(Ten) டென் மினிட்ஸ்
கார்த்திக் பாலசுப்பிரமணியன் |
சுற்றி நடக்கும் அத்தனை அரசியல் ஆர்ப்பாட்டங்களைத் தாண்டி தமிழ் சினிமாவை கொஞ்சம் கூர்ந்து நோக்கும் ரசிகனுக்கு இந்நேரம் இது புரிந்திருக்கும். இப்போதெல்லாம் களத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டுத் தான் கதையே தேர்வு செய்வார்கள் போலும். கும்கி, கடல், டேவிட் என்று களத்தை அடிப்படையாகக் கொண்டு வரிசையாக படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. களம் முக்கியமானதுதான். ஆனால் களம் உடல் என்றால் கதை ஆன்மா. கதைக்குத் தான் களமே தவிர, களத்திற்காக கதை பண்ணப்பட்ட படைப்புகள் எப்படி இருக்கின்றன என்பதற்கு இப்படங்களே சாட்சி. அதே நேரத்தில் நல்ல கதையும், திரைக்கதையும் அமைந்துவிட்டால் களம் பெரிய பொருட்டல்ல. இதில் சிலருக்கு மாற்றுக் கருத்திருக்கலாம். அழகான கதையும், நல்ல திரைக்கதையும் இருந்து, திறமையான நடிகர்களும் அமைந்துவிட்டால் எளிதில் வெற்றி பெற முடியும் என்பதற்கு இக்குறும்படமே சான்று.
|
ஒரு செல்ஃபோன் வாடிக்கையாளர் சேவை மைத்திற்கு தனக்குத் தேவையான தகவல் ஒன்றை தரக் கோரி அழைக்கும் ஒருவருக்கும், அந்த அழைப்பை ஏற்றுப் பேசும் வாடிக்கையாளர் மைய அதிகாரிக்கும் நடக்கும் ஒரு சிறு உரையாடல்தான் இக்குறும்படம். அவர்களுக்கிடையேயான அனுமதிக்கப் பட்ட உரையாடல் நேரமே மொத்தம் 10 நிமிடங்கள் தான். வாடிக்கையாளர் கேட்கும் அந்தக் குறிப்பிட்ட விபரத்தை சேவை மைய அதிகாரி அளிப்பதற்கான அனுமதி அவருக்கில்லை. இப்படியே இருவருக்குமான வாக்குவாதம் தொடர்கிறது. பத்து நிமிடங்களுக்குள் அவன் கேட்கும் விபரத்தை பெறுகிறானா இல்லையா என்பதுதான் கொஞ்சம் த்ரில்லான கிளைமேக்ஸ்.
நாம் அடிக்கடி சந்திக்க நேரிடும் ஒரு சந்தர்ப்பமே கதைக்கரு. இதுவே இக்குறும்படத்தின் மீது நம்மிடம் ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்திவிடுகின்றது. முழு நீளத் திரைப்படங்களிலேயே பல லாஜிக் சொதப்பல்கள் இருக்கும் பொழுது, குறும்படத்தில் எந்தவித லாஜிக் சிக்கல்களுக்கும் இடம் கொடுக்காமல் கச்சிதமாக அமைக்கப் பட்டிருக்கின்றது திரைக்கதை. அதற்கு முதுகுத்தண்டாய் வலு சேர்க்கிறது வசனம். தர்க்கம்/லாஜிக்கிற்கு சரியான இடம் கொடுக்காத படைப்புகள் அப்போதே அவற்றின் தோல்விக்கு இடம் கொடுத்து விடுகின்றன. சமீபத்தில் பார்த்த கடல் திரைப்படத்தில் படத்தின் மையமே அரவிந்த்சாமி என்னும் தேவதூதனுக்கும், அர்ஜூன் என்னும் சாத்தான் பிள்ளைக்கும் இடையேயான பகையேயாகும். ஆனபோதும் அப்பகையை தொடரச் சொல்லப்படும் காரணம் அத்தனை வலுவில்லாமல் போன போதே படம் பார்வையாளனிடமிருந்து விலகிப் போய்விடுகின்றது. அதே போலத்தான் இப்போது அதீதமாக புகழப்படும் விஸ்வரூபத்திலும் கமல் கதக் டான்சராக வரும் அந்த பெண்மை கலந்த கதாப்பாத்திரத்தில் இருக்க வேண்டிய அத்தியாவசியமே கதையில் கிடையாது.
அது போல் இல்லாமல், இந்தக் குறும்படத்தில் மொத்தப் படமும் அவன் கேட்கும் அந்த ஒற்றைத் தகவலின் மீதுதான் கட்டமைக்கப் பட்டிருக்கின்றது. அந்தத் தகவல்தான் அவனுக்குத் தன்னைவிட்டுப் பிரிந்து போன தன் காதலியைத் தொடர்பு கொள்ள உதவுகின்றது. இதை அவன் விவரிக்கும் போதே அவளின் மீதான அவன் காதல் அழகாக சொல்லப்பட்டு பார்வையாளனை அவன் பக்கம் சாய வைத்துவிடுவது வசனம் மற்றும் நடிப்பின் சிறப்பு. பார்வையாளனை திரைக்கதையின் ஏதேனும் ஒரு பாத்திரத்தின் சார்பாக மாற்றிவிட்டாலே பாதி வெற்றி நிச்சயம். பார்வையாளனை ஒன்றவிடாத எந்த ஒரு படைப்பும் அவ்வளவு எளிதில் வெற்றி பெறுவதில்லை.
|
தனக்குத் தேவையான தகவல் கிடைக்காத ஆதங்கத்தில் கோபமெழ பொங்குவதும், பின் தன்னைவிட்டுப் பிரிந்து போன மனைவி குறித்து தணிந்து பேசி அனுதாபம் தேட முயல்வதும், இன்னும் இறங்கிப் போய் அந்த சேவை மைய அதிகாரியிடம் கெஞ்சத் தொடங்குவதும் என்று மிகச் சிறப்பானதொரு நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் அந்த நடிகர். சேவை மைய அதிகாரிப் பெண்ணை கன்வின்ஸ் செய்து அந்தத் தகவலை பெற அவர் எடுக்கும் முயற்சிகள் ஒவ்வொன்றும் அற்புதம். கோபம், காதல், கருணை, பிரிவு, துயரம், மகிழ்ச்சி என அத்தனை உணர்ச்சிகளையும் அந்தப் பத்து நிமிடத்தில் வெளிப்படுத்தி வெளுத்துக் கட்டியிருப்பார் அவர். அதிலும் குறிப்பாக தன் மனைவி மீதான காதலை வெளிப்படுத்தும் அந்தக் காட்சி க்ளாசிக்.
சேவை மைய அதிகாரியாக வரும் அந்தப் பெண்ணும் வெகு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இது போன்ற தகவல் கோரும் அழைப்புகளை அவள் தன் அனுபவத்தில் பலமுறை சந்தித்திருப்பாள். அதனால் அவளிடம் அவன் மீது பரிதாபம் போன்ற எந்த உணர்வும் முதலில் வெளிப்படாது. நகத்தை நோண்டுவது, கைகளை உயர்த்தி சோம்பல் முறிப்பது என்று அவள் வெளிப்படுத்தும் சைகைகள் அவள் அந்த அழைப்பை பெரிதுபடுத்தவில்லை என்பதை பார்வையாளனுக்கு எளிதாக உணர்த்தி விடும். வெறும் சின்னச் சின்ன செய்கைகள்தான் ஆனால் அவை பல பக்க வசனங்களை விழுங்கிக் கொள்கின்றன. அப்பெண் எத்தனை சலிப்பான முகபாவனைகள் காட்டிய பொழுதுகளிலும் அத்தனை அழகாக இருக்கிறார். அழைப்பாளன் தனது வளர்ப்பு பிராணி குறித்து உரையாடுமிடத்தில் நெகிழும் போது கூடுதல் அழகாகிறார்.
இந்தக் குறும்படத்தில் கதை வெறும் ஒருவரி மட்டுமே. இடம், பொருள், ஆள் என்று எதுவும் மாற வாய்ப்பில்லாத கதை. இரண்டே பேர்களுக்கிடையேயான வெறும் வசனத்தில் மட்டுமே முழுக் குறும்படத்தையும் நகர்த்த வேண்டும். அது ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை. ஆனால் அதையும் திறமையுடன் கையாண்டிருக்கிறார்கள். மிகுந்த கவனத்துடன் கத்தி போன்ற வசனங்கள். ஓரிடத்தில், நீ தகவல் தரும் வரை நான் அழைப்பைத் துண்டிக்கமாட்டேன் என்பான் அவன். அவள் சொல்வாள் எங்களுக்கு வரும் அழைப்புகளுக்கு நேர வரையறை உண்டு. அதற்கு கோபம் பொங்க அவன் கேட்பான் மீறினால் நான் ஒன்றும் ஷாக்கடித்து செத்துவிடமாட்டேனே என்று. இப்படி ஒவ்வொரு வசனமும் கச்சிதம்.
|
கன்றுக்குட்டியை கையில் தூக்கிக் கொஞ்சுவதும், சாலை விபத்தில் அடிப்பட்ட நாய்குட்டிக்காக அழகிய கதாநாயகி பேசும் அடுக்கடுக்கான வசனமும்(அங்கும் கூட பக்கத்தில் இருப்பவர் ஒர் இரட்டையர்த்த வசனம் பேசிவார்), தாயைப் பிரிந்த யானைக் குட்டியை அதன் தாயிடம் சேர்ப்பதும் என்று நாம் அறிந்த தமிழ் சினிமா காட்டியிருக்கும் பிற உயிர்களின் மீதான பரிவு. பெரும்பாலும் மிகைப்படுத்தப் பட்ட ஒன்றாகவே இருந்து வந்திருக்கின்றது. ஒரு வளர்ப்புப் பிராணியிடம் கொண்டிருக்கும் பாசத்தை இக்குறும்படம் வெளிப்படுத்தும் விதம் அழகு. காதலும் கருணையும் இங்கு ஒரே புள்ளியில் ஒப்பிடப்பட்டிருக்கும் விதமே ஆச்சர்யமளிக்கும். அது வலிந்து திணிக்கப்பட்டது போல் இல்லாமல் இருப்பது கூடுதல் சிறப்பு.
|
தேவையான இடத்தில், தேவையான அளவில் இசை. சுவாரஸ்யம் கூட்டும் அந்த கடைசி நிமிடங்களில் இன்னும் கூட சிறப்பாக இருந்திருக்கலாம். அட்டகாசமான காமிரா கோணங்களோ, அதியற்புத தொழிட் நுட்ப சங்கதிகளோ இல்லாமல் திரைக்கதையையும், வசனத்தையும் மட்டும் நம்பி எடுக்கப்பட்டுள்ள இக்குறும்படம் உங்களுக்கு நிச்சயம் ஒரு சிறந்த நிறைவைத் தரும். தொழிட் நுட்பம் என்பது ஒரு அழகான ஓவியத்தை இன்னும் கொஞ்சம் எடுப்பாகக் காட்ட உதவும் சட்டம்(ப்ரேம்) போல இருக்க வேண்டும். அதே வேளையில் அம்சமான சட்டத்தை வைத்துக் கொண்டு, வெற்றுக் கிறுக்கலை ஓவியம் என்று கூறி கட்டமைக்க முயன்றால் அங்கே ஏமாந்து போவதென்னவோ அந்த ஓவியன் தான்.
http://www.youtube.com/watch?v=L4xDUZw9wJU
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |