இதழ்: 11, நாள்: 15- ஐப்பசி -2013 (October)
   
 
  உள்ளடக்கம்
 
உயிர் கொடுக்கும் கலை 8 - ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
திரைமொழி 7 - ராஜேஷ்

--------------------------------

எழுத்தாளர்களும் தமிழ் சினிமாவும் – தியோடர் பாஸ்கரன்

--------------------------------
அச்சிலிருந்து திரைக்கு – தியோடர் பாஸ்கரன்
--------------------------------
மெட்ராஸ் கஃபே - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
சினிமாவும் இலக்கியமும் - சாஹித்ய அகாடெமி கருத்தரங்கு - இரா.குமரகுருபரன்
--------------------------------
To Live - வாழ்வென்பது யாதெனில்!! - தினேஷ்
--------------------------------
ஏழை படும் பாடு – காட்சிமொழியால் தீட்டிய ஓவியம் - பிச்சைக்காரன்
--------------------------------
சிறுகதையிலிருந்து உருவான குறும்படங்கள் - தினேஷ்
--------------------------------
நாவலில் இருந்து படமாக்கப்பட்ட திரைப்படங்கள் பட்டியல். - தினேஷ்
 
   

   

 

 

கரிசல் காட்டு பூமியில் 'பூ' மலர்ந்த தருணம்

- எம்.ரிஷான் ஷெரீப்

திருமணம் ஆனால் என்ன? நாம் மனதார விரும்பியவரை அதன் பிறகு வெறுத்துவிட வேண்டுமா என்ன? அவரை சபித்துவிட வேண்டுமா என்ன? ஒருவரை உண்மையாகவே நேசித்திருந்தால் அவ்வாறு அவருக்கு ஒருபோதும் கெடுதல் நினைக்க முடியாது. அவர் எங்கே, யாருடன் வாழ்ந்தாலும் மிகச் சிறப்பாக வாழ வேண்டுமென பிரார்த்திக் கொண்டேயிருக்கும் மனம்.

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தொகுத்திருந்த 'கரிசல்காட்டு சிறுகதைகள்' எனும் தொகுப்பின் முதல் சிறுகதையாக, எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனின் 'வெயிலோடு போய்' சிறுகதை அமைந்திருந்தது. மகிழ்வான திருமண வாழ்க்கை தனக்கு வாய்த்திருந்த போதிலும், தான் மிகவும் நேசித்த, சிறு வயது முதலாக திருமணம் செய்யக் காத்திருந்த ஒருவன், அவனது திருமணத்தின் பின்னர் அவனது மனைவியுடன் மகிழ்ச்சியாக இல்லை என உணர்ந்து வேதனையுறும் ஒரு கிராமத்துப் பெண்ணின் உணர்வுகளை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதை அது.

அதுவரையில் 'சொல்லாமலே', 'ரோஜாக்கூட்டம்', 'டிஷ்யூம்' ஆகிய திரைப்படங்களையெடுத்து இந்தியத் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முன்னணி இயக்குனர்களிலொருவராக தனது பெயரைப் பதித்துக் கொண்ட இயக்குனர் சசி, இச் சிறுகதையைத் தனது அடுத்த திரைப்படமாக்கினார். வெற்றிப்பாதையில் இருக்கும் எந்தவொரு இயக்குனரும் தனது அடுத்த திரைப்படமும் வணிக ரீதியில் வெற்றியடைய வேண்டுமென்றே விரும்புவார். அதற்குப் பொருத்தமான கதையையே அவர் அடுத்த திரைப்படத்துக்காகத் தேர்ந்தெடுப்பார். ஆனால் இங்கு இயக்குனர் சசி வித்தியாசமானவராகத் தெரிகிறார்.

திரைப்படமானது, உச்ச நட்சத்திரங்களாலும், குத்துப் பாடல்களாலும், சண்டைக்காட்சிகளாலும் பூரணப்படுத்தப்பட்டு, ரசிகர்களின் ஆரவாரங்களாலும், பணத்துக்கு விலைபோகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாலும் வெற்றியடைந்ததாகக் காண்பிக்கப்பட்டு, வெற்றித் திரைப்பட இயக்குனராகக் கொண்டாடப்படும் இந்தியத் தமிழ்த் திரைப்படச் சூழலில், இயக்குனர் சசியின் கதையினதும், நடிகர்களினதும் தேர்வினைப் பார்க்கும்போது பணத்தை, புகழை விடவும் அவர் தனது ஆற்றலை வெளிப்படுத்தவே முன் நின்றிருக்கிறார் என்பது தெளிவாகிறது.

'வெயிலோடு போய்' சிறுகதையை, திரைப்படத்தைப் பார்க்க முன்பு நான் வாசித்திருக்கவுமில்லை. அறிந்திருக்கவுமில்லை. 'பூ' திரைப்படத்தைப் பார்த்தவர்கள் எல்லோருமே அதனைக் கொண்டாடும்போது, அப்படி என்னதான் அதில் இருக்கிறது என நான் ஆவலுற்றுப் பார்த்த திரைப்படம் அது. அதன் பிறகு பல தடவைகள் பார்த்து விட்டேன். திரைப்படமும், அதில் வந்த மாரியும் ஒருபோதும் என்னை ஏமாற்றவேயில்லை. பிறகுதான் அச் சிறுகதையை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் உந்தித் தள்ளிக் கொண்டேயிருந்தது. இணையத்தில் தேடியும் கிடைக்கவேயில்லை. சென்னை நண்பர் கிருஷ்ணபிரபு எனக்காக அச் சிறுகதையைத் தொகுப்பிலிருந்து பார்த்துப் பார்த்து தட்டச்சு செய்து அனுப்பியிருந்தார். வாசித்துப் பார்த்தேன். சிறுகதைக்கும், அதில் வரும் மாரிக்கும், ஏனைய கதாபாத்திரங்களுக்கும், கதைக் கருவுக்கும் எவ்விதப் பாதிப்புமில்லாமல் முழுமையான நேர்த்தியோடு திரைப்படமாக்க வேண்டியிருந்த சவாலை மிகச் சரியாக நிறைவேற்றி, இயக்குனர் சசி வெற்றி பெற்றிருந்தார்.

'வெயிலோடு போய்' சிறுகதையின் முதல்வரிகள் இப்படி ஆரம்பிக்கின்றன.

மாரியம்மாளின் ஆத்தாளுக்கு முதலில் திகைப்பாயிருந்தது. இந்த வேகாத வெயில்ல இந்தக் கழுத ஏன் இப்படி தவிச்சிப்போயி ஓடியாந்திருக்கு என்று புரியவில்லை. "ஓம் மாப்பிள்ளை வல்லியாடி" என்று கேட்டதுக்கு "பொறு பொறு"ங்கிற மாதிரி கையைக் காமிச்சிட்டு விறு விறுன்னு உள்ள போயி ரெண்டு செம்பு தண்ணியை கடக்குக் கடக்குன்னு குடிச்சிட்டு 'ஸ்... ஆத்தாடி'-ன்னு உட்கார்ந்தாள்.

"ஓம் மாப்பிள்ளை வல்லியாடி?"

"அவரு… ராத்திரி பொங்க வைக்கிற நேரத்துக்கு வருவாராம். இந்நியேரம் வந்தா அவிக யாவாரம் கெட்டுப்போயிருமாம்".

"சரி... அப்பன்னா நீ சித்த வெயில் தாழக் கிளம்பி வாறது... தீயாப் பொசுக்குற இந்த வெயில்ல ஓடியாராட்டா என்ன..."

"ஆம... அது சரி... பொங்கலுக்கு மச்சான் அவுக வந்திருக்காகளாமில்ல..."

'பூ' திரைப்படமும் சிறுகதையை அப்படியே அச்சொற்றியெடுத்தது போல காட்சிகளாக்கப்பட்டிருக்கிறது. இயக்குனர் சசி இச் சிறுகதையைத் திரைப்படமாக்குவதற்கு ஏறத்தாழ 15 வருடங்களுக்கு முன்பு, கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு கிராமங்களில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான் நான் மேற்கூறிய சிறுகதைத் தொகுப்பில் இச் சிறுகதையை வாசித்திருக்கிறார். சிறுகதையும், அதில் வந்த மாரியும் அவரை மிகவும் பாதித்திருக்கிறது; பாதித்திருக்கிறாள். அதன் பிறகு வேலையை விட்டுவிட்டு வந்து, பல போராட்டங்களுக்குப் பின்னர் திரைப்பட இயக்குனராகி என பல வருடங்கள் கடந்தபிறகும் கூட அச் சிறுகதையினதும், மாரியினதும் பாதிப்பு அவருள் குறைந்திருக்கவேயில்லை. கதை, கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர்கள், கதைக்களமும் அதற்கான இடங்களும் என எல்லாமும் பூரணமாகப் பொருந்தும்விதமாக படமாக்கி முடித்து வெளியிட்டு வெற்றி கண்டதன் பிறகுதான் அவரால் நிம்மதியாக உறங்க முடியுமானதாக இருந்திருக்கும்.

இயக்குனர் சசி தேர்ந்தெடுத்த கதையில் மாத்திரமல்ல; அவரது நடிகர்கள் தேர்வும் தைரியமானதுதான். திரைப்படத்தின் கதாநாயகன் ஶ்ரீகாந்த் மாத்திரம்தான் திரைப்படத்தில் எல்லோரும் அறிந்த ஒரு பிரபல நடிகர். ஏனைய கதாபாத்திரங்கள் அனைவருமே புதியவர்கள், கதாநாயகி உட்பட. கதாநாயகன், கதாநாயகி தவிர்ந்த ஏனைய அனைவருமே கிராமத்தவர்கள். அவர்களுக்கு இதுதான் முதல் திரைப்பட அனுபவமாக இருந்திருக்கக் கூடும். ஆனால் புதியவர்களின் மிரட்சியோ, அலட்சியமோ திரைப்படத்தின் ஓரிடத்தில் கூடத் தென்படவேயில்லை. மாரி, மாரியின் அம்மா, மாரியின் கணவன், மாரியின் சகோதரன், தங்கராசு, அவனின் மனைவி, அவனின் தந்தை, தாய், சீனியம்மாள், சிறுவர்கள் என எல்லோருமே மனதுக்குள் ஊடுருவுகிறார்கள். நம்மை ஈர்க்கிறார்கள். ஒருபோதும் பார்வையாளர்கள் தம்மை மறக்க முடியாதபடி நடித்திருக்கிறார்கள்.

இலக்கியங்களை திரைப்படமாக்கும் முயற்சி பல தசாப்தங்களுக்கு முன்பிருந்தே ஆரம்பித்தாயிற்று. இயக்குனர்கள் சத்யஜித்ரே, மகேந்திரன், அடூர் கோபாலகிருஷ்ணன், ஞான ராஜசேகரன், தங்கர்பச்சான் எனப் பலர் நாவல்களையும், குறுநாவல்களையும் திரைப்படமாக்கி வெற்றி கண்டவர்கள். சிறுகதைகளைத் திரைப்படமாக்கியதில் கவனம் பெற்றவர்களாக இயக்குனர் சத்யஜித்ரே, இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன், இயக்குனர் சுசீந்திரன் ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அந்த வரிசையில் தவிர்க்கப்பட முடியாதவர் இயக்குனர் சசி.

இயக்குனர் சசியின் இயக்கத்துக்கு ஒளிப்பதிவும் வலுச் சேர்த்திருக்கிறது. ஒளிப்பதிவாளராக, தான் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே பலரதும் பாராட்டுக்களை வென்றெடுப்பதென்பது இலகுவான ஒன்றல்ல. ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையாவுக்கு இதுதான் முதல் திரைப்படம். கிராமமும், இரட்டைப் பனைகளும், வெயிலும், செம்மண்ணும் என ஒரு கரிசல் பூமியை மறக்க முடியாதபடி கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

திரைப்படத்துக்கு வலுச் சேர்க்கும் இசையைத் தந்த இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரனுக்கும் இதுதான் முதல் திரைப்படம். பின்னணி இசையும், பாடல்களும் மேலதிக இரைச்சல்கள் ஏதுமின்றி திரைப்படத்தோடு ஒன்றி வரும்படி அமைத்து திரைப்படத்தை வாகை சூட வைத்திருக்கிறார் இசையமைப்பாளர். 'சூ சூ மாரி' இளம்பிராயத்தை நம் கண் முன்னே கொண்டு வரும் பாடல். 'ஆவாரம் பூ' இளம்பெண்ணின் காதலனுக்கான பாசத்தையும், காத்திருப்பையும் வெளிப்படுத்தும் பாடல். பொருத்தமான வரிகளுக்கேற்ற இசை, பாடல்களை மெருகூட்டி பார்ப்பவர்கள் மனதில் நிலைத்திருக்கச் செய்திருக்கிறது. இதற்காக இம் முதல் திரைப்படத்திலேயே இசையமைப்பாளருக்கு 'சிறந்த அறிமுக இசையமைப்பாளருக்கான மக்கள் விருது' கிடைத்ததை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இங்கு ஸ்ரீகாந்தையும் பாராட்ட வேண்டும். இத் திரைப்படம் தயாராகும் காலகட்டத்தில் அவர் ஒரு உச்ச நட்சத்திரம். காதல் நாயகனாகக் கொண்டாடப்பட்டவர். 'பூ' திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் சிறியது. தன்னை திரையுலகில் அறிமுகப்படுத்திய இயக்குனர் சசிக்கான நன்றிக் கடனாக அவர் இத் திரைப்படத்தில் நடித்திருக்கக் கூடும். ஆனால் இத் திரைப்படத்தில் ஆண்மையை நிரூபிக்க சண்டைக் காட்சிகளோ, முத்தக் காட்சிகளோ இல்லை. 'பஞ்ச்' வசனங்கள் இல்லை. எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு நடித்த அவரது பெருந்தன்மையைத் தவிர்க்க முடியாது. திரைப்படத்தைப் பார்த்த எல்லோருமே மாரியைக் கொண்டாடுகையில், அப் பாத்திரத்தில் நடித்த பார்வதி மேனனை தனியாக எதைச் சொல்லிப் பாராட்டுவது?

சிறுகதையில் விரிவாகச் சொல்லப்படாதவற்றையும் திரைப்படத்தில் பொருத்தமாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர் சசி. மாரியினதும் தங்கராசுவினதும் சிறுபராயம், குறிசொல்லி மீதான அச்சம், தோசை முத்தம், கைத்தொலைபேசியெண் மனனம், தீப்பெட்டி ஆபிஸரின் ஒருதலைக் காதல், சீனியம்மாளின் தீன் விருப்பம், எழுத்துப் பிழையுடனான காதல் கடிதம், கள்ளிப்பழ ஓட்டம் எனப் பலதையும் கதையோட்டத்தினூடே சுவாரஸ்யமாகத் திணித்து மண்வாசனையைத் திரை முழுதும் பரப்பியிருக்கிறார் இயக்குனர். ஆனால் ஓரிடத்திலும் கூட அவரது திணிப்புக்கள் எவையும் சிறுகதையை விட்டும் சறுக்கவில்லை; அலுப்பூட்டவில்லை. காட்சிகளெல்லாமுமே திரைப்படத்துக்கு வலுச் சேர்த்திருக்கின்றன.

இலக்கியப் படைப்பான ஒரு காவியத்தை அல்லது நாவலைத் திரைப்படமாக்குவதை விடவும், சிறுகதையொன்றைத் திரைப்படமாக்குவது என்பது சவால்மிக்கது. குறிப்பிட்ட சில பக்கங்களில் எழுதப்படும் சிறுகதையின் நேர்த்தியையும், அது மனதைத் தொடும் உச்சத்தையும், அது ஏற்படுத்தும் பாதிப்பையும் திரைப்படத்தின் மூலமாகக் கொண்டுவருவதில் பாரிய உழைப்பும் சிந்தனையும் வேண்டியிருக்கிறது. அது இயக்குனரால் மாத்திரம் செய்யக் கூடிய ஒன்றல்ல. திரைப்படத்தில் பணியாற்றும் அனைத்துக் கலைஞர்களினதும் கூட்டுமுயற்சியின் மூலமே அதனை செவ்வனே நிறைவேற்றலாம். 'பூ'வில் எல்லாமுமே கூடி வந்திருக்கிறது. குறையென்று சொல்ல ஏதுமற்ற மாரி எப்பொழுதுமே மனதில் நிற்கிறாள்.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </