இதழ்: 3, நாள்: 15-மாசி்-2013 (Feb)
   
 
  உள்ளடக்கம்
 
உயிர் கொடுக்கும் கலை - ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
குட்டி ரேவதியுடன் ஒரு நேர்காணல் - கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி
--------------------------------
திரைமொழி 2 - ராஜேஷ்
--------------------------------
ஒரு கதை கவிதையாகும் தருணம் 2 - யாளி
--------------------------------
அம்ஷன் குமாரின் சினிமா ரசனை - அருண் மோகன்
--------------------------------
ரோமன் பொலான்ஸ்கியின் நேர்காணல் - தமிழில் - கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி
--------------------------------
புரொபெசர் ஹானிபல் - எஸ்.ஆனந்த்
--------------------------------
நேசிக்கப்படுகிறதா சினிமா? - அருண் மோகன்
--------------------------------
A Separation - - எம். ரிஷான் ஷெரிப்
--------------------------------
Ten டென் மினிட்ஸ் - கார்த்திக் பாலசுப்பிரமணியன்
--------------------------------
   
   


ஒரு கதை கவிதையாகும் தருணம்

கதை நேரம் - சுஜாதாவின் "நிலம்"

யாளி


" பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சு ஊடகம் உருவாகி வளர்ந்ததும், கதைகள் எழுதுவதும், வாசிப்பதும் பல்கிப் பெருகிற்று. சிந்தித்துப் பாருங்கள், இதழ்கள், சினிமா, தொலைக் காட்சி என்று நாம் ஒரு நாளில் எத்தனை கதைகளைக் கேட்கிறோம் ! சொல்லப்போனால் மீன் நீரில் திளைத்து வாழ்வது போல் நாம் கதைகளில் வாழ்கிறோம். "
- ' சிறுகதை ஒரு சமையல் குறிப்பு ' என்னும் கட்டுரையில் ஜெயமோகன்

இப்படித் திளைக்க, திகைக்க, திணிக்கப்படும் கதைகளில் நம் மனதோடு ஒட்டிக் கொண்ட கதைகள் எத்தனை? முதல் வரியை வாசித்ததும் அடுத்தப் பக்கத்தை புரட்டவிடாமல் அங்கேயே நம்மைப் பிடித்து நிறுத்திய கதைகள் எத்தனை? கதையின் தலைப்பிலிருந்து அதில் வரும் கதை மாந்தர் பெயர்கள் வரை நம் மனதில் பதிந்து போன கதைகள் எத்தனை? இப்படியே எத்தனனயெத்தனை கேள்விகள் கேட்டாலும் அனைத்திற்கும் பதில் சொல்லும் கதைகள் எழுதிய படைப்பாளிகள் தமிழில் ஏராளம். நாவல், கவிதை, திரைப்படம் என ஏனைய விஷயங்களில் எப்படியோ. சிறுகதை விஷயத்தில் தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள். புதுமைப்பித்தன், மெளனி, தி.ஜா, ஜெயகாந்தன், கி.ரா, அசோகமித்திரன், அம்பை, வண்ணதாசன், வண்ண நிலவன், எஸ்.ரா, ஜெயமோகன், சாருநிவேதிதா, அ.முத்துலிங்கம், யூமா வாசுகி என்று உலக இலக்கிய வரிசையில் வைத்துக் கொண்டாடப்பட வேண்டிய சிறுகதைகளைப் படைத்த கைகள் இவர்களுடையது. அப்படியான மற்றும் ஒரு கை சுஜாதாவினுடையது.

சுஜாதாவை எனக்கு முதன்முதலாக அறிமுகப்படுத்தியது விகடன். அதுவரையில் அறிவியலை வெறுமனே பாடமாக மனனம் செய்து கொண்டிருந்த பதின்பருவத்தானுக்கு அதன் மற்றொரு பரிமாணத்தை வெளிக்காட்டியது ஜூனியர் விகடனில் வந்த அவரது "ஏன் எதற்கு எப்படி" தொடர். அதன் பிறகு ஆ.வியில் "கற்றதும் பெற்றதும்". இலக்கியம், சமூகம், திரைப்படம், அரசியல், அறிவியல் என ஹைக்கூ அறிமுகத்திலிருந்து ஹார்மோன் மாற்றம் வரை அவர் தொடாத எல்லையே இல்லை எனலாம். அவர் அக்காலத்தில் ஒரு குட்டி கூகிளாகவே இருந்தார். அப்போது அவர் மீது ஏற்பட்ட பிரமிப்பு இன்னும் கூட அடங்கவில்லை. இன்று தேடித் தேடி வாசிக்கும் பழக்கம் அன்று அவரின் கணையாழியின் கடைசிப் பக்கத்திலிருந்தே தொடங்கியது. "பத்தி எழுத்தில்" இவரை அடித்துக் கொள்ள இன்று வரையில் ஆளில்லை. அவர் படித்து முடித்துவிட்டு உதிர்த்துப் போனவற்றை எடுத்துக் கோர்க்கவே எனக்கு இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும்.

இந்தப் பன்முகவித்தகரின் எல்லோருக்கும் பரிச்சயமான மற்றுமொரு முகம் திரைப்படம். காயத்ரி-யில் தொடங்கி அடுத்த ஐம்பது வருடங்களுக்கு தலைமுறை தலைமுறைகளாக தன் எழுத்தால் கட்டிப் போட்டிருக்கிறார் இந்த ஸ்ரீரெங்கத்துக்காரர். இப்படி கதை, திரைக்கதை, வசனம் என்று தமிழ் சினிமா மற்றும் பத்திரிக்கை உலகின் அசைக்க முடியாத அங்கமாய் இருந்தவர். இவரில்லா வெறுமை இன்று பத்திரிக்கை, சினிமா என்று எங்கும் நிறைந்திருக்கிறது. தமிழ் திரைப்படங்களிலிருந்து ஆகச் சிறந்த வசனங்கள் நூறைத் தேர்ந்தெடுத்தால் அதில் குறைந்தது இருபதாவது இவர் எழுதியதாக இருக்கும்.

சுஜாதாவின் "நிலம்" சிறுகதையையே இந்தக் குறும்படத்தின் தளம்.

இந்தக் குறும்படத்தின் லாக்லைன் (Logline) என்ன? முதலில் லாக்லைன் என்றால் என்ன? லாக்லைன் என்பது வேறோன்றும் இல்லை. உங்களின் கதையை, நாவலை அதன் சாரம் குறையாமல் உங்களால் இரண்டு மூன்று வரிகளில் சொல்ல முடியுமானால் அதுதான் அப்படத்தின் லாக்லைன். "ஒரே தோற்றமுடைய இருவர். அதில் ஒருவன் கோழை. ஒருவன் ஏழை. இருவரும் ஆள்மாற அதன்பின் நடக்கும் களேபரங்கள்". இது எந்தப்படத்தின் லாக்லைன் என்று தெரிகிறதா? ஆம்! எம்ஜியார் நடித்த "எங்கள் வீட்டுப்ப் பிள்ளை"-யின் லாக்லைன் தான் இது. இதே லாக்லைனைக் கொண்டு தமிழில் குறைந்தது, ஒரு டஜன் படங்களாவது வெளி வந்திருக்கின்றன என்பது வேறு விஷயம். சரி நாம் குறும்படத்திற்கு வருவோம். இந்தக் குறும்படத்தில் லாக்லைன் இதுதான். "ஒருவருக்கு அவரது நிலத்திற்கான பட்டா மாற்றி ஒதுக்கித் தரப்படுகின்றது. அதைச் சரிசெய்ய அவர் எத்தனிக்கும் முயற்சிகள் என்னென்ன ??".

ஒரு எழுத்தாளனின் சமூகப் பங்களிப்பு அவனது எழுத்துக்களில் பிரதிபலிக்கும். அதை அவ்வப்பொழுது செவ்வனே செய்து வந்தவர் சுஜாதா. அவரின் ஆகச் சிறந்த கதைகளுள் ஒன்றான "நகரம்", "ஒரு லட்சம் புத்தகங்கள்" போன்றவையே இதற்குப் பெருஞ்சான்று. இதே வரிசையில் மற்றும் ஒரு கதை தான் இந்த "நிலம்". இது அரசு அலுவலகங்களில் ஒரு சாதாரண பேனா ரிஃபிளிலிருந்து, செல்ஃபோன், மது, மாது என ஆளுக்குத் தகுந்தாற் போல் எப்படியெல்லாம் லஞ்சத்தின் வழியாக காரியங்கள் சாதிக்கப்படுகின்றன என்பதை அப்பட்டமாய் வெளிப்படுத்துகிறார்.

கதை இதுதான். கோபாலன் மத்திய அரசில் வர்த்தக அமைச்சகத்தில் ஒரு பெரிய அதிகாரி. அவர் ஆஸ்திக சமாஜத்துக்காக வாங்கிய ஃப்ளாட்டின் பட்டா கடைசி நிமிஷத்தில் மாற்றி ஒதுக்கித் தரப்படுகின்றது. மேலும் புதிதாக ஒதுக்கப்பட்ட இடத்தில் எருமைமாடுகள் கட்டப்பட்டு அதை சில பால்காரர்கள் வேறு ஆக்கிரமித்திருக்கிறார்கள். இந்நிலையில் தனது பட்டாவை மாற்ற கோபாலன், கிச்சாமியின் உதவியை நாடுகிறார். கிச்சாமி இது போன்ற அரசு அலுவலக காரியங்களை முடித்துக் கொடுப்பதில் கைதேர்ந்தவர். ஆனாலும் இதை ஒரே நாளில் முடிக்க வேண்டிய நிர்பந்தத்தால் தயங்குகிறார். இருந்தாலும் முயற்சிக்கிறார். முதலில் சம்ந்தப்பட்ட அலுவலகத்தில் தனக்குத் தெரிந்த ஒரு அதிகாரி மூலமாக பட்டாவை மாற்றி வழங்கிய உயரதிகாரியான கன்ஷியாமைச் சந்திக்கிறார். அவர் கறார் பேர்வழியாக இருக்கவே அவர் பி.ஏ. மூலமாக அவரின் வீக்னஸைத் தெரிந்து கொண்டு காரியத்தைக் கச்சிதமாய் முடிக்கிறார் கிச்சாமி.

கதையின் வீரியம் குறையாமல் அப்படியே திரைக்கதை எழுதியிருக்கிறார் பாலுமகேந்திரா.

மிகச்சிறந்த அமெரிக்க திரைக்கதை எழுத்தாளர் "பிளேக் சிண்டர்", திரைக்கதை எழுத்தின் தவிர்க்கவியலாத சில உத்திகளைக் குறிப்பிடுகின்றார். அதில் ஒன்று "லேயிங் பைப்". இதை அர்த்தம் புரியும்படி அப்படியே தமிழ்ப்படுத்துவதானால் "ஆத்திரத்தைக் கூட அடக்கலாம்" எனப் 'படுத்தலாம்'. கதைக்குள் பிரவேசிக்க பார்வையாளனை நீண்ட நேரம் காக்க வைக்கக்கூடாது. அவனை அடக்கக் கூடாது. இதுதான் அவர் சொல்ல வருவது. இதனால் இந்த உத்திக்கு இப்படி ஒரு தலைப்பு. கடும் உழைப்பைக் கொட்டி எடுக்கப்படும் படங்கள், அவற்றின் தொழில் நுட்பத்திலும், இன்ன பிறவற்றிலும் மிகச் சிறப்பாக அமைந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கான வெற்றியைப் பெறாததிற்கு இதுவே முக்கிய காரணம். எடுத்துக் காட்டாக " ஹே ராம் " படத்தையே எடுத்துக் கொள்வோம். நடிப்பு, இயக்கம், இசை, காட்சிப் படுத்துதல், கலை என அனைத்திலும் நேர்த்தி குறையாத படம். ஆனால் ஏன் மக்களைச் சென்று சேரவில்லை. படம் தன் இலக்கை நோக்கிச் செல்வதில் ஏற்பட்ட தாமதமே காரணம். எத்தனை பெரிய ஹீரோவாக இருந்தாலும் சரி, எவ்வளவுதான் அழகாக காட்சிகளை அமைத்தாலும் சரி, ஏ.ஆர்.ரகுமானே இசையமைத்தாலும் சரி தக்க நேரத்தில் கதைக்கருவை நோக்கிச் செல்லாத எந்தத் திரைப்படமும் வெற்றி பெறுவதில்லை.

மேற்சொன்ன இந்த விஷயத்தில் சுஜாதா ஒரு ராஜதந்திரி. ஒரு கதையை எப்படி ஆரம்பிக்க வேண்டும், அதை எப்படி முடிக்க வேண்டும் என்பதை இவரிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். கதைகள் முடியும் போது வாசகனை தன்னுள் இழுத்துப் புரட்டிப் போடும். (இவரைப் போல கதையோ கட்டுரையோ கடைசி வாக்கியத்தில் 'பொடி' வைத்து முடிக்கும் எழுத்தாளர்கள் மேலும் இருவர் உளர். அ.முத்துலிங்கமும், சுகாவும்.) சுஜாதாவின் பெரும்பாலான ஏன் கிட்டத்தட்ட எல்லாக் கதைகளிலும் எந்த ஒரு இடத்திலும் தேவையற்ற நீட்டல் முழக்கல் இருக்கவே இருக்காது. வார்த்தைகளில் கூடச் சிக்கனம். இந்தக் கதைகூட அப்படித்தான். நேராக டெலிஃபோன் மணி அடிப்பதில்தான் ஆரம்பிக்கும். வருணனை போன்ற எந்தவிதமான ஜம்பங்களும் இருக்காது. அவர் வர்ணித்துச் சொல்ல வேண்டிய அத்தனையையும் வசனங்களில் நுழைத்துவிடுவார்.

இந்தக் கதையில் ஓரிடத்தில் கன்ஷியாமின் பி.ஏ, கிச்சாமியிடம் ரகசியம் ஒன்றைக் கூறுவார். அதை ' அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு "..." என்றான் ' என்றே எழுதியிருப்பார். அந்த வெற்றுப்புள்ளிகளில் இருந்து இது ரகசியம் என்பதை வாசகன் யூகித்துக் கொள்வான்.

இப்படியான கதை சொல்லும் உத்தியும், வசன நேர்த்தியும் அதை திரைக்கதையாக மாற்ற வேண்டிய இயக்குனரின் வேலையை சுலபமாக்கிவிடுகின்றது. அதனால் தானோ என்னவோ பாலுமகேந்திரா தான் எடுத்த 52 குறும்படங்களில் 12 குறும்படங்களை சுஜாதாவின் சிறுகதைகளை அடிப்படையாக கொண்டு இயக்கியிருக்கிறார். மேலும் இதில் வசனமும் சுஜாதாவேதான். இதிலிருந்து நமக்குத் தெளிவாகத் தெரிவது, ஒரு குறும்படமோ/ திரைப்படமோ அதன் முதல் வெற்றிப்படிக்கட்டில் கால் வைப்பது மிகச்சரியான கதையைத் தேர்ந்தெடுப்பதில் தான் இருக்கிறது. இங்கே இன்று குறும்படம்/திரைப்படம் எடுப்பவர்கள், அந்த முதல்படியைத் தொடாமலே காட்சியமைத்தல், தொழில்நுட்பம் போன்ற அடுத்தடுத்த படிகளில் ஏறிவிடுகிறார்கள். பல நேரங்களில் சருக்கி விழுந்து சன்னமாய் அடிப்பட்டுச் சாகிறார்கள்.

இந்தக் கதை எழுதிய காலத்தில் சுஜாதா டெல்லியில் வசித்திருப்பார் போலும். அதனால்தான் டி.டி.ஏ,(டெல்லி டெவலப்மெண்ட் அதாரிட்டி) கன்ஷியாம் போன்ற பெயர்கள் கதையில் வரும். அதுவே குறும்படத்தில் அழகாக எம்.எம்.டி.ஏ (மெட்ராஸ் மெட்ரோபாலிடன் டெவலப்மெண்ட் அதாரிட்டி. இப்போது இது சி.எம்.டி.ஏ), நாராயணன் என்று சென்னைக்கு ஏற்றவாறு மாற்றம் பெற்றிருக்கும்.

இதோடு மட்டுமில்லாமல் திரைக்கதையில் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட துல்லியமாக சேர்த்திருப்பார் பாலுமகேந்திரா. எடுத்துக்காட்டாக, அரசு அலுவலகத்தில் நடக்கும் காட்சியில் வெளியிலிருந்து "பழைய துணிக்கு ஸ்டீல் பாத்திரம்" என்றெழும் வியாபாரியின் தேய்ந்த குரலைக் கூட தன் திரைக்கதையில் குறித்து வைத்திருக்கிறார். அதுவும் மாறாமல் காட்சியில் இடம் பெற்றிருக்கின்றது. இந்தச் சின்ன தகவலைக் கூட அவதானித்து குறித்து வைத்திருக்கும் அவரின் துல்லியமும், அதை செயல்படுத்தவும் செய்த அவரின் ஒழுக்கமும், முழுமையும்தான் இன்று அவரை இந்த உயரத்தில் வைத்திருக்கின்றது.

இங்கு மிகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது கிச்சாமியாக வரும் மோகன் ராமின் நடிப்பு. கோபாலன் அவரை முகஸ்துதி செய்யும் அந்தப் பொழுதில் அவர் முகத்தில் காட்டும் கர்வமும், லெட்டர் கொடுக்க வரும் கோபாலனின் பையன் கெஷிக் தன் மகளுடன் பேசுவது பிடிக்காமல் அவர் காட்டும் அந்த வெறுப்பும், அந்த மேலதிகாரியிடம் காரியம் சாதிக்க வேண்டி பம்மும் இடத்திலும் மனிதர் வாழ்ந்திருக்கிறார். தமிழ் சினிமா ஒரு நல்ல குணச்சித்திர நடிகனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லையோ என்றே தோன்றுகின்றது. அடுத்ததாக அந்த மேலதிகாரி நாராயணனாக (சிறுகதையில் கன்ஷியாம்) வரும் நடிகரும் அந்த உயரதிகாரிக்கான பாவனையை, பல்லை நோண்டிக் கொண்டே அத்தனை எளக்காரத்துடன் அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறார். இவர்களோடு தாசிப் பெண்ணாக வரும் விசித்திரா மற்றும் இதர கதாப்பாத்திரங்களில் வரும் ஒவ்வொருவரும் குறை ஒன்றும் கூறி விட முடியாதபடி தத்தம் பணியை செம்மையாய்ச் செய்திருக்கின்றனர்.

ஒரு சிறுகதை குறும்படமாவதின் அற்புதத்தை இக்குறும்படத்தின் கடைசிக் காட்சியில் காணலாம். காட்சி இவ்வளவு தான். கிச்சாமியின் முயற்சிகளால் அந்த நிலம் கோபாலனின் கைக்கு கிடைத்து அங்கு தேதி குறித்தபடியே கிருஷ்ணர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நடை பெறுகிறது. அப்போது அங்கு உரையாற்றும் சுவாமிகள் "நடந்த நிகழ்வுகளுக்கு பகவான் கிருஷ்ணனே காரணம் என்றும், அவனுக்கு எல்லாமே தெரியும் என்றும், எதையெத யார் யார வச்சு எப்படிக் காரியம் பண்ணனும்னு அவனுக்கு நல்லாவே தெரியும் " என்றும் கூறிக்கொண்டிருப்பார். அப்போது நமட்டுச் சிரிப்புடன் அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் கிச்சாமி என்ற இந்த கிருஷ்ணசாமியின் மீது கேமிரா போகஸ் செய்யப்படும். கிச்சாமியின் வழக்கமான ஒரு பெருமிதப் புன்னகை மின்ன, மேற்கில் மெதுவாய் சூரியன் மறையும். இவ்வாறாக குறும்படம் முடியும். இப்படித்தான் ஒரு கதாசிரியரும் இயக்குனரும் சொல்ல விரும்பியதை ஒளிபதிவாளர் செய்து முடிக்கிறார். மேற்சொன்ன வசனத்தின் போது, காமிரா அந்த வசனம் பேசும் காட்சியில் அதைப் பேசும் சுவாமிகளின் மீது மட்டும் குவிக்கப் பட்டிருக்குமானால் (ஃபோகஸ்), அந்தக் காட்சியின் அழுத்தம், ஏன் மொத்த குறும்படத்தின் அர்த்தமே பார்வையாளனைச் சென்று சேராமல் போயிருக்கும்.

வாரத்திற்கு ஒரு குறும்படம் என்பது எத்தனை பெரிய காரியம். எப்படியான அசுர உழைப்பைக் கோரியிருக்கும். கோபாலன் ஒரு பெரிய அதிகாரி என்பதை அவர் வீடும், அரசு அலுவலகங்களை அதற்கே உரிய மரத்தாலான மேசை நாற்காலிகளும், கடைசிக் காட்சியில் வரும் சாமியானா பந்தலும் காட்சிகளோடு பொருந்திப் போகின்றன. இந்தச் சின்ன சின்ன விஷயங்களைக் கூட கவனமாக செய்திருக்கிறார்கள். காலத்தை காரணமாக்கி எதிலும் காம்ரமைஸ் செய்து கொள்ளவில்லை.

இந்தக் குறும்படத்தின் மிகப்பெரிய பலம், எந்த இடத்திலும் மிகைப்படுத்துதல் இல்லாத கதை. எல்லா இடங்களிலும் லாஜிக் கச்சிதமாக இருக்கிறது. இந்த லாஜிக் மீறப்படும் போதுதான் அதை மறைக்க படத்தில் பல மேஜிக்குகள் தேவைப்படுகின்றன. அது அப்படியே தொட்டுத் தொட்டு பெரும் பொருட் செலவில் முடிகின்றது. அப்படியிருந்தும் பல நேரங்களில் அந்த மேஜிக்குகள் வேலை செய்யாமல் தயாரிப்பாளரின் கையைக் கடித்துவிடுகின்றது. இப்படி சிறப்பான கதையைத் தேர்ந்தெடுப்பதில் நமக்கு இருக்கும் லாபங்கள் என்ன? ஒரு நல்ல சிறுகதை தன்னளவில் ஒரு சிறப்பான திரைக்கதையை கொண்டிருக்கின்றது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஆங்காங்கே சில பட்டை தீட்டல்கள் மட்டுமே. இப்படி நல்ல கட்டுக் கோப்பான திரைக்கதை அமையும் பொழுது படத் தொகுப்பாளரின் பணி தன்போல சுலபமாகிவிடுகிறது. நீங்கள் ஒரு சட்டைத்துணி வாங்குகிறீர்கள். முதலிலேயே சரியான அளவு கொடுத்து தைத்துவிட்டீர்களானால், தைத்து முடித்துவிட்ட பின்பு கத்திரிக் கோலை எடுக்க வேண்டியதன் தேவை என்ன?

படம் தொகுப்பதிலிருந்து, பாட்டு கோர்ப்பது வரை அனைத்துத் தொழிட்நுட்பங்களும் இன்று அனைவருக்கும் சாத்தியமாயிருக்கின்றன. தொழிட் நுட்பம் சாத்தியமான அளவிற்கு வாழ்க்கை நுட்பம் நமக்கு வசப்படவில்லையோ என்றே தோன்றுகின்றது. எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதி பீம்சிங் இயக்கிய "சில நேரங்களில் சில மனிதர்கள்" படத்தில் ஒரு வசனம் வரும். "வாழ்க்கையையே புரிந்து கொள்ளாதவர்கள் கதையையா புரிந்து கொள்ளப் போகிறார்கள் ? " என்று. இதை பறைசாற்றுப்படும் படியே இருக்கின்றன இன்று இணையத்தில் காணக் கிடைக்கும் பெரும்பான்மையான குறும்படங்கள். உண்மையைச் சொல்லப்போனால் அவற்றில் பல வெறும் குப்பைகள். அவற்றுள் சில இசை, காட்சிப்படுத்துதல், கிராஃபிக்ஸ் போன்றவற்றில் ஜொலித்தாலும், கதையிலும் திரைக்கதையிலும் மக்கி மண்ணாகிப் போகிவிடுகின்றன.

இது எப்படி இருக்கிறதென்றால், சில நேரங்களில் வார்த்தைகளின் மாயா ஜாலங்களில் ஒரு அழகான கவிதை படைக்கப்படுவதுண்டு. அவை அந்த நிமிடத்தில் நமக்குத் தருவது வெறும் வாசிப்பின்பம் மட்டுமே. ஆன்மம் அற்ற எந்த ஒரு படைப்புக்கும் எளிதில் வெற்றி கிட்டுவதில்லை. விக்ரமாதித்தயன் நம்பியின் "பொருள்வயின் பிரிவு" என்னும் இந்தக் கவிதையில் வார்த்தைகளாலான வர்ண ஜால மாயங்கள் ஏதுமில்லை. அத்தனையும் புழக்கத்தில் உள்ள சாதாரணனுக்கும் புரியும் வார்த்தைகள். ஆனால் இதில் பொதிந்திருக்கும் கவிதையின் ஆன்மாவே இக்கவிதைக்குச் சாகாவரம் வாங்கித் தந்திருக்கின்றது.

அன்றைக்கு
அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை.
நிசப்தம் காடாக விரிந்துகிடந்தது
சாரல் மழைபெய்து
சுகமான குளிர் வியாபித்திருந்தது

அயர்ந்து
தூங்கிக்கொண்டிருந்தான் பெரியவன்
அரவம் கேட்டு விழித்த சின்னவன்
சிரித்து விளையாடிக்கொண்டிருந்தது
சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்

இவள்
வெந்நீர் வைத்துக் கொடுத்தாள்
வெளுத்த துணிகளை எடுத்துவைத்தாள்
வாசல்வரை வந்து
வழியனுப்பி வைத்தாள் தாய்போல

முதல் பேருந்து
ஓட்டுநர் இருக்கைக்கு பின்புற ஜன்னலோரம்
பிழைப்புக்காக
பிரிந்து வந்துகொண்டிருந்தேன்
மனசு கிடந்து அடித்துக்கொள்ள.

* * *

இக்குறும்படத்தைப் பார்க்க: http://www.youtube.com/watch?v=USOQnuvC5cc

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </