிறது”. அதேபோல வேறு இடத்தில் “நிகழ்வுகளை காட்சி வடிவமாக அளித்த பின்னும் ஒலி சார்ந்த விளக்கங்கள் இவர்களுக்கு தேவைப்படுகின்றன, என்கிறார். செப்டம்பர் 2000ல் திருநெல்வேலியில் நடந்த தார்வ்க்கோவ்ஸ்கி திரைப்பட விழாவில் பேசும்போது, “பேச்சின் இரைச்சலை மட்டுப்படுத்தி பிம்பங்களின் இணைப்புப் பெறும் நேர்த்தி மூலம் மொழி தாண்டிய அனுபவத்தை நோக்கி விரையும் குறிக்கோள் கொண்டது உலக சினிமாவின் பொதுக்குணம். மொழியைத் தாண்டிய உலகத்துக்குள் நுழையும் சாத்தியம் கொண்டது சினிமா எனும் பிரக்ஞை கூட அற்றது தமிழ் சினிமா. பேச்சின் சளசளப்பு மூலம் கதையைச் சொல்லித் தமிழ் கீழிறக்கம்தான் இன்று வரையிலும் இங்கு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றது.” என்றார்.

இதைத் தொடர்ந்து ப்ரக்ஞை, இனி பின்னர் வந்த சுபமங்களா போன்ற இதழ்களில் சினிமா பற்றிய சில தீர்க்கமான கட்டுரைகள் வர ஆரம்பித்தன. சினிமா அழகியலைப் பற்றி சிலர் எழுத ஆரம்பித்தனர். இன்று அம்ஷன்குமார், திருநாவுக்கரசு, வெங்கடேஷ் சக்ரவர்த்தி, செழியன், பீர் முகம்மது, போன்றோர் சினிமா பற்றி எழுதி வருகிறார்கள்.

இந்த பின்புலத்தில் நம்முன் ஒரு வாதம் வைக்கப்படுகிறது. அதாவது, இந்திய, தமிழ் சினிமாவின் இலக்கணம் , இயல்புகள் தனிப்பட்டவை, ஆகவே இதை வெளிநாட்டு சினிமாக்களுடன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது. சில தமிழ்ப்பட இயக்குனர்களும் இக்கருத்தை அவ்வப்போது வெளிவிடுவதை கேட்கலாம். ஆனால் உலகெங்கும் சினிமா விற்பன்னர்களின் கூற்று வேறு. இலக்கணம், தொடரியல் இவை எல்லா சினிமாவிற்கும் பொதுவானது என்கின்றனர். இந்த இலக்கணம் ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் நீடித்த மெளன சகாப்தத்திலேயே உருவாகிவிட்டது. சினிமா இலக்கணம் கோட்பாடுகள் அப்போதே ஏறக்குறைய முழு உருக்கொண்டுவிட்டன எனலாம். பின் ஒலி, பேச்சு, வண்ணம் இவை பிறகும் இந்த கோட்பாடுகளில் அடிப்படை மாற்றம் ஏதும் இல்லை. ஒவ்வொரு மொழிசார்ந்த கலாச்சாரம் அதனதன் திரைப் படங்களில் வெளிப்படலாம். அந்த சினிமாவிற்கென தனி குணாதிசயங்கள் இருக்கலாம் ஆயினும் அடிப்படை இலக்கணம். அழகியல் எல்லா சினிமாவிற்குமே பொதுவானது.

- டிசம்பர் 2006ல் கோவையில் நடந்த காலச்சுவடு கருத்தரங்கு கட்டுரை.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </